புறநூனூற்றில் தமிழ் மக்களின் அறிவு பற்றிய சிந்தனைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா

மிழ் இலக்கியங்களில் சங்கப் பாடல்கள் என்று கூறப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியனவே காலத்தால் மிகப் பழமையானவை. தமிழரது சமூகப் பண்பாட்டு வரலாற்றினை அறிந்துகொள்ள இந்த இலக்கியச் செல்வங்களே பெருமளவுக்குப் பயன்படுகின்றன. இத்தகைய இலக்கியங்களிலிருந்து பெறக்கூடிய விவரங்களை உறுதிப்படுத்தும் வகையிலான அகழ்வாய்வுச் சான்றுகளும் கல்வெட்டுப் பதிவுகளும் பரவலாகக் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கவையாகும்.

அறிவு பெறும் வழிகள் துறைகள் ஏற்பவும் அத்துறைக் கருப்பொருளின் ஆழ அகலத்திற்கு ஏற்பவும் வேறுபடுகின்றன. அதேபோல் பெற்ற அறிவு ஏற்புடையதா இல்லையா, சரியானதா, தவறானதா என்று தீர்மானிக்க பல வழிகள் உள்ளன. அறிவின் வகைக்கு ஏற்ப இவ்வழிகளும் வேறு வேறு எனவே அறிவுத் தொகுதியைப் பொதுவாகக் கருதாமல் சில சிறப்பியல்புகளை அளவுகோலாகக் கொண்டு பகுத்து பார்க்க வேண்டும். இனி, இக்கட்டுரையின் புறநானூறு வழியில் அறிவுத்திறனை ஆய்ந்து அறிந்து செல்லலாம்.

கொடுக்கும் முறை

பொருளாதாரத்தில் உயரிய நிலையில் உள்ளோர் தம் பெருமைக்கு ஏற்பவும் பெறுவோர் தகுதிக்கு ஏற்பவும் பொருள்களை கொடுத்து வந்தனர். இது இயல்பான முறை ஆகும் ஆயினும் தமது கடமைகளை அளவு அறிந்து காத்து செய்தலும் இன்றியமையாததாக இருந்தது இச்செயல் வழங்குவோர்க்கும் அந்நாட்டுக்கும் வழி வழியாக நலம் பயக்கும் என்பதால் இதன்படி சங்ககால அரசாட்சியில் பெரிய செல்வந்தர்கள் பொருள்களை வழங்கி வந்தனர்.

அவ்வாறே நாஞ்சில் வள்ளுவன் என்னும் அரசனை ஒளவையாரும் விறலியரும் சென்று பார்க்கின்றனர். அப்பெண்மணி கீரையைப் பறித்துவிட்டாள் அதற்கு உணவு சமைக்க அரிசி வேண்டும் இதை அரசனிடம் கேட்க ஒரு மலையைப் போன்ற பெரிய யானையைப் பரிசாக அளித்தான். அன்புடன் வழங்குதலை மறுத்தல் முறையன்று என்பதால் அந்த யானையை ஒளவையார் பெற்றுக் கொண்டார். பின்பு திரும்பிய ஒளவையார் தம்மை எதிர்ப்பட்டு வந்த புலவர் மக்களை நோக்கிப் பின்வருமாறு கூறுகின்றார்.

புலவர்களே, நாஞ்சில் மலை அரசன் இருக்கின்றானே அவன் மிகவும் மடமை உடையவன் நாங்கள் கீரையின் மேல் தூவும் பொடிக்காக சிறிது அரிசியை விரும்பினோம். பரிசில் பெற வேண்டிய எங்கள்தகுதிகளை அறியாமல் புரியாமல் பெரிய யானையைக் கொடுத்து விட்டான் கொடைகளிலே, பொருள்கள் வழங்குவதிலேயே அளவறிந்து முறையறிந்து கொடுக்காமல் அளவுக்கதிகமாகக் கொடுப்பதை உணர்ந்து கூறுகிறார். இதிலிருந்து அரசன் தம் மக்களுக்கு வழங்கி வந்த பொருள்களின் வாயிலாக அறிவுக் கூர்மை தெரிய வருகிறது.

