இலக்கண வித்தகர், இன்முகப் பேராசான் பண்டிதர் ம.செ.அலெக்ஸ்சாந்தர்

கவிஞர் அகணி சுரேஸ்


மிழுலகிற்கு நன்கு அறிமுகமான பண்டிதர் ம.செ.அலெக்சாந்தர் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி கேட்டு ஆறாத் துயரம் அடைந்திருப்போரில் நானும் ஒருவன். இந்த நேரத்தில் அவரின் சீரிய வாழ்க்கை பற்றிய ஒரு கட்டுரையை எழுத விரும்பியதால் இந்தக் கட்டுரை உங்கள் வாசித்தலுக்கு வந்துள்ளது. கடந்த பல வாரங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அமரர் அலெக்ஸ்சாந்தர் அவர்கள் 2017 அக்டோபர் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அவரின் அண்மைக்கால வாழ்க்கையில் ஞர்யிற்றுக்கிழமை காலை நேரம் என்பது முக்கியமானது. ஒவ்வொரு ஞர்யிற்றுக்கிழமையும் எப்பொழது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வாரம் முழுவதும் காத்திருப்பார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் தமிழ்க்கவிஞர்களுக்கு யாப்பிலக்கணம் கற்பித்து வந்ததால், ஆவலுடன் அந்த நாளுக்காகக் காத்திருப்பார். அந்த நாளில் கற்பித்தல் செய்வதற்காக வாரம் முழுவதும் தயார்படுத்தல் செய்வார். இதனால் போலும் தனக்குப் பிடித்த நாளாகிய ஞாயிற்றுக்கிழமையில் இறைவன் இவரைத் தன்னோடு அணைத்துக் கொண்டார் என்று எண்ணத் தோன்றுகின்றது. ஒரு ஆசிரியர் என்றால் இப்படித்தான் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டிய வழிகாட்டியாக அவரை நாங்கள் எப்பொழுதும் நினைவுகொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும். ஓவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலைநேரத்தில் தனது பிள்ளைகளோடும், பேரப்பிள்ளைகளோடும் கூடிக் குலாவும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். இதனால் ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தனது மேலுலகப் பயணத்திற்கும் வைத்துக் கொண்டார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ஈழத்தில் பண்டிதர் ம.செ.அலெக்ஸ்சாந்தர்

அமரர் அலெக்ஸ்சாந்தர் அவர்கள்
1934ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையிலும், உயர்கல்வியை ஆங்கில மொழிமூலமாக புனித பத்திரிசியார் கல்லூரியிலும் பெற்றார். அவர் சிரேஸ்ட பாடசாலைத் தராதரப் பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் திறமைச் சித்தியுடன் முதலாம் பிரிவில் தேறினார். அதன் பின்னர் ஸ்ரான்லி கல்லூரியில் சேர்ந்து இலண்டன் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சியடைந்து கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து பயிற்றப்பட்ட தமிழாசிரியராக வெளியேறினார். அவரின் ஆசிரியப்பணி முதலில் மலையகப் பகுதியில் ஆரம்பமாகியது. அவர் பலாலி ஆசிரியர் கலாசாலையில் விசேட ஆங்கில ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். அவரின் ஆழ்மனத்தில் காணப்பட்ட விருப்பத்தால் பாலபண்டிதர், பண்டிதர் தேர்வுகளில் சித்தியடைந்தார். 1970ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரித் தேர்வு மூலமாகப் பட்டதாரியானார். மேலும் திறந்த பல்கலைக்கழகத்தில் பயின்று டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றதோடு முதுமாணிப் பட்டப்படிப்பையும் மேற்கொண்டு முதலாம் பரீட்சையில் சித்திபெற்ற பொழுதும் நாட்டுச் சூழ்நிலையால் இரண்டாம் பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போய்விட்டது என்பதைக் கவலையுடன் பகிர்ந்து கொள்வார். 1973ஆம் ஆண்டு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகத் தெரிவு செய்யப்பட்டு மட்டக்களப்பு, அளுத்கம, கொழும்புத்துறை, பலாலி ஆகிய ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1983ஆம் ஆண்டில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பதவியுயர்வு பெற்றதோடு, தேசிய கல்வி நிலையத்தில் தமிழ்மொழி மூலம் கற்பித்தலுக்குத் தேவையான நூல்களை உருவாக்கும் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் இயங்கிய இந்தக் குழுவில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த வித்துவான் சி.குமாரசாமி, கலாநிதி துரைராசா, கலாநிதி சொக்கலிங்கம் (சொக்கன்), திரு.வே.சுப்பிரமணியம்(முல்லைமணி), திரு.வை.கா.சிவப்பிரகாசம் (வைகாசி) ஆகிய அறிஞர்கள் அங்கம் வகித்தனர் என்பதும், மொத்தம் இருபத்திரண்டு பாடநூல்களை இந்தக் குழவினர் பண்டிதர் அலெக்ஸ்சாந்தர் தலைமையில் இயங்கி உருவாக்கினார்கள் என்பதும் நாமறிய வேண்டிய முக்கியமான தகவலாகும். நாங்கள் கல்வி கற்ற காலத்தில் இந்தப் பாடநூல்களைப் பயன்படுத்தியிருக்கின்றோம் என்பதை எண்ணும் பொழுது இவரின் பாடநூல்கள் ஊடாகச் சிறுவயதிலேயே இவரிடமிருந்து கற்றிருக்கின்றோம் என்பது உறுதி செய்யப்படுகின்றது. 1987ஆம் ஆண்டு யாழ்குடாநாடு முழுவதுமான தொலைக்கல்வி ஆசிரியருக்குரிய முழுநேரத் தொலைக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதோடு 1993ஆம் ஆண்டு வரையில் அந்தப் பணியைச் செவ்வனே ஆற்றி வந்திருக்கின்றார்.

