கவிஞர் அன்புசிவா கவிதைகளில் விடியலும் வெற்றியும்

முனைவர் பொ.திராவிட பிரேமா
 

முன்னுரை :

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான்  கொல்எனுஞ் சொல்

என்ற வான்புகழ் வள்ளுவரின்  வாய்மொழிக்கு இலக்கணமாகத் திகழ்பவர்தான் கவிஞர் அன்புசிவா. “காதல்  ஒன்றையே பாடுபொருளாகக் கொண்டு  கவி புனைவதில்  வல்லவரான  இவரை  “ காதல் கவிஞர் ”  என்று அழைப்பினும்  சாலப்பொருந்தும். தனது படைப்புகளில்  காதலை மிக மென்மையாகவும், நவீனத்துவமாகவும், யதார்த்தமாகவும், நுண்மான்நுழைபுலன் அறிவுடனும் அணுகியுள்ள  போக்கு  காணப்படுவதே  இவரது படைப்புகளின் வெற்றிக்குக் காரணமாகும். இவரது படைப்புகளில்  அமையப் பெற்ற காதல் பற்றிய புதுமையான  செய்திகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றன .

கவிஞர் பற்றி:

அன்பு  என்ற மூன்றெழுத்தில் விளைவதுதான் காதல். கவிஞர்  அன்புசிவாவும் தன் பெயருக்கேற்பவே காதல் கவிதைகளைப் படைக்கும் படைப்பாளியாக உலா வருகிறார். ஏழ்மையான  குடும்பத்தில் பிறந்து, வறுமையின் பிடியில் அகப்பட்டு துன்புற்ற  போதும் மனந்தளராமல் விடா முயற்சியுடன்  தனது கல்வியைத் தொடர்ந்துப் பயின்றும், தன் உழைப்பால்  முயன்றும்  தமிழ்கூறு நல்லுலகிற்குத் தனதுப் பணிகளை  பல்லாற்றானும் சிறப்புற ஆற்றி வருபவர்தான் கவிஞர் அன்புசிவா.

கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டமும், திண்டுக்கல்  காந்தி கிராமிய பல்கலைக்கழகத்திலும,; கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலும் இரு முதுகலைப் பட்டங்;களைப்  பெற்றுள்ளார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்கவிக்கோ அப்துல் ரகுமான்  கவிதைகளில்  அறிவியல்  செய்திகள்என்னும்  பொருண்மையில்  ஆய்வு நிகழ்த்தி இளமுனைவர் பட்டமும்,  “இருபத்தோராம்  நூற்றாண்டுப் புதுக்கவிதைகளில்  நவீனத்துவப்  போக்குகள்  என்னும்  தலைப்பில்  ஆய்வு மேற்கொண்டு  முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தற்பொழுதுகோவை  இந்துஸ்தான்  கலை அறிவியல்  கல்லூரியில்தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். எதையேனும் சாதிக்கத் துடிக்கும்  இவர், ஐந்து தேசியக் கருத்தரங்குகளை நடத்தியும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்  கட்டுரைகளை  வழங்கியும்  எட்டுத்திக்கும்  தமிழ் மணம் பரவச் செய்த பெருமையும் இவருக்கு  உண்டு.

இவரது  படைப்புகளில் வெளிவந்துள்ள காதல் கவிதை நூல்கள்.

1.    நானும் நீயும் (நவம்பர் 2002)
2.
    காத்திருந்த கனவுகள் ( டிசம்பர் 2003)
3.
    ஈர நிழல் (பிப்ரவரி 2006)
4.
    தேவதையின் வானம் (சூலை 2009)
5.
    சர்க்கரைக்கட்டி மழையில் கரைகிறது (பிப்ரவரி 2011)
6.
    அபியும் நானும் (செப்டம்பர் 2012)

அன்றையக் காதலும் இன்றையக் காதலும்

சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர் என்னும் தொல்காப்பியரின் அக இலக்கிய நெறிக்கு நாயகர்களான தலைவன், தலைவி இருவரிடையெ எழும் காதல் பற்றி சங்கப் பாடல்கள் பலவாறாக எடுத்துரைக்கின்றன. தலைவனும், தலைவியும் தமக்குள் எந்த வகையான உறவு என்று ஒருவரை ஒருவர் அறியாமல் ஊழ்வினையால் வாழ்க்கை இணையராக ஒன்றுபட்டதை குறுந்தொகைப் பாடல்.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக்
கேளிர்
யானும் நீயும் எவ்வழி
அறிதும்
செம்புலப் பெயனீர்
போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

