கன்னட மண்ணில் தமிழ் வேள்வி செய்து வரும் கம்பீரம்!

முனைவர் இரா.மோகன்
 

ன் கவலை ஆயிரமாய்த்
          தலையேதான் வெடித்தாலும்
‘என் கவலை தமிழ்’என்றே
          இயங்குகின்ற இளங்கோவன்”

                                                 (சிறப்புப் ‘பா’, நெஞ்சத் தூண்கள், ப.4)

என்பது மலேசிய நாட்டின் மாண்புறு கவிஞர் ஐ.உலகநாதன், இராம.இளங்-கோவனுக்குச் சூட்டியுள்ள அழகிய புகழாரம் ஆகும். வித்தகக் கவிஞர் பா.விஜய்,

“கன்னட மண்ணில் ஒரு
தமிழ் வேள்வி செய்து வரும்
கம்பீரம் உடையவர்!”

                                            (‘ஒரு கவிதைக் காவிரி’…, நெஞ்சத் தூண்கள், ப.7)

என இராம.இளங்கோவனின் ஆற்றல்சால் ஆளுமைப் பண்பினை அடையாளம் காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ‘முன்னேற்ற ரலாறு’ எனத் தமிழ் கூறு நல்லுலகால் சிறப்பிக்கப் பெறும் பேராசிரியர் மு.வரதராசனார் (1912-1974) புகழோடு தோன்றிய வட ஆர்க்காடு மாவட்டத்தில் போளுர் தாலுகாவைச் சார்ந்த சனிக்கவாடி என்ற ஊரில் தெய்வத்திரு இராமசாமி-இலட்சுமி இணையருக்குத் தலைமகனாகத் தொழிலாளர் நாளான மே 1-இல் (01.05.1956) பிறந்தவர் இராம.இளங்கோவன்.

‘நெருப்பலைப் பாவலர்’, ‘பகுத்தறிவுப் பாவலர்’, ‘எழுச்சிக் கவிஞர்’, ‘இலட்சியக் கவிஞர்’, ‘இனமானக் கவிஞர்’, ‘தத்துவக் கவி’, ‘இலக்கியச் செம்மல்’, ‘கவிஞர் திலகம்’ முதலான பல்வேறு சிறப்புப் பட்டங்களுக்குச் சொந்தக்காரரான இராம.இளங்கோவன், தமிழின் யாப்பு மரபைப் பாதுகாக்கும் வகையில் மரபுக் கவிதைகளை எழுதி வரும் கருநாடகக் கவிஞர்களில் மோனையைப் போல் முன்னிற்பவர் ஆவார். பெங்களுர்த் தமிழ்ச் சங்க ஏரிக்கரைக் கவியரங்கின் பொறுப்பாளராக இருந்து இவர் ஆற்றிய பணிகள் தடம் பதித்தவை. தற்போது தூரவாணி நகர் ஐ.டி.ஐ. தமிழ் மன்றம் நடத்தி வரும் பாவாணர் பாட்டரங்கிலும் இவரது பங்களிப்பு உள்டு. நாடகம், கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகியவை இராம.இளங்கோவனுக்கு விருப்பமான எழுத்துத் துறைகள் ஆகும். இத் துறைகளைச் சார்ந்த படைப்புக்களுக்காக இவர் பெற்றுள்ள பரிசுகளும், பாராட்டுக்களும், விருதுகளும் பலவாகும். பதினொன்றாம் வயதில் தொடங்கிய இவரது இலக்கியப் பயணம், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரையில் தொய்வின்றித் தொடர்ந்து இயங்கி வருவது போற்றத்தக்கது. “நான் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் தமிழனாகவே பிறந்திட வேண்டும்; தமிழ்ப் பால் திகட்டாமல் பருக வேண்டும்; தமிழ்ப் பாவலனாய் ஒவ்வொரு பிறவிகளிலும் ஒளிர வேண்டும் என்பதே என் பேராசை” (முகவுரை, வெளிச்சம் தேடும் வேர்கள், ப.20) என ஆழ்ந்திருக்கும் தமது தமிழ் உணர்வினையும் உள்ளத்தினையும் ஓர் இடத்தில் இரா.இளங்கோவன் வெளிப்படுத்தியுள்ளார்.

இராம.இளங்கோவன் ‘நெருப்பலைகள்’ (1997), ‘நெஞ்சத் தூண்கள்’ (2012), ‘இதய வேர்கள்’ (2014) ஆகிய மூன்று மரபுக் கவிதை நூல்களையும், ‘புதிய முகம்’ (2015) என்ற புதுக்கவிதை நூலையும், ‘குத்தூசி’ (2015) என்ற துளிப்பாத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். ‘குழந்தையுடன் குழந்தையாய்...’ (2017) என்பது இராம.இளங்கோவனின் 26 சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். இனி, இராம.இளங்கோவனின் கவிதை உலகு குறித்து ஈண்டுச் சுருங்கக் காண்போம்.

