'இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைக்குப் புது இரத்தம் பாய்ச்சிய பிரும்மா!'

முனைவர் இரா.மோகன்


டக்கத்தி மங்கையர் போல் முழுக்கவும் மூடாமல், கேரள மாதர் போல் முழுக்கவும் திறந்து விடாமல், தமிழகப் பெண்கள் போல் ஒதுங்கியும் ஒதுங்காமல் அழகு காட்டும் கவிதைகளை இதில் நாம் காண்கிறோம்… தலைப்புகள் தமிழ் மரபுக்குப் புதியவை. கவிதைக்கான கருவும் புதுமையானதே. மயக்க வைக்கும் சொற்சித்திரங்கள் இவை” எனக் ‘கறுப்பு மலர்கள்’ தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையில் நா.காமராசனின் கவிதைகளுக்குப் புகழாரம் சூட்டி இருந்தார் கவியரசர் கண்ணதாசன்.

“ கால மழைத் தூறலிலே
          களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாய்ப் பாலின் சரித்திரத்தில்
          சதிராடும் புதிரானோம்”

எனத் தொடங்குகின்றது ‘காகிதப் பூக்கள்’ என்னும் தலைப்பில் திருநங்கையரைப் பற்றி நா.காமராசன் வடித்துள்ள கவிதை.

“மூங்கையனின் பாட்டானோம்
          முடவன்கை எழுத்தானோம்
முழுக்குருடர் படிக்கின்றார்
          சந்திப் பிழை போன்ற
சந்ததிப் பிழை நாங்கள்!...
         வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்!”           
                             (கறுப்பு மலர்கள், பக்.
13-14)

எனத் திருநங்கையர் தங்கள் உணர்வினை வெளிப்படுத்துவதாகக் காமராசன் புனைந்த கவிதை வரிகள் தமிழுக்கு முற்றிலும் புதியவை; வாசகர்களின் நெஞ்சங்களை உலுக்கியவை.

தரவற்ற அனாதைகள், திருநங்கைகள், தெருவோரத்துப் பிச்சைக்-காரிகள், குடிகாரர்கள், நடைபாதைவாசிகள், வயல்வெளி மனிதர்கள், நீக்ரோக்கள், பழங்குடி மக்கள், விலைமகளிர் என்றாற் போல் சமுதாயத்தின் அடித்தட்டில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஏழை, எளிய மக்களின் உள்ளத்து உணர்வுகளையும் வாழ்க்கை நிலைகளையும் நா.காமராசன் தம் கவிதைகளில் பரிவுடன் பதிவு செய்தார். இவ் வகையில் பேராசிரியர் பாலா குறிப்பிடுவது போல், “நா.காமராசன் வழியாகவே புதுக்கவிதை முற்போக்காளர்களை வந்து சந்தித்தது” (புதுக்கவிதை – ஒரு புதுப்பார்வை, ப.179) எனலாம். காட்டாக,

“நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம்
ஆடை வாங்குவதற்காக…
நாங்கள்
மன்மத அச்சகத்தின் மலிவுப் பதிப்புகள்…
உணவுக் கொழுப்பில் பசி கொண்டவர்களுக்குப்
பசிக்கிறக்கத்தில் உணவானவர்கள் நாங்கள்.
குழந்தையின் பசியை நாங்கள் அறிந்ததில்லை.
ஏனெனில்,
நாங்கள் பசியின் குழந்தைகள்…
நாங்கள் அடிமைகள்
அதனால் தான்
எங்கள் சாம்ராஜ்யத்தில்
சூரியன் உதிப்பதுமில்லை
அஸ்தமிப்பதுமில்லை”      
          (கறுப்பு மலர்கள், பக்.
84-86)

என விலைமகளிரின் கூற்றாக நா.காமராசன் படைத்த கவிதை, இலக்கிய ஆர்வலர்களின் ஒட்டுமொத்தக் கவனிப்பையும் வரவேற்பையும் பெற்ற ஒன்றாகும்.

