நவீனப் பெண் கவிஞர்களின் கவிதைக்கூறுகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா

திகாலச் சமூக அமைப்பில் ஆண், பெண் உறவு நிர்ணயிக்கப்பட்ட ஒன்றின் கீழ் இயங்கவில்லை. எந்தவொரு கோட்பாட்டின் அடிப்படையிலும் மக்கள் தங்கள் வாழ்க்கையினை மேற்கொள்ளவில்லை (தன் எண்ணப்படி சுதந்திரமான வெளியில் சுற்றித் திரிந்த சமூகம் நமது ஆதிகாலச் சமூகம் ஆண், பெண் என்ற இரண்டு பால்நிலை வேறுபாடு மட்டுமே இருந்தது) வேறு எந்தவிதமான உறவு முறைகளும் பேசப்படவில்லை. தாய், தந்தை, மகன், மகள் என்ற எந்தச் சுட்டுப் பெயரோடும் மனிதர்கள் அழைக்கப்படவில்லை. எந்தவொரு ஆணும், எந்தவொரு பெண்ணுடனும் உடல் உறவு வைத்துக் கொள்ளலாம். அங்கு மனித உற்பத்திப் பெருக்கம் மட்டும்தான் மூலமாக இருந்தது. அம்மாதிரியான சூழலில் அவர்கள் ஒன்றாகவே உணவு உண்டு, உறவு மேற்கொண்டு வேட்டையாடி வாழ்ந்தனர். இவ்வாறு கூடிவாழத் தலைப்படும் போது குகையே ஆதிமனிதனுக்குக்கான வீடாகக் கொண்டு சமூகத்தில் வாழத் தொடங்கினான்.

நவீன காலத்தின் பெண் கவிஞர்கள் அதிகம் உள்ளனர். தமிழச்சி, லீனா மணிமேகலை, தாமரை, கனிமொழி, குட்டிரேவதி, சக்திஜோதி என எண்ணிக்கை அதிகம். இவர்களில் லீனா மணிமேகலை, கொற்றவை போன்றோர் பெண்களின் விடுதலை, ஆணாதிக்க எதிர்ப்பு போன்றவற்றினை மையப்படுத்தி கவிதை எழுதுகின்றனர். ரிக் வேத காலத்தில் இருபது பெண்பாற் கவிஞர்கள் இருந்தனர் என்று ஆர்ஷானுக்ரமணி என்ற நூல் குறிப்பிடுகிறது. 'பிரகத்தேவதா' என்னும் நூல்
27 பெண் கவிஞர்கள் இருந்தனர் என்கின்றது. இந்தப் பெண் கவிஞர்களில் 24 பெண் கவிஞர்கள் பாடல் ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ளதாகவும், இவர்களில் மூன்று பெண் கவிஞர்களின் பாடல்கள் அதர்வ வேதத்திலும் இருக்கின்றன. எனவே வேதகாலத்தில் 24 பெண்பாற் கவிஞர்கள் இருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. ரிக் வேத காலத்தில் 24 பெண் கவிஞர்களும், அதர்வன வேத காலத்தில் மூன்று பெண் கவிஞர்களுமாக மொத்தம் 27 கவிஞர்கள் இருந்துள்ளார்கள்.

கவிதையெழுதும் பெண்பாற் கவிஞர்கள் கவிதாயினிகள் என்று அழைக்கப்பெறுகிறார்கள். ரிக் வேத காலத்திலேயே பெண் கவிஞர்கள் இருந்துள்ளமையை ஆர்ஷானுக்ரமணி, பிரகத்தேவதா போன்ற நூல்கள் குறிப்பிட்டுள்ளன. பக்தி இலக்கிய காலத்தில் சைவ சமயத்தினை வளர்க்க காரைக்கால் அம்மையாரும், வைணவ சமயத்தினை வளர்க்க ஆண்டாளும் இயற்றிய பாடல்கள் பெரும்பங்கு வகித்தன. நவீன இலக்கிய காலத்திலும் சமூகம், வாழ்வியல் நெறி, பெண்ணியம், இறை வழிபாடு என்று பல தளங்களிலும் பெண் கவிஞர்கள் கவிதையெழுதுகிறார்கள்.

உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு இன்றுவரை மனிதனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற வசீகர சக்தி 'காதல்' என்று சொன்னால் மிகையாகாது. காதல் என்பது ஓர் உணர்வு. பருவம் எய்திய இளைஞனிடத்தும் இளம் பெண்ணிடத்தும் தோன்றுகின்ற அக உணர்வு. இரண்டு உள்ளங்கள் அன்புடன் ஒன்றும் போது தோன்றுவது. இக்காதல் உணர்வு மனிதனுக்கு மட்டுமின்றிப் பிற உயிரினங்களுக்கும் இருப்பது உற்று நோக்கத்தக்கது. ஏனைய உயிரினங்களுக்கும் காதலுணர்வு பொதுவானதாகும். காதல் உணர்வு தோன்றாத உயிரில்லை. உயிரினம் தோன்றிய காலம் தொட்டே காதல் வளர்ந்து வருகிறது.

இயற்கையால் படைக்கப்பட்ட மனித உயிர்களுக்குக் காதல் ஒரு அரிய வரப்பிரசாதமாகும். அரிய வரப்பிரசாதமாகக் காணப்படும். இக்காதல் மனித உடலில் எப்பாகத்தின் வழியாக உள்ளே நுழைந்தது என்று தெரியவில்லை. ஆண் பெண் இருவரிடத்தும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் இரு உயிர்களையும் துடிதுடிக்கச் செய்வது காதல் ஒன்று தான். காதல் வாழ்வின் உயிர்மூச்சு என்று நினைக்கச் செய்கிறது. மனித உடலில் அணுவளவு நுழைந்தக் காதல் அண்டமாக விரிந்து ஆட்டிப்படைக்கிறது. காதல் இல்லையென்றால் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்றளவிற்கு கொண்டு செல்கிறது. காதல் வயப்பட்ட ஆடவரும் மகளிரும் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். தங்களின் பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர் என்று எவரைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். காதலுக்;காக எதையும் செய்யத் துணிவார்கள். தங்களது இன்னுயிரையும் போக்கிக் கொள்ளவும் தயங்கமாட்டார்கள். வாழ்வில் காதல் ஒன்றே பெரிதென எண்ணும் மனப்பக்குவம் உண்டாகும். அம்மனப்பக்குவமே அவர்கள் தங்களின் இன்னுயிரையும் போக்கத் தயங்குவதில்லை. தங்களுடைய வாழ்வில் காதலுக்குப் பிறகு தான் எதுவும் என்பார்கள். காதல் இல்லை என்றால் மரணம் என்பதை

'காதல், காதல், காதல், காதல்
போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல்'


என்ற கவிதை வரிகளில் காணலாம். காதலுக்கு அத்தகைய மகத்துவம் வந்து விடுகிறது. காதலுக்கு அடிப்படையாக அமைபவர்கள் பெண்களாவார்கள். காதலுக்கு அடிப்படையாக அமையும் பெண்களைப் புறக்கணித்தால், சுற்றிக் கொண்டிருக்கும் பூமி இயங்காது எனலாம்.

காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் அமையும் பொதுவானக் கூறாகும். இருவரிடமும் ஒத்து அமையும் காதல் உண்மையானக் காதலாகும். இத்தகைய காதலே நமது சங்க இலக்கியங்களில் அதிகமாகக் கூறப்பட்டுள்ளன. சிற்சில பாடல்களில் ஒரு தலைக்காதலும் பேசப்பட்டுள்ளன. ஒருதலைக் காதலில் ஆடவர் ஈடுபட்டால் மடலேறும் வழக்கமும் இருந்தது என்பதை

'மாவென் மடலும் ஊர்ப் பூவெனக்
குழமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளிளே'


என்று குறுந்தொகைப் பாடல் கூறுகிறது. பெண்கள் பசலை நோயால் அவதியுற்று, தலைவனையே நினைத்திருக்கும் பாடல்கள் காணப்படுகின்றன. தலைவி தன்னுடைய காதலை எவரிடத்தும் கூறாமல் உள்ளத்திலேயே வைத்திருக்கும் செயலினையும் தான் தலைவன்மேல் கொண்ட காதல் எல்லாவற்றையும் விடப் பெரியது என்று கூறுவதை

'நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆறலன் வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே'


என்ற பாடல் மூலம் அறியலாம். இதன் மூலம் தலைவி தலைவன் மேல் கொண்ட காதல் எத்தகைய உறுதி வாய்ந்தது என்பதனை நன்கு அறிய முடிகிறது. இதே போன்று தலைவனும் தலைவியின் மேல் கொண்ட காதல் உறுதியானது என்பதையும் அறியலாம்.

காலம் செல்லச் செல்ல காதல் வயப்படும் ஆடவரிடத்தும் மகளிரிடத்தும் எண்ணற்ற மாற்றங்கள் உண்டாயின. உண்மையான காதலுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியராலும் இக்காலக் காதலுக்கு இலக்கணம் வகுக்க இயலாமல் சற்று தடுமாற்றம் அடைவார்கள். பெண் ஆணின் காதலை ஏற்றுக் கொண்டு பின்னர் காதலனிடத்தில் என்னை மறந்துவிடு என்று கூறும் அவநிலை பிற்காலத்தில் ஏற்பட்டது. அதே போன்று தான் ஆணும் பெண்ணின் காதலை ஏற்றுக் கொண்டு பின்னர் அவள் மறக்கக் கூறியவுடன், அவளை மறக்க முடியாமல் அவதிப்படும் நிலையும் உண்டாயிற்று. இக்காலச் சமுதாயத்தில் இது போன்ற காதல் ஏராளம்.

இதயத்தில் புகுந்து உடலைத் துன்புறுத்தும் இக்காதல் பூவைவிட மென்மையானதாகும். பூவிற்கு இலக்கணமாகக் கூறப்படும் பெண், காதலன் ஒருவனைக் கைப்பற்றி அவனின் அனைத்து நற்செயல்களுக்குத் துணை நின்று இல்லறத்தில் பின்பற்றப்படும் நீதிகளைத் தவறாமல் பின்பற்றுதல் பொறுப்பாக அமையும். இத்தகைய பொறுப்பினை உணர்ந்து செயல்படும் பெண்மையின் சிறப்பினை

'உயிரைக்காக்கும் உயிரினைச் சேர்ந்திடும்
உயிரினுக்குயிராய் இன்பமாகி விடும்
உயிரினும் இந்த பெண்மை இனிதடாழூ
ஊது கொம்புகள், ஆடு களிகொண்டே'


என்ற கவிதை வரிகளில் அறியலாம், பெண்ணினத்திற்கும் பெருமை சேர்க்கும் இக்காதல் மிகவும் சிறப்புடையது. ஆனால் பெண்ணினம் காதலை ஏற்றுக் கொண்டு காதலனிடம் என்னை மறந்து விடுக என்று கூறியவுடன் காதலன் அடையும் மனத்துயரை அளவிட முடியாது.

காதல் குறித்து உலகின் பல்வேறு அறிஞர்கள் தங்களது கருத்துக்களைக் கூறியுள்ளனர். காதல் வாழ்விற்கும் வளத்திற்கும் பெருந்துணையாக அமைந்து மனித இனத்தை மகிழ்வித்து இன்பக் கடலினுள் இழுத்துச் செல்லும் ஓர் ஈர்ப்பு விசை எனலாம். இந்தக் காதலை ரா.பி. சேதுப்பிள்ளை

'காதல் என்பது காதுக்கினிய சொல்,
கருத்துக்கினிய பொக்கிஷம்
காதல் உண்டாயின் இவ்வுலகில் எல்லாம் உண்டு, காதல்
இல்லையேல் ஒன்றும் இல்லை'


என்று காதலைப் பற்றிக் கூறியுள்ளார். சங்கப் புலவர்கள் தமது ஒவ்வொரு பாடல்களிலும் காதலை உயிர் நாடியாக வைத்துப் பாடியிருக்கின்றனர். காதலை மனிதக்காதல், தெய்வக்காதல், இயற்கைக் காதல் என்று வகைப்படுத்திக் கூறலாம். மனிதக் காதல் இயல்பானது. தெய்வக்காதல் அரிதானது. இயற்கைக் காதல் மாறாதது என்றென்றும் நிலையானது ஆகும்.

