புதுக்கவிதையில் சொல் விளையாட்டு

முனைவர் இரா.மோகன்

ங்கிலம் – தமிழ் சொற்களஞ்சியம் ‘Pun’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகராகச் ‘சிலேடை’, ‘சித்திரப் பேச்சு’ என்னும் இரு பொருட்களைத் தந்துள்ளது. இன்றைய புதுக்கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் இச் சிலேடையை – சித்திரப் பேச்சினை – சொல் விளையாட்டினை – எங்ஙனம் கருத்துச் செறிவுடனும் கலை நயத்துடனும் பயன்படுத்தியுள்ளனர் என ஈண்டுக் காணலாம்.

கவிக்கோவின் கண்ணோட்டத்தில் சிலப்பதிகாரம்

செவ்விய சிலேடை நயமும் மெல்லிய நகைச்சுவைத் திறமும் ஒருங்கே மிளிரும் வண்ணம் சொல் விளையாட்டு நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். அவரது ‘நேயர் விருப்பம்’ தொகுப்பில் ‘சித்திர மின்னல்கள்’ பகுதியில் இத்தகைய சொல் விளையாட்டின் ஆட்சி சிறப்பாக இடம்-பெற்றிருக்கக் காணலாம்.

கவிக்கோ அப்துல் ரகுமானின் கண்ணோட்டத்தில் சிலப்பதிகாரம்,

“பால் நகையாள் வெண்முத்துப்
பல் நகையாள் கண்ணகிதன்
கால் நகையால் வாய்நகை போய்
கழுத்து நகை இழந்த கதை.”

இங்கே ‘நகை’ என்ற சொல்லை ஐந்து முறை கையாண்டு கவிஞர் செவ்விய நகையுணர்வினைத் தோற்றுவித்திருப்பது கண்கூடு. கண்ணகி பால் போன்ற கள்ளங்கரவு இல்லாத, சூதுவாது அறியாத நகையாள் – வெண்முத்துப் போன்ற பல் வரிசையை உடைய நகையாள், அவள் தன் கால் நகையால் – சிலம்பினால், வாய் நகை – புன்னகை – போய், கழுத்து நகை – மங்கல அணியான தாலி – இழந்த கதையே சிலப்பதிகாரம் என்பது கவிக்கோ அப்துல் ரகுமானின் கருத்து.

நயத்தகு நகைச்சுவை உணர்வு

சொல் விளையாட்டின் மூலம் நயத்தகு நகைச்சுவை உணர்வினைத் தோற்றுவிக்க முடியும் என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கும் கவிதை ‘வீசுகின்றாள்…’ என்பது. ஓர் இளம்பெண் தன் மீது காதல் வயப்பட்ட இளைஞனுக்கு முதலில் ஜன்னல் வழியே பார்வையை வீசுகின்றாளாம்; அடுத்து, அஞ்சல் வழியாக அன்பையே வீசுகின்றாளாம்; தொடர்ந்து, நினைவில் நின்று புன்னகையை வீசுகின்றாளாம், மனைவியாகி இன்று இல்லறத்தில் வாழ்ந்து வரும் நிலையில் முரண்படும் போது நேரில் நின்று பாத்திரங்களை வீசுகின்றாளாம்!

“ ஜன்னல் வழியே
          பார்வையை வீசினாள்,
  அஞ்சல் வழி
          அன்பையே வீசினாள்,
  நினைவில் நின்று
          புன்னகை வீசினாள்,
  இன்றோ –
          நேரில் நின்று
          பாத்திரங்களை வீசுகின்றாளே!”

ஒரு வகையில் பார்த்தால் இளம்பெண்ணின் வீச்சில் தென்படுவதும் ‘பரிணாம வளர்ச்சி’ தான்! பார்வையை – அன்பை – புன்னகையை – பாத்திரங்களை எனக் கவிஞர் படிப்படியே ஓர் இளம்பெண் ஆடவனை நோக்கி வீசுவதை வளர்த்துக் கொண்டே செல்லும் பாங்கில் இயல்பான நகைச்சுவை உணர்வு வெளிப்-படுவதைக் காணலாம்.

