ஆதிரா முல்லையின் கவிதை உலகு

முனைவர் இரா.மோகன்

து வேறு உலகத்து இயற்கை; திருவேறு, தெள்ளியர் ஆதலும் வேறு’ (374) என ‘ஊழ்’ அதிகாரத்தின் நான்காம் குறட்பாவில் மொழிவார் வள்ளுவர். அவரது கருத்தியலில் செல்வம் உடையவராதலும் வேறு; அறிவு உடையவராதலும் வேறு. இதே போல, ஒருவர் திறனாய்வாளராக இருத்தலும் வேறு; படைப்பாளியாக இருத்தலும் வேறு. ஒருவரிடமே திறனாயும் திறமும் படைக்கும் மனமும் ஒருசேரக் காணப்படுவது என்பது அரிதினும் அரிது. இதற்குக் கட்டியம் கூறுவது போல், சென்னை வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் ப.பானுமதியே ஆதிரா முல்லை என்னும் அழகிய புனைபெயரில் கவிதைகள் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. “சாமானியர்களின் எதார்த்தமான ஏக்கங்களுக்கு, இதயத்தின் ஓரத்தில் எழும் இன்ப துன்பங்களுக்கு, கோப தாபங்களுக்கு, சினத்திற்கு, சீற்றத்திற்கு வடிகால் தேடும் சிறு முயற்சியே இந்தக் கவிதைகள்” (ப.19) என்னும் கவிஞரின் ஒப்புதல் வாக்கு மூலம் ஈண்டு மனங்கொளத்-தக்கதாகும்.

சொற்கள் நடமாடினால், அது உரைநடை; நடனம் ஆடினால் அது கவிதை’ என்பர் அறிஞர். ‘பாரதி இறந்த போது, அவனுக்கு வயது 39’ என்றால், அது உரைநடை; ‘பாரதி தனது மீசையிலே கூட வெள்ளையனைக் காண விரும்பவில்லை; அதனால் 39 வயதிலேயே தனது வாழ்வை முடித்துக் கொண்டான்’ என்றால், அது கவித்துவமான உரைநடை. ‘மீசை நரைக்கும் முன்னே…’ என்பது கவிதை வடிவில் ஆதிரா முல்லை கவியரசர் பாரதியாருக்குச் சூட்டியுள்ள புகழாரம்.


“இளங்கோ கம்பனை வாசித்தான்
/ கண்ணனைப் பூசித்தான்
காலனையே ஏசித்தான்
/ கன்னித் தமிழையே நேசித்தான்!”

என இயைபு நயம் மிளிரப் பாரதியைப் போற்றிப் பாடும் கவிஞர்,


“மீசைதுடிப் பதைக் கவிதை
/ ஓசையிலே காட்டுவித்தான்”

எனப் பாரதியின் பாட்டுத் திறத்தைப் பாராட்டுவது குறிப்பிடத்தக்கது.

“மீசை நரைக்கும்முன் மூச்சின்
/ ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனுக்கு
/ ஆசைவரக் கூடாதென்று” (பக்.84-85)

எனப் பாரதியை பற்றிய கவிதை நிறைவடைவது சிறப்பு.

ல் கடவுள்’ என்னும் கவிதையில் ஒரு வித்தியாசமான கோணத்தில் ஆதிரா முல்லை ஆணாதிக்க மனப்பான்மையை விமர்சனம் செய்துள்ளார். ‘ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி’ என்பதைத் தாண்டி, பெண்களிலேயே மனைவிக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என நடந்து கொண்ட இராமனின் செயல்பாடுகளை இக் கவிதையில் கவிஞர் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்.

“மங்கை
/ என்ற காரணத்தால்
கல்
பாவை / அகலிகைக்கு
உயிர் தந்து
/ கடவுளானான்!

மனைவி
/ என்ற காரணத்தால்
உயிர்ப் பாவை
/ மைதிலியைக்
கனலாட்டி
/ கல்லானான்” (ப.41)

மங்கை என்ற காரணத்தால் முனிவரின் சாபத்தால் கல்லாகக் கிடந்த அகலிகைக்குத் தனது கால் வண்ணத்தால் உயிர் தந்து கடவுள் ஆன இராமன், மனைவி என்ற காரணத்தால் இராவணனது அசோக வனத்தில் சிறை இருந்த சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொல்லி கல்லாகிப் போனான் என்பது ஆணாதிக்கத்திற்கு எதிரான கவிஞரின் கூர்மையான விமர்சனம்.

