குறுந்தொகையில் நோக்கு

முனைவர் இரா.மோகன்

தொல்காப்பியர் குறிப்பிடும் செய்யுள் உறுப்புக்கள் 34. அவற்றுள் பத்தாவது உறுப்பாக இடம்பெறுவது நோக்கு. மூதறிஞர் தமிழண்ணல் இதனைத் ‘தொல்காப்பியர் சுட்டும் தமிழ்முறைத் திறனாய்வு’ என்பார். “‘நயம் பாராட்டுதல்’ அன்று இது. நயங்களைத் தேடிக் கண்டுபிடித்தல் … தமிழில் நயங்களைக் காண்பது நோக்கு. நோக்கு - உற்று நோக்குதல். காதலர் நோக்கு உட்குறிப்புடையது. வயிரக் கற்களை நோக்குவது - நயம் பயம் தேடித் தரம் பிரிப்பது. இலக்கியத்தில் நோக்கு என்பது அதன் குணம் குற்றங்களை ஆராய்வது” (தொல்காப்பியம்: மூலமும் கருத்துரையும், ப.466) என்னும் அவரது விளக்கம் இங்கே மனங்கொள்ளத் தக்கதாகும்.

“மாத்திரை முதலா அடிநிலை காறும்
நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே”

என்பது தொல்காப்பிய நூற்பா (1361). ஈரடிகளால் அமைந்த ஒரே ஒரு நூற்பாவில் நோக்குக் கோட்பாடு தொல்காப்பியரால் விளக்கப் பெற்றுள்ளது.

மாத்திரை முதலா(க) அடிநிலை காறும் - மாத்திரை முதலாக அசை, சீர், சொல், அடி, பா அனைத்தையும். அடி என்றாலும் அது அடிகளால் ஆன பாவையும் குறிக்கும். இவை அனைத்தையும் ‘நோக்குதல்’ என்றால் என்ன? இங்கு ஒரு மாத்திரையின் அளவு கூடியது ஏன்? இச்சொல் இங்கு இடம் பெற்றிருப்பதன் காரணம் யாது? இப் பாவின் சந்தம் இவ்வாறு அமைக்கப் பெற்றதன் நுட்பம் என்ன? - என்றாற் போல் கவிதை உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் மறித்து - எதிர்மறித்துக் கேட்டு - உரிய விடையினைக் காண்பதே நோக்கு. அதாவது ஒரு கவிஞன் தான் படைக்கும் ஒவ்வோர் எழுத்தையும் சொல்லையும் - ஏன் மாத்திரையையும் கூட - ஏதேனும் ஒரு பயன் கருதியே படைக்க வேண்டும்; பயனின்றி, வெற்றெனத் தொடுப்பது சிறந்த கவிதை ஆகாது.

தொல்காப்பியர் மாத்திரையைக் குறிப்பிடக் காரணம் அதுவே சிற்றெல்லை என்பதால். எனவே, ஒரு படைப்பில் அமைந்துள்ள அத்துணைக் கூறுகளும் ஏதேனும் ஒரு காரணம் கருதிப் பயனுடையனவாகவே படைக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது புலனாகின்றது.

“யாதானும் ஒன்றைத் தொடுக்கும் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை… அஃது ஒரு நோக்காக ஓடுதலும் பல நோக்காக ஓடுதலும் இடையிட்டு நோக்குதலும் என மூன்று வகைப்படும்” என்பது இளம்பூரணர் நோக்கிற்குத் தரும் அழகிய விளக்கம் ஆகும்.

“நோக்கு என்பது மாத்திரை முதலாகிய உறுப்புக்களைக் கேட்டோர்க்கு நோக்குப் படச் செய்தல்… நோக்கு என்பதோர் உறுப்புப் பெறினே, அது செய்யுளாவது… இதன் பொருள் மாத்திரையும் எழுத்தும் அசைநிலையும் சீரும் முதலாக அடி நிரம்புந்துணையும் நோக்குடையனவாகச் செய்தல் வன்மையால் பெறப்படுவது நோக்கு என்னும் உறுப்பாவது” என்பது பேராசிரியர் நோக்கிற்குத் தரும் அரிய விளக்கம் ஆகும்.