புனைவியல் படிமங்களுடன் கலீல் கிப்ரானது கவிதை மொழியின் சாயல்களும் பொலியும் வண்ணம் எழுதிச் செல்வது என்பது நா.காமராசனின் படைப்பாளுமையில் காணப்பெற்ற தனித்தன்மை; அவருக்கு நன்கு கைவந்த படைப்பாக்க நெறியும் கூட. பதச் சோறாக, அவரது ‘வானவில்’ என்னும் கவிதை அழகிய புனைவியல் படிமங்களின் அணிவகுப்பாகத் திகழ்வதை இங்கே சுட்டிக்காட்டலாம்.

“ இந்தப் பொல்லாத வானம்
மழையையும் தூறிக் கொண்டு
துணியையும் உலர்த்துகிறது
நார்களின்றித் தொடுக்கப்பட்ட மாலை இது…”

எனப் புனைவியல் பாங்கில் வானவில்லின் தோற்றத்தை வருணித்துத் தொடங்கும் கவிதை,

“சொர்க்கத்திலிருந்து வீசியெறியப்படுகிற
துரும்பு கூட
அழகாகத் தான் இருக்கிறது”     
 

என அழகியல் உணர்வு மிளிர நிறைவு பெறுவது சிறப்பு.

“இயற்கை
ஒரு தூரிகையை சிருஷ்டிக்க எண்ணி
ஒரு ஓவியத்தைச் சிருஷ்டித்தது.
அது தான் வானவில்”

என அழகிய ஓவியமாக வானவில்லை உருவகிக்கும் கவிஞர்,

“இது
வண்ணங்களின்
ஏழடுக்கு மாளிகையா?
அழகின் ஒற்றையடிப் பாதையா?...
வானம்
பறவைகளுக்கு அமைத்த
வரவேற்வு வளையமா?”      
       (கறுப்பு மலர்கள், பக்.
50-51)        

என அடுக்கடுக்காக வினவுவது நயமான புனைவியல் பதிவு ஆகும்.

வானவில்லின் வண்ணம் போல் இக் கவிதையில் களிநடம் புரிந்து நிற்கும் படிமங்கள் ஏழு: 1. நார்கள் இன்றித் தொடுக்கப்பட்ட மாலை, 2. மிகவும் அழகாகப் படைக்கப்பட்ட புருவம், 3. வசந்த ருதுவை மேலே அழைத்துச் செல்வதற்காக அமைக்கப்பட்ட பூப்பாலம், 4. மானுடர்களின் ஆத்மாவிற்கு வானத்தில் வைக்கப் பெற்ற கண்ணி, 5. வண்ணங்களின் ஏழடுக்கு மாளிகை,        6. அழகின் ஒற்றையடிப் பாதை, 7. வானம் பறவைகளுக்கு அமைத்த வரவேற்பு வளையம்.

‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பார்கள்; புதுக்கவிதை முன்னோடியான நா.காமராசனுக்கோ புல்லும் ‘வால் முளைத்த மண்’, ‘வசந்தத்தின் பச்சை முத்திரை’, ‘உடல் மெலிந்த தாவரம்’, ‘பனித்துளிகளின் படுக்கை அறை’, ‘கால்நடைகளின் தின்பண்டம்’, ‘பச்சை நிறத்தின் விளம்பரம்’, ‘குசேலரின் உணவுக் களஞ்சியம்’ (கறுப்பு மலர்கள், ப.38) என்றாற் போல் அழகிய படிமங்கள் பல அணிவகுத்து வருவதற்குக் காரணமாக விளங்கு-கின்றது.