வரிசையறிதல் (தகுதி)

தகுதி வேறுபாடறிந்து செயல் செய்தல் உயர் அறிவின் வளர்ச்சிக்கு உரியது ஆகும். அவ்வறிவு வளர்ச்சிக்கு உயர்ந்த நோக்கங்களை எழுப்பும் பொது நோக்கால் செய்தல் அவ்வளவு பெரிதன்று. வரிசையறிந்து, தகுதியறிந்து, தேவையறிந்து செய்யும் உதவியே மேம்பாடுடையது.

'ஒருதிசை ஒருவனை உள்ளி, நால்திசைப்
பலரும் வருவர், பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே! பெரிதும்.
ஈதல் எளிதே! மாவண் தோன்றல்!
அது நற்கு அறிந்தனை ஆயின்,
பொது நோக்கு ஒழி மதி புலவர் பாட்டே'
(பு.நா
121)

திருமுடிக்காரிக்கு- கபிலர் பாடியப்பாடல் 'ஈதல் எளிது: வரிசையறிந்து ஈதல் அரிது' எனக் குறிப்பிடுகிறார்.

போருக்குக் காரணம்

நாட்டின் அறிவு விளக்கம் உண்டாகும்படி ஆட்சி செய்யாமை நாட்டில் போர் எழக் காரணமாக அமையும்.

'மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி,
நிலவரை இழிதரும் பல்யாறு..
மாற்று இருவேந்தர் மண் நோக்கினையே'
(பு.நா-
42)

மலையிலிருந்து வீழ்கின்ற நீரானது நில எல்லையை கடந்து ஆறுகள் நோக்கி செல்கின்றன. அதேபோல் புலவர்களெல்லாம் உன்னை விரும்பி உன்னை நோக்கி வருகின்றனர். நீயோ அவர்களுக்குத் தகுந்த பரிசில் நல்கும் பொருட்டு உனக்கு மாற்றாராகிய சேர, பாண்டிய அரசர்களின் போர் எதிர்த்து அவர்கள் நிலத்தை நோக்கிச் செல்கின்றாய் என்று கோவூர்க்கிழார் கிள்ளி வளவனை குறிப்பிடுகிறார்.

கல்வியும் செல்வமும்

ஒருவரிடம் இரண்டும் சேர்ந்திருப்பதில்லை. ஆனால் சங்ககால அரசர் வரலாற்றுப் படிமங்களை நோக்கும் போது முரண்பாடாகத் தெரிகிறது. அறிவு நிலை ஓங்கியிருந்ததை கீழ்க்காணும் செய்யுளில் ஆசிரியரே சிறப்புடன் விளக்குகிறார்.

'செஞ்ஞாயிற்றுச் செலவும்,
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி,
களிறு கவுள் அடுத்த
இடைப் புலப் பெருவழிச் சொரியும்,
கடற் பல் தாரத்த நாடு இழவோவே'
(பு.நா.
30)

இப்பாடல் நலங்கிள்ளி பற்றியது.

சங்ககாலத் தமிழகத்தில் பல துறைகளிலும் அதிகம் பயின்ற கல்வியுடையார் பலர் விளங்கியிருந்தனர். ஞாயிறு செல்லும் வான் வழியையும் அதன் இயக்கத்தையும், அவ்வியக்கம் சூழ்ந்த உலகத்தையும் காற்று இயங்கும் திசையையும் ஓர் அடிப்படையும் இன்றி நிலை பெற்றிருக்கும் ஆகாயத்தையும் அதனதனின் எல்லை அளவும் சென்று நேரில் அளந்து அறிந்தவர்களை போல இவை ஒவ்வொரு நாளும் இவ்வளவு அளவுடையன என்று ஆராய்ந்து திட்டமாகச் சொல்லும் ஆழ்ந்து அகன்ற கலை அறிவு படைத்தோரும் இருந்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.

முடிவுரை

மேற்கண்ட கட்டுரையின் வாயிலாக பண்டைய தமிழர்களின் அறிவுத்திறன் அதன் மேம்மாடு, அவர்களின் செழிப்பு, ஆய்ந்தறிய முடிந்தது. இதன் மூலமாக சங்க கால மக்களின் வாழ்வியல் குறித்த செய்திகள் ஏராளமாக புறநானூற்றில் பொதிந்து உள்ளன என்பதை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.

 


பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா
149 ஹரிஸ்ரீகாடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர்
- 641 007
பேச
:098438 74545.