தி
ருவள்ளுவரின் காமத்துப் பாலில் வரும் தலைவி ஒருத்தி,

“செல்லாமை உண்டேல் எனக்குஉரை; மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை”       
        (1151)

என ‘வெட்டு ஒன்று; துண்டு இரண்டு’ என்ற பாவனையில் தலைவனிடம் பேசுவாள். ‘பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அது வரையில் உயிர் வாழ வல்லவர்க்குச் சொல்’ என்பது அவளது அழுத்தம் திருத்தமான கூற்று. பாவேந்தர் பாரதிதாசன் படைக்கும் காதலியோ இன்னும் ஒரு படி மேலாக,

“இருப்பதால் இருந்தால் என்னிடம்
/ சொல்க – நீ
போவதாய் இருந்தால் என் கட்டைக்குச்
/ சொல்”

                                                            (பன்மணித்திரள், ப.4)

என வெளிப்படையாக உடைத்துப் பேசுவாள்.

வள்ளுவர் மற்றும் பாரதிதாசனின் அடிச்சுவட்டில் ஆதிரா முல்லை ‘கணமும் யுகமும்’ என்னும் தலைப்பில் ஒரு கவிதை படைத்துள்ளார். கவிஞரின் சொற்களில் அக் கவிதை வருமாறு:

“வருகிறேன் என்றாய்
/ அச்சொல் உதிர்த்த
உன் உதடுகள் மூடும்முன்

வாழ்ந்து விட்டேன்
/ ஒரு யுகம்

செல்கிறேன் என்றாய்
/ அச்சொல் உயிர்க்க
உதடுகள் விரியும் முன்
மாய்ந்து விட்டேன்
/ அக் கணம்”            (ப.49)

காதல் உலகில் ஒரு யுகமும் கணமும் நிகழ்ந்து விடும் விதமே தனி!

இன்று வள்ளுவர் இருந்தால் இப்படிப் பாடி இருப்பார் எனத் தோன்றுகின்றது:

“ஈன்ற பொழுதில் பெரிதுஉவக்கும் தன்னை’மம்மி’

என்றுசொல்லக் கேட்ட தாய்!”


ஆதிரா முல்லையும் ‘மம்மி’ என்ற தலைப்பில் அங்கதச் சுவை துலங்க ஒரு கவிதை படைத்துள்ளார்.


“அரிச்சுவடியில்
/ அழகாய்
சிரிக்கும்
/ அம்மா
நேரில்
/ அடிக்க வருவாள்”

ஏன் தெரியுமா? இதோ, கவிஞரின் மறுமொழி:

“ அம்மா  
/ என்றதால்!”                 (ப.58)

‘அம்மா’ எனத்  தமிழில்  அழைத்ததால் அடிக்க வருகிறாளாம் அம்மா!

“அம்மாவென அழைத்தது குழந்தை
அடுத்த நிமிடம் விழுந்தது அடி

‘கால் மீ மம்மி!”    
  (குட்டியூண்டு, ப.50)

என்னும் வசீகரனின் ஹைகூ கவிதை இங்கே ஒப்பு நோக்கத்தக்கது.

நாம் வாழத் தொடங்கிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் வாழ்வதில்லை’ என்பது லத்தீன் பழமொழி. ‘வாழ்க்கை என்னவென்று நாம் தெரிந்து கொள்ளுமுன், பாதி வாழ்க்கை கழிந்து விடுகின்றது’ என்பது பிரான்ஸ் பழமொழி. இவ்விரு உலகப் பழமொழிகளின் கூட்டுக் களியே ஆதிரா முல்லையின் ‘சக்கரம்’ என்னும் பின்வரும் கவிதை:

“அனுபவச் சக்கரத்தில்
குயவனின் கைப்பட்ட
/ களிமண்ணாய்
குழைந்து
/ வளைந்து
நெளிந்து
/ சுற்றிச் சுற்றி
முழுவதுமாக
/ உருப்பட எத்தனிக்கையில்
முடிந்தே விடுகிறது
/ வாழ்க்கை”            (ப.39)

இங்கிலாந்து பழமொழி ஒன்று குறிப்பிடுவது போல், கூட்டிக் கழித்துப் பார்த்தால், ‘நாம் அழுது கொண்டே பிறக்கிறோம், குறை சொல்லிக் கொண்டே வாழ்கிறோம், ஏமாற்றம் அடைந்து இறக்கிறோம்’ என்பது தானே உண்மை?

ஒற்றை வரியில் மதிப்பிடுவது என்றால், ஆதிரா முல்லை ‘பட்டாம்-பூச்சிகளின் இரவு’ என்னும் தம் கவிதைத் தொகுப்பின் மூலம் இருபத்தியோராம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைக்குப் புதுவண்ணமும் வனப்பும் சேர்த்துள்ளார் எனலாம்.



 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.


 

 

 

 

 




 

 

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்