வைரமுத்து கவிதைகளில் சமூகச்சிந்தனைகள்

முனைவர் அ.இந்துமதி

க்கள் கூடி வாழும் சமுதாயத்தின் பல்வேறு நிலைகள், அவற்றில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சமுதாயத்தின் வளர்ச்சி ஆகியவற்றை அந்தந்த காலகட்டத்தின் பின்னணியோடு எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் கவிஞர்கள். சமுதாயத்தின் அங்கமாகக் கவிஞன் இருப்பதால் அவனது கவிதைகளில் சமுதாயம் குறித்த பதிவுகள் இயல்பானதே ஆகும.; அவ்வகையில் இன்றைய கவிஞர்களுள் எளிய நடையில் இனிய தமிழில் பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கவிதை படைக்கும் வல்லமை பெற்றவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவரது கவிதைகள் சமுதாயத்தில் மக்கள் வாழ்வில் கலந்திருக்கும் பல்வேறு சிக்கல்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஆதலால் அவரது கவிதைகள் இன்றைய சமுதாய நிலையை எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்பதைப் புலப்படுத்தும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.

கவிஞனின் தன்மை

ஒரு சமுதாயத்தை ஒரு கவிஞனால் உண்டாக்கவும் முடியும,; அதனை வாழ வைக்கவும் முடியும,; அதனை அழிக்கவும் முடியும் என்பதால் கவிஞர் கண்ணதாசன் தன்னை ஒரு காலக்கணிகன் என்று குறிப்பிடுகின்றார். அதுபோல,

'கவிஞன்
உருவாக்கப் படுவதில்லை
காரணம்
அவன்
களிமண் பொம்மையில்லை
கவிஞன்
பிறப்பதுமில்லை
ஏனெனில்
எந்தக் கருப்பையும்
அவனை
அசுத்தப்படுத்திவிட முடியாது
அவன்
தோன்றுகிறான்
தன்னிலிருந்து இன்னொன்றாய்
தானே தோன்றுகின்றான்.' (
திருத்தி எழுதிய தீர்ப்புகள் ப.
58)

என்ற கவிதையின் மூலம், கவிஞனின் தன்மையை, கவிஞனுக்கான இலக்கணத்தை எடுத்துரைத்து. அவர்கள் சமுதாயத்தில் ஏற்படும் சிக்கல்களை மக்களிடம் எடுத்துக்கூறி அவற்றிற்குத் தீர்வு காண்பவர்களாகவும் திகழ்கின்றனர் என்றும் எடுத்துரைக்கின்றார்.

இயற்கை

இயற்கையைப் பாதுகாத்து அதனோடு இயைந்த வாழ்க்கையைச் சங்ககாலத் தமிழ் மக்கள் வாழ்ந்தனர். ஆனால் இன்றோ நாகரிகம் என்ற பெயரில் இயற்கையை நிராகரித்து செயற்கைப் பாதையில் செல்வதையே வளர்ச்சி என்று எண்ணுகின்ற காலகட்டமாகிவிட்டது. அறிவியல் நமக்குத் தேவையே என்றாலும் இயற்கையைப் புறக்கணிக்காமல் இயற்கையோடு இயைந்து வாழவேண்டும் என்பதை,

'இயற்கையின் மடியைத் தாண்டி
இறங்கிய மனிதஜாதி
செயற்கையில் விழுந்து சொந்தச்
சிறகுகள் இழந்து போனதை
மயக்கத்தில் கிடந்து வாழ்வின்
மகுடத்தை இழந்து...
இயற்கையின் மடிக்கு மீண்டும்
இறங்கித்தான் ஆகவேண்டும்.'
(இரத்ததானம், ப.
73)

என்ற கவிதையின் மூலம் உணர்த்துகின்றார். இன்றைய கால கட்டத்தில் இயற்கையின் அவசியத்தைப் புரிந்து கொள்ளாமல் அழித்த காரணத்தினால் தான் மழையின்மை, அதிக வெப்பம் போன்றவைகளுக்கு ஆட்பட்டுத் திண்டாடும் சூழலில் மீண்டும் அவற்றை மீட்டெடுப்பதற்கு பல வழிமுறைகளைக் கையாள வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். ஆதனால் இனியாவது இயற்கையை நேசிக்கும் மனப்பான்மையை வளர்த்தல் வேண்டும்.

