திருமணச் சடங்குகளில் சிந்திக்கச் சில விடயங்கள்

அவுஸ்திரேலியாவிலிருந்து செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராசா

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இன்னார்க்கு இன்னாரென்று எழுதிவைத்தானே தேவன் அன்று| என்கின்ற சினிமாப்பாடல் வரியொன்றும் உள்ளது. அது உண்மையோ, பொய்யோ, சரியோ, தவறோ தெரியவில்லை. ஆனால், திருமணத்தில் சொர்க்கமும் உண்டு, நரகமும் உண்டு என்பது மட்டும் உண்மை.. இருமனம் கலந்த திருமணம் என்றாலும்சரி, திருமணத்தின்பின்னர் இருமனங்களும் கலந்தாலும்சரி உடலுறவுக்கு அப்பாற்பட்ட உண்மையான காதல் இருவருக்குமிடையே நிலவுமானால் அது சொர்க்கம். இல்லையென்றால் அது நரகம். ஆனால் தம்பதியர்க்கிடையே ஏற்படுகின்ற சிறுசிறு கசப்புணர்வுகள் கரைந்துபோவதற்கும், தற்காலிககோபதாபங்கள் நிரந்தரமாகிவிடாமல் தணிந்து போவதற்கும், உள்ளங்களின் இடைவெளி கூடிவிடாமல் மறைந்து போவதற்கும் உடல் சேர்க்கையும், அதிலுள்ள கவர்ச்சியும் பெரும்பணிபுரிவதை யாரும் மறுக்கமுடியாது.

இத்தகைய தாம்பத்திய வாழ்வுக்கு இட்டுச்செல்லும் திருமணத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டுவருவதை நாம் அறிவோம். நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் திருமணச் சம்பிரதாயங்கள் வேறுபடுகின்றன.

இந்துக்களின் திருமணங்களை எடுத்துக்கொண்டால் பல்வேறு நுணுக்கமான சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆரியப்பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கிரியைகளும் வழக்கங்களும், அவற்றின் கருத்துக்களையோ, காரணங்களையோ கேள்விக்குட்படுத்தாமலே இந்துக்கள் கடைப்பிடிக்கின்றார்கள். இந்துக்களாக இருக்கின்ற தமிழர்களும் அவ்வாறே பின்பற்றுகின்றார்கள். இந்துமதம் என்று ஒரு மதம் இல்லை என்பதும், சைவம், சாக்தம், வைணவம் என்பனவும், சமணம், பௌத்தம், கிறீஸ்தவம் என்பனவுமே தமிழர்கள் கடைப்பிடித்தொழுகிய மதங்கள் என்பதுவும் வேறுவிடயம்.

இப்போது இந்துக்களாக சொல்லப்படுகின்ற தமிழ்மக்களின் திருமணங்களிலே ஐயர் வருவது, அக்கினி குண்டம் அமைப்பது, தாரை வார்ப்பது, தாலிகட்டுவது,அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது என்று அனேகப்பட்ட சடங்குகள் நடாத்தப்படுகின்றன.

பெற்றோரால் பேசிமுடிக்கப்படுகின்ற திருமணங்களில் மட்டுமன்றி, காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்ட காதல் திருமணங்களிலும்கூட திருமணநிகழ்ச்சி என்று ஒன்று வரும்போது இந்தச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இவை வெறும் சம்பிரதாயங்களா, அல்லது அர்த்தங்கள் பொதிந்தவையா, அவசியம் நிறைந்தவையா என்பனவெல்லாம் கவனத்திற்கு எடுக்கப்படவேண்டியவை.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரேயொருமுறை வருவதே திருமணம். சிலருக்கு அதுவும் வருவதில்லை. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளிலும் மணம் செய்வர். அது மறுமணம். முதலாவதாகச் செய்வதே திருமணம். அத்தகைய திருமணம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதொன்றாக அமைந்துவிடுவதால் சடங்குகளைத் தவிர்ப்பதிலோ, சம்பிரதாயங்களை கேள்விக்குட்படுத்துவதிலோ, வழக்கங்களை மாற்றிக்கொள்வதிலோ தங்கள் வாழ்க்கை என்று வரும்போது யாரும் அக்கறை கொள்வதில்லை. மதத்தின்பெயராலும், கடவுளின்பெயராலும் மக்கள்மத்தியில் அழுத்தமாகத் திணிக்கப்பட்டுள்ள அச்சமே இதற்கு முக்கிய காரணம்.