என்று கூறுகின்றது. காதல் என்பது ஒத்த அன்புடைய இருமனங்களின் சங்கமம் ஆகும். விழியில் விழுந்து, இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவாக போற்றப்படுவது. பிரிவு என்ற சொல்லை அறியாதது எனலாம். சாதி, மதம், இனம், மொழி, நாடு இவற்றைக் கடந்த காதலின் உயிரோட்டத்தை அன்புசிவாவின் கவிதைகளும் பிரதிபலிக்கின்றன. பழத்தைப் பிழிந்து எடுத்த சாறு போல, எளிமையான நடையில் காதல் பருகத் தூண்டுவதை

உனக்கும்
எனக்கும்

என்ன
உறவு
இன்று
வரை
புலப்படவேயில்லை

என்னும் கவிதை வரிகள் உணர்த்தும்.

மலரினும் மெல்லியது காமம்என்று திருவள்ளுவர் காதலை மென்மைப்படுத்திக் கூறினார். கவிஞர்  அன்பு சிவா  அக்காதலை மேலும்   மென்மையாக்கும் வகையில் 

ஈசல்
இறகைவிட

மென்மையானது

உன்
மனசு

என்கிறார். ஒரு நாள் மட்டுமே தனது ஆயட்காலத்தைக் கொண்ட ஈசல் +ச்சியின்; இறகுகளைக் காட்டிலும் காதல் மென்மையானதும், மேன்மையானதும் இரகசியமானதும் என்று கவிஞர் கூறுவது கவிதைக்கு  வளம்   சேர்ப்பதாக உள்ளது.

கல்லை வணங்குவது முறையாகுமா?

கடவுள் எங்கே இருக்கிறார்என்று விவாதம் செய்யும் ஒரு கூட்டத்தாருக்கும்,” கடவுள் இல்லவே இல்லைஎன்று கூறும் கூட்டத்தாருக்கும், “கடவுள் உண்டுஎன்று கூறுகின்ற கூட்டத்தாருக்கும் இடையே நடைபெறுகின்ற போர்கள், குழப்பங்கள் எல்லாம் ஒரு புறம் இருக்க, “நான்தான் கடவுள்என்று கூறும் ஒரு கூட்டமும் நம் சமூகத்தில் உலவுவதை நாம் காணலாம். இக் குழப்பங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதினெண் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர்

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி
வந்து மொனமொனன்னு சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

என்பார். அதாவது, கடவுள் நம்முடைய உள்ளத்திலே வீற்றிருக்கும் பொழுது நட்டு வைத்துள்ள கல்லா பேசப் போகிறது? என்றும், கடவுள் வேறு மனிதன் வேறு அல்லஎன்பதையும் தெளிவாகக் கூறுகிறார். கவிஞரும் இக்கூற்றை வழிமொழியும் வகையில்

நீ
கோயிலுக்குச்
செல்லலாம்
என்றாய்!
கடவுள்
கோயிலுக்குச்
சென்று
கல்லை வணங்குவதா!

என்று குறிப்பிடுகிறார். இங்கு காதலை கடவுளாகப் பாவித்து, அக்கடவுளே கோயிலுக்குச் சென்று கல்லை வணங்குவது முறையாகுமா? என்று கவிஞர் கூறுவதை இங்கு சிந்தித்தல் நன்று. ஏதார்த்தமான கவிதையிலும்கல்லை வணங்குவதை விட சிந்திப்பதே மேல்என்ற பகுத்தறிவை ஊட்டக்கூடிய சிந்தனைகள் அடங்கியுள்ளதை நாம் காணலாம்.

