கபிலரின் பாட்டுத் திறத்திற்குக் கட்டியம் கூறி நிற்கும் புறநானூற்றுப் பாடல்

முனைவர் இரா.மோகன்


“நவில்தொறும் நவில்தொறும் புறநானூறு என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. அதில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காணொளி போல் – ஒரு குறும்படம் போல் – சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. புறநானூறு, திருக்குறள் போன்ற ஒப்புயர்வற்ற நூல்களைப் படிக்கும் பொழுது நான் தமிழனாகப் பிறந்ததற்காகவும், தமிழ் கற்றதற்காகவும் பெருமைப்படுகிறேன்” (புறநானூறு: மூலமும் எளிய உரையும், ப.34) எனத் தமிழன் என்ற பெருமிக உணர்வு நெஞ்சில் ததும்பி நிற்க விதந்து மொழிவார் அமெரிக்கத் தமிழறிஞர் முனைவர் இர.பிரபாகரன். இத்தகைய சிறப்பும் சீரிளமைத் திறமும் செவ்வியும் வாய்ந்த புறநானூற்றில் கணியன் பூங்குன்றனாரைப் போல் ஒரே பாடலால் உலகப் புகழ் பெற்ற புலவரும் உண்டு; கபிலரைப் போல் பாடல் எண்ணிக்கையில் மட்டுமன்றி, பாடும் முறையிலும் தனித்தன்மை மிளிரும் புலவரும் உண்டு.

கபிலர் பாண்டிய நாட்டைச் சார்ந்த திருவாதவூரில் பிறந்தவர்; ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என மாறோக்கத்து நப்பசலையாரால் புகழாரம் சூட்டப் பெற்றவர். ‘கபில பரணர்’ என உம்மைத் தொகைக்கு உதாரணமாகத் தொன்றுதொட்டு வழங்கி வரும் தொடர், சங்க கால இரட்டையர் இவ்விரு புலவர் பெருமக்களும் ஆவர் என்பதைப் பறைசாற்றும். வேள் பாரியின் கெழுதகை நண்பரான கபிலரின் தமிழ்க் கொடை நனி சிறந்தது. பாரியின் மறைவுக்காக இவர் உற்ற துயரும் பாரி மகளிர்க்காக இவர் பட்ட பாடும் சொற்களில் வடிக்க இயலாதவை. ‘குறிஞ்சிக்குக் கபிலர்’ என்பது அவர்தம் குறிஞ்சி நிலப் பற்றினையும் புலமையையும் புலப்படுத்தும்.

ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் உயர்வினை எடுத்துரைக்கும் வகையில் கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டு பத்துப்பாட்டில் இடம்-பெற்றுள்ளது. அகுதை, இருங்கோவேள், ஓரி, செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோன், வையாவிக் கோப்பெரும் பேகன், வேள் பாரி ஆகியோர் இவரால் சிறப்பித்துப் பாடப்பெற்ற வள்ளல்களும் வேந்தர்களும் ஆவர்.

சேரமான் கடுங்கோ வாழியாதனைக் குறித்து கபிலர் இயற்றிய பாடல்கள் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தாக இடம்பெற்றுள்ளன. இவரது பாடல்களால் பெருமகிழ்ச்சி அடைந்த சேரமான் கடுங்கோ வாழியாதன், நன்றா என்னும் குன்று ஏறி நின்று தன் கண்ணிற்கு எட்டிய இடமெல்லாம் இவருக்குப் பரிசாக அளித்தது மட்டுமன்றி, நூறாயிரம் பொற்காசுகளும் தந்தான் எனப் பதிற்றுப்பத்து ஏழாம் பத்தின் பதிகத்தால் அறிய முடிகின்றது. பதிற்றுப் பத்தில் மட்டுமன்றி, புறநானூற்றிலும் சேரமான் கடுங்கோ வாழியாதனைப் பற்றி ஓர் அருமையான பாடலைப் பாடியுள்ளார் கபிலர். அப்பாடல் வருமாறு:


“வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சால் பொறாஅது
இடம்சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்

கடந்துஅடு தானைச் சேர லாதனை

யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்?
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்

பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே!”


