ஒற்றுமையை வலியுறுத்தும் ஒளவையாரின் ஒப்பற்ற புறப்பாடல்

பேராசிரியர் இரா.மோகன்

ருமுறை, சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஓரிடத்தில் அன்பால் ஒருங்கே கூடி இருந்தனர். தமிழ்கூறு நல்லுலகில் அரிதினும் அரிதான அக் காட்சியைக் கண்ட ஒளவையார் பெருமகிழ்ச்சியோடு இயற்றிய பாடல் ஒன்று புறநானூற்றில் இடம்- பெற்றுள்ளது. 'வேந்தர்களே! இந்நிலவுலகம் வேந்தர்களுக்கே உரியதாயினும், அவர்கள் இறந்தால், இவ்வுலகம் அவர்களோடு உடன்போவதில்லை. ஆகவே, இவ்வுலகில் வாழும்போதே அறநெறிகளில் பொருள் ஈட்டி, இரவலர்க்கு நல்கி, இன்பமாக வாழுங்கள். உங்கள் வாழ்நாட்களில் நீங்கள் செய்த நல்வினையைத் தவிர, உங்கள் இறுதிக் காலத்தில் உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றும் இல்லை. ஆதலின், நல்வினையையே செய்வீர்களாக! 'எனக்குத் தெரிந்தது இதுதான்! நீவிர் வானில் தோன்றும் மீனினும் மழைத் துளியினும் பலகாலம் வாழ்வீர்களாக!' என அப்பாடலின் வாயிலாக ஒளவையார் மூவேந்தர்களுக்கும் நல்வினையின் விழுப்பத்தினையும் ஒற்றுமையின் இன்றியமையாமையையும் அறிவுறுத்தினார்.

'நாகத்து அன்ன பாகுஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லர்
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நார்அரி தேறல் மாந்தி, மகிழ்சிறந்து,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யான்அறி அளவையோ இதுவே; வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இலங்கு மாமழை உறையினும்
உயர்ந்துமேந் தோன்றிப் பொலிக, நும் நாளே.'
(367)

'தேவலோகத்தைப் போன்ற வளமான பகுதிகளைக் கொண்ட நாடு, அந்த நாட்டு வேந்தனுக்கே உரிமை படைத்ததாக இருந்தாலும், அவ்வேந்தன் இறக்கும்பொழுது அது அவனுடன் செல்வதில்லை. அது அவனுக்குப் பின்னர் வரும் வேந்தன் ஒரு தொடர்பும் இல்லாத வேற்று நாட்டவனாக இருப்பினும், வலிமை உடையோர்க்குப் போய்ச் சேரும். பொருள் வேண்டி இரந்து நிற்கும் பார்ப்பனர்களுக்கு, அவர்களின் குளிர்ந்த கை நிறையும் வண்ணம் பொற்பூவும் பொற்காசும் நீர்; வார்த்துக் கொடுத்தும், நல்ல அணிகலன்களை அணிந்த மகளிர் பொற்கிண்ணங்களில் கொண்டு வந்து கொடுக்கும், நாரால் வடிகட்டப்பட்ட கள்ளின் தெளிவை உண்டு களித்தும், இரவலர்க்கு அவர் வேண்டியவற்றைக் குறைவறக் கொடுத்தும், இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்கென வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முழுதும் நன்றாக வாழ்தலே வேண்டுவது. நீங்கள் வாழும் பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் இறக்கும் போது உங்களுக்கு உயிர்த் துணையாக வருவது வேறொன்றும் இல்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பி, புலன்களின் மேல் செல்லும் ஆசைகளை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல, அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடி உயர்த்திய தேரையும் உடைய மூவேந்தர்களே! யான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவே ஆகும். வானத்தில் விளங்கித் தோன்றும் விண்மீன்களையும், இம்மென முழங்கிப் பெய்யும் பெரிய மழைத்துளைகளையும் விட நும்முடைய வாழ்நாட்கள் மேம்பட்டு விளங்குவன ஆகுக' என்பது இப்பாடலின் தெளிவுரை.

