உளவியல் நோக்கில் நாஞ்சில்நாடன் சிறுகதைகள்

முனைவர் அ.இந்துமதி


நாஞ்சில்நாட்டு மக்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் நாஞ்சில் நாடனின் தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்னும் சிறுகதைத் தொகுப்பில் காணலாகும் குடும்பம், சமுதாயம் ஆகிய நிலைகளில் உளவியல் சிக்கலுக்கும் உளப்போராட்டங்களுக்கும் உள்ளாகும் மக்களின் உளவியல் கூறுகளை இக்கட்டுரை ஆராய்கின்றது.

உளவியல்

உளவியல் என்பது மனித நடத்தையையும், மனித அனுபவத்தையும் அறிவியல் முறையில் ஆராய்வதாகும். மேலும் மனிதனின் செய்கைகள், புலனுணர்ச்சிகள், நடவடிக்கைகள் ஆகியவற்றை அறிய உதவும் அறிவியலே உளவியல் எனப்படும்.

மனிதன் தான் எண்ணுகின்ற காரியம் தடைப்பட்டாலோ அல்லது நிறைவேறாமல் போனாலோ உளவியல் சிக்கலுக்கு ஆட்படுகின்றான் இதற்கு அவன் வாழும் சூழ்நிலையோ அல்லது உடன் வாழும் மனிதர்களோ இதற்குக் காரணமாய் அமைகின்றனர். மேலும் அவனது உடல் உறுப்புக்களில் ஏதேனும் குறை ஏற்பட்டாலும் உள்ளத்தில் போராட்டம் ஏற்படுகின்றது.

நாஞ்சில் நாடன் சிறுகதைகளில் உளவியல்கூறுகள்

முரண்டு என்னும் சிறுகதையில் நீண்ட காலம் குழந்தையில்லாததால் தவம் இருந்து பெற்ற பிள்ளையாகிய மீனாட்சி சுந்தரத்தை அவனது பெற்றோர் சிறுவயது முதலே அவன் வயது பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட விடாமல் அதீத அக்கறையுடன் வளர்ப்பதால் அவன் தனிமையிலேயே வளர்கின்றான்;. அதனால் அவன் மனம் எப்போதும் ஆழ்கடலிலேயே பயணம் செய்து கொண்டு இருக்கும் அதனால் அது எங்கு தரை தட்டி நிற்கும் என்று யாருக்குமே ஏன் அவனுக்கே கூடத் தெரியாது. அதனால் அவனை எல்லோரும் டப்பு சுந்தரம் என்றே அழைப்பர். இதனை 'மற்ற பிள்ளைகளோடு சேர விடமாட்டார்கள.; அங்கே இங்கே என்று ஓடியாடி விளையாட விடமாட்டார்கள். வீட்டுத்தெரு நடையில் உட்கார்ந்து பனையோலைப் பெட்டியில் அவலோ, கடலையோ, அவித்த கானப் பயிறோ போட்டுத்தின்றபடி, மற்ற பிள்ளைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பான்;.'(முரண்டு, தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் ப.
42) என்ற வரிகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

அதனால் மற்றவர்களுடன் மனம் விட்டுப் பேசாமல் தன் மனக்கருத்துக்களை யாருடனும் வெளியிடாமல் தனிமையிலேயே வாழ்க்கையைக் கழிக்கின்றான். அவன் வளர்ந்து ஆளானதும் அவனுக்கு மணவாளக்குறிச்சி பொன்னம்மாளைத் திருமணம் செய்து வைக்கின்றனர். அவளும் அவனைப் போலவே அடக்கமான மங்கல்புத்தியுடனான சாதுவாக இருக்கின்றாள். இருவருக்கும் இருக்கும் பொருத்தத்தை எண்ணி ஊர்மக்கள் வியக்கின்றனர். பொன்னம்மாள் எப்போதும் பிராந்து பிடித்தது போல் கண்களில் ஒரு வெளிறலோடு இருப்பாள். ஆனால் டப்பு சுந்தரத்தைக் கண்டால் மட்டுமே சிரிப்பாள்.