நூறாண்டுகள் வாழ

வெந்ததை தின்று விதி வந்தால் மாய்வோம்என்ற சலிப்பான வாழ்க்கை நிலையே நம்மிடம் நிலவுகிறது. இந்நிலையிலிருந்து நாம் விடுபட்டு நோயின்றி நீண்ட ஆயுளுடனும் மன அமைதியுடனும் வாழ்வதற்கான தேடுதல்கள் பற்பல. நாம் எப்பொழுதும் நரை, திரை, பிணி, மூப்பு இன்றி இளமையுடனும், அழகுடனும் நெடுநாட்கள் வாழ விரும்புகின்றோம். நமது மெய்ஞ்ஞானியர்கள் வலியுறுத்திய உடல் வளத்திற்கான உடற்பயிற்சிகள், மன வளத்திற்கான தியானப் பயிற்சிகள், உயிர் வளத்திற்கான காயகல்பப் பயிற்சிகள், மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டுமரணமிலாப் பெருவாழ்வுவாழ்ந்திடலாம் என்ற நம்பிக்கை நம்மிடையே வேரூன்றியுள்ளது.

இங்கு, கவிஞரோ மிக எளிய நடையில், அனைவராலும் செய்ய இயலக் கூடிய ஒரு மருத்துவ முறையை

நூறாண்டுகள் வாழ
அமிர்தம்
தேவையில்லை

நீ
ஒரே
ஒரு முறை
பார்க்கும்
பார்வை
போதுமே

என்கிறார். “அமிர்தம்என்பது சாகாவரம் தரக்கூடியது என்று கருதி தேவலோகத்தில் வாழ்ந்திட்ட தேவர்கள் மட்டுமே அதனை உட்கொண்டனர் என்பதை நாம் புராணங்களில் படித்திருக்கின்றோம். ஆனால் அந்த அமிர்தத்தைக் காட்டிலும் சிறந்ததுகாதல்என்பதை கவிஞர் இங்கு பதிவுச் செய்துள்ளார்.

நமது உடல் சீராக இயங்க வேண்டுமெனில், நமது உடலில் இரத்த ஓட்டம், காற்றோட்டம், வெப்ப ஓட்டம், சீவகாந்த ஓட்டம், உயிரோட்டம் போன்றவை சீரான ஓட்டங்களுடன் இயங்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் சீர்குலைவு ஏற்பட்டாலும்; நமது உடலில் நோய்மிகும். இச்சீர்குலைவின் பாதிப்பினை முறியடிக்கும் வகையில் கவிஞர்

இரத்த ஓட்டம் சீராக இருக்க
நீ சிந்தும் பார்வைகள் போதும்

என்று குறிப்பிடுவது கவிஞருக்கு காதல் மீது கொண்ட தீராத பற்று விளங்குகிறது. காதலை மிகமிக ஆழமாக நேசிப்பது நமக்கு புலப்படுகின்றது. பாரதியார் கண்ட

காதல், காதல், காதல்
காதல் போயிற் காதல் போயிற்

சாதல்
, சாதல், சாதல்

என்ற காதல் வரிகளுக்கு வலு சேர்ப்பதாகவும் கவிஞர் அன்புசிவாவின் கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன.

அறிவியல் நோக்குடன் காதல்

உலகில் உயிரினமாகத் தோன்றிய யாவற்றிற்கும் காதல் தோன்றுவது இயற்கையே. இதனை

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வருஉம் மேவற்று ஆகும்

என்று தொல்காப்பியரும்,

காதல் அடைதல் உயிரின் இயற்கை

என்று பாரதிதாசனும் குறிப்பிடுகின்றனர். அவ்வகையில் கவிஞரும் மனிதர்களிடையே எழும் உணர்வு, உணர்ச்சியமயமான காதலை இயற்கையின் மீது வைத்து கவிதையாக்கியுள்ளதை

பூமி ஒரு பைத்தியம்
தனக்குத்தானே
சுற்றிக்கொள்கிறது
அதுபோல்தான்
நானும்
உன்னையே
சுற்றி
வருகிறேன்

என்ற கவிதை வரிகளும்,

பூமி சுற்றுவது
உண்மையெனில்
உன்னை
என்னிடமும்
என்னை
உன்னிடமும்
கொண்டு
வந்து
சேர்க்குமா?”

என்ற கவிதை வரிகளும் புலப்படுத்தும்.

