கானா நாட்டின் ஆற்றல்சால் கவிஞர் ரா.ப.ஆனந்தன்

முனைவர் இரா.மோகன்


“ எதையும் அளவோடு நாடணும்;
  எப்போதும் ஒரே மாதிரி நடக்கணும்;
  எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளணும்;
  எல்லாவற்றையும் ரசிக்கப் பழகணும்!”

                    (ரசித்து வாழ வேணும்… பிறர் ரசிக்க வாழ வேணும், ப.33)

என்பதைத் தமது வாழும் முறைமையாகவும், வாழ்வின் தாரக மந்திரமாகவும் கொண்ட ரா.ப.ஆனந்தன் கடலூர் மாவட்டம் அகர ஆலம்பாடி என்னும் கிராமத்தைச் சார்ந்தவர்; பழனி வேலன் – விசாலாட்சி இணையர்க்கு நான்காவது பிள்ளையாகப் பிறந்தவர்; பள்ளிக் கல்வியைக் கும்பகோணத்தில் உள்ள நகர மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருந்தாளுநர் பட்டப் படிப்பினை முடித்து, சில காலம் சென்னையில் பணிபுரிந்தவர்; பிறகு மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டிற்குச் சென்று அங்கே பதினைந்து ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர். கல்லூரியில் பயின்ற போதும், சென்னையில் பணியாற்றிய காலத்திலும் சிறிய மேடை நாடகங்கள் எழுதி இயக்கிய அனுபவம் ஆனந்தனுக்கு உண்டு. கானா நாட்டின் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் பொறுப்பில் இருந்த கால கட்டத்தில் அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. மருந்துத் துறையில் நல்கியுள்ள உயரிய பங்களிப்புக்காக அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. ‘ரசித்து வாழ வேணும்… பிறர் ரசிக்க வாழ வேணும்’ (2014) என்னும் கவிதை நூல் ஆனந்தனின் முதல் படைப்பு. “வாழ்க்கை எனும் சிற்பத்தை நன்றாகச் செதுக்குவதற்கு நல்ரசனை கொண்ட கலைஞனாகவும் நல்ல இரசிகனாகவும் இருத்தல் அவசியமாகும். இதற்கு வித்திடும் மந்திரமாக ‘ரசித்து வாழ வேணும்… பிறர் ரசிக்க வாழ வேணும்’ எனும் கோட்பாட்டை முன்னிறுத்தினேன்” (p.vi) என இந் நூலுக்கு எழுதிய ‘என்னுரை’யில் அவர் குறிப்பிட்டிருப்பது மனங்கொளத்தக்கது.

‘வேறுபட்ட மனிதர்களும் மாறுபட்ட கோணங்களும்’ (2014) என்பது கவிஞரின் இரண்டாவது படைப்பு. ‘இப் புத்தகம்… சாமானியனையும் சக உறவுகளையும் புரிந்து கொள்ள முயலும் உளவியல் ஆராய்ச்சியின் அடிப்படை முயற்சி எனலாம்’ (p.iv) என்னும் கவிஞரின் ‘என்னுரை’க் குறிப்பு இங்கே நினைவுகூரத் தக்கது. ‘தமது முதல் நூலிலேயே முத்திரை பதித்த வித்தகர்’ (p.vii) என்பது ஞான பீட விருதாளர் த.ஜெயகாந்தன் கவிஞருக்குச் சூட்டியிருக்கும் புகழாரம் ஆகும்.

‘பார்வைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்’ (2016) என்பது ஆனந்தனின் அண்மை வெளியீடு; மூன்றாவது கவிதைத் தொகுப்பு. ‘இந் நூலும் என் முதல் இரண்டு புத்தகங்களைப் போல மனவியல் மற்றும் குணவியலை மையமாகக் கொண்டே படைக்கப்பட்டிருக்கிது. இவைகளுடன் தொடர்புடைய சமுதாய முன்னேற்றக் கருத்துக்களையும் இயன்ற வகையில் விதைக்க முற்பட்டிருக்கிறது. சாமானியருக்கும் எளிதில் சென்றடைய வேண்டும் என்ற நல்நோக்கத்தினால் மிகவும் எளிமையான தமிழ் வார்த்தைகளையும் சிறுசிறு வாக்கியங்களையும் உட்கொண்ட வசன கவிதைகளாக இயற்றியுள்ளேன்’ (ப.5) என்பது ‘என்னுரை’யில் கவிஞர் தந்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும்.

