தமிழர் மரபுகள்

திருமதி லீலா சிவானந்தன்


மிழ் என்ற சொல்லுக்கு இனிமை, செம்மை என்ற பொருளும் உண்டு. ''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம" என்பார் பாரதியார். ''உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே" என்பார் மீனாட்சி சுந்தரனார். தமிழ்மொழி பழைமை மிக்க உயர் தனிச் செம்மொழி என்பது ஆய்வாளர்களார் நிறுவப்பட்டுள்ளது. வளம்மிக்க சொல்லாட்சியுடன் வளர்ச்சியடைந்ததோடு இன்றுவரையும் வளம்மிக்க மொழியாகத் திகழ்கின்றது. திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையானதும் இனியானதுமான தமிழ் 2500 ஆண்டுகளுக்கு மேலான இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டுள்ளது.

அதே போல தமிழினமும் தொன்மையான நாகரிகமுடைய மக்கள் இனங்களில் ஒன்று ஆகும். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட கி.மு. 1000 ஆண்டு காலத்துக்குரிய மட்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகின்றன. 2700 ஆண்டுகளுக்கு முன்னது என்று கூறப்படும் தமிழில் எமக்குக் கிடைத்த முதல் நூலான தொல்காப்பியத்தைப் படிக்கும் போது அந்த நூலின் காலத்துக்கு முன்னேர தமிழ்மக்கள் எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய முன்னேற்றமடைந்த பாரம்பரியம் மிக்க பண்பாட்டைத் தமிழினம் கொண்டதாக இருந்து வந்தது என்பதை அறியக் கூடியதாக உள்ளது. அதே போல தொல்காப்பியத்துக்குப் பின்னர் எழுந்த சங்க இலக்கியங்களும் தமிழ் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் தமிழர் சிறந்திருந்தனர் என்பதை உணர்த்துகின்றன.

மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர் வாழ்வை அகவாழ்வு புறவாழ்வு என்றும் பண்பாட்டை அகப்பண்பாடு, புறப்பண்பாடு என்றும் வகுத்தனர். இதைக் காலம் காலமாகப் போற்றியும் வந்தனர். அந்தந்தக் காலத்தில் எழுந்த இலக்கியங்கள் அந்தந்தக் கால மக்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், அரசு, ஆட்சி போன்றவற்றையும் அவற்றால் படிமுறை வளர்ச்சியையும் எடுத்துக் காட்டுவனவாக இருக்கின்றன.

தொல்காப்பியம் கூறம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து வகை நிலங்களும் அவற்றுக்கான அக ஒழுக்கங்களும், புற ஒழுக்கங்களும் பற்றி சங்கப் பாடல்கள் சிறப்பாக விபரிக்கின்றன. அத்துடன் அக்கால மக்களின் உயர் குணங்கள், விருந்தோம்பல், கொடை, கொல்லாமை போன்ற பண்புகளையும் விபரிக்கின்றன.

"விருந்து புறத்தக்கதாகத் தானுண்ணல் சாவா
மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று"
என்பார் திருவள்ளுவர்.

இந்தப் பண்பாடு என்று சொல்லும் போது அது அகப்பண்பாடு, புறப்பண்பாடு என்று இருவகையாகக் கூறப்படுகின்றது. அகப்பண்பாடு என்று சொல்லும் போது அது அகம் சார்ந்தது, அதாவது உளம், மனம் சார்ந்தது. புறப்பண்பாடு வெளித் தோற்றம் சார்ந்தது.

ஒருவர் நற்குணம் உடையவராய் பிறருக்கு உதவும் பண்பினராய் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த நோக்குடையவராய், முல்லைக்கொடிக்கு தேரை ஈந்துவிட்டு நடந்து தன் அரண்மனை சேர்ந்த பாரி போன்ற வள்ளல் தன்மை உடையவராய், பெரியோரைப் போற்றுபவராய், அறம் சார்ந்து நிற்பவராய், எளிமையானவராய், ஈகை, விருந்தோம்பல் குணமுடையவராய் இருப்பது அகப்பண்பாட்டின் பாற்படும்.