பேராசிரியர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் குறிப்பிடுவது போல், “மீண்டும் மீண்டும் நோக்க நோக்க நுண்பொருள்களைத் தரும் பண்பிற்கு நோக்கு என்று தொல்காப்பியனார் பெயர் இட்டது, மிகவும் பொருத்தமாகும்” (நோக்கு, ப.18).

பேராசிரியர் ‘முல்லை வைந்நுனை’ என்று தொடங்கும் அகநானூற்றுப் பாடல் ஒன்றினை (4) எடுத்துக்காட்டி, அதில் வரும் சிறு அடைமொழி முதல் அனைத்துக் கூறுகளும் காரண காரியத்தோடு அமைக்கப்பெற்றிருப்பதை நுண்ணிதின் விளக்குவர். “உலகின் முதல் திறனாய்வாளர் இப்பேராசிரியர் என்று கூறுமளவு அவர் ‘நோக்குந்’ திறன் அமைந்துள்ளது” (தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள், ப.237) எனப் புகழாரம் சூட்டுவர் மூதறிஞர் தமிழண்ணல்.

மாத்திரை நோக்கு, எழுத்து நோக்கு, சொல் நோக்கு, சீர் நோக்கு, தொடை நோக்கு, அடி நோக்கு, அணி நோக்கு எனப் பல வகைகளில் தொல்காப்பியரின் தனிச் சிறப்புக் கோட்பாடான நோக்கினைப் பகுத்துக் கொண்டு, அவற்றின் அடிப்படையில் குறுந்தொகைப் பாடல்களில் அமைந்துள்ள நயங்களையும் நுட்பங்களையும் ஈண்டு ஆராயலாம்.

‘நல்ல குறுந்தொகை’

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றிறந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை”

என்பது எட்டுத்தொகை நூல்களின் பெயர்களைப் பட்டியல் இடும் வெண்பா. முதற்கண், இவ் வெண்பாவையே நோக்குக் கோட்பாட்டின் அடிப்படையில் நாம் பகுத்து ஆராயலாம். ‘நல்ல குறுந்தொகை’ எனக் குறுந்தொகைக்கு மட்டும் ‘நல்ல’ என்ற சிறப்பு அடைமொழியை இவ் வெண்பா கையாளுவது ஏன்? எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை பெற்றிருக்கும் தனிச்சிறப்புக்களைக் கருத்தில் கொண்டா? முதலாவது, குறுந்தொகைப் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையவை; இந்த அடியளவு பாடலை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளப் பெரிதும் உறுதுணை புரிவது. இதனாலேயே ஏனைய தொகை நூல்களைக் காட்டிலும் குறுந்தொகையே உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோளாக எடுத்தாளப்பெற்றுள்ளது. “இந்நூலுள் இப்பொழுது தெரிந்தவரையில் 165 செய்யுட்களே பிற நூல் உரைகளில் மேற்கோளாகக் காட்டப் பெறாதவை” (முகவுரை, குறுந்தொகை மூலமும் உரையும், p.ii) என்பர் ‘பதிப்பு வேந்தர்’ உ.வே. சாமிநாதையர். எட்டுத்தொகையில் முதலில் தொகுக்கப்பட்ட நூல், செம்புலப் பெயல் நீரார் என்பது போல் சிறப்புப் பெயர்களால் பெயர் பெற்றவர்களாக 18 பேர் இடம்பெற்றுள்ள நூல் என்னும் பிற சிறப்புக் காரணங்களின் அடிப்படையிலும் ‘நல்ல’ என்ற அடைமொழி குறுந்தொகைக்குப் பெரிதும் பொருந்தி வருகின்றது. “ஒரு சிறு சொல்லேனும் வறிதே விரவாமல் உய்த்துணருந்தோறும் ‘நவில்தொறும் நூல் நயம்’ என்னும் முதுமொழிக்கிணங்க, இன்பஞ் செய்வன சங்கப் பாடல்களேயாகும்… குறுந்தொகை என்பது அடியளவாற் குறுகிய-தன்றிப் பொருளளவாற் பெரியதென்றே கூறலாம்” (உரைநடைக் கோவை: இரண்டாம் பகுதி. பக்.96-97) எனப் பண்டிதமணி மு.கதிரேசனார் சங்கப் பாடல்களுக்கு - குறுந்தொகைக்கு - சூட்டும் புகழாரம் இங்கே நினைவுகூரத் தக்கது ஆகும்.

