எம்.ஜி. ஆர்: தன்னிகரற்ற தமிழக தலைவர் (சனவரி 17,1917 - டிசம்பர் 24, 1987)

சிந்தனைப் பூக்கள் எஸ்.பத்மநாதன்


எம்.ஜி..ஆர்என்ற மூன்று எழுத்தில், உலகெங்கிலும் நன்கு அறியப்பட்ட மாபெரும் தமிழக தலைவரின் இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்பதாகும். எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்து ஒரு மந்திரமாகவே இன்று வரை உச்சரிக்கப்படுகிறது. நினைக்கும் போதும் உச்சரிக்கும்போதும் உற்சாகத்தையும் உன்னதத்தையும் தரும் இம்மந்திரக்காரருக்கு மக்கள் திலகம், பொன்மனச்செல்வர், புரட்சித்தலைவர், இதயக்கனி என்றெல்லாம் பட்டங்கள் உண்டு. தமிழக சினிமாவையும் தமிழக அரசியலையும் ஒன்று சேர பயணிக்கவைத்த வெற்றியாளர் இவர் மட்டுமே. நீண்டகாலமாக சினிமாவில் அழகு ததும்பிய நடிகராகவும் அரசியலில் அப்பளுக்கற்ற தன்னலமறுப்பாளராகவும் திகழ்ந்து சாமான்ய மக்களின் வாழ்வோடு தன்னை பிணைத்துக் கொண்ட இம்மாபெரும் தலைவரது நூற்றாண்டு விழா உலகெங்கிலும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆர் இலங்கையில் கண்டிக்கு அருகில் உள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனன் சத்தியபாமா தம்பதிகளுக்கு மகனாக சனவரி
17, 1917 அன்று பிறந்தார். எனினும் அவருடைய சிறிய வயதில் தந்தையாருடன் கேரளம் சென்று அவர் காலமாகிவிடவே தமிழ்நாடு கும்பகோணத்தில் குடியேறினார். குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை தொடராது சக்கரபாணி என்ற சகோதரருடன் சேர்ந்து தனது ஏழு வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவம் கொண்ட இவர் திரைப்படத்துறையில் காலடி எடுத்துவைத்தார். அயராது உழைத்து முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பினை நேசித்த தமிழக மக்கள் அவர் பின்னால் வழிநடந்தனர்.
 1936இல் சதிலீலாவதியே இவரது முதல் திரைப்படம். எனினும் 1947 இல் இவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ராஜகுமாரி திரைப்படம் பெரும் வெற்றியை ஈட்டிக்கொடுத்தது. தொடர்ந்து மிக நீண்டகால வரலாற்றினைக் கொண்ட இவரது திரைப்படங்கள் 136 ஆகும். இதில் 100 நாட்களுக்கு மேலாக ஓடி வெற்றி கண்டவை மட்டும் 86 படங்களாகும். இவரது படங்களில் ப.நீலகண்டன் 17 படங்களை இயக்கினார். ஜெ.ஜெயலலிதா 28 படங்களில் நாயகியாகவும், சரோஜாதேவி 26 படங்களில் நாயகியாகவும் லதா 13 படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து 25 ஆண்டுகளாக நடித்த பெருமை இவருக்கு உண்டு. இவரது சக நடிகர்களுள் ஒருவரான எம்.ஆர் ராதாவினால் சுடப்பட்டு தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவரது நட்சத்திர வலிமை குறையவே இல்லை. இவரது புதிய பாணி பேச்சினை மக்கள் ஏற்றுக்கொண்டனர். 1956 இல் தென்னிந்தியாவில் முழுநீள வண்ணப்படமான 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' வெளிவந்து பெரிய சாதனை படைத்தது. நூறுநாட்கள் ஓடி தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் சாதனையை 'நாடோடிமன்னன்' திரைப்படம் நிகழ்த்தியது. 16 திரைப்படங்களில் இரட்டைவேடம் தாங்கி தமிழில் அதிக திரைப்படங்களில் இரட்டைவேடம் தாங்கிய ஒரு சாதனையாளராகவும் எம்.ஜி.ஆரே இன்றுவரை திகழ்கிறார். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனே இவரது இறுதித் திரைப்படம். 1977 ஆம் ஆண்டு முதலமைச்சரானதும் இவரது சினிமா வாழ்வு முடிவுக்கு வந்தது.