பிரபஞ்ச பரிணாம வளர்ச்சியினால் நிலம், நீர், தீ, வளி, வெளி என்னும் ஐம்பூதங்கள் தோற்றம் பெற்றன. இவற்றுள் ஒன்றான பூமியானது நவகோள்களில் ஒன்றான சூரியனை தன்னைத்தானே சுற்றிவர இருபத்து நான்கு மணி நேரம் ஆகின்றது. இந்த இயற்கையின் நிகழ்வுகள் யாவும் முறைப்படி இயங்கி வருவதால்தான் இவ்வுலகம் அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இதுபோல,

மனிதனுடைய வாழ்க்கை இயங்குவதற்கும் காதல் முதன்மையானது என்பதை கவிஞர் சுட்டிக் காட்டுகிறார். காதலை வெறுத்து ஒதுக்கியோ, காதலை புறம் தள்ளியோ வாழும் வாழ்க்கை முழுமையான வாழ்க்கையாக இராது. ஆண்களின் தேவையும் புரிதலும் பெண்களிடம் அமையப் பெற்றதையும், பெண்களின் தேவையும் புரிதலும் ஆண்களிடத்தில் அமையப் பெற்றதையும், இயற்கை நமக்கு உணர்த்துவதை கவிஞர் இங்கு வெளிப்படுத்துவதை நம்மால் அறிய முடிகின்றது.

உலகம் தன் கடமையை தொடர்ந்து ஆற்றுவதற்கு ஐம்பூதங்களின் துணை இன்றியமையாததாகும். இக் கருத்தை வலியுறுத்தும் விதமாகக் கவிஞர்

நீர்
நிலம்

காற்று
போல
நீயும்
எனக்கு முக்கியம்

என்று குறிப்பிடுகிறார்.

ஐம்பூதங்களின் தத்துவம் நமது உடலில் பொதிந்துள்ள தன்மை இங்கு உணரப்படுகின்றது. எவ்வாறு எனில், நமது பரு உடல் நிலமாகவும், நீர் இரத்த ஓட்டமாகவும் தீயானது உடலின் வெப்பமாகவும், நம் சுவாசமாக காற்றும், வான் நமது உடலில் உயிராகவும் இயங்கும் தன்மை இங்கு கண்டறியப்பட்டுள்ளது.

சுத்தவெளி என்ற பரம்பொருள் எழுச்சி அடைவதால் அணுக்கள் தோன்றுகின்றன. இந்த அணுக்களே பேரண்ட பரிணாம வளர்ச்சியின் மூலம் என்பதையும், பரிணாம உயிர்களின் வளர்ச்சிக்கு ஊக்கியாகவும் செயல்படுகின்றது. இந்த அணுக்களின் கூட்டுத் தொகுப்புதான் ஒரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிரினங்கள் அனைத்தும் என்பதை வேதாத்திரி மகரிசி குறிப்பிடுகையில்,

அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம்
நீ

அவனில்தான் நீ, உன்னில் அவன்
அவன் யார்? நீ யார்? பிரிவேது?


என்றும்
, வள்ளலார் குறிப்பிடுகையில்

அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்தவுயிர்
எவ்வளவோ அவ்வளவும்

என்றும் குறிப்பிடுகின்றனர்.

மேற்கண்ட கூற்றுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் கவிஞரும்

என் உடலெங்கும்
ஆக்கிரமித்திருக்கும்
அணுக்கள்
உன்னைக்
கண்டதால் தான்
தன்பணியைச்
செய்ய
ஆரம்பிக்கின்றன

என்று குறிப்பிடுவதை நாம் காணமுடிகின்றது. உடல் முழுதும் வியாபித்திருக்கும் அணுக்களின் செயற்பாடுகளை காதலின் மீது ஏற்றிக் கூறியது அக்காதலுக்கு மேலும் மெருகூட்டுவதாக அமைகின்றது.