இவர் ஈழத்தில் சிறப்பான கல்விப்பணிகளை ஆற்றியதோடு நின்று விடாமல் பல சமூகப் பணிகளை ஆற்றியிருக்கின்றார் என்பதை நாஙகள் கவனிக்க வேண்டும். இவர் சிறுபான்மைத் தமிழர் சபைகளில் தன்னை இணைத்துக் கொண்டு சிறுபான்மைத் தமிழிரின் உயர்வுக்காக அயராது உழைத்திருக்கின்றார்.
1976ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர் விடுதலை முன்னணியில் செயலாளராகப் பதவி வகுத்துள்ளார். 1979ஆம் ஆண்டிற்கும் 1981ஆம் ஆண்டுக்கும் இடையில் வடபிராந்தியப் போக்குவரத்துச் சபையின் பணிப்பாளராகக் கடமை புரிந்துள்ளார். அமரர் அலெக்ஸ்சாந்தர் இப்பணியில் இருந்த காலத்தில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளையும் வடபிராந்திய போக்குவரத்துச் சபையில் ஏற்படுத்தினார். பனம்பொருள் அபிவிருத்திச் சபையின் பணிப்பாளராகவும் இவர் கடமையாற்றியிருக்கின்றார்.

இவ்வாறாக எண்ணற்ற கல்விப்பணி, சமூகப்பணி, ஆன்மீக ஈடுபாடு கொண்டவராகவும் வாழ்ந்த அலெக்ஸ்சாந்தர் அவர்கள் இல்லற வாழ்விலும் உன்னதமான வழிகாட்டியாகவே வாழ்நாழ் முழுவதும் வாழ்ந்துள்ளார். இவர் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மேரி மெற்றில்டா எரோணி அவர்களைக் காதலித்துப் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில்
1960 ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஒன்பதாம் நாளில் திருமணம் புரிந்து ஐந்து ஆண்பிள்ளைகளையும், இரண்டு பெண்பிள்கைளையும் ஆக மொத்தம் ஏழு பிள்ளைகளின் தந்தையாகவும் தனது இல்லறக் கடமையைச் செவ்வனே செய்து முழுமையான வாழ்வை வாழ்ந்த நல்ல கணவனாக, தந்தையாக, பேரனாக விளங்கிய பின்னரே தனது எண்பத்து மூன்றாவது வயதில் இறைவனடி சேர்ந்துள்ளார். அதுமட்டுமன்றி இறக்கும் வரை ஆசிரியப் பணி புரிந்த அறிவூட்டற் சுடராகவும் விளங்கிய பண்டிதர் ம.செ.அலெக்ஸ்சாந்தர் அவர்கள் நாங்கள் என்றென்னும் மறக்க முடியாத, மறக்கக் கூடாத கல்விமான் என்பதை இங்கே வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

