குறுந்தொகை காட்டும் திணை மயக்கம்

பேராசிரியர் இரா.மோகன்

ட்டுத் தொகை நூல்களின் பெயர்களைத் தொகுத்துக் கூறும் பழைய வெண்பா 'நல்ல குறுந்தொகை' என்று குறுந்தொகையைப் பாராட்டுகின்றது. இளம்பூரணர் தொடங்கி வைத்தியநாத தேசிகர் வரையிலான பண்டைய உரையாசிரியர்கள் 29 பேர் தத்தம் உரைநூல்களில் மேற்கோளாகக் குறுந்தொகைப் பாடல்களை எடுத்தாண்டுள்ளனர். 'இந்நூலுள் இப்பொழுது தெரிந்த வரையில் 165 செய்யுட்களே பிற நூல் உரைகளில் மேற்கோளாகக் காட்டப் பெறாதவை' (குறுந்தொகை மூலமும் உரையும், p.xiii) எனப் 'பதிப்பு வேந்தர்' உ.வே. சாமிநாதையர் தம் குறுந்தொகைப் பதிப்பிற்கு எழுதிய முகவுரையில் குறித்துள்ளார்.

'அகப்பொருள் நுதலிய தொகை நூல்களுள் அடியளவாற் பெற்ற பெயர் இதுவாகும். நாலடிச் சிற்றெல்லையையும் எட்டடிப் பேரெல்லையையும் உடையது. அடியளவாற் குறுகியதன்றிப் பொருளளவாற் பெரியதென்றே கூறலாம்' (உரைநடைக் கோவை: இரண்டாம் பகுதி, பக்.96-97) என்பர் பண்டிதமணி மு.கதிரேசனார். இனி, தொல்காப்பிய நெறி நின்று, குறுந்தொகை காட்டும் திணை மயக்கம் குறித்து ஈண்டுக் காணலாம்.

தொல்காப்பியரின் திணை மயக்கக் கோட்பாடு

தொல்காப்பியர் பொருளதிகாரத்தின் முதல் இயலான அகத்திணையியலில் திணை மயக்கம் குறித்துப் பின்வரும் மூன்று நூற்பாக்களில் பேசுகின்றார்:

1.'திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே
நிலன்ஒருங்கு மயங்குதல் இன்றுஎன மொழிப
புலன்நன்கு உணர்ந்த புலமை யோரே.' (
958)

2.'உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே.' (959)

3.'எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்.'
(965)

இந்நூற்பாக்களுக்கு உரையாசிரியர்கள் வேறு வேறாக உரை வகுத்துள்ளனர்.

'திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே' என்ற நூற்பா முதற்பொருள் மயக்கம் கூறிற்று என்பர் இளம்பூரணர். ஒரு திணைக்கு உரிய முதற்பொருள் மற்றொரு திணைக்கு உரிய முதற்பொருளோடு சென்று மயங்கும். அவ்வாறு மயங்கும் போது இரண்டு நிலங்கள் சேர்ந்து நிற்காது. எனவே காலம் மயங்கும் என்பது அவரது விளக்கம்.

நச்சினார்க்கினியர் இந்நூற்பா உரிப்பொருள் மயக்கம் கூறுவது என்பர். இன்ன நிலத்து இன்ன ஒழுக்கம் தான் நிகழும் என்று வரையறுத்துக் கூறிய ஒழுக்கம் அவ்வந் நிலத்திற்கே உரித்தாய் ஒழுகாது தம்முள் மயங்கியும் வரும். அவ்வாறு இரண்டு ஒழுக்கங்கள் தம்முள் மயங்கும் போது ஒரே ஒழுக்கத்தின்கண் இரண்டு நிலங்கள் மயங்காது என்பது அவர் தரும் விளக்கம்.

நாவலர் சோமசுந்தர பாரதியாரும் இந்நூற்பா உரிப்பொருள் மயக்கமே கூறிற்று என்பர். எங்கும் எவ்வொழுக்கமும் நிகழும் என்பது அவர் கருத்து.

எங்கும் எவ்வொழுக்கமும் நிகழ்வது உலகியல் வழக்கு. ஒரு நிலத்து ஓர் ஒழுக்கம் தான் நிகழ வேண்டும் என்று வகுப்பது புலனெறி வழக்கு.

புலவர் குழந்தையும் திணை என்பதற்கு ஒழுக்கம் என்று பொருள் கொண்டு ஐந்து ஒழுக்கங்களும் மயங்கும் எனக் கூறுவர்.

