தமிழிலக்கியத்தில் மேலாண்மையும் சூழலியலும்

முனைவர் பூ.மு.அன்புசிவா

ல அறிஞர்கள் முகாமைத்துவத்திற்கு பலவித வரைவிலக்கணத்தினை அளித்துள்ளனர். என்றி பயோல் (1841–1925) என்பவர் மேலாண்மை என்பது ஆறு வித செயல்களை உள்ளடக்கியதாக குறிப்பிட்டார் மேரி பார்க்கர் பாலட் (1868–1933), என்பவர் முகாமைத்துவத்திற்கான வரைவிலக்கணத்தை 'ஊழியர்களை கொண்டு கருமங்கள் ஆற்றுவிப்பது தொடர்பான செயற்பாடாடு' என முன்வைத்தார். எனினும் பலர் இந்த வரைவிலக்கணம் மிகவும் குறுகிய கண்ணோட்டம் கொண்டதாக கருதினர். 'முகாமையாளர் என்ன செய்கின்றாரோ அதுவே முகாமைத்துவம்' எனும் சொற்றொடர் மேலாண்மையின் விரிந்த செயல்பாடுகளையும், காலத்துக்கு காலம் மாறி வரும் கருத்தினையும் குறிக்கிறது. இவற்றுக்கு காரணம் நிகழுலகில் முகாமைத்துவம் வளர்ந்துவரும் ஒரு துறையாக இருப்பது, முகாமைத்துவம் மட்டங்களுக்கிடையான ஆற்றப்படும் கருமங்களில் வேறுபாடு இருப்பதும் ஆகும். பொதுவாக நடைமுறையினில் நிர்வாகமும் (administration) முகாமைத்துவமும் ஒரே கருத்தினில் புழங்கப்படுகின்றது, ஆயினும் நிர்வாகம் என்பது உண்மையில் முகாமைத்துவத்திற்குள் அடங்கும் ஒர் பணியாகும். மேலாளர்கள் (Managers)  ஒரு வேலையை அல்லது பணியை தாமே செய்வதில்லை மாறாக அவர்கள் அந்த பணியை யார் சிறப்பாக செய்ய முடியும் என்பதை முடிவு செய்து அவர்களிடம் அப்பணியை ஒப்படைக்கிறார். அவ்வாறு ஒப்படைப்பு பெற்ற நபரே அந்த பணியை செய்து முடிக்கிறார். மேலாளரை பொறுத்தவரை அந்த வேலை உரிய முறையில் செய்து முடிக்கப்படுகிறது.

திருவள்ளுவர் திருக்குறளில் தெரிந்துவினையாடல் என்ற அதிகாரத்தில் மேலாண்மை பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலாண்மையை விளக்கும் அந்த குறள்:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்


இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே இந்த குறளின் பொருளாக மு.வரதராசனார் குறிப்பிடுகிறார். இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக என்பது பரிமேலழகர் உரையாகும்.

மேலாண்மை விளக்கம்

திட்டமிடுதல், நிறுவுதல், தலைமையேற்றல், கட்டுப்படுத்துதல் என்று மேலாண்மைச் செயல்பாடுகள் பட்டியலிடப்படுகின்றன. மேலாண்மை பற்றிய அடிப்படைப் புத்தகங்கள் எல்லாம் இவ்வாறே எழுதப்பட்டன. பழந்தமிழரிடம் இயற்கையோடு இணைந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புணர்வு வெளிப்பட்டமை தமிழ் இலக்கியப் பிரதிகள் வழி அறியலாம். நம் முன்னோர்கள் இயற்கை வளங்களில் இருந்தே உணவு, உடை, உறைவிடம் பெற்றிருந்த பான்மையால் இயற்கையைப் பாதுகாத்து வந்துள்ளனர். 'சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வந்தால் இயற்கைச்சீற்றங்களுக்கு ஆளாக வேண்டியதில்லை' என்ற உண்மையைச் தமிழ் இலக்கியங்கள் தன்னகத்தே கொண்டுள்ளன. இயற்கை வளங்கள் சிதைக்கப்படாமல் பயன்படுத்தப்பட்டு எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட்டுள்ளன. பழந்தமிழர்களிடம் காணப்பட்ட சூழலியல் மேலாண்மையைப் பின் வரும் சான்றாதாரங்கள் வழிக் காணலாம்.

