சங்க இலக்கியத்தில் சமூக மக்களும் சுற்றுப்புறச்சூழலும்

முனைவர் பூ.மு.அன்புசிவா


ண்டைத் தமிழரின் சூழல் பற்றிய விழுமியத்தை அறிந்திடச் சங்க இலக்கியப் படைப்புகளும், தொல்காப்பியமும் அடிப்படையானவை. சூழலின் பருப் பொருட்கள் அனைத்தும் ஐம்பெரும் பூதங்களால் உருவானவை என்ற கருத்தியல், சங்கத் தமிழரிடம் ஆழமாக ஊடுருவியிருந்தது. பூதவியல் என்ற சொல் உலகினை ஆராய்வதாகத் தமிழர் மரபில் இடம் பெற்றுள்ளது. சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் உலகம் எவற்றால் உருவானது என்ற பதிவுகள் இடம் பெற்றுள்ளன.

மனித வாழ்வு பிறரையும் பிற பொருள்களையும் சூழ்ந்த வாழ்வாக அமைந்துள்ளது என்பது ஒரு உண்மை. அந்தச் சூழலை இரண்டு பெரும் பிரிவாகப் பகுக்கலாம்:

1. குடும்பச் சூழல்

 • சமூகச் சூழல்

 • நாட்டுச் சூழல்

 • வரலாற்றுச் சூழல்

 • அரசியல் - பண்பாட்டுச் சூழல்
  என்றவைகளும் மனித வாழ்வைப் பாதிக்கும்.

2. இயற்கைச் சூழல்

 • கடல்

 • மலை

 • காடு

ஆகியவை சிலருக்கு நேரடியாக அதாவது விருப்பக் கூறுகளாக அமைய நிலம், நீர் ஆகிய இரண்டும் எல்லோருக்கு உரிய அடிப்படைக் கூறுகளாக அமையும். மேலும் நிலத்தோடு தொடர்புடையது மரம், செடி கொடி, விலங்கு, பறவை முதலியனவும் அடிப்படைக் கூறுகளே. அவை எப்படியெல்லாம் மனித வாழ்வுக்கு உதவுகின்றன, மனித வாழ்வைப் பாதிக்கின்றன என்ற புதிய ஆய்வுத் துறையே சுற்றுச்சூழலியல் (நுஉழடழபல) என்று அழைக்கப்படுகிறது.

இயற்கையின் கொடையாகிய நீர், நிலம், வளி, காடு, செடி, கொடி, மரங்கள் சுற்றுச்சூழலின் சின்னமாக உலகப் பரப்பில் விளங்கி மனித வாழ்க்கைக்கு மகத்தான உதவி புரிகின்றன. இந்த பூமிப்பந்து ஐம்பூதங்களால் ஆனது. இவற்றை உள்ளது உள்ளபடி துய்க்கலாமேயன்றி அவற்றை மாசுபடுத்தும் உரிமை நமக்கில்லை.

ஐநூறு கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானதாய்க் கருதப்படும் பூமி வஞ்சனையின்றி இயற்கைச் செல்வத்தை வாரித் தந்திருந்தது. மனிதன் இயற்கையை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும், துதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். போற்றவும், புரக்கவும் அறிந்திருக்க வேண்டும்.

நமக்குத் துணையாய் நின்று நமது அனைத்துச் செயல்களுக்கும் அச்சாணியாய் விளங்கும் இயற்கை இன்று சீரழிந்து வருகிறது. மாசும் தூசும் மரணத்தின் வாசலுக்கு மனிதனைச் சீட்டின்றி இட்டுச்செல்கின்றன. மாசில்லா காற்றும், தூசில்லா தூய்மையும் இருந்தால் மட்டுமே மனிதன் சுத்தமான காற்றைச் சுவாசித்து, சுகாதாரமான வாழ்க்கையை வாழ முடியும்.