இந்துமதத்தின் திருமணத்தில் பதினெட்டுவகையான சடங்குகள் கைக்கொள்ளப்பட்டுவருகின்றன. அவையாவன:

1. கணபதி பூசை
2. நாந்தி தேவதா பூசை
3. நவக்கிரக பூசை
4. ஸ்னாதகச் சடங்கு
5. காசியாத்திரை
6. நிச்சயதார்த்தம்
7. சங்கற்பம்
8. கன்யாதானம்
9. மணமகனின் உறுதிமொழி
10. கங்கணபந்தனம்
11. சப்தபதி
12. பிரதான ஆகுதி
13. லாஜஹோமம்
14. புகுந்தவீடு புறப்படல்
15. கிருகப்பிரவேசம்
16. மூன்றிரவு பிரமச்சரியம்
17. சேஷஹோமம்
18. சாந்திமுகூர்த்தம்

இவற்றில் சிலவற்றை நடாத்துகின்ற வழமை இப்போதெல்லாம் நின்றுவிட்டது அல்லது குறைந்துவிட்டது. ஆயினும் சில சடங்குகள் பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன.


மந்திரம் சொல்வது யார்?

தாலிகட்டும்போது பின்வரும் மந்திரம் சொல்லப்படுவது பலருக்கும் தெரிந்த விடயம்.

''மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபகே தீவம் ஜீவ சரதச்சதம்''

இந்த மந்திரத்தின் கருத்தென்ன தெரியுமா?
'எனது வாழ்வுக்குக் காரணமான மங்கல நூலை உனது கழுத்தில் அணிவிக்கின்றேன். நீயும் என்னுடன் நூறாண்டு வாழவேண்டும்'. என்பதே இதன் கருத்து.

எனவே இந்த மந்திரத்தைத் தாலி கட்டும்போது யார் சொல்லவேண்டும்? மணமகனல்லவா சொல்லவேண்டும். அல்லது அவ்வாறு சொல்லும்படி மணமகனுக்குப் புரோகிதர் சொல்லிக்கொடுத்து மணமகனைச் சொல்ல வைக்கவேண்டும்.. திருமணப் பதிவு நடைபெரும்போது திருமணப்பதிவாளர் மணமக்களுக்கு அவர்கள் சொல்லவேண்டிய உறுதி மொழிகளைச் சொல்லிக்கொடுத்துச் சொல்லவைக்கிறாரே அதுபோல செய்யலாம். ஆனால் அப்படி நடப்பதில்லையே. புரோகிதரல்லவா சொல்கிறார்? இது சக்திவாய்ந்த மந்திரமென்றால் மணமகள் அவருக்கல்லவா மணமகளாகிறாள். மணமகனின் சார்பாக புரோகிதர் சொல்வதாகச் சமாதானம் சொல்ல முடியுமா? அப்படியென்றால் மணமகனின் சார்பாக புரோகிதர் தாலிகட்டுவதையும் அனுமதிக்கலாமா? தெரியாத மொழியில் புரோகிதர் மனப்பாடம் செய்து சொல்வதையெல்லாம் மந்திரம் என்கிறோமே இந்த வசனத்தில் அப்படியென்ன மந்திரம் இருக்கிறது. தமிழிலே சொல்லிவிட்டால் சாதாரணவசனம்.. வடமொழியில் சொன்னால் மட்டும் மந்திரமாகிவிடுகிறதா?

வடநாட்டுத் திருமணங்களில் மணமகளைப்பார்த்துச் சொல்லப்படுகின்ற இன்னுமொரு மந்திரம் பின்வருமாறு:

சோமஹ ப்ரதமோ! விவிதே கந்தர்வோ விவித உத்ரஹ!
த்ருதீயோ அக்னிஷ;டே! பதிஸதுரீயஸ்தே மநுஷ;யஜாஹ!


