எள்ளலும் கிண்டலும் கைகூடி வந்துள்ள வெடிப் பூக்கள்

பேராசிரியர் இரா.மோகன்

புதுநெறி காட்டிய புலவர் பாரதியாருக்குக் கவிதை எனப்படுவது தீயே நிகர்த்து ஒளி வீசுவது; இவ் வையத்தைப் பாலித்திடுவது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குக் கவிதை, கெட்ட போரிடும் உலகத்தை வேரொடும் சாய்க் கும் வல்லமை படைத்தது; புதியதோர் உலகம் செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டது. கவிமணி தேசிக விநாயகத்திற்குக் கவிதை, உள்ளத்து உள்ளது; இன்ப உருவெடுப்பது; தௌ;ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்து உரைப்பது. மீராவுக்குக் கவிதை, சமுதாய நடைபாதைகளைச் செப்பனிடும் ஓர் ஆற்றல்சால் கருவி; ஊசியைப் போன்றது. வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞர் சிற்பிக்குக் கவிதைகள் காலத்தின் உதடுகள்; எழுத்து ஆன்மாவின் ரத்தம். மு.மேத்தாவுக்குக் கவிதை, இந்த பூமி உருண்டையைப் புரட்டிப் போடும் திறம் வாய்ந்த நெம்புகோல். வாழையடி வாழை எனத் தொடர்ந்து வரும் இக் கவிஞர் வரிசையில் 2007-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ஓரி ஆனந்தனுக்குக் கவிதைகள் என்பன 'வெடிப்பூக்கள்'; பலத்த ஓசையுடன் வெடித்துச் சிதறாமல், பூக்களைப் போல் மலர்வன. 'நம்மையும், நம்மைச் சுற்றி இருப்பவர்-களையும் இருப்பவைகளையும் கண்களால் பார்க்காமல், மனதால் பார்க்கிற போது கவிதைகள் பிறக்கின்றன' (ப.9) என்பது ஓரி ஆனந்தனரின் கவிதைக் கொள்கை; படைப்பு அனுபவம். 'வெடிப் பூக்கள்' என்னும் தம் முதல் தொகுப்பின் மூலமே கவிதை ஆர்வலர்களின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் திறனாய்வாளர்களின் தேர்ந்த கணிப்பையும் ஓரி ஆனந்தன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

எள்ளலும் கிண்டலும்

பேராசிரியர் தி.சு.நடராசன் 'விலாவில் குத்தி வெடிப்புறப் பேசுகின்ற கவிதைகள்' என்னும் தலைப்பில் 'வெடிப்பூக்கள்' தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையில் குறிப்பிடுவது போல், 'ஓரி ஆனந்தனிடம் எள்ளலும் கிண்டலும் கைகூடி வருகின்றன. பல கவிதைகளில் இது கவனப்படும்படியாக வெளிப்படுகிறது... எள்ளலுக்கும் கிண்டலுக்கும் கோபம் தானே காரணம். இவருடைய கவிதைகள் பெரும்பாலானவற்றில் மென்மையான கோபம் / எரிச்சல் எள்ளலாகச் சீறி வருகிறது. புதுக்கவிதையில் இது முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்ததொரு உத்தி' (ப
.6).

கவிஞரின் கிண்டல் இயல்பாக வெளிப்பட்டுள்ள ஒரு கவிதை:

'இதனால் சகலமானவர்களுக்கும்
அறிவிப்பது என்னவென்றால் ...

இனிமேல் ...
200 ரூபாய் லஞ்சம் வாங்கினால் / சிறை.
200
கோடி லஞ்சம் வாங்கினால் / விடுதலை.
டும்... டும்... டும்... டும்... டும்...'     
 (ப.68)

இக் கவிதைக்குக் கவிஞர் தந்திருக்கும் தலைப்பு 'சட்டத் திருத்தம்' என்பதாகும்.