வித்துவான் மு.அருணாசலம் பிள்ளை இளம்பூரணரின் கருத்தினராகவே காணப்படுகின்றார்.

'உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே' என்ற நூற்பாவில் குறிக்கப் பெறும் 'உரிப்பொருள் அல்லன' எவை என்பதிலும் உரையாசிரியர்கள் தம்முள் கருத்து மாறுபடுகின்றனர்.

இளம்பூரணர் உரிப்பொருள் அல்லாதனவாக முதற்பொருளையும் கருப்பொருளையும் கருதுவர்.

நச்சினார்க்கினியர், புலவர் குழந்தை, வித்துவான் மு.அருணாசலம் பிள்ளை ஆகியோர் கைக்கிணை, பெருந்திணை ஆகியவற்றைக் கருதுகின்றனர்.

நாவலர் சோமசுந்தர பாரதியார் கொண்டுதலைக் கழிதல், பிரிந்தவண் இரங்கல், கலந்த பொழுது, காட்சி ஆகியவற்றைக் கருதுகின்றார்.

இவற்றுள் இளம்பூரணர் கருத்தே ஏற்புடைய ஒன்றாகத் தோன்றுகின்றது. பாடலுட் பயின்று வருகின்ற மூன்று பொருள்களுள் உரிப்பொருள் அல்லாத பொருள்கள் முதலும் கருவுமே. இவற்றை விடுத்து நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கிளை, பெருந்திணை என்று கொள்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை.

'உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே'

என்ற நூற்பா, முதற்பொருளும் கருப்பொருளும் மயங்கும், உரிப்பொருள் மயங்காது என்பதே தொல்காப்பியர் கருத்து என்பதைத் தெளிவுபடுத்தும், அடுத்து, முதற்பொருள் மயங்கும் போது நிலம் மயங்காது, காலம் மயங்கும் என்பதை, 'நிலன் ஒருங்கு மயங்குதல் இன்று என மொழிப' என்னும் நூற்பாவின் வாயிலாகப் புலப்படுத்துவார் தொல்காப்பியர்.

மூன்றாவதாக, மயங்கி வரும் கருப்பொருளை எவ்வாறு கொள்ள வேண்டும் என்பதை, 'எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்' எனத் தொடங்கும் நூற்பாவில் கூறுகின்றார் தொல்காப்பியர். 'எந்த நிலத்திற்கு உரிய பூவாயினும் பறவையாயினும், அந்தந்த நிலத்தொடும் பொழுதொடும் வராமல், வேற்று நிலங்களில் காணப்படுவதாகப் பாடல்களில் வருமாயினும், அவை வந்துள்ள அந்தந்த நிலத்திறகு உரியனவாகவே கருதப்படும்' என்பது அவர் தரும் விளக்கம்.

முனைவர் கு.மங்கையர்க்கரசி தொகுத்துக் கூறுவது போல், 'நிலன் மயங்காது, உரிப்பொருள் மயங்காது, ஏனைய கருப்பொருளும் காலமும் மயங்கும் என்பதே தொல்காப்பியனாரின் திணை மயக்கக் கோட்பாடு என்பதும், உரிப்பொருளுக்குத் தலைமை இடம் தந்து திணை வகுப்பதே அவர் கால இலக்கிய மரபு என்பதும் தெளிவாகின்றன' (அக இலக்கியக் கோட்பாடுகள், பா.12) எனலாம்.

