புறநானூற்றில் உவமை நயம்

பேராசிரியரஇரா.மோகன்


“உவமை என்னும் சொல் ‘உவ’ என்பதன் அடியாகத் தோன்றியது என்றும் அதற்கு உள்ளத்தில் உவகை எழ அமைவது என்றும் விளக்கம் தருவர். ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’
(1229) என்னும் தொல்காப்பிய நூற்பாவுக்குப் பேராசிரியர் ‘உவமையும் பொருளும் ஒத்தன என்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல் வேண்டும்’ என உரை எழுதியுள்ளார். இவ்வுரைக் குறிப்பை நோக்கின், உவமை என்பதற்கு உவகை என்னும் பொருள் கூறியது பொருத்தம் எனலாம்” (சங்கத் தமிழ் வளம், ப.99) என மொழிவர் பேராசிரியர் இரா.சாரங்கபாணி. அவரது கூற்றுக்கு இணங்க, புறநானூற்றுப் புலவர்கள் கையாண்டுள்ள உவமைகள் படிப்பவர் உள்ளத்தில் உவகையைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளன; இன்னமும் கூர்மைப்படுத்திக் கூறுவது என்றால், ‘உவமையும் பொருளும் ஒத்தன’ என்று உலகத்தார் மகிழ்ச்சி கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளன. அவற்றுள், இங்கே ஒரு சிலவற்றைக் குறித்துக் காணலாம்.

தீக்கடை கோல் போல் போன்றவன் அதியமான்

ஔவையார் பாடிய புறப்பாடல்கள்
33. அவற்றுள் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றியவை 22. இப் பாடல்களில் அதியமானின் கொடைப் பண்பையும் வீர உணர்வையும் திறம்படப் புலப்படுத்துவதற்காக ஔவையார் கையாண்டுள்ள 16 உவமைகளும் நனி சிறந்தவை. பதச்சோறாக ஓர் உவமையினை ஈண்டுக் காணலாம்.

அதியமான் நெடுமான் அஞ்சி வீட்டு இறைப்பில் செருகப்பட்ட தீக்கடை கோல் போன்றவன், அவன் தன் ஆற்றல் வெளியே தோன்றாது இருக்கவும் இருப்பான்; தன் ஆற்றல் வெளிப்படத் தோன்ற வேண்டிய பொழுதில், தீக்கடை கோலால் கடையப்பட்ட சுடர்த்தீப் போல வெளிப்படத் தோன்றவும் செய்வான்:

“ … … நெடுமான் அஞ்சி
இல்இறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன்
கான்றுபடு கனைஎரி போலத்
தோன்றவும் வல்லன்தான் தோன்றுங் காலே”
(315)

‘அடக்கமாக இருக்க வேண்டிய இடத்தில் அடக்கமாக இருக்க வேண்டும்; வீரத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் அதனை வெளிப்படுத்தவும் வேண்டும். இரண்டையும் தக்கவாறு, தக்க தருணத்தில் மேற்கொள்ளலே பெருமிதம்’ என்பதைப் புலப்படுத்தும் பாடல் இது. இதற்கு எடுத்துக்காட்டாக ஔவையார் தீக்கடை கோலைக் கையாண்டிருப்பது இரண்டிற்கும் நன்கு பொருந்திய உவமை ஆகும்.

“இது திருக்குறள் ஒன்றனுக்கு விளக்கம் தரக் கூடிய பாட்டு.

‘தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.’
(236)

இதற்குப் பிறந்தால் புகழொடு பிறக்க வேண்டும் என்ற உரை பொருந்தாது. ஒரு செயலில் இறங்கினால் புகழுடன் தோன்ற வேண்டும்; இன்றேல் அதில் இறங்காதிருப்பதே நல்லது.

‘அஞ்சி, ஞெலிகோல் (தீக்கடை கோல்) போலத் தோன்றாதிருக்கவும் வல்லன்; போரென்று வெளிப்பட்டுத் தோன்ற வேண்டிய சமயம் வந்தால், அதில் வீரமுடன் தோன்றவும் வல்லன்’ என்ற பாடற் சொல்லும் கருத்தும் பொருந்தி வருதல் காணலாம்” (புறநானூற்றுக் குறும்படங்கள், பக்.
59-60) என்னும் மூதறிஞர் தமிழண்ணலின் கருத்து ஈண்டு நினைவுகூரத் தக்கதாகும்.

‘செருப்பு இடைச் சிறுபரல் அன்னன்’

போருக்குத் தொடக்கமாகப் பகைவர் பசுக்களைக் கவர்ந்து வருதல் வெட்சித் திணை. அதன் துறைகளுள் ஒன்று உண்டாட்டு; வீரர்கள் மது உண்டு மனம் களிப்புறுவது. புறநானூற்றின்
257-ஆம் பாடல் வீரன் ஒருவன் தனது தலைவனை வியந்து கூறுவதாக அமைந்தது.

