முனைவர் இர.பிரபாகரனின் குறுந்தொகை

உரைவளம் முனைவர் இரா.மோகன்

“பு
லம் பெயர்ந்த தமிழர்களிடையே திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களைப் பரப்ப வேண்டும்” (‘என்னுரை’, குறுந்தொகை: மூலமும் எளிய உரையும், ப.11) என்னும் உயரிய குறிக்கோளுடன் அமெரிக்க நாட்டின் மேரிலாந்து மாநிலத்தில் வாழ்ந்து வரும் ஆற்றல்சால் ஆளுமையாளர் முனைவர் இர.பிரபாகரன் ஆவார். இந்நோக்கில் அவர் ஆற்றியுள்ள அரும்பணிகள் முத்திறத்தவை:
 

  • 1. 2003-ஆம் ஆண்டில் ‘தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம்’ என்னும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி, நண்பர்களுடன் மாதம் இருமுறை கூடி, திருக்குறள், புறநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம், பேராசிரியர் மு.வ.வின் ‘தமிழ் இலக்கிய வரலாறு” ஆகிய நூல்களைப் படித்தும் விவாதித்தும் வருதல்.
     

  • 2. அமெரிக்க நாட்டில் திருக்குறள் (2005), புறநானூறு (2013) ஆகிய செவ்வியல் இலக்கியங்களுக்காகப் பன்னாட்டு மாநாடுகளை நடத்துதல்.
     

  • 3. 2012-2013 ஆகிய ஆண்டுகளில் புறநானூற்றுக்கு இரு தொகுதிகளில் எளிய உரையினை எழுதி வெளியிட்டிருத்தல்.

    இப்பணிகளின் தொடர்ச்சியாக முனைவர் இர.பிரபாகரன் தற்போது சங்க இலக்கியத்துள் ‘நல்ல குறுந்தொகை’ எனச் சிறப்பிக்கப் பெறும் குறுந்தொகைக்கு எளிய உரையினை வெளியிட முன் வந்திருப்பது வரவேற்கத் தக்க ஒரு நன்முயற்சி ஆகும்.


உரையின் அமைப்பு

இவ்வுரை நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் அதைப் பாடியவர் பெயர், பாடலுக்கு உரிய திணை, கூற்று, கூற்று விளக்கம், பாடல், கொண்டு கூட்டு, பாடலில் இடம்பெற்றுள்ள அருஞ்சொற்களுக்குப் பொருள், உரை, சிறப்புக் குறிப்பு என்னும் ஒன்பது கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘சிறப்புக் குறிப்பு’ என்ற நிறைவுப் பகுதியில் தொல்காப்பியம் தொடங்கி இன்றைய திரைஇசைப் பாடல் வரையிலான பல்வேறு இலக்கியங்களில் இருந்து குறுந்தொகைப் பாடலுடன் ஒத்துச் செல்லும் ஒப்புமைப் பகுதிகள் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. இவை முனைவர் இர.பிரபாகரனின் பரந்துபட்ட இலக்கியப் பயிற்சியையும் புலமையையும் பறைசாற்றி நிற்கின்றன.

‘இவள் ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே’
(225) என முடியும் கபிலரின் குறுந்தொகைப் பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில், “சங்க காலத்தில், ஒரு பெண்ணின் கூந்தலுக்கு அவள் கணவன் மட்டுமே உரிமை-யுடையவன் என்ற கருத்து நிலவியது. இக் கருத்து புறநானூற்றுப் பாடல் 113-இல் காணப்படுகிறது” (ப.364) எனப் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள ஒப்புமைப் பகுதியை மேற்கோள் காட்டியுள்ளார் முனைவர் இர.பிரபாகரன். புறநானூற்றுப் பாடல்களுக்கு உரை எழுதிய அனுபவம் இவ்வகையில் அவருக்குப் பல இடங்களில் கைகொடுத்துள்ளது.

