தமிழர் தந்தை ஆதித்தனார் அவர்கள்.

அவுஸ்திரேலியாவிலிருந்து செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராசா


(செப்டம்பர் மாதம்
27 ஆம் திகதி,  ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினமாகும்)

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவவேண்டும் என்று கனவுகண்டவர் மகாகவி பாரதியார். தேசமொன்று தமிழனுக்கு அமையவேண்டும் என்று கனவுகண்டவர் தமிழர் தந்தை ஆதித்தனார் அவர்கள். கனவுகாண்பதோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை. அந்தக் கனவை நனவாக்க வேண்டுமென்று நினைத்தார். காலமெல்லாம் அதற்காக உழைத்தார். தமிழ் ஆளவேண்டுமென்று தன் வாழ்நாளெல்லாம் போராடினார்.

நீதிக்கு முன்பு நிலைக்களனாகி நிலைத்த தமிழ்க் குலத்தை
வீதிக்குள் விட்டு விரட்டியடித்த விதியை நினைத் தழுதான்
மோதிக் குலைந்த வடதிசையாளர் முகத்தில் அறைந்து வைத்தான்
ஆதித்த வேங்கை அவன்புகழ் ஆயிரம் ஆயிரம் என்றுரைப்பேன்


என்று தமிழர் தந்தை ஆதித்தனார் அவர்களின் புகழைப் பாடுகிறார் உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தன் அவர்கள்.

1905 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கிழக்குப் பகுதியிலே கடற்கரையை அண்டியுள்ள காயாமொழி என்கின்ற கிராமத்தில், வழக்கறிஞர் சிவந்தி ஆதித்தருக்கும், கனகம் அம்மையாருக்கும் பிறந்தவர் ஆதித்தனார் அவர்கள். பெற்றோரால் பாலசுப்பிரமணியம் என்று பெயர் சூட்டப்பட்டார். அப்புலிங்கம் என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

திருச்சி ஜோசப் கல்லூரியிலே (எம்.ஏ) முதுமாணிப் பட்டம் பெற்று, பின்னர் இலண்டன் சென்று அங்கே சட்டமும், பொருளியலும் கற்றார். பாரிஸ்டராக பட்டம் பெற்றார். சிங்கப்பூரிலே எட்டு ஆண்டுகள் வழக்குரைஞராகத் தொழில் செய்து செல்வம் சேர்த்தார். இலண்டனில் படித்துக்கொண்டிருந்தபோதும், சிங்கப்பூரில் உழைத்துக்கொண்டிருந்தபோதும் பத்திரிகைத் துறையிலே தன்னை இணைத்துக்தகொண்டிருந்தார். தானும் சொந்தமாகப் பத்திரிகை நடாத்தவேண்டும் என்கின்ற தணியாத ஆசை அந்த நாட்களிலேயே அவரை ஆட்கொண்டுவிட்டது.

அதனால்தான்
1942 ஆம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்ததும் சற்றும் தாமதம் செய்யாமல் தந்தி என்னும் நாளிதழையும், தமிழன் என்ற வார இதழையும், வாரம் இருமுறை வெளிவரும் மதுரை முரசு என்னும் பத்திரிகையையும் ஆரம்பித்தார். தந்தியைப் பின்னர் தினத்தந்தியாகப் பெயர் மாற்றினார். தினமும் மக்களுக்கு விழிப்பூட்டினார். காலையில் எழுந்ததும் தினத் தந்தி, காப்பி குடிப்பது அதன்பிந்தி என்று சொல்லும் அளவுக்கு பத்திரிகை வாசிக்கும் பழக்கத்iதை பாமரமக்களிடம் பரவச் செய்தார், பட்டி தொட்டியெங்கும் உலவச் செய்தார். மக்களிடம் பகுத்தறிவு நிலவச் செய்தார்.

மெத்தப் படித்தவர்களும், மேட்டுக் குடியினரும் மட்டுமன்றி நாட்டிலுள்ள பாமரமக்கள் அனைவருமே அரசியல் அறிவுபெறுவதும், அறிவியல் தெளிவு பெறுவதும் அவசியமானது என்பது ஆதித்தனார் அவர்களது கருத்தாகும். அதற்கேற்றவாறு எளிய நடையில், இனிய தமிழில் பத்திரிகையில் எழுதினார். எல்லோரையும் அவ்வாறே எழுதச்செய்தார்.

