விஜயலட்சுமி மாசிலாமணி: புதிய விடியலுக்குப் பாதையிடும் வல்லமை படைத்த படைப்பாளி

பேராசிரியர் இரா.மோகன்


“நாளை நமதே – இது
நம்பிக்கை வாக்கு!
நேரான நோக்கு - அது
இன்றைய இலக்கு!”
(சுமையல்ல சுகம், ப
.211)

என்னும் நேரிய நம்பிக்கை மொழிக்கு – உயரிய உடன்பாட்டுச் சிந்தனைக்கு – சொந்தக்காரர் ‘விஜிமா’ என்ற புனைபெயரால் தமிழ் கூறு நல்லுலகில் அறியப்படும் விஜயலட்சுமி மாசிலாமணி. ‘வளத்துக்கு வித்து’ என்னும் வாழ்க்கை முன்னேற்ற நூலின் வாயிலாக எழுத்துலகில் அவர் அடியெடுத்து வைத்தது 1990-ஆம் ஆண்டில். படைப்பு வாழ்வில் இன்று வெள்ளி விழாக் கண்டிருக்கும் விஜிமாவைப் பொறுத்த வரையில் ‘எழுத்து ஓர் இனிய கலை’. அவரது எழுதுகோல் கவிதை, புனைகதை, கட்டுரை என்னும் இலக்கிய வகையின் முத்துறைகளுக்கும் சிறந்த பங்களிப்பினை நல்கியுள்ளது. ‘பெருமைக்குரிய பெண்மணிகள்’ என்னும் அவரது நூல் ஆளுமை வளர்ச்சி நோக்கில் இன்றியமையாத ஒன்றாகும். கவியரசர் பாரதியார் கனவு கண்ட புதுமைப் பெண்ணாக உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் மேற்கொண்டு, அங்கே வாழும் தமிழர்களின் வாழ்க்கை நிலை குறித்துக் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வின் வாயிலாகப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் விஜிமா படைத்துள்ள நூல்கள் யாவும் முத்திரை பதித்தவை. மேலும் அவர், ‘கவிதை பாட ஆசை’, ‘எண்ணங்களே கவிதைகளாய்’, ‘காதல் தொகை’, ‘மூக்குத்திப் பூக்கள்’, ‘சுமையல்ல சுகம்’ என்னும் கவிதை நூல்களையும் தமிழன்னைக்கு மணியாரங்களாகச் சூட்டியுள்ளார்; தமது திறமான எழுத்துப் பணிக்காகப் பல்வேறு பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். ‘எழுதுகோல் தெய்வம் எழுத்து தெய்வம்’ என்னும் பாரதியாரின் வைர வரிகளைப் பொன்னே போல் போற்றும் விஜிமா,

“எழுத்து என்னை உயிர்ப்பிக்கிறது...
எழுத்து என்னுயிர் எழுச்சிக்கு
எழுச்சி இல்லையேல் என் மூச்சு
எனக்கு செந்தமில்லை”
(சுமையல்ல சுகம், பக
்.102; 105)

என ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இரு மணித் துளிகளில் எழுதிய வாழ்த்துக் கவிதை

விஜிமா வாஷிங்டனில் 29.11.2009 அன்று நிகழ்ந்த தமது மூத்த மகன் இளங்கோவின் திருமண நாளில் இரண்டே மணித்துளிகளில் எழுதிய வாழ்த்துக் கவிதை வருமாறு:

“அன்பே சிவமாய் / ஆனந்தமே சிகரமாய்
இல்லறமே சுகமாய் / ஈதலே நலமாய்
உள்ளம் கோயிலாய் / ஊக்கம் உயர்வாய்
எளிமைத் தோற்றமாய் / ஏகாந்தச் சுடராய்
ஐஸ்வர்யம் மிகவாய்
ஒற்றுமை பலமாய் / ஓங்கிய புகழாய்
மழலைகள் பலவாய் / நிலாவின் சிரிப்பில்
ஔவை மொழியில் / அஃதே ஆனந்தமாய்
வாழ்க பல்லாண்டு!”
                     (சுமையல்ல சுகம், ப
.114)

அன்பில் தொடங்கும் இக் கவிதை ஆனந்தத்தில் முடிவது ஒரு சிறப்பு; உயிரெழுத்துக்களின் வரிசை முறையில் பாடப்பெற்றிருப்பது இக் கவிதையின் பிறிதொரு நயம்.