ஓர் உரையாசிரியர் என்ற முறையில் முனைவர் இர.பிரபாகரனின் உள்ளத்தில் திருக்குறளுக்குத் தனி இடம் உள்ளது. அவர் கூப்பிட்ட குரலுக்கு எல்லாம் திருக்குறள் ஓடோடி வருகின்றது; அவரது கருத்துப் புலப்பாட்டிற்கு அரணும் அணியும் சேர்த்து நிற்கின்றது. ஏறக்குறைய நாற்பது குறட்பாக்கள் இவ்வுரையின் சிறப்புக் குறிப்பில் ஒப்புமைகளாக ஆங்காங்கே எடுத்தாளப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இளமையில் தந்தையார் சிவயோகி இரத்தின- சபாபதிப் பிள்ளையின் விருப்பத்திற்கு இணங்கி திருக்குறளை முறையாகப் படித்த அனுபவமும், அறிவு வளர்ந்த நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து திருக்குறளை முழுமையாகக் கற்ற அனுபவமும் இவ் வகையில் இர.பிரபாகரனுக்குப் பெருந்தூண்டுதலாக விளங்குகின்றன எனலாம்.

ஓர் எடுத்துக்காட்டு: ‘அளிதோ தானே நாணே’ எனத் தொடங்கும் வெள்ளிவீதியாரின் குறுந்தொகைப் பாடலுக்கு (
149) எழுதிய சிறப்புக் குறிப்பில், முனைவர் பிரபாகரன், ‘பெண்களின் காதல் வாழ்க்கை நாணத்திற்கும் காமத்திற்கும் இடையே நடைபெறும் ஒரு போராட்டம்.. திருக்குறளில் நாணத்திற்கும் காமத்திற்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை திருவள்ளுவர் வெகு அழகாகச் சித்திரிக்கிறார்’ (ப.256) எனச் சுட்டிவிட்டு, திருக்குறள் காமத்துப்பாலில் இருந்து பின்வரும் மூன்று குறட்பாக்களை மேற்கோள் காட்டி இருப்பது, அவரது ஆழ்ந்த திருக்குறள் புலமையைப் புலப்படுத்துகின்றது:

“காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
(1251)

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே!
யானோ பொறேன்இவ் விரண்டு.
(1247)

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.”
(1163)

முன்னைப் பழைய இலக்கியங்களில் மட்டுமன்றி, பின்னைப் புதிய இலக்கியங்களிலும் முனைவர் இர.பிரபாகரனுக்கு நல்ல ஈடுபாடு உள்ளது. ஆதிமந்தியாரின் குறுந்தொகைப் பாடலுக்கு (
31) எழுதிய சிறப்புக் குறிப்பில் இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களில் இருந்து அவர் காட்டி இருக்கும் ஒப்புமைப் பகுதிகள் வருமாறு:

“இருபதாம் நூற்றாண்டில், சிறந்த கவிஞராக விளங்கிய கவியரசு கண்ணதாசன், ஆதிமந்தியின் வரலாற்றை ‘ஆட்டனத்தி ஆதிமந்தி காவியம்’ என்று ஒரு நூலாக இயற்றியிருக்கிறார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆதிமந்தியின் வரலாற்றை ‘சேர தாண்டவம்’ என்ற பெயரில் ஒரு நாடகமாக இயற்றியுள்ளார். ஆட்டனத்தி ஆதிமந்தியின் காதலை மையமாக வைத்து ‘மன்னாதி மன்னன்’ என்ற திரைப்படம்
1960-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது” (ப.85).

இதே போல இருபதாம் நுற்றாண்டின் பெரும்புலவரான பாரதியாரின் பாடல்களில் இருந்தும், மக்களின் நாவில் அன்றாடம் வழங்கி வரும் பழமொழிகளில் இருந்தும் பொருத்தமான ஒப்புமைப் பகுதிகளைக் காட்டிச் செல்லும் போக்கினையும் முனைவர் இர.பிரபாகரனின் குறுந்தொகை உரையில் சிறப்பாகக் காண முடிகின்றது.