திணை மயக்கம் காட்டும் வாழ்வியல் நெறி

திணை மயக்கம் பற்றிய ஆய்வு நுண்மையானது; சிக்கலானது. அதிலும் திணை மயக்கம் காட்டும் வாழ்வியல் நெறியைக் கண்டறிவது என்பது இன்னமும் திட்பமும் நுட்பமும் மிக்கது; ஆயின், இன்றைய கணினி யுகத்திற்கும் அது செய்தியை நல்க வல்லது. பதச் சோறாக, சங்கச் சான்றோர் அம்மூவனாரின் அகத்திணைப் பாடல்களில் (அகநானூறு, 140 ரூ 390) வரும் மாந்தர்களைக் குறித்து இங்கே எண்ணிப் பார்க்கலாம். உப்பு விற்கும் உமணக் குடியைச் சார்ந்த குமரிப் பெண்கள் அம்மூவனாரின் இரு அகநானூற்றுப் பாடல்களில் தலைவியராக வருகின்றனர். உமணப் பெண் ஒருத்தி தன் தந்தையுடன் மலை நாட்டிற்கு உப்பு விற்கச் செல்லுகின்றாள்; 'நெல்லுக்கும் உப்புக்கும் நேர் விலை' என்று பண்டமாற்றுப் பகர்கின்றாள். சங்கு வளை ஒலிக்கக் கை வீசி நடக்கும் அவளது ஒசிந்த நடையிலும், நாய் குரைக்கக் கேட்டு அஞ்சும் அவளது மருண்ட பார்வையிலும் தன் உள்ளத்தைப் பறி கொடுக்கின்றான் ஒரு மலை நாட்டு இளைஞன். உப்பு வண்டியை ஏற்றமும் இறக்கமும் உள்ள குன்றுகளின் வழியே இழுத்துச் செல்லும் காளையைப் போல் பெருமூச்சு விடுகின்றான் அவன். நெய்தல் தலைவிக்கும் குறிஞ்சித் தலைவனுக்கும் இடையே நிகழும் காதலைச் சொல்லும் இது ஒரு திணைக்கலப்பு மணம் என்கிறார் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் (தமிழ்க் காதல், ப.280).

'நெல்லும் உப்பும் நேரே  ஊரீர்!
கொள்ளீ ரோ?' எனச் சேரிதொறும் நுவலும்
அவ்வாங்கு உந்திஅமை தோளாய்! நின்
மெய்வாழ் உப்பின் விலை எய்யாம்'
(அகநானூறு, 390)

என வரும் அம்மூவனாரின் பிறிதோர் அகநானூற்றுப் பாடலும் கலப்பு மணப் பாடலே. அது நெய்தல் மகளுக்கும் முல்லை மகனுக்கும் இடையே நிகழும் காதலைப் புனைவது. 'நெல்லின் அளவிற்கு உப்பு அளவு கிடைக்கும்' என்று கூறிச் செல்லும் உமணக் குமரியைப் பார்த்து, 'பெண்ணே, கடல் உப்பின் விலையைக் கூறினாய், அறிந்தேன்; நின் மெய் உப்பின் விலைதான் தெரியவில்லை' என்று குறும்பாகவும் காதல் குறிப்போடும் மொழிகின்றான் ஓர் இளைஞன். ஈண்டு அம்மூவனாரின் சொல் விளையாட்டுத் திறன் சுடர்விட்டு நிற்கக் காண்கிறோம். 'உப்பு' என்னும் சொல்லுக்கு, சுவை இனிமை சத்து என்ற பொருள்களும் உண்டாதலின், 'மெய்வாழ் உப்பு' என்று புணர்ச்சி இன்பத்தைச் சுட்டுகின்றான் குறும்பான அந்த இளைஞன். இங்ஙனம் கலப்பு மணம், பண்ட மாற்று முதலான இன்றைய கால கட்டத்திற்கும் தேவைப்படுகின்ற வாழ்வியல் நெறிகளைச் சங்கப் பாடல்களில் ஆங்காங்கே காண முடிகின்றது. சங்கப் பாடல்களில் இடம்பெற்றுள்ள திணை மயக்கம் பற்றிய கல்வி இவ்வகையில் முக்கியமானதும் முதன்மையானதும் ஆகும்.

குறுந்தொகையில் திணை மயக்கம்

நுண்ணாய்வு நோக்கில் குறுந்தொகையில் குறிஞ்சித் திணைப் பாடல்களில் இடம் பெற்றுள்ள திணை மயக்கம் குறித்து முதற்கண் காணலாம். குறுந்தொகையில் குறிஞ்சித் திணைப் பாடல்களாகப் பதிப்பாசிரியர்களால் சுட்டப் பெற்றிருப்பவை எண்ணிக்கையில் 111 ஆகும். இப்பாடல்களைக் கூற்றுகளில் அடிப்படையில் வகைப்பாடு செய்யும் போது, தோழி கூற்றுப் பாடல்களே எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பதைக் காண முடிகின்றது. அகத்திணை மாந்தர் அடிப்படையில் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள குறிஞ்சத் திணைப் பாடல்களின் எண்ணிக்கைப் பட்டியல் வருமாறு:

1. தோழி கூற்றுப் பாடல்கள் - 60
2. தலைவி கூற்றுப் பாடல்கள் - 52
3. தலைவன் கூற்றுப் பாடல்கள் - 37