கவிஞர் போற்றும் மொழியுணர்வும் இனவுணர்வும்

“நாடுயர, ஏழை, எளிய
          நைந்தவர்கள் உயர்ந்து வாழ,
வீடுதோறும் மொழியு ணர்வும்,
          வீதியெங்கும் இனவு ணர்வும்,
பீடு கொண்ட கவிதை யாலே
          புகட்டிடவே எழுது கின்றேன்”     
(நெஞ்சத் தூண்கள், ப
.136)

என இராம.இயங்கோவனே ஓர் இடத்தில் தம் கவிதையின் நோக்கத்தினைத் தெளிவுபடுத்தியுள்ளார். அவரைப் பொறுத்த வரையில் மொழியுணர்வும் இனவுணர்வும் இரு கண்கள் ஆகும்.

“கடலலை போல ஓய்வே இன்றிக்
கன்னல் தமிழுக்கு உழைத்திடு!...
சுற்றும் புவியாய்ச் சுழன்று நாளும்
செந்தமிழ்த் தொண்டு ஆற்று!”  
   (நெஞ்சத் தூண்கள், ப
.38)

என்பது இளந்தமிழனுக்குக் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள்.

“நிரந்தரமு(ம்) இல்லாத நீள்வாழ்வு(ம்) இல்லாத
தரணிவாழ் சின்னாள் தமக்காய் – இராமல்
இன்னுயிரை நாட்டுக்காய் ஈந்தகார்கில் வீரருக்கு
இந்நூல் படைத்தேன் பணிந்து”

என ‘இதய வேர்கள்’ என்னும் மரபுக் கவிதை நூலினைத் தமது இன்னுயிரை நாட்டுக்கு ஈந்த கார்கில் வீரருக்குக் கவிஞர் காணிக்கையாக்கி இருப்பது அவரது ஆழ்ந்த நாட்டுப் பற்றினைப் புலப்படுத்துவதாகும்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் உணர்வும் தொண்டும்

அரசியலார் அலுவலகம், கல்விக் கூடம், இசை அரங்கு, நீதி மன்றம் ஆகியவற்றில் இன்று தமிழுக்கு முதன்மை இல்லை; தமிழர்களின் குழந்தைகள் தமிழ்ப் பெயர்களைப் பெறவில்லை; தமிழகத்தின் தெருக்களிலும் தமிழுக்கு இடம் இல்லை. பாரதியார் குறிப்பிடுவது போல, ‘பாமரராய், விலங்குகளாய் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழர் எனக் கொண்டு இங்கு வாழ்ந்து வருகின்றோம்!’ உண்மையில் தமிழ் வழங்குவதும், வாழ்வதும் புலம் பெயர்ந்த தமிழ்களால் தான்!

“புலம் பெயர்ந்து வாழ்ந்திடினும் – தமிழர்
புவிஎங்கும் இருந்திடினும் – தமிழர்
நலமெண்ணி, தமிழெண்ணி - நித்தம்
இலக்கியத்தில் திளைப்பவர்கள்!”   
(வெளிச்சம் தேடும் வேர்கள், ப.
50)

எனப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களைப் போற்றிப் பாடும் இராம.இளங்-கோவன், அவர்கள் பல்லாயிரம் மைல்கள் கடந்து புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்தாலும், தமிழின்பால் கொண்ட நல்லுணர்வினால் தமிழுக்கு அரணாகவும் அணியாகவும் விளங்கி வரும் பான்மையை விதந்து மொழிகின்றார்; இன்னும் ஒரு படி மேலாக,

“அருந்தமிழைப் புலம்பெயர்ந்தோர் ஆளு கின்றார்;
தூயதமிழ் அவருக்கே சொந்தம்; இந்தத்
தொண்டுக்கு வானம் அவர் காலில் வீழும்!”

                                                  (வெளிச்சம் தேடும் வேர்கள், ப.52)

என்று புலம்பெயர்ந்தோரது தமிழ்த் தொண்டினை வானளாவப் பாராட்டவும் செய்கின்றார்.

நம்பிக்கையை விதைக்கும் கவிஞரின் முத்திரைக் கவிதை

‘வாழ்க்கை என்பது…’ என்னும் தலைப்பில் இராம.இளங்கோவன் படைத்திருக்கும் புதுக்கவிதை அவரது முத்திரைக் கவிதை ஆகும். உழைப்-பதைப் பூமியிடமும், உதயத்தைக் கதிரவனிடமும், முயற்சியைச் சிலந்தியிடமும், சுறுசுறுப்பை எறும்பிடமும், பொறுமையை ஆமையிடமும், நம்பிக்கையைப் பறவையிடமும் கற்றுக்கொள்ளுமாறு இளைய தலைமுறைக்கு அறிவுறுத்தும் கவிஞர்,

“வாய்ப்புகளோ –
வரும், போகும்…
அதைப் பயன்படுத்திக்
கொள்பவனுக்குத் தான்
விடியல் வரும்!”