முன்னைய உரையாசிரியர்களின் கருத்துக்களை எடுத்தாளல்

திருக்கண்ணபுரம் திருமாளிகைச் செளரிப் பெருமாள் அரங்கன் தொடங்கி தமிழண்ணல் வரையிலான அறிஞர் பெருமக்கள் பலர் குறுந்தொகைக்கு உரை வரைந்துள்ளனர்; பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகிய முன்னை உரையாசிரியர்கள் மட்டுமன்றி, சுஜாதா, ஜெயமோகன் என அண்மைக் காலப் படைப்பாளிகளும் குறுந்தொகை குறித்து எளிய அறிமுக நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளனர். “குறுந்தொகைக்குப் பல அறிஞர் பெருமக்கள் உரை எழுதியுள்ளனர். அனைத்து உரைகளிலும், முழுமையும் தெளிவும் உள்ள உரை டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் உரைதான் என்பது என்னுடைய உறுதியான கருத்து” (பக்.8-9) என அறுதியிட்டு உரைக்கும் முனைவர் இர.பிரபாகரன் தம் உரை நூலில் ஒல்லும் வகையில் எல்லாம் உ.வே.சா.வின் உரையில் இருந்து மேற்கோள் காட்டிச் சென்றுள்ளார். சான்றாக, “அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற சான்றாண்மைக்கு இன்றியமையாத ஐந்து பண்புகளும் இல்லாதவர் ஆகையால் அவர் சான்றோர் அல்லர்’ என்று தலைவி எண்ணுவதாகவும், ‘அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு, ஐந்து சால்பு ஊன்றிய தூண்’ (குறள் 983) என்ற குறள் இங்கு ஒப்புநோக்கத்தக்க-தாகவும் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தம் உரை விளக்கத்தில் எழுதியுள்ளார்” (ப.192) என ஔவையாரின் 102-ஆம் பாடலுக்கு வரைந்த சிறப்புக் குறிப்பில் முனைவர் இர.பிரபாகரன் ‘பதிப்பு வேந்தர்’ உ.வே.சாமிநாதையரின் கருத்தினைப் பதிவு செய்திருப்பதை இங்கே சுட்டிக்காட்டலாம்.

“இச்சிறிய பாடலில் நான்கு உவமைகள் அடங்கி இருப்பது இப்பாடலின் தனிச்சிறப்பு” என மதுரை வேள் ஆதத்தனாரின் குறுந்தொகை 315-ஆம் பாடலுக்குப் புகழாரம் சூட்டும் முனைவர் இர.பிரபாகரன், “இப்பாடல் உலகக் காதல் பாடல் வரிசையில் வைத்து எண்ணத்தக்கது. ஒரு பெரிய புதினத்திற்கான கருத்தாழமும், கற்பனை வளமும் இந் நான்கு அடிகளுள் உள’ என்று இப் பாடலைத் தமிழண்ணல் அவர்கள் தம் நூலில் பாராட்டுகிறார்” (ப.499) என இப் பாடலைப் பற்றிய மூதறிஞர் தமிழண்ணலின் கருத்தினை உரிய வகையில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“அமெரிக்காவில் வாழும் வைதேகி ஹெர்பர்ட் என்ற அம்மையார் சங்க இலக்கியத்தில் அடங்கிய பதினெட்டு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தைச் சார்ந்த ராபர்ட் பட்லர்
(Robert Butler) என்பவர் குறுந்தொகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதிலுள்ள பாடல்களுக்குச் சிறந்த விளக்கமும் அளித்துள்ளார். பிரான்சு நாட்டைச் சார்ந்த ஈவா வில்டன் (Eva Wilden) என்ற அம்மையார் குறுந்தொகையின் பாட பேசுதல்கள் அனைத்தையும் ஆய்வு செய்து ஒரு சிறந்த மொழிபெயர்ப்பையும் அரிய விளக்கங்களையும் மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளார்” (‘முன்னுரை’, குறுந்தொகை: மூலமும் எளிய உரையும், ப.36) எனக் குறுந்தொகையை மொழிபெயர்த்தும் குறுந்தொகைப் பாடல்களுக்கு விளக்கவுரைகள் வரைந்தும் தொண்டாற்றியுள்ள அயலக அறிஞர்களையும் முனைவர் இர.பிரபாகரன் நினைவுகூர்ந்து போற்றியுள்ளார்.