சூழலியலைக் காப்போம்

சுற்றுச்சூழல் மாசுபட்டதால் உலகம் மிகப் பெரிய அபாயகரமான, ஆபத்தான இக்கட்டில் சிக்கியுள்ளது. விழித்துக் கொள்வது விவேகம்; வீறு கொண்டு சுற்றுச்சூழலைப் பழைய நிலைக்கு இழுத்துச் செல்வது நம் கடமை; பொறுப்பும் கூட.

சங்க இலக்கியம் தோற்றம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் தோன்றிய இலக்கியங்கள், மனித வாழ்வின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் தொழில் முறைகளையும், உணவு, உடை, உறவுகளையும் ஒவ்வொன்றின் சிறப்பையும் சீர்மையும் எடுத்து இயம்பும் வண்ணம் எழுதப்பட்டன.

ஒழுக்கத்தின் உயர்வும், உறவுகளின் செறிவும் செம்மையாய் எடுத்தெழுதப்பட்டன. இலக்கியங்கள், குறிப்பாய், எட்டுத்தொகை நூல்களில் இயற்கைக்குத் தனியிடம் கொடுக்கப்பட்டது. இயற்கையை இறையாய் வழிபடும் முறைமை பின்பற்றப்பட்டது. இயற்கையை வணங்கும் வழக்கம் தொன்றுதொட்டு சுற்றுச்சூழலில் மனிதர்களுக்கிருந்த அக்கறையை இயம்புவதாய் அமைந்தது.

மரங்களைக் காத்த மனிதம்

தொல்காப்பியம் குறிப்பிடும் 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்பது போல், இயற்கை அளித்த எல்லாப் பொருட்களுக்கும் ஏதோ ஒரு பயன்பாடு இருக்கவே செய்யும். பண்டைக்கால மக்கள் மரங்களின் பால் மட்டற்ற பற்று வைத்திருந்தனர். உயிரை விட உயர்வாய் மரங்களைப் போற்றினர். இராஜஸ்தான் மாநிலத்தின் 'கேஜர்லி' கிராம 'பிஷ்னாய்' இன மக்கள் மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்காத அதிசய மக்களாய்த் திகழ்ந்தனர்.

அப்பகுதியை ஆண்ட மன்னன் ஒருவன் கோட்டை கொத்தளங்களை அமைக்க அவ்வின மக்கள் காத்த மரங்களை வெட்டத் துணிந்தான். மரங்களைக் கட்டிப்பிடித்து காப்பாற்றப் போராடிய முந்நூறுக்கும் மேற்பட்டோர் மரத்துடன் வெட்டிச் சாய்க்கப்பட்டனர்.

'மரங்களை மண்ணில் வைக்கின்ற போது நம்பிக்கை விதைகளை ஊன்றுகிறோம். வருங்காலச் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் உயர்ந்த சொத்து மரங்கள்தான். எனவே, நம் உயிரைக் கொடுத்தாவது மரங்களைக் காப்பாற்றுவோம்' என நோபல் பரிசு வென்ற வாஸ்கர் மாத்தாய் கூறினார். இவர் மூன்று கோடி மரங்களை நட்டவர். அயல்நாட்டு நிறுவனம் இம்மரங்களை வெட்ட முற்பட்டபோது, அதை எதிர்த்துப் போராடி மரங்களைக் காத்தவர்.

மரங்கள் உயர்திணையாய் மதிக்கப்பட்ட காலங்கள் உண்டு. இன்றும் சில இடங்களில் இறந்தோரைப் புதைத்த இடத்தில் மரம் நடும் வழக்கம் இருந்து வருகிறது. இயற்கையை மனிதன் வெல்வது இயலாது. அதனுக்கு ஆட்பட்டே வாழ்ந்தாக வேண்டியவனாய் மனிதன் திகழ்கிறான். மனிதன் இயற்கையை வழிபடத்தான் முடியும், படைத்திட முடியாது. உவமை, உள்ளுறை, இறைச்சி, குறியீடு, பின்னணி போன்ற நோக்கங்களின் நிறைவேற்றத்தில் இயற்கை எடுத்தாளப்படுகிறது. உணர்வை வெளிப்படுத்திடும் களனாக இயற்கை விளங்குகிறது.