என்பதையும் தெளிவுபடுத்துகின்றார்.

‘கிழக்கில் மடடும் உதயமில்லை – அது எல்லாத் திசைகளிலும் இருக்கிறது’ என உணர்த்தும் கவிஞர்,

“உலகத்தின் பின்னால்
நீ போகாமல் –
உனக்குப் பின்னால்
உலகத்தை வந்திடச் செய்!”

எனவும் இளையோர்க்கு வழிகாட்டுகின்றார்.

முத்தாய்ப்பாக, ‘வாழ்க்கை இன்பம் மட்டுமல்ல… துன்பமும் இணைந்தது’ என்பதை உணர்ந்து – திட நம்பிக்கை, விடா முயற்சி, கடுமையான உழைப்பு, உயர்ந்த இலட்சியம் ஆகியவற்றோடு போராடினால் – நல்ல வாழ்க்கை என்பது தானாகவே நாடி வரும் என வலியுறுத்துகின்றார் கவிஞர். அவரது கருத்தியலில்,

“எல்லோரையும் போலவே
வாழ்வது – வாழ்வல்ல;
எல்லார்க்கும் பாடமாய்
வாழ்வதே வாழ்க்கை!”    
  (புதிய முகம், பக்.
57-58)

‘திட நம்பிக்கை’ என்னும் தலைப்பில் எழுதிய பிறிதொரு கவிதையிலும்,

“வாழ்க்கை –
நூறாக உடைந்தாலும்
நம்பிக்கை இருந்தால்
வையத்தையே –
விலைபேசி
வாங்கி விடலாம்!”    
        (புதிய முகம், ப.
56)

என இளையோரது நெஞ்ச வயலில் நம்பிக்கை விதையினை ஆழமாக ஊன்றுகின்றார் கவிஞர்.

இளைய தலைமுறையினர் மனங்கொள வேண்டிய இராம.இளங்-கோவனின் மற்றொரு புதுக்கவிதை ‘வெற்றி’. ‘உன்னால் – படுத்திருக்க மட்டுந்தான் முடியுமா?’ என்னும் கேள்வியுடன் தொடங்கும் கவிதை, ‘உட்காரவும் முடியும் என்றால், முயற்சி செய்தால் உட்காரவும் முடியும்… எழுந்து உட்கார்!’ எனக் கூறுகின்றது; அடுத்து, ‘உன்னால் – உட்கார முடிந்தது என்றால், நிற்கவும் முடியும் … நிமிர்ந்து நில்!’ எனப் பணிக்கின்றது; தொடர்ந்து, ‘நிற்க முடிந்த உன்னால் – நடக்கவும் முடியும் … கை வீசி நட!’ எனத் தூண்டுகின்றது; இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘நடக்க முடிந்த உன்னால் – ஓடவும் முடியும்… வேகமாய் ஓடு!’ என ஆணையிடுகின்றது; முத்தாய்ப்பாக,

“ஓடு! ஓடிக்கொண்டே இரு;
ஓடி வரும் உன் பின்னால்
வெற்றி!”      
          (புதிய முகம், ப.
121)

என நம்பிக்கை ஊட்டுகின்றது.

கவிஞர் காண விரும்பும் புதிய சமுதாயம்

“புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
          போரிடும் உலகினை வேரொடும் சாய்ப்போம்!”

என முழங்கினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அவரது வாக்கினைப் பொன்னே போல் போற்றும் வகையில் இராம.இளங்கோவனும்,

“ … … நாட்டினிலே ஊழல்
நாராக நார் நாராய்க் கிழித்துவே ரறுத்து
           நலன் பயக்கும் ஓர்புதிய சமுதாயம் காண்போம்!”

                                          (வெளிச்சம் தேடும் வேர்கள், ப.101)

என ஊழல் இல்லாத புதியதொரு சமுதாயம் காண விழைகின்றார்; அவரே அதற்கான முற்போக்கான வழிமுறையினையும் எடுத்துரைக்கின்றார்:

“உழைக்கின்றோர் ஒன்றுகூடித் திரண்டெழுந்து கத்திஏந்தி
          ஊழல்செய் கைகளினை வெட்டுவோம் – புதிய
          ஊழலிலாச் சமுதாயம் காணுவோம்!”

                                                          (வெளிச்சம் தேடும் வேர்கள், ப.103)

புதியதோர் உலகம் செய்வது என்பது மந்திரத்தால் மாங்காய் விழச் செய்வது போன்ற மாயச் செயல் அன்று; தந்திரச் செயலும் அன்று. அதற்கு அடிப்படையாக நடைமுறையில் உள்ள கெட்ட போரிடும் உலகினை வேரொடும் வெட்டிச் சாய்க்க வேண்டும்; அம் முயற்சியில் தனித்தனியே பிரிந்து நிற்கும் நல்லவர் எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.

