ஹைகூ கவிதையில் உடன்பாட்டுச் சிந்தனைகள்

பேராசிரியர் நிர்மலா மோகன்


தையும் உடன்பாடாகக் காண்பதும், எப்போதும் உயர்வாக உள்ளுவதும் தமிழர்க்கு வாய்த்த இரு தனிப்பெரும் பண்புகள் ஆகும். தொல்காப்பியம் தொடங்கி இன்றைய ஹைகூ கவிதை வரையிலான நீண்ட, நெடிய தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் இவ்விரு பண்புகளே கோலோச்சி நிற்கக் காணலாம். ‘இன்னாது இம்ம இவ்வுலகம்’ எனப் பாடிய சங்கச் சான்றோர் அத்துடன் நின்று விடாமல், ‘இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’ என அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. ‘உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல்’ என்னும் வள்ளுவர் வாய்மொழியும் இவ் வகையில் கருத்தில் கொள்ளத்தக்கது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையின் தலைமகனான பாரதியும் தமது புதிய ஆத்திசூடியில் ‘பெரிதினும் பெரிது கேள்’ எனப் பாடி இருப்பார். இன்று தமிழில் புதுக்கவிதை அமைத்துத் தந்த தோரண வாயில் வழியாக உலா வந்து கொண்டிருக்கும் ஹைகூ கவிதைகளும் ஒல்லும் வகையில் எல்லாம் உடன்-பாட்டுச் சிந்தனைகளை வெளிப்படுத்தி இருக்கக் காணலாம்.

முதல் ஹைகூ தொகுப்பு

தமிழுக்கு
1984-ஆம் ஆண்டில் ‘புள்ளிப் பூக்கள்’ என்னும் முதல் ஹைகூ தொகுப்பினைத் தந்தவர் ஓவியக் கவிஞர் அமுதபாரதி.

‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு உரியது
அலகிலா விளையாட்டைப் புரிவது
கவிதை’


என்பது கவிதை பற்றிய அவரது வரைவிலக்கணம். அவரது ஹைகூ கவிதைகளில் உடன்பாட்டுச் சிந்தனைகள் ஆங்காங்கே நம்பிக்கைக் கீற்றாய் வெளிப்பட்டிருக்கக் காண்கிறோம். சிந்தனைக்கு விருந்தாகும் உதாரணங்கள் சில வருமாறு:

“முதிர்ந்தால் என்ன?
இன்னும் இளமையிருக்கு
கண்களில்!”

“முன்னால் நீண்டது முள்;
சோர்வற்ற எனக்காக
பின்னால் முகிழ்த்தது பூ.”

“குட்டிச் சுவர்தான்
அதன் தலையிலும் ஓர்
அற்புத இளஞ்செடி!”

“அடர்ந்த காட்டின் இறுக்கம்
ஒரு குருவியின் வரவால்
கலகலப்புற்றது!”


ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ?

முன்னணிக் கவிஞர்களில் தனியொரு ஹைகூ தொகுப்பினை வெளியிட்டிருப்பவர் – ஹைகூ கவிதையின் வளர்ச்சிக்காக இடைவிடாமல் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர் – ஈரோடு தமிழன்பன். ‘சூரியப் பிறைகள்’ என்னும் அவரது ஹைகூ கவிதைத் தொகுப்பு
1985-ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதில் இடம்பெற்றிருக்கும் ஓர் அருமையான ஹைகூ இது:

“பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி:
‘ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?"


வாழ்க்கையில் அவ்வப்போது விழுவது கூட முக்கியம் இல்லை; விழும் போது எல்லாம் சோர்ந்து விடாமல் – முடங்கிப் போகாமல் – நம்பிக்கையோடு எழுவது தான் முக்கியம். பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு பூமி முத்தமிட்டுச் சொன்னது இது தான்: ‘கவலைப்படாதே, நம்பிக்கை இழக்காதே! ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ?’

வாழ்க்கை இதுதான்!

இன்பமும் துன்பமும் சேர்ந்ததே வாழ்க்கை; குணமும் குற்றமும் கொண்டவனே மனிதன்; நன்மையும் தீமையும் கலந்ததே உலகம்; பிறப்பும் இறப்பும் நிகழ்வதே வாழ்க்கை. எதையும் இயல்பு எனக் கொண்டால் – எதிலும் அளவு எனப் பின்பற்றி நடந்தால் – வாழ்வில் நம்மைத் துன்பம் அணுகாது; நெருக்கடி நம்மைத் தாக்காது; பிரச்சினை நம்மைச் சூழாது. கவிஞர் அறிவுமதி தம் ஹைகூ ஒன்றில் அன்றாட வாழ்க்கைக் காட்சியின் வாயிலாக இவ்வுண்மையினை அழகுற உணர்த்துகின்றார்:

“வாழ்க்கை இதுதான்.
செத்துக் கொண்டிருக்கும் தாயருகில்
சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை”


இதனை இன்னமும் சுண்டக் காய்ச்சி,

“சாகும் தாய்
அருகில்
சிரிக்கும் குழந்தை”

என்னும் அற்புதமான ஓர் ஹைகூவாக வடித்துக் காட்டி இருப்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

துளிர்க்கும் தளிர்கள்!