I. தலைவன் கூற்றில் ஒளிரும் நோக்குத் திறம்

குறுந்தொகை என்றதுமே நம் நினைவுக்கு மோனையைப் போல் முன்னே ஓடி வந்து நிற்கும் பாடல் செம்புலப் பெயல்நீராரின் பின்வரும் பாடல்:

“யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே”  
(40)

இப்பாடலை இயற்றிய புலவரின் பெயர் என்ன என்று தெரியாது. எனினும், காதலரின் நெஞ்சம் கலந்தமைக்குச் செம்புலப் பெயல்நீரை உவமை கூறிய சிறப்பால் இப்பாடலின் ஆசிரியர் ‘செம்புலப் பெயல் நீரார்’ என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றார்.

இப்பாடலின் சிறப்பினையும் சீரினையும் பறைசாற்றும் ஓர் அரிய நிகழ்ச்சி வருமாறு: இலண்டன் மாநகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வண்டியில், உலகில் சிறந்த குறும்பாடல்களை, அவ்வம் மொழி வடிவிலும் ஆங்கில மொழிபெயர்ப்புடனும் அழகாக அச்சடித்து வைப்பார்களாம். இலக்கிய ஆர்வலர்கள் இடையே இப் பழக்கம் பெரும் வரவேற்பைப் பெற்றதாம். இப் பாடல்கள் பிறகு, ‘மண்ணுக்கு அடியில் மலரும் பாக்கள்’ (Poems on the Underground) என்னும் தலைப்பில் நூலாகவும் அச்சிடப்படுகின்றனவாம். அண்மையில் செம்புலப் பெயல் நீராரின் இக் குறுந்தொகைப் பாடல், பூமிக்கு அடியில் ஓடும் இரயிலில் பொறித்து வைக்கப்பட்டதாம். ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. அவர்களுக்கு முன்பே குறுந்தொகையை 1915-ஆம் ஆண்டில் பதிப்பித்து, திருக்கண்ணபுரம், திருமாளிகை சௌரிப் பெருமாள் அரங்கன் வெளியிட்ட நூல் ஒன்று, இலண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் காலிகோ கட்டுடன் நல்ல நிலையில் உள்ளதாம். அதில் இருந்து இப் பாடலைத் தேர்ந்தெடுத்து, சங்க இலக்கிய ஆங்கில மொழியாக்கத்தில் தன்னிகரற்ற பேரறிஞர் ஏ.கே.இராமானுசன் மொழிபெயர்ப்புடன் இணைத்து, அந்தத் தொடர் வண்டியில் அமைக்கப்-பட்டிருப்பதை  அவ்வாறே ஒளிப்படம் எடுத்து ‘இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது (The Hindu, 01.07.2001). விக்கிரம் சந்திரா என்பவர் Red Earth and Pouring Rainஎன ஓர் ஆங்கில நாவல் எழுதி இருப்பதாகவும் எஸ்.தியோடர் பாஸ்கரன் ‘இந்து’ நாளிதழில் எழுதிய அச்செய்திச் சித்திரத்தில் குறிப்-பிட்டுள்ளார்” (பேராசிரியர் தமிழண்ணல், குறுந்தொகை: மக்கள் பதிப்பு, முன்னுரை, பக்.20-21).

