கவிஞனும் பக்தனும்

முனைவர் பால. சிவகடாட்சம் B.Sc.Hons (Peradeniya), B.Ed (Toronto), Ph.D (London)



காகவி கம்பர் ஒரு வைணவர் என்கிறார்கள். திருமாலின் பத்து அவதாரங்களுள் ஒன்றான ஸ்ரீ ராமனின் கதையைப் பாடியதோடு மட்டுமன்றி அவரது ஏனைய கதாபாத்திரங்களைக்கொண்டு ஸ்ரீராமனை மூவர்க்கும் முதல்வன் என்று போற்றவும் வைக்கின்றார். இத்தகைய ராமபக்தி உடைய ஒருவர் மற்றைய வைணவப் புலவர்களைப்போல் கடவுள் வாழ்த்துப்பாடலில் மகாவிஷ்ணுவை அல்லவா போற்றிப் பாடியிருக்கவேண்டும். ஆனால் கம்பர் யாரைச் சரண் அடைகின்றார். உலகம் யாவற்றையும் படைப்பதுவும் அவற்றை நிலைநிறுத்துவதும் பின்னர் அவற்றை அழிப்பதுவும் ஆகிய தீராத ஒரு விளையாட்டை நிகழ்த்தி நிற்கும் தலைவர் யாரோ அவருக்கே தாம் அடைக்கலம் என்கிறார் கம்பர்.

உலகம் யாவையும் தாம்உள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடை யாரவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.


படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்துநிற்கும் அந்தப் பரம்பொருளை எந்தப்பெயராலும் கம்பர் அடையாளம் காட்ட முற்படவில்லை என்பது முக்கியமாக இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இங்கே கம்பர் 'பேர் அறியா அந்தப் பெருஞ்சுடர் ஒன்றுக்குப் பேர் வைக்க முடியாது' என்ற கொள்கை உடையவராய் இருந்திருக்கலாம். மானுடம் வென்றதைப் பாடவந்த கம்பர் எடுத்த எடுப்பிலேயே தம்மை ஒரு மதச் சார்பு உள்ள கவிஞனாக அடையாளம் காட்ட விரும்பாமலும் இருந்திருக்கலாம்.

சிவனடியார் அறுபத்துமூவரின் வரலாறுகளைத் தொகுத்துக் கூறவந்த சேக்கிழாருக்கோ இந்த விடயத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. சைவநீதி உலகமெலாம் விளங்கும் நோக்கில் திருத்தொண்டர் புராணம் பாடியவர் அவர். சேக்கிழார் ஒரு சிவபக்தர் என்பதில் எவருக்கும் எந்தவித ஐயமும் கிடையாது. அதேபோல் சேக்கிழாருக்கும் முழுமுதற்கடவுள் அந்த அம்பலத்து ஆடும் சிவபிரான் ஒருவனே என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு உரியவன்
நிலாவுலாவிடும் நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்


கடவுள் வாழ்த்தான முதற்பாடலிலேயே கம்பரை மதச்சார்பற்ற ஒரு கவிஞராகவும் சேக்கிழாரை ஒரு சிவன் அடியாராகவும் இனங்கண்டு கொள்ளமுடிகின்றது.

கவிதையில் ஒரு முழுமையைத் தேடுபவர் கம்பர். சேக்கிழாரோ எங்கும் எதிலும் சிவனருளைத் தேடுபவர். இக்கூற்றை நியாயப்படுத்துவதற்குக் கம்பராமாயணத்தில் ஒருபாடலையும் பெரியபுராணத்தில் ஒரு பாடலையும் எடுத்துக்கொள்ளலாம். இரண்டு பாடல்களுமே ஒப்பற்ற ஓர் அழகுக்கு உவமை தேடுவன.

இலக்குவன் முன்செல்ல சீதையை நடுவில் நடக்கவிட்டு ராமன் பின் தொடரும் அந்த வேளையில் இராமபிரானின் கரிய மேனியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளைத் தேடுகின்றார் கம்பர்.

வெய்யோன் ஒளிதன் மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோ என்னும் இடையாளோடும் இளையானோடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகுடையான்


இராமனின் கரிய நிறத்துக்கு உவமையாகக் கூறக்கூடியவற்றை ஒன்றொன்றாய் அடுக்குகின்றார். கருநிறம் என்றதும் கம்பருக்கு முதலில் நினைவுக்கு வருவது பெண்களின் கண்களை அழகுபடுத்தும் மை. கம்பன் வாழ்ந்த காலத்தில் 'மை' என்றால் அது மங்கையர்கள் கண்களுக்குத் தீட்டும் அஞ்சனத்தைத்தான் குறிக்கும். அழகுக்கு அழகு ஊட்டும் வெறும் அலங்கார சாதனத்தை இராமனின் அழகுக்கு உவமையாகக் கொள்வதா? பொருந்தாதே.