‘ஹைகூவைச் செய்ய முடியாது. அது எங்காவது தென்படும். அதை அடையாளம் காண ஒரு தனிப்பார்வை வேண்டும். மித்ரா கொடுத்து வைத்தவர். அவருக்கு இந்த ஹைகூ பார்வை இயல்பாய் வாய்த்திருக்கிறது’ என்பது கவிக்கோ அப்துல் ரகுமான், மித்ராவுக்குச் சூட்டியுள்ள புகழாரம். இந்தத் தனிப்பார்வை தான் தண்டவாளங்களின் நடுவே துளிர்த்திருக்கும் தளிர்களைக் காட்டி மனித குலத்திற்கு நம்பிக்கையை ஊட்டுகின்றது.

“என்ன நம்பிக்கை
தண்டவாளங்களின் நடுவே
தளிர்கள்”

என்னும் மித்ராவின் ஹைகூ இவ் வகையில் குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை இழக்காத மரம்

வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழக்கலாம்; ஆனால், ஒரு போதும் நம்பிக்கையை மட்டும் மனிதன் இழந்து விடவே கூடாது. ‘வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்’ என்னும் அப்பர் வாக்கினைப் பொன்னே போல் போற்றி இறுதி மூச்சு வரை ஒருவன் தனது கடமையை ஆற்றி வந்தால் போதும், வாழ்வில் ஆக்கம் வந்தே தீரும். இதனைத் நயம்பட உணர்த்தும் பல்லவனின் ஹைகூ ஒன்று:

“எல்லாம் இழந்தும்
நம்பிக்கை இழக்காத மரத்தை
அலங்கரித்தது வசந்தம்”


“கவிதை, கண்ணீரைத் துடைக்கும் கையாக இங்கே மாறுகிறது. தளர்ந்து போகாத தன்னம்பிக்கைக்காக மரத்தின் தலையில் மலர் மகுடம் சூட்டும் வசந்தத்தை வாழ்த்துவதோடு, பல்லவனையும் நாம் பாராட்டுகிறோம்” என இத் தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையில் கவிஞர் மு.மேத்தா குறிப்பிடுவது நினைவு கூரத்தக்கது.

கொட்டிக் கிடக்கிறது நம்பிக்கை!

‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!’ என்றும், ‘பெரிதே உலகம் பேணுநர் பலரே!’ என்றும் நம்பிக்கையுடன் முழங்கினர் சங்கச் சான்றோர்கள். அவர்களின் அடிச்சுவட்டில் இன்றைய ஹைகூ கவிஞர்களும் பயில்வோர் மனங்களில் நம்பிக்கையை விதைத்துச் செல்கின்றனர். பதச்சோறாக, புதுச்சேரிக் கவிஞர் செந்தமிழனியனின் ஹைகூ ஒன்று:

“கொட்டிக் கிடக்கிறது நம்பிக்கை
தேடலே வாழ்க்கை
பரந்த பூமி”


இந்த பூமி பரந்து விரிந்தது; இதில் ஒருவர் நம்பிக்கையோடு இமைப் பொழுதும் சோராது தேடலை மேற்கொண்டால், கொட்டிக் கிடக்கிறது வாய்ப்பு! வாய்ப்பு தானாக யாரையும் தேடி வராது; வாய்ப்புக்காக ஏக்கத்தோடு காத்திருப்பதிலும் பயன் இல்லை.

“நம்பிக்கை
வைக்கோல் போரில்
துளிர்விடும் நாற்று”


என செ.ஆடலரசன் படைத்திருக்கும் ஹைகூ கவிதையும் இங்கே மனங்கொளத் தக்கது.

இங்ஙனம் இன்றைய தமிழ் ஹைகூ கவிதைகள் பதிவு செய்திருக்கும் உடன்பாட்டுச் சிந்தனைகள் பொருள் பொதிந்தவை; நம்பிக்கை மொழிகள் வாழ்வின் மேம்பாட்டுக்கு நலம் பயப்பவை.


பேராசிரியர் நிர்மலா மோகன்
‘அறிவகம்’
78/1 ஆழ்வார் நகர்
நாகமலை, மதுரை –
625 019

எழுத்தாளர்-பேச்சாளர்


 

 

 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்