‘ரசித்து வாழ வேணும்… பிறர் ரசிக்க வாழ வேணும்’, ‘வேறுபட்ட மனிதர்களும் மாறுபட்ட கோணங்களும்’, ‘பார்வைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்னும் கவிதைத் தொகுதிகளின் தலைப்புக்களே ஆழ்ந்திருக்கும் கவியுளத்தைத் திறந்து காட்டி விடுகின்றன எனலாம்.

‘என்னை எழுதத் தூண்டிய நண்பர்களுக்கும், கற்றுத் தந்த சூழலுக்கும், எனக்கு உயிர் தந்த பெற்றோருக்கும், உற்சாகமூட்டிய துணைவியாருக்கும், என் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் தமிழுக்கும் என்றென்றும் நன்றியுடன்…’ என்னும் கவிஞரது சிறப்புக் குறிப்பு – நன்றியறிதல் – மூன்று கவிதை நூல்களுக்கும் எழுதிய ‘என்னுரைக’ளிலும் இடம் பெற்றிருப்பது முத்தாய்ப்பு.

கவிஞர் ஆனந்தனின் பத்துக் கட்டளைகள்

‘தேர்ந்து மனிதன் வாழும் வகைக்குத் தெய்வத்தின் கட்டளை ஆறு’ என்பார் கவியரசர் கண்ணதாசன். அது போல, கவிஞர் ரா.ப.ஆனந்தன் உளவியல் அடிப்படையிலும் சமுதாய முன்னேற்ற நோக்கிலும் தேர்ந்து மனிதன் வாழும் வகைக்குத் தம் கவிதை நூல்களில் வகுத்துத் தந்துந்து விழுமிய பத்துக் கட்டளைகளைக் குறித்து இக் கட்டுரையில் சுருங்கக் காண்போம்.

1. நிறைவான மானுட வாழ்வு

‘குறையொன்றுமில்லை’ என்னும் தலைப்பில் ஆனந்தன் படைத்துள்ள கவிதை அவரது முத்திரைக் கவிதை ஆகும். ‘குறையும் நிறையும் கலந்து அமைந்ததே மானுட வாழ்வாகும்’ என்பது கவிஞரின் கருத்து. மேலும்,

“ குறை குறைத்து நிறை வளர்ப்பதும்
  நிறை கண்டு குறை மறந்து மன்னிப்பதும்
  குறைகளோடு மன நிறைவாக ஏற்றுக் கொள்வதும்
  நிறைவான மானுட வாழ்வாகும்”

எனத் தெளிவுபடுத்துவார் அவர். ஒருவர் தமது தனிப்பட்ட குறைகளைக் குறைத்துக் கொள்ளவும், நிறைகளை வளர்த்துக் கொள்ளவும் முயல வேண்டும்; அதே வேளையில் அவர் அடுத்தவரிடம் காணப்படும் நிறைகளைக் கண்டு, அவரது குறைகளை மறந்து மன்னிக்கும் மனம் கொண்டவராக விளங்க வேண்டும்; அடுத்தவரது சிறுசிறு குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவற்றோடு நிறைவாக ஏற்றுக்கொள்ளும் மன முதிர்ச்சி பெற்றவராகவும் திகழ வேண்டும். இதுவே நிறைவான மானுட வாழ்வாகும் என அறுதி இட்டு உரைக்கிறார் கவிஞர். இன்னும் ஒரு படி மேலே சென்று,

“ எங்கும் எதிலும் நிறைவு காணப் பழகுவதும்
  மனநிறைவு கொள்வதும் மகிழ்வடைவதும்
  முன்னோக்கிப் பயணிக்க வழிவகுக்கும்
  வாழ்வை என்றென்றும் சிறப்பாக்கும் மருந்தாகும்”