அதனால்தான், ''மாடியில் வாழ்வோர் மட்டும் மனதுக்குள் படித்துப் பார்க்கும்
ஏடுகள் நிறைந்த நாட்டில் ஏழைக்கும் கல்விதந்தவர்''


என்று கவியரசு கண்ணதாசன் ஆதித்தனார் அவர்களுக்குப் புகழாரம் சூட்டினார்.

சிங்கப்பூரிலே வழக்கறிஞராகத் தொழில் புரிந்து தேடிக்குவித்த பெருஞ் செல்வத்தையெல்லாம், தங்கத் தமிழ்மொழிக்குத் தனியரசு அமையவேண்டுமென்பதற்காக, எங்கும் தமிழினத்தின் தலை நிமிரவேண்டும் என்பதற்காகத் தண்ணீராய்ச் செலவு செய்தார். இலட்சம் இலட்சமாக ஈட்டிய பொருளை இலட்சியத்திற்காக ஈந்தளித்தார்.

1937 ஆம் ஆண்டிலேயே தனித்தமிழ்நாடு என்னும் கருத்தை வெளியிட்டவர் ஆதித்தனார் அவர்கள். அந்தவகையில் தமிழ்நாடு, தமிழ் அரசு என்ற கோரிக்கைகளுக்கு அவரே முன்னோடியாவார்.
1942 ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்த தமிழன் இதழிலே,

'தமிழ்பெரிது, தமிழ் இனம் பெரிது, தமிழ்நாடுபெரிது என்பது நமது கொள்கை, தமிழ்மொழி, தமிழ் இசை இவற்றை வளர்க்க வேண்டும் என்பது நமது கொள்கை. நாலுகோடித் தமிழ் மக்களுக்கும் தகுந்த சம்பளத்தில் வேலை கொடுக்கக்கூடிய தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவேண்டும் என்பது நமது கொள்கை. இந்நாட்டில் ஏழை இல்லை, பிச்சைக்காரன் இல்லை என்ற நிலையைக் கொண்டுவரவேண்டும் என்பது நமது கொள்கை.

'அந்நியர்களுக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் ஆதிக்கம் ஒழியவேண்டும் என்பது நமது நோக்கம். துண்டுபட்டுக் கிடக்கும் தமிழ்நாடு ஒன்றுபடவேண்டும் என்பது நமது நோக்கம். தமிழருக்கு ஆழும் உரிமைவேண்டும், அரசுவேண்டும், நாடுவேண்டும் என்பது நமது நோக்கம். தமிழர்கள்கூடி ஏற்படுத்தும் அரசு வளர்ந்து பிறநாட்டாரும் மதிக்கும் ஒரு வல்லரசாக வேண்டும் என்பது நமது நோக்கம்'
என்று தெளிவாக ஏழுதினார். திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஆதலினாலேதான் பின்னாளில் கவிஞர் காசி. ஆனந்தன் அவர்களது 'ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆளநினைப்பதில் என்ன குறை' என்ற கவிதை வரிகளை ஒவ்வொரு மேடையிலும் உரத்துக் கூறினார். காசி. ஆனந்தன் அவர்களுக்கு உணர்ச்சிக் கவிஞர் என்ற பட்டத்தை வழங்கியவரும் ஆதித்தனார் அவர்களே.

'உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு' என்பதை வெறும் முழக்கமாக மட்டுமன்றித் தன் வாழ்வில் வழக்கமாகவும்கொண்டு கடைசிவரை தமிழுக்கே தன்னை அர்ப்பணித்த உத்தமர் ஆதித்தனார் அவர்கள்.
'வெள்ளம்போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம், அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்று, உடலினால் பலராய்க் காண்பர்' என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கருத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதும், விரிந்த உலகெல்லாம் பரந்து வாழ்கின்ற தமிழர்களை ஒன்றாக இணைப்பதும் நோக்கமாகக் கொண்டு அவரால் உருவாக்கப்பட்டதே நாம்தமிழர் இயக்கம். தமிழர்களை ஒருங்கிணைத்து தனித்தமிழ்நாடு காண்பதே நாம் தமிழர் இயக்கத்தின் இலட்சியமாகும்.