தல யாத்திரை நமக்குத் தெரியும். அது என்ன 'திருயாத்திரை'? இதோ, கவிஞரின் மொழியிலேயே அதனைக் காண்போம்:

'அப்பச்சி வீட்டில் ஆரம்பம் / அண்ணாச்சியிடம் கைகுலுக்கல்
அவாளிடம் அளவளாவல் / நைனாவிடம் நலம் விசாரிப்பு
உடையார் வீட்டில் / உறவு கொண்டாடி
தலித் வீட்டில் / தண்ணீர் குடித்து
மாயி வீட்டு / கோழிக் குழம்பு வாசம் பிடித்து
வன்னியருக்கு / வாழ்த்துச் சொல்லி
பிள்ளை வாளிடமும் / பேசி விட்டு
ஆனந்தமாய்ப் போனது / எங்கள் தெருவில்
சாக்கடை / சாதி நாற்றம் இல்லாமலே!!!'       
  (ப.
10)

கிண்டலும் கோபமும் தொனிக்கத் தெருவில் ஓடும் சாக்கடையையும் சாதிக் கொடுமையையும் ஒருசேரச் சாடும் கவிதை இது! 'அப்பச்சி' முதலாக 'பிள்ளைவாள்' வரையிலான அனைத்துச் சாதியினருடனும் உறவாடிய வண்ணம் தெருவில் ஆனந்தமாய்ப் போயிற்றாம் சாக்கடை – சாதி நாற்றம் இல்லாமலே!

'பண்பாடு' என்ற பெயரில் இன்று நாம் என்ன எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம்? எவற்றை எல்லாம் தப்பு என்று முத்திரை குத்திக் கொண்டிருக்கிறோம்? 'பண்பாடு' என்னும் கவிதையில் இவ் வினாக்களுக்குத் தமக்கே உரிய எள்ளலும் கிண்டலும் கலந்த தொனியில் விடை கூறுகின்றார் கவிஞர்.

வீதியில் தோழியோடு கைப்பிடித்து நடத்தல் தப்பு, தப்பு, கூடாது.

காதலியின் கைப்பிடித்து நடத்தல் ரொம்பத் தப்பு, கூடவே கூடாது.

மகாகவி பாரதியைப் போல் மனைவியின் தோள் அணைத்து முத்தமிடல் - ச்சீ... ச்சீ... ரொம்பத் தப்பு, கூடவே கூடாது.

அப்படி என்றால், 'பட்டப் பகலில் பாதை ஓரத்தில் ஆண்பிள்ளை எனும் அடையாளம் காட்டி ஜலதரங்கம் வாசித்தல் மட்டும் சரியா, தகுமா, முறையா?' எனக் கேட்டால், இருக்கவே இருக்கிறது தமிழ்ப் பழமொழி: 'அதில் என்ன தவறு? ஆத்திரத்தை அடக்கினாலும்...'

இங்ஙனம் படிப்படியாக வளர்த்து வந்த கவிதையை ஓரி அனந்தன் முடித்திருக்கும் விதம் முத்தாய்ப்பு:

'புரிந்தது
அன்பு செய்தால் தவறு
அசிங்கம் செய்தால் சரி,
ரொம்பச் சரி.

அப்படியே ஆகட்டும்,
பண்பாடு காப்போம்,
பாரதம் வாழ்க!'      
(ப.60)

'வெடிப்பூ' என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கும் அருமையான கவிதை இது.

தன் வீட்டின் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கி எதிர்வீட்டு வாசலில் குவித்து வைக்காத ஒரு பெண்ணை இந்த உலகில் காண முடியுமா என்ன? ஒரு வேளை காண முடிந்தது என்றால், அது நிச்சயம் அதிசயம் தான்; கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறத் தக்க நிகழ்வு தான். 'பரிமாற்றம்' என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில் இதனைக் கிண்டலும் குறும்பும் குத்தலும் களிநடம் புரிந்து நிற்கும் மொழியில் பதிவு செய்துள்ளார் கவிஞர்:

'அந்தக் குடும்பத் தலைவி / ரொம்பக் குறும்புத் தலைவி
தன் வீட்டு வாசலின் / குப்பைகளைக் கூட்டி
எதிர்வீட்டு வாசலில் / குவித்து வைத்தாள்.
எதிர்வீட்டுத் தலைவியும் / அப்படியே செய்தாள்.
இரண்டு குப்பைகள் / குப்பைகளைப்
பரிமாறிக் கொண்டன.'     
  (ப.20)

'இரண்டு குப்பைகள் குப்பைகளைப் பரிமாறிக் கொண்டன': கவிதையில் கவிஞரின் கோபம் கொப்பளித்து நிற்கும் முத்தாய்ப்பான வரிகள் இவை! இங்கே குப்பையை மட்டுமா குப்பை என்கிறார் கவிஞர்? குப்பைகளை உரிய இடத்தில் கொட்டாமல் எதிர்வீட்டு வாசலில் கொட்டி சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துவோரையும் 'குப்பைகள்' என்ற வசைச் சொல்லால் சாடுகிறார் அவர்.