என அவர் மொழிவது மனங்கொளத்தக்கது. ‘வாழ்வைச் சிறப்பாக வாழத் தெரிந்தவர் யார்?’ என்ற வினாவுக்குக் கவிஞர் தரும் இரத்தினச் சுருக்கமான விடை இதுதான்:

“ ஒவ்வொரு நிமிடங்களையும் நொடிகளையும்
  ரசித்து அனுபவிக்கத் தெரிந்தவர்களெல்லாம்
  வாழ்வைச் சிறப்பாக வாழத் தெரிந்தவர்களாம்!”

          (பார்வைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம், பக்
.134-135)

2. மனிதனாக இருக்க முயல்வோம்!

இன்றைய வாழ்க்கை முறை எதார்த்தம் இழந்து இயந்திரத்தனமாகி விட்டது; பணம் மட்டுமே முதன்மையாகக் கருதப்படும் சூழல், பணம் இருந்தால் எதுவும் சாத்தியப்படும் நிலை இன்று நடைமுறை ஆகிவிட்டது. ‘இயந்திர மனிதம்’ என்னும் சிந்திக்கத் தூண்டும் தலைப்பில் எழுதிய கவிதையில் இதனைப் பாடுபொருள் ஆக்கியுள்ளார் ஆனந்தன். இன்றைய சூழலில்,

“ புத்தனாகவும் போதிதர்மனாகவும் வேண்டாம்
  விருப்பு வெறுப்புகளைக் குறைத்த சாமானியனாகவும்
  உணர்வுகளை மதிக்கும் ஒரு சராசரி மனிதனாகவும்
  குறைந்த பட்சம் இயந்திரமாகாது இருக்க முயலுவோம்
  மனிதம் தழைக்க மனிதனாக இருக்க எத்தனிப்போம்!”

          (பார்வைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம், ப.181)

என்பதே மனித குலத்திற்கு அவர் விடுக்கும் வேண்டுகோள்; அறைகூவல். ‘உறவுகளோடு பிணைந்திருப்பதும், அளவளாவி இருப்பதும், மனிதம் வளர்ப்பதும், இயல்பாக இருப்பதும், எதிர்பார்ப்பு இல்லாது அளவற்ற அன்பைப் பரிமாறிக் கொள்வதும், தடம் மாறாமல் நல்வழியில் பயணம் மேற்கொள்வதும் எதிர்காலத் தலைமுறையினர்க்கு நாம் சேர்த்து வைக்கும் பொக்கிஷம் ஆகும்’ என்பது கவிஞரின் முடிந்த முடிபு. ‘மனிதனாக வாழ்ந்திட வேண்டும் – மனதில் வையடா!’ எனப் ப(h)ட்டுக்கோட்டையார் தம் திரைப்-பாடல் ஒன்றில் சின்னப் பயலுக்குச் சொன்ன சேதி இங்கே ஒப்புநோக்கத் தக்கது.

3. ஒரு நொடிப் பணிவு

இன்று உலகெங்கும் பேசப்படும் ஒரு பொருள் ‘அறிவார்ந்த உணர்ச்சி ஆளுமை’ (Emotional Intelligence) என்பது. ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குக் கூர்த்த அறிவு இருந்தால் மட்டுமே போதாது; உணர்ச்சிப் பிழம்பாகவே வாழ்வதாலும் ஒருவருக்கு வெற்றி வசப்பட்டு விடாது. கூரிய அறிவும் சீரிய உணர்வும் ஒத்திசைந்து செல்லும் வாழ்வே வெற்றி வாகையைச் சூடும். ‘ஒரு நொடிப் பணிவு’ என்னும் கவிதையின் வாயிலாக ஆனந்தன் உணர்த்தும் இன்றியமையாத வாழ்க்கைப் பாடம் இது தான்:

“ பணிவு என்பது பயம் அல்லவாம்
  பின்னிழுத்துக் குறி பார்த்து முன்னோக்கி பாயும்
  வில்-அம்பு போன்றதாம்
  நிதானம் இங்கே நிர்ப்பந்தம் ஆகுமாம்
  வருமுன் காப்பதும் வந்ததை ஏற்பதும்
  வேகம் காட்டாததும் விட்டுப் பிடிப்பதும்
  இடம் பொருள் உறவு இன்ன பிறவும்
  பொறுத்தேற்கும் விதியாகும் விவேகமும் ஆகும்.”