முத்திரைக் கவிதை

‘புதிய விடியல்’ விஜிமாவின் முத்திரைக் கவிதை. ‘போதை தரவன்று, புதிய விடியலுக்குப் பாதையிட வல்லதே பாட்டு’ என்னும் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரைவிலக்கணத்திற்கு நல்லதோர் இலக்கியமாகக் காட்டத் தக்க சிறப்பினைப் பெற்ற கவிதை அது. உலகில் பலர் விடியலுக்காக விழித்திருக்கின்றனர்; சிலர் விடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றனர். காக்கைக்கும் குருவிக்கும் கூடத் தான் நாள்தோறும் விடிகின்றது. அவை எல்லாம் புதிய விடியல் ஆகுமா என வினவுகின்றார் விஜிமா. ஒன்று மட்டும் உண்மை; உறுதி: யாரும் யாருக்காகவும் விழித்து எழ முடியாது. லஞ்சம் கொடுத்தாலும் சூரியன் கிழக்கே தான் உதிக்கும்! இதில் மாற்றம் எதுவும் நிகழாது. பின் எது தான் புதிய விடியலாக அமையும்? இதோ கவிஞரின் தெள்ளத் தெளிவான மறுமொழி:

“அவரவர் அவரவர் நிலையில்
அழுத்தமாய் நின்று செயல் புரிய
உண்டு புதிய விடியல்...

விழி மூடினாலும் திறந்தாலும்
குறி மாறாது செயலாற்ற
வருகிறது புதிய விடியல்”
(சுமையல்ல சுகம், ப.25)

கவிஞரின் நோக்கில் ‘திறம் வியந்து செயல் மறந்து’ அல்ல, ‘அழுத்தமாய் நின்று செயல் புரிய’ – ‘குறி மாறாது செயலாற்ற’ வருவதே புதிய விடியல் ஆகும். இக் கருத்தினையே வேறு சொற்களில், ‘உறங்கி விழித்தால் அது, அந்த இரவுக்கு விடியல்; உறங்காது உழைத்தால் அது, உனக்கு வரவின் விடியல்’ என இளைய தலைமுறைக்கு அறிவுறுத்துகின்றார் விஜிமா.

கவிதையின் உயிர்நாடி

“கவிதையின் உயிர்நாடி மனித ரசிப்பைத் தாண்டி மனித ஒழுக்க நெறிக்கு ஒரு துளியாவது பயன்படும்படியாக இருக்க வேண்டும். காதலையும் வீரத்தையும் மட்டுமே அடுக்கடுக்காய் அள்ளிக் கொடுக்காமல், வாழ்க்கை நெறிகளையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் ஆங்காங்கே அள்ளித் தெளிக்க வேண்டும்” (pp.xi-xii) எனச் ‘சுமையல்ல சுகம்’ தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் தமது கவிதைக் கொள்கை குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார் விஜிமா. அவரது கருத்தியலில், ‘அகம், புறம் சொல்லி, மனித வாழ்க்கைத் தத்துவங்களையும் சொல்லுகின்ற மிக்க வலிமை வாய்ந்த ஒரு கருவியே கவிதை’ ஆகும். இவ் வரைவிலக்கணத்திற்கு ஏற்பவே அவர் தமது கவிதைகளைப் படைத்துள்ளார்; கவிதைகளின் வாயிலாக விழுமிய வாழ்க்கை நெறிகளையும், உயரிய வாழ்க்கைத் தத்துவங்களையும் ஆங்காங்கே உணர்த்திச் சென்றுள்ளார்.

