வைரமுத்துவின் படைப்புலகம்

முனைவர் அ.இந்துமதி


மிழகத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து உலகம் போற்றும் உன்னதக் கவிஞனாகி, கவிதை, திரைப்படப் பாடல்கள், புதினம், சிறுகதை, உரைநடை, மேடைப்பேச்சு என்று பல்வேறு இலக்கியக் களங்களில் சாதனை படைத்து வருபவர் கவிப்பேரரசு வைரமுத்து. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனங்களில் தமது பாடல்களின் மூலம் இடம் பெற்றிருக்கின்றார். காலத்தினால் அழியாத பல உயரிய படைப்புக்களைத் தமிழன்னைக்குப் படைத்து அணிகலன்களாய்ச் சூட்டியிருக்கின்றார். அவரது படைப்புக்கள் பல்கலைக் கழகப் பாடங்களாய்ப் பெருமைப் படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பெரும் சிறப்பிற்குரிய கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புலகத்தின் சிறப்புக்களை எடுத்துரைப்பதாய் இக்கட்டுரை அமைகின்றது.

தமிழகத்தில் இன்றைய தேனி மாவட்டத்தில் உள்ள மெட்டூர் என்னும் குக்கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில்
1953ஆம்ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் நாள் ராமசாமித்தேவருக்கும், அங்கம்மாளுக்கும் மகவாகப் பிறந்தார் வைரமுத்து, 1957இல் வைகை அணை கட்டப்பட்டதால் அணையின் நீத்தேக்கப் பகுதியிலிருந்த பதினான்கு கிராமங்களும் அரசாங்கத்தினால் காலி செய்யப்பட்டன. அதனால் தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களோடு சுதந்திர இந்தியாவில் அகதியைப்போல வெளியேறி, வடுகப்பட்டி என்னும் கிராமத்தில் குடியேறுகின்றார்.

வடுகப்பட்டியில் உயர்நிலைக்கல்வி பயிலும் போதே கவிதையாலும் பேச்சாற்றலாலும் அடையாளம் காணப்பட்டார்.
11 வயதில் கவிதை எழுதத் தொடங்கியவர் 14 வயதில் வெண்பா எழுதுவதிலும் தேர்ச்சி கண்டார்.

1960களில் தமிழ்நாட்டை மையம் கொண்ட திராவிட இயக்கங்களின் பகுத்தறிவும், மொழிஉணர்வும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் போன்ற ஆளுமைகள் அவரைத் தமிழின் பால் ஈர்த்தன.

கனவுகளையும், இலட்சியங்களையும் சுமந்து கொண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே அவரது கல்வி உலகமும், இலக்கிய உலகமும் விரிவடைந்தன. இளங்கலை இரண்டாமாண்டு மாணவராக இருந்த போதே இவரது முதல் கவிதைத் தொகுப்பான வைகறை மேகங்கள் ஒரு கல்லூரியின் துணைப்பாடமாக அமைந்தது. இது அவரது திறமைக்குக் கிடைத்த மிகச் சிறந்த விருதாகும். மரபு, நவீனம் ஆகிய இரண்டையும் கலந்து தனக்கென ஒரு கவிதை மொழியைக் கையாள்பவர் வைரமுத்து. தன்னுடைய கவிதைகளின் மூலமும், நவீன வெளிப்பாட்டு முறையின் மூலமும் தமிழ் இலக்கிய உலகின் கவனத்தினை ஈர்த்தார்.

படைப்புலகம்

வைரமுத்துவின் படைப்புலகம் ஆழ்ந்து விரிந்தது. தமிழ் இலக்கியங்களில் பயிற்சியும் ஈடுபாடும், வாழ்வியல் குறித்த சிந்தனையும், அழகிய யதார்;த்த மொழிப்பயன்பாடும், அவரது படைப்புக்களின் தனித்தன்மை.