சினிமாவைப் பொறுத்தவரையில்
1952 முதல் தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம் இவர் மூலம் உருவானது. படிப்படியாக தென்னிந்திய நடிகர் சங்கம் என மாற்றம் பெற்று இன்றுவரை வரலாறு படைத்துள்ளது. உபதலைவர், பொதுச்செயலாளர், செயலாளர், தலைவர் எனப் பல உயர் பதவிகளை இவர் வகித்துள்ளார். முதல் நன்கொடையாக 501 ரூபாவை அளித்த பெருமையும் இவருக்கு உண்டு.

எம்.ஜி.ஆர் நடித்த
50 படங்களுக்கு கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். தஞ்சை ராமையாதாஸ், பஞ்சு அருணாசலம் வரை 25 கவிஞர்கள் இவரது திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். இவ்வளவு கவிஞர்களின் பால்ககுள்கு நடித்த வேறு எவரும் தமிழக சினிமாவில் இல்லை. இவர் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன்மூலமே நாடோடிமன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய திரைப்படங்களை இயக்கவும் செய்தார்.

அரசியல், சமூக துறைகளில் இவருக்குக் கிடைத்த விருதுகளும் பட்டங்களும் கணக்கற்றவை. எனினும், அதில் முக்கியமான சில பின்வருமாறு: பத்ம ஸ்ரீ விருது -
1960 (இதில் தமிழ்மொழியின் அங்கீகாரம் கிடைக்கப்பெறாமையால் அதனை வாங்க மறுத்துவிட்டார்.), அண்ணா விருது - 1971, கௌரவ டாக்டர் பட்டம் - 1974 (அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழகம்), பாரத்பட்டம் - 1978 (இந்திய அரசு) கௌரவ டாக்டர் பட்டம் - 1983 (சென்னை பல்கலைக்கழகம்), பாரத ரத்னா விருது - 1988 (இந்திய அரசு இவர் இறந்ததன் பின்னர் வழங்கியது).

சினிமாப்படங்களில் இவரது சாதனைகளை எவரும் இன்னும் தொடவில்லை என்றே கூறலாம். இவரது படங்கள் மொத்தம்
136. இதில் சிகரெட் பிடிப்பதைத் தவிர்த்துள்ளார். முதலமைச்சர் பதவியை 10 நாட்களுக்குத் தள்ளிப்போட்டு விட்டு ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். புராணப்படங்களில் நடிக்க மறுத்துள்ளார். சரோஜாதேவி, ஜெயலலிதா ஆகியோருடன் கூடுதலாக நடித்துள்ளார். காஞ்சித்தலைவன் படம் முதலாக தனது கட்டுமஸ்தான உடலை காட்டி நடித்துள்ளார். மூன்று படங்களுக்கு இயக்குநராக இருந்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதி நடிக்க முற்பட்டுள்ளார். ஆங்கில வசனத்தை அறிஞர் அண்ணாவால் பூர்த்தி செய்ய முடியாமல் போனது. இவர் தனது ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாய், கரடி, சிங்கம் என்பவற்றை வளர்த்த மனிதாபினமான நடிகர். அடிமைப்பெண் தயாரிக்க nஐய்ப்பூர் சென்றபோது குளிருக்காக தொப்பி அணிந்துகொண்டார். இறுதிவரை இப்பழக்கம் தொடர்ந்தது. தொப்பியும் கருப்பு கண்ணாடியும் இவரது முக்கிய அடையாளங்களாக ஆனது. ஆனந்தவிகடனில் ' நான் ஏன் பிறந்தேன்' தொடரையும் பின்னர் 'எனது வாழ்க்கைப் பாதையிலே' என்ற தொடரையும் எழுதத் தொடங்கி முடிவுபெறாமலேயே முற்றுப்பெற்று விட்டன. எத்தனையோ சாதனைகளை நிகழ்த்திய அவரது பெருமைகளும் முற்றுப்பெறாமலேயே போய்விட்டன.