இதன் கருத்து என்ன தெரியுமா? சோமன் என்றும் தேவன் உன்னை முதலில் அடைந்தான். கந்தர்வன் உன்னை இரண்டாவதாக அடைந்தான். அக்கினி தேவன் உன்னை மூன்றாவதாக அடைந்தான். மனிதனாகிய நான் உனக்கு நான்காவது நாயகன். எப்படியிருக்கிறது? முதன்முதலில் திருமணம் செய்கின்ற ஒரு கன்னிப்பெண்ணைப்பார்த்து முன்னர் மூன்றுபேர் உன்னை மணந்தார்கள் நான் நான்காவது ஆள் என்று சொல்வது எவ்வளவு கொடுமையானது. அதையும்கூட புரோகிதர்தான் சொல்கிறாரென்றால் உண்மையில் புரோகிதர்தான் நான்காவது ஆள். மணமகன் ஐந்தாவது இடத்துக்குத்தான் தள்ளப்படுகின்றான். ஐந்து பேரை மணப்பது அதுவும் ஒரே நேரத்தில் ஐவருக்கு மனைவியாக ஒருத்தி வாழ்வது அவர்களது இதிகாசத்திலேயே அங்கீகரிக்கப்பட்ட விடயம்தான். ஆனால் மணமகளுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் நிலைமை எப்படியிருக்கும்.. மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதப்படுவதன் மர்மம் அதுதானோ?

இதுபற்றிச் சிலர் எதிர்வாதம் செய்கிறார்கள். மணந்தார்கள் என்பது மந்திரத்தின் பொருளல்ல அடைந்தார்கள் என்பதுதான் பொருள் என்கிறார்கள். சோமன், கந்தர்வன், அக்கினி என்போர் தேவர்கள். அந்தத் தேவதா சக்திகளை அடைந்தபின்னர் மானிடனாகிய மணமகள் அவளை மணக்கிறான் என்பதுதான் மந்திரத்தின் பொருள் என்று மறுத்துரைக்கிறார்கள்.

அவர்களது விளக்கத்தின்படி மந்திரத்தின் கருத்து மணந்தார்கள் என்பதல்ல, அடைந்தார்கள் என்பதுதான் என்றால் 'நான்காவதாக' என்ற சொல் வந்திருக்கவேண்டிய அவசியமில்லையே. சோமனாலும், கந்தர்வனாலும், அக்கினியாலும் ஆசீர்வதிக்கப்பட்ட உன்னை நான் மணம்செய்ய வந்திருக்கிறேன் என்று இருந்திருந்தால் போதுமே. 'நான்காவதாக அவளை ஆளுவதற்கு' வந்தவன்தான் கணவன் என்பதிலிருந்தே மூன்று முறை மற்றவர்களும் ஆண்டுவிட்டார்கள் என்பதும், அந்த ஆளுகையும் இந்த ஆளுகையும் ஒன்றுதான் என்பதும்தானே கருத்தாகின்றது. ஆகவே அடைந்தார்கள் என்பது மணந்தார்கள் என்ற கருத்தில்தானே வருகின்றது.

அவர்கள் தேவர்கள் என்பதால் அவையெல்லாம் வெறும் உருவகங்கள் மட்டுந்தான் என்றால், தேவர்களின் அரசனான இந்திரன் தனது மனைவியுடன் கூடிவிட்டான் என்று அவளைக் கல்லாகிப்போகும்படியும், இந்திரனுக்கு ஆண்மையின்றிப் போகும்படியும் கௌதம முனிவர் சபித்தார் என்று ஒரு கதை இராமாயணத்தில் வருகிறதே. தேவன்தானே மனைவியோடு கூடியிருக்கிறான் என்று அவர் பெருமைப்பட்டிருக்கவேண்டுமே!
குந்திதேவி விளையாட்டாக ஒரு மந்திரத்தைச் சொல்ல உடனே அவள்முன் தோன்றிய சூரியன் அவளுக்குக் கர்ப்பத்தைக் கொடுத்து அதன்மூலம் கர்ணன் பிறந்தான் என்றும், கலங்கிநின்ற குந்தியைச் சூரியன் மீண்டும் கன்னியாக்கினான் என்றும் மகாபரதத்திலே சொல்லப்படுகிறதே. சூரியனும் ஒரு தேவன்தானே. இந்தக் கதைகளிலெல்லாம் தேவர்கள் வெறும் உருவகங்களாகவோ, தேவதாசக்திகளாகவோ மட்டுமா இருந்திருக்கிறார்கள்?