          (பார்வைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம், பக்.36-37)

‘எந்த ஓர் இக்கட்டான சூழலிலும் அமைதி காத்து, உணர்வுக்கு அடிமை ஆகாத பண்பே வாழ்வில் வெற்றியை உறுதி செய்யும்; ஒரு நொடிப் பணிவு அங்கே களிநடம் புரிந்து நிற்கும்’ என்பது கவிஞரின் அழுத்தம் திருத்தமான அனுபவ மொழி ஆகும்.

4. புதிய பார்வை என்றும் இனிமை

தடம் பார்த்து நடப்பது சாதாரண மனிதரின் இயல்பு; தடம் பதித்துக் காட்டுவது சாதனை மனிதரின் இலக்கணம். கவிஞரின் மொழியில் குறிப்பிடுவது என்றால், ‘சராசரிப் பார்வை நாளாகப் புளிக்கும்; புதிய பார்வை பரவசத்தைக் கொடுக்கும்’. செக்கு மாடாய்ச் சுற்றி சுற்றியே மடிவது வேடிக்கை மனிதரின் வாழ்க்கை; அனுபவத்தின் தேடலுடன் புதிய பரிமாணங்களைக் கண்டறிவது வெற்றியாளரின் முத்திரை. கவியரசர் பாரதியாரும் தமது ‘புதிய ஆத்திசூடி’யில் ‘புதியன விரும்பு’ (69) என இளையோர்க்கு அறிவுறுத்துவது இங்கே நினைவுகூரத் தக்கது.

“ இன்றைய புதுமை நாளைய பழமையாகும்
  இடத்தைப் பொறுத்தும் பொருளைப் பொறுத்தும்
  பழமையும் புதுமையும் மாறுபாடு கொள்ளும்
  மனப்பாங்கைப் பொறுத்துப் பசுமையாயும் இருக்கும்”

எனத் தொடங்கும் ஆனந்தனின் ‘புதிய பார்வை என்றும் இனிமை’ என்னும் கவிதை,

“ புதிய பார்வை எல்லாம் புதுமை
  புதிய பார்வை என்றும் இளமை
  புதிய பார்வை என்றும் இனிமை
  புதிய பார்வைக்கு என்றென்றும் இல்லை முதுமை”

          (பார்வைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம், பக்.13-14)

என நிறைவு பெறுவது சிறப்பு.

5. வெற்றியைக் கைவசமாக்கும் வழி

“ இனியொரு விதி செய்வோம் – அதை
  எந்த நாளும் காப்போம்”  
(பாரதியார் பாடல்கள், ப.160)

என முரசறைவார் ‘பாட்டுக்கொரு புலவர்’ பாரதியார். அவரது அடிச்சுவட்டில் நடை பயிலும் ஆனந்தனும் ‘புதியதோர் விதி செய்வோம்…’ என்னும் தலைப்பில் ஒரு கவிதை படைத்துள்ளார். அதில் அவர் புதிய விதிகளும், புதுப்புது விஷயங்களும், புதிய பார்வையும், புதுப்புது வியூகங்களும் காலத்தை வென்று நிற்கும் வெற்றியைத் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார்; அவரது கண்ணோட்டத்தில்,

“எது வந்த போதும் எதிர்கொள்ளும் திறனும்
  எல்லா வகைச் சாத்தியங்களையும்
  வேறுபட்ட சிந்தனைகளுடன் அணுகுவதும்
  பக்குவமாக உட்சென்று தகர்த்தெறிதலும்
  வெற்றியைக் கைவசமாக்கும் வழியாகும்”.