கவிதை, புதினம், திரைப்படப்பாடல்கள், கட்டுரைகள், பயணஇலக்கியம், திரைவசனம், சிறுகதை, மொழிபெயர்ப்பு என்ற பல்வேறு வடிவங்களில்
35க்கும் மேற்பட்ட படைப்புக்களை வைரமுத்து படைத்திருக்கின்றார். இவர் பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்களையும், வைரமுத்து கவிதைகள் என்ற கவிதைத் தொகுப்பு நூலையும், பதினொன்றிற்கும் மேற்பட்ட உரைநடை நூல்களையும், பத்திற்கும் மேற்பட்ட புதினங்களையும், வைரமுத்து சிறுகதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பினையும், அவரது வெளிநாட்டு அனுபவங்களைக் குறிப்பிடும் பயண நூல்களையும் படைத்துள்ளார்.

கவிதையுலகம்

வைரமுத்துவின் முதல் கவிதைத் தொகுப்பான வைகறைமேகங்கள் கவிஞரது பத்தொன்பதாவது வயதில் எழுதிய கவிதைகளின் தொகுப்பாகும். இவரது கவிதைகளில் சமூக சீர்திருத்தச் சிந்தனைகள், மனிதநேயம், தத்துவம், சமூகவியல்பார்வை, பெண்ணியக் கண்ணோட்டம், தன்முன்னேற்றச் சிந்தனைகள், அழகியல், நாட்டுப்புற வழக்காறுகள், நாட்டுப்புற மருத்துவம், இயற்கை, காதல், தொன்மம், படிமம், அங்கதம், தன்னம்பிக்கை, தாய்மை சகோதரத்துவம், தேசப்பற்று, மொழிப்பற்று, தமிழறிஞர்களின் சிறப்பக்கள் போன்றவை பாடுபொருட்களாக அமைகின்றன. அவரது படைப்பாளுமை அதிசயிக்கத்தக்கதாக இருக்கின்றது. அவரது கவிதைகளில் புதிய சொல்லாடல்கள் பல இடம்பெற்றுள்ளதை அறிகின்றோம்.

புதினஉலகம்

வைரமுத்துவின் முதல் புதினமான வானம் தொட்டுவிடும் தூரம்தான் முதலாக இரண்டாம் உலகப்போர் வரையிலான புதினங்களில் சமூகத்தின் நிறைகுறைகளையும், ஏற்றதாழ்வற்ற சமுதாயம் அமையவேண்டும் என்பதனையும், விவசாயத்தின் சிறப்பினையும், மனித மனங்களின் தன்மைகளையும், மிகச்சிறப்பாக எடுத்துரைக்கின்றார்.

விவசாயி தான் ஒருநாட்டின் வாழ்வாதாரத்தை நிறைவு செய்பவர். அந்த விவசாயியின் வாழ்க்கையில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களையும், மண்சார்ந்த நிகழ்வுகளையும் கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்தில் பதிவு செய்துள்ளார். அப்புதினத்தில் இடம்பெற்றுள்ள பேயத்தேவர் என்னும் முதன்மைப் பாத்திரத்தை நம் கிராமத்து விவசாயிகளின் பிரதி பிம்பமாக நம் கண் முன்னே நிற்க வைத்துள்ளார் வைரமுத்து. கருவாச்சி காவியம் என்னும் புதினத்தில் ஒரு பெண்ணின் மனஉறுதியும் அவள் எத்தனையோ துன்பங்களை அனுபவித்தும் மனிதநேயத்துடனும் தாய்மையுள்ளத்தோடும் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது, பெண்களுக்கு மனஉறுதியும், மற்ற உயிர்கள் மீது அன்பும், கருணையுள்ளமும் இருந்தால் வாழ்க்கையில் எதனையும் சாதித்து வெற்றி பெறமுடியும் என்பது புலப்படுத்தப்படுகின்றது. கள்ளிக்காட்டு இதிகாசமும். கருவாச்சிகாவியமும் இரட்டைக்காப்பியங்கள் என்று குறிப்பிடுகின்றார் வைரமுத்து. இவை இரண்டும் மண்ணைச் சார்ந்து வாழும் எளிய மக்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் புதினங்களாகும்.

