எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரம்

பேராசிரியர் நிர்மலா மோகன்


“சேரனுக்கு உறவா?
செந்தமிழர் நிலவா?’ - என எம்.ஜி.ஆர். பற்றி விதந்து விதந்து வினவுவார் கண்ணதாசன், ‘பணத்தோட்டம்’ படத்தில்!

ஒரே நேரத்தில் – அவர் ஒருவர் தான் – நட்சத்திரமாகவும், நிலவாகவும் இருந்தார்; ஏழை எளியவர் விழிகளுக்கு விருந்தவர்!

‘அவர் வாக்கு, வாக்கு வாங்கும் வாக்கு’ என்னும் படி – ஆரம்ப நாள்களிலேயே – அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தோடு, இரண்டறக் கலந்திருந்த நாள்களிலேயே – எம்.ஜி.ஆருக்கு இருந்தது. எவராலும் எஞ்ஞான்றும் அசைக்க முடியாத படி – அப்படி ஓர்
Image, அப்படி ஒரு Charisma!” (எனக்குள் எம்.ஜி.ஆர்., பக்.31-32) என்பது எம்.ஜி.ஆரின் ஆளுமை பற்றி ‘காவியக் கவிஞர்’ வாலி வரைந்துள்ள அழகிய சொற்சித்திரம் ஆகும்.

மேலாண்மை இயலில் ‘ஆளுமை’ என்னும் கலைச்சொல்லுக்கு ‘ஒரு தனிமனிதரின் முத்திரைப் பண்பு’
(Personality is the brand image of an individual) என விளக்கம் தருவர். இவ் விளக்கத்திற்கு ஏற்ப, எம்.ஜி.ஆரின் ஆளுமை என்பது தனித்த ஒரு முத்திரைப் பண்பாக அவரது வாழ்நாள் முழுவதும் படிந்து கிடந்தது. பெருந்தலைவர்கள் முதல் ஏழை எளிய மக்கள் வரையிலான கோடானுகோடிப் பேரை ஈர்த்தது, ஆட்கொண்டது, வசப்படுத்தியது எம்.ஜி.ஆரிடம் குடிகொண்டிருந்த ஆளுமைப் பண்பே ஆகும். அது அவரது அழகிய புறத் தோற்றத்தால் மட்டுமன்றி, ஆழ்ந்த பண்புநலன்களின் அடிப்-படையில் அமைந்த அக அழகினாலும் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை ஆகும்.