‘அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என்னும் இக்குறுந்தொகைப் பாடலின் ஈற்றடியில் வெளிப்படும் நோக்குத் திறம் எண்ணி எண்ணி மகிழத்தக்கதாகும். அதுவும், ‘தாம் கலந்தனவே’ என்னும் இப்பாடலின் ஈற்றுத் தொடரில் புலப்படும் நயம் நுட்பமானது. இரண்டு காதல் நெஞ்சங்களின் இயல்பான சங்கமத்தினை இதனினும் மேலாக எவரும் சொல்லில் வடித்து விட முடியாது. ‘தாம்’ என்ற சொல் இப் பாடலில் உணர்த்தும் நோக்கு நயம் குறிப்பிடத்தக்கது.

II. தலைவி கூற்றில் மிளிரும் நோக்கு நுட்பம்

குறுந்தொகை மூன்றாம் பாடல் தலைவி கூற்றாக அமைந்தது; தேவகுலத்தார் இயற்றியது. ‘தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டித் தோழி இயற்பழித்த வழித் தலைமகள் இயற்பட மொழிந்தது’ என்பது இப்பாடலின் துறைக் குறிப்பு. நீண்ட காலமாக வரையாது ஒழுகும் ஒரு தலைவன் வேலிப் புறத்தே வந்து நிற்கிறான். அவன் வந்து நின்றதை அறிந்த தோழி, அவன் விரைவில் தலைவியை வரைந்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தோடு, அவன் செவியில் படும்படி அவனது நட்பைப் பழித்துக் கூறுகிறாள். அப்போது தலைவி, தலைவனோடு தான் கொண்ட நட்பு மிகச் சிறப்புடையது என்று தோழிக்கு உணர்த்துகிறாள். அவளது கூற்றினைத் தன்னகத்தே கொண்ட குறுந்தொகைப் பாடல் வருமாறு:

“நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆரள வின்றே; சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” 
 
(3)

நான்கே அடிகளால் அமைந்த இப்பாடல் நோக்குத் திறம் நனி சிறந்து மிளிரும் பாடல் ஆகும்.

1. ஒரு முப்பரிமாண ஓவியம் போல் இப்பாடல் மலரினும் மெல்லிய காதல் உணர்வின் மலையினும் மாணப் பெரிய திறத்தினைச் சொற்களில் வடித்துக் காட்டி இருக்கும் பாங்கு பயில்வோர் நெஞ்சை அள்ளுவதாகும்.

நிலத்தினும் பெரிதே           - பூமியைக் காட்டிலும் அகலம் உடையது

வானினும் உயர்ந்தன்று     - ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது

நீரினும் ஆரளவின்றே        - கடலைக் காட்டிலும் அளத்தற்கு                                                                அரிய ஆழம் உடையது

தலைவனோடு தான் கொண்ட நட்பு மிகச் சிறந்தது என்பதை உணர்த்த இங்கே தலைவி நிலம், வான், கடல் என்ற மூன்றையும் பெருமைக்கு எல்லைகளாகக் குறிப்பிடுகின்றாள்.

2. இப்பாடலில் தலைவனுடைய நாட்டிற்கு அடையாக வந்துள்ள குறிஞ்சிப் பூவும் தேனும் இறைச்சிப் பொருள் எனக் கூறுவர் இளம்பூரணர். நாடன் - குறிஞ்சி நிலத் தலைவன். ‘சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடன்’ என அவன் சுட்டப்பெறுகின்றான். குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் தனிச்சிறப்பினது; அம் மலரில் இருந்து ஈக்களால் எடுக்கப்படும் தேன் மிக்க சுவையை உடையது. ‘பெருந்தேன்’ என்ற அடை இதனை உணர்த்துகின்றது.