தண்ணீர்தேசம் புதினம் அறிவியல் கருத்துக்கள் நிறைந்த புதினமாகும். வில்லோடு வா நிலவே என்னும் வரலாற்றுப் புதினம் நமது தமிழரின் வரலாற்றுச் சிறப்பையும், பண்பாட்டுச் சிறப்பையும் எடுத்துரைக்கும் புதினமாகும். இரண்டாம் உலகப்போர் புதினத்தின் மூலமாக, அழிந்து வரும் விவசாயத்தை மீட்டெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.

ஒரு படைப்பாளனால் படைக்கப்படும் பாத்திரங்கள் நம்மைப் போலவே உணர்ச்சியுடன், இரத்தமும், எலும்பும், தோலும் கொண்டு இவ்வுலகில் இன்பத்தில் இணைந்து, துன்பத்தில் துவண்டு உலாவரும் மனிதர்களாக அமைதல் என்பது படைப்பாளனுக்கு ஒரு பெரு வெற்றியாகும் என்பதற்கேற்றவாறு இவரது புதினப் பாத்திரங்களும், சிறுகதைப் பாத்திரங்களும் அமைந்துள்ளன. இது அவரது படைப்புத் திறமைக்குச் சான்றாகும்.

திரையுலகம்

1980 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் நிழல்கள் திரைப்படத்தில் இது ஒரு பொன் மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் அறிமுகமான வைரமுத்து இதுவரை ஏழாயிரம் பாடல்களை எழுதியுள்ளார். இவரது வருகையினால் திரைஇசைப் பாடல்கள் புதிய சிகரத்தை அடைந்தன. மொழிநடையின் கட்டுமானங்களை உடைத்து, புதிய படிம வீச்சுக்களோடு கவிதை ஆபரணங்களைச் சூட்டி வெற்றி வாகை சூடியவர். இவரது பாடல்களைக் கேட்காத செவிகளே உலகில் இல்லை. சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான விருதைப் பலமுறை பெற்ற ஒரே பாடலாசிரியர் இவர் மட்டுமே. உலகில் ஒவ்வொரு பத்தாவது நிமிடத்திலும் இவரது பாடல் ஒன்று உலக வானொலிகளிலோ, உலகத்தமிழ்த்; தொலைக்காட்சிகளிலோ ஒலிபரப்பாகின்றது. இவர் ஐந்து திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார்.

கட்டுரையுலகம்


இதுவரைநான் என்னும் உரைநடை இலக்கியமே இவரது முதல் கட்டுரைத் தொகுப்பு நூலாகும். இவரது உரைநடை நூல்களின் மூலம் அவர் சந்தித்த மனிதர்கள், அவரது வாழ்க்கை அனுபவங்கள், அவரது வளர்ச்சி அனுபவங்கள், காதல், வாழ்க்கை, உள்நாட்டு. வெளிநாட்டுப்;பயணம், பயணித்த நாடுகளைப் பற்றிய செய்திகள், அங்கு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஆகியவற்றை நம்மிடையே பகிர்ந்து கொள்கின்றார். இவையனைத்தும் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை முத்துக்களாய் அமைந்துள்ளன.

மொழிபெயர்ப்புலகம்

வைரமுத்துவின் கவிதைகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், நார்வேஜியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
A Drop in Search of the Ocean என்ற பெயரில் இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களால் வெளியிடப்பட்டது.Bindhu Sindhu Ki Oor என்ற தலைப்பில் இவர் கவிதைகள் இந்தியில் பெருந்தொகுப்பாக மொழிபெயர்க்கப்பட்டு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சாகித்ய அகாடமியின் தலைவரால் வெளியிடப்பட்டது. மேலும் God Morgen Lyrikk (Norwaygian) என்ற நூலையும் மொழிபெயர்த்துள்ளார்.

