பாரத ரத்னா 'எம்.ஜி.ஆர்' வாழ்வும் பணியும்

முனைவர் பூ.மு.அன்புசிவா


ருதூர் கோபாலன் இராமச்சந்திரன் என்ற இவர், 'எம்.ஜி.இராமச்சந்திரன்' என்றும், 'எம்.ஜி.ஆர்' என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம் வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், அவர் தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை உருவாக்கினார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும். ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.

பிறந்த தேதி :
17, ஜனவரி - 1917
பிறந்த இடம் : நாவலப்பிட்டி, கண்டி, இலங்கை
இறந்த தேதி : டிசம்பர்
24, 1987
தொழில் : நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
குடியுரிமை : இந்தியா

குடும்ப பின்னணி மற்றும் ஆரம்பகால வாழ்க்கை

கேரள பெற்றோருக்கு பிறந்தவர், மருதூர் கோபாலன் இராமச்சந்திரன். அவருடைய பெற்றோரான மேலக்காடு கோபால மேனன் மற்றும் மருதூர் சத்யபாமா அவர்கள், கேரளாவின் பாலக்காடு பகுதியில் வடவனூர் பகுதியில் வசித்து வந்தனர். ஆனால், எம்.ஜி.ஆரின் தந்தை வழக்கறிஞர் என்பதால், அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் இருந்தது. இதன் காரணமாக அவர் கேரளாவிலுள்ள தனது சொந்த வீட்டில் இருந்து தப்பி ஓடினார். அவர் இலங்கை சென்று வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு தான் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் பிறந்தார். மேலக்காடு கோபால மேனன் அவர்கள் ஒரு பிராமண விதவையுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவர் கேரளாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக, அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கேரள சமூகத்தின் மரபுகளை பின்பற்றி, சக மனிதர்கள் அவருக்கு 'ஸ்மார்தவிசாரம்' செய்து அவரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர். அவருடைய குடும்பமும் இதை ஏற்றுக்கொண்டது. இதன் காரணமாகவே அவர் சிலோனுக்குத் தப்பி ஓடினார். மேலக்காடு கோபால மேனன் அவர்கள், சிலோனில் மருதூர் சத்யபாமா என்பவரை திருமணம் செய்தார். அங்கு அவர்களுக்கு
17, ஜனவரி-1917 ஆம் ஆண்டு, எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மகனாக பிறந்தார். எம்.ஜி.ஆரின் பிறந்த இடம் இன்றும் இலங்கையில் இருக்கிறது. தனது குழந்தை பருவ தொடக்கத்தில் இருந்தே, எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள், இந்து மதத்தைத் தீவிரமாகவும், உறுதியாகவும் நம்பினார். இந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தெய்வமாக இருக்கும் முருகக்கடவுளைத் தனது ஆஸ்தான கடவுளாக எண்ணித் தீவிரமாக வழிபாடு செய்து வந்தார்.

திரையுலக வாழ்க்கை

எம்.ஜி.ஆர் தனது இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டதால், இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், தனது பெயரை முதல்முறையாக 'ஒரிஜினல் பாய்ஸ்' என்ற நாடக குழுவில் பதிவு செய்தார். அவருடைய சகோதரரும் இந்த குழுவில் உறுப்பினராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு, நாடகத்தில் நடிப்பதை விட்டுவிட்டு,
1935ல் தமிழ் திரையுலகில் சேர்ந்தார். 1936ல் 'சதிலீலாவதி' என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக முதல்முறையாக நடித்தார். 1940களில் தான் அவருக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவிலேயே இதுவரை பார்த்திராத வர்ததகரீதியான ரொமாண்டிக் மற்றும் ஆக்;ஷன் ஹீரோ என்று அவரை உருவாக்கிய படம், 'இராஜகுமாரி'. இது கலைஞரால் எழுதி உருவாக்கப்பட்டது. 1947ல், இராஜகுமாரி' திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பின்னர், தமிழ் திரையுலகம் மூன்று தசாப்தங்களுக்கும் எம்.ஜி.ஆரை முழக்கமிட்டனர். 1956ல், எம்.ஜி.ஆர், திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுத்தார். அவர் இயக்கிய முதல் படமான 'நாடோடி மன்னன்', தமிழ்நாட்டில் பல திரையரங்குளில் ஓடி, பெரிய வெற்றிப்பெற்று, தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றது. ஒரு இயக்குனராக தனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இரண்டு படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார். அவை 'உலகம் சுற்றும் வாலிபன்' மற்றும் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' ஆகும். 1971ல் வெளியான 'ரிக்ஷாக்காரன்' படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான 'தேசிய விருது' கிடைத்தது.

சென்ற வெளிநாடுகள்

  • மலேஷியா

  • இலங்கை

  • பர்மா

  • சிங்கப்பூர்

  • ஹாங்காங்

  • பாங்காக்

  • தாய்லாந்து

  • ஜப்பான்

  • பிரான்ஸ்

  • கிழக்கு ஆப்பிரிக்கா

  • லண்டன்

  • ரஷ்யா

  • அமெரிக்கா

  • மொரீஷியஸ்.


