அற இலக்கியங்களில் மக்களின் வாழ்வியல் நெறிமுறைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா

ல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தக் குடியாகக் கருதப்படும் தமிழரின் வாழ்க்கையைப் பேசுவதாக அற இலக்கியங்கள் அமைந்துள்ளன. பண்டையக் கால மக்கள் முதல் தமிழர்கள் அறநெறிகளைத் தங்கள் வாழ்க்கையில் நெறி பிறழாமல் பின்பற்றி வருகின்றனர். அதனால் மனித நேயம் மக்களிடையே தொடர்ந்து மலர்ந்து வருகிறது. மனிதன் அகந்தையற்றவனாகவும் பண்புடையனவாகவும் அறிவில் சிறந்தவனாகவும் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். அதற்கு அறக்கருத்துக்கள் சிறந்த வழித்துணையாக அமைகின்றன. பண்டையத் தமிழர்களுக்கு அறம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியன்று, வாழ்வு முற்றுமே அறம் என்ற கொள்கையைத் தம் வாழ்வில் கடைபிடித்தனர்.

அறநெறி
மனிதன் தன் வாழ்வில் செய்ய வேண்டியது அறச்செயல் ஆகும். அறம் என்பது மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் செய்யப்படுவதே. அறம் செய்தலால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். வாழ்நாள் கூடும். அறச் செயல்களைச் செய்வதால் மதிப்பும் செல்வமும் வரும். நல்வழியில் செல்ல வேண்டும். பிறருக்குத் தீங்கு செய்தல் கூடாது என பல அறநெறிகளை அன்று முதல் இன்று வரை நம் சான்றோர் குறிப்பிடுவர். அறத்தினால் வாழ்வுக்கு நன்மை விளையும் என்பதை,

'சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு'-
திருக்குறள், குறள்:
31.

என வள்ளுவர் அறத்தைக் குறிப்பிடுகிறார்.
அறம் என்ற சொல் தொல்காப்பியர் காலம் தொட்டே வழக்கிலிருந்துள்ளது என்பதை,

'அறக் கழிவுடையன பொருட்பயன்பட வரின்'
தொல்காப்பியம், பொருளதிகாரம், நூற்பா:.
25.

என தொல்காப்பியம் கூறுகிறது.

சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் அகத்தையும், புறத்தையும் பாடினாலும் அவற்றோடு அறத்தை இணைத்தே பாடியுள்ளன. அறநெறி இதுவென தெளிதல் வேண்டும் என்பதை ஐங்குறுநூற்றில்,

'அறநெறி இதுவென தெளிந்த' - ஐங்குறுநூறு, பா.எ
.375.

என தெளிவுபடுத்துகிறது.

ஒவ்வொரு மனிதனும் அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதை,

'அறங்கடைப்படா வாழ்க்கை' - அகநானூறு, பா.எ.
155.

என்று அகநானூறு சுட்டுகிறது.

தமிழர் வாழ்வில் அறம் பெற்றிருந்த பரந்த இடத்தை நற்றிணையில்,

'அறனுமன்றே ஆக்கமும் தேயும்' -நற்றிணை, பா.எ
.68.

என்று புலவர்கள், மக்கள் அறத்தோடு வாழ வேண்டும் என்பதை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் வலியுறுத்தினர்.

இளமையில் அறம் செய்தல்
ஒருவனுடைய வாழ்க்கைக்கு அறத்தை விட நன்மையானது வேறொன்றும் இல்லை. அதை மறந்து விட்டு இருப்பதை விட கேடு தருவது வேறொன்றும் இல்லை. அதனால் முடிந்தவரையில் நாள் தவறாமல் அறம் செய்து கொண்டே இருக்க வேண்டும். தான் செல்லக் கூடிய இடங்களிலெல்லாம் அறம் செய்தல் வேண்டும். இளைஞராக இருக்கிறோம் என்று நினையாமல், பொருள் இருக்கும் போதே மறைக்காமல் அறத்தைச் செய்யுங்கள். இப்போது இன்பங்களை அனுபவித்து வயது முதிர்ந்த பின் நல்லறங்களைச் செய்து கொள்வோம் என்று நினையாமல் பொருள் கிடைத்த போதே அறம் செய்ய வேண்டும் என்பதை,

'மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போர்தே கரவா – கறம் செய்ம்மின்
முற்றி யிருந்த கனிமொழியத் தீவளியால்
நற்காய் உதிர்த்தலும் உண்டு'
-நாலடியார், பா.எ.
38.

