நவில்தொறும் நயமும் நுட்பமும் புலனாகும் குறுந்தொகைப் பாடல்கள்

முனைவர் இரா.மோகன்


“இலக்கண அமைதி நன்குடையதாகி விரிவும் சுருக்கமும் இன்றி இயற்கைக் காட்சிகளின் எழில் நலங்களையும், அகத்திணை ஒழுக்கங்களையும், பண்டைக் கால நாகரிகச் சிறப்பையும், வேறு பல அரிய பொருள்களையும் விளக்கிக் கொண்டு நிற்பது இக் குறுந்தொகை” (‘நூலாராய்ச்சி’, குறுந்தொகை மூலமும் உரையும், p.xxv) என மொழிவர் ‘பதிப்பு வேந்தர்’ உ.வே.சாமிநாதையர். இக் கருத்தின் ஒளியில், இலக்கண அமைதியும் இலக்கியச் செழுமையும் நாகரிகச் சிறப்பும் பண்பாட்டுப் பெருமையும் கொண்ட சில குறுந்தொகைப் பாடல்கள் குறித்து ஈண்டுக் காண்போம்.

நய(ம்) மலி குறுந்தொகை

குறுந்தொகை நாலடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடைய அகவற் பாக்களைத் தன்னகத்தே கொண்டது. விதிவிலக்காக,
307, 391 ஆகிய இரு பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகளை உடையனவாகக் காணப்படுகின்றன. ‘நல்ல குறுந்தொகை’ என்னும் புகழாரத்திற்குக் கட்டியம் கூறி நிற்கும் பாடல் ஒன்று:

குறுந்தொகை
6-ஆம் பாடல் பதுமனார் இயற்றியது; தலைவி கூற்றாக அமைந்தது. ‘வரைவிடை பைத்துப் பிரிந்த வழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் (பிரதி பேதம்: நோக்கிச்) சொல்லியது’ என்பது இப் பாடலின் துறை.

“நள்ளென் றன்றே யாமம்; சொல்அவிந்து
இனிது அடங் கினரே மாக்கள்; முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.”


இப் பாடலில் நான்கே அடிகளில் தலைவனைப் பிரிந்து வாடும் ஒரு தலைவியின் ஆற்றாமை உணர்வு வெளிப்படுத்தப் பெற்றிருக்கும் பாங்கு நனிநன்று. தன் துயரை அறியாதிருத்தல் பற்றி தாய் முதலியவர்களை ‘ஐயறிவுடையோர்’ எனப் பொருள் தரும் ‘மாக்கள்’ என்ற சொல்லால் சாடுகிறாள் தலைவி; ‘நனந்தலை உலகமும்’ என்றது எல்லா உயிர்களையும் சுட்டுகின்றது. ‘ஓர்யான் மன்ற’ என்பதால் உடனிருந்து ஆற்றுவிக்க வேண்டிய தோழியும் துயின்றமையைப் புலப்படுத்திவிடுகிறாள் தலைவி. ‘மன்ற’ என்ற இடைச்சொல் தேற்றப் பொருளில் இப் பாடலில் ஆளப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

“மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றும்உள எலாம் உறங்கும்
கண்ணுறங்கேன் எம்இறைவர் காதலால் பைங்கிளியே”


என்னும் தாயுமானவரின் பைங்கிளிக் கண்ணி அடிகளும்,

“பூ உறங்குது பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே,
கானுறங்குது காற்றும் உறங்குது
நான் உறங்கவில்லை …;
மான் உறங்குது மயிலும் உறங்குது
மனம் உறங்கவில்லை”


என்னும் கவியரசர் கண்ணதாசனின் திரைப் பாடல் வரிகளும் இங்கே நினைவுகூரத் தக்கன.



‘விருந்தினர் உள்ளீரோ?’ எனக் கேட்டு வாயிற்கதவை அடைத்தல்


புதிதாய் இல்லத்திற்கு வருகின்றவர் யாராயினும் விருந்தோம்புதல் பண்டைத் தமிழர்தம் இல்லற மரபு. மாலைப் பொழுதில் இல்லத்தின் கதவைச் சார்த்துவதற்கு முன் வாயிலோர் ‘விருந்தினராய் வெளியில் நிற்பார் எவரேனும் உண்டோ?’ எனக் கேட்டுவிட்டுச் சார்த்தல் அந்நாளைய வழக்கம் ஆகும். இதனை நன்னாகையார் தம் குறுந்தொகைப் பாடலில் பதிவு செய்துள்ளார்:

“ . . . . . . . . . மாலைப்
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ எனவும்”
(118)

பண்டைத் தமிழ் மக்களின் விருந்தோம்பும் பண்பாட்டினைப் புலப்படுத்தும் அரிய குறிப்பு இது!


மணம் பேசி வரப் பெரியோரை விடுத்தல்

தலைவன் வயது முதிர்ந்த பெரியோரைத் தலைவியின் உறவினர்பால் திருமணம் பேசி வர விடுத்தல் மரபு. இப் பெரியவர்கள் தண்டைப் பிடித்த கையினராக, நரைத்த தலையில் துகில் கட்டியவராக, நல்லது, நல்லது என்று மங்கலச் சொற்களை வழங்குவோராக இருந்தனர். தலைவியின் உறவினரும் ‘நீங்கள் வரப் பெற்றமையால் இந்நாள் பெருமை பெற்றது’ என்று அவர்களுக்கு முகமன் கூறினர். இம் மரபினை வெள்ளிவீதியார் தம் குறுந்தொகைப் பாடல் ஒன்றில் தோழி கூற்றின் வாயிலாக எடுத்துரைத்துள்ளார்.

“ . . . . . . . . . நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?
தண்டுடைக் கையர் வெண்தலைச் சிதவலர்
நன்று நன்று என்னும் மாக்களோடு
இன்றுபெரிது என்னும் ஆங்கணது அவையே”
(146)

“திருமணத்தை உறுதி செய்தலும் நடத்தி வைத்தலும் முதிர்ந்த வாழ்க்கை அனுபவம் வாய்ந்த பெரியோர் செயலாக மதிக்கப் பெற்றது. அவர்கள் முதுமையில் கூட கையில் தண்டூன்றியேனும் சமூக நிகழ்வில் கலந்து கொண்டனர். தலைப்பாகை கட்டியிருப்பார்கள். ‘நன்று, நன்று’ என்று வாழ்த்துரைப்பார்கள்” (குறுந்தொகை ஆராய்ச்சித் தெளிவுரை, ப.
472) என இப்பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில் தெரிவிக்கிறார் மூதறிஞர் சோ.ந.கந்தசாமி.

காக்கை கரைதல் நன்னிமித்தம்


தலைவியைப் பிரிந்து சென்று மீண்டு வந்த தலைவன், “யான் பிரிந்த காலத்தில் தலைவி துயருறாமல் நன்று ஆற்றுவித்திருந்தாய்” என்று தோழியைப் புகழ, “என் செயல் ஒன்றும் இல்லை; காக்கை கரைந்த நன்னிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்” என்று அவள் கூறுகிறாள்.

“ . . . . . . . . . என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே”
(210)

என்னும் தோழியின் கூற்று காக்கைக்கு இடும் உணவைப் ‘பலி’ என்றல் மரபு என்பதையும், காக்கை கரைதல் புதியதோர் வரவைக் குறிக்கும் நன்னிமித்தம் என்பதையும் புலப்படுத்துகின்றது. ‘காக்கை கரைதல்’ என்பது உறவினர் அல்லது விருந்தினர் வருகைக்கு ஒரு நல்ல நிமித்தம் என்பது இன்றளவும் மக்களிடம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. பாட்டில் காக்கை கரைந்தமையைப் பாராட்டிக் கூறிய அருமை பற்றிக் ‘காக்கைபாடினியார் நச்செள்ளையார்’ என்ற சிறப்புப் பெயரால் பிற்காலத்தில் ஆன்றோரால் பாடிய புலவர் அழைக்கப்பெற்றார் எனத் தெரிகின்றது.

இங்ஙனம் சங்க காலத்தில் மக்கள் இடையே நிலவிய நம்பிக்கைகளும் நிமித்தங்களும் குறுந்தொகையில் ஆங்காங்கே பதிவாகியுள்ளன.

பண்டைத் தமிழரின் வாழ்வியல் விழுமியம்


தம் முன்னோரால் சேமித்து வைக்கப்பட்ட பொருளைக் கொண்டு இல்லறம் நடத்துதல் முறையன்று என்பது பண்டையோர் கொள்கை. இதனை,

“உள்ளது சிதைப்போர் உளர்எனப் படாஅர்;
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு”
(283)

எனப் பாலை பாடிய பெருங்கடுங்கோவின் குறுந்தொகைப் பாடல் ஒன்று அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கின்றது. இப் பாடலின் முதல் இரண்டு அடிகளும் உயரிய வாழ்வியல் விழுமியத்தினை உரைப்பன. “தம் முயற்சி ஒன்று இன்றியே பெற்ற பொருளால் வாழ்தலினும், இரத்தலாகிய சிறு முயற்சியேனும் செய்து பொருள் பெற்று வாழும் இரவு உயர்ந்ததாயிற்று” (குறுந்தொகை மூலமும் உரையும், ப.521) எனத் தெளிவுபடுத்துவர் ‘பதிப்பு வேந்தர்’ உ.வே.சா.

சேமச் செப்பு

தோழி கூற்றாக அமைந்த ஓரிற் பிச்சையாரின் குறுந்தொகைப் பாடலில் வெந்நீரை ஊற்றி வைத்தால் சூடு குறையாமல் இருக்கும் சேமச் செப்பு பற்றிய ஓர் அரிய தகவல் இடம்பெற்றுள்ளது. பண்டைத் தமிழர் முன்பனிக் காலத்தில் விரும்பத்தக்க அளவு வெப்பத்தை உடைய நீரைச் சேமித்து வைப்பதற்குச் ‘சேமச் செப்பு’ என்னும் கலத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர் எனத் தெரிகின்றது.

“அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே!”
(277)

இப்பாடலில் குறிக்கப்பெறும் ‘சேமச் செப்பு’ என்பது இக்காலத்து ‘பிளாஸ்க்’
(Flask) போன்றது.

இவை போன்ற அரிய தகவல்கள் குறுந்தொகைப் பாடல்களில் மண்டிக் கிடக்கின்றன. சுருங்கக் கூறின், ‘பயில்தோறும் பண்புடையாளர் தொடர்பு போல’, நவில்தொறும் குறுந்தொகைப் பாடல்கள் நல்ல பல நயங்களையும் நுட்பங்களையும் உணர்த்தி நிற்கின்றன எனலாம். ‘ஆசறு நல்ல நல்ல, அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே’ என்னும் திருஞானசம்பந்தர் வாக்கில் ‘அடியார்’ என்னும் சொல்லின் இடத்தில் ‘ஆய்வாளர்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தினால், அது குறுந்தொகைக்கு முற்றிலும் பொருந்துவதாகவே அமையும்.
 

 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.


 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்