          (பார்வைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம், ப.160)

மேலும், ‘இயற்கையோடு ஒன்றிச் செல்வதும், எதார்த்தத்தை இழக்காமல் இருப்பதும், காலத்திற்கு ஏற்ப மாற்றம் கொள்வதும், தொன்மைக்குக் களங்கம் விளைவிக்காததும் புதிய விதிகளுக்கு வரவேற்பை அளிக்கும்’ என ஆழமாக நம்புகின்றார் அவர்.

6. தோல்வியில் பண்படு!

கவிஞர் ஆனந்தனின் அகராதியில் ‘தோல்வி என்பது வெற்றியின் மறு பக்கம்’. முயலாதது தோல்வி ஆகாது; அது இயலாமை ஆகும். ‘நம்பிக்கை ஒன்றே மந்திரம் ஆகும். முயற்சி ஒன்றே பலிதம் ஆக்கும். முயலாமை என்றும் பலவீனம் ஆக்கும்’ என்பது கவிஞரின் கொள்கை முழக்கம். ‘வெற்றியும் தோல்வியும் நிரந்தரம் அற்றவை என்பது நியதி ஆகும். இதைப் புரிதலே பக்குவம் ஆகும்’ என அறிவுறுத்தும் கவிஞர்,

“ வெற்றியைத் தக்க வைத்துக்கொள்வதும்
  தோல்வியைத் தூக்கியெறிவதும்
  பண்பட்ட சாமர்த்தியம் ஆகும்…
  வெற்றியிலே அடக்கமும்
  தோல்வியில் பக்குவமும்
  பண்பட்ட மனத்திற்கு அழகாகும்…”

          (பார்வைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம், பக்.15-19)

என வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு படி மேலாக, ‘தோல்வியிலும் நேர்மை போற்றப்பட வேண்டியதாகும்’ எனக் கவிஞர் மொழிவதும் இங்கே கருத்தில் கொள்ளத்தக்க ஓர் இன்றியமையாத வாழ்வியல் விழுமியம் ஆகும்.

7. பொறாமையில் இருந்து தப்பிக்கும் வழி

‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்’ என அறம் என்பதற்கு நனிசிறந்த முறையில் மிகச் சுருக்கமான மொழியில் வரைவிலக்கணம் வகுக்கும் வள்ளுவர் பெருமான், அடுத்த குறட்பாவில் மன மாசுகள் எவை எனப் பட்டியல் இடுவது நோக்கத்தக்கது. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என அவர் தரும் பட்டியலில் அழுக்காறு என்னும் பொறாமை முதல் இடத்தைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. அழுக்காறு என்பதற்கு ‘மனத்து அழுக்கு’ என உரையாசிரியர் தரும் விளக்கமும் இங்கே நினைவுகூரத் தக்கது. ‘பொறாமை’ என்னும் தலைப்பில் இயற்றியுள்ள கவிதையில் நான்கு வகையான பொறாமைகளைச் சுட்டிக்காட்டும் கவிஞர், ‘முயலாமை எனும் இயலாமையால் உருவாகும் பொறாமை கீழ்த்தரமானதாகும்’ எனச் சுட்டிக்காட்டுகின்றார்; ‘அவரவர் தானாக உணர்ந்து திருந்தினால் ஒழிய தனியாக இதற்கு ஒன்றும் மருந்து இல்லை என்பது நிதர்சனமான, கசப்பான உண்மை’ என மொழிகின்றார்; பொறாமையை ‘நஞ்சு’ என்றும், ‘தீ’ என்றும் குறிப்பிடும் அவர், நிறைவாக, பொறாமையில் இருந்து மனித குலம் தப்பிப்பதற்கான வழி முறையினையும் எடுத்துரைக்கின்றார்:

