புதுமைப்பித்தனின் நகைச்சுவை

முனைவர் இரா.மோகன்

புதுமைப்பித்தன் நினைவுநாள்: 30-06-2017


ருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைக்குப் புதுமையும் புத்துயிரும் தந்தவர் பாரதியார், தமிழ் உரைநடைக்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவர் புதுமைப்பித்தன்! 'புதுமைப்பித்தன் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய உலகிலே ஒரு தனி ஜாதிளூ தனி ஜோதி' என்பார் "புதுமைப்பித்தன் வரலாறு" படைத்த ரகுநாதன். சிறுகதை ஆசிரியர், உரைநடை ஆசிரியர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் புதுமைப்பித்தனுக்குப் பல பரிமாணங்கள் உண்டு. இக்கட்டுரை புதுமைப்பித்தனை ஒரு நகைச்சுவையாளராக அடையாளம் காட்ட முற்படுகின்றது.

நகைச்சுவை உணர்வு
Sense of Humour) என்பது புதுமைப்பித்தனுக்குக் கூடப் பிறந்த ஒன்று: அவரது இரத்தத் திலேயே ஊறிக் கிடந்த பண்பு. கல்லூரி நாட்களில் புதுமைப்பித்தன் ஒரு குறும்புக்கார இளைஞர்; பாரதியாரின் மொழியில் சுட்ட வேண்டும் என்றால், "தீராத விளையாட்டுப் பிள்ளை!" ஒருமுறை அவர் தமது ஆசிரியர் ஒருவரைப் பற்றிக் கல்லூரிக் கரும்பலகையில் கிண்டலாக எழுதி வைத்து விட்டார். அந்த ஆசிரியர் பல்லாண்டுக் காலமாக திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பணியாற்றி வந்த வி.பொன்னுசாமிப் பிள்ளை, கல்லூரியின் துணைமுதல்வர், வரலாற்றுப் பேராசிரியர். புதுமைப்பித்தன் எழுதி வைத்த குறிப்பு இதுதான்:

“Mussolini is the Dictator of Italy;
Our V.P. is the Dictator of Notes!”


பேராசிரியர் பொன்னுசாமிப் பிள்ளையிடம் வரலாற்று மாணவர்களாகப் பாடம் பயின்றவர்களுக்கு இந்த நகைச்சுவை யில் புதைந்து கிடக்கும் உண்மைக் குறிப்பு மிகவும் சுவைக்கத் தக்கதாக இருக்கும்! முஸோலினி இத்தாலியின் சர்வாதிகாரிளூ பேராசிரியர் வி.பி.யோ வகுப்பறையில் "நோட்ஸ்" ஒப்புவிப்பவர். "டிக்டேட்டர்" என்ற ஆங்கிலச் சொல்லை இங்கே சிலேடை யாகக் கையாண்டு அருமையான நகைச்சுவையைத் தோற்று வித்துள்ளார் புதுமைப்பித்தன். "வி.பி." என்பது அப்படியேளூ வி.பொன்னுசாமிப் பிள்ளை என்பதற்கும், "வைஸ் - பிரின்ஸிபால" என்பதற்கும் பொருந்தும்.

ஒரு நல்ல நகைச்சுவை என்பது முன்னரே திட்டமிட்டு, சொல்லி வைத்தாற் போன்று வருவதன்று; அது உரிய நேரத்தில், இயல்பாக வெளிப்படுவது. இதற்குப் புதுமைப்பித்தனின் தனிவாழ்வில் இருந்து பற்பல உதாரணங்களைக் காட்டலாம். பதச்சோறாக ஒன்று:

புதுமைப்பித்தனும் அவரது நண்பர் எழுத்தாளர் கு.அழகிரிசாமியும்
14-ஆம் நம்பர் பஸ்ஸுக்காக ஒரு ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்கள். பஸ் வர நீண்ட நேரமாகிவிட்டதுளூ சுமார் அரை மணி நேரம் கழித்து வந்தது.

'இது ஏன் இவ்வளவு நேரம் கழித்து வருகிறது?' என்று கேட்டார் அழகிரிசாமி.