நவில்தொறும் நூல் நயம் காணும் திறம்

“காலே பரிதப் பிளவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள்இழந் தனவே;
அகல்இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற இவ்வுலகத்துப் பிறரே”
(
44)

என்பது வெள்ளிவீதியாரின் சாகா வரம் பெற்ற குறுந்தொகைப் பாடல். பாலைத் திணையில் அமைந்த இப்பாடலின் கூற்று ‘இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது’ என்பது ஆகும். “என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன; எதிரில் வருபவர்களைப் பார்த்து பார்த்து என் கண்கள் ஒளி இழந்தன; நிச்சயமாக, இந்த உலகத்தில், அகன்ற பெரிய வானத்திலுள்ள விண்மீன்களைக் காட்டிலும் பலர் உள்ளனர். ஆனால், நான் தேடுகின்ற என் மகளைக் காணவில்லை” என இப்பாடலுக்கு எளிமையான உரையினை வரைந்துள்ள முனைவர் இர.பிரபாகரன், “ஆகாயத்தில் பல விண்மீன்கள் இருந்தாலும் ஒரே ஒரு திங்கள் மட்டுமே உண்டு. அது போல், மிகுந்து காணப்படும் விண்மீன்கள் போல் எண்ணற்ற அளவில் பிறரைக் கண்டாலும், திங்களைப் போன்ற, தான் தேடுகின்ற தன் மகளைக் காணவில்லையே என்று செவிலித்தாய் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. திங்கள் ஒன்றே ஆதலால், தன் மகள் ஒப்பற்றவள் என்று செவிலித்தாய் புலப்படுத்துகிறாள்” (ப.
104) என இப் பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில் தெரிவித்திருக்கும் கருத்து புதுவது; இதுவரை எவரும் சொல்லாதது. ‘பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு போல, நவில்தொறும் நூல் நயம்’ காணும் திறம் கைவரப் பெற்றவர் முனைவர் இர.பிரபாகரன் என்பதற்கு இக் கருத்து கட்டியம் கூறி நிற்பதாகும்.

காலத்திற்கு ஏற்ற எளிமையும் அறிவுக்கு விருந்தாகும் நுட்பமும்

“அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையும் முழுமையும் உடைய உரை ஒன்று இக்காலத்தில் தேவைப்படுகிறது” (‘என்னுரை’, குறுந்தொகை: மூலமும் எளிய உரையும், ப
.9) என்பதை உணர்ந்த முனைவர் இர.பிரபாகரன் தாமே அம்முயற்சியில் ஈடுபட்டு குறுந்தொகைக்கு இக்காலத்திற்கு ஏற்ற எளிய உரை கண்டிருப்பது போற்றத் தக்கதாகும்.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதுஎனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முதனே”


என்பது கூடலூர்கிழார் படைத்துள்ள புகழ் பெற்ற ஒரு குறுந்தொகைப் பாடல். ‘கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது’ என்பது முல்லைத் திணையில் அமைந்த இப் பாடலின் கூற்று. இதற்கு முனைவர் இர.பிரபாகரன் வரைந்துள்ள எளிய விளக்கம் வருமாறு:

“தலைவி ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண். அவள் தன் வீட்டில் செல்லமாக வளர்ந்தவள். அவளுக்குச் சமைத்துப் பழக்கமில்லை. திருமணம் முடிந்தவுடன் தன் கணவனுடன் தனிக்குடித்தனம் போய்விட்டாள். ‘அவளுக்குச் சமைக்கத் தெரியாதே! அவள் என்ன செய்கிறாளோ? எப்படிக் குடும்பம் நடத்துகிறாளோ?’ என்று தலைவியின் தாய் வருந்துகிறாள். அப்பொழுது அங்கு வந்த தலைவியின் செவிலித்தாய் (தலைவியை வளர்த்தவள்), தான் போய்த் தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வருவதாகத் தலைவியின் தாயிடம் (நற்றாயிடம்) சொல்லிவிட்டு, தலைவியின் வீட்டிற்குப் போகிறாள். அங்கு, தலைவி மோர்க் குழம்பு செய்வதையும், கணவனுக்கு அவள் பரிமாறும் காட்சியையும், ‘நீ சமைத்த மோர்க் குழம்பு மிகவும் இனிமையாக இருக்கிறது’ என்று சொல்லி, மகிழ்ச்சியோடு அவள் கணவன் உண்ணுவதையும், கணவனின் பாராட்டுதலைக் கேட்ட தலைவி புன்முறுவல் பூப்பதையும் பார்த்த செவிலித் தாய் அந்தக் காட்சியைத் தலைவியின் தாயிடம் கூறுகிறாள்” (பக்
.281-282).

‘நூலின் பொருளைத் திரட்டிச் சுருங்கக் கூறும் பொழிப்புரை, விரித்துக் கூறும் அகலவுரை, நுட்பமான கருத்துக்களைக் கூறும் நுட்ப உரை, மேற்கோள் காட்டித் தருக்க முறையில் பொருளைக் கூறும் எச்சவுரை ஆகிய நான்கு வகையான உரைகளாலும் விளக்கிக் கூறுவதே சிறந்த உரை ஆகும்’ என நாலடியார் ஒரு பாடலில் (
319) ஒரு நூலுக்கு எப்படி உரை எழுத வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும். கூடலூர்கிழாரின் குறுந்தொகைப் பாடலுக்கு முனைவர் பிரபாகரன் சிறப்புக் குறிப்பில் தந்திருக்கும் நுட்பமான விளக்கம் இவ் வகையில் குறிப்பிடத்தக்கது. அறிவுக்கு விருந்தாகும் அவ் விளக்கம் வருமாறு:

“தயிர் கட்டியாக இருந்ததால், தலைவி மோர்க் குழம்பு செய்யும் பொருட்டுத் தன் மெல்லிய விரல்களால் துழாவித் தாளிதம் செய்தாள். விரைவில் சமைக்க வேண்டுமென்று விரும்பியதால், தயிர் பிசைந்த கையைத் துடைத்த ஆடையை மாற்றிக் கொள்ள தலைவி மறந்தாள். அவள் சமைத்த உணவைத் தன் கணவன் ‘இனிது’ என்று விரும்பி உண்டதால் தலைவியின் அக மகிழ்ச்சியை முகம் காட்டியது. இயல்பாகவே அழகாக இருந்த நெற்றி, மகிழ்ச்சியால் மேலும் அழகாகத் தோன்றியது” (பக்
.282-283).

“யான்நயந்து உறைவோள் தேம்பாய் கூந்தல்
வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை
நுண்மணல் அறல்வார்ந் தன்ன
நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே”
(
116)

என்பது இளங்கீரனாரின் குறுந்தொகைப் பாடல். குறிஞ்சித் திணையில் ‘இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது’ என்னும் கூற்றில் அமைந்த பாடல் இது. “முதலில் தலைவன் தலைவியைத் தொலைவிலிருந்து பார்த்த பொழுது, அவள் கூந்தலின் கருமையும் அழகும் அவளைக் கவர்ந்தன. பின்னர் அவளை நெருங்கும் பொழுது அவள் கூந்தலின் அடர்த்தியையும் அலைகளைப் போல் அந்தக் கூந்தல் நெளிந்திருக்கும் அழகையும் கண்டு மகிழ்ந்தான். அவளோடு மீண்டும் நெருங்கிப் பழகிய பொழுது அவள் கூந்தலில் இருந்த மணத்தையும் குளிர்ச்சியையும் உணர்ந்தான். தலைவனின் இந்த மூன்று நுகர்ச்சிகளும் (அனுபவங்களும்) இப் பாடலில் முறையே கூறப்பட்டுள்ளன” (ப.
212) என இப்பாடலின் சிறப்புக் குறிப்பில் முனைவர் இர.பிரபாகரன் காட்டும் நயம் நுட்பமானது; தருக்க முறையில் அமைந்து படிப்பவர் நெஞ்சை அள்ளும் பான்மையது.