தமிழனின் அவல நிலை

“விதம் விதமாய்
மீசை வைத்தோம்
வீரத்தை எங்கேயோ
தொலைத்து விட்டோம்!”

எனத் தமிழரின் நிலையை நினைத்து நெஞ்சு பொறுக்காமல் பாடும் கவிஞர் கந்தர்வன், ‘தமிழனுக்கு / வாயெல்லாம் பல் / பல்லெல்லாம் சொத்தை’ என்றும் ஒரு கவிதையில் கடுமையாகச் சாடுவார்.

“நீர் வளம் இருந்தும்
நில வளம் இருந்தும்
கேவலம் தானே
கிடைத்தது நமக்கு?”

என்ன வளம் இருந்தும், நமக்குக் கிடைத்தது என்னவோ கேவலம் தானாம்! ‘ஏழைக்குக் / கண்ணிலும் பூ  / காதிலும் பூ’ என்பது தான் இன்றைய சமூக நடப்பாம்!

‘ராட்டையோடு அல்ல, சாட்டையோடு…’

அமைதியை ஆராதனை செய்த காலம் எல்லாம் இன்று அடியோடு மலையேறி விட்டது; அதிரடியும் ஆரவாரமுமே இன்றைய சூழலில் துறைதோறும் கோலோச்சி வருகின்றன. இந்நிலையில் வாழ்நாளின் கடைசி மூச்சு வரை அகிம்சையையும் சத்தியத்தையும் போற்றிய காந்தியடிகள் மீண்டும் பிறக்க நேர்ந்தால் எப்படிப் பிறக்க வேண்டும் எனக் கற்பனை செய்கிறார் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன். அவரது கூற்று இதோ:

“மகாத்மா காந்தி
மீண்டும் பிறக்க வேண்டும்
ராட்டையோடு அல்ல,
ஒரு சாட்டையோடு”

மகாத்மா காந்தியே இன்று ராட்டையோடு பிறந்தால் மதிப்பு இருக்காது; ‘மயிலே, மயிலே இறகு போடு!’ என்று கெஞ்சினால் மயில் இறகு போடாது; நாலு போடு போட்டால், ஒழுங்கு மரியாதையாக மயில் இறகு போடும். மகாத்மா காந்தியும் இன்று மீண்டும் ஒரு சாட்டையோடு பிறந்தால், அவரது வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும்; மக்களும் அவரது பேச்சினைக் காதுகொடுத்துக் கேட்பார்கள்; பின்பற்றி நடக்கவும் தொடங்குவார்கள்.

‘மனிதர்களை நடுகிற விழா!’

“அரம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட் பண்பு இல்லா தவர்”

என்பது வள்ளுவர் வாய்மொழி. கண்ணதாசனும் தம் திரை இசைப் பாடல் ஒன்றில் ஆசை, கோபம், களவு கொள்பவனைப் ‘பேசத் தெரிந்த மிருகம்’ என்றும், அன்பு, நன்றி, கருணை உள்ளவனை ‘மனித வடிவில் தெய்வம்’ என்றும் குறிப்பிடுவார். இவ்விரு கவிஞர்களை அடியொற்றி கவிஞர் மு.மேத்தாவும் ‘விழாத விழா’ என்ற தலைப்பில் ஒரு நல்ல கவிதை படைத்துள்ளார்.

“இங்கே
மரம் நடு விழாக்களை
நடத்த வேண்டாம்…”

எனத் தொடங்குகின்றது கவிதை. கவிஞர் ஏன் இப்படிச் சொல்கிறார் என்னும் ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் கவிதையை மேலே தொடர்ந்து படிக்கிறோம்.

“இனிமேல்
மனிதர்களை நடுகிற
விழாக்களை நடத்துவோம்”


எனப் பறைசாற்றுகின்றார் கவிஞர்.

