சங்க இலக்கிய நற்றிணைத் தாவரங்களின் வகைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா

ங்க மக்கள் இயற்கையோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தனர் என்பதை அறிய முடிகிறது. அகம், புறம் என வாழ்க்கையை இரண்டாகப் பகுத்தனர். நிலத்தை நானிலமாகப் பிரித்து அந்நிலத்துள் முறைமை திரிந்த நிலத்தைப் 'பாலை' எனப் பெயர் கொண்டு ஐந்திணை வகுத்தனர். ஒவ்வொரு திணைக்கும் அந்தந்த நிலப்பகுதியில் சிறந்து விளங்;கும் பூ அல்லது மரத்தின் பெயரை நிலத்தின் பெயராக இட்டனர். ஒவ்வொரு அகத்திணைப் பாகுபாட்டிற்கும் புறத்திணைப் பாகுபாடு கொள்ளப்பட்டு பூக்களின் பெயரை இட்டனர். திணைக்குரிய மரச்செடிகள், கொடிகள், புள்ளினம் ஆகியன இயற்கையின் அழகையும் இயல்பையும் கூறுகளையும் நன்கு உணர்ந்திருந்தனர். அக்கால மக்கள் இயற்கை மீதும் உயிரினங்;கள் மீதும் ஆழ்ந்த அன்பும் ஆளுமையும் கொண்டிருந்தனர்.

உலகில் காணப்படும் புல் பூண்டு தொடங்;கி மனிதன் வரை உயிர்களைப் பற்றி ஆராயும் இயல் உயிரியல் எனப்படும். இவ்வுலகில்
84 லட்சம் உயிரின வகைகள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. தாவரவியல் என்பது புல், பூண்டு, புதர், செடி, கொடி, மரம் ஆகியவற்றைக் குறிக்கின்றன. இக்கட்டுரையில் நற்றிணை காட்டும் தாவரங்;களின் உயிரினச் சூழல் ஆராயப்படுகிறது.

தாவரவினச் சூழல்

'தாவரம் என்பது இடம்விட்டு இடம் பெயராது. நிலைத்த தன்மை கொண்டது. நிலத்திலோ, நீரிலோ வேர்விட்டு தண்டு, கிளை, இலைகளுடன் காணப்படுவது என்று தமிழகராதி விளக்கம் அளிக்கிறது.' எல்லாப் பொருள்களும் தாவரத்தில் தோன்றுகின்றன என்பதும் எல்லாம் அழிந்தாலும் தாவரம் அழியாதது என்றும், தாவரங்;கள் வாழும் தன்மைக்கும் சூழலுக்கும் ஏற்ப நிலவாழ் தாவரங்;கள் என்றும், நீர்வாழ் தாவரங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நிலவாழ்த் தாவரங்கள்

1.கொடிவகை, 2.மர வகை, 3.செடி வகை, 4.புதர் வகை, 5.புல் வகை என்று ஐந்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 11 வகைக் கொடியினங்;களும், 37 வகை மரவினங்;களும், 4 வகைச் செடியினங்;களும், 5 வகைப் புதரினங்;களும், 10 வகைப் புல்லினங்களும் குறிப்பிடப்படுகின்றன.

கொடி வகை

தாவரங்களில் கொடி வகை மிக மென்மையானவை. வலுவற்றவை. தாமே நிமிர்ந்து வளரும் திறன் இல்லாதவை. தாம் வளர்கின்றன இடங்;களுக்கு அருகில் வளரும் பிற வன்மையான தண்டுகளையுடைய மரங்;கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றைப் பற்றிக் கொண்டு வளர்கின்றன. அங்;குப் பிறவற்றைப் பற்றிப் படராத கொடிகளும் உண்டு. அவை நிலத்திலே படர்ந்துவிடுகின்றன. மரங்;களில் மட்டுமே படரும் சில கொடிகள் அவற்றின் உச்சிவரை சென்று மரமே தெரியாதவாறு படரும். இவை அனைத்தும் கொடி வகையின் கீழ் அடங்கும்.