“நல்லவர் ஒன்றாய் இணைந்து விட்டால் – மீதம்
உள்ளவரின் நிலை என்ன மச்சான்? – அவர்
நாளை நடப்பதை எண்ணி எண்ணி
நாழிக்கு நாழி தெளிவாராடி!”

என்னும் ப(h)ட்டுக்கோட்டையாரின் வாக்கு இங்கே கருத்தில் கொள்ளத் தக்கதாகும்.

இராம.இளங்கோவனும் ‘நல்லோரே வாரீர்!’ என்னும் கவிதையில் கெட்ட போரிடும் உலகினை வேரொடும் சாய்த்து, புதியதோர் உலகினை உருவாக்கும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட வருமாறு நல்லோருக்கு அழைப்பு விடுக்கின்றார்:

“ …    …    நாட்டினிலே வன்கொடுமை
பொல்லாதார் ஒழிய வழி என்ன? – தீயோர்
பொசுங்க நல்லோர் ஒன்றிணைந்தால் என்ன?”

                                                                 (வெளிச்சம் தேடும் வேர்கள், ப.110)

நல்லவர்கள் ஒன்றிணைந்து, துணிந்து செயலாற்றினால் தான் நாட்டில் நல்ல வகையில் மாற்றங்கள் நிகழும் என வலியுறுத்துகின்ற கவிஞர், அதற்கான அடிப்படைத் தேவையாக,

“         … … புவியைப் புரட்டி
          நெம்பி அல்லவை தள்ளும்
          நெம்புகோலாய் மாறுவோம் நாமே!”

                                                  (வெளிச்சம் தேடும் வேர்கள், ப.111)

என முரசறைகின்றார்.

‘மாற்றம்’ என்ற தலைப்பில் பாடிய கவிதையிலும்,
“புதியதாகச் சிந்திப்போம்; புத்துலகம் படைத்திடுவோம்; - நாம்
புதிய மாற்றத்தை நாள்தோறும் கண்டிடுவோம்!”

                                                                       (நெருப்பலைகள், ப.204)

எனக் கவிஞர் மொழிவது நோக்கத்தக்கது. அவரது கண்ணோட்டத்தில், ‘உறங்கினாலும் மனிதத்தை, உறங்காமல் எழுப்புவதே, அறம் காக்கும் மாற்றம் ஆகும்’. வேறு சொற்களில் குறிப்பிடுவது என்றால், ‘உணர்வுடனே, தினந்-தோறும் நம் வாழ்வின், இறுதி தினம் இதுவென்று பாடுபட்டால் – மாற்றம், எந்நாளும் மலர்ந்திடும்’ (நெருப்பலைகள், ப.205) என முடிந்த முடிபாகக் கூறுகின்றார் கவிஞர்.

முன்னைத் தமிழ் இலக்கிய மரபின் தாக்கம்

“இலக்கண இலக்கிய
மரபுவேர் உண்டு
என்னில்”   
            (ப
.36)

என்பது ‘குத்தூசி’ நூலுக்கு எழுதிய அவையடக்கப் பாடலில் இராம.இளங்-கோவன் தந்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம். இதற்கு ஏற்பக் கவிஞரின் மொழி ஆளுமையில் பழந்தமிழ் இலக்கிய மரபின் தாக்கம் ஆங்காங்கே படிந்திருக்கக் காண்கிறோம்.

‘உழவு’ எனத் தனியொரு அதிகாரமே படைத்து, ‘உழந்தும் உழவே தலை’ (1031) என்றும், ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ (1032) என்றும், ‘உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார்’ (1033) என்றும் உழவுத் தொழிலின், உழவர்களின் உயர்வினைப் பேசிய வள்ளுவரை அடியொற்றி இராம.இளங்கோவனும் ‘உழவு’ என்னும் தலைப்பில் எழுதிய கவிதையில் ‘தலை நிமிர்த்தும் தொழில் உழவே!’ என்றும் , ‘தொழிலுக்கு எலாம் உழவே தலை’ என்றும் உழவின் பெருமையைப் பேசியுள்ளார்; மேலும் அவர்,

“இளையோர்எலாம் உழவுத்தொழில் மறந்தேநகர் புகுந்தால்
தளைகள் தடு மாறும்உயர் வெண்பாநிலை யாகும்!”

                                                              (வெளிச்சம் தேடும் வேர்கள், ப.86)

என இன்றைய இளைய தலைமுறையினரை எச்சரிக்கவும் தவறவில்லை.

“நவில்தோறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு”   
                        
(783)

என்னும் வள்ளுவர் வாய்மொழியே கவிஞரின் கைவண்ணத்தில் பின்வரும் புதுக்கோலத்தினைப் பூண்டுள்ளது:

“படித்திட இன்பம் ஈந்திடும் நூல்கள்! நட்பு
பழகிட இன்பம் பூத்திடும் நலங்கள்!”