ன்று மனித வாழ்வில் பிறப்பு  தொடங்கி இறப்பு வரை – சாதிச் சான்றிதழ் பெறுவது உட்பட – அனைத்து நிலைகளிலும் தாசில்தார் ஒப்புக் கொண்டால் தான் – ஏற்பு வழங்கினால் தான் – எதுவும் நடக்கும்; செல்லுபடியும் ஆகும். இதுதான் இன்றைய நடப்பு; அப்பட்டமான உண்மை. இதனை நா.காமராசனின் ‘இமயமலையும் தாசில்தாரும்’ என்னும் கவிதையில் தமக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு பதிவு செய்துள்ளார் நா.காமராசன். கவிஞரும் ஊர்ப் பெரியவர் ஒருவரும் உரையாடிக் கொள்ளும் பாங்கில் இக் கவிதை படைக்கப் பெற்றுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கவிஞர் தமது சொந்தக் கிராமத்திற்குச் செல்கிறார். அங்கே ஒரு பெரியவரோடு பேசிக் கொண்டிருக்கிறார். ‘என்ன தம்பி! பாரதியார் ரொம்பப் பெரியவரோ?” என்று பெரியவர் கவிஞரிடம் ஒரு கேள்வி கேட்கிறார். ‘பெரியவர்தான்!’ என்கிறார் கவிஞர். ‘அவர் அப்படி என்ன செய்தார்?’ என்று அப் பெரியவர் கேட்க, ‘இமயமலையே நமக்குச் சொந்தம் என்றார்; மன்னும் இமயமலை எங்கள் மலையே என்று பாடினார் பாரதியார்’ என்கிறார் கவிஞர். உடனே கிராமத்துப் பெரியவர் கவிஞரிடம் இப்படிக் கேட்கிறார்:

“இமயமலை நமக்குச் சொந்தம் என்று
தமிழ்க் கவிஞர் பாரதியார்
சொன்னால் போதுமா?
தாசில்தார் ஒப்புக்கொள்வாரா?” 
(ஆப்பிள் கனவு, ப.
76)

இங்ஙனம் நகைச்சுவை உணர்வு பளிச்சிடும் இடங்கள் நா.காமராசனின் கவிதை உலகில் பரக்கக் காணப்படுகின்றன. கல்லூரியில் சிறிது காலம் பேராசிரியராகப் பணியாற்றிய போது இளைய தலைமுறையினரொடு நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றதால் காமராசனின் வாழ்விலும் வாக்கிலும் மெல்லிய நகைச்சுவையும் நையாண்டியும் கிண்டலும் குறும்பும் இயல்பாகச் சேர்ந்து கொண்டன எனலாம்.

ஓர் இளைஞன் நல்ல கவிதைகள் நெய்தானாம். அவனைக் காவியம் எழுதச் சொன்ன போது அவன் இப்படிச் சொன்னானாம்:

“காவியம் எழுத ஆசை தான்!
கதாபாத்திரங்களையும்
உருவாக்கினேன்!
ஆனால் –
எனது மனைவி      
பாத்திரம் தேய்க்கிற ஓசையில்
எனது கதாபாத்திரங்கள் எல்லாம்
காணாமல் போய்விட்டன!”    
          (ஆப்பிள் கனவு, ப
.60)

அவனது கண்ணோட்டத்தில் “குற்றாலம் நீர்வீழ்ச்சியைப் போலவும் பெண்கள் உண்டு; குற்றாலம் ஜீவராசிகளைப் போலவும் பெண்கள் உண்டு!’

மிகச் சின்ன வயதிலேயே ஒரு ஞானியைப் போல எழுதியவன்’ (கறுப்பு மலர்கள், ப.77) எனத் தம்மைப் பற்றிக் குறிப்பிட்டுக் கொண்ட நா.காமராசனின் வாழ்வில் எதிர்பார்த்த விசுவரூபம் நிகழாமல் போயிருக்கலாம்; என்றாலும், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் குறிப்பிடுவது போல், “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைக்குப் புது இரத்தம் பாய்ச்சிய பிரும்மா என்று நிச்சயம் வரலாறு அவரைப் பத்திரப்படுத்தும்” (இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை, ப.196) என்பது உறுதி; முக்காலும் உண்மை.  “தன் கால்களில் இரத்தம் கசியக் கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் நா.காமராசன் தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன் கூட மறந்துவிடக் கூடாது” எனக் கவிஞர் வைரமுத்து, நா.காமராசனின் மறைவை ஒட்டி வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கும் கருத்தும் ஈண்டு நினைவுகூரத் தக்கதாகும்.



 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.


 

 

 

 

 




 

 

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்