கனடாவில் பண்டிதர் ம.செ.அலெக்ஸ்சாந்தர்

1993ஆம் ஆண்டு கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பண்டிதர் ம.செ.அலெக்ஸ்சாந்தர் அவர்கள் ஒன்ராறியோ ஆசிரிய தகைமை பெற்று ஆசிரியப் பணியினைத் தொடர்ந்தார். தமிழ்க்கலை தொழில்நுட்பக் கல்லூரியில் உயர்வகுப்புத் தமிழ் பிரிவுக்குத் தலைவராகச் செயற்பட்டார். ரொறன்ரோ கல்விச்சபை ஆக்கிய தமிழ்ப்பாட நூல்களை ஆக்குவதற்கு மறைந்த அதிபர் பொன் கனகசபாபதி அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் முக்கிய உறுப்பினராகப் பணிபுரிந்தார். முதலாம் தரம் முதல் ஏழாம் தரம் வரை பாடநூல்களை ஆக்கும் பணியில் முக்கிய பங்கை வகித்துள்ளார். ஒன்ராறியா மாகாண கல்விச்சபையால் முதலாம் வகுப்பு தொடக்கம் மூன்றாம் வகுப்பு வரைக்குமான தமிழ்ப்பாட நூல்களை எழுதுவதற்கு 1977இல் தெரிவுசெய்யப்பட்ட குழுவின் தலைவராக அலெக்ஸ்சாந்தர் அவர்கள் நியமிக்கப்பட அப்பொறுப்பினை ஏற்றுச் சிறந்த பாடநூல்களை ஆக்கும் பணியில் முக்கிய பங்கை வகித்தார். ரொறன்ரோவில் புகழ் பூத்த தமிழ் ஆசிரியராகவும், மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழக வெளிவாரிப் பிரிவு தமிழ் இலக்கண விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

ரொறன்ரோவில் கத்தோலிக்க மாதாந்த தமிழ் வெளியீடான 'அன்பு மக்களே' சஞ்சிகையின் ஆசிரியராக தொண்டர் அடிப்படையில் பணியாற்றினார். தமிழர் தகவல் நிறுவனத்தால் இவரின் தமிழ்ப்பணிகளுக்காக தங்கப் பதக்க கௌரவமும், திருவள்ளுவர் சிலை கௌரவமும் வழங்கப்பட்டன. ரொறன்ரோ தமிழாசிரியர் ஒன்றியத்தால் சிறந்த தமிழாசிரியருக்கான விருதையும், தமிழ்க்கலைத் தொழில்நுட்பக் கல்லூரியால் சேவை விருதையும், கனடா அரசின் குடிவரவு அமைச்சர் விருதையும் பெற்று தமிழ்மக்களுக்கே பெருமை சேர்த்துள்ளார். இவரின் நீண்ட கால ஆசிரியப்பணி, தமிழ்ப்பணி, சமூகப்பணி ஆகியவற்றை மதிப்பிட்டு அமெரிக்க உலகப்பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டத்தை வழங்கியுள்ளது. இவர் ஆற்றிய சேவைக்கு இவற்றிற்கு அப்பாலும் எமது சமூகம் விருதுகளையும், மதிப்புக்களையும்; செய்து இருக்க வேண்டும் என்பது மனத்தில் உள்ள ஆதங்கமாக உள்ளது. பண்டிதர் ம.செ.அலெக்ஸ்சாந்தர் 'வெற்றி பெற' என்ற தலைப்பில் ஒரு சுயமுன்னேற்ற நூலை எழுதியுள்ளார். இவர் எண்ணற்ற கட்டுரைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கனடாவிலும், ஏனைய நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களின் படைப்புக்களைச் சரிபார்த்து, பிழைகள் திருத்தி, வாழ்த்துரை, அணிந்துரை, மதிப்புரை போன்றவற்றை எழதி அரிய பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ளார். கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் ஆசிரியர்களின் வழிகாட்டியாகவும் விளங்கினார்.