இயற்கையின் ஆட்சி

சங்க இலக்கியத்தில் இயற்கை தனிப்பெரும் ஆட்சி வகித்தது. இயற்கை பற்றிய செய்திகள், சங்கப் பாடல்கள் எங்கெங்கிலும் இடம் பெற்றிருக்கின்றன. மரமும், செடி கொடிகளும், வயலின் வனப்பும் தினைப் புனத்தின் திரட்சியும் சுற்றுச்சூழலாய் அமைந்த எழிலான பாடல்கள் இலக்கியங்களில் ஏராளமாக இடம் பெற்றிருக்கின்றன.

சுற்றுச்சூழலின் தாக்கம்

மலர்களின் பெயர்கள் தலைவியின் பருவ வரவுக்கும், களவுக்கும் காதலுக்கும், இன்பத்திற்கும் இன்னபிற உணர்வுகளுக்கும் உரியனவாய் பயன்பாட்டைத் தருகின்றன.
அகப்பாடல்களிலும், புறப்பாடல்களிலும் சுற்றுச்சூழலின் தாக்கம் மிகுந்து காணப்படுகின்றன. புறப்பாடல்களில் ஒவ்வொரு நாட்டுக்குமான காவல் மரங்கள் இருந்தன. எதிரிகள் போரின்போது, இம்மரங்களைச் சாய்ப்பதன் மூலம் அந்நாட்டு அரசனின் சினத்துக்கு ஆளாகின்றனர். போருக்குச் செல்லும் வீரர்கள் பனம்பூ, அத்திப்பூ, வேப்பம்பூ மாலை அணிந்து செல்லுதல், வென்றபின் மலர்மாலை சூடி மகிழ்தலும் நடைபெற்றன.

ஐவகைத் திணைகள்

சங்க இலக்கியங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகைத் திணைகள் அமையப் பெற்றதைக் கொண்டு சுற்றுச்சூழலின் இன்றியமையாமையை அறிய முடியும். தொல்காப்பிய அகத்திணையில் -
5ல்

'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவறை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலைச்
சொல்லவும் படுமே'


என வரையறுக்கப்பட்டுள்ளது.

ஐவகை நிலங்களை ஒட்டிய குறவர், ஆயர், உழவர், பரதவர், மறவர் தோன்றினர். அந்தந்த நிலத்துக்கு உரிய வளத்தைக் கொண்டே அவர்களின் பிழைப்பும் நடைபெற்றது.

சுற்றுச் சூழல் திறனாய்வு

இருபதாம் நூற்றாண்டில் தொழில் நுட்ப காரணமாக உலகம் மாசு அடைவது வருங்காலத்துக்குப் பெரிய தீமை உண்டாக்கும் என்று கவலைப்பட்டு மலை, கடல், காடு ஆகியவை காப்பாற்றவும், தட்ப வெப்ப மாறுபாடுகளைத் தடுக்கவும் உலகளாவிய நிலையில் இயக்கம் ஏற்பட்டுச் சுற்றுச் சூழலியல் ஆய்வு என்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலின் பின்னணியிலேயே இலக்கியங்கள் வகுக்கப்பெற்றன. இலக்கியங்களில் பாடல்களைப் புனைந்த புலவர்களும் இயற்கையை மிகவும் விரும்பினர். அவர்கள் நாட்டு வளத்தையும், நலிவிலா இயற்கைப் பொலிவையும் தம் பாடல்களில் திளைக்கத் திளைக்கத் தந்தனர். மனித இயல்புகள் இயற்கை இயல்புடன் ஒட்டி அமைய, பாடல்களும் இவற்றின் தன்மையை ஒட்டியே எழுதப் பெற்றன.

எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநுக்னூறு ஆகிய எட்டுத் தொகை நூல்களில் சுற்றுச்சூழலுடன் இயைந்த பாடல்கள் மிகுதி. குறிப்பாய், 'சங்க இலக்கியம்' அளிக்கும் அழகுமிளிர் பாடல்களின் எழிலை எடுத்துச் சொல்லுவது கூட கடினம். சங்க இலக்கிய நூல்களில் சுற்றுச்சூழலின் தாக்கம் சுழன்று தெரிக்கின்றன.

'உயர்கரைக் கான்யாற் றவிநற லகன்துறை
வேனிற் பாதிரி விரிமலர் குவை இத்
தொடலை கைஇய மரவரன் மகளே'
(
361)

தலைவனுடன் உடன்போக்கிற் செல்லும் காதலி பாலைப் பெருவழியில் பாதிரி மலர்களைக் கொய்து மாலை தொடுத்து விளையாடி வரும் வேடிக்கையைத் தலைவன் மேற்கண்ட பாடலில் கூறுவது நோக்கத்தக்கது. ஐங்குறு நூற்றில் அடங்கியுள்ள பாடல்கள் அனைத்தும் குறுகிய வரிகளை உடையவை. இனிய, எளிய பாக்களால் அமையப்பெற்றதும் கூட. ஆயினும் பொருள் நயத்திலோ விரிந்த பாங்கினதாகும்.

ஐந்திணை பாடிய புலவர்கள்

ஓரம் போகியாரின் மருதத்திணை, அம்மூவனாரின் நெய்தல் திணை, கபிலரின் குறிஞ்சித் திணை, ஓதலாந்தையாரின் பாலைத்திணை, பேயனாரின் முல்லைத்திணைப் பாடல்களிலும், தலைவன் தலைவி வாயிலாகச் சொல்லப்படும் போது, நாமும் அவர்களுடன் ஒன்றிக் கலந்து விடுகின்ற உணர்வை எய்துகிறோம்.

'மருதம் ஒரம்போகி; நெய்தல்அம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலன்; - கருதிய
பாலை ஓதலாந்தை; பனிமுல்லை பேயனே;
நூலையோ தைங்குறுநூறு'


என பழைய வெண்பா திணை ஆசிரியர்களைத் தெளிவுறத் தெரிவிக்கிறது.

இயற்கை இழைந்தோடுதல்

ஐங்குறு நூற்றுப் பாடல்களில் தலைவன், தலைவி, தோழி, செவிலி, கிழத்தி வாயிலாக மொழியப்படும் சொற்களிலெல்லாம் இயற்கை இழைந்தோடிச் செல்வது வியப்பை நல்குவதாய் அமைந்துள்ளன.

நீர்நிலைகள் ஒரு நாட்டின் வளத்திற்குப் பெரும் துணை நிற்பதாகும். பொய்கையும் அதில் பூத்த தாமரையும் பாடலில் எடுத்துக்காட்டப்படுகின்றன.

'மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தாள்துறை யூரன் வரைக
எந்தையும் கொடுக்க' எனவேட் டேமே!'


என்னும் பாடலில் தோழியிடம் சொல்லாடுகிறான் தலைவன். அவளும் அவனுக்கு 'அகன்ற பொய்கையிடத்தே, தாமரையின் முகைகளும் தோன்றும் குளிர்ந்த நீர்த்துறையையுடைய ஊருக்குரிய தலைவன் விரைந்து வருவானாக, எம் தந்தையும் இவளை அவனுக்குத் தருவாராக' என்று வேண்டியதாய் பதில் கூறுகிறாள். இப்பாடல் சுற்றுச் சூழலில் நீர்நிலைகளின் பாங்கை உணர்த்துகின்றன.

மனையில் வயலைக் கொடிகள் நடப்பட்டிருந்த செய்தியும் 'மனை நடு வயலை வேழம் சுற்றும்' என்னும் பாடல் வழியே அறிய முடிகிறது. செடி கொடிகள், மரங்களை நடுதல் பசுமையான சூழலை ஏற்படுத்தும்.