பெரிய வட்ட வடிவமான பாதையில் விரைந்து செல்லும் கதிரவனே! உலகைக் காக்கும் மன்னர்கள் பலரும் வழிபட்டு, பணிந்து நடக்க, இன்பம் நுகர்தலை  விரும்பி, ‘இவ்வுலகம் அனைவருக்கும் பொது’ என்னும் சொல்லைப் பொறுக்காமல், தன் நாட்டின் இடம் சிறியது என்ற எண்ணத்தால் தூண்டப்பெற்று, ஊக்கமுடைய உள்ளத்தையும், பொருளைப் பாதுகாக்காமல் வழங்கும் கொடையையும், பகைவரை எதிர்நின்று வெல்லும் படையையும் உடையவன் சேரமான் கடுங்கோ வாழியாதன். ஞாயிறே! உனக்குப் பகல், இரவு என்ற பொழுது வரையறை உண்டு; பகல் முடிந்ததும் திங்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடி மறைவாய்; ஒருநாள் போல் இல்லாமல் தெற்கும் வடக்கும் ஆகிய இடங்களில் மாறி மாறி வருவாய்; மலைக்கு அப்பால் சென்று மறைந்து விடுவாய்; அகன்ற, பெரிய ஆகாயத்தில் பகலில் மட்டும் பல கதிர்களைப் பரப்பி விளங்கும் நீ, சேரமான் கடுங்கோ வாழியாதனுக்கு எவ்வாறு நிகர் ஆவாய்?” என்பது இப் பாடலின் தெளிவுரை.

இப் பாடலில் கபிலர் சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கதிரவனோடு ஒப்பிட்டுக் காட்டுவார் போலக் கதிரவன் சேரமானோடு இன்னின்ன வகைகளால் ஒவ்வாது இருத்தலைச் சுட்டிக்காட்டி, பழிப்பது போலப் பாராட்டி இருக்கும் திறம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

“சேரலாதனது ஒளி, இரவு பகலென வரையறையின்றி எக்காலத்தும் திகழும் என்றும், ‘கடந்தடு தானை’யை உடையன் ஆதலால், இவன் பிறர்க்குப் புறங்கொடுத்தல் இலன் என்றும், போரில் வஞ்சிக்கும் இயல்பிலன் ஆதலால், இடமாறுதலும், பகைவர் படைக்கு மாறுதலும் இவன்பால் இல்லை என்றும், அத்தகிரியில் மறைந்தொளிக்கும் ஞாயிறு போலாது எங்கும் தன் புகழே விளக்க மிக்குத் தோன்றுகின்றான் என்றும், விண்ணும் மண்ணும் தன் புகழே பரப்பி விளங்குகின்றனன் என்றும் சேரலாதன் மிகுதி கூறியதாகக் கொள்க” (புறநானூறு: மூலமும் உரையும், முதற்பகுதி, ப.24) என இப் பாடலில் துலங்கும் நுண்ணிய நயத்தினை எடுத்துக்காட்டுவர் உரை வேந்தர் ஔவை சு.துரைசாமிப் பிள்ளை.

‘ஞாயிறு அனையைநின் பகைவர்க்கு, திங்கள் அனையை எம் அனோர்க்கே’ (புறநானூறு, 59) என்றாற் போல் பாட்டுடைத் தலைவனான மன்னனைப் புலவர்கள் பாடிச் செல்வதே பெரும்பான்மையான வழக்கு; மரபு. இதில் இருந்து மாறுபட்டு, வித்தியாசமான முறையில் பழிப்பது போல் புகழ்தல் என்னும் உத்தியைக் கையாண்டு கபிலர் இப் புறப்பாடலை இயற்றியிருக்கும் பாங்கு பயில்வோர் நெஞ்சை அள்ளுவதாகும். கபிலரின் பாட்டுத் திறத்திற்குக் கட்டியம் கூறி நிற்கும் அழகிய, ஆற்றல் சான்ற புறநானூற்றுப் பாடல் இது!.


முனைவர் இரா.மோகன்

முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை - 625 021.
eramohanmku@gmail.com