ஆய்வு நோக்கில் பேராசிரியர் அ. பாண்டுரங்கன் தம் 'தொகை இயல்' என்னும் நூலில் பதிவு செய்துள்ள ஓர் அரிய கருத்து பின்வருமாறு:

'குறிஞ்சித் திணை எனப் பதிப்பிக்கப்பட்ட பாடல்களில் திணை மயக்கம் மிகுதியாக உள்ளது. 39 குறிஞ்சித் திணைப் பாக்களில் (குறுந்தொகை 17, நற்றிணை 17, அகநானூறு 5) நெய்தல் பின்புலத்தில் குறிஞ்சியின் உரிப்பொருள் மயங்கியுள்ளது; முல்லையும் குறிஞ்சியும் மயங்கிக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் திணைக் கோட்பாடு எவ்வளவு சிக்கலானது என்பதனை எமக்கு தெளிவுபடுத்துகின்றன. குறிஞ்சித் திணைப் பாக்கள் முழுவதையும் ஒன்றாகத் தொகுத்து நுண்ணாய்வு செய்யும் போது, மேலும் பல விளக்கங்கள் கிடைக்கலாம்' (பக்.81-82).

கபிலரின் குறிஞ்சித் திணைப் பாடல்

'யாரும் இல்லை, தானே கள்வன்' எனத் தொடங்கும் கபிலரின் முத்திரைப் பாடல் குறுந்தொகையில் குறிஞ்சித் திணை சார்ந்ததாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 'வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது' என்னும் துறையில் அமைந்த அப்பாடல் வருமாறு:

'யாரும் இல்லை; தானே கள்வன்;
தான்அது பொய்ப்பின், யான்எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே.'
(25)

இப்பாடலில் மருத நிலக் கருப்பொருள்களான ஆரல் மீனும் குருகும் (நாரையும்) வருகின்றன் இதன் உரிப்பொருள் புணர்தல் நிமித்தமாக இருப்பதால், இப்பாடல் குறிஞ்சித் திணை எனப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 'ஆரல் பார்க்கும் நாரை உண்டு என்றமையின் இக் களவுக் கூட்டம் நீர்த்துறைக்கண் நிகழ்ந்தது என்பது பெறப்படும்' (குறுந்தொகை மூலமும் உரையும், ப.60) என்னும் 'பதிப்பு வேந்தர்' உ.வே.சாமிநாதையரின் உரை விளக்கம் இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

கபிலரின் இக் குறுந்தொகைப் பாடல் உணர்த்தும் அரிய வாழ்வியல் நெறி – உயரிய விழுமியம் - ஒன்று உண்டு. அதனைப் பண்டிதமணி மு.கதிரேசனாரின் சொற்களில் இங்கே காணலாம்:

'களவொழுக்கத்து நெடுங்காலம் பயின்று கற்பு முறையில் மணஞ் செய்து கொள்ளாதிருந்த தலைவனியல்பைக் குறித்துத் தலைமகள் தோழியை நோக்கி, 'தோழி! தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவார் வேறொருவருமிலர்; தலைவர் ஒருவரே இருந்தனர்; அவரே தாம் கூறிய சூளுறவினின்றுந் தப்பியொழுகுவாராயின், யாஞ் செய்யத்தக்கது யாதுளது? அவ்விடத்து அவ்வமயம் ஒரு நாரை மாத்திரம் இருந்தது; அதுவும் ஓடும் நீரில் தானுண்ணும் பொருட்டு ஆரல் மீனின் வரவை எதிர்பார்த்து நின்றதாகலின், எம் நிகழ்ச்சியைக் கண்ணுற்றிராது; காணாததொன்றைப் பற்றிச் சான்றாதற்குத் தமிழ் நிலத்துப் புள்ளும் ஒருப்படாது, வாய்மை நெறியொழுகும் இயல்பினதாகலின் என்று தலைவி கூறினளாம்' (உரைநடைக் கோவை: இரண்டாம் பகுதி, ப.110).

வடமவண்ணக்கண் பேரிசாத்தனின் குறுந்தொகைப் பாடல்

வடமவண்ணக்கண் பேரிசாத்தன் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் (81) குறிஞ்சித் திணையின் கீழ்ப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 'தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது' என்னும் துறையில் அமைந்த அப்பாடல் வருமாறு:

'இவளே, நின்சொற் கொண்ட என்சொற் தேறிப்
பசுநனை ஞாழற் பல்சினை ஒருசிறைப்
புதுநலன் இழந்த புலம்புமார் உடையள்;
உதுக்காண் தெய்ய் உள்ளல் வேண்டும் -
நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக்
கடலும் கானலும் தோன்றும்
மடல்தாழ் பெண்ணை எம்சிறுநல் ஊரே.'