                                                           (வெளிச்சம் தேடும் வேர்கள், ப.207)

‘தருமத்தின்  வாழ்வுதன்னைச் சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்’ எனப் பறைசாற்றுவார் ‘பாட்டுக்கொரு புலவர்’ பாரதியார். அவரை வழி-மொழிவது போல் இராம.இளங்கோவனும், ‘உண்மையே வெல்லும் நாளை – நித்தம் நன்மையே விளையும்; பன்முகத்துப் பொய்ம்மை யாவும் புறமுதுகை இட்டு ஓடும்!’ என அறுதியிட்டு உரைக்கின்றார். மேலும் அவர்,

“மண்ணிலே தான் நரக சொர்க்கம் - ஆம்
விண்ணில் இல்லை உணராய் மாந்தா!...
துன்பங்கள் விளைதல் நாளை – பெரிய
நன்மையொன்று விளைவ தற்கே!”

                                                    (வெளிச்சம் தேடும் வேர்கள், ப.159)

என்றும் மனித குலத்திற்கு அறிவுறுத்துகின்றார்.

‘விழிமின்; எழுமின்; குறிக்கோளை அடையும் வரை ஓயாது உழைமின்!’ (Awake! Arise! Stop not till the goal is reached) என்னும் நிறைமொழி மாந்தரான விவேகானந்தரின் மந்திர மொழியை நினைவுபடுத்தும் விதத்தில் இராம.இளங்கோவன் ‘வெற்றி மட்டுமே இலக்கு’ என்னும் தமது கவிதையில்,

“         …       …       வேட்கை யோடு
  வென்றெடுக்கும் நாள்வரையில் வீறு கொண்டு
          வேகத் தடைகளின்றி செல்வேன்; வெல்வேன்!”

                                                          (வெளிச்சம் தரும் வேர்கள், ப.168)

என உறுதி மிக்க குரலில் முழங்குவது குறிப்பிடத்தக்கது.

“போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து சொல்வேன்!
ஏற்றதொரு கருத்தை என(து) உள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன்; எவர்வரினும், நில்லேன்! அஞ்சேன்!”

                                     (கண்ணதாசன் கவிதைகள்: முதல் இரண்டு தொகுதிகள், ப.103)

என்பது கவியரசர் கண்ணதாசனின் புகழ்பெற்ற கொள்கை முழக்கம்; தன்னிலை விளக்கம். இதுவே இராம.இளங்கோவனின் சொற்களில் ‘என் வழி…’ என்னும் தலைப்பில் புதுவடிவம் கொண்டுள்ளது:

“இகழ்ந்திடுவார் இகழட்டும்! – என்னைப்
புகழந்திடுவார் புகழட்டும்!
இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும் - நித்தம்
என் வழியில் நான் நடப்பேன்!”  
(நெஞ்சத் தூண்கள், ப.
132)

இங்ஙனம் இராம.இளங்கோவனின் கவிதைகளில் இடம்பெற்றிருக்கும் முன்னைத் தமிழ் இலக்கிய மரபுகளின் தாக்கம் விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

தாய் – தந்தை – ஆசான் மாண்பு

ஈன்று புறந்தந்த தாய், சான்றோன் ஆக்கிய தந்தை, எழுத்தறிவித்த ஆசிரியர் ஆகிய மூவர் மீதும் அளவற்ற பற்றும் பாசமும், மதிப்பும் மரியாதையும் கொண்டவராகத் திகழ்கின்றார் இராம.இளங்கோவன். ‘அம்மா என்ற தனிப்பெருங் கருணை!’, ‘துயர் துடைக்கும் தெய்வம் அப்பா!’, ‘ஆசிரியர் நாம் போற்றும் தெய்வம்!’ என்னும் அவரது கவிதைகள் இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை.

“உன்னுடலின் வெப்பமின்றி வெயிலின் வெப்பம்
          உணராத வகையில் என்னை வளர்த்தெ டுத்தாய்;
என்னை மட்டும் அலங்கரித்து அழகு பார்த்து
          உன்னையும் நீ அலங்கரிக்க மறந்து விட்டாய்;
உன் வியர்வை தனில்நனைந்தே னன்றி என்றும்
          ஒருநாளும் மழையினிலே நனைந்த தில்லை;
உன் வாசம் உன்பாலின் வாசம் போன்று
          உன்தூளி வாசமன்றி அறியேன் வேறு!”

                                                     (வெளிச்சம் தேடும் வேர்கள், ப.172)

என ‘அம்மா என்ற தனிப்பெருங் கருணை’யைப் போற்றிப் பாடும் கவிஞர்,

“எதிலும் தான் தனக்கென்று எண்ணி டாமல்
          என்குடும்பம் என்றுதுயர் துடைக்கும் அப்பா…
விட்டெதையும் கொடுத்துமனை மக்க ளுக்காய்
          வெறுப்பின்றி உழைக்கின்ற தெய்வம் அப்பா”

                                           (வெளிச்சம் தேடும் வேர்கள், ப.175)

என்று தந்தையின் தன்னலமற்ற, தூய பாசத்தின் பெருமையை எடுத்துக்-காட்டவும் தவறவில்லை.