அரசியல் சாடல்

'கவனம்' என்ற கவிதை உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசி வரும் இன்றைய அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தினை எள்ளி நகையாடுகின்றது.

'இப்போதும் / ஏழையின் சிரிப்பிலே தான்
இறைவனைக் காண்கிறார்கள்'


எனத் தொடங்கும் அக் கவிதை, அரசியல்வாதிகளின் கவனம் எல்லாம் எதிலே உள்ளது என்பதை அம்பலப்படுத்தி இவ்வாறு முடிகின்றது:

'ஆனாலும் / பத்திரமாய் / பார்த்துக் கொள்கிறார்கள்,
அது / பணக்காரச் சிரிப்பாய் / மாறி விடக்கூடாது
என்பதை மட்டும்!'      
(ப.70)

ஏழை எப்போதும் ஏழையாகவே இருந்தால் தான் அரசியல்வாதிகளுக்கு 'அரசியல்' நடத்த முடியும்; 'பிழைப்பும்' ஓடும். அதனால் ஏழையின் சிரிப்பு 'பணக்காரச் சிரிப்பாய்' ஒருபோதும் மாறிவிடக் கூடாது என்பதிலேயே அரசியல்வாதிகள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களாம்; கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்களாம்.

நம் அரசியல்வாதிகள் அதிபுத்திசாலிகளாம்; 'திட்டம் போட்டே...' எதையும் செய்வார்களாம். எப்படி என்கிறீர்களா? கவிஞர் காட்டும் உதாரணம் இதோ:

'உங்கள் நெற்றியில் / நாமம் போட்டால்
புரிந்து கொள்வீர்கள் என்று
விரலில் புள்ளி வைத்துவிட்டார்கள் / கரும்புள்ளிகள்'     
 (ப.28)

நெற்றியில் பட்டை நாமம் போட்டால் ஒருவேளை புரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகலாம்; விரலில் கரும்புள்ளியாக வைத்துவிட்டால் புரிந்து கொள்ளும் வாய்ப்பே எழாது அல்லவா?

நாட்டு நடப்பின் படப்பிடிப்பு

'பாரத மாதாவுக்கு ஜே!' இன்றைய நாட்டு நடப்பை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டும் அருமையான கவிதை; உயிரோட்டமான பதிவு.

'சாலை விபத்தில் / ஆயுள் விடுதலையானார்
அந்த / சுதந்திரப் போராட்டத் தியாகி'


எனத் தொடங்கும் அக் கவிதை, அடக்கம் செய்வதற்கு அந்தத் தியாகியின் உடலைப் பெறுவதற்குக் கவிஞர் படும் பாட்டினை நடப்பியல் பாங்கில் பதிவு செய்துள்ளது. 'மூவாயிரம்' என்றானாம் போஸ்ட் மார்ட்டம் செய்த 'எம்.பி.பி.எஸ். வெட்டியான்'. 'பத்தாயிரம் தந்தால் விபத்து. இல்லை என்றால் தற்கொலை. எது வேண்டும்?' என்று கேட்டதாம் 'காக்கிச் சட்டை கசாப்புக் கடை'. ஏரியா தாதாவின் சிபாரிசுக்குப் பின்னர் ஒரு வழியாக அது 'விபத்து தான்' என்று அறிக்கையில் எழுதப்பட்டதாம். பிணத்தைக் கொண்டு செல்லும் அமரர் ஊர்திக்குச் சட்டப்படியான கட்டணம் போக, ஓட்டி வந்த சாரதிக்குத் தனியாகக் கொஞ்சம் சாராயத்திற்காகத் தர வேண்டுமாம். அந்தச் சுடுகாட்டு எழுத்தனோ எழுநூறு கொடுக்கும் வரை தியாகி செத்ததை ஒத்துக்கொள்ளவே இல்லையாம். பிணத்திற்கு மட்டுமன்றி, இத்தனை பேருக்கும் 'வாய்க்கரிசி' போட்ட பிறகு தான் பிணத்தை அடக்கம் செய்யவே முடிந்ததாம்.

