கவிஞர் இன்குலாப்பின் மரண வாக்குமூலம்

முனைவர் இரா.மோகன்

ண்மையில் (11.02.2016) காலமான இன்குலாப் ‘ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கலகக் குரலாகக் காலமெல்லாம் ஒலித்துக் கொண்டே இருந்தவர்’; ‘மக்கள் கவிஞர்’; ‘பாட்டாளிகளின் கூட்டாளி’; ‘நிமிர்வின் அடையாளம்’; ‘புரட்சியின் மறுபெயர்’; ‘உண்மையின் உள்ளத்தில் ஒரு புரட்சியாளராகவே ஒளிவிட்டுக் கொண்டிருந்த ஆளுமை’; பேராசிரியர் ஔவை நடராசன் தம் இரங்கல் கட்டுரையில் வினவியது போல், ‘ஆர்ப்பரித்த இடி முழக்கமா அமைதி கொண்டது?’ (உகரம்: ஜனவரி 2017, ப.6).

கவிஞர் தமது மரண வாக்குமூலம் போல ‘கண்ணாமூச்சு’ என்னும் தலைப்பில் ‘உகரம்’ இதழில் எழுதிய கடைசிக் கவிதை உணர்ச்சியும் உருக்கமும் சுமந்து நிற்பது. காலம் கவிஞரோடு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதாம். அந்த ஒப்பந்தம் உயிர்ப்பின் போதே செய்து கொள்ளப் பெற்றதாம். காலத்திற்கும் கவிஞருக்கும் இடையிலான அந்த ஒப்பந்தத்தின் முக்கியமான – முதன்மையான – சாரம் இதுதான்:

“உயிர்ப்பின் போதே என்னுடன்
 ஒப்பந்தம் செய்தது காலம்.
 தான் விரும்பும் போது தன்னோடு
 கண்ணாமூச்சு ஆட வேண்டும்.”

இந்த ஒப்பந்தம் கைச்சாத்து இடப்பெற்றது எங்கே தெரியுமா? ‘கருவறைச் சுவரிலாம்’!

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி கவிஞருக்கும் காலத்திற்குமான கண்ணாமூச்சு ஆட்டம் தொடங்கியதாம்; கவிஞரின் வாழ்வில் பருவந்தோறும் ஆட்டம் தொடரவும் செய்ததாம். எப்படி என்கிறீர்களா? இதோ, கவிஞரின் சொற்களில்:

“தவழும் போது ஆட்டம் தொடங்கியது
நான் தான் ஜெயித்தேன்.”

ஆட்டத்தின் தொடக்கத்தில் – முதல் கட்டத்தில் – வெற்றி பெற்றது கவிஞர் தானாம்! அடுத்து, ‘பிள்ளைப் பருவமும் இப்படியே தொடர்ந்ததாம்!’ செயல் திறமும் சுறுசுறுப்பும் மிக்க ‘இளமையில் ஒப்பந்தம் குறித்து இருவருக்கும் (காலத்திற்கும் கவிஞருக்கும்) மறந்தே போயிற்றாம்!’

கால வளர்ச்சியில் கவிஞரின் வாழ்வில் அடுக்கடுக்காக மாற்றங்கள் நிகழ்ந்தனவாம்.

“என் கிளைகளில் பறவைகள்
 பேசின.
 கருங்குயிலும் வரிக்குயிலும்
 இடையறாது கூவின.
 செண்பகக் குயில்
 கூடுகட்டிக் குஞ்சும் பொரித்தது
 வெளியும் ஒளியும்
 எமக்குச் சாட்சியமாயின”

எனக் குறியீட்டு மொழியில் அம்மாற்றங்களை – வளர்ச்சி நிலைகளை – பதிவு செய்கிறார் கவிஞர். ஊர், உறவு, உற்றார், உறவினர், சொந்தம், பந்தம் யாவும் கவிஞரைச் சுற்றிச் சூழ்ந்தனவாம்.

இந்தக் கட்டத்தில் தான் கவிஞரின் வாழ்வில் காலம் தனக்கே உரித்தான ஆட்டத்தை ஆட முற்பட்டதாம்.