ஒருவரை நீங்கள் சந்திக்கும் போது அவர் பெரியோராய் இருப்பின் வணங்குதல், சிறியோராயின் ஆசி கூறுதல் உற்றார், நண்பரின் இன்பத்திலும், துன்பத்திலும் துணையிருத்தல், இல்லார்க்கு உதவி செய்தல், உங்கள் புறத்தோற்றம் - முக்கியமாக ஆடை, அணிகலன் போன்றவை புறப்பண்பாட்டின்கீழ் வரும் என்பது அறிஞர் கருத்தாகும். தனிநாயகம் அடிகளார் அதனுடன் மொழி, இலக்கியம், நுண்கலைகள், சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை, பழக்க வழக்கங்கள், மருத்துவம், வாழ்க்கை முறை, உணவு, உடை, விளையாட்டு, விழாக்கள், வழிபாட்டு முறைகள் போலான மரபுரீதியாகப் பேணப்பட வேண்டியவை என்றும் கூறுவார். இந்தப் பண்புகள் காலம் காலமாகத் தொல்காப்பியர் காலத்திலிருந்தே வழிவழியாகத் தமிழ் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவற்றைப் பேணிக்காப்பதுடன் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் நமது கடமையாகும்.

இப்போது மரபு என்றால் என்னவென்று பார்ப்போம். மரபு என்பது ஒரு குழு அல்லது ஒரு சமூகம். அதன் முந்தைய தலைமுறைகளிடம் இருந்து பரம்பரை பரம்பரையாகப் பெற்ற வளங்களைப் பேணி வளர்த்துக் காத்து அடுத்து வருகின்ற தலைமுறைக்குக் கையளிப்பதாகும். இவை மொழி, இலக்கியம், இயல், இசை, நாடகம், ஓவியம், சிற்பம், உணவு. உடை, கொண்டாட்டங்கள், விளையாட்டு, தத்துவம், சடங்குகள், மதம் போன்றவற்றால் அறியப்படுகின்றன என்பது அறிஞர் கருத்தாகும்.

தொல்காப்பியம் கூறும் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றில் மருதம் என்பது வயலும் வயர் சார்ந்த இடமுமாகும். இந்த நிலத்தில் வாழ்ந்தோர் பெரும்பாலும் உழவுத் தொழில் புரிந்தோராவர். அரிசி தமிழரின் முக்கியமான உணவுப் பொருளாக விளங்குகின்றது. நிலத்தைப் பண்படுத்த இயற்கையோடியைந்த வாழ்வு வாழ்ந்து இயற்கையில் இருந்து கிடைக்கும் பொருட்களைப் பெற்று உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான். உணவுப் பெருக்கத்தை உருவாக்குவது அதற்காக கால்வாய்கள் வெட்டுவது போன்ற வேலைகளைச் செய்கிறான். வயலில் உழுது பயிரிட்ட நெல்லை அறுவடை செய்து வீட்டுக்குக் கொண்டு வந்து சுற்றமும் நட்பும் சூழ மனைவி, மக்களுடன் மகிழ்ச்சியுடன் பொங்கல் செய்து கொண்டாடுவதன் மூலம் பயிர்வளர மழை கொடுத்த சூரியனுக்கும் அதற்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி கூறும் தினமாகவும் கொண்டு பண்பாட்டிற்கு ஏற்ப உடையணிந்து ஒரு பண்டிகையாக உழவர் திருநாளாகக் கொண்டாடுகின்றான். இது சமுதாய வளர்ச்சியையும், பண்பாட்டு வளர்ச்சியையும் காட்டி நிற்கிறது எனலாம். ஷதை பிற்நதால் வழிபிறக்கும்| என்ற பழமொழியும், ஷஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்| என்ற பாரதி வாசகமும் தமிழரின் பண்பாட்டுச் சிறப்புக்கு ஒரு சான்றாகும்.

தைமாதம் முதல் நாள் பொங்கல் நாள் உழவன் தன் உழைப்பின் பலனை நுகரத் தொடங்கும் நாள் தன் உழைப்பின் முதற்பயனை இறைவனுக்குக் கொடுத்து அதன்பின் சுற்றத்தவர்க்கும் மற்றவர்க்கும் கொடுப்பது பண்டு தொட்டு வரும் தமிழரின் பண்பாட்டு மரபாகும்.