நோக்கு நெறி நின்று பயிலும் போது இப்பாடல் நமக்கு உணர்த்தும் நயக் குறிப்புக்கள் - வாழ்வியல் நுட்பங்கள் - நான்கு. அவையாவன:

1.'யான்அறி அளவையோ இதுவே' என்னும் எளிய தன்னடக்கக் குறிப்போடு இப்பாடலில் ஒளவையார் உணர்த்தி இருக்கும் மெய்யியல் சிந்தனை அருமையும் எளிமையும் அழகும் ஆழமும் சான்றது:

'வாழ்தல் வேண்டும்இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை.'


2.அடுத்து, 'ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர், முத்தீப் புரையக் காண்தக இருந்த, கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்' என இப்பாடலில் ஒளவையார் கையாண்டிருக்கும் உவமை நயமும் நுட்பமும் பொருந்தியது. அந்தணர்கள் வேள்வி செய்யும் பொழுது வளர்க்கும் ஆசுவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம் என்னும் மூன்று தீ வகைகள், தமிழ் மூவேந்தர்களுக்கு இப்பாடலில் உவமை ஆகக் காட்டப்-பட்டுள்ளன. ஒன்று (வீடு பேறு) புரிந்து, இரு பிறப்பாளர், முத்தீ என இவ்வுவமையில் இடம் பெற்றிருக்கும் எண்ணலங்காரமும் சுவைமிக்கது.

3.முத்தாய்ப்பாக, 'புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களில், இந்த ஒரு பாடல் மட்டுமே மூவேந்தர்களும் ஒருங்கிருந்தபொழுது பாடப்பட்ட பாடல்' (புறநானூறு: மூலமும் எளிய உiயும், ப.322) என்பது இப்பாடலின் உரை விளக்கத்தில் முனைவர் இர.பிரபாகரன் உணர்த்தும் சிறப்புக் குறிப்பு ஆகும். 'மூவேந்தர்களும் பிளவுபட்டு நில்லாமல் ஒன்றுபட்டு வாழ்ந்து, அவரவர் நாட்டை நல்ல முறையில் ஆட்சி புரிந்து, அறம் சார்ந்த செயல்களைச் செய்து. தத்தம் நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும்' என்பது இப்பாடலின் வாயிலாக ஒளவையார் உணர்த்தும் பாவிகம். ஆயின், தமிழ் வேந்தர்கள் ஒற்றுமை உணர்வின்றித் தமக்குள் அடிக்கடி போர் புரிந்து கொண்டே இருந்ததால், களப்பிரரும், வடுகரும், மோரியரும், பல்லவரும், துருக்கரும், தெலுங்கரும், மேலைநாட்டு வெள்ளையரும் தமிழ்நாட்டைப் பல்லாண்டுக் காலம் ஆட்சி புரிந்தனர் என்பது வரலாறு காட்டும் கசப்பான உண்மை.

4.'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு' என்பதைத் தமிழினம் உணரும் திருநாள் - பெருநாள் - பொன்னாள் - என்று வருமோ?' என்பதே இப்பாடலை மனம் கலந்து - பொருள் உணர்ந்து - பயிலும் எவர் மனத்திலும் மூன்றாம் பிறையாய் முகம் காட்டும் ஏக்கம் ஆகும். 'தமிழன் என்றோர் இனம் உண்டு - தனியே அவர்க்கொரு குணம் உண்டு' எனப் பாடிய நாமக்கல் கவிஞர், தமிழனின் தனிக்குணம் என்ன என்பதைச் சுட்டிக் கூறாமல் விட்டதும் இங்கே நோக்கத்தக்கது. பகைமை உணர்வு கொண்டு பிரிந்து வாழும் இரு குடும்பங்களின் கதையான தமிழ்த் திரைப்படம் ஒன்றிற்கும் 'சேரன் பாண்டியன்' என்னும் பெயர் சூட்டப்பெற்றதும் ஈண்டு மனங்கொளத்தக்கது.
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.