குறுந்தொகையில் பெண்புலவர்களின் பெண்மொழி

முனைவர் பூ.மு.அன்புசிவா


ங்க இலக்கியங்கள் தமிழ்ச்சமூகத்தின் தொன்மையை உணர்த்தி நிற்கின்ற ஆவணங்களாக அமைந்துள்ளன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப்படும் இருதொகுதிகளாகக் கிடைக்கின்ற இச்சங்க இலக்கியங்கள் பதினெட்டு இலக்கியங்களைக் கொண்டிருக்கின்றன. இப்பதினெட்டு இலக்கியங்களுள் பத்து இலக்கியங்களும் பத்து தனித்தனிப் புலவர்களால் பாடப்பட்டவை. எட்டுத் தொகையில் இடம்பெற்றுள்ள எட்டு இலக்கியங்களும் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டுள்ள பாடல்களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் பெண்கவிஞர்களின் பெண் மொழியை ஆராயப்படுகின்றன.

பெண்பாற்புலவர்கள்


சங்க இலக்கியப் புலவர்களில் பல்வேறு பிரிவினர் இருப்பதை நாம் குறிப்பிட்டுக்கூறுவது போல, பாலின ரீதியாகவும் இப்புலவர்களை ஆண்பாற்புலவர்கள், பெண்பாற்புலவர்கள் என்று பாகுபடுத்த முடியும். தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இவ்வரலாற்றில் பாடப் பட்ட, படைக்கப்பட்ட இலக்கியங்கள் ஆண்
/பெண் கதாப்பாத்திரங்களைக் கொண்டே படைக்கப்பட்டுள்ளன. பெண்ணைத் தலைமைக் கதாப்பாத்திரமாகக் கொண்டு படைக்கப்பட்ட இலக்கியங்களுள் சிலப்பதிகாரம் காலத்தால் முந்தி நிற்கிறது. ஆண் / பெண் எனப்படும் இரண்டு பாலினங்களையும் கொண்டு படைக்கப்பட்ட தமிழ் இலக்கிய மரபில் பெண் புலவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் விளைவாகப் பெண்கள் கல்வி கற்கும் வாய்ப்பு உருவாகியது. கல்வி அனுபவம் பெற்ற இத்தலைமுறையிலிருந்து குறிப்பிட்டுச் சொல்கின்ற எண்ணிக்கையில் பெண் எழுத்தாளர்கள் உருவாகி உள்ளனர். ஆனால் அதற்கு முந்திய பல நூற்றாண்டுகள் குறிப்பாகப் பதினெண்- கீழ்க்கணக்கு நூல்களிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு காலம் வரையிலான நூற்கள் வரை உருவான பெண் படைப்பாளிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். மிகக் குறிப்பாக பக்திஇலக்கிய காலகட்டத்தில் காரைக்கால்அம்மையார், ஆண்டாள் இருவரையும் தவிர வேறு பெண் எழுத்தாளர்களைக் குறிப்பிட்டு அடையாளப்படுத்த முடியவில்லை.

காமத்தை வெளிப்படுத்தும் பெண், உடன் போக்குச் செல்லும் பெண், பேயாடும் பெண், வழிபாட்டுக்குத் தலைமையேற்கும் பெண், தூது செல்லும் பெண் என்று பெண்ணின் பல்வேறு பங்கேற்புகளைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகின்றது. சங்கப்பாடல்களைப் பாடியுள்ள பெண்கவிஞர்களாக அறியப்பட்டுள்ளவர்கள்.


குறுந்தொகையில் பெண்புலவர்கள்


குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பெண்பாற் புலவர்களின் பாடல்களின் எண்ணிக்கை ஐம்பத்து ஐந்து. அள்ளுர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஊண்பித்தையார், ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், கச்சிப்பேட்டு நன்னாகையார், கழார்க்கீரன் எயிற்றியார், காக்கைப் பாடினியார்  நச்செள்ளையார், குன்றியனார், நல்வெள்ளியார், நன்னாகையார், நெடும்பல்லியத்தை, பூங்கண் உத்திரையார், பொன்மணியார், வருமுலையாரித்தி, வெண்பூதியார், வெண்மணிப் பூதியார், வெள்ளி வீதியார் ஆகிய
18 பெண்பாற் கவிஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.