மணமகளாக அமர்ந்திருக்கும் பெண்ணுக்கு இந்தக் கதையெல்லாம் தெரிந்திருந்தால், மூன்று தேவர்கள் அடைந்தார்கள் என்றாலென்ன மணந்தார்கள் என்றாலென்ன. இப்போது மணக்கப்போவது நான்காவது என்றதும் அவளுக்கு மயக்கம் வராதா? கலக்கம் வராதா? கோபம் வராதா? மொழி விளங்காததால் அல்லவா மணவறையில் குனிந்தபடி இருக்கிறாள்.

ஆக எது எப்படியிருந்தாலும் தெரியாத மொழியில், புரியாத சடங்குகள் தேவையா என்பதே, என்பது மட்டுமே இக்கட்டுரை எழுப்பும் கேள்வியாகும். தமிழர்களிடையே இந்தக் கேள்வியை எழவைப்பது மட்டுமே கட்டுரையின் நோக்கமாகும்.


கருத்தறியா மந்திரங்கள்

தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் ஏன் தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளிலெல்லாம் ஆலயங்களில் பூசை செய்பவர்களிலும், திருமணச்சடங்குகள் போன்றவற்றைச் செய்பவர்களிலும் பெரும்பாலான பூசகர்களும், புரோகிதர்களும் பரம்பரை பரம்பரையாக வெறுமனே மந்திரங்கள் என்றுசொல்லப்படுகின்ற வடமொழிவாக்கியங்களை அதன் உண்மையான கருத்துத் தெரியாமல், மனப்பாடம் செய்வைத்திருப்பவர்களேயாவர். சிலவேளை அவர்களில் சிலர் மனப்பாடம் செய்யும்போது கருத்தறிந்துகூடப் படித்திருக்கலாம். ஆனால் வடமொழியின் சரியான சுத்தமான உச்சரிப்புடன் மந்திரங்களை ஒப்புவிப்பவர்கள் இவர்களில் எத்தனை வீதத்தினர் இருப்பார்கள்? உச்சரிப்புத் தவறாகிவிட்டால் மந்திரம் சக்கியற்றுவிடாதா ? (உண்மையிலேயே சக்கியிருந்தால்!) அல்லது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்திவிடாதா?
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். 'நீ வாழவேண்டும்' என்று தமிழிலே வாழ்த்துவதாக வைத்துக்கொள்வோம். உச்சரிப்புத் தவறினாலோ அல்லது மூக்கிலே சளிபிடித்த காரணத்தாலோ 'நீ மாளவேண்டும்' என்று சொல்லிவிட்டால் எப்படியிருக்கும்.? இது மந்திரமாக இருந்து அதற்குச் சக்தியும் இருந்துவிட்டால் என்ன நடக்கும்? சற்றுச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தெரியாத மொழியில் புரியாத வகையில் சடங்குகளைச் செய்யும்போது இப்படி எவ்வளவு விபரீதங்கள் நடக்கும்?

சடங்குகளில் மட்டுமா? ஆலயங்களில் பூசை செய்கின்ற அர்ச்சகர்களில் எத்தனைபேர் சரியான உச்சரிப்போடு மந்திரங்களைச் சொல்கிறார்கள் என்று நிச்சயமாகச் சொல்லமுடியுமா? அர்ச்சனை என்பது ஆண்டவனைப் புகழ்ந்துரைப்பது. உச்சரிப்புச் சரியாக அமையாதுபோனால் புகழ்ச்சியே இகழ்ச்சியாக மாறிவிடாதா? இறைவனைப் போற்றுவதற்குப் பதிலாகத் வார்த்தையின் திரிபினால் தூற்றுவதாக ஆகிவிடாதா? சொல்லுகின்ற அர்ச்சகருக்கும் தெரியாமல், கேட்கின்ற பக்தர்களுக்கும் புரியாமல் அந்நியமொழிக்குக் கண்முடித்தனமாகத் தமிழினம் தன்வசமிழந்து கிடக்கும் இந்த விபரீதம் பலநூற்றாண்டுகளாக நடைபெற்றுவருகின்றது.


