தலைவனின் அன்புடைமையும் தேர்ப்பாகனின் அறிவுடைமையும் கவினுற வெளிப்படும் குறுந்தொகைப் பாடல்

முனைவர் இரா.மோகன்“கிழவி நிலையே வினையிடத்து உரையார்;
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்”
(1132)

என்பது தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் கற்பியலில் வரும் ஒரு நூற்பா. ‘தலைவியின் நிலையைப் போர்க்களத்துப் பாசறையில் தலைவன் இருக்கும் போது யாரும் நினைவூட்ட மாட்டார்கள்; அவனும் நினைக்க மாட்டான். வெற்றி பெற்ற காலத்திலே தான், அந்நினைவு அவனது உள்ளத்தில் உடனே விளக்கமுறத் தோன்றும்’ என்பது இந்நூற்பாவின் தெளிவுரை. இக் கருத்து பகைவயிற் பிரிவுக்கு மட்டுமன்றி, ஏனைய பிரிவுகளுக்கும் பொருந்தி வருவதே ஆகும். ஏதேனும் ஒரு வினை காரணமாகப் பிரிந்து சென்ற காலத்தில் – வினையை முனைப்புடன் ஆற்றுகின்ற போது – தலைவியைப் பற்றிய நினைவு தலைவனுக்குச் சிறிதும் வராது; வினை நல்ல வண்ணம் நிறைவு பெற்ற நிலையில் தலைவியைப் பற்றிய நினைவு தலைவனின் உள்ளத்தில் உடனே விளக்கமுறத் தோன்றும்.

‘வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறியது’ என்னும் துறையில் சங்க இலக்கியத்துள்
44 பாடல்கள் காணப்படுகின்றன. தலைவன் தான் மேற்கொண்ட வினையை அரைகுறையாகப் பாதியில் விட்டுவிட்டு வந்ததாகவோ, வினையை முடிக்காமலே தலைவியை நினைத்துத் திரும்பி வந்ததாகவோ தொல்காப்பியத்திலோ சங்க இலக்கியத்திலோ குறிப்பு ஏதும் இல்லை. ஈண்டு, ‘வினை முற்றிய தலைமகன்’ என்னும் தொடர் கூர்ந்து நோக்கத்தக்கது. ‘செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு’ எனக் குறுந்தொகையில் இரண்டு பாடல்களில் (270, 275) தலைவன் சிறப்பிக்கப்படுகிறான். ‘தான் மேற்கொண்ட வினையை முழுமையாக முடித்ததனால் பெற்ற நிறைவுடைய உள்ளத்தோடு’ என்பது இவ்வடியின் பொருள். செம்மல் – உள்ள நிறைவு; ‘செம்மல் உள்ளம்’ என்பதற்குத் ‘தலைமை பொருந்திய உள்ளம்’ என்று பொருள் எழுதுவர் உரையாசிரியர்.

குறுந்தொகை 400-ஆம் பாடல் பேயனார் இயற்றியது. ‘வினைமுற்றி வந்த தலைவன் தேர்ப்பாகனைத் தலையளித்தது’ என்பது இப்பாடலின் துறை. வினை காரணமாகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், அதனைச் செவ்வனே முடித்துத் திரும்பி வந்து தலைவியைக் கண்ட நிலையில், தன் உள்ளக் குறிப்பினைப் புரிந்து தேரினைப் புதிய வழியில் விரைந்து செலுத்திக் கொண்டு வந்து வீடு சேர்த்த தேர்ப் பாகனை அன்பு பாராட்டிப் பின்வருமாறு பேசுகிறான்:

“சேய்ஆறு செல்வாம் ஆயின் இடர்இன்று
களைகலம் காமம் பெருந்தோட்கு’ என்று
நன்று புரிந்து எண்ணிய மனத்தை யாகி
முரம்புகண் உடைய ஏகி, கரம்பைப்
புதுவழிப் படுத்த மதியுடை வலவோய்!
இன்று தந்தனை தேரோ?
நோய்உழந்து உறைவியை நல்க லானே.”


தான் மேற்கொண்ட வினை நிறைவேறப் பெற்று மீண்டு வந்து தலைவியைக் கண்ட தலைவன் தேர்ப்பாகனை நோக்கி, “’நெடுந்தொலைவுப் பாதையைக் கடந்து போவோம் எனில், இடர் இல்லாமல் பெரிய தோள்களை உடைய தலைவியின் காமநோயினைக் களைய மாட்டோம்’ என்று நல்லதை விரும்பிக் கருதிய மனம் உடையவனாகி, வலிய பருக்கைக் கற்கள் உடைய மேட்டு நிலம் பிளக்கும்படி செலுத்தி, வெயிலினால் வறண்ட களிமண் நிலத்தில் சுருக்கு வழியாகிய புதிய வழியினைக் கண்டு விரைவில் வீடு சேர்த்த கூர்த்த அறிவு படைத்த தேர்ப்பாகனே! பிரிவு நோயினால் துன்புற்று உறையும் தலைவியைத் தருதலான் இன்றைக்கு நீ எனக்குத் தேரை மட்டுமா தந்தாய், என் தலைவியையும் அன்றோ தந்தாய்?”என அன்பு பாராட்டிக் கூறுகிறான்.

தேரோட்டும் ஒரு தொழிலாளி தானே என்று கருதாது, நெருக்கடியான தருணத்தில் அறிவுக் கூர்மையுடன் விரைந்து செயல்பட்ட பாகனைத் தலைவன் மனம் திறந்து பாராட்டிக் கூறுவது அவனது நயத்தக்க உயர்பண்பினைப் புலப்படுத்துகின்றது. “செல்வதற்குரிய வழி முரம்பில் இன்றியேயும் புதுவழியை யுண்டாக்கிச் சென்றானென்றது பாகனது ஆற்றலைக் கூறிய படி. பழைய வழியே செல்லின் நீட்டிக்குமென்று கருதிப் புதுவழிப்படுத்தலின் மதியுடை வலவோயென்றான். ‘நீ தலைவியின் உயிர் நீங்காது தருதற்குக் காரணமாயினமையின், தேரை மட்டும் தந்தாயல்லை; அவள் உயிரையுந் தந்தாயாகின்றாய்’ என்று தலைவன் பாராட்டினான்” (குறுந்தொகை மூலமும் உரையும், ப.
705) என இப் பாடலுக்கு எழுதிய உரை விளக்கத்தில் குறிப்பிடுவார் ‘பதிப்பு வேந்தர்’ உ.வே.சாமிநாதையர்.

இங்ஙனம் ‘வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறியது’ என்னும் துறையில் அமைந்த சங்கப் பாடல்களில், மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் குறிப்பிடுவது போல், “வினையால் தடையுண்டு கிடந்த அன்பன்தன் காதல் வெள்ளமும், அன்பியின் தோள் தழுவி அவ்வெள்ளத்திற்குக் கரை காண விரும்பும் விதுவிதுப்பும், நெடுநாட் பிரிவுக்குப் பின் புணரும் புணர்வு என நினைந்து வாயூறும் காட்சியும், ஞாயிறு மறையுமுன் என் திங்களைக் காணச் செய்வாய் எனப் பாகனை வேண்டும் பரிவும் விளங்கக் காண்கிறோம்” (தமிழ்க் காதல், ப
.85).

 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.


 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்