சுவாமி விபுலானந்தரின் 'கங்கையில் விடுத்த ஓலை': அமைப்பும் அழகும்

முனைவர் இரா.மோகன்

பேராசிரியர் – சுவாமி விபுலானந்தரின் 125-ஆவது பிறந்த நாள் விழா – 2017 சிறப்பு மலர்க் கட்டுரை:

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (புறநானூறு, 192) என்னும் ஒரே பாடலால் – இன்னமும் கூர்மைப்படுத்திக் கூறுவது என்றால், ஒரே அடியாலேயே – உலகப் புகழ் பெற முடியும் எனக் காட்டியவர் சங்கச் சான்றோர் கணியன் பூங்குன்றனார். அதே போல, ‘யாழ் நூல்’ என்னும் ஒரே ஆய்வு நூலின் மூலம் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் உள்ளங்களை எல்லாம் ஈர்த்து ஆட்கொண்டவர் சுவாமி விபுலானந்தர் (1892-1949) ஆவார். பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் குறிப்பிடுவது போல், “அற்றை நாள் தமிழறிஞர்கட்கு இல்லாத ஒரு பெருஞ்சிறப்பு அடிகளாரிடம் இருந்தது. இயற்பியலில் பட்டம் பெற்ற அவர் ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் பெரும்புலமை படைத்தவராக இருந்தார்” (நான் கண்ட பெரியவர்கள், ப.50).

‘கங்கையில் விடுத்த ஓலை’

சுவாமி விபுலானந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கத் தமிழ்ப் பேராசிரியராக வீற்றிருந்த காலத்தில் அவரது தலைமையின் கீழ் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தவர் திரு.கந்தசாமிப் பிள்ளை ஆவார். ஆழ்ந்திருக்கும் திரு.கந்தசாமிப் பிள்ளையின் அரிய பண்புகளையும் தனித்திறமைகளையும் கண்டுகொண்ட அடிகள், அவரை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது தமது தலையாய கடமை என உணர்ந்து ஒரு முடிவு எடுத்தார்; அவருள் பொதிந்து கிடக்கும் புலமைத் திறம் வெளிப்படுவதற்கான நல்வாய்ப்புக்களை  உருவாக்கித் தந்தார்; உயர் வகுப்புக்களுக்கு அவர் விரிவுரைகள் நிகழ்த்துவதற்கான வழிவகையினை ஏற்படுத்தி உதவினார்.

அடிகளின் தூண்டுதலால் குடத்துள் இட்ட விளக்காகத் தாம் உண்டு, தம் கடமை உண்டு என்று இருந்த கந்தசாமிப் பிள்ளை குன்றின் மேல் இட்ட விளக்காக மிளிரலானார். அவர் தமக்குப் பல்லாற்றானும் ஏற்றம் தந்த அடிகளைத் தம் குருவாகவே எண்ணலானார்; அடிகளோ கந்தசாமிப் பிள்ளையுடன் உணர்ச்சி ஒத்த நட்புரிமை கொண்டு நெருங்கிப் பழக முற்பட்டார். காலப்போக்கில் ஒரு நாள் கந்தசாமிப் பிள்ளை மாரடைப்பால் தாக்குண்டு மரணம் அடைந்த போது, வேலூர் மடத்தில் தங்கி இருந்த அடிகள் ஆழ்ந்த தம் நட்புத் திறம் விளங்க, ‘கங்கையில் விடுத்த ஓலை’ என்ற தலைப்பில் ஒரு தூது இலக்கியத்தைப் படைத்து பெருமைப்படுத்தினார். கந்தசாமிப் பிள்ளையிடம் கங்கையைத் தூது அனுப்புவதாக அடிகள் பாடிய கையறுநிலைக் கவிதையே ‘கங்கையில் விடுத்த ஓலை’. இக் கவிதையின் அமைப்பும் அழகும் குறித்து ஈண்டுச் சுருங்கக் காண்போம்.