மணமகள் வாழ்த்தப் படுகிறாளா சபிக்கப்படுகிறாளா?

இந்தியாவிலே வடநாட்டுத் திருமணங்களிலே ஒரு மந்திரம் சொல்லப்படுகிறதாம். அதில் மணமகள் சீதை, தாரை, அகலிகை, திரௌபதி, மண்டோதரி என்னும் பஞ்சகன்னிகளைப்போல இருக்கவேண்டும் என்று ஆசீர்வதிக்கப்படுகிறதாம். ஏனென்றால் அவர்கள் கற்பிற் சிறந்த உத்தமிகளாம். அந்த மந்திரம் தமிழ் இந்துக்களின் திருமணங்களிலும் சொல்லப்படுகின்றதா என்று தெரியவில்லை. இவர்களிலே தாரை என்பது இருவரைக் குறிக்கும். ஒருவர் சந்திரனுக்கு நிர்வாணமாகநின்று எண்ணெய் தேய்த்துவிட்ட பிருகஸ்பதியின் மனைவி. மற்றவர் கணவனான வாலி இராமனால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டபின்னர் வாலியின் தம்பியான சுக்கிரீவனுக்கு வைப்பாட்டியானவள். ஏனவே இருவரில் யாரைக்குறித்தாலும் ஒருவரும் கற்பிற் சிறந்த உத்தமியர்களல்ல.

சீதையோ உத்தமர்களான இலட்சுமணன்மேலும், பரதன் மேலும் அநியாயமாகச் சந்தேகப்பட்ட ஒரு சராசரிப்பெண். ஆனானப்பட்ட கடவுளின் அவதாரமென்று சொல்லப்படும் இராமனாலேயே சந்தேகநிவர்த்திக்காகத் தீக்குளிக்கவைக்கப்பட்டவள். சீதை ஒழுக்கம் தவறியவளல்ல என்றாலும் மணப்பெண்ணொருத்தியை வாழ்த்துவதற்குச் சீதை பொருத்தமானவளா? முடிசூடும் நேரத்தி;ல் முடியிழந்த துர்ப்பாக்கியசாலியான கணவனுடன் காடுசென்று, மற்றொருவனால் கடத்திச் செல்லப்பட்டு, கணவனின்றிக் குழற்தைகளை வளர்த்து, கணவனாலேயே அக்கினிப்பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு இப்படியெல்லாம் வாழ்வி;ல் பெரும்பகுதியைத் துன்பத்திலேயே கழித்தவள் சீதை. அந்தச் சீதையைப்போல வாழவேண்டும் என்று இல்லறவாழ்வில் அடியெடுத்துவைக்கும் ஒரு மணப்பெண்ணை வாழ்த்த முடியுமா? அகலிகை கௌதம முனிவரின் மனைவி. கணவன் வேடத்தில் வந்த இந்திரனோடு கூடியவள், வந்திருப்பது தன் கணவனல்ல இந்திரனே என்று தெரிந்தபின்னரும் விருப்போடு அவனுடன் உறவாடியவள். திரௌபதி ஒருவனைக் கரம்பிடித்து ஐவரோடு வாழ்ந்தவள்.

ஆக மண்டோதரி மட்டுமே எவ்வித சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டவளாக வாழ்ந்த உத்தமி. ஒழுக்கத்திலும், இறைபக்தியிலும் உயர்ந்தவனான இராவணனின் மனைவி. எனவே ஏனைய நால்வரும் ஒரு மணமகளுக்கு உதார உத்தமிகளாகக் கூறிவாழ்த்தக்கூடிய பெண்மணிகளா? மற்றவர்களுக்கு எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும். தமிழர்களைப் பொறுத்தவரை இது பொருந்துமா? தமிழ்ப் புரோகிதர்கள் செய்துவைக்கும் திருமணச் சடங்குகளில் இந்த மந்திரமும் சொல்லப்படுகிறதா என்று தெரியவில்லை. இல்லையென்றால் அந்தவகையில் தமிழ் மணப்பெண்கள் தப்பிக்கொண்டார்கள்.

