புலவர் இரா.இளங்குமரனின் புறநானூற்று உரைவளம்

முனைவர் இரா.மோகன்
 

கோவிலூர்த் திருமடம் தவத்திரு முத்துராமலிங்க ஆண்டவரால் 1808-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பெற்றது. இத்திருமடத்தின் பன்னிரண்டாம் தலைவராக வீற்றிருந்து கோயிற் கலைகளின் வளர்ச்சிக்கு அருந்தொண்டு ஆற்றியவர் காரைக்குடி சீர்வளர்சீர் நாச்சியப்ப அடிகளார் ஆவார். இவர்தம் இலக்கியப் பணியின் அகரமாகத் திருமந்திரம் - செவ்விய பதிப்பு வெளிவந்தது; சிகரமாகச் சங்க இலக்கியம் முழுவதும் எளிய தெளிவுரையுடன் மக்கள் பதிப்பாக வெளிவந்தன. பேராசிரியர் தமிழண்ணலும் பேராசிரியர் சுப.அண்ணாமலையும் சங்க இலக்கிய மக்கள் பதிப்பு வரிசைக்கு முதன்மைப் பதிப்பாசிரியர்களாகப் பணியாற்றினர்; ஒவ்வொரு நூலுக்கும் தகுதி வாய்ந்த சான்றோர் பெருமக்கள் ஒவ்வொருவர் தனித்தனியே உரை எழுதினர். இவ் வரிசையில் புறநானூற்றுக்கு உரை எழுதியவர் புலவர் இரா.இளங்குமரன் ஆவார்.

பதிப்பு நெறிமுறைகள்

நூலின் முற்பகுதியில் பாடியவர் வரலாறு, பாடப்பட்டவர் வரலாறு, திணைகள்: அகர வரிசை, துறைகள் : அகர வரிசை ஆகியன தரப்பெற்றுள்ளன.

பாடலின் மூல பாடம் முன்பு உள்ளவற்றில் சிறந்த பாடம் எனக் கருதத்தக்கது எடுத்தாளப் பெற்றுள்ளது. சொற்களைப் பிரித்து, அசையும் சீரும் சிதையாமல் அமைக்கப் பெற்று, இன்றியமையாத இடங்களில் நிறுத்தக் குறிகள் கையாளப் பெற்று, எளிமையும் கட்டமைப்பும் சிறந்து விளங்கும் பதிப்பாக இது அமைக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாடல் எண், பாடியவர், பாடப் பெற்றவர், பாடல் தலைப்பு, பாடல், திணை, துறை, கொண்டு கூட்டு, தெளிவுரை, அருஞ்சொற்பொருள், சிறப்புக் குறிப்பு ஆகிய 11 கூறுகளைத் தன்னகத்தே கொண்டதாக இப்பதிப்பு விளங்குகின்றது.

நூலின் பின்னிணைப்பில் பாடியவர் அகர வரிசை, பாடப்பட்டவர் அகர வரிசை, பாடல் அகர வரிசை ஆகியன பாடல் எண்களுடன் தரப்பெற்றுள்ளன.

புலவர் இரா.இளங்குமரனின் உரைநெறி

எளிமையும் தெளிவும் துலங்கப் புறநானூற்றுப் பாடல்களுக்கு உரை வரைந்திருப்பது புலவர் இரா.இளங்குமரனின் சிறப்புப் பண்பு ஆகும். ஓர் எடுத்துக்காட்டின் வழி நின்று இக் கருத்தினை நிறுவலாம்.

புறநானூற்றின் 312-ஆம் பாடல்; பொன்முடியார் இயற்றியது; வாகைத் திணையில், மூதின்முல்லைத் துறையில் அமைந்தது. ‘ஐவர் கடமை’ என்பது உரையாசிரியர் இப்பாடலுக்குச் சூட்டி இருக்கும் தலைப்பு. ‘ஆற்றொழுக்குப் போல அமைந்து கொண்டு கூட்ட வேண்டியது இல்லாதது இப்பாட்டு’ எனக் குறிப்பிடும் உரையாசிரியர், இப் பாடலுக்கு வரைந்திருக்கும் தெளிவுரை வருமாறு:

“மகனைப் பெற்று வளர்த்தல் என் கடமை; அம் மகனை வீரன் ஆக்குதல் தந்தையின் கடமை; போர்க்கு வேண்டும் கருவியை ஆக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை; நல்ல விளைநிலங்களைப் பரிசாக வழங்குதல் ஆள்வோனுக்குக் கடமை; ஒளி விளங்கும் கருவி கொண்டு வெல்லுதற்கு அரிய போரில் யானையை அழித்து வெற்றியுடன் திரும்புதல் வீரர்க்குக் கடமை.”