விருதுலகம்

சிறந்த திரைப்படப்பாடலாசிரியருக்கான தேசிய விருதினையும், மாநில அரசின் விருதுகளையும் பலமுறை பெற்ற ஒரே பாடலாசிரியர் இவர் தான் இன்னும் பல விருதுகளை வரும் ஆண்டுகளிலும் வாங்கிக் குவிக்கும் சிறப்புப் பெற்றவர் வைரமுத்து.

இவரது படைப்பாளுமையைப் பாராட்டிக் கலைஞரின் முரசொலி அறக்கட்டளை ஒரு லட்ச ரூபாய் விருதும், தண்ணீர்தேசம் புதினத்திற்காக தினத்தந்தி ஆதித்தனார் விருதும் வழங்கப்பட்டன. இவரது கள்ளிக்காட்;டு இதிகாசம் புதினத்திற்காக இவர்
2003இல் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். இவரது இலக்கியப் பணிக்காக 2003இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

ஒரு தனியார் அமைப்பு கனடா அரசாங்கத்துடன் இணைந்து வைரமுத்துவின் தபால் தலையை டொரெண்டோவில் வெளியிட்டு கௌரவித்தது.

தனிச்சிறப்பு

வைரமுத்து தம் ஒவ்வொரு பிறந்த நாளிலும் மூத்த கவிஞர்களுக்கும், இளங்கவிஞர்களுக்கும் கவிஞர்கள் திருநாள் விருது வழங்கிப் பணமுடிப்பும், பட்டயமும் தந்து பாராட்டி வருகின்றார்.

இவரது இலக்கியப்பணிகளுக்காகத் தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக் கழகம் 2007ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கியது. மதுரை காமihசர் பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

இவரது படைப்புக்களை ஆராய்ச்சி செய்து பல ஆய்வாளர்கள் முனைவர் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றிருக்கின்றனர் இந்தியாவின் பல்கலைக் கழகங்கள் மட்டுமில்லாமல் கடல் கடந்தும் இவரது படைப்புக்கள் பாடங்களாகத் திகழ்கின்றன.

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியுடன் வைரமுத்துவின் படைப்புகள் குறித்த பன்முகப் பார்வையில் வைரமுத்துவின் படைப்புகள் என்ற தேசிய அளவிலான படைப்பிலக்கியக் கருத்தரங்கம்
14-02-2009 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் இவரது கவிதை நூல்களில் 262 அறிஞர் பெருமக்கள் அவர்களது கட்டுரைகளில் வைரமுத்துவின் சிந்தனை வளத்தையும் கவிநயத்தையும், கற்பனைச் செறிவையும,; உவமைச் சிறப்பையும், சொல்லாட்சித் திறத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். புதினங்களை 63 ஆய்வாளர்களும், உரைநடை இலக்கியங்களை 24 ஆய்வாளர்களும் பேராசிரியர்களும் ஆய்வு செய்தும், திரைப்படப் பாடல்களின் செழுமையை சான்றோர் பெருமக்கள் 19 ஆய்வுக்கட்டுரைகளில் செதுக்கியும் இருக்கின்றனர். இக்கருத்தரங்கில் 368 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, அவை மூன்று புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புலகம் பரந்து விரிந்து காணப்படும் ஒரு உலகமாகும். தமிழ்மொழியின் சிறப்புக்களை உலக அளவில் சிறப்படையச் செய்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களுள் இவரும் ஒருவர். உலக மானுடன் பருகும் தாய்ப்பாலாக இலக்கியம் இருக்கவேண்டும் என்பதே இவருடைய படைப்புக் கொள்கை. மனிதகுல மேம்பாட்டினை நோக்கி இயங்கும் அவரது இலக்கியப் பயணத்தில் அவர் பயணம் வெற்றிப்பாதையில் சென்று கொண்டே இருக்கும். அவரது பயண வழிகளும், வெளிகளும் விரிந்து பரந்து செல்லும். அவரது படைப்புகள் அவரது புகழை என்றும் நிலை பெறச் செய்திருக்கும்.


முனைவர் அ.இந்துமதி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சங்கரா அறிவியல்மற்றும்வணிகவியல்கல்லூரி,
கோவை.

 

 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்