சுந்தரம் நல்ல உழைப்பாளி ஆனாலும் சாமார்த்தியசாலி இல்லை. அவனுக்குத் திருமணமாகி ஏழெட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் அவனது பெற்றோர்கள் கவலைப்பட்டு, குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்ற காரணத்தினால் அவனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கத் தீர்மானிக்கின்றனர். அவன் மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அவள் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. ஆனால் சுந்தரத்திற்கு விருப்பமில்லை என்பதாலும் அவன் மறுப்பை அவன் பெற்றோர் ஏற்காததாலும் அவன் கோபத்தால் மற்றவர்களிடம்; முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றான். 'சுந்தரத்தின் செயல்களில் முரட்டுத்தனம். உழவு வயலில் மாடு அடிவாங்கியது. முகம் எப்போதும் குளிர்ந்த இரும்பாய் இறுகிக் கிடந்தது.'(முரண்டு,தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் ப.
45) என்ற வரிகள் அவனது செயல் மாறுபாட்டிற்குச் சான்றாக அமைந்துள்ளன. தன் பெற்றோரையும் எதிர்க்க இயலாமலும் அவன் தாலி கட்டிய மனைவிக்கும் துரோகம் செய்ய முடியாமலும் திருமணத்தைத் தடை செய்ய இயலாமலும் மன உளைச்சலினால் தவிக்கின்றான். அவன் உள்ளத்தில் ஏற்படும் போராட்டத்தினால் தவிப்பவன் யாருக்கும் தெரியாமல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாள் அதிகாலையில் மருத்துவமனைக்குச் சென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டுக்கு வருகின்றான் அவன் மனைவிக்குக் குழந்தை பிறக்காததால் தானே அவனுக்கு மறுமணம் செய்ய அவன் பெற்றோர் எண்ணுகின்றனர் என்பதால் அவன் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்கின்றான். 'இரண்டு சம வலிவுடைய ஊக்கிகள் பூர்த்தி பெற இயாலாமல் ஒன்று மற்றொன்;றிற்குத் தடையாக இருப்பதன் காரணமாக ஏற்படும் உளநிலையே உளப்போராட்டம்' என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். இத்தகைய உளப்போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் சுந்தரம் பெற்றோரின் பேச்சைக் கேட்க இயலாமலும் தன் மனைவியைப் பிரிய இயலாமலும் உள்ள நிலையில் அவனுக்கே குழந்தை பெறும் ஆற்றல் இல்லாவிட்டால் மறுமணம் செய்து வைக்கமாட்டார்கள் என்று எண்ணித் தன்னைத் தானே தண்டித்துக் கொள்கின்றான்.

'குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
(குறள்.எண்:
66)

என்பது போலச் செல்வங்களுள் சிறந்த செல்வம் மக்கட்செல்வமே. அம்மக்கட்பேறு இல்லாதவர்களின் வாழ்க்கை நிறைவு பெற்ற வாழ்க்கையாக அமைவது இல்லை என்பதாலேயே மக்கள் மனதிற்குள் போராட்டம் நிகழ்கின்றதை இக்கதையின் மூலம் அறிந்து கொள்கின்றோம்.

விரதம் என்னும் சிறுகதையில் சின்னத்தம்பியா பிள்ளை விவசாயம் செய்பவர் தம் இரு பெண்களையும் திருமணம் முடித்துக் கொடுத்து விட்டுத் தன் மனைவியுடன் தனியே வசிப்பவர். அன்று அமாவாசை தினமாததால் குளித்து விட்டுத்தான் உணவருந்துவார். அவர் மனைவிக்கு உடல் நலமில்லாததால் கஞ்சி வைத்துக் கொடுத்து விட்டு நீராடுவதற்காக ஆற்றிற்குச் செல்கின்றார். குளித்து விட்டு அமாவாசையன்று மதியம் பழையதைச் சாப்பிட வேண்டாமென்று எண்ணித் தாழங்குடியில் உள்ள மகள் வீட்டிற்குச் சென்று சாப்பிடலாம் என்று நினைத்துச் செல்கின்றார்.

அவரது கிராமத்திலிருந்து ஆறு பர்லாங் தூரத்தில் இருக்கும் தாழங்குடிக்குச் செல்கின்றார். பகல் நேர வெயிலில் தந்தை வருவதைக் கண்ட பெரிய மகள் அவரை முகமலர்ச்சியோடு வரவேற்றாலும் உச்சி வெயிலில் வந்ததைக் கண்டு கோபித்துக் கொள்கின்றாள். அவரது தோற்;றத்தைக் கண்டு சாப்பிட்டு வந்திருப்பார் என்று எண்ணி அவரைச் சாப்பிடச் சொல்லவில்லை. மகள் சாப்பிடக் கூப்பிடுவாள் என்று எண்ணியவர் அவள் சாப்பிடக் கூப்பிடாததால் ஏமாற்றம் அடைகின்றார். அவளிடம் சாப்பாடு கேட்கத் தயங்கியவர்; அவரது சிறிய மகளின் வீட்டிற்குச் செல்கின்றார். அங்கு அவரைக் கண்டதும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றவள் அக்காள் வீட்டிற்குச் சென்ற பின்பே தன் வீட்டிற்கு வந்திருக்கின்றார் என்பதை அறிந்ததும்; எப்போதும் அக்காள் வீட்டிலேயே அவர் சாப்பிடுவதாகக் கூறிக் கோபித்துக் கொள்கின்றாள். அவர் இன்று அமாவாசை அதனால் என்றதும் நானும் குளித்து விட்டே சமைத்தேன் இங்கு விரதம் முடித்தால் என்ன பங்கம் வந்து விடும் என்று கூறுகின்றாள்.