“எண்ணச் சிறகை விரித்து விடு!
விண்ணில் பறக்கத் துணிந்து விடு!
குறிக்கோள் ஒன்றை வகுத்து விடு!
முறுக்கேறி அதனை அடைந்துவிடு!”
(சுமையல்ல சுகம், ப.38)

என்பதே அறிவில் மிகச் சிறந்த, ஆற்றல் மிகப் பெற்ற மனித குலத்திற்குக் கவிஞர் அறிவுறுத்தும் வாழ்க்கை நெறி; முறை. ‘ஒருவன் முயற்சிச் சிறகை விரித்தால், வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடித்து விடலாம்’ என்பது கவிஞரின் திண்ணிய கருத்து.
விஜிமாவின் கண்ணோட்டத்தில் ‘சுமப்பது தான் சுகம் என்று மனதுக்குள் ரசிக்கக் கற்றுக்கொண்டால் போதும்’ சுமையும் சுகமே!

“சுமை சுகமானால்
சொர்க்கம் நிச்சயம்!”
(சுமையல்ல சுகம், ப.23)

என்னும் கவிஞரின் வாக்கு இல்லற வாழ்வின் பால பாடம் ஆகும்.

குறுந்தொகைப் பாடலின் புதுக்கவிதை வடிவம்

குறுந்தொகையில் ஓர் அருமையான பாடல்: தலைவனும் தலைவியும் பாலை நிலத்தில் உடன்போக்கு மேற்கொண்டு செல்வதைக் கண்டோர் தம்முள் கூறுவதாக அமைந்தது; மோதாசனார் என்னும் சங்கச் சான்றோர் பாடியது. ‘இவன் இவளது கூந்தலைப் பிடித்து இழுக்கவும், இவள் இவனது தலைமயிரைப் பதிலுக்கு வளைத்து இழுக்கவுமாக இருவரும் ஓடித் திரிவார்கள். அன்புடைய செவிலித் தாயார் இருவரையும் இடை மறித்துத் தடுப்பார். அதையும் மீறி இருவரும் ஒருவரோடு ஒருவர் காரணம் இல்லாத சிறு சிறு சண்டைகளைப் போட்டுக் கொள்வார்கள். இப்பொழுதோ அவ்விருவரும் இணை பிரியாத துணைவர் ஆயினர்; மலர்களால் பிணைக்கப் பெற்ற இரட்டை மாலைகளைப் போல் காணப்படுகின்றனர். இருவரையும் ஒன்று சேர்த்த ஊழின் வலிமைதான் என்னே!’ என்னும் கருத்தமைந்த அழகிய அந்தக் குறுந்தொகை பாடல் இதோ:

“இவன்இவள் ஐம்பால் பற்றவும், இவள்இவன்
புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறுசெரு உறுப மன்னோ;
நல்லைமன்ற அம்ம பாலே, மெல்லிய
துணைமலர்ப் பிணையல் அன்ன இவர்
மணம்மகிழ் இயற்கை காட்டி யோயே!”
(பா.229)

நெஞ்சை அள்ளும் இக் குறுந்தொகைப் பாடலின் சாயலில் ‘அன்புப் பாலங்கள்’ என்னும் தலைப்பில் விஜிமா படைத்துள்ள புதிய கவிதை வருமாறு:

“அவள் போடாபோ எனப் போயிருக்கலாம்;
இவன் போடபோ என ஓடியிருக்கலாம்.
அன்று சகலமும் சண்டையில் முடிந்திருக்கலாம்!
இன்று இருவரும் காணாமல் போயிருக்கலாம்!
ஆனால்...
அவளும் அவனும் என்றோ காதலித்தது...
கருத்தில் காதலில் இணைந்து வாழ்ந்தது...
அவள் சாயலில் ஒரு மகள் இருக்க...
இவள் நிறத்தில் ஒரு மகன் தளிர்க்க...
மகளும் மகனுமாய் வார்ப்புகள் இரண்டு...
அவளும் இவனும் மீண்டும் இணைய
இதுதான் வாழ்க்கை என்றுரைக்க!”
(சுமையல்ல சுகம், ப.64)

‘மனித வாழ்க்கை என்பது எதிர்பாராத திருப்பங்களையும் எண்ணியே பார்த்திராத முடிவுகளையும் கொண்ட ஒரு புதினம் போன்றது’ என்னும் உண்மையை விஜிமா இக் கவிதையில் புலப்படுத்தி இருக்கும் பாங்கு நன்று.

அயலகத் தமிழர்களின் வாழ்க்கைச் சித்திரிப்பு

ஒரு கவிஞர் என்ற முறையில் விஜயலட்சுமி மாசிலாமணியின் படைப்பாளுமையில் சிறந்து விளங்கும் பண்பு ஒன்று உண்டு. அதனை அவரது தனிப்பண்பு என்றும் குறிப்பிடலாம். வாழ்வில் சில காலம் அரசுப் பணியில் இருந்து செயலாற்றியதோடு அவர் அமைதி அடைந்து விடவில்லை; ‘மனையுறை மகளிர்’ ஆக இருந்து வீட்டுப் பணிகளை மட்டும் ஆற்றுபவராகத் தம்மைச் சுருக்கிக் கொள்ளவில்லை. மாறாக, பாரதியார் கனவு கண்ட ஒரு புதுமைப் பெண்ணாகப் பரிணாம வளர்ச்சியைப் பெற்று, தமது துணைவரோடு உலக நாடுகள் பலவற்றிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்; அயல்நாடுகள் பலவற்றிற்குச் சென்று, சிலகாலம் தங்கி, தமது அனுபவ எல்லையை விரிவாக்கிக் கொண்டார்; அயல்நாடுகளில் பிழைப்பதற்காகச் சென்ற தமிழர்களுடன் – குறிப்பாகப் பெண்களுடன் – கலந்து பேசி, கள ஆய்வு மேற்கொண்டு பெற்ற தகவல்கள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் எழுத முற்பட்டார். இது ஏனைய கவிஞர்களிடம் இருந்து, விஜயலட்சுமி மாசிலாமணியைத் தனியே பிரித்துக் காட்டி, வாசகர்களை அவரது படைப்புக்களை உற்றுநோக்குமாறு செய்தது.

இன்று இளைஞர்கள் நிறையப் பேர், நிறையப் படிக்காதவர்கள் இந்தியா, பங்களா தேஷ், இலங்கை, பாகிஸ்தான் முதலான நாடுகளில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வந்து குவிகிறார்கள். ‘ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன், ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்’ என்று திரைப்பாடல் ஒன்று கூறுவது போல், அவர்கள் ஏதோ பொருள் ஈட்டுகின்றார்கள். கூடப் பிறந்தவர்களைக் கரை சேர்ப்பதற்காக இரண்டு ஆண்டுகள், தங்கள் திருமணத்திற்காக, பிறகு குழந்தைகளுக்காக, பிறகு தங்களுக்கு என்று ஒரு வீடு கட்டிக் கொள்வதற்காகப் பல ஆண்டுகள் என்று இளம் வயதில் மனதில் ஆயிரம் கனவுகளோடு வரும் இவர்கள் வயதான பின்பு தாய்நாடு திரும்புவது என்பது ஒரு வரலாற்றுத் தொடர்கதையாகவே ஆகி வருகின்றது. இளைஞர்களின் இந்த அவல நிலையை உணர்ந்து இவர்களுக்காக வருந்துவதோடு நில்லாமல், விஜயலட்சுமி மாசிலாமணி இவர்களைக் குறித்து அவ்வப்போது உண்மை ஒளி சுடர்விட்டு நிற்கும் கவிதைகளையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். பதச் சோறாக, ‘எண்ணங்களே கவிதையாய்’ என்னும் தொகுப்பில் ‘பொருளா-தாரமா?’ என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ள கவிதை ஒன்றை இங்கே சுட்டிக் காட்டலாம். கவிஞரின் சொற்களில் அவலம் சுமந்து நிற்கும் அக் கவிதை இதோ.