தமிழ்ப்பேரரசு மீண்டும் தழைக்க வேண்டும், இமயத்திலே பொறிக்கப்பட்ட தமிழ்க்கொடி மீண்டும் பறக்க வேண்டும், தமிழனின் கப்பல்கள் உலகை வலம்வரவேண்டும், தமிழின் ஓசை உலகெங்கும் ஒலித்திடவேண்டும், செந்தமிழ் செழித்த பண்டைய பொற்காலம் மீண்டும் அமைந்திட வேண்டும் என்பது ஆதித்தனார் அவர்களின் இலட்சியக் கனவாகும்.

1958 ஆம் ஆண்டு முதல்முறையாக சுதந்திரத் தமிழ்நாடு கோரும் மாநாடு மன்னார்குடியிலே நடாத்தப்பட்டது. தந்தை பெரியார் அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்கள். தமிழினத்தின் ஒருமித்த இலட்சியம் சுதந்திரத் தமிழ்நாடுதான் என்பதை உலகநாடுகளுக்குத் தெரிவிக்கும்பொருட்டு, இந்திய தேசப்படத்தை எரிக்கின்ற போராட்டம் நடாத்தப்பட வேண்டும் என்று அந்த மாநாட்டிலே தீர்மானம் செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி தேசப்படத்தை எரிக்கும் போராட்டம் தமிழ் நாடெங்கும்
1960 ஆம் ஆண்டு ஜூன்மாதம் 5 ஆம் திகதி நடாத்தப்பட்டது. அதற்காகத் தந்தை பெரியார் அவர்களும், ஆதித்தனார் அவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள். கோவையில் தனித்தனி சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டார்கள்.
தமிழ்நாட்டிலுள்ள தமிழ்மக்கள் சுதந்திரம்பெற்றவர்களாக இருந்தால்தான் இலங்கையிலே தமிழ்மக்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும், உலகநாடுகளிலே தமிழர்கள் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து வாழமுடியும் என்றும் ஆதித்தனார் அவர்கள் முழங்கினார்கள்.

ஆங்கிலத்தினால்தான் தமிழர்கள் உயரலாம் னெ;று சொல்லிக்கொண்டிருந்த காலத்திலே, ஆங்கிலத்தாலேதான் தமிழன் தாழ்ந்துகொண்டிருக்கிறான் என்று ஆதித்தனார் அறிவுறுத்தினார். ''இன்னுமொருமொழி தன் தாய்மொழியைவிட உயர்வானது என்ற எண்ணம்; மனதில் எழுந்தபோதே தமிழன் தாழ்ந்துபோனான்'' என்றார் அவர்.

ஆதித்தனார் அவர்கள் ஆங்கிலத்தில் நிகரற்ற புலமை பெற்றிருந்தும் கூட
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற எண்ணம் கொண்டவர், எண்ணத்தைச் செயலாக்கியவர், தமிழராகவே வாழ்ந்தவர்.

தமிழ், தமிழ், தமிழ் என்ற தணியாத சிந்தனையைத் தமிழ் மக்களின் சிந்தைகளில் பதிப்பதற்கு அயராத முயற்சிகளை அவர் எடுத்தார்.

தான் அமைத்த இயக்கத்திற்கு நாம் தமிழர் இயக்கம் என்று பெயரிட்டார். இயக்கத்தின் பரப்புரை ஏட்டுக்குத் தமிழ்க்கொடி எனப் பெயரிட்டார். இயக்கத்தின் தலைமைச் செயலகத்திற்கு தமிழன் இல்லம் என்று பெயர் சூட்டினார். தமிழன் என்ற பெயரில் வாரப் பத்திரிகையை வெளியிட்டுக் காட்டினார். நாம் தமிழர் இயக்கத்தின் துணை அமைப்புக்களாக இளந்தமிழர் மன்றம், மகளிர் தமிழ் மன்றம் என்பவற்றைக் கூட்டினார்.

அவர் எழுதிய நூலின் பெயர் ''தமிழ்ப்பேரரசு''.
அவர் வெளியிட்ட பாரதிதாசனின் பாடல்களின் தொகுப்பு நூலின் பெயர் 'தாயின் மேல் ஆணை'.
தமிழ்நாட்டு வணிகர்களை ஒருங்கிணைத்து ஏற்படுத்தப்பட்ட அமைப்புக்கு அவர் இட்ட பெயர் 'தமிழ் வணிகர் சபை'.