‘கந்தசாமிப் பெயரோன் கனிந்த குண நலத்தான்’

திருக்குறளில் நூறாவது அதிகாரமாக இடம்பெற்றிருப்பது ‘பண்புடைமை’.
அதன் ஆறாவது குறட்பாவில் ‘பண்புடையார் இருப்பதால் உலகம் இருக்கிறது’ என்கிறார் திருவள்ளுவர். ‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ (996) என்பது அவரது மறைமொழி. அரம் போலும் கூரிய அறிவு படைத்தவராயினும், மக்கட் பண்பு இல்லாதவரை மரம் போல்வர் எனச் சாடுவார் திருவள்ளுவர் (997). வள்ளுவர் வாக்கினைப் பொன்னே போல் போற்றி வாழும் அடிகள், தம் கவிதையின் தொடக்கத்தில் கந்தசாமிப் பிள்ளையின் உயர்பண்புகளை நிரந்தினிது கூறுகின்றார்; ‘இன்றமிழின் இயனூல் எத்தனையோ அத்தனையும் எண்ணி ஆழங்கண்டோன்’ என்றும், ‘பணிந்த மொழிப் பெரும்புலவன், கனிந்த குண நலத்தான்’ என்றும், ‘சொல் வகையும் சொற்றொகையும் சொல்நடையும் உணர்ந்தோன், சொலல் வல்லான், சொற்சோராத் தூய நெறியாளன்’ என்றும், ‘அழுக்கறுத்த தூய சிந்தை அந்தண்மை அடக்கம், அணி இவைதாம் எனக் கொண்டோன், அறநெறியில் நின்றோன்’ என்றும், ‘முன்னோர் விரித்துரைத்த அகம் ஏழும் புறம் ஏழும் பயின்றோன்’ என்றும், ‘உலகு துறந்து, தவநெறியில் தலைப்பட்டோன், அவாவின்மை என்னும் தனிச்செல்வம் திரட்டி வைத்த தாவில் புகழாளன்’ என்றும், ‘சோழவந்தான் ஊரைச் சேர்ந்து திகழ் சைவநெறித் திருமடத்தில் உறைந்தோன்’ என்றும் ஆறு பாடல்களில் ‘கந்தசாமிப் பெயரோ’னின் விழுமிய பண்பு நலன்களை எல்லாம் எடுத்துரைக்கின்றார்; ‘என்னைக் கண்ட நாள் அன்பு என்னும் கயிறு கொண்டு பிணித்தான்; அந்நாள் முதலாக நட்புரிமை பூண்டோம்’ என மனம் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் மொழிகின்றார்.

ஆருயிர் நண்பர் மாரடைப்பு நோயால் இறத்தல்

நற்றவத்தோரான அடிகள்  வடநாட்டுப் பயணம் மேற்கொண்டதை அறிந்து, அவர் வாழ்கின்ற தவப்பள்ளி யாது, அதன் முகவரி என்ன என வினவித் தெரிந்து கொண்டு அடிகளுக்கு ஓலை ஒன்று விடுக்க வேண்டும் எனத் தமது சிந்தையில் கருதி இருந்தார் கந்தசாமி. ஆயின், எழுதிச் செல்லும் விதியின் கையோ வேறு விதமாக எழுதிச் சென்றது. ஓரிரு நாள் கழிவதற்கு முன்னர் மாரடைப்பு நோயால் தாக்குண்டு ஊனுடல் பாரில் விழ, அடிகளின் ஆருயிர் நண்பரான கந்தசாமி வானுலகு புக நேர்ந்தது. இந்தத் துயரச் செய்தி தமது ‘செவியில் அனற்பிழம்பாய்ப் புகுந்து உளத்தை உருக்கியது அப்பொழுதில்’ என்கிறார் அடிகள். இந்நிலையில் பொங்கி எழும் துயர்க் கனலைப் போக்குவதற்கும், மாயப் பொய்யுலகின் உண்மையினை உணர்ந்து உள்ளம் தெளியவும் கருதிக் கங்கை எனும் தெய்வ நதியின் கரைப்புறத்தை அடைகின்றார் அடிகள். கங்கை நதியின் நீரலைகளும், ஈமத் தீ போல் சிவந்து காணப்படும் மேற்றிசை வானமும், மெலிந்து மறைந்திடும் கதிரவனும், நலிந்தவர் உள்ளம் போல காற்று உயிர்த்துத் தூற்றும் பனித் திவலைகளும், காரிருள் மறைந்து வானவெளிப் பரப்பில் தோன்றி அன்பு சொரிந்திடும் வெண்மதியமும், அக்கரையில் இருந்து சுடுகாட்டு நரிகள் எழுப்பும் அழுகுரலும், இக்கரையில் ஆற்றில் உதிர்ந்த சருகுகளும் குச்சிகளும் அலையால்  எற்றுண்டு எம் மருங்கும் செயல் ஒழிந்து கிடப்பதும் அடிகளுக்கு மானிடர்தம் வாழ்க்கையும் இத்தகையதே என்னும் மெய்யியல் சிந்தனையை உணர்த்தி நிற்கின்றன.