மாமனிதர் எம்.ஜி.ஆர்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் கவியரசர் கண்ணதாசனுக்கும் இடையே நிலவிய நட்பு தனித்துவம் வாய்ந்தது; மாணிக்கவாசகரின் மொழியிலே குறிப்பிடுவது என்றால், ‘ஆழ்ந்து, அகன்று, நுண்ணியது’. “‘எழுதினால் கண்ணதாசன் தான் எழுத வேண்டும்’ என்று அவர் (எம்.ஜி.ஆர்.) சொன்ன காலங்களும் உண்டு. ‘கண்ணதாசன் எழுத வேண்டாம்’ என்று மறுத்த காலங்களும் உண்டு. ஆனால் கவிதையில் அவர் என்னை ரசித்ததைப் போல், யாரையும் ரசித்ததில்லை… நான் அவர் மீது காட்டிய பகையையும், அவர் என் மீது காட்டிய அன்பையும் எப்படி மறக்க முடியும்?” (சந்தித்தேன் சிந்தித்தேன், பக்.82-83) எனக் கண்ணதாசனே ஓர் இடத்தில் இது பற்றி வெளிப்படையாக, மனம் திறந்து பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘வைதாரையும் வாழ வைக்கும்’ முருகப் பெருமானைப் போல, எம்.ஜி.ஆரும் கண்ணதாசனை அரசவைக் கவிஞர் பதவியில் அமரச் செய்து அழகு பார்த்தார்; சிறிது காலம் கண்ணதாசனோடு ஊடல் கொண்டிருந்தாலும், மனம் மாறித் தமது திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதும் வாய்ப்பினைக் கண்ணதாசனுக்கு மீண்டும் நல்கினார். இன்னமும் கூர்மைப்படுத்திக் கூறுவது என்றால், ‘இந்தப் பாடலைக் கண்ணதாசன் தான் எழுதி இருக்கமுடியும்’ என அறுதியிட்டுக் கூறும் அளவிற்குக் கண்ணதாசனின் இலக்கிய ஆளுமையைத் தெரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். இதே போல, மக்களின் மனநிலையைப் புரிந்து செயல்படுவதிலும் எம்.ஜி.ஆர். மிகவும் கை தேர்ந்தவராக விளங்கினார். கண்ணதாசன் எம்.ஜி.ஆரை ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகக் கலந்து உரையாடிய அனுபவத்தைக் குறித்து எழுதிய போது, “நிர்வாகத் திறமையில் எம்.ஜி.ஆர். ஒரு சர்ச்சிலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஜனங்களின் மனோபாவத்தைக் கணிப்பதில் எப்போதுமே அவர் வெற்றி பெற்றிருக்கிறார்… நான் மதுரை வீரனையோ, மன்னாதி மன்னனையோ, ராஜா தேசிங்கையோ, நாடோடி மன்னனையோ சந்திக்கவில்லை. மக்களின் விசுவாசத்துக்குப் பாத்திரமான ஒரு மகாமனிதனைத் தான் அப்போது சந்தித்தேன்” (சந்தித்தேன் சிந்தித்தேன், பக்.82-83) எனக் கூறி இருப்பது நோக்கத்தக்கது. நடுவண் அரசால் எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டு, மறுதேர்தல் அறிவிக்கப் பெற்று சூடு பிடித்திருந்த பரப்பான, நெருக்கடியான தருணத்திலும் கூட, திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த தமது மகன் கலைவாணனுக்கு, ‘வெறும் கறி, மீனிலே உடம்பைக் காப்பாற்ற முடியாது. கீரை வகைகள் நிறையச் சாப்பிடு’ என உடம்பைக் காப்பாற்றும் முறை பற்றி அறிவுரை சொன்னதையும் கண்ணதாசன் தம் நூலில் நெகிழ்வோடு பதிவு செய்துள்ளார்.

எம்.ஜி.ஆர். முழுநலம் பெற வழிபட்ட தமிழறிஞர்

திரைப்படத் துறை சார்ந்த ஆளுமையாளர்களின் நெஞ்சங்களிலே மட்டுமன்றி, ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்களான தமிழறிஞர்களின் உள்ளங்களிலும் இடம்பெற்றிருந்தார் எம்.ஜி.ஆர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் ‘பொய் சொல்லா மாணிக்கம்’ எனச் சிறப்பித்துப் பேசப்படும் தமிழறிஞருமான வ.சுப.மாணிக்கனார் ‘தற்சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் எழுதிய தன்வரலாற்று நூலில் எம்.ஜி.ஆர். பற்றிக் குறிப்பிட்டிருப்பது வருமாறு.