திட்டமிடல்

Henri Fayol  என்ற பிரான்ஸ் நாட்டவர், 'தொழிற்சாலையில் பொது நிர்வாகம்' என்ற புத்தகத்தை 1916-ல் வெளியிட்டார். இது மேலாண்மை செயல்பாட்டைப் பற்றிய அடிப்படைப் புத்தகமாகக் கருதப்படுகிறது. இவர் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் மேலாண்மை இயக்குநராக இருந்த அனுபவத்தில் இப்புத்தகத்தை எழுதினார். திட்டமிடுதல் (planning)> அமைத்தல் (organizing),  ஆணையிடுதல் (commanding),  ஒருங்கிணைத்தல் (co-ordinating) மற்றும் கட்டுப்படுத்துதல் (controlling)  என்ற ஐந்து மேலாண்மைச் செயல்பாடுகளைப் பட்டியலிட்டார். மேலாண்மையாளர் எந்தத் துறையில் வேலைசெய்தாலும் இந்தச் செயல்பாடுகள் அவசியம்.

எதிர்காலத் தேவைகளைக் கருதி சில குறிக்கோள்களை நிர்ணயித்து அவற்றை அடைவதற்காக நடவடிக்கைகளை ஏற்படுத்துவதுதான் திட்டமிடல்.

சூழலியல் திறனாய்வு
(Eco Criticism)

மனிதனைச் சூழ்ந்துள்ள சமூகம், பொருளாதாரம், உயிரியல் போன்றவற்றின் கூட்டுநிலையாகச் சுற்றுச்சூழல் விளங்குகிறது. உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவுகளை விளக்கிக் கூறுவதாக சூழலியலை உணரமுடிகிறது. இலக்கியத்திற்கும் சுற்றச்சூழலுக்கும் உள்ள உறவினைக் கற்பதே சூழலியல் திறனாய்வாகும். மக்கள்தொகைப் பெருக்கம், தொழிற்சாலைப் பெருக்கம், எரிசக்தியின் தேவைக்கான அணுஉலையின் பெருக்கம், சுற்றுபுறத்தை நச்சடைய வைக்கும் திட,திரவ மற்றும் வாயு கழிவுகள் போன்றவற்றால் நிலம்,நீர், காற்று,வெளி என ஐம்பூதங்களின் மாசுபாடுகள் இன்று தவிர்க்கமுடியாமல் 'வெப்பமயமாதல்' எனப் பூமியின் இருப்பிற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. 'இந்த பூமியைக் காப்போம்'

சுற்றுச்சூழலில் காணப்படும் பொருள்களின் தன்மைகளுக்கேற்ப அறிவியலாளர்கள் பல்வேறு சூழ்நிலை மண்டலங்களை வகுத்துள்ளனர். அவற்றுள் குளம், ஏரி, ஆறு போன்றவற்றை உள்ளடக்கியது நீர்ச்சூழ்நிலை மண்டலம் ஆகும். இயற்கையில் கிடைக்கும் இன்றியமையாத பொருள்களில் ஒன்றாக விளங்கும் நீர், உயிர்க்கூறுகளின் இயக்கத்திற்கு மூலமாகிறது. நீர் ஆதாரத்தின் இருப்பும், செழிப்பும் உயிர்ப்பும் சங்ககாலத்தில் போற்றப்பட்டிருந்ததையும், இன்றைய நிலையில் நீர் ஆதாரங்கள் கேள்விநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவலத்தையும் இலக்கியத்தை மையப்படுத்தி அணுகலாம். 'வரும் தலைமுறைக்கு வாழ்விடம் அளிப்போம்' என்ற கருத்தாக்கத்தின் விளைவால் இலக்கியங்களை சூழலியலுக்கு உட்படுத்தி உருவான நவீனத் திறனாய்வு 'சூழலியல் திறனாய்வு'ஆகும்.