2007 ஆம் ஆண்டு முதல் தனது இளைப்பாறும் காலத்திலும் முக்கியமான ஒரு ஆசிரியப்பணியை ஆரம்பித்து தனது மறைவு வரை செவ்வனே செய்து வந்திருக்கின்றார். 2007ஆம் அண்டில் கனடாத் தமிழ் இணைய அனுசரணையுடன் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கவிநாயகர் வி.கந்தவனம் அவர்களுடன் இணைந்து தமிழ் இலக்கண, இலக்கிய அறிவை என்போன்ற பலருக்கும் புகட்டி வந்துள்ளார். என்போன்ற பல மரபுக் கவிஞர்கள் கனடாவில் உருவாகுவதற்கு தனது நேரத்தையும், உடல் நலத்தையும் கருத்தில் கொள்ளாது இலவசமாக தனது ஆசிரியப் பணியைச் செய்தார். 2011இல் கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் உருவாகுவதற்கு முக்கிய பங்கை வகித்து அதன் காப்பாளராகவும் தொடர்ந்து விளங்குகின்றார்.

எல்லோரையும் மனமார வாழ்த்தும், அன்பினால் அணைக்கும், தன்னால் முடிந்தளவு ஊக்கப்படுத்தும் உயர்ந்த மனத்தையும், குணத்தையும் கொண்ட பேராசானாக அமரர் பண்டிதர் ம.செ.அலெக்ஸ்சாந்தர் அவர்கள் விளங்கினார். அவர் கற்பிக்கும் மாணவர்களுடன்; நண்பர்களாகப் பழகும் உயரிய பண்பு உன்னதமானது. கனடாவில் தமிழ் மொழியின் வளர்ச்சியிலும், நிலைப்பிலும் இவரின் பங்களிப்பு உன்னதமாகக் காணப்பட்டாலும் இவரின் எளிமையும், தன்னலமற்ற, புகழ் விரும்பாத் தன்மையும் இவரின் அடையாளத்தைப் பலரால் அறிந்து கொள்ள முடியவில்லை என்றே தோன்றுகின்றது. எந்தவித சுயநலமும் இன்றி எளிமையாக, சேவை மனப்பாங்குடன் பல பணிகளைச் செய்து வந்திருக்கின்றார். இவரின் பங்களிப்பு பற்றி நான் அறிந்ததை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவாவுடன் இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன். கடந்த பத்து வருடங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தூரத்தில் இருந்து வந்து தமிழ் ஆர்வலர்களுக்கு யாப்பிலக்கணம் கற்பித்து வந்தமை என்பதை நாங்கள் நன்கு சிந்தித்துப் பார்க்கும்பொழுது அவரின் தமிழ் வளர்க்கும் ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்;. இவர் ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும் சர்வமதத்திலும் சம்மதம் என்ற உயரிய மனப்பாங்கைக் கொண்டவர். இவர் வாழும்போதே வாழ்த்த வேண்டும் என விரும்பி இவரின் யாப்பிலக்கண மாணவர்களாகிய நாங்கள் கனடாத்; தமிழ்க் கவிஞர் கழகம் சார்பில் இவருக்கும், கவிநாயகர் வி.கந்தவனம் அவர்களுக்கும் ஒரு பாராட்டு விழா செய்தோம். அன்புத் தேனமுதம் என்ற தலைப்பில் ஒரு மலரை வெளியிட்டோம். ஆனால் பண்டிதர் ம.செ. அவர்களை தமிழுலகம் என்றுமே மறக்க முடியாது. மறக்கக் கூடாது என்பதை இங்கே வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன். இவரோடு நெருங்கிப் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததற்காக எல்லாம் வல்ல ஆண்டவனுக்கு நன்றி கூறுகின்றேன். இவரின் விண்நோக்கிய பயணத்தால் தவிக்கும் இவரின் அன்பு மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் எல்லோருக்கும் கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்து அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்து விடைபெறுகின்றேன். பண்டிதர் ம.செ.அலெக்ஸ்சாந்தர் அவர்களின் தமிழ்ப்பணியைப் போற்றி நன்றியுடன் வாழ்வோமாக. அவர் போன்றே நாங்களும் முடிந்தளவு தமிழ்ப்பணி செய்வோமாக.

காலமெலாம் கற்பிக்கக் காதலுறும் பேராசான்
கோலமிடும் கற்பனை கொள்கையில் - சீலராய்
எம்முலகில் வாழ்ந்திட்ட ஏற்றமுறு பண்பாளர்
செம்மலாய் எம்வாழ்வில் சேர்ந்து.

தமிழ்மொழி வாழ்ந்திடத் தன்பணி செய்து
அமிழ்தாய் இனித்திடும் அன்பர் - தமிழர்
தரணியில் முத்தாகச் சாந்தமும் சேர்ந்த
கரவில் பெரியவர் காண்.



கவிஞர் அகணி சுரேஸ்

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்