சிந்தனைக்கு விருந்து

உணர்வுடையோர்க்கு எல்லாப் பொருளுமே உயிர்ப்புடன் உளத்தோடே கலந்து உறவாடுகின்றன. உயிருள்ளவை, உயிரற்றவை என்கிற பேதம் இன்றி எல்லாமே புலவர்கள் சிந்தனைக்கு வித்தாய், விருந்தாய் அமைகின்றன.

கழியும் கானலும், கடலும் கலனும், மீனும் உட்பும், நாரையும் குருகும், புன்னையும் தாழையும், நெய்தலும் அரும்பும், அன்றிலும் அலவனும் இவை போன்ற பிறவும் இலக்கிய நிலையிலே சான்றோரால் எடுத்துக் காட்டப் பெறுகின்றன. இயற்கையின் எல்லையில்லா இன்பங்கள் எள்ளளவும் குறைவுபடாமல் கொடுக்கப்படுகின்றன.

'சாத்த மரத்த பூழில் எழுபுகை
கூட்டுவிரை கமழும் நாடன்'
(
212)

என்னும் பாடலில் தலைவனது நாட்டின் செழுமை செம்மாந்து வடிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த காட்சிக்கு இதுவே மணிமகுடம்.

குறவர்கள் வெட்டி எரிக்கும் அகிற்கட்டையிலிருந்து எழுகின்ற புகை சந்தனமரத்தின் நறுமணத்துடன் சேர்ந்து கலந்து நாற்புறமும் கமழ்கின்ற காட்சியைப் பயிலும். நம்மாலும் இதன் வாசம் நுகரமுடியும்.

'சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
இருங்கல் விடரளை வீழ்ந்தென, வெற்பிற்
பெருந்தேன் இறாஅல் சீறும் நாடன்...'
(
214)

எனும் பாடல் வரிகள் உள்ளுதோறும் உவப்பைக் கூட்டுகின்றன.

மலைச் சாரலிலுள்ள பலா மரத்திலே கொத்தாக விளங்கிய கொழுமையான நறும்பழம் பெருமலையின் பாறைப் பிளப்பிலுள்ள தேனிறாலைச் சிதைத்துத் தேனையும் கொள்கின்ற நாட்டினன் - என்கிற போது படிப்பவர் வாயில் நீரூறச் செய்கிறது. பலாப்பழம் இனிமையானதே; அதைத் தேனில் தோய்த்தெடுத்தால் அதன் சுவையை என்னென்பது...?

தொகுப்புரை:

 • சமூக இருப்பில் மனித உயிரானது தனது நினைவுகளையும் அனுபவங்களையும் பிறரிடம் பரிமாறிக் கொள்வதில் மொழி அடிப்படையாக விளங்குகிறது.
   

 • மொழி இல்லாவிடில் மனித உயிர்கள் இருக்கும்; மனித சமுதாயங்கள் இருக்காது வரலாறு இருக்காது. முன்னர் எப்பொழுதோ நடைபெற்ற நிகழ்வுகள் அல்லது எதிர்கொண்ட அனுபவங்களின் நினைவாக மொழி இருப்பதனால், வரலாற்றை மனிதன் மீது சுமத்துவதன் மூலம், இடையறாத சமுதாய இயக்கத்தினைச் சாத்தியப்படுத்துகிறது.
   

 • இத்தகைய பின்புலத்தில் தமிழ்மொழி, தமிழ் நிலம், சங்க இலக்கியம் போன்ற கருத்தியல்களைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்' என்று பனம்பாரனர் வரையறுத்துள்ள நிலப்பரப்பு அரசியல் நோக்கமுடையது. இங்குத் தமிழ் மொழியானது பரந்துபட்ட நிலப்பரப்புடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது; தமிழரின் புழங்கும் வெளி வரையறுக்கப்பட்டுள்ளது.
   

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத் தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி,
கோயம்புத்தூர்
- 641 035


 

 

  

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்