இப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘நன்னடை நல்கல்’ என்னும் தொடருக்கு ஏனைய உரையாசிரியர்கள் ‘நல்லொழுக்கத்தைக் கற்பித்தல்’ என விளக்கம் தந்திருக்க, ‘நல்ல விளைநிலங்களைப் பரிசாக வழங்குதல்’ என புலவர் இரா.இளங்குமரன் பொருள் வரைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

“மகனுக்குரிய போர்க் கடமையைச் சுட்டினாலும் இது செயலாற்ற வேண்டும் எக் கடமைகளுக்கும் ஏற்பதாம்; மகன் என்பது வினை செயல் வகையால் மகளுக்கும் ஏற்பதே. ஆதலால், ‘மக்கள்’ எனக் கொள்ளலாம். இதனைப் பாடியவர் பொன்முடியார்; அவர் போர்க்களம் சென்று அக்களம் பாடியவர் என்பது அறியத்தக்க செய்தி” (புறநானூறு: மக்கள் பதிப்பு, பக்.452-453) என்பது இப்பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில் உரையாசிரியர் இளங்குமரன் குறிப்பிட்டிருக்கும் அரிய தகவல் ஆகும்.

நயமும் நுட்பமும் புலப்படுத்தல்

புறநானூற்றுப் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் அரிய அடைகளுக்கும், சொற்களுக்கும், தொடர்களுக்கும், புறநானூற்றுப் புலவர்கள் தங்கள் கருத்துப் புலப்பாட்டிற்குக் கையாண்டிருக்கும் சீரிய உவமைகளுக்கும் புலவர் இரா. இளங்குமரன் தம் உரையில் ஆங்காங்கே நுண்ணிய நயமும் ஆழ்ந்த நுட்பமும் காட்டிச் சென்றுள்ளார். இவ் வகையில் குறிப்பிடத்தக்க சில சான்றுகளை ஈண்டுக் காணலாம்.

ஒளவையார், அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறித்துப் பாடிய கையறுநிலைப் பாடலில் (235) ‘மன்னே’ என்ற சொல் ஏழு முறை கையாளப்பட்டுள்ளது. இப் பாடலுக்கு எழுதிய அருஞ்சொற்பொருள் விளக்கத்தில், “மன்-இரங்கல் பொருளது. அது போய்விட்டதே என்று பல்கால் வந்தது. இரங்கல் பல்கால் சொல்லிச் சொல்லி அரற்றுதல் அறியத்தக்கது” (ப.376) எனப் புலவர் இரா.இளங்குமரன் குறிப்பிட்டிருப்பது அவரது நுண்ணிய நயப் பார்வைக்குக் கட்டியம் கூறுவதாகும்.

எருமைவெளியனாரின் புறநானூற்றுப் பாடல் கணவனைப் ‘புதல்வன் தந்த செல்வன்’ எனக் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டி, அப்பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில், “‘கணவனைப் புதல்வற் றந்த செல்வன்’ என்றது அரிய ஆட்சி” (ப.415) எனப் புலவர் இரா.இளங்குமரன் ஒப்பிட்டுக் காட்டுவது அவரது நுண்ணோக்கிற்குப் பதச்சோறு ஆகும்.

கருவூர்க்கதப் பிள்ளை சாத்தனார், பிட்டங்கொற்றனைப் பாடிய புறப்பாடலில்,

வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்

பாடுப என்ப பரிசிலர் நாளும்”     (168)

எனக் குறிப்பிட்டுள்ளார். இப்பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில் புலவர் இரா.இளங்குமரன் காட்டி இருக்கும் நயமும் நுட்பமும் வருமாறு:

''தமிழகம்' என்னும் பெயர்க் குறிப்பு கருதத்தக்கது. 'பொய்யாச் செந்நா' என்பது அரிய ஆட்சி' (ப.
295).

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பொத்தியாரும் அவனுடன் வடக்கிருக்க விரும்பினார். ஆனால்இ கோப்பெருஞ்சோழன், 'உன் மனைவி கருவுற்றிருக்கிறாள்; அவளுக்குக் குழந்தை பிறந்த பிறகு நீ என்னோடு வடக்கிருக்கலாம்' என்று கூறியதற்கு ஏற்பஇ பொத்தியார் வடக்கிருக்கும் தமது எண்ணத்தை ஒத்திவைத்தார்.

நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா”   
(222)

என்னும் கூற்றில் பொத்தியாரின் துணைவியாருக்கும் புதல்வனுக்கும் கோப்பெருஞ்சோழன் கையாண்டிருக்கும் தொடர்கள் பொருள் பொதிந்தவை. இப் பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில், “‘நிழலினும் போகா நின் வெய்யோள்’ (‘நிழலைக் காட்டிலும் நீங்காமல் உன்னோடு உறையும் உன் இனிய மனைவி’) என்றது பொத்தியார் இல்லற வாழ்வு சுட்டியதாம். இனிய உவமை” (ப.361) எனப் புலவர் இரா.இளங்குமரன் நயமும் நுட்பமும் உணர்த்தி இருப்பது நோக்கத்தக்கது.

மாரிப்பித்தியாரின் புறநானூற்றுப் பாடலில்,

இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன்”   (252)

என வரும் அடிகளில், “மனைவியை ‘இல்வழங்கு மடமயில்’ என்றதும், அவன் இல்லறச் சிறப்பைச் ‘சொல்வலை வேட்டுவன்’ என்றதும் அரிய தொடர்கள்” எனக் குறிப்பிடும் புலவர் இரா.இளங்குமரன் சிறப்புக் குறிப்பில், “வயப்படுத்த வல்ல சொற்பொழிவாளர்களுக்குச் ‘சொல்வலை வேட்டுவர்’ என விருது வழங்கத் தக்க தொடராகும்” (ப.395) என எழுதிச் செல்வது மனங்கொளத் தக்கது.

புறநானூற்றுப் பாடல்களின் தனித்திறன்களைச் சுருங்கச் சொல்லல்

புறநானூற்றுப் பாடல்களின் தனித்திறன்களை - பாடல்களை யாத்த சான்றோர்களின் தனித்தன்மைகளை - இரத்தினச் சுருக்கமான மொழியில் பதிவு செய்வது என்பது உரையாசிரியர் என்ற முறையில் புலவர் இரா.இளங்குமரனிடம் காணப்பெறும் ஒரு சிறப்பியல்பு ஆகும். இவ்வகையில் பாடல்களுக்கு அவரால் எழுதப்பெற்ற சிறப்புக் குறிப்புகளில் அரிய தகவல்கள் மண்டிக் கிடக்கக் காண்கிறோம். சிந்தனைக்கு விருந்தாகும் சான்றுகள் சில வருமாறு:

 • 1.  புறநானூறு 18: குட புலவியனார்

               “நீர் தேக்கும் பயனை ஒப்பில்லாதுரைப்பது இப்பாட்டு” (ப.103).

 • 2. புறநானூறு 45: கோவூர்கிழார்

              “ஆற்றொழுக்கென அமைந்து கொண்டு கூட்டு வேண்டாதது இப்பாட்டு” (ப.148).

 • 3. புறநானூறு 161: பெருஞ்சித்திரனார்

             ‘சித்திரவதை’ என்னும் பொதுமக்கள் ஆட்சிக்குப் பொருளாக
               இருந்தவர்      இப்புலவர்    என்பது எண்ணத் தக்கதாம்” (ப.
285).

 • 4. புறநானூறு 189: பாண்டியன் அறிவுடை நம்பி

               “குழந்தை தானே எடுத்துண்ணும் நிலையைக்
                காட்சியாகக் காட்டுவது இப்பாட்டு”   (ப.
318).

 • 5. புறநானூறு, 287; சாத்தந்தையார்

               “வீரராக மடியின் வீடுபேற்றின்பம் வாய்த்தல் உறுதி என்பது இப்பாட்டு” (ப.429).

 • 6.  புறநானூறு, 293: நொச்சிநியமங்கிழார்

                 “கணவன் போர்க்களம் சென்றபோது அவன் மனைவி
                 பூச்சூடாள் என்பதைக்     காட்டுவது இப்பாட்டு” (ப.
434).

 • 7.  புறநானூறு, 310: பொன்முடியார்

                 “ஒருமுகப்பட்டுச் செல்லும் உள்ளத்திற்கு உடற்கு
                  உண்டாகும் இடையூறு தோன்றாது என்னும் உளவியல்
                  விளக்கம் இப்பாட்டு” (ப.
451). 

 • 8. புறநானூறு, 320: வீரை வெளியனார்

              “காலத் தாழ்வு செய்யாமல் கொடுத்தல்
              கொடைக்குத் தனிச்சிறப்பு என்பதைக் காட்டும்
              இப்பாட்டு, ‘அருகாது ஈயும்’ என்கிறது” (ப.
461).