உள்ளுறை உவமமும் இறைச்சியும்

“பாடலில் கூற வந்த கருத்தை மறைமுகமாகக் கூறுவதற்குப் புலவர்கள் கையாளும் உத்தி உள்ளுறை உவமம், இறைச்சி என்று இரு வகைப்படும்” (‘முன்னுரை’, குறுந்தொகை: மூலமும் எளிய உரையும், ப.
32) எனக் குறிப்பிடும் முனைவர் இர.பிரபாகரன், குறுந்தொகைப் பாடல்களில் உள்ளுரற உவமமாகவும் இறைச்சியாகவும் பொதிந்துள்ள பொருள்களைத் தம் உரையுள் ஆங்காங்கே காட்டிச் சென்றுள்ளார்.

“கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்”


என்பது ஆலங்குடி வங்கனார் பாடியுள்ள குறுந்தொகை
8-ஆம் பாடலின் தொடக்கம். இங்கே ‘வயல் அருகில் உள்ள மாமரத்தில் இருந்து பழுத்துத் தானாக விழுகின்ற இனிய பழங்களைக் கவ்வி உண்ணும் வாளை மீன்கள் வாழும் மருத நிலத்தவன்’ எனத் தலைன் சுட்டப்பெறுகிறான். “வயலருகில் உள்ள மாமரத்திலிருந்து விழும் பழங்களைக் கவ்வும் வானள மீன் என்பது எவ்வித முயற்சியும் இன்றித் தலைவனை எளிதில் பற்றி அவனோடு இன்புறும் பரத்தையரின் செயல் என்பது இப் பாடலில் உள்ள உள்ளுறை உவமம்” (ப.50) என இப் பாடலுக்கு வரைந்துள்ள சிறப்புக் குறிப்பில் முனைவர் இர.பிரபாகரன் எடுத்துக்காட்டியுள்ளார்.

‘உள்ளார் கொல்லோ தோழி’ எனத் தொடங்கும் குறுந்தொகையின்
16-ஆம் பாடல் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ இயற்றியது.

“செங்காற் பல்லி தன்துணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடுஇறந் தாரே”


என இப்பாடலின் இறுதியில் இடம்பெற்றுள்ள அடிகளில் ஆழ்ந்திருக்கும் இறைச்சிப் பொருளை முனைவர் இர.பிரபாகரன் எடுத்துக்காட்டியுள்ளார்:

“ஆண் பல்லி தன் துணையாகிய பெண் பல்லியை அழைக்கும் பாலை நிலத்தில் செல்பவர் அது கேட்டுத் தன் காதலியை நினைவு கொள்வார் என்பது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருள்” (ப.
63).

“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி;
யார்அஃது அறிந்திசி னோரே? சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்குஇவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே”


என்பது கபிலரின் முத்திரைப் பாடல். ‘இரவுக் குறி (இரவில் தலைவனும் தலைவியும் சந்திப்பதற்காக குறிக்கப் பட்ட இடம்) வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு (திருமணம்) கடாயது (கடாவுதல்-தூண்டுதல்)’ என்பது இப்பாடலின் கூற்று.