எம்.ஜி.ஆர் பற்றி சில சுவையான தகவல்கள்

  • எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி (1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
     

  • பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். 'உரிமைக்குரல்' மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம்!.
     

  • எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி!.
     

  • எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் 'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா' பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்!.
     

  • விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன்!
     

  • சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். 'நினைத்ததை முடிப்பவன்'படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் 'ஹீக்கா' பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்!.
     

  • முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தை முடித்துக் கொடுத்தார்!.
     

  • 'கர்ணன்' படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். 'புராணப் படம் பண்ண வேண்டாம்' என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்!.
     

  • நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்!.
     

  • எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா!.
     

  •  எம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் 'மலைக்கள்ளன்'. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது!.
     

  • காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் 'உரிமைக் குரல்' காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது!.
     

  • நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மூன்றும் எம்.ஜி.ஆர் இயக்கிய படங்கள்.
     

  • சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்!.
     

  • எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவைசரளா!.
     

  • தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்.... 'அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்!'.
     

  • 'பொன்னியின் செல்வன்' கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை!.
     

  • அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து 'நான் எம்.ஜி.இராமச்சந்திரன் – சினிமா நடிகர்' என்று அறிமுகம் செய்துகொள்வார்!.
     

  • ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்!.
     

  • ரொம்பவும் நெருக்கமானவர்களை 'ஆண்டவனே!' என்றுதான் அழைப்பார்!.
     

  • அடிமைப்பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்!.
     

  • எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர்!.
     

  • முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். 'யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல' என்பாராம்!.
     

  • அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்.
     

  • 'நான் ஏன் பிறந்தேன்?' – ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய 'எனது வாழ்க்கை பாதையிலே' தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள்!

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

1960ல், எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவின் 'பத்மஸ்ரீ விருதுக்காகத்' தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் அரசாங்கத்தின் பற்றற்ற நடத்தையின் காரணமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால், விருதில் பாரம்பரிய ஹிந்தி வார்த்தைகளுக்கு பதிலாக தனது தாய்மொழியான தமிழில் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.

'ரிக்க்ஷாக்காரன்' படத்திற்காக, தனது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை
1972ல், எம்.ஜி.ஆர் பெற்றார். சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு 'டாக்டர் பட்டம்' வழங்கி சிறப்பித்தது. தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988ல் 'பாரத ரத்னா விருதை' வழங்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

எம்.ஜி.இராமச்சந்திரன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் இரண்டு மனைவிகள் நோயின் காரணமாக இறந்துவிட்டனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது மூன்றாவது மனைவியான ஜானகி இராமச்சந்திரன் அவர்கள் அ.இ.அ.தி.மு.கவின் பொறுப்பை ஏற்றார்.

இறப்பு

எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக
1984ஆம் ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே ஆண்டு, சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டார். இறுதியாக 1987ல் நோய்வாய்ப்பட்டார். டிசம்பர் 24ஆம் தேதி, 1987ல் இயற்கை எய்தினார். எம்.ஜி.ஆருடைய மரணம் தமிழ்நாட்டில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்டுக்கடங்காத மக்களையும், அதிகளவில் போராடி உயிரிழந்த உணர்ச்சித் தமிழர்களையும் நிர்வகிக்க தமிழக அரசும், போலீஸ் அதிகாரிகளும் கடுமையாக போராடினர். அவரது மறைவுக்குப் பின், அஇதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ஒன்று அவரின் மனைவி ஜானகி இராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜெ.ஜெயலலிதா தலைமையிலும் தனித்தனி கட்சிகள் உருவாகின. அவரது 'சத்யா ஸ்டுடியோ' இப்போது ஒரு பெண்கள் கல்லூரியாக உள்ளது. சென்னை டி.நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி பராமரித்து வருகிறது.

காலவரிசை

  • 1917 : எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி ம் தேதி 17 பிறந்தார்.

  • 1936 : தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

  • 1947 : அவரின் முதல் வெற்றிப்படமான 'ராஜகுமாரி' வெளியானது.

  • 1953 : அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார்.

  • 1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனராக மாறினார்.

  • 1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்து விட்டார்.

  • 1962 : மாநில சட்ட மன்றத்தின் உறுப்பினரானார்.

  • 1967 : தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.

  • 1967: எம். இராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.

  • 1969 : திமுக பொருளாளராக மாறினார்.

  • 1972 : தனது சொந்த அரசியல் கட்சியான, அ.தி.மு.கவை உருவாக்கினார்.

  • 1972 : 'ரிக்க்ஷாக்காரன்' படத்திற்காக தேசிய விருதை வென்றார்.

  • 1977 : முதல் முறையாகவும், மூன்று முறை தொடர்ந்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.

  • 1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

  • 1987 : டிசம்பர் 24ஆம் தேதி,1987ல் இறந்தார்.

  • 1988 : இறப்பிற்கு பின், பாரத ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது.

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத் தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி,
கோயம்புத்தூர்
- 641 035


 

 

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்