கல்வி

மனிதனைப் பண்படுத்துவதற்கும், ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் காரணமாய் அமைவது கல்வியே ஆகும். ஆனால் இன்றைய கல்வியோ வியாபாரமாகவும் மாணவர்கள் விரும்பிக் கற்க இயலாததாகவும் உள்ளதை,

'அவர்கள் மூளையில்
விதையைப் போல
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியைப் போல்
அறையப் படுகிறது.'
(இன்னொரு தேசிய கீதம்,ப.
87)

என்ற கவிதை வரிகளின் மூலம் இன்றைய கல்வி கட்டாயக்கல்வியாகவும், வாழ்க்கையின் யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள இயலாத கல்வியாகவும் இருப்பதோடல்லாமல் அவை மாணவர்களுக்குச் சுமையாக இருப்பதாகவும் கவிஞர் குறிப்பிடுகின்றார். மேலும்,

'மனப்பாட மந்திரங்களைச்
சரியாக உச்சரித்தால் தான்
சரஸ்வதி வரந்தரச்
சம்மதிப்பாளாம்!
தேர்வுக் கூடமென்னும்
நரகச் சுரங்கந்தான்
சொர்க்கத்திற்குச் செல்லும்
சுருக்கு வழியாம்'


என்ற வரிகளின் மூலம் இன்றைய கல்விமுறை வெறும் மனப்பாடக்கல்விப் போக்;கைக் கொண்டு அமைந்துள்ளதால் அவை வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் அமையவில்லை என்று கவிஞர் தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்துகின்றார்.

பெண்கள்

இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பல இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் ஆளாவதை,

'விளம்பரங்களின்
போலிச் சிம்மாசனங்களில்
எப்போதும் பெண்ணையே
இருத்தி வைப்பதெல்லாம்
அவளோர்
போகப் பொருளென்று
நிரந்தரமான நியாயப்படுத்தத்தானே!'
(திருத்திஎழுதியதீர்ப்புகள்,ப.
36)

என்ற கவிதையின் மூலம் பெண்களை முன்னேற்றுகின்றோம் என்ற பெயரில் பெண்களை இழிவு படுத்தும் பொய்ம்மைத் தனத்தினைச் சாடுகின்றார் கவிஞர்.

குழந்தைத் தொழிலாளர்கள்

நம் நாட்டில் இன்னும் பலர் வறு மையின் காரணமாகக் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் குழந்தைகளின் நிலையினை,

'சிவகாசி
வெடிமருந்துக் கிடங்குகளில்
எவருக்கோ தீக்குச்சிகளாய்
எரிகிறார்கள் குழந்தைகள்
எரிகிறார்கள்
தீபாவளியின்; வெள்ளோட்டமாய்
வெடிக்கிறார்கள் குழந்தைகள்
வெடிக்கிறார்கள்'
(இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, ப.
118)

என்னும் இரும்படிக்கும் ரோஜாக்கள் என்னும் கவிதையின் மூலம் எடுத்துரைக்கின்றார்.

தனிமனித நம்பிக்கை


மனிதனின் உயிர் நாடியே தன்னம்பிக்கை தான். தன்னம்பிக்கை இல்லா மனிதன் வாழ்வில் வெற்றி பெறுவதில்லை என்பதைக் கவிஞர் வைரமுத்து,

'வாழ்க்கையை
வாழப்பார்
அல்லது
வாழ்க்கையை
வார்க்கப்பார்'
(கொடிமரத்தின் வேர்கள்,ப.
4)

என்ற கவிதையின் மூலம் நாம் நினைக்கின்ற வாழ்க்கை அமையாவிடினும் நம் வாழ்க்கையை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும.; அது கி;ட்டவில்லை என்பதற்காக மனம் ஒடிந்து வாழ்க்கையை வீணாக்கக் கூடாது என்று தன் கவிதையின் மூலம் தன்னம்பிக்கை விதையை விதைக்கின்றார்.

முதிர்கன்னி

திருமணம் ஆகாத ஒரு பெண்ணின் மனநிலையை,

'அல்லிப்பூ தாமரைப்பூ
ஆயிரம்பூப் பூத்தாலும்
கல்யாணப் பூவெனக்குக்
காலமெல்லாம் பூக்கலையே
பெத்தவங்க சபிச்சாங்க
மத்தவங்க வெறுத்தாங்க
விக்காத சரக்குன்னு
வீதியெல்லாம் சிரிச்சாங்க'
(ரத்ததானம்,ப.
34)

என்ற கவிதையின் மூலம் பெற்றோரே தம் மகளின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அப்பெண்ணின் மனத்தை எந்த அளவிற்குப் புண்படுத்துகின்றனர் என்பதனை உணர்த்துகின்றார். படிப்போரின் மனத்தை மிகுந்த வேதனைக்கு உண்டாக்குகின்றது இக்கவிதை இச்சமூகம் என்று திருந்துமோ என்று இச்சமூகத்தினைச் சாடத்துடிக்கின்றது மனம்.

கவிஞர் வைரமுத்து தம் படைப்புக்களில் சமுதாயச்சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமுதாயத்தில் நடைபெறும் பல்வகைப் பிரச்சினைகளை ஆராய்ந்து மக்களிடையே சமுதாய விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளார். அவற்றில் சில பதிவுகளே இங்கு சுட்டப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் சமுதாயத்தில் நிகழும் குறைகளை அகற்ற வேண்டிய கடமையுணர்;வுடன் அவரது கவிதைகளைப் படைத்துள்ளமை புலப்படுத்தப்பட்டுள்ளது.


முனைவர் அ.இந்துமதி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சங்கராஅறிவியல்மற்றும்வணிகவியல்கல்லூரி,
கோவை.

 

 

 



 



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்