கவிஞர்களும் காதல் கவிதைகளும்

புதுக்கவிதை எழுதும் கவிஞர்களில் பெரும்பாளோர் கவிதைகளின் அடிக்கருத்தில் காதல் பற்றிய கவிதைகளே அதிகம் இடம் பெற்றுள்ளன. அதிகமான உணர்வின் பிரதிபலிப்பாகக் காதல் உள்ளதால் இவ்வுணர்வின் வெளிப்பாட்டை கவிஞர்கள் கவிதை வாயிலாக வெளிப்படுத்துகின்றனர் எனலாம். கவிஞர் படைக்கும் இலக்கியத்தினை மனிதன் படைக்ககும் இலக்கியம். இன்றைய மனிதனைப் பற்றிய இலக்கியம் எனப் பிரித்துக் கூறலாம். இப்பிரிவுகளில் காதல் எனும் கூறு இரு நிலைகளிலும் பாடுபொருளாக ஊடுருவியுள்ளது.

இவற்றுடன் காதலன் காதலியின் நினைவுகளை நினைத்து ஏங்குவதாகவும் நிறைவேறாத காதலை வெளிப்படுத்துவனாகவும் பாடுபொருள் கவிஞர்களால் படைக்கப்படுகிறது.

'காதலை அறிவு சார்ந்த காதல்
(mental love) அழகு சார்ந்த காதல் இயற்கைக் காதல் (Natural love) என இருவகையாகப் பிரிப்பர்'

அறிவு சார்ந்த காதல் மனங்களை மையப்படுத்தியும் இயற்கைக் காதல் அழகில் ஈடுபட்டும் விளைந்ததாகக் கருதப்படும்.

'வசீகர இளமையின்
வாசற் படிகளில்
அமர்ந்தபடி
நீ எழுதிய
காதல் கடிதங்களின்
கட்டு எண்
கைக்குள் கிடைத்துள்ளது'


இக்கவிதையில் காதலி இளமையின் துடிப்பால் எழுதப்பட்ட கடிதத்தைக் குறித்து நிற்பதால் இயற்கைக் காதலை உள்ளடக்கியதாக உள்ளது.

'மலரத்
தொடங்கியிருந்த
உன் மனசின் ராகங்கள்....
தவித்துப் புரண்டு
வந்த தாக நதிகள்'


எனக் காதலி காதலனுடன் கொண்ட நட்பின் முதிர்ச்சியால் கொண்ட காதலை வெளிப்படுத்துகிறது. இக்கவிதை அறிவு சார்ந்த காதலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

காதல் கவிதை தோன்றக் காரணம்

மனிதனிடம் இயல்பாக முகிழ்கின்ற மலருள் காதல் மலரும் ஒன்று 'கவிஞனும் ஒரு சாதாரண மனிதன் தான் அவன் சமுதாயத்தில் தங்கியிருக்கின்றான் என்ற வகையிலே சமூக அரசியல் பிரச்சனைகளுக்கு அவன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவனுக்கென்றுள்ள தனிப்பட்ட சொந்த அனுபவங்களும் பிரச்சனைகளும் உண்டு. எனவே அவை உணர்வுகளாக கவிதைகளில் வெளிவருவது தவிர்க்க முடியாதது'9 என்னும் நிலைக்கேற்ப புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள் காதலை மையப்படுத்திக் கவிதைகளை எழுதினர் என்று கருதலாம்.

'மனிதன் அமைதியை வெளியே அடைய முடியாமையின் உள்;ளே நாடி இருக்கிறான்'.10 இம் முயற்சியும் கூட காதல் கவிதை தோன்றக் காரணமெனலாம்.

இவ்வகையில் தோன்றிய காதல் கவிதைகளில் காதல் சிந்தனைகள் கவிஞர்க்கு கவிஞர் மாறுபட்டு அமையும் என்பதை ஆண்டாள் பிரியதர்ஷினி, தமிழச்சி, வெண்ணிலா ஆகியோர் கவிதைகள் மூலம் அறியலாம்.