தனது திருமண வாழ்விலும் புரட்சி செய்தவர் எம்.ஜி.ஆர். முதலில் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் உடல்நலக் குறைவால் இறந்துவிட சதானந்தவதி என்பவரை மணந்தார். அவரும் உடலநலக் குறைவால் இறந்து விட்டார். மூன்றாவதாக நடிகையான வைக்கம் நாராயணி ஜானகி என்பவரை திருமணம் செய்தார். ராஜமுத்திரை திரைப்படத்தில் (
1948) கதாநாயகியாக நடித்தவர் இவர். ஜானகி ஏற்கனவே திருமணமான ஒருவர். அவரது மகனாகிய அப்பு என்கின்ற சுரேந்திரனை வளர்ப்பு மகனாக்கிக் கொண்டார். உண்மையில் இவரது இரண்டாவது மனைவி உயிருடன் இருக்கும்போதே எம்.ஜி.ஆர் வி.என்.ஜானகி இருவரும் ஒன்றாக வாழ்ந்து, 12 வருடங்களின் பின்னர் இரண்டாவது மனைவி இறந்ததும் 1962 யூன் மாதம் 14 ஆம் நாள் சட்டப்படி திருணம் செய்துகொண்டனர். எம்.ஜி.ஆர் ஜானகியின் மகனான சுரேந்திரனுடன் ஜானகியின் தம்பியாகிய நாராயணனின் குழந்தைகளான ராஜேந்திரன், மதுமோகன், கோபாலகிருஷ்ணன், ஜானகி, தீபன் ஆகிய ஜவரையும் வளர்ப்பு பிள்ளைகளாக தத்து எடுத்துக்கொண்டார்.
 


எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வு தமிழக வரலாற்றில் மிக முக்கியமானதொன்றாகும். இவர் ஒரு மலையாளி என்றாலும் தமிழ் தேசியவாதியாகவே திகழ்ந்தார். அதனால்
1949 செப்டெம்பர் 17 இல் உருவாகியிருந்த திராவிட முன்னேற்ற கழகத்தில் ஈடுபட்டு செயல்ப்பட்டார். முற்போக்கு எண்ணங்களைக் கொண்ட இவர் இதில் இணைந்ததில் வியப்பில்லை. அப்போது அதன் பொதுச்செயலாளராக சி.என். அண்ணாத்துரை தெரிவானார். 1967 இல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க 138 இடங்களைப் பெற்று கட்சியைப் பிடித்தது. 1967 மார்ச் 6 இல் சி.என். அண்ணாத்துரை முதலமைச்சரானார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் 1969இல் கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆனார். 1971 இல் மீண்டும் 184 இடங்களைப் பெற்று தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது. மீண்டும் மு.கருணாநிதி முதலமைச்சரானார். அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கருத்து வேறுபாடு காரணமாக 1971 ஒக்டோபர் 14 இல் கட்சியிலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். இன்றுவரை பல சாதனைகளை படைத்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை படைத்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தவர் என்ற வகையில் தமிழ்நாட்டு அரசியலில் அவரது இடம் தனித்துவம் பெறுகிறது. எம்.ஜி.ஆ; அரசியலில் ஈடுபட்டதன் மூலம் 3 முறை தமிழகத்தின் முதலமைச்சரான ஒரு சாணக்கியர்.

ஆரம்பத்தில் காமராஜர் மீது பற்றுக் கொண்டிருந்த இவர் அறிஞர் அண்ணாவின் விசுவாசியாக மாறியவர். எனினும் அவரது சொந்த விருப்பம் காரணமாகவே
1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அவரே செல்வி ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளராகவும் பின்பு பொதுச்செயலாளராகவும் அமர்த்தியவர். எம்.ஜி.ஆர் 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.

இவர் கொண்டு வந்த மகத்தான திட்டங்கள் தமிழகத்திற்கு புதியவை. 'எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்' இன்றுவரை பேசப்படும் ஒரு திட்டம். பள்ளிச் சிறுவர்களுக்கு இலவச உணவு வழங்கும் சிறந்த திட்டம் இதுவாகும். இவை தவிர விதவை, ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள், தாய் சேய் நல இல்லங்கள், இலவச சீருடை வழங்குதல் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள், முதியோர் திட்டங்கள், விவசாயிகளுக்கான பல திட்டங்கள், சென்னை குடிநீர்த் திட்டம், அண்ணா பல்கலைக்கழகம் அமைவு, அண்ணா வளைவு என நூற்றுக்கணக்கான திட்டங்களை தமிழகத்திற்கு உருவாக்கிய முதல்வர் இவரே. இவர் கொண்டு வந்த இந்த திட்டங்களால் தமிழகம் இந்தியாவின் சிறந்த மாநிலங்களுள் ஒன்றாயிற்று.

கொடைவள்ளல், பொன்மனச் செம்மல் என்று இவரை அழைப்பதற்கு காரணமே இவர் வழங்கி வந்துள்ள பல்வேறு பண உதவிகள் தான். அவரது பொதுநல சேவைக்காக பல பட்டங்கள் வழங்கி மக்கள் அவரை கௌரவித்துள்ளனர். கொடுத்துச் சிவந்த கரம், கலியுகக் கடவுள், நிருத்திய சக்கரவர்த்தி, பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர், இதயதெய்வம், மக்கள் மதிவாணன், ஆளவந்தார் போன்ற மக்கள் வழங்கிய பட்டங்கள் இவரைப் போல் யாரும் பெற்றதில்லை. தமிழ்வாணன் இவருக்கு வைத்த பெயரான 'மக்கள் திலாகம்' என்ற பெயரே என்றும் நிலைபேறுயதாக உள்ளது.