‘தாரம்’ பிரித்து / தாம்பத்தியம் விடுத்து
இளைஞனை உலுக்கி / மனசைக் கெடுத்து
கடல் கடந்து ஓட வைக்கிறது / எல்லாம் பொருளுக்காகவா?
பொருளா? தாரமா? / என்று பட்டிமன்றம் வைத்தால்
பொருள்தான் என்று தீர்ப்புக்கே / வாலிபன் / தலையாட்டுவான்
பொருள் சேர்த்துவிட்டால் / தாரத்தைப் பொருள் கொண்டு
சரிக்கட்டி விடலாம் என்ற நினைப்பில்!
ஓ! இந்திய வாலிபனே / உன் கதை இதுதானா?
அடித்துப் பிடித்து / அரபிக் கடலோரம் வேலை தேடி...
எத்தனை இரவுகள்? / எத்தனை கனவுகள்?
அத்தனையும் நனவாக்க / ஒரு மாதம் போதுமா?
மாதம் ஒன்று விடுமுறை என்று / மகிழ்வாய் இந்தியா வந்தால்,
ஊரில் எத்தனை பிரச்சனைகள்? / எத்தனை தேவைகள்?
உன் அன்பு முகம் காண / உன் தாயும் தந்தையும்,
உன்னோடு கலக்க உன் மனைவி தவிக்க,
உன் அரவணைப்புக்காக மகன் சிரிக்க,
நீ கொண்டு செல்லும் / பட்டுக்கும் நகை நட்டுக்கும்
உன் சகோதரிகள் போட்டி போட,
இப்போது சொல் / இந்திய வாலிபனே!
உன் வாழ்வு / பொருளுக்கா? தாரத்திற்கா?”


                              (கண்டதும்... கேட்டதும்... பக
்.62-63)

இத்தனைக்கும் மேலாக, இந்திய இளைஞர்கள் அரபு நாடுகளில் பார்க்கும் வேலைகள் எவை தெரியுமா? ‘எதை எடுத்தாலும் பத்து ரூபாய்’ என்று கூவி அழைக்கும் வேலைக்கு! ‘கவிதை பாட ஆசை’ என்னும் தொகுப்பில் ‘வெளிநாட்டு உத்தியோகம்’ என்ற தலைப்பில் விஜிமா படைத்துள்ள குறுங்கவிதை ஒன்று:

“இந்திய இளவட்டங்கள்
அரசு நாட்டில் குவிப்பு
‘ரோல்ஸ் ராய்ஸ்’ கார் துடைப்புக்கு!”
(கண்டதும்... கேட்டதும்..., ப.61)

என்னும் தலைப்பில் பாடிய பிறிதொரு கவிதையிலும் சவுதி அரேபியாவில் கார் துடைப்புக்காகக் காத்திருக்கும் பாகிஸ்தான், இந்திய, சிங்கள, வங்காளி இளைஞர்களின் அவல நிலையினை உருக்கமாகச் சித்திரித்துள்ளார் கவிஞர்.