பழந்தமிழர்களின் ஐந்திணைப்பாகுபாடுகள் இயற்கைப் பாதுகாப்பின் சித்தாந்தமே ஆகும்.

'மாயோன் மேய காடுறையுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புனலுலகமும்
வருணன் மேய பெருமணலுலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.'
(தொல்.பொருள்.அகம்
.5)

என்ற நில அடிப்படையிலான தொல்காப்பிய விதிமுறைகள் சங்கஇலக்கியத்தில் பாடுபொருளாகும் நிலையில் இயற்கைவளமே ஆவணப்படுத்தப்படுகிறது.

சங்கப்பாடல்களில் இயற்கையோடமைந்த உயிரினப்பாதுகாப்பு முறைமை ஐந்திணைகளிலும் சுட்டிக் காட்டப்படுகிறது.

குறிஞ்சிப்பாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ள
99 மலர்கள் குறிஞ்சி நிலத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள அரிய தாவரங்களின் அடையாளமே.

'ஒண்காந்தள்,ஆம்பல்,அனிச்சம்,
.....................................
அரக்குவிரித் தன்ன பருஏர் அம் புழகுடன.'
(குறிஞ்சிப்பாட்டு:
62-97)

இதுபோன்று கருப்பொருட்கள் கட்டமைப்பில் அந்தந்த நில வாழிடத்தின் உயிரின பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

'ஓன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.'
(தொல்.மரபியல்-
27)

தொல்காப்பியர் மரபியலில் உயிரினப் பாகுபாட்டினைத் தெளிவுபடுத்தியுள்ள பாங்கு அவரை உயிரியப் பல்வகைமை
(Biodiversity) அறிந்த மாமேதையாக நமக்கு இனங்காட்டுகின்றது.

காற்று மாசுபாட்டினைத் தடுத்தல்
(Air Pollution)

காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டமாக 'ஒவ்வொரு நகரத்தைச் சுற்றிலும் பசுமை வளையங்கள் ஏற்படுத்துதல்' என்று சுற்றுச்சூழலறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பழந்தமிழரிடம் காற்று மாசுபாட்டினைத் தடுக்கும் செயல்திட்டம் இருந்தமையைப் பட்டினப்பாலை பதிவுசெய்துள்ளது.

'கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத்தெறுவின் கவின்வாடி
நீர்ச்செறுவின் நீள்நெய்தல்
................................................
கோள்தெங்கின் குலைவாழைக்
காய்க்கமுகின் கமழ்மஞ்சள்
இனமாவின் இணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளைஇஞ்சி.'
(பட்டினப்பாலை:
9-19)

'மரங்கள் தங்கள் இலைப்பரப்பு மூலம் காற்றிலுள்ள தூசுக்களையும் பிற வாயு மாசுக்களையும் பிடித்து வைத்துக்கொள்கின்றன. ஒரு ஹெக்டேர் பரப்பிலுள்ள வளமான காடுகள் ஆண்டொன்றுக்கு முப்பது டன் தூசுக்களை தன் இலைப் பரப்பில் பிடித்துக் கொள்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.'
1 கரும்பு ஆலைகளில் இடையறாது புகைவந்து கொண்டிருப்பதால் அருகில் உள்ள நெய்தல் மலர் அழகிழந்து காணப்படுதல் 'கவின்வாடி நீர்ச்செறுவின் நீள்நெய்தல்' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காற்றில் கலந்த மாசுக்களை நெய்தல் பிடித்து வைத்தமை இதன் மூலம் தெளிவாகின்றது.காற்று மாசடைதல் இத்தகைய பசுமை வளையங்களால் தடுக்கப்பட்டுள்ளன என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.