செல்வம் உள்ள போது இளமையிலேயே அறம் செய்து பயன் கொள்ள வேண்டும் என்று நாலடியார் வலியுறுத்துகிறது. பிற்காலத்தில் செய்து கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அவ்வப்போது அறம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்த அறமே அழிவு வரும் போது காக்கும் அழியாத துணை ஆகும் என்பதை,

'அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் போன்றாத் துணை'
குறள்.எண்..
36.

என வள்ளுவர் விளக்குகிறார்.

அறம் செய்வதற்குரிய நாட்கள்
தமிழரின் பண்பாட்டுக் கூறுகளில் சிறப்பிடம் பெறுவது விருந்து. திருமண நாள், திருவிழா நாள், பிதிரர் நாள், விழா நாள், வேள்வி நாள் ஆகிய நாட்களில் தவறாமல் அறம் செய்ய வேண்டும். அந்நாளில் வரும் விருந்தினர்க்கு உணவளிப்பதே சிறந்த அறமாகும் என ஆசாரக்கோவை வலியுறுத்துகிறது. இதனை,

'கலியாணம் தேவர்பிதி ; விழாவேள்வி என்று
ஐவகை நாளும் இகழாது அறம் செய்க
பெய்க விருந்திற்கும் கூழ்'
-ஆசாரக்கோவை, பா.எ
.48.

என இந்நூல் கூறுகிறது.

ஒளவையார் தம் நூலில், அறம் செய்வதற்கு ஆசைப்படு என்கிறார். இதனை,

'அறம் செய விரும்பு' - ஆத்திசூடி, பா.எ.1.

எனும் வரி விளக்குகிறது.

கருணை உடையவர்க்கு அறம் செய்தல் எளிது என்பதை,
'ஈரம் வெய்யோர்க்கு நசை கொடை எளிது'
-முதுமொழிக்காஞ்சி, பா.எ.
8:3.
என முதுமொழிக்காஞ்சி கூறுகிறது.

அறம் வலியுறுத்தும் திறம்
புண்ணியச் செயல்களைக் காட்டிலும் மேலான இன்பத்தைத் தருவது வேறு எதுவும் இல்லை. அப்புண்ணியச் செயல்களை அறியாமையாலும், கவனக்குறைவாலும், சோம்பேறித்தனத்தினாலும் மதிக்காமல், ஏற்றுக்கொள்ளாமல், பொருட்படுத்தாமல் மறந்து விடுவதைக் காட்டிலும் மேலான துன்பத்தைத் தரும் கெடுதல் வேறு எதுவும் இல்லை என்பதை,

'அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு'
-குறள்:.
32.

எனும் குறள் தெளிவுபடுத்துகின்றன.

இவ்வுலகில் ஒருவனுக்கு அறம் செய்வதைக் காட்டிலும் மிகுந்த செல்வம் இல்லை. அந்த அறம் செய்தலையே அவன் மறந்து போயின் அதனால் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். இதனையே,

'அறத்தைக் காப்பாற்றுபவனை அறம் காப்பாற்றுகிறது'
-மனுநீதி, பா.எ
.8.

என்றும்,

'அறத்தை அழிப்பவனை அறமே அழிக்கிறது'

-மனுநீதி, பா.எ.
18.

என்றும் மனுநீதி கூறுகிறது.

மென்மையான அருளிலிருந்து அறநெறி பிறக்கும். செல்வத்திலிருந்து அறமும் இன்பமும் பிறக்கும் என்பதை,

'கல்லிற் பிறக்கு கதிர்மணி காதலி
சொல்லிற் பிறக்கும் உயாம் தம் - மெல்லென்று
அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளிற் பிறந்து விடும்'
-நான்மணிக்கடிகை, பா.எ
.8.

என நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது.