பெண்ணியச் சிந்தனைகள்

‘பெண்கள் அறிவை வளர்த்தால் இவ்வையம் தழைக்கும்’ எனப் பாடிய கவியரசர் பாரதியாரின் அடிச்சுவட்டில் பெண் குலம் வாழ்வில் தனித்தன்மை துலங்க முன்னேறித் தடம் பதிப்பதற்கான வழிகளை விஜிமா தம் கவிதைகளில் ஆங்காங்கே கூறிச் சென்றுள்ளார். ‘ஆவதும் பெண்ணாலே!’, ‘விழிப்பின் வீச்சு விடியல்’, ‘யாதுமாகிறாய் பெண்ணே!’, ‘எதிர்நீச்சல்’, ‘கருவறை தொடங்கி’, ‘பெண் குரல்’, ‘விழித்திரு பெண்ணே விழித்திரு’, ‘சுடச் சுட...’ ஆகிய கவிதைகள் இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

“கட்டுப்பெட்டியாய் பட்டுப் புடவையில், கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் ‘ரன்கள்’ எடுத்தது போதும்” என பெண் குலத்திற்குக் கூறும் கவிஞர், ‘வாழும் வகையறிந்து, விழிப்போடு நடை போட்டு, விதியை வென்று விடு!’ என வலியுறுத்துகின்றார்; முத்தாய்ப்பாக,

“அரசியல், அறிவியல் அறிந்து விடு;
அகிலம் கற்கப் பழகி விடு;
அவனியில் உன்நிலை உயர்த்தி விடு;
விழியில் உலகம் வென்றுவிடு!”
(சுமையல்ல சுகம், ப.46)

எனவும் வழிவகை உணர்த்துகின்றார்.

பெண்ணினத்தின் வெற்றிக்குக் கவிஞர் முன்மொழியும் தாரக மந்திரம் எதிர் நீச்சல் ஆகும். “எம் குலப் பெண் வெற்றிக்கு எதிர்ப்பே அடிநாதம்! அவள் மனம் பற்றுவது ‘உறுதி’ எனும் பிடிவேதம்!” என முரசறையும் கவிஞர்,

“எங்கும் எதிலும் எதிர்நீச்சலா? என மலைத்து மறுகாதே!
பெண்ணே புறப்படு! பூமிப்பந்தைச் சுழற்றிடு”

                                                  (சுமையல்ல சுகம், பக்.47-48)

என நெறியும் காட்டுகின்றார். சுடச் சுடப் பொன் மிளிருவது போல – பாடப் பாடக் கவி பிறப்பது போல – செதுக்கச் செதுக்கக் கல்லும் சிற்பமாக உருப்பெறுவது போல – கடையக் கடைய ஆழ்கடல் விடமும் அமுதாய் மாறியது போல – எத்தனை இடர்கள் எதிர்வந்து சூழினும், அவை அனைத்தையும் மன வலிமையால் – நெஞ்சுரத்தால் – பொடிப்பொடியாக்கி வெற்றிக் கனியை எட்டிப் பிடித்து விடலாம் என நம்பிக்கை ஊட்டுகின்றார் கவிஞர்.

“கருவறை தொடங்கி / கல்லறை காணும் வரை
கடக்க வேண்டியவை / நடக்க வேண்டியவை
மைல் கற்கள் எத்தனையோ?”
(சுமையல்ல சுகம், ப.53)

அத்தனை மைல் கற்களையும் தன்னம்பிக்கை தளராது, ஊக்கம் ஊன்றுகோலாக, உழைப்பே உறுதி எனக் கொண்டு நடையும் ஓட்டமுமாய்க் கடந்து, வாழ்வில் நூற்றுக்கு நூற்று மதிப்பெண் பெற்று, சிறந்து காட்டுமாறு பெண் குலத்திற்குக் கவிஞர் அறிவுறுத்துகின்றார். முடிந்த முடிபாக அவர்,

“இனியொரு விதி செய்!
உன்னுள் உன்னைத் தேடு!
தேடலில் விடியல் மலரும்!”


எனப் பெண்ணினம் விழித்தெழவும் வழிகாட்டுகின்றார்.