“காலம்
என் பற்கள் சிலவற்றைப்
பிடுங்கியது.
ஒரு கண்ணின் ஒளியைத்
திரையிட்டது.
மூக்குக்கு மணத்தை
மறைத்தது.
இதயத்தைக் கீறிப்பார்த்தது.
ஒரு காலைப் பறித்து
ஊமையாக்கியது”

எனப் பற்கள், கண், மூக்கு, இதயம், கால் எனக் கவிஞரின் புலன்களில் – உறுப்புக்களில் – ஏற்படுத்திய கொடிய தாக்கங்களைப் பட்டியல் இடுகின்றார் கவிஞர்.

விளைவு?

“என் இளமை உதிர்ந்து
விட்டது”

என இரத்தினச் சுருக்கமான மொழியில் குறிப்பிடுகிறார் கவிஞர்.

இத்துடன் நிற்கவில்லையாம் காலம்! ‘காலம் இன்னும் வேர்களைக் குலுக்கி விளையாடக் கூப்பிட்டதாம்!’

இவ்வளவு நிகழ்ந்த பிறகும் – நிகழ்த்திய பிறகும் – விட்டு வைத்ததா காலம்? அமைதி அடைந்ததா காலம்?

இந்தத் தருணத்தில் தான், ‘மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து எப்பாடும் பேர்ந்து உதறி வேரி பயிர் பொங்க மூரி முழங்கிப் புறப்பட்டது போல’ கவிஞரின் இருப்பு தொடர்ந்ததாம்!

“இத்தனைக் காயங்களுக்குப்
பிறகும்?
என் இருப்பு
என் திறமையாலா?
காலத்தின் கருணையாலா?”

எனப் பொருள் பொதிந்த இரு வினாக்களைத் தொடுத்து விட்டு, கவிஞர் பேசுவன ஆழ்ந்திருக்கும் அவரது உறுதி மிக்க உள்ளத்தினைத் திறந்து காட்டுகின்றன.

“என் பற்களைப் பிடுங்கிச்
செல்லலாம்
என் சொற்கள் சிரிக்கும்
என் கண்ணொளியை
மறைக்கலாம்
என் சிந்தனை சுடரும்
என இதயத்தை நிறுத்தலாம்
என் எழுத்துத் துடிக்கும்.
என் ஒரு காலை வாங்கலாம்
என் சுவடுகள் தொடரும்”

என முடிந்த முடிபாகத் தன்னம்பிக்கை ததும்பி நிற்கும் மொழியில் அறுதியிட்டு உரைக்கின்றார் கவிஞர். கவிஞரின் சிரிக்கும் சொற்களை – சுடர் விட்டு நிற்கும் சிந்தனையை – இமைப்பொழுதும் சோராது துடித்துக் கொண்டே இருக்கும் எழுத்தினை – தொடரும் சுவடுகளை – காலத்தால் என்ன செய்ய முடியும்? இவை காலத்தை வென்று நிற்பவை அல்லவா?

“காலம் கவிஞனைக் கொன்றுவிடும் – அவன்
கவிதை காலத்தை வென்றுவிடும்”

என்பது சத்திய வாக்கு அல்லவா? முத்திரை மொழி அல்லவா?

“இறுதியாக ஆடிப் பார்க்கலாம்!”

எனக் கவிஞர் தம் கவிதையை முடித்திருப்பது முத்தாய்ப்பு,

ஒன்று மட்டும் உறுதியிலும் உறுதி; உண்மையிலும் உண்மை. இறுதி ஆட்டத்தில் வெற்றி வாகை சூடப்போவது கவிஞராகத் தான் இருக்கும்! தோல்வியைத் தழுவப் போவது காலமாகத்தான் இருக்கும்!

இந்தக் கவிதை ‘உகரம்’ நவம்பர் (2016) இதழில் வெளிவந்தது. எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் குறிப்பிடுவது போல், “அவர் (இன்குலாப்) கவிதையால் நினைக்கப்படுவார், எழுதிய எழுத்தால் நினைக்கப்படுவார், எல்லாவற்றினும் மேலாய் வாழ்ந்த வாழ்க்கையால் நினைக்கப்படுவார்” (‘இன்குலாப்… சாகாத வானம்!’, உகரம்: ஜனவரி 2017, ப.17).
 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.