‘மாதா பிதா குரு தெய்வம்’ என்னும் உறவுகளின் வரிசை முறையில் ஆழ்ந்த பொருள் பொதிந்து நிற்கக் காணலாம். மாதா குழந்தைக்கு பிதாவை அடையாளம் காட்டுகிறாள்; பிதா குழந்தையை குருவிடம் அழைத்துச் செல்கின்றார்; அந்தக் குரு தெய்வத்திற்கு நிகரானவர். அன்னையை அன்புக் கோயிலாகவும், தந்தையைக் குடும்பத்தின் துயர் துடைக்கும் தெய்வமாகவும் காணும் கவிஞர், வளர்இளம் பருவத்தில் சிற்றறிவு கொண்ட மாணாக்கர் தம்மைக் கற்பித்து பேரறிவாளர் ஆக்கும் ஆசானை ஆயுள் எல்லாம் தெய்வமாகப் போற்றி வணங்குவோம் எனப் பாடுகின்றார்.

“அம்மையப்பர் ஒருபுறமும் தெய்வந் தன்னை
          அடுத்தஒரு புறமுமாக ஆசான் தன்னை
 இம்மூவர் நடுவினிலே வைத்துப் போற்றி
          இடம்வலமாய் அம்மையப்பர் தெய்வ மெல்லாம்
 இம்மையிலும் மறுமையிலும் காவல் காத்து
          என்றென்றும் போற்றுகின்ற தெய்வம் ஆசான்;
 இம்மனித தெய்வத்தை நெஞ்சில் ஏற்றி
          ஆயுளெல்லாம் நாம்போற்றி வணங்கு வோமே!”

                                             (வெளிச்சம் தேடும் வேர்கள், ப.177)

நாம் இந்த உலகிற்கு வருவதற்குக் காரணமான அம்மையப்பர் – நமக்கு எழுத்தறிவித்த ஆசான் – நம்மை வழிநடத்தும் தெய்வம் என்பது கவிஞர் எந்நாளும் போற்றி வணங்கும் வரிசை முறை ஆகும்.

கற்பவர் உள்ளத்தை உருக்கும் கையறுநிலைக் கவிதைகள்

இராம.இளங்கோவன் தமது அன்புமகன் கண்மணி நவின் 25 வயதில் மரணமடைந்த போது அல்லற்பட்டு ஆற்றாது அழுது கண்ணீர் மல்கிடப் பாடியுள்ள கையறுநிலைக் கவிதைகள் கற்பவர் உள்ளத்தை உருக்க வல்லன; இக் கவிதைகளுக்கு உருகாதார் வேறு எவற்றுக்கும் உருகார் எனலாம்.

“சாவு வராதா என்று – நோயில்
சாகக் கிடப்போர் இருக்க

ஈவு இரக்க மின்றி – நீ
எதற்கு என்மகன் கவர்ந்தாய்?”    
(நெஞ்சத் தூண்கள், ப.
126)

எனக் கவியரசர் பாரதியாரைப் போல் ‘காலனே இங்கே வாடா!’ என உணர்ச்சி பொங்க விளித்து, ‘உன்னை உதைப்பேன் உண்மை கூறடா!’ என உரைத்திடும் போதும்,

“எத்தனை யுகமாய் இயற்கை இருந்திட
இத்தனை வேகமாய் இருபத் தைந்தில்
கொத்திச் சென்றது என்ன நியாயம்!
பித்தனாய்ப் புலம்பிடச் செய்தது ஆரோ?”

                                                         (நெஞ்சத் தூண்கள், ப.124)

என மகனது நினைவலைகளால் தாக்குண்டு மனம் வெதும்பிப் பாடும் போதும்,

“என்றனுக்கு மண்ணிடுவாய் என்றி ருந்தேன்;
          உன்றனுக்கு மண்ணிடவே செய்து விட்டாய்;
என்றுமில்லா நீளுறக்கம் உறங்கு கின்றாய்;
          என்றைக்குத் துயில்களைந்து வரப்போ கின்றாய்?
என்னுயிர் கேட்டிருந்தால் கொடுத்தி ருப்பேன்;
          உன் வாழ்வை நீள வைத்து மகிழ்ந்தி ருப்பேன்;
என்றனுக்கோர் வார்த்தை நீயும் பகர்ந்தி டாமல்
          எவண்சென்று என் மகனே தொலைந்த னையோ?”

                                                                              (நெஞ்சத் தூண்கள், ப.114)

என மகனது மரணத்தை எண்ணி எண்ணிப் புலம்பிடும் போதும், கவிஞரின் மொழியில் ஆழ்ந்த அவல உணர்வு ததும்பி நிற்கக் காண்கிறோம்.

‘வள்ளுவர் சீர் பரவுவார்’

பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவி வல்லரான சேக்கிழாரைத் ‘தொண்டர்சீர் பரவுவார்’ எனப் போற்றி உரைப்பர் அறிஞர். அது போல, இராம.இளங்கோவனை ‘வள்ளுவர் சீர் பரவுவார்’ எனக் குறிப்பிடலாம் போல் தோன்றுகிறது.