வாழ்க்கையும் வரதட்சணையும்

இன்றயை சமூகத்தில் பெரும் சிக்கலாக தலைவிரித்தாடுவது வரதட்சணை கொடுமை ஆகும். பழங்காலத்தில் மணமக்களின் குணநலன்களைப் பாராட்டியே திருமணம் நடத்தப்பட்டது. அதனால்தான் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகக் கூறினார்கள். ஆனால், இன்றைய திருமணங்கள் குணநலன்கள் எதையும் பார்க்காமல் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. திருமண சந்தையில் விற்கப்படும் வணிகப் பொருளாக பெண்களின் நிலை காணப்படுகின்றது. இக்கொடுமை எண்ணற்ற பெண்களின் திருமண வாழ்க்கைக்குக் கேள்விக் குறியாகவும், சாவுக்குக் காரணமாகவும் அமைகின்றது. இக்கொடுமையின் சீர்கேடுகளை உணர்ந்த சமூக சீர்திருத்தவாதிகள் தொடர்ந்து குரல் கொடுத்தவண்ணம் இருந்தாலும், அதனை முற்றிலும் ஒழிக்க இயலாத நிலையானது இச்சமூகத்தின் சாபக்கேடாக உள்ளது. இக் கொடுமை கண்டு

நல்ல விலைகொண்டு நாயை விற்பார் அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?”

என்று பாரதியாரும்,

வைர அட்டிகையும்
வரதட்சணைப் பாக்கிகளும்
உன்னுடைய தந்தை
வந்து
உடனே தராவிட்டால்.
தோகையே
உன்னையே தொடமாட்டேன்

என்று மு.மேத்தாவும் கூறியுள்ளனர்.

மேற்கண்ட சமூகப் போக்கு மாற்றமடைந்த நிலையை அன்புசிவாவின் கவிதைகள் உணர்த்துகிறது. “வரதட்சணைஎன்னும் சொல் புனிதமாக போற்றப்படுகின்றது. இதனை

என்
திருமணத்திற்கு

எவ்வளவு
வரதட்சணை
கேட்பாய் என்றாய்!
எனக்கு
வரதட்சணையே

நீ
தானே!!”

என்னும் கவிதை வரிகள் புலப்படுத்தும். இங்கு பெண்ணினத்திற்கு ஆதரவு நல்கும் கவிஞரின் உளப்போக்கு காணப்படுகின்றது. இச்சமூக நலன் கருதி

ஒவ்வொரு ஆணும் இனி எங்களுக்கு வரதட்சணையாக எதுவும் வேண்டாம், வரதட்சணையே நீ தான் என்று பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் காலம் வந்தால் அதைப் பெண்ணினம் இருகரம் கூப்பி வரவேற்கும் என்பது திண்ணம். இந்நிகழ்வு வெறும் ஏட்டளவில் நின்று விடாமல் நடைமுறைப்படுத்தினால் சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் நிகழலாம். இது பெண்ணினத்திற்கு கிடைத்த விடியலும், வெற்றியும் ஆகும் என்பதை அன்பு சிவாவின் கவிதைகள் உள்ளங்கை நெல்லிக்கனிப்போல வெளிப்படுத்துகின்றன.

தொகுப்புரை

புதுக்கவிதை என்னும் ஆழ்கடலுள் மூழ்கி காதல் என்னும் நவரசக் கவிதை முத்தை கண்டெடுத்துள்ளார்.

காதல் என்னும் மலர்களை ஒன்றிணைத்து கவிதை மாலையாக யாத்துள்ளார்.

காதலை மிக மென்மையுடன் அணுகியுள்ள பார்வை, கல் மனதிலும் காதலை வளர்க்கும் அழியாத காவியத்திற்கு சொந்தக்காரராக கவிஞர் விளங்குகிறார்.

காதலை சுகமானதும் அதே சமயத்தில் சுமையானதும் என்று நாம் கருதத் தோன்றினாலும், காதல் மிகமிகப் புனிதமானதும் தெய்வீகமானதும் என்பதை கவிஞர் மெய்ப்பித்துள்ளார்.

சமூகத்திற்கு விழிப்புணர்வை ஊட்டும் கவிதைகளைப் படைப்பது கவிஞருக்குக் கைவந்த கலையாக உள்ளது.

அறிவியலும் காதலும் பின்னிப் பிணைக்கப்பட்ட போக்கினைக் கையாண்டு தனிமுத்திரை பதித்துள்ளார்.
 

முனைவர் பொ.திராவிட பிரேமா
16-2
துர்கா நகர்
துர்
கை கோயில் அருகில்
கனி
ஓட்டல் பின்புறம்
ஒசூர்
- 635 109.