“இவர்களை
விட்டு வைப்பதை
விட
நட்டு வைப்பதே நல்லது.”

எனக் கவிதையை முடிக்கும்போதுதான், ஆழ்ந்திருக்கும் கவியுளம் மெல்லப் புலனாகத் தொடங்குகின்றது. மனிதருள் சில பேரை ‘விட்டு வைப்பதை விட’, ‘நட்டு வைப்பதே நல்லது’ என்னும் சொல் விளையாட்டில் வெளிப்படும் அங்கதக் குறிப்பு – நகைச்சுவைத் திறம் – அழுத்தமானது; ஆழமானது.

ஆழ்ந்த அவலத்தில் பிறக்கும் நகைச்சுவை

எப்போதும் இன்பத்தில் இருந்து தான் நகைச்சுவை பிறக்க வேண்டும் என்பது இல்லை; துன்பத்தில் இருந்தும் நகைச்சுவை தோன்றலாம்; வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பத்தைக் கூட புண்படுத்த வந்ததாக அல்லாமல், நம்மைப் பண்படுத்த வந்ததாகக் கருதி நகைமுகத்தோடு வரவேற்கலாம். ‘காரண காரியம்’ என்னும் தலைப்பில் கவிஞர் வாலி படைத்துள்ள கவிதை ஒன்று ஒட்டுமொத்தக் குடும்பத்தின் அவலத்தினை இரண்டே சொற்களில் இரத்தினச் சுருக்கமாக இப்படி எடுத்துரைக்கின்றது:

“ அம்மா –
  அக்காள் –
  அண்ணன் –
  தம்பி –
  நான் …
  அனைவருமே –
  பீடி சுற்றுகிறோம்;
  அப்பா –
  ஊரைச் சுற்றுவதால்!”

அம்மா, அக்காள், அண்ணன், தம்பி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே பீடி சுற்றிப் பிழைப்பை நடத்தி வருகிறார்களாம்! காரணம் என்ன தெரியுமா? பொறுப்பாக இருக்க வேண்டிய அப்பா – குடும்பத் தலைவர் – மனம் போன போக்கில் ஊரைச் சுற்றித் திரிவதாலாம்! ‘அனைவரும் – பீடி சுற்றுகிறோம்; அப்பா – ஊரைச் சுற்றுவதால்’ என்னும் முத்தாய்ப்பான சொல் விளையாட்டின் அடிப்படையில் கவிதையைக் கட்டமைத்துள்ளார் கவிஞர் வாலி.

‘சாகு(ம்)படி ஆனது!’

திறனறிந்து சொற்களை ஆளுவதில் – தேர்ந்த சொற்களை வைத்து சுவையான விளையாட்டு நடத்துவதில் – வல்லவர் நெல்லை ஜெயந்தா. ‘தஞ்சை’ என்னும் தலைப்பில் பாடிய ஒரு குறுங்கவிதையில், அவர் தமிழக உழவர்களின் நிலையை உருக்கமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்; படிப்பவரையும் உருகிடச் செய்துள்ளார்.

“அன்று
நஞ்சை உண்டு
சாகுபடி ஆனது
இன்று
நஞ்சை உண்டு
சாகும்படி ஆனது”

நெல்லை ஜெயந்தா இக் கவிதையில் ‘சாகுபடி’ என்றும், ‘சாகும்படி’ என்றும் ‘ம்’ எனும் ஓர் எழுத்தினை வைத்து தமிழக உழவர்களின் அவல நிலையினை உருக்கமாகப் புலப்படுத்தியுள்ளார்.

இங்ஙனம் இன்றைய புதுக்கவிதைகள் சமூக அவலங்களையும் நாட்டு நடப்புகளையும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் துயர்களையும் இரத்தினச் சுருக்கமான – கருத்துச் செறிவான – கலைநயம் மிக்க சொல் விளையாட்டின் வாயிலாக நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளன.




முனைவர் இரா.மோகன்

முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை - 625 021.
 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்