'பிணந்தின்னி நாய்களுக்கு / பிச்சை போட்டது நான் தான்.
கண்ணீரோடு / தியாகியைப் பார்த்தேன்
விடுதலைக்கான ஏக்கம் / இன்னும்
அவர் முகத்தில்'           
    (பக்.38-39)

எனக் கவிதை முடிந்தாலும் அதன் தாக்கம் படிப்பவர் உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கும். 'ஆயுள் விடுதலையானார்', 'எம்.பி.பி.எஸ். வெட்டியான்', 'காக்கிச் சட்டை கசாப்புக் கடை', 'பிணந்தின்னி நாய்கள்', 'விடுதலைக்கான ஏக்கம் இன்னும் அவர் முகத்தில்' என இக் கவிதையில் கவிஞர் கையாண்டிருக்கும் சொல்லாட்சிகள் காரசாரமானவை; காட்டமானவை. 'பாரதமாதாவுக்கு ஜே' என இக் கவிதைக்குக் கவிஞர் தந்திருக்கும் தலைப்பும் அங்கதச் சுவை ததும்பி நிற்பதாகும்.

ஆகஸ்ட்
15, 1947-இல் நாம் பெற்றது வெறும் 'ஆகஸ்ட் சுதந்திரம்' மட்டுமே; பாரதியார் கனவு கண்ட 'ஆனந்த / இன்ப / வீர சுதந்திரம்' நமக்கு இன்னும் முழுமையாகக் கிடைத்த பாடில்லை. இன்னமும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்திய மண்ணுக்கு மட்டுமே கிடைத்துள்ள சுதந்திரம், இந்தியப் பெண்ணுக்கு இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை; ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் வேறு வேறு வடிவங்களில் இன்றளவும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன, 'ஆகஸ்ட் 15' என்னும் தலைப்பில் ஓரி ஆனந்தன் படைத்துள்ள சிந்திக்கத் தூண்டும் குறுங்கவிதை ஒன்று:

'நீயென்ன / பொம்பளைப் பிள்ளையா
கண்ணீர் விட்டு அழுவதற்கு?'
என நீங்கள் / கேட்பதிலிருந்தே தெரிகிறது
இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை
இந்தியாவிற்கு என்பது'          
(ப.49)

இன்றைய சமூக அவலமான 'முதியோர் இல்லம்' பற்றிய கவிஞரின் பதிவு படிம அழகு சிறந்து விளங்குவது:

'உறவைப் புதைத்த / கல்லறை.
இது / விழுதுகளால் நிராகரிக்கப்பட்ட
விருட்சங்களின் விறகுக் கடை'


குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்ட பெற்றோர்கள்: விழுதுகளால் நிராகரிக்கப்-பட்ட விருட்சங்கள். முதியோர் இல்லங்கள் உறவுகளையும் உணர்வுகளையும் புதைக்கும் கல்லறைகளாகவும், விறகுக் கடையாகவும் ஆகிப் போனது காலத்தின் கொடுமை!.

வித்தியாசமான பார்வை

'வெற்றியாளர்கள் வித்தியாசமான காரியங்களைச் செய்பவர்கள் அல்லர்; வித்தியாசமான முறையில் காரியங்களைச் செய்பவர்கள் ஆவர்'
(Winners don’t do different thigns; they do things differently) என்பார் அறிஞர் ஷிவ் கேரா. அவரது கூற்று ஒரு வகையில் கவிஞர்களுக்கும் பொருந்தி வருவதாகும். எதையும் வழக்கமான முறையில் பார்ப்பது கவிஞர்களின் இயல்பு அன்று; வித்தியாசமான முறையில் - எவரும் பார்க்காத புதிய கோணத்தில் - ஒரு பொருளைப் பார்ப்பதே, படம் பிடித்துக் காட்டுவதே, பதிவு செய்வதே தேர்ந்த கவிஞர்களின் முத்திரைப் பண்பு ஆகும். இதனை ஓரி ஆனந்தனிடம் சிறப்பாகக் காண முடிகின்றது. 'நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராது இருத்தல்' என முழங்கினார் கவியரசர் பாரதியார். ஓரி ஆனந்தனோ 'தொழில்' என்னும் தலைப்பில் பாடிய குறுங்கவிதையில்,

'என்னுடைய வேலை / தூங்குபவர்களை எழுப்புவதல்ல
விழித்துக் கொண்டிருப்பவர்களை / எழுப்புவது'      
             (ப.33)

எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. கொஞ்சம் மாற்றி யோசித்துப் பாருங்கள்: வெட்டித்தனமாகத் தூங்கிக் கிடப்பவர்களை எழுப்பி என்ன ஆகப் போகின்றது? அதற்குப் பதிலாக, விழித்துக் கொண்டிருப்பவர்களை எழுப்பினால், அவர்கள் நேரடியாகச் செயலில் இறங்குவதற்கு ஏதுவாகும் அல்லவா?