தமிழீழம் பற்றிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர் இவர். ஈழத்திற்கான வெளிப்படையான ஆதரவினை வழங்கியதுடன் பொருளாதார உதவிகளையும் செய்துள்ளார். பழ.நெடுமாறனின் கருத்துப்படி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு
7 கோடி ரூபாய்களை வழங்கிய உள்ளார். எம்.ஜி.ஆரை தேசிய தலைவவர் அண்ணன் என்றே அழைத்து வந்துள்ளார். மறைந்த திரு. அன்ரன் பாலசிங்கம், இயக்குநர் சீமான், பழ.நெடுமாறன் ஆகியோர் இவரது பொருளாதார உதவிகள் பற்றி பல குறிப்புக்களை வழங்கியுள்ளனர்.

எம்.ஜி.ஆர் அவர்கள் இறந்தாலும் அவரது நினைவுகள் இன்னும் இறக்கவில்லை. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சென்னை மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பெற்றுள்ளது. அந்நினைவிடத்தில் இவரது மார்பளவு உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தனிக்கட்டிடம் ஒன்றில் இவரது பொருட்களும், புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சென்னை தியாகராய நகரில் டாக்டர் நினைவு இல்லம் உள்ளது. இங்கு இவர் பெற்ற பரிசில்கள், விருதுகளும், இவரை நினைவுகூறும் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. திருநின்றவூர் நத்தம்மேடு கிராமத்தில் அருள்மிகு எம்.ஜி.ஆர் ஆலயம்
1800 ச.அடி மனையில் அமைக்கப்பெற்றுள்ளது. இவருக்கு பல ஊர்களிலும் கோயில்கள் உள்ளன என்பதும் உண்மையே. MGR : A LIFE என்ற அரிய நூல் ஒன்றினை ஆர். கண்ணன் என்பவர் அண்மையில் வெளியிட்டுள்ளார். பென்குயின் இந்தியா எனும் அச்சகத்தின் மூலமே இந்நூல் வெளியாகியுள்ளது.

கவிஞர் வைரமுத்து எம்.ஜி.ஆர் அவர்கள்
1987 இல் மறைந்தபோது எழுதிய கவிதை ஒன்று பின்வருமாறு அமைகிறது.

எம்.ஜி.ஆருக்கே மரணமா! எனத் தொடங்கும் அக்கவிதை. காற்று - சமுத்திரம் - வானம் என்று எம்.ஜி.ஆரை போற்றுகிறார்.

இமைக்காமல் கிடந்த உங்களை இமைக்காமல் பார்த்தேன்.
ஜனத்திரள் என்னை பிதுக்கியது.

நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா!
உனக்கா மரணம் என்று உதட்டுக்கு தெரியாமல் நாக்கு உச்சரித்துக்கொண்டது....
எட்டுவயதில் என்னை தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்....
உங்களின் இரட்டை நாடியின் பள்ளத்தாக்கில் குடியிருந்தேன்
நீங்கள் புன்னகை சிந்தும்போது நான் வழிந்தேன்
விலையுயர்ந்த கடிகாரத்தை ஒரு பாடகருக்கு பரிசளித்தீர்கள் - அது உங்கள் ஈகைக்கு சாட்சி
நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இறந்துபோன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது கட்டிலைப் பார்த்து குலுங்கி குலுங்கி அழுதீர்கள் - அது உங்கள் ஈரத்திற்கு சாட்சி.

உங்கள் பாடலெல்லாம் தமிழ்நாட்டுக்கு செய்த ரத்ததானம்
ஒரே ஒரு சந்திரன்தான்
ஒரே ஒரு சூரியன்தான்
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்....


இந்த வரிகளுக்குள் எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் அடங்கிப்போகிறார். இப்படி ஒரு பாடலை கவிஞர் வேறு யாருக்கும் எழுதியிருக்க மாட்டார். உண்மை உணர்ந்து உரிமையுடன் எழுதியுள்ளார். இந்தியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை தமிழர்களுக்கும் ஒரேயொரு சூரியன்தான் - அது எம்.ஜி.ஆர்.

சிந்தனைப் பூக்கள் எஸ்.பத்மநாதன் 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்