தோழியின் வாயிலாகத் தலைவியோடு அளவளாவப் பெற்ற தலைவன் பிரியும் காலத்தில் அவனை நோக்கி, 'நின்னுடைய குறையை நான் முடித்து வைத்தேன்; தலைவி நின்னோடு ஒன்றினள்; இனி நீ எம்மை மறவாது, அதோ தெரியும் எம் ஊருக்கும் வந்து பழக வேண்டும்' என்று தோழி கூறுகிறாள். குறிஞ்சித் திணை சார்ந்ததாகப் பதிப்பிக்கப் பெற்ற இப் பாடலில் நெய்தல் நிலக் கருப்பொருள்களான ஞாழல் மரமும் பனை மரமும் கடலும் கடல் சார்ந்த ஊரும் வருகின்றன் தலைவி நெய்தல் நிலத்தவளாகப் படைக்கப்பட்டுள்ளாள்.

கொல்லிக் கண்ணனின் குறுந்தொகைப் பாடல்

கொல்லிக் கண்ணன் என்னும் சங்கச் சான்றோர் பாடியுள்ள குறுந்தொகை 34-ஆம் பாடலின் துறைக் குறிப்பு வரைவு மலிந்தமை(யை) ஊர் மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியதாக அமைந்துள்ளது. இது குறிஞ்சித் திணையின் உரிப்பொருள் ஆகும்.

'ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர்,
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்,
இனியது கேட்டு இன்புறுக, இவ்ஊரே!
முனாஅது, யானையங் குருகின் கானல்அம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்புஇசை வெருஉம்
குட்டுவன் மரந்தை அன்னஎம்
குழைவிளங்கு ஆய்நுதல் கிழவனும் அவனே'


இப்பாடலில் குட்டுவன் மரந்தை என்னும் மருத நில நகரம் தலைவிக்கு உவமையாகப் புனையப்பட்டுள்ளதால், பதிப்பாசிரியர்கள் இதனை மருதத் திணைப் பாடலாகப் பதிப்பித்துள்ளனர்.

நெய்தல் திணைப் பாடல்கள்

'சங்க இலக்கிய அகத்திணைப் பாக்களை முழுமையாகத் தொகுத்து ஆராயும் போது, நெய்தல் திணைப் பாக்கள் பிற திணைப் பாக்களுடன் எளிதில் மயங்கிக் கிடப்பதைக் காண முடிகின்றது. நெய்தலின் உரிப்பொருள், பிரிவின் இறுதி எல்லையான இரங்கலாக இருப்பதால், பிரிவோடு தொடர்புடைய குறிஞ்சி முல்லை பாலைத் திணைப் பாக்களும் நெய்தல் திணையோடு மயங்கி நிற்கின்றன எனலாம்' (தொகை இயல், ப.99) என்பர் பேராசிரியர் அ.பாண்டுரங்கன். இக் கருத்திற்கு அரண் சேர்க்கும் குறுந்தொகைப் பாடல் ஒன்றினை இங்குக் காணலாம்.

'அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்,
நீஆ கியர்எம் கணவனை!
யான்ஆ கியர்நின் நெஞ்சு நேர்பவளே!'
(49)

என்பது அம்மூவனாரின் சாகா வரம் பெற்ற பாடல். இப் பாடலில் வரும் தலைவன் பரத்தையரிடம் இருந்து பிரிந்து தன் இல்லத்திற்குத் திரும்பி வருகிறான்; தலைவனைக் கண்டதும் தலைவியின் ஆற்றாமை நீங்குகின்றது. பள்ளியிடத்தானாகிய தன் தலைவனை நோக்கித் தலைவி இப் பாடலில் பேசுகின்றாள். இங்கே தலைவன் கருப்பொருளால் நெய்தல் நிலத்தைச் சார்ந்தவன். பாடலின் பின்புலம் நெய்தலாக இருந்தும், உரிப்பொருளால் இது மருதத் திணைக்கு உரியதாகின்றது. எனினும், இப் பாடல் நெய்தல் திணைப் பாடலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