அவருடைய உள்ளத்தில் தான் இன்னும் சாப்பிடவில்லை என்று சொல்லிவிடலாமா என்று நினைக்கின்றார். ஆனால் மருமகன் எதிரில் பசிக்கின்றது இன்னும் சாப்பிடவில்லை என்று கூற அவரது கெரவம் தடுக்கின்றது. ' மருமகன் வேற இருக்கார். அப்படியென்ன பசி? மரியாதை கெட்ட பசி? இப்படி வயத்தை நிறைக்காட்டாத்தான் என்ன? மனம் வாதமும் எதிர்வாதமும் செய்தது.'(விரதம்,தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் ப.
31) என்ற வரிகள் அவருடைய உள்ளத்தில் போராட்டம் நிகழ்கின்றதை உணர்த்துகின்றன. பசியும் கௌரவமும் ஒன்றோடு ஒன்று போட்டியிடக் கடைசியில் கௌரவமே வெல்கின்றது. மகள்கள் இருவருமே அவருடைய பசிக்கு உணவளிக்காததால் அவர் மனமும் வயிறும் வெறுமையை அடைகின்றன. அவருடைய உள்ளமும் ஏமாற்றமடைகின்றது என்பதன் மூலம் அவரது உளப்போராட்டம் புலனாகின்றது.

இருள்கள் நிழல்களல்ல என்னும் சிறுகதையில், ஏழை நாவிதனான பண்டாரம் ஒருவன் திருமண விருந்தினை எதிர்பார்த்து ஒரு திருமண வீட்டிற்குச் செல்கின்றான். அங்கு முகூர்த்தம் முடிந்த பின்னர் பந்தி பரிமாறப்படுகின்றது. பண்டாரம் அவர்களது கூட்டத்தினருடன் செல்லாமல் தனியே குறக்குடும்பத்துடனும் காவி உடை தரித்த பிச்சைக்காரர்களுடனும் அமர்ந்து கொள்கின்றான் இவ்வூரில் பிச்சைக்காரர்களுக்கு பந்தியில் உணவளிக்காமல் சோற்றுடன் குழம்பு முதலியவற்றைக் கலந்து இடுவது வழக்கம் அதனால் பந்திக்கு முந்திய பண்டாரத்தையும் அவனுடன் நுழைந்த பிச்சைக்காரர்களையும் ஒருவர் தடுத்து நிறுத்தி விடுகின்றார். அப்போது அவரைக் கண்ட பந்தி பரிமாறிகளில் அவ்வூர்க்;காரரர் ஒருவர் முன்னமே வந்திருக்கலாமே என்று கூறுகின்றார். 'பண்டாரத்துக்குச் சிறிய மயக்கம் இவர்களோடு பிச்சை வாங்கித் தின்பதா? வயிற்றின் முணுமுணுப்பு, போ... வாங்கிக்கோ' என்று பிடர் பிடித்து உந்தியது. ஆனால் அவனது மனமோ அவன் கால்களை நகர விடாமல் தடுத்தன. (இருள்கள் நிழல்களல்ல, தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் ப
.103) என்ற வரிகள் அவனது உளப்போராட்டத்தினை உணர்த்துகின்றன. இவ்வாறு அவன் உள்ளத்தில் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த போது சோறு, கறிகாய் எல்லாம் வீட்டிற்குக் கொண்டு போய் விட்டதாகக் கூறி வீட்டிற்கு போய் வாங்கிக் கொள்ளுமாறு ஒருவர் கூற, அங்கேயாவது சாப்பாடு கிடைக்கும் என்று எண்ணிச் செல்பவனுக்கு அங்கும் ஏமாற்றமே கிடைக்கின்றது. கல்யாண வீட்டில் விருந்து சாப்பிட ஆசைப்பட்டுச் சென்ற பண்டாரத்திற்கு ஏமாற்றமே கிடைப்பதனால் மனம் வாடித் தன்நிலையை எண்ணி ஏமாற்றத்தினால் மனம் புழுங்குகின்றான்; பண்டாரம். இதனால் அவன் உள்ளம் அடையும் துன்பமும உளப்போராட்டமும்; எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மனிதனின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளும், அனுபவங்களுமே அவன் வாழ்க்;கையின் இன்ப துன்பங்களை எதிர்கொள்ள வைக்கின்றன. அவ்வகையில் நாஞ்சில்நாடன் சிறுகதைகளில் வாழும் கதைமாந்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் உள்ளப்போராட்டம் என்னும் உளவியல் கூறானது அவர்களுடைய வாழ்க்கையில் எத்தகைய தாக்கங்களை அவர்களிடம் உண்டாக்குகின்றன என்பதை இக்கட்டுரை புலப்படுத்துகின்றது.



முனைவர் அ.இந்துமதி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சங்கராஅறிவியல்மற்றும்வணிகவியல்கல்லூரி,
கோவை.

 

 

 



 



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்