யானை நிரையுடைய தேரோரினும் சிறந்தோர்
ஏனை நிரையுடைய ஏர் வாழ்நர்.

மன்னர்கள் பலரும் குளங்கள் கட்டி நீர்ப்பாசனம் பெருக்கினர். கரிகாலன் என்ற சோழமன்னன் திருச்சியில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்ட கல்லணை மிகப்பழைமையானது. உலகின் மிகப் பழைமையான திட்டமாகக் கருதப்படுகின்றது. கி.பி. 2ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மண்ணில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்றளவும் வியத்தகு சாதனையாகப் போற்றப்படுகின்றது. இது பற்றிச் சங்க கால நூல்களான பட்டினப்பாலை பொருநராற்றுப்படை ஆகியவை கூறும்.

தமிழையும், கலையையும் ஒன்றுபடுத்தி முத்தமிழ் என்று வகைப்படுத்தி இயல், இசை, நாடகம் என்று வளர்த்தெடுத்த பெருமை தமிழனுக்குரியது. மனத்திற்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் அளிக்கக்கூடிய வல்லமை இசைக்கு உண்டு. மிகப் பழைமையான பாரம்பரியம் இசைக்கு உண்டு. இறைவனை வழிபடப்பாடிய இசை பின்னர் மக்களை மகிழ்விக்கும் கலையாக மாறியது. சங்க இலக்கியத்தில் இசைக்கலைஞர்கள், ஆண்கள்  பாணர்கள் என்றும் பெண்கள் பாடினியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பெரும்பானாற்றுப்படை, சிறுபானாற்றுப்படை பாணர்களை முக்கியமாக வைத்து எழுதப்பட்டதாகும். பல தமிழரசர்கள் கோயில்களில் இசையுடன் பாட ஓதுவார்களை நியமித்தனர் என்று அறியக்கிடக்கின்றது. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்றோர் பதிகங்களைப் பற்றுடன் பாடியுள்ளனர்.

இசைக்கருவிகள் என்னும் போது பலவகையான இசைக்கருவிகள் இருந்தாலும் யாழிசைக்கு சிறப்பான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சுவாமி விபுலானந்தரின் யாழ் நூல் யாழ் பற்றிப் பல விபரங்களைக் கூறும். யாழ்பாடிப் பரிசு பெற்றதால் யாழ்;ப்பாணம் உருவான கதையும் கேள்விப்பட்டிருப்போம். வீணை, கொக்கரை, கொடுமுதா பற்றிக் கல்லாடம் கூறும். குழல் செய்வதைப் பற்றிப் பெரியபுராணம் கூறும். தமிழரின் மங்கல இசையான நாதஸ்வர இசையின்றி எந்த மங்கல நிகழ்ச்சியும் தொடங்குவதில்லை என்ற மரபும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் தமிழர் நாட்டுப்புறவியல் அல்லது தமிழர் நாட்டாரியல் பெரும்பாலும் வாய்மொழியாக வழங்கி வந்த பாடல்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள், நம்பிக்கைகள் ஆகியன கிராமத்து மக்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கின்றது எனலாம். தாலாட்டுப் பாடல், நடனப்பாடல், கும்மிப்பாடல், வாழ்த்துப்பாடல் போன்ற பலவகைப் பாடல்களையும் குறிப்பிடலாம்.

மற்றும் கோவில்கள் கிராமிய கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக விளங்குகின்றது எனலாம். கோவில்கள் கிராம மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்தி வந்திருக்கின்றன எனலாம். பக்திக் கலாசாரம் மட்டும் இல்லையென்றால் கிராமியக்கலைகள் என்றோ அழிந்திருக்கும் என்பது பலரின் கருத்தாகும்.