“ நீர்த்திரையால் இழுப்புண்ட குச்சி ஒன்று கணமும்
                       நில்லாது மேல்எழுந்தும் கீழ்விழுந்தும் அலைந்து
              சீர்க்கரையில் எற்றுண்டு கிடந்தசெயல்  நோக்கி
                       சிந்திக்கின் மானிடர்தம் வாழ்க்கைஇது…”

என  உணர்ந்து தெளிகின்றார் அடிகள். ‘நீர்வழிப் படூஉம் புணை போல, ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது, திறவோர் காட்சியில் தெளிந்தனம்’ (புறநானூறு, 192) என்னும் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல் அடிகள் ஈண்டு நினைவுகூரத் தக்கனவாகும்.

அடிகளாரின் மெய்யியல் சிந்தனைகள்

இன்ப விளையாட்டின்  இடையே மக்கள் மேல் எழுந்து குதிக்கின்றனர்; ‘எமக்கு நிகர் யார்?’ என்கின்றனர். மறுகணமே உள்ளத்தில் துன்பமுற மண்ணில் விழுந்து கண்கள் நீர் சொரியச் சோர்ந்து அழுகின்றனர்; மயக்கம் எனும் சுழல் காற்றில் சிக்கித் தவிக்கின்றனர்; மரணம் எனும் பெருங்கரையில் எற்றுண்டு கிடக்கின்றனர்; தத்தம் வினைப்பயனுக்கு ஏற்ப மறுபிறவி எடுத்து மண்ணுலகில் உழல்கின்றனர்; இடையே காதல் வலையில் வீழ்ந்து எண்ணிறந்த வேதனையையும் அனுபவிக்கின்றனர். ‘இவை எல்லாம் எத்திறத்தால் நிகழ்கின்றன?’ என நீல விதானத்தில் எழில் முகத்தின் சுடர் எழுப்பி எழும் வான் மதியை நோக்கி வினவுகின்றார் அடிகள்.

“ மாய்தல் எனும் பேருண்மை, பிறத்தல்எனும் உண்மை,
                      வந்துதித்தோர் தொல்லுலகில் வளர்தல்எனும் உண்மை,
              தேய்தல்எனும் உண்மை: இவை யாரும்உளங் கொள்ளச்
                      சென்றுதேய்ந்து இறந்துஉதித்து நின்றுவளர் கின்றேன்”

என அடிகளுக்கு மறுமொழி கூறுகின்றது வான் மதியம்.

“ தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
               மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
               அறியா தோரையும் அறியக் காட்டித்
               திங்கள் புத்தேள் திரிதரும்”           (27)

என்னும் உறையூர் முதுகண்ணன் சாத்தனாரின் புறநானூற்றுப் பாடல் அடிகள் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கனவாகும்.

“ ‘இன்துயில்போல் சாக்காடும் இனிதுதுயின் றதன்பின்
                      எழுவதுபோல் பிறப்பும்’எனும் இயற்புலவன் உரையை
                நன்றுணர்தி”

எனக் கூறும் தண்மதியை நோக்கி,

“ நரகமொடு சுவர்க்கமும்தான் நண்ணுவது ஏன்?”

என் வினவுகின்றார் அடிகள்

“ நற்கனவு சுவர்க்கம், உளம் நலிய வரும் கனவு
                       நரகம்இவை நல்வினையின் தீவினையின் விளைவாய்
              உற்றஎன அறிதி”

என உரைக்கின்றது வான்மதி.

“ வருந்தித் தான் கற்றகல்வி மாய்ந்துமறைந் திடுமோ?
                        மறுமையிலும் உதவுமோ வான்மதியே?”

என அடிகள் கேட்க,

“ ‘திருந்துகல்வி எழுமையும் ஏமாப்புஉடைத்து’ என்று உரைத்த
                         செம்மொழியைத் தேர்தி”

என வெண்மதியம் தக்க விடையினைக் கூறுகின்றது.

பிரமசரியம் பேணி ஒரு மாணவனைப் போல் வாழ்க்கை முழுவதும் இலக்கண நூல் பயின்ற தம் நண்பர் கந்தசாமி, வானகம் சென்றாலும் வாளா இராமல் பயில்வார் எனும் உண்மையை உணர்ந்து தெளிந்து உளம் நெகிழ்கின்றார் அடிகள்.