அப்படியானால் 'மரகதம்' என்று கூறலாமா? எத்தனை பேர் மரகதக் கல்லைப் பார்த்திருக்கமுடியும். ஏழைக்கும் அருள்புரியும் இராமனை செல்வந்தர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய மரகதத்துடன் ஒப்பிடலாமா? நியாயம் இல்லையே.

நீண்டு பரந்து கிடக்கும் நீலத்திரைக்கடலை அவன் அழகுக்கு உவமையாகக் கூறலாம். ஆனால் கடலில் காணும் நீலநிறம் கடலுடையதல்லவே. சுய ஒளி ஒளியுடன் கூடிய, நினைக்கும்போதே இனிக்கும் இராமனோடு வானத்தின் நிறத்தைப் பிரதிபலிக்கும், உப்புக்கரிக்கும் கடலை ஒப்பிட நினைக்கவும் கூடாதே.

மழைநீரைச் சுமந்துவந்து கொடுத்து மண்ணுலகில் உயிர்களை வாழவைக்கும் கார்முகிலுக்கு ஒப்பிடலாம் என்றால் தேவைப்படும்போது வராமல் ஏமாற்றிவிடும் மழைமுகிலுடன் கேட்டதும் கொடுத்துவிடும் சிறீராமமூர்த்தியை ஒப்பிடுவதும் தவறாயிற்றே.

ஐயோ! இவனது அழியா அழகுக்கு இதில் எதுவுமே பொருத்தமாய் இல்லையே என்று பாட்டை முடிக்கின்றார் கம்பர்.

தனது கற்பனைத்திறனைக் காட்டச் சேக்கிழாருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
தம்பிரான் தோழன் என்று அழைக்கப்பெற்ற சுந்தரர் திருவாரூர் கோயிலை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றார். உருத்திரகணிகையர் குலத்தில் பிறந்து தேவரையும் ஈர்க்கும் அழகுடன் திகழும் பரவை என்னும் அந்தப் பருவப்பெண்ணும் தன் தோழியருடன் கோயிலை நோக்கிச் செல்லுகின்றாள். கோயில் வீதியில் சுந்தரரும் பரவையாரும் ஒருவரை ஒருவர் காண்கின்றனர். சுந்தரருக்குத் தாம் கண்ட காட்சியை நம்பமுடியவில்லையாம். சேக்கிழார் சொல்லுகின்றார். சுந்தரர் மூலமாகப் பரவையின் அழகுக்கு உவமை தேடுகின்றார்.

கற்பகத்தின் பூங்கொம்போ காமன் தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன் என்றதிசயிர்த்தார்


'கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பகதரு என்று ஒரு விருட்சம் தேவருலகில் இருப்பதாகச் சொல்லுகின்றார்களே. அந்தக் கற்பகத்தின் பூக்கள் நிறைந்த கிளையொன்று இங்கு வந்ததோ? அல்லது நான் காண்பது காதல் தேவன் மன்மதனின் தோழி இரதியோ? அழகு செய்த புண்ணியத்தின் பலனாகத் தோன்றிய புண்ணியத்தின் ஒரு வடிவமோ? கருமேகத்தை (கருங்கூந்தலை) உச்சியில் சுமந்துகொண்டு வில் (புருவம்) குவளை (கண்) பவளம் (வாய்) முழுமதி (முகம்) என்பவற்றை மலர்களாகப் பூத்திருக்கும் நறுமணக் கொடியோ? இது அற்புதமோ அல்லது சிவன் அருள் தானோ?' என்று அதிசயித்து நின்றாராம் சுந்தரர்.

சேக்கிழாரைப் பொறுத்தவரையில் சிவபிரானின் அருளிலும் மேலான பேரழகு என்று எதுவுமே கிடையாது. அதற்கு மேலும் அழகுக்கு ஓர் உவமை தேடவேண்டிய அவசியம் சேக்கிழாருக்கு இருக்கவில்லை. கம்பரைப்போல் ஐயோ என்று அங்கலாய்க்கவேண்டிய நிலை சேக்கிழாருக்கு ஏற்படவும் இல்லை. இங்கேதான் தம்மை ஒரு உண்மையான சிவனடியாராகச் சேக்கிழார் தம்மை வெளிப்படுத்திகின்றார். இராமனின் அழகுக்கு மண்ணுலகில் உவமை தேடிக் களைத்த கம்பர் முழுமையான ஒரு கவிஞர். பரவையின் அழகுக்கு விண்ணுலகில் தேடியும் சிவனருளுக்கு மேலான உவமை ஒன்றைக்காணாத சேக்கிழார் உண்மையான ஒரு பக்தர்.


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்