கொம்பூதிக் கொட்டடிச்சு குனிஞ்சு கும்மியடிப்போம்
கொல்லை போட்டுப்பாட்டுப்பாடி ஒயிலாட்டாம் நடிப்போம்
நம்மூரு அய்யனாருக்கு அர்ச்சனை பண்ணிப்போவோம்
எல்லாப் பேரும் நல்லாருக்க ஏகவிரதம் இருப்போம்

மிகப்பழைமை ஆடற்கலை மனிதனின் மகிழ்ச்சியின் வெளிப்பாடு என்று கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் கோவிலில் ஆடப்பட்டு பின்நாட்களில் சாத்திர ரீதியான கலையாக மாறியது ஆடல். நடனம், கூத்து என்று அழைக்கப்பட்டது. கூத்தைத் தொழிலாகக் கொண்டவர் கூத்தர் என்று அழைக்கப்பட்டனர். சிலப்பதிகாலத்தில் மாதவி தன் அரங்கேற்றத்தில் 11 வகையான நடனம் ஆடினாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாதவி ஆடிய குடக்கூத்து இக்கால கரக ஆட்டத்தை ஒத்திருப்பதாகக் கூறுவர்.

அத்துடன் தொல்காப்பியம் சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நாடகம் பற்றிய குறிப்புகள் உண்டு.

நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்

                           (தொல்
53. அகம்)

நாடக அரங்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சிலப்பதிகாலததில் ஒரு குறிப்புக் கூறும். அது நாடகம் பற்றி விரிவாக பல கோணங்களிலும் ஆராய்ந்தனர் என்பதை அறியலாம்.

அத்துடன் பண்டைக்காலம் முதற் கொண்டே சிற்பக்கலை தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டது. மண், மரம், கல், தந்தம் ஆகியவற்றால் சிற்பங்கள் செய்யப்பட்டன. தமிழர் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணத்தை இக்கலையில் புகுத்தியது என்பது வை. கணபதி அவர்களின் கூற்றாகும். படைப்புச் சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள் ஆகிய இரு வகைகளில் சிற்பங்கள் செய்யப்பட்டன.

சங்க காலத்தில் இருந்தே தமிழர்களிடையே ஓவியக்கலை வளர்ச்சி இருந்தது. பெரும்பாலும் சுவர் ஓவியங்களாகவே காணப்படுகின்றன. காஞ்சி, தஞ்சைப் பெரிய கோயில் சித்தன்னவாசல், திருமலைபுரக் கோயில் ஆகியன ஓவியக்கலைக்குச் சிறப்புச் சான்றாக விளங்குகின்றன.

12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை பாதீஸ்வரர் கோவில் அந்தக்காலக் கட்டிடக்கலை எவ்வளவு சிறப்பாகவும், நுட்பமாகவும் அமைந்திருந்தது என்பதற்குச் சான்றாக கூறலாம். மற்றும் தமிழ் நாட்டில் காணப்படும் ஆலயங்களின் கட்டிட வரலாறும் சிறப்புமிக்கதாக விளங்குவதைக் காணலாம்.

வீரத்தில் திறமை விளங்கியதைப் போலவே தமிழர்கள் வீரவிளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினார்கள். பழந்தமிழர்களிடையே காணப்பட்ட மஞ்சுவிரட்டு, கொல்லேறுதழுவுதல் ஆகியன தமிழர்கள் வீரத்தைப் பறைசாற்றுவதாக அமைந்து விளங்குகின்றன. வலிமை பொருந்திய காளை மாட்டை அடக்கி அதை வளர்த்து வரும் பெண்ணை மணம் புரிவது ஜல்லிக்கட்டு என்று கூறப்படும். தமிழ்நாட்டில் இது வழக்கத்தில் இருக்கிறது. இப்போது தடை செய்யப்பட்டுள்ளது. மற்றும் சிலம்பம், வர்மக்கலை, மல்லாடல் போன்றவையும் இன்றும் பாதுகாத்து வரும் தற்காப்புக் கலைகள் ஆகும்.

பழந்தமிழர் வாழ்வியல், மருத்துவம், தமிழர் நீர் மேலாண்மை ஆட்சித்திறன், போரியல் போன்ற பல மரபுசார் விடயங்கள் ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும் கலைநயத்துடன் உருவாக்கி மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பழந்தமிழர் பெரும் பேசுவனவாக அமையும் பல நிகழ்வுகளை இப்போது தமிழரிடமும் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழரின் பலவகையான சிறப்புக்களையும், அறிவு நுட்பங்களையும், பண்பாட்டுக் கலைக் கூறுகளையும், தொழில்நுட்பத் திறன்களையும், இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகின்றது.


 

sivananthanleela@yahoo.ca