'அதுவா? இந்த பஸ் தான் இராமனைக் காட்டுக்குக் கொண்டு போய்விட்டு விட்டுத் திரும்பி வருகிற பஸ். நேரமாகத் தானே செய்யும்?' என்றார் புதுமைப்பித்தன்.

கைகேயி வாங்கிய வரம் காரணமாக இராமன்
14 ஆண்டுகள் கானகம் செல்ல நேர்ந்த இராமாயணக் கதை தெரிந்தவர்களுக்கே இந்த நகைச்சுவையின் பொருள் விளங்கும், நகைச்சுவையைப் புதுமைப்பித்தன் எந்த அளவிற்குப் பொருள் பொதியக் கையாள்கின்றார் என்பதும் புரியும்.

அங்கதம், எள்ளல், கடி, கிண்டல், குத்தல், கேலி, பகடி, நகைச்சுவை, நையாண்டி, வஞ்சப் புகழ்ச்சி என நகைச்சுவைக்குப் பல பரிமாணங்கள் உண்டு. ஆங்கிலத்திலும்
, Humour, Fun, Pun, Parody, Satire, wit  எனப் பல வகைகள் உண்டு. இவற்றுள் புதுமைப்பித்தனின் நகைச்சுவை அறிவார்ந்த ஒன்று (Wit) ஆகும். பெரும்பாலும் அவரது நகைச்சுவைகள் உடனடியாகச் சிரிப்பை வரவழைப்பவை அல்லளூ கூர்மையாகப் புரிந்து கொள்ளும் திறம் பெற்றவர்களே அவற்றைச் சுவைக்க முடியும், அவை வெறும் சிரிப்பை மட்டுமன்றி, ஆழ்ந்த சிந்தனையையும் தூண்டுவதை உணர்ந்து கொள்ள இயலும். இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஒரு வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு இதோ:

ஒரு நாள் புதுமைப்பித்தனும் சில நண்பர்களும் ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றார்கள்.

'என்னப்பா சூடாக இருக்கிறது?' என்று செர்வரைக் கேட்டார் புதுமைப்பித்தன்.

'இட்லி.'

'சரி, கொண்டு வா.'

செர்வர் இட்லியைக் கொண்டு வந்து வைத்தான்ளூ ஆவி வந்து கொண்டிருக்கும் சூடான சாம்பார் தட்டு நிறைய நிரம்பியிருந்தது. புதுமைப்பித்தன் இட்லியைப் பிட்டார். அது ஆறிப்போன இட்லி. கொதிக்கிற சாம்பாரை அதன் மீது ஊற்றி அதற்குச் சூடேற்றும் வியாபார தந்திரத்தைக் கண்டுகொண்டார் புதுமைப்பித்தன். உடனே செர்வரைக் கூப்பிட்டார்.

'என்னப்பா, ஆத்மா குளிர்ந்து விட்டதே!' என்றார்.

செர்வர் விழித்தான். 'இல்லை, சாம்பார் தான் சுடுகிறது. இட்லி செத்துப் போச்சே!' என்று தமக்கே உரிய பாணியில் அதற்கு விளக்கம் கூறினார் புதுமைப்பித்தன்.

ஒரு தேர்ந்த நகைச்சுவையாளர் வாழ்வின் எந்த நெருக்கடியான சூழ்நிலையையும் இலாவகமாக எதிர்கொண்டு விடுவார்; சாதுரியமாகச் செயல்பட்டுச் சமாளித்து விடுவார். இத்தகைய கடுமையான தருணங்கள் புதுமைப்பித்தனின் வாழ்வில் நிறையவே ஏற்பட்டனளூ அவற்றை எல்லாம் அவர் தம் நகைச்சுவை உணர்வால் எளிதாக வெற்றி கொண்டார்.