3. இப்பாடலில் இடம்பெற்றுள்ள உம்மைகளும் ஏகாரங்களும் அடைகளும் நோக்குத் திறத்துடன் அமைந்து உரிப்பொருளை அழகோடும் ஆற்றலோடும் உணர்த்தியுள்ளன.

III. தோழியின் கூற்றில் துலங்கும் நோக்கு நுட்பம்

“அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே,
இன்னும் பாடுக பாட்டே, அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே”              
(23)

என்பது ஒளவையாரின் புகழ் பெற்ற ஒரு குறுந்தொகைப் பாடல். ‘கட்டுக்காணிய நின்றவிடத்துத் தோழி அறத்தொடு நின்றது’ என்பது இப்பாடலின் துறைக் குறிப்பு.

  • 1. இப்பாடலில் அகவன் மகளைத் தோழி மூன்று முறை விளிப்பது நோக்கத்தக்கது. தான் கூறும் கூற்றின் உண்மையைக் கூர்ந்து அறியும் பொருட்டு இங்ஙனம் மும்முறை அகவன் மகளை விளிக்கிறாள் தோழி.
     

  • 2. ‘மனவுக்கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்’ என அகவன் மகள் அணிந்த அணியையே - சங்கு மணியினால் ஆகிய கோவையையே - தோழி அவளது கூந்தலுக்குத் உவமையாகக் கையாண்டிருப்பது சிறப்பு. இவ்வுவமையால் கட்டுவிச்சி நரை மூதாட்டி என்பது பெறப்படும்.
     

  • 3. ‘பாடுக பாட்டே’, ‘இன்னும் பாடுக பாட்டே’, ‘அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே’ எனத் தோழி மும்முறை அகவன் மகள் பாடிய பாடலைப் பற்றிச் சுட்டுவதும் நோக்குக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராயத் தக்கதாகும். தலைவியது வேறுபாட்டின் காரணத்தைச் செவிலித் தாய் முதலியோர் நெற்குறி பார்க்கும் கட்டுவிச்சியைக் கொண்டு ஆராய்ந்த காலத்தில் தோழி, ‘தலைவனுக்கு உரிய மலையை நீ பாடுவாயாக’ என்று கூறுவதன் வாயிலாக அத்தலைவியின் வேறுபாடு உண்மையில் ஓர் ஆடவனால் உண்டாயிற்று என்பதை நுட்பமாகப் புலப்படுத்தி விடுகிறாள்.
     

  • 4. “‘அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டு’ என்று கூறின், ‘அவர் யார்?’ என்னும் ஆராய்ச்சி தாயரிடையே பிறந்து உண்மை அறிதற்கு ஏதுவாமாகலின் இஃது அறத்தொடு நிற்றலாயிற்று” (குறுந்தொகை மூலமும் உரையும், ப.56) என்னும் ‘பதிப்பு வேந்தர்’ உ.வே.சா.வின் நுண்ணிய உரை விளக்கம் இக் குறுந்தொகைப் பாடலில் பொதிந்துள்ள நோக்குத் திறத்தைப் புலப்படுத்துவதாகும்.

IV. செவிலித் தாயின் கூற்றில் சிறந்து விளங்கும் நோக்கு

“காலே பரிதப் பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள்இழந் தனவே;
அகல்இரு விசும்பின் மீனினும்
பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே”    
         
   (44)

என்பது குறுந்தொகையில் இடம்பெற்றிருக்கும் 44-ஆவது பாடல். இதனை இயற்றியவர் வெள்ளிவீதியார். ‘இடைச்சுரத்துச் செவிலித் தாய் கையற்றுச் சொல்லியது’ என்பது இப்பாடலின் துறைக் குறிப்பு. தலைவி தலைவனுடன் போன பின்பு அவர்களைப் பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலி அவர்களைக் காணாமல் வருந்திக் கூறியது இப்பாடல். “என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன. இணைந்து எதிர்வருவாரைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன. நிச்சயமாக இந்த உலகத்தில் நம் மகளும் அவள் தலைவனும் அல்லாத பிறர், அகன்ற பெரிய வானத்தில் உள்ள மீன்களைக் காட்டிலும் பலர் ஆவர்” (குறுந்தொகை மூலமும் உரையும், ப.98) என இப்-பாடலுக்குப் பதவுரை வரைவர் உரையாசிரியர்.