கருத்தறியாது கடைப்பிடிக்கப்படும் கருத்துள்ள விடயங்கள்

காரணங்களோடு செய்யப்படும் சில காரியங்கள் திருமணங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. யார்யாரோ எவ்வெப்போதோ தொடங்கிவைத்த அந்தக் காரியங்கள் சில நம்பிக்கைகளின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கங்களாக உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுதல் பொருத்தமானது.

மணமக்கள் மாலை மாற்றுவது எதற்காக?

ஒருவர் அணிந்த மாலையை மற்றொருவர் அணியக்கூடாது என்று சொல்லப்படுகின்றது. ஆனால் திருமணத்தில் மணமக்கள் மூன்றுமுறை மாலைகளை மாற்றி மாற்றி அணிந்துகொள்கிறார்கள். இதற்குக் காரணம் திருமணஉறவின்மூலம் அவர்கள் இருவரும் ஓருயிர் ஈருடலாக ஒன்றித்துவிட்டார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே. ஒருவர் அணிந்த மாலையை வேறொருவர்தானே அணியக்கூடாது? இப்போதுமுதல் நீங்கள் இருவரும் இருவரல்ல, உள்ளத்தாலும், எண்ணத்தாலும், உயிராலும் ஒருவரே என்பதை மணமக்களுக்கு உணர்த்துவதற்காகவே அவர்களைத் தங்கள் மாலைகளை மாற்றி மாற்றி அணியச் செய்யப்படுகின்றது.

திருமணத்தின்போது கற்கண்டு கொடுக்கப்படுவது எதற்காக?

திருமணத்தில் தாலிகட்டியவுடன் எல்லோருக்கும் கற்கண்டு வழங்கப்படுவதைப் பார்க்கிறோம். இப்போதெல்லாம் கற்கண்டுக்குப் பதிலாக லட்டு வழங்கப்படுவதும் வழக்கத்தில் வந்துவிட்டது. அதாவது ஏதோ ஒரு இனிப்பு வழங்கப்படுகிறது. இது எதற்காக என்பதைப்பற்றி எந்தவித சிந்தனையுமின்றி திருமணச் சடங்குகளில் அதுவும் ஓர் அங்கமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. உண்மையில் திருமணச் சடங்கிலே கற்கண்டு வழங்குதல் காரணம் நிறைந்த, கருத்துப்பொதிந்த ஒருவிடயந்தான். ஆனால் அது இப்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் முறையில்தான் காரணம் மறைந்துவிட்டது. காரியம் மட்டும் கண்மூடித்தனமாகத் தொடர்கிறது.