‘மூக்குத்திப் பூக்கள்’

எங்கும் – எதிலும் – எப்போதும் சுருக்கத்திற்கு ஆற்றலும் ஈர்ப்பும் மிகுதி. ‘சுருங்கச் சொல்லல்’ என்பதை நூலின் தலையாய அழகாகக் குறிப்பிடுவார் நன்னூலார். ‘சுருக்கமே அறிவின் ஆன்மா’
(Brevity is the soul of wit) என்பது ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற மேற்கோள். ‘நயம்பட உரை’ என்பது முதுமொழி; ‘நச்செனச் சொல்’ என்பது புதுமொழி. விஜிமா படிப்பவரைச் சிரிக்கவும் சிந்திக்கவும் சிலிர்க்கவும் வைக்கும் தமது சின்னச் சின்னக் கவிதைகளை ‘மூக்குத்திப் பூக்கள்’ அழகிய என்னும் தலைப்பில் ஒரு தனித் தொகுதியாக வெளியிட்டுள்ளார். நம் மனதை வருடிச் செல்லும் மெல்லிய தென்றல் உணர்வின் சுகம், நெஞ்சை நெருடிச் செல்லும் நெருஞ்சிப் பூவின் தீண்டல், மனசுக்குள் வெடிக்கும் மத்தாப்பூ உணர்ச்சிகளின் பதிவு, தெறிப்பான சிந்தனைகளின் அலைவரிசை என்னும் நான்கு கூறுகளும் ஒன்றிணைந்த கூட்டுக் களியாக இத் தொகுப்பு விளங்குகின்றது “ஒரு பெண்ணின் முகத்தில் ஒற்றைக் கல் மூக்குத்தி எவ்வளவு எடுப்பாகச் சிரிக்கிறதோ அதைப் போல, இந்தப் பூக்கள் சின்ன இலைகளுக்கு இடையே தூக்கலாக மலர்ந்து சிரிக்கின்றன” (ப.3) என இத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் கவிஞர் குறிப்பிடுவது மனங்கொளத் தக்கது.

“சிற்பியின் உளி செதுக்கச் சிலை
சிந்தனைத் துளி உலுக்கக் கவி”
(சுமையல்ல சுகம், ப.27)

என்னும் கவிஞரின் வாக்கும் இங்கே நினைவுகூரத் தக்கது.

“வாழ்க்கையில் உயர
தொலைதூரப் பயணம்
தொலைந்தது வாலிபம்”
(ப.27)

என்பது அயலகங்களுக்குப் பிழைப்பதற்காகச் சென்ற தமிழர்களின் அவல நிலையைச் சித்திரிக்கும் ஓர் உருக்கமான பதிவு.

‘இருவிரல் நடுவில் புகையும் எரிமலை’யான சிகரெட் பேசுமா? இதோ, அதன் சாம்பல் பேசுவதாகக் கவிஞர் படைத்துள்ள ஒரு குறுங்கவிதை:

“நான் முன்னாலே போறேன்
நீ பின்னாலே வா’
சிகரெட் சாம்பல்”
(ப.57)

இக் கவிதையை மனம் கலந்து – பொருள் உணர்ந்து – படிப்பவர்கள் புகை பிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, முழுக்கும் போட்டு விடுவர் என்பது உறுதி.

‘கற்றனைத்து ஊறும் அறிவு’ என்றார் வள்ளுவர். விஜிமாவோ பெண்ணிய நோக்கில்,

“அடுப்புச் சோறு கூட
கிளறினால்தான் வேகும்
அப்படியே அறிவு!”
(ப.43)

ஒரு நாள் காலை நடைப் பயிற்சியின் போது கண்ட ‘தெரு வாசகம்’ ஒன்று இங்கே நினைவுக்கு வருகின்றது:

“சகோதரி!
நீ அரைத்து வைத்த / இட்லி மாவு கூட
மறுநாள் பொங்குகின்றது
நீ எப்போது / பொங்கப் போகின்றாய்?”