குறுந்தொகையில் பெண்மொழி


சங்க இலக்கியப் பாடல்களுள் அதன் அவைத் தன்மைக்காகவும், பொருள் தன்மைக்காகவும் வியந்தோதப்படும் நூல் குறுந்தொகையாகும். 'செம்புலப்பெயல், காமம் செப்பாது கண்டது மொழிதல்' போன்ற அழகிய சொல்லாட்சிகள் நிறைந்த நூல் குறுந்தொகை. இந்நூலில் பதிவாகி உள்ள பெண்கவிஞர்களின் பாடல் மொழியில் வெளிப்படும் செய்திகளை ஒவ்வொரு பெண் கவிஞர்களின் பாடல்களைக் கொண்டும் தனித்தனியாக இக்கட்டுரையில் பெண்கவிஞர்களின் பெண் மொழியை ஆராயப்படுகின்றன.

பெண்மொழி

சங்க இலக்கியங்களில் பெண்மொழி என்பது குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பெண்கவிஞர்களின் பாடல்களில் வெளிப்பட்டிருக்கும் பொருண்மைகள் குறித்து விரிவாகப் பேசுகிறது. சங்ககாலச் சமூகம் சார்ந்து பதிவாகி இருக்கும் கவிதைகளான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் அச்சமூகத்தின் மாறுதல்களை நுட்பமாகத் தம்முள் உள்வாங்கி இருக்கின்றன. இம்மாற்றம் இயற்கைச் சார்ந்த, பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் அடங்கிய மாற்றங்களை மட்டுமல்லாமல்; சமூக அமைப்புச் சார்ந்த மாற்றங்களையும் அச்சமூக அமைப்பில் ஆண், பெண் என்னும் இருபாலரின் சமூக இருப்புச் சார்ந்து ஏற்பட்ட மாற்றங்களையும் பதிவாக்கி இருக்கின்றன.

சமூகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெண், அச்சமூகத்திற்குத் தேவையான புதல்வர்களைப் பெற்றுத்தந்தவள். அவள் விருந்தினரை உபசரித்-தலையும், போரையும் விருப்பமுடன் எதிர் கொண்ட நிலையில்; வாழ்வியல் சூழலில் சமூகம் மனையுறை மகளாக வாழும் நிலைக்கு மாற்றியதையும் இப்பாடல்கள் புனைந்திருக்கின்றன.

இயற்கைப் புணர்ச்சியும், இரவுக்குறியும், பகற்குறியும், உடன்போக்கும் பெண்ணால் எளிதாகக் கையாளப்பெற்ற நிலையிலிருந்து 'ஐயர் யாத்த திருமணச் சடங்கினுள்ளும்' 'கற்பு' என்னும் ஒழுக்க விதியினுள்ளும் வாழும் ஆண் சார்ந்த வாழ்க்கைக்கு வாழத்தலைப்பட்டதையும் இப்பாடல்கள் நமக்கு எடுத்தியம்புகின்றன. இம்மாற்றங்களின் வழியாகவோ இவற்றை ஏற்றுக்கொண்டோ, உள்வாங்கிக் கொண்டோ, இதற்குள் தங்களின் சுயத்தைப் பதிவு செய்து கொண்டோ சங்ககாலப் பெண் கவிஞர்களின் பாடல்கள் பதிவாகி உள்ளன.