ஒரு திருமணத்திற்கு வித்தியாசமான மனநிலைகளுடன் எத்தனையோ விதமான மனிதர்கள் வருவார்கள். அண்மைக்காலம்வரை குடும்பப்பகையாக இருந்தவர்கள் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்காக வந்திருப்பார்கள். பகைமை இன்னும் மனதில் இருக்கும். ஆனால் உறவை நினைத்தோ, சமுதாய விமர்சனங்களைத் தவிர்ப்பமற்காகவோ வந்திருப்பார்கள். மணப்பெண்ணின் முன்னைய காதலனோ அல்லது மணமகனின் காதலியோ அல்லது இருவருமோ வந்திருக்கலாம். முன்னர் திருமணம் பேசப்பட்டு முறிந்துபோன உறவினர்கள் வந்திருக்கலாம். மணப்பெண்ணில் அல்லது மணமகனில் ஆசைவைத்திருந்தவர்கள் அல்லது தனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்ற ஏமாற்றத்தி;ல் இருப்பவர்கள் அவர்களின் பெற்றோர்கள் வந்திருக்கலாம். மற்றும், திருமணமாகாத மணமக்களின் வயதொத்தவர்கள், அவர்களிலும் வயது கூடியவர்கள் ஏக்கப்பெருமூச்சுடன் இங்கே வந்திருக்கலாம். நல்ல காரியங்கள் நடப்பதே பிடிக்காத சில நயவஞ்சகப் பேர்வழிகள் வந்திருக்கலாம். இவ்வாறு இன்னோரன்ன விதமானவர்கள் அந்தத் திருமணத்திற்கு வந்திருக்கலாம். தாலி கட்டப்படும்போது இப்படிப்பட்டவர்கள் முகங்களைச் சுழித்துக்கொண்டோ, வாழ்த்துவதற்குப்பதிலாக ஏதாவது சொல்லிச் சபித்துக்கொண்டோ இருப்பதற்கு இடமுண்டு. எனவே தாலிகட்டும் சமயத்தில், தாலிகட்டாத திருமணங்களில் மாலைமாற்றும்போது அல்லது திருமணத்தின் முக்கியமான நிகழ்ச்சியின்போது எல்லோரும் முகம் மலர்ந்து மணமக்களை வாழ்த்தவேண்டும் அதற்காக தாலிகட்டுவதற்கு முன்னால் வந்திருக்கும் எல்லோருக்கும் கற்கண்டு வழங்கப்படுகின்றது. கையால் எடுத்ததும் வாயில் போடக்கூடியவாறு சிறுசிறு துண்டுகளாக்கப்பட்ட கற்கண்டு வழங்கப்படும் கற்கண்டை வாயில் போட்டதும் வாய் இனிக்கும், முகத்தில் ஒரு மலர்ச்சிஉண்டாகும்.. யாருமே கற்கண்டை வாயில் போட்டதும் விழுங்கிவிடுவதில்லை. கற்கண்டு உடனேயே கரைந்துவிடாது எனவே வாயில் இனிப்பு கொஞ்சநேரம் நீடிக்கும். அந்த மலர்ந்த முகத்துடன் எல்லோரும் இருக்கும் நேரம் அங்கே தாலிகட்டப்பட்டுவிடும். எல்லோரும் மகிழ்ச்சியோடு ஆசீர்வதித்ததுபோல அந்தச் சடங்கு நிறைவேறும். இதற்காகவே கற்கண்டு வழங்கப்படுகின்றது. ஆனால் இது தாலிகட்டுவதற்குச் சற்று முன்பாக வழங்கப்பட வேண்டும். அப்படித்தான் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. நான் நினைக்கிறேன், எங்கோ ஒரு திருமணத்தில் கற்கண்டு கொடுக்க மறந்திருப்பார்கள். பின்னர், தாலி கட்டியபிறகு ஞாபகம் வந்திருக்கும். சரிசரி இப்போதாவது கொடுப்போம் என்று கொடுத்திருப்பார்கள். அங்கு வந்திருந்த பலரில், அதுதான் வழக்கமென்று சிலர் நினைத்திருக்கலாம். தங்கள் வீட்டுத் திருமணங்களில் அப்படியே கடைப்பிடித்திருக்கலாம். இப்போது பல இடங்களில் அதுவே வழக்கமாகிவிட்டது. கற்கண்டுக்குப் பதிலாக லட்டுப்போன்ற இனிப்புக்களை வழங்குவதில் தவறில்லை. ஆனால் எல்லா இனிப்புக்களும் கற்கண்டுபோல வாயில் நீடித்திருந்து இனிப்பதில்லை. முகமலர்ச்சியைக் கொடுப்பதுமில்லை. சில இனிப்புப் பொருட்கள் வாயில் போட்டதும் விழுங்கிவிடக்கூடியவை. சில இனிப்புக்கள் திகட்டும். சிலவற்றை எல்லோரும் சாப்பிடமாட்டார்கள். குருதியில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் சாப்பிடமாட்டார்கள் என்பது மட்டுமல்ல சிலவேளை இனிப்பைக் கண்டதுமே ஏற்கனவே முகத்தில் இயல்பாகவே இருந்த கொஞ்ச நஞ்ச மகிழ்ச்சியும் மறைந்துவிடும். அப்படிப்பட்ட சிலருக்கு மற்றவர்கள் சாப்பிடுவதைப்பார்த்து கோபமோ எரிச்சலோகூட ஏற்படலாம். இது இனிப்பு விநியோகிக்கும் நோக்கத்திற்கே எதிராகிவிடும். எனவே இனிப்பு வழங்குவதாயிருந்தால் கற்கண்டே பொருத்தமானது. அதுவும் தாலிகட்டுவதற்குச் சற்று முன்பாக வழங்குதலே சரியானது, பிரயோசனமானது. அதுவே ஆன்றோர் அறிமுகப்படுத்தியது.
.
கெட்டிமேளம் எதற்காக?