“ மற்றவரின் தகுதியையும் வெற்றியையும் புகழையும்
  எல்லா அழகையும் ரசிக்கத் தெரிந்தவனும்,
  இவற்றையெல்லாம் தூண்டலாகக் கொண்டு தன்னையும்
  சுற்றத்தையும் தயார் செய்பவனும், தனக்கென்று
  புதுப்பாதையையும் பயணத்தையும் அமைக்கத் தெரிந்தவனும்,
  இருப்பது போதும் என்ற மனம் படைத்தவனும்
  பொறாமையில் இருந்து தப்ப முடியும்;
  மன நிம்மதியைப் பெறமுடியும், உறவுதனை வளர்க்க முடியும்;
  வாழ்வினில் நன்றாகச் செழிக்க முடியும்,
  மனிதம் அங்கு மாண்புடன் வீர நடை போட முடியும்”

          (பார்வைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம், பக்.55-59)
 

8. மாற்றானின் உணர்வுகளை மதிக்கும் மதம்

திக்குத் தெரியாத காட்டில் பயணம் செல்லுகையில் இப்படிப் பயணிக்கலாம் – சிறக்கலாம் என நம்பிக்கை ஊட்டும் ஒற்றையடிப் பாதையே மதம் என்னும் வாழ்க்கை வழிகாட்டி ஆகும். வேறு சொற்களில் குறிப்பிடுவது என்றால், மனிதன் மண்ணுலகில் எப்படி வாழ வேண்டும் என்பதையும், வாழக் கூடாது என்பதையும் கற்றுத் தருவது மதம்.

“ மானுடம் தழைக்கவும் நிலைக்கவும்
  நல்வழிப்படுத்தவும் நெறியூட்டவும்
  தோற்றுவிக்கப்பட்டதே மதம்
  மாற்றானின் உணர்வுகளை மதிக்கும்
  எம்மதமும் நல்மதம் ஆகும்”

என்பது கவிஞர் ஆனந்தனின் கருத்து.

எனினும் இன்று மதத்தினை முன்னிறுத்தித் தவறு இழைப்பதும், அடுத்த மதத்தின் நம்பிக்கையைக் குறை சொல்வதும், மதம் மாறச் செய்வதும் நடைமுறையில் காணப்படுகின்றன. இவை மதத்தின் நோக்கத்தினைப் பாழ்படுத்தும் செயல்பாடுகள் எனச் சாடுகின்றார் கவிஞர். இன்னும் கூர்மையான மொழியில் ‘மதமான பேய் பிடியாது ஒழுக வேண்டும்’ என்னும் வள்ளலாரின் கருத்தினை அடியொற்றி ஆனந்தனும்,

“ மதம் மானுடத்தை நல்வழிப்படுத்தவும்
  மனித இனத்தைக் காக்கவும்
  உதவும் எனின் பின்தொடருவோம்,
  இல்லையெனில் விட்டுத் தொலைந்து
  மதமற்ற மனிதனாய் வாழ்ந்து சாவோம்”

எனப் பறைசாற்றுகின்றார்.

9. மகுடம் சூட்டும் வெற்றிப் பயணம்

தடந்தோளின் திறத்தினால் தடைக் கற்களைப் படிக்கற்கள் ஆக்கி, வாழ்வில் எதிர்வரும் சோதனைகளையும் வேதனைகளையும் தகர்த்தெறிந்து, வெற்றிக் கனியைத் தட்டிப் பறிப்பதே சாதனை ஆகும். எது ஒருவனைச் சாதனையாளன் ஆக்கும் என்பதைச் ‘சாதனை’ என்னும் தலைப்பில் படைத்துள்ள கவிதையில் நிரந்தினிது கூறியுள்ளார் ஆனந்தன். அவரது நோக்கில் ஈர்ப்பும், ஈடுபாடும், ஒருமுனைப்பான நோக்கமும் சாதனை புரிவதற்குத் தேவைப்படும் முப்பெரும் பண்புகள் ஆகும்.