மடலேறுதல்

மடலேறும் ஆண் எருக்கம்பூவைச் சூடிக் கொண்டதாகவும், பனை மரத்தின் மடலால் குதிரை செய்து அதில் மடலேறினான் என்றும், இவ்வாறு மடல் ஏறுவதற்குப் பயனபட்டக் குதிரை 'உண்ணா நல்மா' என்று அழைக்கப்பட்டதாகவும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. தலைவன் மடலேறி உட்கார்ந்த குதிரையைச் சிறுவர்கள் தெருவெங்கும் இழுத்துச் சென்றனர் (நற்
220). இதனால் தலைவி மீது தலைவன் கொண்டிருக்கும் காதல் ஊரார்க்கு வெளிப்பட்டு அவள் தலைவனை விரும்புவாள் என்று நம்பப்பட்டது. சங்க இலக்கியத்தில் பெண்கள் மடலேறித் தங்கள் காதலை வெளிப்படுத்தியதாகக் குறிப்புகள் எதுவுமில்லை. தன்னுடைய உருவத்தையும், தன்னால் விரும்பப்படும் பெண்ணின் உருவத்தையும் ஓவியமாக வரைந்து அலங்கரிக்கப்பட்ட மடல்மீது அமர்ந்து ஊருக்குத் தன் காதலை ஆண் வெளிப்படுத்துவது மடலேறுவது என்று சங்க மரபு குறிப்பிடுகிறது.

'காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின் பொய்யே காமம்;
மாஎன மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ் தலும் பழியே – பிரிவு தலைவரினே'
(குறுந் :
32)

என்ற பாடல் வரிகளில் அள்ஙர் நன்முல்லையார் ஆணினுடைய மனநிலையிலிருந்து காமத்தைக் குறிப்பிட்டுள்ளார். காமம் என்னும் உணர்ச்சிக்கு நேரம் காலம் கிடையாது என்பதும் அவ்வுணர்ச்சிக்கு ஆட்பட்டவருக்கு காலை, பகல், மாலை, இரவு என்று பொழுதுகளின் வேறுபாடு தெரியுமாயின், அத்தகையக் காமம் பொய்யானதாக அமையும். இத்தகைய காமமானது பெண்ணின் நிராகரிப்பால் உருவானதாக மேற்கூறிய பாடலில் பதிவாகி இருக்கிறது. தன்னுடைய காதலை ஏற்குமாறு பெண்ணை நிர்ப்பந்தப்படுத்த மடலேறினால் அது அப்பெண்ணுக்குத் தீராத பழியினைத் தரும் என்று இப்பாடலின் தலைவன் கருதுகிறான். காமம் சார்ந்த உணர்ச்சி பெண் நிலையிலிருந்து வெளிப்படாமல் ஆண் நிலையிலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருப்பது முக்கியமான ஒன்றாகும். காமத்தை வெளிப்படையாக மொழிதல் பெண்ணுக்கு இல்லை என்று இலக்கணங்கள் குறிப்பிட்டாலும் சங்க இலக்கியங்களின் அகத்திணைப்பாடல்கள் பெண்களின் காம உணர்ச்சியினையே அதிகமாக வெளிப்படுத்தி நிற்கின்றன. அவ்வகையில் இப்பாடல் மாறுபட்டு நிற்பது சிறப்புக்குரியது.

குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள அள்ஙர் நன்முல்லையாரின் பிற பாடல்கள் தன்னைப் பிரிந்து சென்ற தலைவனின் பிரிவால் ஏற்பட்டத் துயரின் வலியினைப் பேசுவதாக அமைந்துள்ளன. பிரிவுத்துயரின் உணர்வுகளை அழகுபட எடுத்தியம்பும் பாடல்கள் குறுந்தொகையில் சிறப்பாக அமைந்துள்ளன. தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற பாதையோ வரட்சியான நிலப்பகுதி. அந்நிலத்தை வருணிக்கும் புலவரின் கற்பனைத்திறன் அழகுபட அமைந்துள்ளது.

'உள்ளார் கொல்லோ – தோழி ! – கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேபப் ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வாள்உகிர்ப்
பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்
நிலம்கரி கள்ளிஅம் காடு இறந்தோரே?'
(குறுந் :
67)

இப்பாடலில் கிளி தன்னுடைய அலகில் வேப்பம் பழத்தைக் கொத்திக்கொண்டுள்ளது. இக்காட்சியானது, பொற்கொல்லர்கள் அணிகலன்களில் புதிய நூல் கோர்க்கும் போது அவர்களின் கைவிரல் நகங்களில் பிடித்திருக்கும் பொற்காசுகளைப் போன்ற தோற்றத்தைப் புலவருக்கு ஏற்படுத்துகின்றது.