அன்புபொதி வாசகங்கள் எழுதி ஓலை வரைதல்

‘உலகில் உயிர்கள் தோன்றுவதும் ஒருநாள் மறைவதுவும் தொன்றுதொட்டு இருந்து வரும் இயல்பே’ என்னும் உண்மையை உணர்ந்து தெளிவு பெற்ற நிலையில் அடிகளின் துயரம் ஒருவாறு அகல்கின்றது. எனினும் அன்புத் தொடர்(பு) அகலாமையினால் மாற்றம் ஒன்று உரையாமல் வான் புகுந்த தமது கெழுதகை நண்பர் கந்தசாமிக்கு அன்பு பொதி வாசகங்கள் எழுதி ஓர் ஓலை வரைகின்றார் அடிகள்.

‘அறிவு அற்றம் (அழிவு வராமல்) காக்கும்’ எனும் அறவுரையை எழுதி, அறநெறியால் வாழ்வில் இன்பம் எய்தும் அமைதியையும்  எழுதி, ‘உறுநட்பு என்றென்றும் நிலைபெறும்’ என்று உறுதிப்பாடு எழுதி, ‘ஓது
விபுலாநந்தன் உரை இவை’ என்று எழுதி, ‘செல்வ மலி விண்ணாட்டில், செழுங்கலைத் தெய்வம் வாழ் திருநகரில், தமிழ் வழங்கும் தெருவில், ஒரு மனையில் அல்லல் இன்றி வாழ்கின்ற கந்தசாமிப் பேரறிஞனுக்கு இவ்வோலை’ என அடையாளமும் பொறிக்கின்றார் அடிகள்.

வையகத்தோர் அன்னத்தை, கிளியை, வான்மேகத்தினை இதுவரை தூதாக விடுத்துள்ளனர்; ‘யான் எழுதும் ஓலை கொண்டு விண்புகுந்து நண்பரிடம் சேர்க்கும் உதவியினைப் புரியவல்லார் யாவர்?’ என நீள நினைந்து பார்த்த அடிகள், சிவபெருமான் செஞ்சடையை எய்தி நின்ற கங்கை எனும் செல்வ நதியே இவ்வுதவியைப் புரிய வல்லது, இதனால் உமையம்மையின் துணையையும் பெறலாம் எனத் துணிந்து, தெளிந்து, கங்கை நதியினைத் தொழுது ஏத்த முற்படுகின்றார்.

மும்முறை நினைந்து முறைமையின் தெண்டனிட்டு அடி வணங்கி, ‘தேவர் நாட்டிடை தங்கியுள்ள நண்பன் கையில் ஈங்கு இது சேர்க!’ என்று பெரிய  கங்கை ஆற்றின் நீரில் ஓலையை இடலும், அவ் ஓலையை ‘ஏந்திய வானதி வேலையை நோக்கி விரைந்து சென்றதுவே!’ எனக் கவிதையை முடிக்கின்றார் அடிகள்.

சுருங்கக் கூறின், பழுத்த தமிழ்ப் புலமையும், முதிர்ந்த மெய்யியல் தெளிவும், கெழுதகை நட்பின் உயர்வும் ஒருங்கே மிளிரும் வண்ணம் ‘கங்கையில் விடுத்த ஓலை’ எனும் இத்தூது இலக்கியத்தைப் படைத்துள்ளார் சுவாமி விபுலானந்தர் எனலாம். “சுவாமி விபுலானந்தர் யாழ்ப்பாணத் தோன்றல்; இலங்கைச் செல்வம். அவர் தமிழிலுங் கலைஞர்; ஆங்கிலத்திலுங் கலைஞர். அவர்தங் கலைமனம் அவரது பேச்சிலும் எழுத்திலுங் கமழ்கிறது… சுவாமிகள் முயற்சியுடையவர். அவரது முயற்சி அவரைக் கயிலைக்குச் செலுத்தி மீட்டது; பண்டைத் தமிழர் கண்ட யாழை மீண்டும் உயிர்ப்பிக்க ஊக்கியது” (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள்: பகுதி 1, பக்.173-174) என்னும் தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் புகழாரத்தோடு இக் கட்டுரை நிறைவு பெறுவது சாலவும் நன்று.



 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.


 

 

 

 

 




 

 

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்