அன்பு
வந்து போகும் அலைகளைத் தன்னுள் அடக்கி வாழும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் மனிதப் பிறவியானது மிகவும் அற்புதமான பிறவியாகும். இந்த மனித வாழ்க்கையானது சிறப்பாக அமைய ஊன்று கோலாக விளங்குவது மனிதனின் அன்பே. உடலும் உயிரும் இணைந்து செயல்படுவது போல அன்போடு இணைந்த வாழ்க்கை வாழ வேண்டும். சங்ககால மக்கள் அன்போடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு நம் சங்க இலக்கியங்களே சான்றாக அமைகின்றன. தமிழ் இலக்கியங்கள் அன்பு எனும் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்காட்டுகின்றன. அவ்வகையில் குடும்ப அமைப்பில் கணவன் - மனைவி அன்பு என்பது சரியான இலக்கை நோக்கி செல்லப் பயன்படுகிறது. கணவன் - மனைவி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பானது நிலமும் நீரும் இணைவதைப் போன்றதாகும். இதனை,

'செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே'


குறுந்தொகை, பா.எ.
40.

என்ற குறுந்தொகைப் பாடல் அடிகள் அதற்குச் சான்றாகின்றன. நிலத்தையும், நீரையும் பிரிக்க முடியாதது போல தலைவன் தலைவியிடத்தும், தலைவி தலைவனிடத்தும் செலுத்தும் அன்பையும் பிரிக்க முடியாது என சங்க இலக்கியப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன.

அன்பு வாழ்க்கை
ஆணோ, பெண்ணோ அன்பால் பிணைக்கப்பட்டு ஒழுகுதல் வேண்டுமேயன்றி அச்சத்தாலும் அவாவினாலும் ஒன்றித்து வாழ்தல் அடிமை வாழ்வு என்கிறார் வள்ளுவர். சங்கப்பாடல்கள் பல தலைவன் தலைவியரின் அன்பு வாழ்க்கையைக் கூறுகின்றன. கணவனின் இன்பத்தில் மட்டுமல்லாமல் துன்பத்திலும் இன்பம் காண்பவளே நல்ல மனைவி. இதைக் கம்பன்,

'அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு
துன்பம் துணையாக நாடின் அதுவலல்
தின்பமும் உண்டோ எமக்கு'
-கம்பராமாயணம், பா.எ
.6.

என்ற பாடல் சுட்டுகிறது.

தலைவன் பிரியும் போது தன்னையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய மனைவியிடம் தான் செல்லும் காடுகளின் இன்னல்களைக் கூறி கணவன் மறுக்கிறான். அதற்கு மனைவி தங்களுடன் இருக்கும் போது வரும் துன்பமும் எனக்கு இன்பமே என்று அவள் கூறுவதற்கு அடிப்படையாய் அமைவது கணவன் மீது கொண்ட அன்பே ஆகும். இதனை வள்ளுவர்,

'அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு'
- குறள்:
75.

என்று உலகில் இன்பமுற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பை விளக்கியுள்ளார்.

அன்பே அனைத்திற்கும் அறம்
மனித வாழ்வின் அடிப்படையே அன்பு. மண்ணில் வாழும் மாந்தரெல்லாம் மனிதரிடத்து மட்டுமின்றி அனைத்து உயிரினங்களிடமும் அன்புடையவர்களாய் வாழ வேண்டும். அன்பு இல்லாத மனிதன் இவ்வுலகில் வாழ்வதென்பது அரிதானதேயாகும்.
இதனையே வள்ளுவர்,

'அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு'
குறள்:
80.

என விளக்குகிறார். அன்பை வழியாகக் கொண்டு வாழ்பவனே உயிருள்ள மனிதனாவான். அன்பு இல்லாது வாழ்பவன் வெறும் எலும்புகளைப் போர்த்தியிருக்கும் தோலை உடைய உடம்பு மட்டுமே. அதாவது செத்த பிணத்திற்குச் சமமாவார்.

வாழ்வின் இன்பத்திற்கு அடிப்படையாக உள்ளது அன்பு ஆகும். அன்பு என்பது ஒருவர் நெஞ்சம் மற்றவர் நெஞ்சத்தோடு ஒன்றிக் கலப்பதாகும். உத்தமமான அன்பிற்குச் சேர்ந்து வாழ்தலும், கூடிப் பழகுதலும் ஏற்புடையது. அன்பு சுரக்கின்ற காலத்தில் அது இயல்பாகவே எழுந்து ஒருவரோடு மற்றவரைப் பிணித்துவிடும். இதனை,

'தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிதே'
-இனியவை நாற்பது, பா.எ.
27.