நிலச்சரிவு மேலாண்மை
(Land Slides Management)

இன்றைய சூழலில் வெள்ளப்பெருக்கின் போது ஏற்படும் நிலச்சரிவினால் மனித குடியிருப்புகள் அழிந்து பெரும் உயிர்சேதம் ஏற்படுகிறது. பழங்காலத்தில் ஆற்றுப்பெருக்கினால் உயிர்சேதம் ஏற்படாதவாறு மக்களை மரங்கள் தடுப்புகளாக இருந்து பாதுகாத்தமை பரிபாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி,
விளிவு இன்று,கிளையோடு மேல்மலை முற்றி,
தளிபொழில் சாரல் ததர் மலர் தாஅய்
ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்,
அகரு,வாழை,ஞெமை,ஆரம்,இனைய,
தகரமும்,ஞாழலும்,தாரமும்,தாங்கி,
நனிகடல் முன்னியது போலும்,தீம் நீர்
வளிவரல் வையை வரவு.'
(பரிபாடல்.பா.எண்.
12)

மலையின் மேலிடமெல்லாம் மழைபெய்து வையை ஆறு கடல்போல் விரைந்து வந்தாலும் நிலச்சரிவு ஏற்பட்டதாக இலக்கியம் பதிவுசெய்யவில்லை. காரணம், மலைச்சாரலில் வளர்ந்திருக்கும் காடுகள் ஆகும். நாகம்,அகில், சுரபுன்னை, ஞெமை, சந்தனம், தகரம், தேவதாரம், ஞாழல் போன்ற மரங்கள் நிற்பதால் காற்றுப்போல் விரைந்த வையை வரவு நிலச்சரிவை ஏற்படுத்தவில்லை. மேற்கண்ட சான்று பழந்தமிழரின் நிலச்சரிவு மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒலி மாசுபாடு தடுப்பு
(Noise Pollution)

ஒலி மாசுபாட்டினைத் தடுக்கும் சூழமைவுகள் பழங்காலத்தில் இருந்தமை மதுரைக்காஞ்சியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

'புணர்ந்துடன் ஆடும் இசையே அனைத்தும்
அகலிரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்பக்
.................................................................................
மருதம் சான்ற தண்பணை சுற்றி,ஒருசார்.'
(மதுரைக்காஞ்சி:
266-270)

'மரங்கள் ஒலி தாங்கும் மண்டலமாக அமைகின்றன. இவை ஒலிஆற்றலைக் கிரகித்து சிதறடிக்கக்கூடிய வல்லமை பெற்றுள்ளன.நெடுஞ்சாலை,தெருவோரம் மற்றம் தொழிற்சாலைப் பகுதிகளில் நெட்டிலிங்கம்,வேப்பமரம்,புளியமரம்,தென்னை போன்ற மரங்களை ஒலி கிரகிக்கும் அமைப்பாக நடவேண்டும்.வீட்டிற்கு ஒரு மரம்,குழந்தைக்கு ஒரு மரம் என்று மரத்தின் முக்கியத்துவத்தை அரசும் போதித்து வருகிறது. இவ்வாறு வாகனப்போக்குவரத்து இரைச்சல் மற்றும் பல்வேறு வழிகளில் எழும் இரைச்சலை மரம் வளர்ப்பதால் விளையும் பசுமை அடைப்புகள்
(Green Covers) கிரகித்துக் கொள்கின்றன. ' 2 மருத நிலப் பகுதியில் இயற்கையாக அமைந்த வயல் வளம் பேராலியை இனிய ஒலியாக மாற்றுகிறது.அதனால் பேரொலி 'விழைவு 'கொள் கம்பலை' (மதுரைக்காஞ்சி:526) என்று மதுரைக்காஞ்சியில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேரிடர்மேலாண்மை
(Disaster Management)

கடல்நீர் நிலப்பரப்பில் உட்புகாதவாறு மரங்கள் தடுப்புகளாக நின்று முன்னோர்களை காத்துள்ளன. கடற்கரையோர மரங்களால் தான் கடல்நீர் தடுக்கப்படுகின்றன என்ற உண்மையும் பழந்தமிழருக்குத் தெரிந்துள்ளது. இதற்கான சான்றாதாரங்கள் அகநானூறு,பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ளன.

'வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
.............................................................................
முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினை.'
(அகநானூறு:பா.எண்
10)

'தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ,
படப்பை நின்ற முடந்தாள் புன்னை.'
(அகநானூறு:பா.எண்180)
'துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொரா
விளங்கு இரும் புணரி உரும்என முழங்கும்
..................................................
குவிஇணர் ஞாழல் மாச்சினை.....
அடும்பு அமல் அடைகரை......'
(பதிற்றுப் பத்து:பா.எண்:
51)

ஆழிப்பேரலையின் சீற்றத்தினை புன்னை,ஞாழல்,அடும்பு போன்ற தாவரஇனம் தடுப்புகளாக அமைந்து தடுத்தமையைப் பழந்தமிழர்கள் தெரிந்துள்ளனர்.

சுற்றுச்சூழல் நன்னெறிகள்
(Environmental Ethics)

இயற்கைப்பாதுகாப்பிற்கு முன்னோர்கள் மேற்கொண்ட அறவாழ்வினை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

'விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய,
நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது:நுவ்வை ஆகுமென்று,
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே!'
(நற்:
172)

நெய்தல் நிலத்தில் புன்னை மரவளர்ப்பு மகளிர் வளர்ப்போடு கூறப்பட்டுள்ளது. இங்கு 'நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப'என்ற வளர்ப்பு முறை உயர்திணை, அஃறிணை என்ற பேதமின்றி வாழ்ந்த பழந்தமிழர் வாழ்வினைச் சுட்டிக்காட்டுகின்றது. இயற்கையைப் பாதுகாத்த அறநெறியை 'நும்மினும் சிறந்தது / நுவ்வை  ஆகுமென்று' என்ற பாடல் வரி வெளிக்கொணர்கின்றது.


தொகுப்புரை:

  • அவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து கட்டளையிடவேண்டும். தன்னுடைய அதிகாரத்தை அடுத்த நிலையில் உள்ளவர்களுக்குக் கொடுப்பதும் (delegation) கட்டளையிடுதலின் முக்கிய அங்கம்.
     

  • ஒரு நிறுவனத்தின் எல்லா நடவடிக்கைகளையும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கச் செய்வது ஒருங்கிணைத்தலாகும். இது ஒரு தனித்துவமான மேலாண்மை செயலாக இல்லாமல், மற்ற செயல்பாடுகளின் ஓர் அங்கமாகவே இப்போது பார்க்கப்படுகிறது.
     

  • ஒரு நிறுவனத்தின் செயல்திட்டம் சரியாக செயல்பட கட்டுப்பாடுகள் அவசியம். திட்டத்தை ஒட்டியே நிறுவனத்தின் உறுப்பினர்கள் செயலாற்றவேண்டும்.
     

  • மனிதன் தன் தேவைகளுக்காகத் தாவரங்களையும் விலங்குகளையும் அழிக்கிறான். காடுகள் அழிவதினால் பூமியில் உள்ள சூழ்நிலை மண்டலம் பாதிக்கப்படுகின்றன. தண்ணீர் மாசடைதல், காற்று மாசடைதல் (Pollution)  போன்றவை சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பன. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் காரணிகளால் பூமியின் மேலுள்ள ஓசோன் படலம் துளையிடப்பட்டு (Ozone Depletion) பூமி வெப்பமயமாகி (Global Warming) விட்டது அபாயத்தை நோக்கி பூமி, இதனை தடுக்கும் நோக்கத்துடன் பழந்தமிழரின் இயற்கை பாதுகாப்புச் சிந்தனைகள் தமிழ் இலக்கியங்கள் வழி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் கொலை (Ecocide) சுற்றுச்சூழல் ஆபத்து (Environmental crisis) மற்றும் சுற்றுச்சூழல் பயங்கரவாதம் (Ecoterrorism) போன்றவைகள் குறித்த விழிப்புணர்வுகளும் தமிழ் இலக்கியம் வழி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

     

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத் தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி,கோயம்புத்தூர்
- 641 035



 

 

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்