கவிதைக்குக் கரு எங்கே – எதிலே – எப்போது கிடைக்கும் எனக் கேட்கிறீர்களா? இதோ, நறுக்-சுருக் பாணியில் கவிஞர் இவ் வினாவுக்குத் தரும் விடை:

“கவிதைக்குக் கரு
கஞ்சிக் கலையத்திலும்
பாடு கவிதை!”
(ப.17)

‘ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா, ஊக்கம் உடையான் உழை’ என்பது வள்ளுவர் வாக்கு. இதனையே வேறு சொற்களில் இப்படி உரைக்கின்றார் விஜிமா.

“புரிந்து கொள்
தெரிந்து செய்
வெற்றி – உன் வீட்டு விலாசம்”
(ப.23)

‘எந்தச் செயலையும் ஒருவர் புரிந்து கொண்டு, தெரிந்து செய்தால் வெற்றி அவரது வீட்டு முகவரியைக் கேட்டு வந்து சேரும்’ என்பது கவிஞரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

“இளமைக் காதல் சிறுகதை
வயசுக் காதல் தொடர்கதை
முதுமைக் காதல் கவிதை”
(ப.24)

என்னும் கவிதையில் சிறுகதை – தொடர்கதை – கவிதை ஆகிய இலக்கிய வகைகளைக் கொண்டு கவிஞர் இளமைக் காதல், வயசுக் காதல், முதுமைக் காதல் ஆகியனவற்றை உணர்த்தி இருப்பது நயம். இவற்றுள் ஒரே மூச்சில் படித்து முடித்து விடக் கூடியது, வரையறை உடையது சிறுகதை; வாரந்தொறும் தொடர்வது, நீண்டு செல்வது தொடர்கதை; எந்நாளும் அழியாதது, கால வெள்ளத்தைக் கடந்து நிற்பது கவிதை. இதே போலக் கூர்ந்து நோக்கினால், இளமைக் காதலில் உணர்ச்சியும், வயசுக் காதலில் புரிதலும், முதுமைக் காதலில் முதிர்ச்சியும் சிறப்பிடம் பெறுவதை உய்த்துணரலாம். இவ்வளவு சிந்தனை- களையும் படிப்பவர் மனத்தில் அலைஅலையாய்த் தோற்றுவிக்கின்றது இக் குறுங்கவிதை.

இளைய பாரதத்திற்குக் கவிஞர் விடுக்கும் செய்தி

“வேட்கை வியர்வை விவேகம்
வேகமாய்ச் செயல் புரிந்தால்
ஆங்கே வெற்றி நிச்சயம்!”
(சுமையல்ல சுகம், ப.91)

என வாழ்வில் வெற்றி வாகை சூடுவதற்கான வழிமுறையினை அறுதியிட்டு உரைக்கும் விஜிமா, இளைய பாரதத்திற்குத் தமது ஒட்டுமொத்தப் படைப்புக்களின் வாயிலாக விடுக்கும் செய்தி இதுதான்:

“நிமிர்ந்து நில்; துணிந்து செல்;
தெளிந்து சொல்; அறிந்து செல்;
வீடும் நாடும் உயர எழுது;
எழுச்சி கொள்; ஏற்றம் உனக்கு!
சினம் கொள்; சீற்றம் கொள்;
சிந்தித்துச் செயல்படு!...
உன் குரல் உலக அரங்கில் ஒலிக்கும்!”
(சுமையல்ல சுகம், ப.60)

பாரதியார் கனவு கண்ட ‘அக்கினிக் குஞ்’சாக இன்றைய இளைய தலைமுறை இருந்திட்டால் – ஒன்றாய்ச் சேர்ந்தால் – ‘இமயம் நன்றாய் உயரும், புதிய பாரதம் உதிக்கும், உலகு நம்மைத் துதிக்கும்!’ (சுமையல்ல சுகம், ப.117).

 



முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.