'இது ஒரு தலைவியின் உறுதிப்பாடு. தலைவன் பெரும்பரத்தன், இன்பத் துறையில் மிக எளியவன் என்பதற்காகத் தமிழ்ப் பெண் நெஞ்சு மாறாள், இல்லறம் துறவாள். இல்வாழ்க்கையை ஆடாது அசையாது நிலைகாக்கும் தூண் போல்பவள் பெண் என்பது தமிழியம் ... பண்டைத் தமிழ்ப் பெண்டிர் தாம் என்றும் நிலை திரியாத் திண்ணியர், அத் திண்ணிய அன்பினால் கணவனைத் திருத்த முயலும் நெறியினர். இஃது தமிழர் கண்ட இல்லற நாகரிகம். 'இம்மை மாறி மறுமை யாயினும்' என்ற உறுதித் தொடரைக் கேட்கும் ஆடவனது மனம் சிறிது சிந்திக்கும். 'நீயாகியர் எங் கணவனை' என்ற அன்புத் தொடரைக் கேட்கும் போது திருந்தும் எண்ணம் பிறக்கும். 'யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே' என்ற பண்புத் தொடரைக் கேட்கும் போது, இப் பிறவியிலேயே அவளின் நெஞ்சு நேர்பவனாக ஆக வேண்டும் என்ற கருத்துத் தோன்றி, ஆகினேன் என்று சொல்ல மாட்டானா மான மிக்க ஆண்தகை?' (தமிழ்க் காதல், பக்.280-281) என இப்பாடலில் வெளிப்படும் விழுமிய வாழ்வியல் நெறியினை விதந்து போற்றுவர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம்.

ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தனின் குறுந்தொகைப் பாடல்

நெய்தல் நிலப் பின்புலத்தில் புனையப்பட்டுள்ள களவொழுக்கம் தொடர்பான பாடல் ஒன்று (184) குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடிய சான்றோர் ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் என்பது குறிப்பிடத்தக்கது. 'கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது' என்னும் துறையில் அமைந்த அப் பாடல் வருமாறு:

'அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே-
இதற்குஇது மாண்டது என்னாது, அதற்பட்டு,
ஆண்டுஒழிந் தன்றே மாண்தகை நெஞ்சம்-
மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படூஉம் கான லானே.'


'நெய்தல் நிலத் தலைவி மயிலினது பீலிக் கண்ணைப் போன்ற மாட்சிமைப்பட்ட அழகிய நெடுங்கூந்தலை உடையவள். சிறிய மீனையும் தப்ப விடாது அகப்படுத்தும் நுண்ணிய வலைகளை உடைய பரதவரின் மடமகள் அவள். அத்தகையவளின் கண்வலைப் பட்டேன் யான். 'நின்னிற் பிரியேன்; பிரியின் உயிர் தரியேன்' என்று சூளுரைத்தேன். இப்போது நீ, அவள் வாழும் சிறுகுடிப் பக்கம் செல்லாதே என்கிறாய். இத் தலைவியோடு நாம் நுகரும் இன்பத்தினும் மேற்பட்ட இன்பம் ஒன்று உண்டோ என முடிவு செய்தது என் உள்ளம். ஆதலால், என் காதல் வாழ்வைப் பொய்யாக்க மாட்டேன்!' என்று தலைவன் தன்னை இடித்துரைத்த பாங்கனிடம் பேசுகின்றான்; மறுமொழி கூறுகின்றான்; களவில் தான் மணந்த காரிகை இல்லாமல், தனக்கு வாழ்க்கை இல்லை என்பதைப் புலப்படுத்துகின்றான். இங்ஙனம் நெய்தல் பின்புலத்தில் குறிஞ்சித் திணைக்கு உரிய களவு வாழ்க்கையைப் படைத்து, அதில் தலைவன் கூற்று நிகழுமாறு படைத்திருப்பவர் வேற்று மொழி சார்ந்த ஒரு மன்னர் - ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் - என்பதனை எண்ணும் போது 'வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே!' என மொழியத் தோன்றுகின்றது.

'குறுந்தொகை காட்டும் திணை மயக்கம்' என்பது பரந்துபட்ட அளவில், நுண்ணாய்வு நோக்கில் மேற்கொள்ள வேண்டிய ஓர் ஆய்வுத் தலைப்பாகும். அதற்கான ஒரு முன்னோட்டமே இக் கட்டுரை எனலாம்.







முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.