அடும்பம்

அடும்பங் கொடி நிலத்தில் படரும் கொடியினத்தைச் சார்ந்தது. இக்கொடி நெய்தல் நில கடற்கரையோரங்;களிலும், வளைந்த கழிகளிலும் குவிந்திருக்கும். வெண்மணற் பரப்புகளிலும் படர்ந்து காணப்படும். இவற்றின் இதழ்கள் படர்ந்ததாக இருக்கும் என்பதை 'அரும்பின் மாயிதழ் அலரி' (டாக்டர்.கு.வே.பாலசுப்ரமணியம்,(உ.ஆ). நற்றிணை ஷமூலமும் உரையும். பா.எ.
145:2)

பகன்றை

இது 'சிவதைக் கொடி' என்றும் வழங்;குவர். கொடியினத்தைச் சார்ந்த பகன்றை இலை வேலினைப் போல விரிந்த வடிவுடையதாக இருக்கும். இவ்விலைகள் மேற்கதுப்பாகிய தோலையுடையன. இக்கொடியில் பூக்கள், முன்பனி காலத்தில் மாலைப் பொழுதில் மலரும். பகன்றைப் பூக்கள் வெண்ணிறத்தில் வட்டவடிவமாய் இருக்கும்.

'பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும்பனி அச்சிரம்' (நற்றிணை பா.எ.
86:3-4)

மர வகை

மரங்கள் விரைவாக வளர்ச்சி கொள்ளாமல் மெதுவாக வளரும் தன்மை உடையன. மரத்தின் வேர்கள் நிலத்தின் அடிவரை செல்லக்கூடியன. உள்வைரம் வாய்ந்தவை. மரத்தின் உறுப்புக்களாக இலை, தளிர், கோடு, சினை, தலை, காய், பழம், தோல், செதில் என்பன கூறப்படுகின்றன. செடி, கொடி போன்ற தாவர வகை போலல்லாமல் மரவகைகள் நீண்ட காலம் பயன் தருவனவாகும். இங்;ஙனம் 40 வகை மரங்;கள் 134 பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இருப்பை

மலைப்பாங்கான பகுதியில் இருப்பை மரம் வளர்ந்திருக்கும். இதன் மலர்கள் வெனிற்காலத்தில் மிகுதியாக மலரும் தன்மை கொண்டது. இருப்பை மலரின் தலை பஞ்சு பொன்று மென்மையாக இருக்கும். (நற்றிணை பா.எண்:111:1) இம்மரத்தின் காய்கள் பால் உடையன. இவை பழமாகும்போது காயினுள்ளிருக்கும் பால் வற்றி இனிய தேன் போன்ற சுவையை உடையதாக இருக்கும். இப்பழங்கள் வெளவால் விரும்பி உண்பதை

'தேம்பால் செற்ற தீம்பழம் நசை,
வைகுபனி உழந்த வாவல் (நற்றிணை, பா.எண்
: 279 : 2-3)

என்ற பாடல் வரிகளைக் குறிப்பிடுகின்றன.

கொன்றை

'கொன்றை' மரம் செய்திகள் 5 பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. முல்லை நிலத்திலும் பாலை நிலத்திலும் கொன்றை மரங்கள் காணப்படும். இவற்றின் மலர்கள் கார் காலத் தொடக்கத்தில் பூக்கும் தன்மை கொண்டவை. கொன்றை மலர் மஞ்சள் நிறமும் உதிரும்போது பழுப்பு நிறமும் உடையவையாக இருக்கும். 'பொற்காசினைச் சரமாகத் தொடங்கவிட்டாற்போல கிளைகள்தோறும் சரக்கொன்றை தொங்கும்' (நற்றிணை பா.எண் : 296 : 4. 221. 242) உதிருவதற்கு முன் உருண்டை உருண்டையாக இருக்கும் கொன்றை மலர்கள் மாலையாகத் தொடுக்கப்பட்டது போன்று தொங்கும்.

'இழையணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடுகரி யரைசுடர்வீக் கொன்றைக்
காடுகவின் பூத்த வாயினு நன்றும்'

                                 (நற்றிணை, பா.எ:
302 : 3. 61)

என்ற பாடலில் பொன்மாலை அணிந்த பெண்களைப் போன்று நீண்ட சுடர்விடும் பூங்கொத்துகளுடன் காட்சியளிப்பதாக உவமிக்கப்படுகிறது. கொன்றையின் கிளைகள் குறுந்தடிகள் போன்றும் காட்சியளிக்கும். கொன்றையின் அடிமரம் பொரித்தாற் போன்று காணப்படும். கொன்றைக் காய் உட்கரு உடையதாக விளங்கும்.

செடி வகை

நிலத்தின் ஆழம் வரை வேர்கள் செல்லாது மேலோட்டமாக விளங்கும் தன்மையுடையன செடி வகைகளாகும். நற்றிணையில் எருக்கம், கள்ளி, குறிஞ்சி வித்திகம் என்னும் நான்கு வகைச் செடிகள் குறிப்பிடப்படுகின்றது. இச்செடிவகை குறித்து பத்து பாடல்கள் உள்ளன.


 

எருக்கம்

இது செடியினத்தைச் சேர்ந்தது. இதன் பூ கருஞ்சிவப்புக் கோடுகளை ஓரங்களில் கொண்டு வெண்மை நிறத்தில் இருக்கும். இப்பூவிற்கும் மணம் கிடையாது. இப்பூ குவிந்திருக்கும் அழகை குவிமுகில் எருக்கு (நற்றிணை, பா.எ :
220 : 2) என்று குறிப்பிடப்படுகிறது. எருக்கஞ்செடி பற்றி 2 பாடல்கள் உள்ளன.

வித்திகம்

நற்றிணையில் வித்திகம் பற்றி
2 பாடல்கள் உள்ளன. இக்காலத்தில் பிச்சி என்றழைக்கப்படுகிறது. மழைக்காலத்தில் மிகுதியாகப் பூக்கும் இம்மலர்கள் மிகுந்த நறுமணம் உடையன. ஈரமான இதமும் குளிர்ச்சியும் உடைய இம்மலரைப் பெண்கள் சூடுவர். (நற்றிணை, பா.எ. 314 : 3-4)

புதர் வகை

புதராக வளர்ந்து நிற்கும் செழ வகை புதர் இனம் என வழங்கப்படுகிறது. மரம், கொடி என்ற வகைகள் அடங்காத தாவர இனங்கள் புதர்வகை இனத்துள் அடங்கும். நற்றிணையில் புதர் இனங்களாக எறுழ், கருங்காக்கணம், கழிமுள்ளி, கூதளம், பிடவம் ஆகிய 5 வகைகள் 12 பாடல்களில் கூறப்பட்டுள்ளன.

 


எறுழ்

முல்லைநிலக் காடுகளில் காணப்படும் 'எறுழ்' நற்றிணையில் 1 பாடலில் மட்டுமே கூறப்படுகிறது. இத்தாவரம் மழையின் வருகையை அறிவிக்கும் தன்மையைக் கொண்டது என்பதை

'வருமழைக்கு எதிரிய மணிநிற இரும்புதல்
நறைநிறம் வடுத்த நல்இணர்த் தெறுழ்வீ'
(நற்றிணை பா.எ:
302 : 4-5)

இப்பாடல் வரிகளால் அறிய முடிகிறது. மழை வந்தவுடன் எறுழப் பூக்கள் நீலமணி போன்ற நிறத்தையும், மழை இல்லாக் காலத்தில் வெண்மையான நிறத்தையும் பெற்றிருக்கும் என்பது நற்றிணைப் பாடலால் அறியப்படுகிறது.