“அள்ள அள்ளக் குறையாத அமுத ஊற்று;
          அன்றாடம் குடித்தாலும் திகட்டா முப்பால்;
தெள்ளமுதாய் வாழ்வியலை இனிக்க வைக்கும்
          சீரார்ந்த எழுசீரின் கீதை யாகும்” 

                                                         (வெளிச்சம் தேடும் வேர்கள், ப.76)

என வள்ளுவத்திற்குப் புகழாரம் சூட்டும் இராம.இளங்கோவன்,

“பொருட்பாலைப் பொழுதெல்லாம்
          பருகிடுவோம் துளித்துளியாய்;
இரும்புருக்கும் மூன்றாம்பால்
          இன்பத்துப் பால்குடிப்போம்;
அரும்பாலாம் அறப்பாலில்
          அனுதினமும் மூழ்கிடுவோம்;
திருக்குறளின் வாழ்வியலைத்
          திகட்டாமல் குடித்திடுவோம்!”

                                                          (வெளிச்சம் தேடும் வேர்கள், ப.77)

எனக் குறளைக் கற்பதற்கான வழிமுறையினை எடுத்துரைக்கின்றார்.

தேசியத்தின் பறவையாக வண்ண மயில் இருக்க, தேசியத்தின் மலராகத் தாமரையும் இருக்க, தேசியத்தின் விலங்காகப் புலி இருக்க, தேச சக்கரமாய் அசோக சக்கரமும் இருக்க, தேசியத்தின் பாடலாய்ச் சன கண மன இருக்க, தேசியத்தின் கொடியாக மூவண்ணம் இருக்க, தேச நலன் கருதி தேசியத்தின் நூலாகத் திருக்குறளை ஏன் வைக்கக் கூடாது என்பது கவிஞரின் கேள்வி.

“திருக்குறளின் வழியினிலே நாமு(ம்) ஆண்டால்
          தீவினைகள் இல்லாத நாடாய் மாறும்;
திருக்குறளைத் தேசியத்தின் நூலாய் வைத்தால்
          திசைதோறும் பாரதத்தின் புகழும் ஓங்கும்!”

                                                (வெளிச்சம் தேடும் வேர்கள், ப.88)

என அறுதி இட்டு உரைக்கின்றார் கவிஞர்.

படிம அழகு கொலுவிருக்கும் கவிதை

‘மின்னல்’ என்னும் தலைப்பில் இராம.இளங்கோவன் படைத்துள்ள கவிதை படிம அழகு கொலுவிருப்பது; கவிஞரின் படைப்புத் திறத்திற்குக் கட்டியம் கூறி நிற்பது. கவிஞரின் சொற்களில் அக் கவிதை வருமாறு:

“வருண பகவான் கைச்சாட் டையோ?
உருவம் வளைத்து ஓடும் அரவமோ?
வானத் தட்டில் ஊற்றிய ஈமமோ?
சீன நாட்டின் கண்டு பிடிப்போ?
இளமாது உதிர்த்த இளம்புன் னகையோ?
உளமது துடிக்கும் உணர்வின் துடிப்போ?
காமுகன் இடியும் கற்பழித் திடாமல்
கற்பைக் காக்க ஓடும் கன்னியோ?
உழைப்பவர் உடலை வருத்தும் வலியோ?
பாமரர் சிந்தும் வேர்வையோ? இல்லை…
பாமரர் செல்வரைப் பழிவாங் கிடவே
பட்ட றையில் உருக்கிப்
பட்டை தீட்டி வடித்த ஈட்டியே!”
  (இதய வேர்கள், ப.
165)

ஒன்பது வகையான படிமங்களை அடுக்கிக் கூறி வந்து, கடைசியில் பாமரர் தம் உழைப்பினை உறிஞ்சி வாழும் செல்வரைப் பழிவாங்கிடவே பட்டறையில் உருக்கிப் பட்டை தீட்டி வடித்து வைத்திருக்கும் ஈட்டியே மின்னல் எனக் கவிதையை முடித்திருப்பது அருமை; அழகு.

குத்தூசிகளாய் அமைந்த துளிப்பாக்கள்

சமுதாய நடைபாதைகளைச் செப்பனிடுதை நோக்கமாகக் கொண்ட – நகைச்சுவை கலந்து குத்தல் நடையில் அமைந்த – தம் கவிதைகளுக்கு ‘ஊசிகள்’ என்ற பெயரினைச் சூட்டினார் கவிஞர் மீரா. அவரது அடிச்சுவட்டில் இராம.இளங்கேவனும் குத்தூசி போன்று படிப்பவரது மூளையில் குத்தி வலியை ஏற்படுத்தும் துளிப்பாக்களின் தொகுப்பிற்குக் ‘குத்தூசி’ என்று பெயர் வைத்திருப்பது நோக்கத்தக்கது. திருக்குறளில் அமைந்துள்ள 1330 குறட்- பாக்களைப் போல் இராம.இளங்கோவனும் தம் நூலில் 1330 துளிப்பாக்களை இடம்பெறச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத் துளிப்பாக்களை அவர் குறுகிய காலத்தில் எழுதி முடித்தார் என்பதை அறியும் போது ‘வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே!’ எனக் கூறவே தோன்றுகின்றது.