சங்க இலக்கியத்தில் பெண்ணின் காமம் பலவாறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. காமம் சார்ந்த சித்தரிப்பில் கற்பனை நயங்களும், உணர்ச்சிகளும் அழகியல் தன்மையுடன் வெளிப்பட்டுள்ளன. பலாமரம் ஒன்றின் சிறிய கிளையில் அதனைவிடவும் அதிக எடையுள்ள பலாப்பழம் தொங்கிக் கொண்டிருப்பது போல் தலைவியின் சிறிய உயிர் அவளால் சுமக்க முடியாத அவளின் உயிரைவிடவும் மிகப்பெரியதான காமத்தைச் சுமந்துக் கொண்டிருக்கிறது என்பதை,

'வேரல் வேலி வேர்க் கோட் பலவின்
....................................................
............................................................சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே!'
(குறுந்:
18)

என்ற பாடல் விளக்குகின்றது.

இத்தகைய உணர்ச்சியும், அழகும் கலந்து அள்ஙர் நன்முல்லையாரின் பாடல்கள் அமைந்துள்ளன. தன் உயிர் வருத்தவும், நலம் தொலையவும், தன் உடலழகு வாடிடும் வண்ணம் தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற தலைவன் தனக்கு யார்? என்ன உறவு என்று கேட்கும் தலைவி, தன் வருத்தத்தின் உச்சத்தில் அவன் தனக்கு அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை, பின் எதற்காகத் தான் அவனோடு ஊடல் கொள்ள வேண்டும் என்கிறாள். இக்குறிப்பை,

'....................................அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ?
புலவி அஃது எவனோ, அன்பிலங் கடையே'
(குறுந்.
93: 2-4)

என்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

இரவுக்குறி வந்த தலைவன் தலைவியுடன் தங்குகிறான். அவ்வாறு தங்கிய தலைவன் அவளை விட்டுப் பிரிவதற்குரிய நேரமாகிய வைகறையும் வருகிறது. வைகறையின் வரவால் தலைவன் பிரிகின்றான் என்றுணர்ந்த தலைவி அந்த உணர்ச்சியைப் பதிவு செய்கிறாள். எல்லோருக்கும் விடியலைத் தந்து, வெளிச்சத்தின் தொடக்கத்தைக் கொடுப்பது வைகறை என்று குறிப்பிடுகிறோம். ஆனால் இத்தலைவிக்குமட்டும் அவ்வைகறை காதலரைப் பிரிக்கும் வாள்போல் ஆகியதை,

'தோள்தேய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே'
(குறுந் 157: 3-4)

என்ற வரிகள் தெளிவுபடுத்துகின்றன. அள்ஙர் நன்முல்லையாரின் சூழலியல் சார்ந்த உற்றுணர்வும் புரிதலும் அவரின் பாடல்களில் புலப்படுகின்றன. தனிமனித வாழ்வின் அகத்திணைப் பற்றிய பாடல்கள்தான் என்றாலும் புறத்தின் நிலவியல், உயிரியல் கூறுகளை உள்வாங்கியவாறே பதிவு செய்யப்பட்டுள்ளன.

புலவரின் குறுந்தொகைப் பாடலொன்று புலி வேட்டையாடும் செயலினை நுட்பமாகப் பதிவு செய்கிறது. புலி வேட்டையாடும் செயல் என்பது ஆர்ப்பரிக்கும் கடலைப் போல் உள்ளது என்று பதிவு செய்யும் புலவர், அது வலப்பக்கமாகவே பாய்ந்து பிற உயிர்களை வேட்டையாடும் என்பதையும் பதிவு செய்கிறார். இதனை,

'மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு,
கோட்புலி வழங்கும் சோலை'
(குறுந்
237: 5-6)

என்று பாடியுள்ளார்.