“இப் பாடலில் குறிஞ்சி நிலத்தில் காணப்படும் இயற்கைக் காட்சிகளோடு தலைவன் தலைவியின் காதலைப் புலவர் இணைத்துக் கூறுகிறார். தலைவனுடைய ஊரில், வேரில் பழுக்கும் வேர்ப் பலா மரங்கள் மூங்கில் வேலியுடன் பாதுகாப்பாக உள்ளன. அந்தப் பழங்கள் வேரில் பழுப்பதால், அவை பார்வைக்கு மறைவாகவும், கீழே விழுந்து உடைந்து சிதறும் வாய்ப்பு இல்லாதனவாகவும் உள்ளன. ஆனால், தலைவியின் ஊரில், மலைப்பக்கத்தில் உள்ள பலா மரங்களில், பழங்கள் கொம்புகளில் பழுக்கின்றன. அந்த மரங்களுக்குப் பாதுகாப்பாக வேலி இல்லை. அந்த மரத்துப் பழங்கள், கொம்புகளிலிருந்து கீழே விழந்து உடைந்து சிதறக் கூடியவை. தலைவனின் காதல் வேலிக்குள் பாதுகாப்பாக இருந்து கொண்டு, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் வேர்ப் பலாவின் பழம் போன்றது. அவன் பாதுகாப்பானவன். அவன் செயல் யாருக்கும் தெரியாது. ஆனால், தலைவியின் காதலோ சிறிய கிளையில் இருந்து தொங்கும் பாதுகாப்பில்லாத பெரிய பலாப் பழத்தைப் போன்றது. பாதுகாப்பில்லாததால் அவளை வேறு ஒருவர் திருமணம் செய்து கொள்ளக்கூடும். பழத்தின் சுமை தாங்காமல் சிறிய கிளை முறிவதைப் போல் அவள் இறக்கவும் கூடும். முதிர்ந்த பழம் கீழே விழுந்து சிதறினால் அதன் மணம் பரவுவதைப் போல், அவளுடைய காதலைப் பற்றிய அலர் (பழிச்சொல்) ஊரில் பரவத் தொடங்கலாம். இத்தனைக் கருத்துக்களையும் உள்ளுறை உவமமாக இச் சிறிய பாடலில் புலவர் குறிப்பிட்டிருப்பது அவருடைய கற்பனை வளத்திற்கும் புலமைக்கும் சிறந்த சான்று” என இப்பாடலில் பொதிந்துள்ள உள்ளுறை உவமத்தை எடுத்துக்காட்டி கபிலரின் படைப்புத் திறத்திற்குப் புகழாரம் சூட்டும் முனைவர் இர.பிரபாகரன், இன்னும் ஒரு படி மேலே சென்று, “இப் பாடலில் ஒரு இறைச்சிப் பொருளும் உள்ளது. தலைவியின் காதல் கனிந்து முதிர்ந்த பழம் போன்றது என்றது அவள் தலைவனிடத்தில் கொண்ட அன்பின் முதிர்ச்சியைக் காட்டும் இறைச்சிப் பொருள்” (பக்.
65-66) எனக் கூறுவது நோக்கத்தக்கது.

சங்க கால நம்பிக்கைகளும் மரபுகளும்

குறுந்தொகைப் பாடல்கள் வாயிலாகத் தெரிய வரும் அக்கால நம்பிக்கைகளையும், மரபுகளையும், வழக்காறுகளையும் முனைவர் இர.பிரபாகரன் தம் உரையில் ஆங்காங்கே எடுத்துக்காட்டியுள்ளார். இவ்-வகையில் குறிப்பிடத்-தக்க சில சுவையான தகவல்கள் இதோ:

  • 1. “வீட்டிற்கு அருகே காக்கை கரைந்தால், விருந்தினர் வரப்- போகிறார்கள் என்ற நம்பிக்கை தமிழகத்தில் நெடுங்காலமாகவே நிலவி வருகிறது” (ப.343)
     

  • 2. “யானையின் மத்தகத்தில் தெய்வம் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை சங்க காலத்தில் நிலவியதாகத் தெரிகிறது” (ப.489)
     

  • 3. “திருமணத்தைப் பற்றிப் பேசுவதற்கு ஆண் வீட்டார் பெண் வீட்டிற்குப் பெரியோரை அழைத்துச் செல்லுதல் மரபு” (ப.252)
     

  • 4. “சங்க காலத்தில், செய்தியை ஓலையில் எழுதி, அதைப் பறவையின் காலில் கட்டி அனுப்புவது வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது” (ப.423)
     