மலரை விரும்பாதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள்; எல்லோருக்கும் மலரின் மென்மை மிகவும் பிடிக்கும். ஆனால் கவிஞரோ, 'மலரை விட ஃ முள் மிகவும் பிடிக்கும்' என்கிறார். அதற்கு அவர் காட்டும் காரணம் வித்தியாசமான ஒன்று. ஏனென்றால் முள் தான்,

'குத்தி விடுவேன் என்று / எத்தனை பேரைப்
பயமுறுத்துகிறது?'       
        (ப.41)

நடைமுறையில் எத்தனை பேர் மென்மைக்கும் பணிவுக்கும் மதிப்புத் தருகிறார்கள்? வன்மைக்கும் பயமுறுத்தலுக்கும் தானே பெரும்பாலானோர் அடிபணிகிறார்கள்? 'அச்சமே கீழ்களது ஆசாரம்' (குறள்:1075) என்று தானே வள்ளுவரும் பாடி இருக்கின்றார்?

'பார்வை' என்ற தலைப்பிலேயே கவிஞர் ஒரு நல்ல கவிதையைப் படைத்துள்ளார். 'மெல்ல மெல்ல மேலேறி / உச்சிச் சிகரம் தொட்ட பின் / சொன்னான், / 'மேலே பார் - வானம் இன்னும் தொட முடியாத / தூரத்தில் தான் என்று'. அவனிடம் சற்றும் தாமதிக்காமல் இப்படிச் சொன்னாராம் கவிஞர்:

'கீழே பார் / சிகரமே உன் காலடியில் / என்று'                      (ப.69)

அரிதின் முயன்று மேலே ஏறி உச்சிச் சிகரத்தைத் தொட்ட பின்னரும் இன்னும் தொட முடியாத தூரத்தில் மேலே இருக்கும் வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் மனிதன், கீழே – தன் காலடியிலேயே – உள்ள சிகரத்தைக் கவனிக்கத் தவறுவது ஏன்?

தெறிப்பான கேள்வி

தெறிப்பான சிந்தனையோடு கவிதையை முடித்து வைப்பது ஓரி ஆனந்தனுக்குக் கைவந்த ஓர் உத்தி ஆகும். 'புதிர்' என்னும் கவிதை இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு:

'இருக்கச் சொல்கிறார்கள்
நாயின் நன்றியாய் / நரியின் தந்திரமாய்
கழுகின் பார்வையாய் / சிங்கத்தின் கம்பீரமாய்
மாட்டின் உழைப்பாய் / எறும்பின் சுறுசுறுப்பாய் ...'


எனக் கவிதையை வளர்த்துச் செல்லும் கவிஞர்,

'அதெல்லாம் சரி / மனிதன் எதுவாய்?
என்றேன் / கோபமாய் முறைக்கிறார்கள்'        
      (ப.50)

என்னும் கூர்மையான கேள்விக் கணையுடன் முடித்து வைப்பது புதுக்கவிதைக்கே உரிய ஓர் ஆற்றல் வாய்ந்த உத்தி ஆகும்.

எங்கெங்குக் காணினும் மாசடா!

பாரதப் பிரமதர் திரு.நரேந்திர மோடி இன்று வலியுறுத்திவரும் 'தூய்மையான இந்தியா' என்னும் கருத்தியலை ஓரி ஆனந்தனின் 2007-ஆம் ஆண்டிலேயே 'மாசு' என்னும் கவிதையில் பாடுபொருள் ஆக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு புறம், வானத்தின் காதுகளையே கிழிக்கும் வாகனங்களின் இரைச்சல்கள்; வானத்தையே கிழித்து விடும் அளவிற்கு வாழ்க, ஒழிக எனக் கேட்கும் முழக்கங்கள்; ஊர்த் திருவிழாவில் ஒலி-பெருக்கிகளின் ஓலங்களைக் கேட்கும் போதெல்லாம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் கம்பால் ஓங்கி அடிக்கும் கொடூரமாய்த் தோன்றுகின்றது கவிஞருக்கு. மறுபுறம் பார்த்தால், பூக்களைக் கூட அழ வைக்கும் புகை ராட்சதர்கள்; புவித்தாயின் மணி மார்பில் அமில ரணங்கள்; ஓசோன் சேலையைக் கிழிக்கும் துச்சாதனக் கைகள்; ஆறுகளின் இரத்தத்தில் எய்ட்ஸ் அழுக்குகள். 'அய்யோ... போதுமடா சாமி' என அல்லற்பட்டு ஆற்றாது மனம் வெதும்பிய கவிஞர்,