என்கிறார் பூதஞ்சேந்தனார். எவ்வித குற்றமும் இன்றி யாவர்க்கும் இரங்கி
அன்புடையவராயிருத்தல் வேண்டும் என கூறுகிறது.

அன்பு வெளிப்படுதல்
எல்லா உயிர்களிடத்தும் அன்பு நிறைந்தவர்களாக வாழ்வதே தமிழர் பண்பாகும். அன்பு இல்லையென்றால் இவ்வுலக வாழ்க்கையில்லை. அத்தகைய அன்பு எந்நேரத்திலும் வெளிப்பட்டு விடும். அன்பினை பிறர் அறியாத வண்ணம் அடைத்துவைப்பதற்குத் தாழ்பாள் எதுவும் கிடையாது. அன்புடையவர்கள் துன்பத்தினைக் காணுகின்ற போது அடைத்து வைத்த தாழ்பாளை உடைத்துவிட்டு கண்ணீராக வெளிக் கொண்டு வந்து விடுகிறது. இதனை வள்ளுவர்,

'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்'
குறள் :
71

என குறிப்பிடுகின்றார்.

எவ்வகையாலும் கொடுக்கக் கூடியதை மறைக்காது தரும் அன்பை விட மிக
இனிது வேறில்லை என்பதை,

'நச்சித்தற் சென்றாh ; நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிக இனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல்'

இனியவை நாற்பது, பா.எ.
27.

என இனியவை நாற்பது இயம்புகிறது

ஒழுக்கம்
மனித இனத்தின் நலத்திற்காகவும் முன்னேற்றத்திற்க்காவும் மனித சமுதாயம் வரையறுத்துக் கொண்ட நெறியே ஒழுக்கமாகும். ஒழுக்கம் என்னும் சொல், தான் ஒழுகுதலும், பிறரை ஒழுகுமாறு செய்தலும் என்ற இரு கருத்தையும் உணர்த்துவதாகும். மனிதனின் எண்ணத்திலும் செயலிலும் ஒழுக்கம் தேவை. ஒருவனுடைய ஒழுக்கத்தைப் பார்த்தே அவன் யார் என்று அறிய முடியும். குழந்தைப் பருவத்தினின்றே ஒழுக்கத்தைக் கடைபிடித்தால் வாழ்வில் மேன்மை அடையலாம். ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது என்பதை,

'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்'
-குறள்
: 131.

என குறள் கூறுகிறது.

தொகுப்புரை:

  • சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் தமக்கென சில பண்பாடுகளையும் வாழ்வியல் கூறுகளையும் பேணிக் காத்தவர்களாக இருந்தனர். நீதி நூல்களிலும் மனிதன் வாழ்வதற்குரிய வாழ்வியல் நெறிகள் இடம் பெற்றுள்ளன. இலக்கியங்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நோக்கில் வாழ்வியலை அறிமுகம் செய்கின்றன. மனிதன் தன் வாழ்வில் அறச்செயல்களைச் செய்ய வேண்டும் என இலக்கியங்கள் அறிவுறுத்துகின்றன.
     

  •  சங்க கால மக்கள் தங்களுக்கென்று அறங்களைப் பேணி காத்துள்ளனர். தன்னால் இயன்ற அளவு பிறருக்குப் பொருளை கொடுத்து ஈகை பண்பில் தலை சிறந்தவர்களாக வாழ்ந்தனர். மேலும் இல்லையென்று வருவோர்க்கு இருப்பதைக் கொடுப்பது தான் மிக உயரிய குணம் என அற நூல்கள் கூறுகின்றன.
     

  • கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கிணங்க சங்க கால மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அன்பில் சிறந்தவனாகவும் ஒழுக்கம் நிறைந்தவனாகவும் புகழுக்குரியவனாகவும் இன்சொல்லோடு நன்றியுள்ளவனாகவும் பொறுமையுடைய வனாகவும் இருக்க வேண்டும் என அற நூல்கள் வலியுறுத்துகின்றன.
     

  • வறுமையுற்றவர்க்கு கொடுத்தலே ஈகை. இருப்பவர்க்கு ஒன்றைக் கொடுப்பது ஈகையாகாது. பகுத்தறிவு கொண்ட மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை அற நூல்கள் வழி அறியமுடிகிறது.

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
149, ஹரிஸ்ரீகாடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர்
- 641 007
பேச
:098438 74545.

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்