  • 5. “பெண்களின் அழகுக்கு அழகான நகரத்தை ஒப்பிடுவது வழக்கம்” (ப.381)
     

குறுந்தொகையில் நோக்கு

தொல்காப்பியர் சுட்டும் பழந்தமிழ்த் திறனாய்வு முறையான நோக்குநெறி நின்று முனைவர் இர.பிரபாகரன் குறுந்தொகைப் பாடல்களில் கண்டுணர்ந்து தம் உரையில் வெளிப்படுத்தியுள்ள சொல், தொடர், பொருள் மற்றும் கருத்து நயங்கள் பலவாகும். அவற்றுள் இன்றியமையாத சில வருமாறு:

  • 1. “ஒன்றுமொழி’ என்பது வெவ்வேறு விதமாகப் பேசாமல் உறுதியாக ஒன்றைச் சொல்லுவதைக் குறிக்கிறது” (ப.146).
     

  • 2. “அரும்படர்’ என்றது மருந்துகளால் தீர்க்க முடியாத துன்பத்தைத் குறிக்கிறது. இங்கு,
    ‘பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
    தன்நோய்க்குத் தானே மருந்து’
    (
    1102)
    என்ற குறள் ஒப்பு நோக்கத்தக்கது” (ப.
    337).
     

  • 3. “வழிப்போக்கனின் நீர் வேட்கையைத் தணித்து அவர்களின் உயிரைக் காக்கும் தன்மையுடையதால் நெல்லிக்காய் ‘அறம் தலைப்பட்ட நெல்லி’ என்று அழைக்கப்பட்டது” (ப.342).
     

  • 4. “நெல்லிக்காய் புளிப்பாக இருக்கும். அதைத் தின்ற பிறகு நீரைக் குடித்தால், அந்த நீர் இனிப்பாக இருக்கும். அது போல், உடன்போக்கில் துன்பம் இருந்தாலும், தலைவனோடு கூடி வாழும் வாழ்க்கை இனிதாக இருக்கும் என்று தோழி கூறுகிறாள்” (ப.418).
     

  • 5. “‘மூரல் முறுவல்’ என்றது பற்கள் சிறிது மட்டும் தோன்றுகின்ற புன்சிரிப்பைக் குறிக்கிறது” (ப.454).
     

  • 6. “இதற்கு முன் செல்லாத நிலத்தில் புதுவழியில் தேர்ப்பாகன் தேரைச் செலுத்தியதால், தேர்ப்பாகனை, ‘மதியுடை வலவோன்’ என்று தலைவன் பாராட்டுகிறான்” (ப.618).


‘கற்பவர்களைச் சிந்திக்க வைக்கும் சுவையான பாடல்கள்!’


“குறுந்தொகையில் உள்ள பாடல்கள் கற்பனை வளமும் கவிதை நயமும் நிறைந்த காதலோவியங்கள். குறுந்தொகைப் பாடல்கள் காதல் வாழ்க்கையின் பல்வேறு கூறுபாடுகளையும் காதலர்களின் உள்ளக் கிடக்கையையும் சுருக்கமாகவும் அழகாகவும் கூறிக் கற்பவர்களைச் சிந்திக்க வைக்கும் சுவையான பாடல்கள்” (‘என்னுரை’, குறுந்தொகை: மூலமும் எளிய உரையும், ப
.5) என்னும் முனைவர் இர.பிரபாகரனின் கருத்து அவரது உரையினை மனம் கலந்து பயிலும் போது பல்லாற்றானும் உறுதிப்படுகின்றது. முனைவர் இர.பிரபாகரனின் புறநானூற்று உரையினையும் குறுந்தொகை உரை-யினையும் படித்து முடித்த தருணத்தில் இலக்கிய ஆர்வலர்களின் உள்ளங்களில் உடனடியாகத் தோன்றும் எண்ணம் இதுதான்: ‘இவர் மீதமுள்ள சங்க இலக்கியங்கள் அனைத்திற்கும் உரை எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’.



முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.
 

 

 

 

 


 

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்