ஒளவையார்

சங்ககாலக் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான அதியமான் ஆட்சி செய்த பகுதியில் வாழ்ந்தவர். இன்றைய கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக அது அமைந்துள்ளது. ஒளவையார் விறலி என்னும் கலைஞர்கள் மரபினைச் சார்ந்தவர் என்று தெரிகிறது. குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள ஒளவையாரின் பாடல்கள் காமம் தரும் வலியினை ஆண், பெண் என்ற இரு தரப்பிலிருந்தும் வேறு வேறு மொழிகளில் பதிவு செய்வதைக் காண முடிகிறது. தலைவியுடனான களவுக்காலத்தை நீட்டிக்க விரும்புகிறான் தலைவன். அவனது செயலை மறுத்து விரைந்து தன்னை மணந்துகொள்ள வலியுறுத்துகிறாள் தலைவி. தலைவன் தன் நெஞ்சைநோக்கிக் கூறுவதாக அமைந்துள்ள பாடல் ஒன்றில் இடம் பெற்றுள்ள கற்பனை அழகுகள் அற்புதமாக அமைந்துள்ளன. தோழியின் மொழிகளையும், அவளின் சுடு சொற்களையும் தலைவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனை விவரிக்கும் ஒளவையார் இரண்டு கற்பனைகளைப் பயன்படுத்துகிறார்.

சுடப்படாத மட்கலத்தில் நீர் நிரப்பப்படுகிறது. அந்தப் பச்சைமட்கலத்துள் பெய்த நீரானது கசிந்து போகாமல் தாங்க முயல்வதுபோல் காமத்தால் நெகிழ்ச்சி அடைந்திருக்கும் தலைவனின் நெஞ்சும் அமைந்திருப்பதை,

'நல் உரை இகந்து, புல் உரை தாஅய்,
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,'
(குறுந்
29: 1-3)

என்ற பாடல் வரிகளில் கற்பனை ஒன்றைப் பதிவு செய்திருக்கும் ஒளவையார் இவ்வுணர்ச்சியை மேலும் நுட்பமாக விவரிக்க மற்றொரு கற்பனையைக் கையாள்கிறார். ஏற இயலாத ஒரு மரக்கிளையில் ஏறிடும் குரங்குகள் தங்களது குட்டிகளைக் கீழே விழாதவாறு அணைத்துச் செல்லும். அதுபோல் நம் குறைகளைக் கேட்டு நீக்கப் பெறுவாரைப் பெறின் நன்று என்கிறான் தலைவன், இதனை

'...............................................உயிர்கோட்டு
மகவுடை மந்திபோல
அகன்உறத் தழீஇக் கேடகு; நர்ப் பெறினே'
(குறுந்
29 : 5-7)

என்று ஆண்சார்ந்த உணர்ச்சிகளை இத்தகையக் கற்பனை நயத்துடன் பதிவு செய்திருக்கும் ஒளவையார், பெண் சார்ந்த உணர்ச்சிகளை, வெடிப்புறப் பேசும் வகையில் பெண்ணின் குரலாகப் பதிவு செய்துள்ளார்.

வெள்ளிவீதியார்

இது இவரின் இயற்பெயரல்ல. சங்கப்பாடல்களை எழுதியவர்களுள் பெயர் அறியப்படாத புலவர்களுக்கு அவர்களின் பாடல் தொடர்களைக் கொண்டு பெயர் குறிப்பிடும் வழக்கின் அடிப்படையில் இவரின் பாடல் ஒன்றில் இடம்பெறும் 'வெண்மணல் விரிந்த வீத்தையார்' என்னும் தொடரே அவரின் பெயராகக் குறிப்பிடப்பட்டது. அதுவே நாளடைவில் மருவி வெள்ளிவீதியார் என்றாயிற்று. இவரின் குறுந்தொகைப் பாடல்கள் அழகியலின் உச்சத்தைத் தொட்டு நிற்கின்றன என்றால் அது மிகையல்ல. இதனை,

'கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே'
(குறுந்:
27)