“ எதனையும் எதிர்கொள்ளும் பக்குவமும்
  இயல்பினைப் பாதிக்கும் தியாகங்களும்
  நிதானமான விடாமுயற்சியும்
  நின்று வெல்லும் சாதனையாக்கும்…
  பொறுமை காப்பதும் காலம் வெல்வதும்
  இலட்சியத்தை அடைவதில் குறியாக இருப்பதும்
  தெளிவான சிந்தனையும் செயலும்
  உன்னைச் சாதிக்க வைத்து சாதனையாக்கும்…
  புதிய சிந்தனையும் அகண்ட பார்வையும்
  வித்தியாசம் மிகுந்த உயரமான வெற்றியும்
  உன்னைத் தனித்துவப் படுத்தும்
  தொடர்ந்த வெற்றிப் பயணம் மகுடத்திற்கு மகுடம் சூட்டும்”

          (பார்வைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம், பக்.115-116)

என இளையோர் நெஞ்ச வயல்களில் நம்பிக்கை விதைகளை ஆழமாக ஊன்றுகின்றார் ஆனந்தன்.

10. ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்வோம்!

ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் நாம் அனைவரும் இவ்வுலக வாழ்வில் வழிப்போக்கர்களே. பிறப்பும் இறப்பும் இயல்பானவை; இரண்டிற்கும் இடைப்பட்ட காலமே வாழ்வு என்பது. இந்த வாழ்வில் நமக்கு வாய்ந்த உறவுகளும், நாம் சேர்த்த உறவுகளும், வாய்த்த, சேர்த்த இன்ன பிற பொருள்களும் இடையில் வந்தவையே; முடிவினில் நம்முடன்  வராதவையே. ‘இங்கு நாம் ஒருவருக்கு ஒருவர் வழிப்போக்கர் ஆவோம்’ என்னும் தெளிவு வாழ்வில் பிறந்து விட்டால் போதும், கலக்கமும் கவலையும் காணாமல் போகும்.

“ வருவதும் போவதும் நிரந்தரமற்றது ஆகுமாம்
  வாழும் நொடிகளே உண்மையானது ஆகுமாம்
  வந்ததையும் வரப்போவதையும் எண்ணியெண்ணி
  உழலுவதும் பிதற்றுவதும் வீணானது ஆகுமாம்…
  அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என நம்புவோம்
  நிகழ்காலத்தில் அதீத கவனம் காட்டி நகருவோம்…
  ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழும் முறையும்
  வழிப்போக்கன் என்றாலும் வாழ்ந்த நிறைவைத் தருமாம்”

          (பார்வைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம், பக்.146-147)

என்பது உண்மை ஒளி வீசி நிற்கும் கவிஞரின் மெய்யியல் சிந்தனை ஆகும்.

மனித குலத்திற்குக் கவிஞரின் தலையாய செய்தி

ரா.ப.ஆனந்தன் தமது ஒட்டுமொத்தக் கவிதைப் படைப்புக்கள் வாயிலாக மனித குலத்திற்கு வழங்கும் அடிப்படையான செய்தி இதுதான்: மனம் ஒரு குரங்கு என்பார்கள்; ஆனந்தனோ இக் கருத்தியலுக்கு மாறாக – மாற்றாக – ‘மனம் ஒரு கடவுள்’ என்றும், ‘மனம் ஒரு குழந்தை’ என்றும் கூறுகிறார்.

“ மனதில் உள்ள கடவுளைக் கொண்டு
  கடவுள் உள்ள மனதைக் கொண்டு
  மனதினைச் சரியான பாதையில் பயணிக்கும் பட்சத்தில்
  மனிதம் வளர்த்துக் கடவுள் காப்போம்,
  கடவுள் வளர்த்து மனிதம் காப்போம்!”

          (ரசித்து வாழ வேணும்… பிறர் ரசிக்க வாழ வேணும், ப.106)

பிறிதோர் இடத்தில் கவிஞரே தெள்ளத் தெளிவாக மொழிவது போல், ‘ஒரு முறைதான் வாழ்வு என்பது உறுதியானது; வாழ்ந்து கடப்பது என்பது கடமையானது; வெறும் கையுடன் போகப் போவது உண்மையானது; இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொள்வது அழகானது!’ (ரசித்து வாழ வேணும்… பிறர் ரசிக்க வாழ வேணும், ப.122).


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.