“செருப்பு இடைச் சிறுபரல் அன்னன்”

என இப் பாடலின் தொடக்க வரியில் இடம்பெற்றிருக்கும் உவமை அரிய ஒன்று. ‘செருப்பின் இடையே நுழைந்த சிறிய கல், அணிந்தோர்க்குத் துன்பத்தினைத் தருவது போல், நம் தலைவன் பகைவர்க்குத் துன்பம் தருபவன்’ என்பது வீரனின் கூற்று. ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்பது போல், சிறியதாய், வருத்தம் மிகுதி செய்வதாய் அமைவது சிறுபரல். அரிய இவ்வுவமையைக் கையாண்ட புலவரின் பெயர் தெரிந்திலது.

‘கண்ணில் ஊமன் கடற்பட் டாங்கு…’

வெளிமானிடம் பரிசில் பெறுவதற்காகப் பெருஞ்சித்திரனார் சென்ற நேரத்தில் அவன் எதிர்பாராமல் இறந்து விடுகிறான். ஆகவே, பெருஞ்-சித்திரனார் மிகுந்த ஏமாற்றமும் துயரமும் அடைகின்றார். அந் நிலையில் பாடிய பாடலில் அவர் தம்முடைய இரங்கத் தக்க அவல நிலைக்குக் கண் இல்லாத ஊமையன் ஒருவன் மழை பெய்து கொண்டிருக்கும் இரவுப் பொழுதில் அவன் சென்ற மரக்கலம் கவிழ்ந்து கடலில் விழுந்ததற்கு ஒப்பிடுகின்றார்:

“மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின்
ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
கண்ணில் ஊமன் கடற்பட் டாங்கு…”
(238)

“‘கண்ணில் ஊமன் கடற்பட் டாங்கு’ என்பது இணையில்லா உவமையாம். பார்வையில்லாதவன்; காது கேளாதவன்; பேசவும் முடியாதவன்; வீழ்ந்ததோ, கடலில்; பொழுதோ, மழைக் கால இரவு; சிறிய தொடரில் அரிய பெரிய செய்தியை உட்கொண்ட தமிழ் வளம் இது” (புறநானூறு: மக்கள் பதிப்பு, பக்.
381-382) என இவ்வுவமையின் நலத்தினை விதந்து மொழிவர் மூதறிஞர் இரா.இளங்குமரன்.

தாய்-சேய் உறவின் அடிப்படையில் அமைந்த உவமைகள்

தாய்-சேய் உறவின் அடிப்படையில் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள உவமைகள் நான்கு. இவை புலவர்களின் ஆற்றல் சான்ற பொருள் புலப்பாட்டிற்குப் பெரிதும் உதவுவனவாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

‘ஒரு தாய் தன் குழந்தையைக் காப்பது போல் மன்னன் தன் நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்பது நரிவெரூஉத் தலையார், சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் தோப்பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் கூறும் அறிவுரை ஆகும்.

“ … … … காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி”
(புறநானூறு,
5)

பரணர், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைக் குறித்துப் பாடிய புறப்பாடலில் இவ்வுவமையை வேறு வடிவில் கையாண்டுள்ளார்; இளஞ்சேட் சென்னியோடு போர் புரிந்த பகைவரின் நாடு தாய் இல்லாக் குழந்தை போல் ஓயாது கூவி வருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“தாயில் தூவாக் குழவி போல
ஓவாது கூவுநின் உடற்றியோர் நாடே” (
புறநானூறு,
4)

அரிசில் கிழார், அதியமான் எழினி தகடூரில் நிகழ்ந்த போர்க் களத்தில் பொருது வீழ்ந்த நிலையில் பாடிய புறப்பாடலில், பெற்ற தாயை இழந்த குழந்தையைப் போல எழினியின் விரும்பத்தக்க சுற்றத்தார் தனித்தனியே இருந்து வருந்தியதாகக் கூறியுள்ளார்.

“பொய்யா எழினி பொருதுகளம் சேர
ஈன்றோள் நீத்த குழவி போலத்
தன்அமர் சுற்றம் தலைத்தலை இனைய”
(புறநானூறு,
230)

புறத்தினை நன்னாகனார், ஓய்மான் வில்லியாதனைப் பாடிய புறப்பாடலில், ‘குற்றமற்ற தாயிடம் பால் பருக விரும்பும் தாயைப் போலப் பரிசு பெறும் ஆர்வத்தால் நின்னிடம் வந்தேன்’ என மொழிவதும் இங்கே கருதத் தக்கதாகும்.

“ … … … வசைஇல்
தாயில் தூஉம் குழவி போல…”
(புறநானூறு,
379)

சுருங்கக் கூறின், “சங்கப் புலவர் காணும் உவமைகள், பொருளோடு ஒத்த தன்மையால் நெருக்கம் உடையனவாய் நின்று, உணர்வுக்கு இன்பஞ் செய்வனவாம்” (உரைநடைக் கோவை: இரண்டாம் பகுதி, ப.
101) என்னும் பண்டிதமணி மு.கதிரேசனாரின் புகழாரத்திற்குக் கட்டியம் கூறும் வகையில் புறநானூற்று உவமைகள் விளங்குகின்றன எனலாம்.


பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.

 

 

 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்