என்ற பாடலில் பசுவின் பாலானது கன்றால் உண்ணப்படாமலும், பாத்திரத்தில் கறக்கப்படாமலும் நிலத்தில் சிந்தி வீணாவது போல, தலைவியின் பேரழகு அவளுக்கும் பயனின்றி, தலைவனுக்கும் உதவாமல் பசலை உண்ணும் நிலையைப் பெற்று விட்டதற்காகத் தலைவி ஏங்குகின்றாள். பெண்ணின் உணர்ச்சியை இவ்வாறு பதிவு செய்த வெள்ளிவீதியார் ஆணின் உணர்ச்சியை மற்றொரு கற்பனையின் வழியாகப் பதிவு செய்கிறார்.


தொகுப்புரை:

 • சங்க இலக்கியம் என்னும் மிகப் பரந்துபட்ட களத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கவிதைகளை விதைத்துள்ளனர். ஆண் மொழியாகவும். பெண் மொழியாகவும் அமைந்திருக்கின்ற இப்பாடல்களில் ஆண்களும், பெண்களும் கவிதைத்தளத்தில் ஒருவரை ஒருவர் விஞ்சுகின்ற அளவுக்குப் பாடல்களைப் பாடியுள்ளனர். அப்பாடல்கள் அச்சமூகத்தின் மாறுதல்களை நுட்பமாகத் தம்முள் உள்வாங்கி இருக்கின்றன. அம்மாற்றம் இயற்கை சார்ந்த மாற்றங்களை மட்டுமல்லாமல் சமூக அமைப்பு சார்ந்த மாற்றங்களையும், அச்சமூக அமைப்பில் ஆண், பெண் என்ற இருபாலரின் சமூக இருப்புச் சார்ந்த மாற்றங்களையும் தெளிவாகப் பதிவு செய்துள்ளன.
   

 • சமூகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெண்ணை மனையுறை மகளாக சமூகம் மாற்றியதையும், ஆண் சார்ந்த வாழ்க்கைக்கு வாழத்தலைப்பட்டதையும் விளக்குகின்றன. தொன்மையான சமூக அமைப்பில் மக்கள் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள், சிக்கல்களுக்குக் காரணம் அறிய குறி சொல்பவர்களை அழைத்துக் குறிகேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
   

 • கவிதைகளில் பதிவாக இருக்கின்ற பெண்மொழியினைக் காணும்போது சங்ககாலச் சமூக அமைப்பில் பெண்களின் நிலை, அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள், சமூகத்தை அவர்கள் அணுகிய நிலை அனைத்தும் பதிவாகி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
   

 • ஆண் நிலைப்பட்ட சங்ககாலச் சமூக அமைப்பிற்குள்ளும் பெண்கள் எவ்வளவு சுதந்திரமாகத் தங்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதைச் சங்க இலக்கியப் பாடல்களின் பெண்மொழிகள் நமக்குப் புலப்படுத்துகின்றன.


குறிப்புகள்:

 • 1. சாமி. சிதம்பரனார் 'எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்' ப. 112
   

 • 2. முருகேச பாண்டியன். ந 'அற்றைத் திங்கள் அவ்வெண்நிலவில்' ப. 14
   

 • 3. ராஜ் கௌதமன் 'தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்' ப. 179
   

 • 4. முருகேச பாண்டியன். ந 'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்' ப. 20
   

 • 5. உ.வே. சாமிநாதையர் 'சங்க இலக்கியம், குறுந்தொகை' ப. 469
   

 • 6. உ.வே. சாமிநாதையர் 'சங்க இலக்கியம், அகநானூறு' ப. 67
   

 • 7. அரங்க சுப்பையா, 'இலக்கியத் திறனாய்வு: இசங்கள்- கொள்கைகள்' ப. 288
   

 • 8. முருகேசபாண்டியன். ந 'அற்றைத்திங்கள் அவ்வெண்நிலவில்' பக்.17-18

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத் தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி,கோயம்புத்தூர்
- 641 035
 


 

 

  

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்