“நீரின்றி அமையா உலகில்
கல்வி இன்றி அமையாது
வாழ்க்கை”         
             (ப.
105)

என்பது கல்வியின் மேன்மையைப் பறைசாற்றும் துளிப்பா.

“நட, ஓடு,
அடைய வேண்டி
இலக்கு”         
                 (ப.
96)

என்பது இளைய தலைமுறைக்கான கவிஞரின் துளிப்பா.

“சுழியத்திற்கு மதிப்பில்லை
எண்கள் சேரும் வரை…
தனி மனிதன்”    
              (ப.
203)

என்பது ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்னும் பழமொழியின் அழகிய துளிப்பா வடிவம்.

“அகலிகை உயிர்த்தெழுந்தாள்
 சீதை தீக்குளித்தாள்
 இராமன் வருகை”   
         (ப
.41)

என்பது பெண்ணிய நோக்கில் கவனிக்கப்பட வேண்டிய கவிஞரின் துளிப்பா.

“கற்றது கையளவு
பேசுவதோ
உலகளவு”    
                   (ப.
63)

என்பது வாய்ச்சொல் வீரனாக வலம் வந்துகொண்டிருக்கும் இன்றைய மனிதனின் போக்கினைக் கிண்டலடிக்கும் கவிஞரின் துளிப்பா.

“நெருப்பாய் இல்லை
செருப்பாய்
தமிழன்!” 
                        (ப.
147)

என்பது தமிழனைப் பற்றிய கூர்மையான விமர்சனமாக அமைந்த துளிப்பா.

“பொட்டிழந்தாள் விதவை; இரண்டு
பொட்டு வைத்துக் கொண்டாள்
கைம்பெண்”        
                      (ப.
156)

என்பது கவிஞரது தனித்தன்மை மிளிரும் துளிப்பா.

“விதவை / என்று எழுதுகிறேன்
எழுத்தில் கூட
/ என்னால் ‘பொட்டு’

வைக்க முடியவில்லை.
சமுதாயம் மட்டுமல்ல / தமிழ் மொழியும்
கூடத்தான் / உங்களை

ஒதுக்கி வைத்து விட்டது” 
(ஆனந்த விகடன்:
17.11.1985)

என்ற நிர்மலா நரேந்திரனின் கவிதை ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த போது தமிழக முன்னை முதல்வர் டாக்டர் கலைஞர் சொன்ன ஒரு சுவையான தகவல் இங்கே நினைவுகூரத் தக்கது: “‘விதவை’ என்று வடமொழியில் எழுதினால் பொட்டு வைக்க முடியாது; ‘கைம்பெண்’ என்று தமிழில் எழுதினால் இரண்டு பொட்டு வைக்கலாம்!”

“குனிந்து வாழ்வதை விட
நிமிர்ந்து சாவதே
வாழ்வு!”    
                      (ப
.69)

என்பது வாழும் முறையை வலியுறுத்தும் துளிப்பா.

நூற்றாண்டு காணும் தமிழ்த் துளிப்பா வரலாற்றில் இராம.இளங்-கோவனின் ‘குத்தூசிக’ளுக்குச் சிறப்பான ஓர் இடம் உண்டு என்பதற்குப் பல்லாற்றானும் கட்டியம் கூறி நிற்கிறது இத் தொகுப்பு.

‘புரட்சி வழி நடத்தும் திறவுகோல்!’

“நான் நிரந்தமானவன் அழிவதில்லை – எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை!”

                                            (திரை இசைப் பாடல்கள்: மூன்றாவது தொகுதி, ப.392)

என முழங்கிய கவிரயசர் கண்ணதாசனின் அடிச்சுவட்டில்,

“ நித்தம் நித்தம் பிறந்திடுவேன்;
          செத்த பின்பும் வாழ்ந்திடுவேன்;
முத்தமிழ்த் தொண்டு ஆற்றுகின்ற – தமிழ்ச்
          சித்தன் நானும் இறப்பதில்லை!”

                                                          (நெஞ்சத் தூண்கள், ப.132)

என மொழிகின்றார் இராம.இளங்கோவன், அவரது வாழ்வும் வாக்கும் இக் கூற்றை நாளும் மெய்ப்பித்து வருவது நெற்றித் திலகம். அவரே குறிப்பிடுவது போல் அவரது கவிதை, ‘வையத் தார்க்கு – புரட்சி வழி நடத்தும் திறவுகோலே!’ எனலாம்.



 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.


 

 

 

 

 




 

 

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்