கழிமுள்ளி

நெய்தல் நிலத்தில் உள்ள உப்பங்கழிக் கரையில் வளரும் கழிமுள்ளிச் செடி புதரின வகையைச் சார்ந்தது. இதன் மலர்கள் நீலமணி போன்ற நிறமுடையன. நறுமணமிக்கன. பெண்கள் விரும்பி தலையில் இப்பூவினைச் சூடுவர். (நற்றிணை, பா.எ:
245:2-4. 191-9-10)

புல்வகை

நிலத்தின் அடிப்பகுதி வரை சூழ்ந்து வேர்கள் செல்லாமல் மேலோட்டமாய் வேர்கள் உடையனவாக விளங்கும் தாவரங்கள் 'புல்வகை' எனப்படும். (இல, காணம்மாள், சங்க இலக்கியத்தில் மலர்கள். ப.
56) இவை கிளைகளின்றி நேராகவும், வளைந்தும் வளரும் தன்மையுடையன. 10 வகையான புல்வகைத் தாவரங்களான உழுந்து, கரும்பு, கொறுக்கச்சி, வறகு, வாழை குறித்து 51 பாடல்களில் நற்றிணை குறிப்பிடுகின்றது.


உழுந்து

நற்றிணையில் உழுந்து பற்றி
1 பாடல் மட்டுமே உள்ளது. உழுந்து என்னும் தானியவகை முல்லை நிலத்தில் பயிரிடப்படுகிறது. இதன் இலைகள் அகன்றதாகவும், காய்கள் மெல்லிய மயிர்கள் கொண்டதாகவும் விளங்கின. முன்பனிக்காலத்தில் உளுந்தின் காய்கள் உண்டாகின்றபோது இலைகள் உதிர்ந்துவிடும் இயல்பை உடையவை (நற்றிணை பா.எ: 89:5.6)

நெல்

நெல் பற்றி குறிப்புகள் நற்றிணையில்
5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மருத நிலத்திலும், நெய்தல் நிலத்திலும் நெல் விளைகிறது. வெண்ணெல், செந்நெல், மலைநெல் என நெல்லின் வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிவந்து நீண்ட மயிர்களைக் கொண்ட நெற்கதிர்கள் முற்றியவுடன் வளைந்து காணப்படும். (நற்றிணை, பா.எ : 400 : 2-3)

நீர்வாழ்த் தாவர வகை

நீரிலே வளரும் தன்மை உடைய தாவரங்கள் நீர்வாழ்த் தாவரங்களாகக் கொள்ளப்படும். இத்தாவரங்களின் வேர்கள் நீரின் ஆழமான பகுதியில் வேரூன்றியும், நீருக்குள்ளும் இருக்கும். இவற்றின் இலைகளும், பூக்களும் நீரின் மேல் மிதந்தபடி இருக்கும். இவை பொய்கையில், கழனியில் மற்றும் நீர் தேங்கியிருக்கும் பகுதியில் வளரும் இயல்புடையன. ஆம்பல், குவளை, தாமரை, நெய்தல் என்னும்
4 வகை நீர்தாவரங்கள் பற்றி நற்றிணையில் 34 பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நீர்வாழ்த் தாவர வகைகள்தாமரை

பூக்களில் சிறந்தது தாமரை மலராகும். இம்மலர் பற்றி
2 பாடல்கள் நற்றிணையில் உள்ளன. நீரிலே இருப்பதால் குளிர்ந்த மகரந்தங்களையும், ஒளிவீசும் தன்மையையும் கொண்டு விளங்கும். தாமரையின் இலைகள் ஆண் யானையின் காது போன்றது. மருத நிலத்தில் காணப்படும் வயல்களில் மிகுதியா வளரும் தன்மை கொண்டது. அளவில் பெரிய பூவாக இருப்பதால் தேன் மிகுதியாக இருக்கும் (நற்றிணை, பா.எ : 310 : 1-2)

முடிவுரை:

உயிரினச்சூழல் இன்றைய கால மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இயற்கைச்சூழல் மாறுபாட்டால் உயிரினங்களின் இயல் கெட்டு மாந்தர்களின் மனநிலை பாதிப்படைகிறது என்பதை நற்றிணை காட்டுகிறது. அதற்கு இயற்கைச் சூழலை மாசுபடுத்தாது அவற்றோடு உயிரினங்கள் ஒன்றி வாழ வழிவகை செய்ய வேண்டுமென்பதை 'உயிரினச்சூழல் உணர்த்துகின்றது. 


முனைவர் பூ.மு.அன்புசிவா
149 ஹரிஸ்ரீ காடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர் -
641 007
பேச
:098438 74545.