புதுமைப்பித்தன் பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலம். அப்போது அவருக்கு அச்சாக வேண்டிய புரூபுகள் எல்லாம் பார்வைக்கு வரும். புரூபை எவ்வளவுதான் கவனமாகப் பார்த்துக் கொடுத்தாலும், சமயங்களில் கம்பாஸிட்டர்கள் பிழைகளைத் திருத்தாமல் விட்டுவிடுவார்கள். இதைக் கண்டு எரிச்சலுற்ற புதுமைப்பித்தன் சமயங்களில் புரூபைப் பார்த்து முடித்து விட்டு, கடைசியில் "கடவுள் துணை!" என்று எழுதி விடுவார். கம்பாஸிட்டர் வந்து, "இதென்ன ஸார்? கடவுள் துணையைக் கம்போஸ் செய்யவா?" என்று கேட்டால், "இல்லையப்பா, நான் என்னால் ஆன மட்டும் பார்த்து விட்டேன். இனிமேலும் தவறு நேர்ந்தால், "கடவுள்தான் எனக்குத் துணை, நீ அல்ல"என்பதற்குத் தான் அப்படிப் போட்டேன்' என்பார் புதுமைப்பித்தன்.

புதுமைப்பித்தனின் "நாசகாரக் கும்பல்" என்னும் கதையில் ஓர் இடம். அதன் தொடக்கத்தில் அவர், "மருதப்ப மருத்துவ னாருடைய மனைவி இசக்கியம்மாள் காலமாகி வெகு காலமாகி விட்டது" என்று எழுதியிருந்தார். கதையின் பிற்பகுதியில் மருதப்பன் அடிபடும் போது அவரது மனைவி அலறுவதாகவும், மனைவியின் கைத்தாங்கலில் மருதப்பன் சென்றதாகவும், பின்னர் மனைவியும் அவருமாக மதம் மாறியதாகவும் எழுதியிருந்தார். இங்கே புதுமைப்பித்தனின் ஞாபக மறதி காரணமாகக் கதையின் ஆரம்பத்தில் காலமாகிப் போன மனைவி, பிற்பகுதியில் உயிர் பெற்று எழுந்து வந்து விட்டாள்!.

இதைப் பற்றிப் புதுமைப்பித்தனிடம் ஒருவர் கேட்டார்: 'என்னய்யா இது? உங்கள் கதையில் செத்தவர்கள் கூடப் பிழைத்து விடுவார்களோ?'

புதுமைப்பித்தன் அதற்குச் சாதுரியமாகப் பதில் அளித்தார்: 'வீணாக என்னால் ஒரு பெண் ஏன் சாக வேண்டும்? எனவே தான் அவளுக்கு உயிர் கொடுத்து விட்டேன்!'

வாழ்நாள் முழுதும் புதுமைப்பித்தனுடன் வறுமை ஓடி விளையாடிக் கொண்டிருந்தது; புதுமைப்பித்தனும் சலிக்காமல்- சளைக்காமல் - வறுமையுடன் மல்லுக்கட்டி வந்தார். ஆனால், வாழ்வின் எந்தக் கட்டத்திலும் புதுமைப்பித்தனை விட்டு நகைச்சுவை உணர்வு நீங்கவே இல்லை;நிழல் போல் அவருடன் கூடவே இருந்து வந்தது. சாவை எதிர்நோக்கி இருந்த அந்தக் கொடிய காலகட்டத்தைக் கூடப் புதுமைப்பித்தன் தமக்கே உரிய பாணியில் இப்படிக் குறிப்பிட்டார்:

'மணியார்டர் வந்தா, எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்? நான் இப்போ எனக்கு வரப்போகிற மணியார்டரைத் தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன். புரியவில்லையா? சாவைத் தானப்பா நான் மணியார்டரை எதிர்பார்ப்பது போல எதிர்பார்த்திருக்கேன்.'

"காலா என்னருகே வாடா! சற்றே உனைக் காலால் மிதிக்கிறேன்"  என அஞ்சாமல் காலனுக்கே எச்சரிக்கை விடுத்தார் பாரதியார்ளூ மூச்சுத் தொடரின் முற்றுப்புள்ளியான சாவையே மணியார்டரை எதிர்பார்ப்பது போல் மகிழ்வோடு எதிர் பார்த்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார் புதுமைப்பித்தன்! உண்மையில், "இடுக்கண் வருங்கால் நகுக!" என்னும் வள்ளுவர் வாக்கினை வாழ்வின் இறுதி மூச்சு வரை கடைப் பிடித்து வந்தவர் புதுமைப்பித்தன் என்பதை நிறுவுவதற்கு இக்கூற்று ஒன்றே போதும்!.
 


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.

 

 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்