தாலிகட்டும்போது கெட்டிமேளம், கெட்டிமேளம் என்று சொல்லுவார்கள். மேளம் மிகவும் வேகமாகப் பெரிய சத்த்துடன் அடிக்கப்படும். தாலிகட்டும்போது யாரும் தகாத வார்த்தைகளைப் பேசிவிட்டாலோ, ஏதாவது சொல்லிவிட்டாலோ, அல்லது தும்மினாலோ அல்லது இருமினாலோ அபசகுனமாக ஆகிவிடலாம் என்பதால் அத்தகைய சத்தங்கள் கேட்காதவகையிலேயே மேளம் கெட்டிமேளமாக உரத்து அடிக்கப்படுகின்றது. கெட்டிமேளச் சத்தத்தில் கெட்டவார்த்தைகள் கேட்காமற்போய்விடும்.

மஞ்சள் நீராடல்

மணமக்கள் திருமணச்சடங்கிற்கு முன்னர் உடல்முழுவதும் எண்ணெய் தேய்த்து மஞ்சள் கலந்த நீரில் குளிப்பாட்டப்படுகின்றார்கள்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்து திருமண நாள் நெருங்க நெருங்க மாப்பிள்ளையும் பெண்ணும் அவரவர் வீடுகளில் வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். இதனால் அவர்களது உடல் அதிகமாக வெப்பமடைந்திருக்க வாய்ப்புண்டு. அத்துடன் புதிய உறவை எண்ணியெண்ணி அவர்களது மனங்களில் ஏற்படும் உள்ளக் கிளர்ச்சியினாலும் உடல் சூடாகியிருக்கும். இந்த நிலையில் உடல் வெப்பமாக இருக்கும்போது உடலுறவுகொள்வது கூடாது. கூடாது என்பதைவிட பூரண இன்பத்தை அவர்கள் இருவரும் அனுபவிக்க முடியாமல் போய்விடும். எவ்வளவோ மனக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டிருக்கும் மணமக்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே, முதலிரவிலேயே ஏமாற்றமோ, திருப்தியின்மையோ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்களது உடற்சூட்டைத் தணிக்கும்பொருட்டு நீரில் மஞசள் கலந்து குளிப்பாட்டப்படுகிறார்கள்.

இவ்வாறு குளித்தல் மிகவும் முக்கியமானது என்பதனாலேயே அந்தக்குளியலை உறுதிப்படுத்துவதற்காகவோ என்னவோ மணமகனைக் குளிப்பாட்ட மணமகளின் சகோதரன் அல்லது அவ்வுறவுமுறையான ஒருவரும், மணமகளைக் குளிப்பாட்ட மணமகனின் சகோதரி அல்லது அவ்வுறவு முறையான ஒருத்தியை அவ்வந்த வீடுகளுக்கு அனுப்பிவைப்பார்கள். இலங்கையில் இப்போதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது.
ஆனால் மஞ்சள்கலப்பதன் கரணம்பற்றியெல்லாம்பற்றி அறியாமல், இப்போதெல்லாம் மணமக்கள் உடுத்திருக்கும் ஆடைகளில் மஞ்சள் நீரைத் தெளித்துவிட்டுப் பிறகு வேறு ஆடைமாற்றிக்கொண்டு மணமேடைக்கு வந்துவிடுகின்றார்கள். அறிவியல் ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட மஞ்சளில் குளித்தலில் இருந்த அறிவியல் மறைந்துவிட்டது. மஞ்சள் மட்டும் ஒரு சமயச் சடங்கு என்கின்ற வழக்கமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வாழைப்பழத்தில் பழத்தை வீசிவிட்டுத் தோலைச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டால் எப்படியோ, அப்படி ஆகிவிட்டது.



srisuppiah@hotmail.com