காவடியாட்டம், கரகாட்டம் முதலிய பாரம்பரியத் தமிழ்க் கலைகளுக்கு 'தமிழ்க்கலையாட்டம்' என்று பொதுப்பெயரிட்டு அழைத்தார். அக்கலைகளுக்குப் புத்துயிரூட்டி அவற்றை நாடெங்கும் நடாத்தி வளர்த்தார்.

சடுகுடு ஆட்டத்திற்கு 'தமிழர் விளையாட்டு' என்று பெயரிட்டு, பட்டி தொட்டிகளிலெல்லாம் சடுகுடுப் போட்டிகளை நடாத்தி இளைஞர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியத்தை அறிவுறுத்தினார்.

ஏழை மக்களுக்காகக் கோழிப் பண்ணைகளை அமைத்துக் கொடுத்து அவற்றுக்கும் 'தமிழன் கோழிப்பண்ணை' என்றே பெயரிட்டார்.

தமிழ்நாட்டில் கிடைக்கப்பெறும் மரக்கூழைக்கொண்டு தயாரிக்கப்படும் காகிதத்திற்கு 'தமிழன் தாழ்' என்று பெயரிட்டு அழைத்தார்.

தமிழ்நாட்டு நெசவாளர்களால், தமிழ்நாட்டில் செய்யப்பட்ட இயத்திரத்தின் மூலம் தமிழ்நாட்டுப் பஞ்சைக் கொண்டு தமிழன்துணி ஆக்கப்பட்டது. நாம் தமிழர் இயக்கத் தொண்டர்களின் சீருடைகள் தமிழன் துணியிலேயே தைக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்ட ஆதித்தனார் அவர்கள் அதற்காகவே ஈரோட்டில் தமிழன் துணித் தொழிற்சாலையொன்றையும் ஆரம்பித்தார்கள்.

தமிழ்நாட்டின் சூயஸ் கால்வாயாக சேதுசமுத்திரம் விளங்கும் என்பதை
1942 ஆம் ஆண்டிலே விரிவாக விளக்கிய ஆதித்தனார் அவர்கள், 'தமிழன் கால்வாய'; என்று அதற்குப் பெயர்சூட்டி அழைத்தார்.
சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி ''தமிழ் நாடு'' என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று முதன்முதலில் சட்டசபையில் கோரிக்கை விடுத்தவர் ஆதித்தனார் அவர்களே. அக்கோரிக்கையை நிறைவேற்றும்படி தமிழ்நாடெங்கும்
15 ஆயிரம் கையெழுத்துக்களைப்பெற்று அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களிடம் 1960 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 4 ஆம் திகதி கையளித்தார்.

ஆனால் என்னே விந்தை! ஆதித்தனார் அவர்கள் சபைமுதல்வராகப் பதவியில் அமர்ந்தபின்னர்தான் தமிழ் நாடு பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை மாகாணம் என்பதை தமிழ் நாடு என்று பெயர்மாற்றம் செய்யும்படி
1960 ஆம் ஆண்டு சட்டசபையில் கோரிக்கை விடுத்த அதே ஆதித்தனார்தான், 1967 இல் பேரறிஞர் அண்ணாவினால் முன்மொழியப்பட்ட தமிழ்நாடு பெயர்சூட்டும் தீர்மானத்தை சபை முதல்வராயிருந்து அங்கீகரிக்கின்ற பேறுபெற்றார் என்றால் ஆதித்தனார் அவர்களின் அரிய தமிழ்ப்பணிக்கு அன்னைத் தமிழ் அளித்த வெகுமதியென்றே அதை நாம் கொள்ள வேண்டும்.

1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையின் சபை முதல்வராகப் பதவியேற்ற ஆதித்தனார் அவர்கள் ' அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற திருக்குறளைக் கூறியே சபை நடவடிக்கைகளைத் தொடங்கினார். சபை நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழிலேயே நடாத்தினார். அன்றுமுதல் சட்டசபைக் கூட்டங்கள் திருக்குறள் ஒன்றைக் கூறியே ஆரம்பிப்பது வழமையாயிற்று.

அதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த சட்டப்பேரவை விதிகளை ஆதித்தனார் அவர்கள் தானே முன்னின்று தமிழாக்கம் செய்து 'தமிழ்நாடு சட்டப் பேரவை நடைமுறை விதிகள்' என்ற நூலை ஆக்கி, பெயரால் மட்டுமன்றிச் செயலாலும் தமிழ்நாடு மலரச் செய்தார்.

பேரவைத் தலைவரான ஆதித்தனார் அவர்களைப் பாராட்டி நடாத்தப்பட்ட கூட்டமொன்றில், பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றும் போது, 'சட்டசபை நடவடிக்கைகளை இப்பொழுது தமிழிலேயே நடாத்தி வருகிறார் ஆதித்தனார். இதைப் பார்க்கும்போது சட்டசபையில் தமிழ்த் தாயே வந்து பாடம் சொல்லிக்கொடுப்பதுபோல இருக்கிறது' என்று பாராட்டினார். 'ஆதித்தனார் சபாநாயகராக இருப்பதால், சட்டசபையில் தமிழ்மணம் கமழ்கிறது. தமிழ்த்தாய் புன்னகை பூக்கிறாள். தமிழர்கள் உவகை கொள்கிறார்கள்' என்று புகழாரம் சூட்டினார் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

ஆதித்தனார் அவர்கள் மிகப்புகழ் பெற்ற வழக்குரைஞராகப் பொருள்குவித்தவர். மேலவை உறுப்பினராகவும், சட்டசபை உறுப்பினராகவும் பல்லாண்டுகள் பணியாற்றியவர். அவைத்தலைவராகவும், கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் அரசியலில் பதவிகளை வகித்துத் தனது அப்பழுக்கற்ற சேவையினால் அந்தப் பதவிகளுக்கே பெருமை சேர்த்தவர். பத்திரிகைத் துறையில் அதிபராகவும், ஆசிரியராகவும் பல்லறிஞர்களும் வியந்து போற்றும் வகையில் கொடிகட்டிப் பறந்தவர். பாமர மக்களிடையேயும் வாசிக்கும் பழக்கத்தை ஊட்டியவர், பகுத்தறிவைக் கூட்டியவர். முதலாளியாக இருந்து கொண்டே தோழிலாளர்களின் தோழனாக வாழ்ந்தவர். ஏழைகளின் ஏழ்மை அகல எத்தனையோ திட்டங்களை வகுத்தவர், இரவுபகலாக உழைத்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஆதித்தனார் அவர்கள், தன் சொந்தப் பொருளையெல்லாம் தமிழுக்காக ஈந்து, சொல்லாலும் செயலாலும் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் அல்லும்பகலும் அரும்பணியாற்றித் தமிழராகவே வாழ்ந்த தமிழ்த் தாயின் தவப் புதல்வர். காலம் தமிழ் இனத்திற்கு அளித்த தமிழ்க் காவலர் ஆதித்தனார் அவர்கள்.

தமிழ் மொழி உலகெங்கும் பரவவேண்டும், தமிழ் இனம் உலகத்தில் தனித்துவத்துடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்று கனவு கண்டதுடன் மட்டும் நில்லாது, தனது வாழ்நாள் முழுவதையும் அந்த இலட்சியத்துக்காகவே அர்ப்பணித்து அணுவளவும் சுயநலமின்றி வாழ்ந்த தமிழ்த் தலைவர் ஆதித்தனார் அவர்களே என்றால் அதற்கு எதிர்வாதம் இருக்க முடியாது.

காலத்தினால் வந்த ஆதித்தனார்க்கொரு காவியம் செய்து வைப்போம்
நீலத்திரைக் கடல் போலக் கிளம்பிய நெஞ்சனை வாழ்த்தி வைப்போம்
வேலொத்த சொற்கள் முழக்கும் அருந்தமிழ் வீரன் வழி நடப்போம்
கோலத் தமிழ்மொழி வாழப்பிறந்தவன் கொள்கைக்கு உயிர் கொடுப்போம்


என்கின்ற உணர்ச்சிக் கவிஞரின் உறுதிமொழியைச் சிந்தையில் ஏற்று, ஆதித்தனார் அவர்களின் இலட்சியக் கணவை நனவாக்கப் பணிசெய்வோம், அன்னைத் தமிழுக்கு அணிசெய்வோம் என்று கூறி அமைகின்றேன்.

வாழ்க தமிழ்! வாழ்க ஆதித்தனார் புகழ்!


srisuppiah@hotmail.com