“வியாழக்கிழமை,
8.11.1984: தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவர் ம.கோ.இராமச்சந்திரன் (தமிழில் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என எம்.ஜி.ஆரைச் சுட்டுவர்) ஒரு மாதமாகப் பெருகிய நோய்களின் வாய்ப்பட்டு ஓரளவு தேறி இப்போது சிறுநீரக வைப்புக்கு அமெரிக்கா சென்றிருக்கின்றார். பெருங்-கொடையுள்ளமும் நல்ல பல பண்புகளும் மக்கட்குப் பெருநலங்களும் நல்லாட்சியும் வாய்ந்த முதல்வரின் உடல்நலமின்மை எனக்குப் பெரிய வருத்தத்தைத் தந்தது. சில நாள் பெருங்கவலையானேன். அவர் முழுநலம் வேண்டிச் சில நாட்கள் ஒருமை வழிபாடு செய்தேன். நல்ல மருத்துவப் பார்வையால் முதல்வர் நலம் சீராக இருக்கின்றது எனவும் கடிய நிலையைக் கடந்து விட்டார் எனவும் உடல் நலம் பெறுவது தெளிவு எனவும் கேட்கக் கேட்க என் உள்ளக் கவலை குறைகின்றது. நான் பண்புக்கும் அன்புக்கும் மதிக்கும் அரசியல் தலைவர்களுள் முதல்வரும் ஒருவர்… அமெரிக்கா சென்றிருக்கும் முதல்வர் முழுநலத்தோடும் தொண்டு செய்யும் நன்னலத்தோடும் வருக என்று வாழ்த்துகின்றேன். வந்த பின் கண்டளாவுவேன்” (பக்.53-54).

18.10.1984 அன்று நடைபெற்ற மதுரைப் பல்கலைக்கழகத்தின் விழாவில் அந்நாளைய துணைவேந்தர் வ.சுப.மாணிக்கனாரைக் கண்டபோது, “உங்களைப் பல நாளாகப் பார்க்கவில்லையே? பல செய்திகளை உங்களிடம் கலந்து பேச எண்ணியிருந்தேன்” என்று எம்.ஜி.ஆர். அவரிடம் சொன்னாராம். “உங்களை வந்து ஏற்ற நாளில் பார்க்கின்றேன்” என்று அப்போது வ.சுப.மா. அவருக்கு மறுமொழி கூறினாராம்; சில நாள் கழித்து, ‘உங்களுக்கு ஏற்ற நாளைத் தெரிவித்தால் வருவேன்’ எனவும் மடல் எழுதினாராம். இதற்கிடையில் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றியதால் அவருடனான சந்திப்பு நிகழாமலே போனதை வ.சுப.மா. ஆழ்ந்த வருத்தத்தோடு ‘தற்சிந்தனைகள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இங்ஙனம் மூத்த தமிழறிஞர் பெருமக்களுடன் கலந்து உரையாடுவதிலும், அவர்களது கருத்துக்களைக் கேட்டறிவதிலும் எந்நாளும் அக்கறையும் ஆர்வமும் கொண்டவராகத் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். என்பதை அவரது வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

சான்றாண்மையின் உறைவிடம்

திருக்குறளில் 99-ஆவது அதிகாரமாக இடம்பெற்றிருப்பது ‘சான்றாண்மை’ இதில் மூன்றாவதாக வரும் குறட்பா வருமாறு:

“அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்”
(
983)

‘அன்பு, நாணம், பொதுநலம், இரக்கம், வாய்மை ஆகிய பண்புகள் ஐந்தும் சால்பு எனும் கட்டடத்தின் தூண்கள் ஆகும்’ என்பது இக் குறட்பாவின் தெளிவுரை. இந்த ஐந்து அரும்பெரும் பண்புகளையும் ஒருசேரப் பெற்ற ஓர் ஆற்றல்சான்ற ஆளுமையாளராக எம்.ஜி.ஆர். விளங்கினார். ஏழை எளிய மக்கள் மீது என்றும் மாறாத, குன்றாத அன்பு – பழி பாவங்களுக்கு அஞ்சுகின்ற நாணம் – எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற்றிருக்க எண்ணும் பொது நலம் – வாடிய உயிரைக் கண்ட போதெல்லாம் வாடுகின்ற கருணை மனம் – உள்ளத்தால் பொய்யாது ஒழுகும் வாய்மை என்னும் இந்த ஐம்பெரும் பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்ததாலேயே எம்.ஜி.ஆர். இன்றளவும் மக்களால் நினைக்கப்பட்டு வருகின்றார் என்பது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை.
 

முனைவர் நிர்மலா மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
காந்திகிராமம்
- 624302
திண்டுக்கல் மாவட்டம்

 



 

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்