ஒவ்வொரு மனிதனும் அன்பு என்னும் காதல் வலையில் ஒன்றிதான் வாழ்கின்றான். உயிரினங்களாகத் தோன்றிய அனைத்து உயிரிகளிடமும் தினம், தினம் காதல் வந்து போகின்றன.

'ஒப்பந்தப் பயணமாக
உதிர்ந்த இறகின்
முதுகில் நான்
......................................
குறிவைத்தன தோட்டாக்கள்
தலைமைப் பீடத்துக்கு
உயிர்ப்பிச்சை கேட்டு
உண்ணா விரதம் இருந்தன
முறித்துப் போட்ட
காதல் அம்புகள்'


என்று ஆண்டாள் பிரியதர்ஷினி காதலின் ஒரு நோக்கைப் பதிவு செய்துள்ளார்.

வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவதைப் போலவே காதலர் சில நிமிடம் மகிழ்வோடும், சில நிமிடங்கள் கோபத்தோடும் அன்பைப் பரிமாறிக் கொள்கின்றார்கள்.

வெளிச்சமும் இருளும் சேரும் நேரத்தில் மகிழ்வோடும் உள்ளோம். அத்துடன் உன்னுடைய சிரிப்பு, கோபம், வருத்தம் இவற்றின் திறவுகோல்கள் என்னுடைய வேகம், உற்காசம், பயணம் ஆகியவைகளின் வழிகாட்டுதல்களும் என்னிடமும் உள்ளன. உனக்கு நானும் எனக்கு நீயும் என்னும் உண்மையான வாழ்வை மேற்கொள்கின்றார் என அ. வெண்ணிலா குறிப்பிடுகின்றார்.

'வெளிச்சமும் இருளும் சேரும்
அற்புத நேரத்தின்
மகிழ்வோடு
சேர்ந்துள்ளோம் நாம'


உண்மையான பண்பு, பாச பரிவர்த்தனையுடன் உள்ளங்களைப் புரிந்து கொண்டு வாழ்கின்றார்கள்.

தொகுப்புரை:

  • காதலுக்குக் கண்ணில்லை என்பதும் ஆசை, வெட்கம் அறியாது என்பதையும் சில கவிதைகளில் காண முடிகிறது. பெண்ணினத்திற்குப் பெருமை சேர்ப்பதும் காதல் உலகின் உன்னதங்களை எடுத்துக் காட்டுவதுமான போக்கை மூன்று கவிஞர்களின் கவிதைகளிலும் காண முடிகின்றது.
     

  • ஆண் பெண்ணின் காதல் வளர்ச்சி, வெட்கம் ஒருதலைக் காதல் போன்றவை பற்றிய பதிவுகளும் உள்ளன. உண்மையான காதல், காதல் என்னும் பெயரில் நடக்கும் போலித்தனங்கள் ஆகியவற்றைப் பற்றிய எச்சரிக்கையுணர்வைச் சில கவிதைகள் புலப்படுத்துகின்றன. மௌனக் காதல், தத்துவக் காதல் போன்றவற்றைப்பற்றி விளக்கப்பட்டுள்ளன.
     

  • இயற்கைக் காதல், நடப்பியல் காதல், வேதனைக் காதல் போன்றவற்றை கவிஞர்கள் கவிதை வரிகளில் தெளிவுப்படுத்தியுள்ளனர். ஒரு தலைக் காதல், நிறைவேறாத காதல் போன்றவற்றையும் கவிதை வரியில் அறிய முடிகின்றது.
     

  • காதலின் இயல்புகள், இன்றைய சமுதாயத்தில் காதலின் போக்கு, காதலின் வகைகள் ஆகியவற்றைக் குறித்து மூன்று கவிஞர்களும் ஆழமாகச் சிந்தித்துள்ளனர்.
     


முனைவர் பூ.மு.அன்புசிவ
உதவிப்
பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான்
கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
- 641 028
பேச
: 9843874545, 09842495241.