'எங்காவது / சுத்தமான அமைதி
இருந்தால் சொல்லுங்கள்
ஒரு நாள் மட்டுமாவது
வாழ்ந்து விட்டுச் / செத்துப் போகிறேன்!'           
(பக்.
43-44)

என மொழிவது நம் நெஞ்சைப் பிழிகின்றது.

தத்துவ இழை!

சின்னச் சின்ன தத்துவ இழை பின்னிப் பின்னி வர, சித்திரக் கவிதைச் சேலையைப் படைத்துத் தருவதில் ஓரி ஆனந்தனின் தனித்திறன் சிறந்து விளங்குகின்றது. 'அம்மணம்' என்ற கவிதை இவ் வகையில் குறிப்பிடத் தக்கது.

'அந்த ஆற்றில் / ஆடையே இல்லாமல்
ஒருத்தி குளித்துக் கொண்டிருந்தாள்'


எனத் தொடங்குகின்றது கவிதை. 'அடச்சீ... இதென்ன அசிங்கம்? ஒரு பாவாடையாவது கட்டியிருக்கக் கூடாதா?' என அந்த இளம்பெண்ணிடம் கேட்டே விடுகின்றார் கவிஞர். அவளோ எந்தச் சலனமும் இல்லாமல், 'அம்மணமாய் இருந்தால் தானே அழுக்கெல்லாம் போகும்?' என்கிறாள். 'நீ அம்மணமாய் இருந்தால் என் மனமல்லவா அழுக்காகிறது' என்கிறார் கவிஞர். அவரை ஏளனமாய்ப் பார்த்து விட்டு அந்தப் பெண் சொல்கிறாள்.

'அது என் அழுக்கல்ல / உன் அழுக்கு!'

பெண்ணின் கூற்று கவிஞரை அதிரடியாய்த் தாக்குகின்றது.

'பளார் என / விழுந்தது அறை
கன்னத்திலல்ல / மனதில்.

மனம் / என்னை
அவிழ்க்க ஆரம்பித்தது'         
       (ப.9)

எனக் கவிதை முத்தாய்ப்பாக முடிகின்றது.

நிழல் கூடக் கவிஞருக்கு ஓர் அற்புதமான வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தருகின்றது. கவிஞரின் அனுபவ மொழியிலேயே இங்கே அவரது 'ஞானம்' என்ற கவிதையைக் காண்பது சிறப்பாக இருக்கும். கவிதை இதோ:

'என்னை விட நீளமாய்க் கிடந்தது / என் நிழல்.

எட்டி / தலை நிழலைத் தொட்டுவிட
ஆசைப்பட்டேன்.

குனிந்தால் / தலையையே காணோம்.
நிமிர்ந்தாலோ / தொட முடியாத தூரத்தில்.

பாடம் சொன்னது / நிழல்.

குனிந்தால் தலை போகும்.
நிமிர்ந்தாயெனில் / எந்தப் பயலும்
தொட முடியாது உன்னை.

சட்டென விழுந்தேன் / நிழற் கால்களில்
குருவே சரண்.'              
    (ப
.16)

'நிழல்' சொல்லித் தரும் 'நிஜம்' இது: 'குனிந்தால் உன் தலையே போய்விடும். நிமிர்ந்தாய் எனில் எந்தப் பயலும் உன்னைத் தொட முடியாது!'

நிறைவாக, ஒற்றை வரியில் மதிப்பிடுவது என்றால், 'ஓரி ஆனந்தனின் கவிதைகள், மனித உணர்வுகளை – அவருக்கான உலகத்தில் கண்டறிந்த உணர்வுகளை – நமக்கான அனுபவங்களில் கொண்டு வந்து தருகின்றன' (தி.சு.நடராசன், 'விலாவில் குத்தி வெடிப்புறப் பேசுகின்ற கவிதைகள், ப
.5) எனலாம்.


 முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.