முன்னோர் கருத்துக்களை மேற்கோள் காட்டல்

புறநானூற்றுக்குத் தமக்கு முன்னர் உரை வரைந்துள்ள சான்றோர்களின் கருத்துக்களை ஆங்காங்கே மேற்கோள் காட்டிச் செல்லும் நயத்தக்க நாகரிகப் பண்பினைப் புலவர் இரா.இளங்குமரனிடம் சிறப்பாகக் காண முடிகின்றது. இவ்வகையில் அவரது உரையில் பழைய உரைகாரரின் சீரிய நயங்களும், உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையின் சிறந்த கருத்துக்களும் மேற்கோள்களாகப் பல இடங்களில் பொருத்தமாக எடுத்தாளப் பெற்றுள்ளன.

வன்பரணர், கண்டீரக் கோப்பெரு நள்ளியைப் பாடிய புறப்பாடலில், ‘பெருமையற்ற மன்னரைப் புகழ்ந்து அவர் செய்யாதவற்றைச் செய்ததாகச் சொல்லிப் புகழ்வதை அறியாதது ஆயிற்று, எம்முடைய சிறிய செவ்வையான நாவு’ எனப் பெருமிதத்துடன் மொழிவர்.

பீடுஇல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்

எய்யாது ஆகின்றுஎம் சிறுசெந் நாவே.”  (148)

“பொய் கூறாமையால் ‘செந்நா’ என்றார்; தற்புகழ்ந்தார் ஆகாமல் ‘சிறுசெந்நா’ என்றார் என்பது பழைய உரைகாரர் கூறும் நயம்” (ப.263) என இங்கே பழைய உரையாசிரியரின் கருத்தினைப் புலவர் இரா.இளங்குமரன் மேற்கோள்காட்டி இருப்பது அவரது பதிப்பு நாகரிகத்தினைப் புலப்படுத்து-வதாகும். இங்ஙனம் பழைய உரைகாரரின் குறிப்புக்களும் நயங்களும் மேற்கோள்களாக எடுத்தாளப் பெற்றிருக்கும் இடங்கள் பலவாகும் (புறநானூறு, 1;30;80;142;148;166;173;187;206;220;248).

இதே போன்று, உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையின் கருத்துக்களையும் உரிய வகையில் புலவர் இரா.இளங்குமரன் தம் உரையில் மேற்கோள்களாகக் காட்டிச் சென்றுள்ளார். ஓர் எடுத்துக்காட்டு:

“இந்த அறவுணர்வுக் குறைவே இக்காலத் தொழிலாளர் கிளர்ச்சிக்கும் பொருள் முட்டுப்பாட்டுக்கும் வாழ்வு நிரம்பாமைக்கும் வாயிலாதல் தெற்றெனத் தெளியப்படும் என்று விளக்கம் தருகின்றார் ஒளவை” (ப.319).

இங்ஙனம் உரைவேந்தரின் அரிய கருத்துக்கள் இன்னும் சில பாடல்களிலும் மேற்கோள்களாகக் காட்டப் பெற்றுள்ளன. (புறநானூறு, 33;174; 219;305;358).

“ஓரியின் வில்லாண்மை உவந்து பாராட்டக் கூடியது. இயற்கையொடு பொருந்திய இவ்வில்லாண்மையை ‘முற்காலப் புலவரும் பிற்காலப் புலவரும்’ என்னும் நூலில் விரித்தெழுதுவார் மறைமலையடிகள்” (ப.270) என மறைமலை யடிகளின் நூலினையும் புலவர் இரா.இளங்குமரன் தம் உரையில் ஓர் இடத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.

பரந்துபட்ட இலக்கியப் புலமை

புலவர் இரா.இளங்குமரனின் பரந்துபட்ட இலக்கியப் புலமை அவரது உரையில் நன்கு வெளிப்பட்டிருக்கக் காண்கிறோம். குறிப்பாக, திருக்குறளிலும் சிலப்பதிகாரத் திலும் அவர் ஆழங்காற்பட்டவர் என்பதை அவரது உரையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.

செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ

ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே”             (278)

என்னும் காக்கை பாடினியார் நச்செள்ளையாரின் புறப்பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில், “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் என்னும் குறளின் மெய்ப்பொருள் விளக்கம் இப்பாடல் என்பது புலப்படும்” (ப.419) எனப் புலவர் இரா.இளங்குமரன் குறிப்பிட்டிருப்பது அவரது ஆழ்ந்த திருக்குறள் பற்றையும் புலமையையும் பறைசாற்றுவதாகும். இதே போல அவர் தமது உரையில் ஏழு இன்றியமையாத இடங்களில் (புறநானூறு, 134;170;182;223;270;274;290) திருக்குறளில் இருந்து ஒப்புமை காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மருதன் இளநாகனாரின் புறப்பாடலுக்கு (55) எழுதிய சிறப்புக் குறிப்பில், “‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ என்பதன் விரிவாக்கம் ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்னும் சிலப்பதிகாரமாம்” (ப.160) எனப் பொருத்தமாகச் சிலப்பதிகாரத்தின் பாவிகத்தினை ஒப்புமை காட்டிச் சென்றுள்ளார் புலவர் இரா.இளங்குமரன். இங்ஙனம் சிலப்பதிகார மேற்கோள்கள் சிறப்பாக அமைந்த இடங்கள் இன்னும் சில உள்ளன (புறநானூறு, 132,274).

உரையின் வாயிலாகத் தெரியவரும் அரிய தகவல்கள்

புலவர் இளங்குமரனின் உரையின் வாயிலாகச் சங்க காலத்தில் நிலவிய நாகரிக, பண்பாட்டு மரபுகளையும், பழக்க வழக்கங்களையும், நம்பிக்கை- களையும், வழக்காறுகளையும், கல்வெட்டுச் செய்திகளையும், வரலாற்று உண்மைகளையும், சொற்பொருள் விளக்கங்களையும் அறிந்து கொள்கிறோம். இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சில தகவல்கள் வருமாறு:

 • 1. “ஒரு புலவர் மற்றொரு புலவரை மதித்துப் போற்றிய சங்கத்தார் சால்புக்குப் ‘பரணன் பாடினன்’ என்னும் இதுவும் ஒரு சான்று” (ப.212).
   

 • 2. “கூந்தல் கிழவர் என்றது கூந்தலைத் தொடுதற்குரிய தலைவர்; என்றது கணவர்; தமிழர் அக நாகரிகச் சிறப்பு ‘கூந்தல் கிழவர்’ என்பதால் புலப்படும்” (ப.224).
   

 • 3. “ஒளியாவது வாழும் நாளிலேயே உண்டாகும் பெருமை” (ப.450).
   

 • 4. “விரும்பி அழைத்து விருந்தோம்பிப் பரிசு வழங்கும் பண்பாடு அறிந்து மகிழத்தக்கது” (ப.459).
   

 • 5. “‘வன்சொல் சொல்ல நாவஞ்சும்’ என்றது நன்மக்கள் இயல்பை நயமாகக் குறித்தது.” (ப.508).
   

 • 6. “வெள்ளி திசை மாறிச் செல்லின் மழை பெய்யாமல் நாடு பஞ்சம் அடையும் என்பது புறப்பாடல்கள் பலவற்றில் இடம்பெற்றுள்ள செய்தி” (ப.552).
   

 • 7. “வாழ்த்தும் வகையுள் ஆற்று மணலினும், விளையும் நெல்லினும், விழும் மழைத் துளியினும் பல்லாண்டு வாழ்க என்னும் வழக்குண்மை இத்தகைய பாடல்களால் அறியலாம்” (ப.555).
   

 • 8. “‘துணையோடு இனிய துயில் பெறுக’ என்று வாழ்த்துதல் ஓர் அரிய மரபு குறித்தது. இது நல்லுறக்கம் நல்லுடல் நல்லுள மூலமாம்” (ப.561).
   

 • 9. “அதியமானின் முன்னோர் அயல்நாட்டில் இருந்து கரும்பை இந்நாட்டுக்குக் கொண்டு வந்து தந்தவர் என்பது அரிய வரலாறு” (ப.563).

நிறைவாக, ‘மக்கள் பதிப்பு’ என்பதற்கு ஏற்ப, புலவர் இரா.இளங்குமரனின் புறநானூற்று உரை எளிமையும் தெளிவும் தன்னகத்தே கொண்டதாக விளங்குகின்றது; சுருக்கமும் செறிவும் ஒருங்கே பெற்று - அதே வேளையில் நயமும் நுட்பமும் புலப்படுத்தும் வகையில் - நானூறு பாடல்களும் ஒரே தொகுப்பில் இடம்பெற்றிருப்பது இப்பதிப்பின் கூடுதல் சிறப்பு ஆகும்.

 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.

 

  

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்