நோக்குக் கோட்பாட்டின் வழி நின்று ஆழ்ந்து பார்க்கும் போது இப்பாடலில் புலனாகும் நயமும் நுட்பமும் வருமாறு:

  • 1. செவிலித் தாய் முதியவள். அவள் தலைவியைத் தேடிச் செல்வதோ நடப்பதற்கு அரிய பாலை நிலத்தில். எனவே நடந்து நடந்து அவளது கால்கள் நடை ஓய்ந்தன, பாலை வழியில் நெடுந்தூரத்தில் ஆணும் பெண்ணுமாக இணைந்து உடன் வருவாரை நோக்கி, ‘இவர் நம் மகளும் அவள் தலைவனும் போலும்’ என்று எண்ணி, அவர்களையே கூர்ந்து நோக்கி, பக்கத்தில் வர, அவர்கள் அல்லர் என்பதை அறிந்து, பின்னரும் இங்ஙனம் வருவோரை இப்படியே நோக்கி நோக்கிச் செவிலியின் கண்கள் ஒளியை இழந்தன. செவிலித் தாயின் உடற்சோர்வையும் மனத் தவிப்பையும் காலே, பரிதப்பினவே, கண்ணே, வாள் இழந்தனவே, பலரே, பிறரே என்னும் ஆறு ஏகாரங்களையும், ‘நோக்கி நோக்கி’ என்னும் அடுக்குத் தொடரையும் கையாண்டு திறம்படப் புலப்படுத்தியுள்ளார் வெள்ளிவீதியார்.
     

  • 2. பிறர் - தான் எதிர்பார்த்து நோக்கும் தலைவியும் தலைவனும் அல்லாத பிறர். இவர்கள் அகன்ற, பெரிய வானத்தில் உள்ள விண்மீன்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் பலர் ஆவர். பன்மைக்கு வானத்தில் உள்ள விண்மீன்களைக் கூறுதல் மரபு. ‘இவ்வுலகத்துப் பிறர் அகல்இரு விசும்பின் மீனினும் பலர்’ என்னும் உவமை அற்புதமான ஒன்று.

ஆற்றல்சால் ஏகாரங்கள் ஆறு, அடுக்குத் தொடர் ஒன்று, பொருளோடு பெரிதும் ஒத்துச் செல்லும் உயிரோட்டமான ஓர் உவமை ஆகியவற்றைக் கொண்டு வயது முதிர்ந்த ஒரு பெண்ணின் உடற்சோர்வையும் உள்ளத் தவிப்பையும் புலப்படுத்தும் வெள்ளிவீதியாரின் இக் குறுந்தொகைப் பாடல் சாகா வரம் பெற்ற ஒரு பாடல் ஆகும்.

ஆழ்நிலையில் சங்க இலக்கிய மரபுகளைக் கருத்தில் கொண்டு நுண்ணிதின் நோக்கும் போது, உண்மையில் வெள்ளிவீதியார் இப் பாடலைப் பாடியதன் நோக்கம் வேறு என எடுத்துக்காட்டுவர் பேராசிரியர் ச.அகத்தியலிங்கம். சிந்திக்கத் தூண்டும் அவரது கருத்து வருமாறு:

“இப்பாடல் வெளிப்படையாகக் கூறுவதெல்லாம் தன் மகளையும் அவளைக் கூட்டிச்சென்ற தலைவனையும் விடவும் உடன்போக்கு போகியவர்கள் ஏராளமானவர்கள் இவ்வுலகத்தில் உள்ளனர் என்பது தான். ஏராளமானவர் என்பதைத் தானா கவிஞர் இந்தப் பாடலில் கூற விரும்புகிறார் என எண்ணுதல் வேண்டும். இது செவிலி கண்ட ஒரு நிலையைத் தான் வெளிப்படையாகக் கூறினாலும் வேறு ஒன்றை, உண்மையான கவிதைப் பொருளை எச்ச நிலையில் கூறுவதாகக் கருதலாம்… உண்மையில் கவிஞர் கூறும் செய்தி, ‘உடன்போக்காகப் போகும் தலைவன் தலைவியர்கள் ஏராளமாக உள்ளனர் என்பதும் அதனால் உடன்போக்கு என்பது ஏனோ விரும்பத்தகாதது எனச் சிலர் எண்ணினும் அது அதிகமாக நடைபெறுகிறது என்றும் அதுவே இயற்கை என்றும் அதனை இப்போதுதான் செவிலி உணர்ந்து கொண்டாள் என்பதும் தான்’ எனக் கருதலாம். இதனைத் தான் வெள்ளிவீதியார் தம்முடைய பாடலில் எச்சப் பொருளாக மிக அருமையாகக் கூறுகிறார்” (சாகா வரம் பெற்ற சங்கப் பாடல்கள், ப.159).

V. ஏ. காதற் பரத்தையின் கூற்றில் களிநடம் புரியும் அணிநோக்கு

“ …     …    …      ஊரன்
எம்இல் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே”      
 
(8)

என்பது காதற் பரத்தையின் கூற்றாக அமைந்த ஒரு குறுந்தொகைப் பாடல். இதனை இயற்றியவர் ஆலங்குடி வங்கனார். தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் ஓர் ஆடவனின் இயல்புக்கு ஆலங்குடி வங்கனார் இப்பாடலில் கையாண்டிருக்கும் உவமை தனிச்சிறப்பு வாய்ந்தது; நோக்குத் திறம் பொருந்தியது. காதற் பரத்தையின் மூலதனம் அழகும் இளமையும் ஆகும். அவள் அடிக்கடி ஒப்பனை செய்து கொள்வதற்காகப் பயன்படுத்தும் கண்ணாடியை உவமையாகக் காட்டுவது என்பது இயல்பினும் இயல்பே. ‘முன்னின்றார் தம் கையையும் காலையும் தூக்க, தானும் தூக்குகின்ற கண்ணாடியுள் தோன்றுகின்ற பாவையைப் போல், தன்னுடைய மனைவிக்கு அவள் விரும்பியவற்றைச் செய்கிறானாம் தலைவன்!’ தலைவியைத் தலைவனுக்கு மனைவி என்று கூறப் பொறுக்காமல், தலைவியின் முதுமையை இகழ்வது போல் ‘புதல்வன் தாய்’ எனக் காதற் பரத்தை குறிப்பிடுவதும் இங்கே கூர்ந்து நோக்கத்தக்கது.

இங்ஙனம் நோக்குக் கோட்பாட்டின் நெறி நின்று குறுந்தொகைப் பாடல்களை ஆராயும் போது தெரியவரும் நயங்களும் நுட்பங்களும் பலவாகும். அவை ‘நல்ல’ என்னும் அடைமொழி குறுந்தொகைக்குப் பல்லாற்றானும் பொருந்தி வருவதைப் பறைசாற்றி நிற்கின்றன. பேராசிரியர் இரா.தண்டாயுதம் குறிப்பிடுவது போல், “வடிவத்தில் குறுகி இருந்தாலும் பிற எல்லா வகைகளிலும் குறுந்தொகைப் பாடல்கள் நிமிர்ந்து நிற்கின்றன. சுருங்கச் சொன்னால் ஒவ்வொரு குறுந்தொகைப் பாடலும் ஒரு வாமனாவதாரம் எனலாம்” (சங்க இலக்கியம்: எட்டுத்தொகை, ப.271).


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்