பொன்மனச் செம்மல்

சபா. அருள்சுப்பிரமணியம்.M.A , கனடா

மிழ்நாட்டிலும் தமிழுலகத்திலும் திரை உலகத்திலும் எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்துகளால் அறியப்பட்ட ஒருவரே நடிகர் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் என்பவர்.

'தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.'


ஒருவர் தனக்குப்பின் விட்டுச்செல்லும் எச்சங்களைக் கொண்டே அவர் தக்கவரா, தகாதவரா என்று சமூகம் தீர்மானிக்கின்றது. இந்தவகையில் அமரர் எம்.ஜி இராமச்சந்திரன் அவர்களை அவர் பிறந்து 100வது ஆண்டின் பின்னும் நினைக்கிறோம்; என்றால்... அதற்கு அவர் விட்டுச் சென்ற நீங்காத நினைவுகள்நம்முன் எச்சமாய்; நிற்பதே காரணமாகும்.

அமரர் அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழ்மக்கள் மனங்களிலெல்லாம் நிறைந்திருக்கும் ஒரு பெருந்தகை. இவர் மருதூர் கோபாலகிருஸ்ணமேனன் சத்தியபாமா இணையருக்கு
5வது மகனாகப் பிறந்தார். இலங்கையின் கண்டி மாநகரில் 1917ஆம் ஆண்டிற் பிறந்த இராமச்சந்திரன் அவர்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்துவந்தார். தனது இளமைக் காலத்திலேயே வறுமையின் கொடுமையைஉணர்ந்தவராக இருந்தார்.

அமரர் அவர்கள் இளமைக் காலத்திற் சந்தித்த சவால்களை எல்லாம் தனது கடின உழைப்பால் முறியடித்தார்.இளமையில் சினிமாத் துறையில் காலடி எடுத்துவைத்த இவர் தனது அயராத உழைப்பாலும் தளராத முயற்சியாலும் பல வெற்றிகளைத் தனதாக்கிக் கொண்டார். அவரது உழைப்பு அவரை உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது என்றால் மிகையாகாது. தான் இளமையிற் பட்ட துன்பகரமான அனுபவங்கள் மற்றவருக்கும் வரக்கூடாது என்று மனதில் நினைத்துச் செயற்பட்டவர்போல் தனது வாழ்க்கையைக் கொண்டுசென்றவராகவே காணப்பட்டார். சமூகமாற்றம் ஒன்றே சமூகச் சீர்கேடுகளை நேரவிடாது தடுக்கும் என்பதை இவர் உறுதியாக நம்பினார். அதனால் சமூகச்சீர்திருத்தக்கருத்துகளை மக்கள் மனங்களிலே விதைக்க முற்பட்டார். இதை அவர் தனது படங்களூடாக பரப்ப முயன்று வெற்றியும் கண்டார்.

இதற்குத், தான்தேர்தெடுத்த சினிமாவையும், அரசியலையும் சரியான முறையிற் பயன்படுத்தினார். நான் 'ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்....' என்று நம்பிய எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரசியலிற் புகுந்து அறிஞர் அண்;ணாவின் பாசறையில் பயிற்சி பெற்று அரசியலில்ஈடுபட்டார். தான் சந்தித்த தடைகள், எதிர்ப்புகள் எல்லாவற்றையும் தாண்டித் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பத்து ஆண்டுகள் பணிபுரிந்தார். முதல்வர் பதவியை வைத்துத் தான் ஏற்படுத்த விரும்பிய மாற்றங்களை எல்லாம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தினார்.

மதிய உணவுத் திட்டத்தைப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தி அதனூடாகப் பாடசாலை வராத வறிய சிறார்களையெல்லாம் கல்வியில் நாட்டம்கொள்ளச்செய்தார். இதனால் மக்கள் மனங்களில் மக்கள் திலகமாக இடம்பிடித்தார்.மக்களிடம் மனமாற்றம் ஏற்படும்போது சமூகத்திலும் அது பிரதிபலிக்கும் என்று நம்பிய எம்.ஜி.ஆர் அவர்கள் அதற்கான வழிகளையும் கண்டறிந்தார். அதனால் அந்த மனமாற்றத்திற்கு வழிவகுக்கும் கருத்துகள் நிறைந்த பாடல்களைத் தேர்ந்து மக்களிடம் பரப்பினார்.'சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே...,''உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் நீ உலகத்திற் போராடலாம்...' என்ற பாடல்கள் மக்களின் சிந்தனையைத் தூண்டுவனவாய் அமைந்திருந்தன.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதில் அமரர் அவர்கள் அசையாத நம்பிக்கை கொண்டவராகக் காணப்பட்டார். அதனால் சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் முதலில் இளம் மனங்களில் நல்ல கருத்துகளை விதைக்க வேண்டும்என்று நம்பினார். அன்று பட்டிதொட்டியெல்லாம் செல்வாக்குச் செலுத்திய சினிமாவைத் - தனதுஆதிக்கம் கொடி கட்டிப்பறந்த சினிமாவைத்- தனது கருத்தை நடைமுறைப்படுத்தும் ஊடகமாகப் பயன்படுத்தினார். அதற்கேற்ப இளையோர் மனங்களில் பதியக்கூடிய நல்ல கருத்துகள் கொண்ட பாடல்களைத் தனது படங்களிற் சேர்த்தார். அன்று புரட்சிக் கருத்துகளைப் பாடல்களாக எழுதிய பல கவிஞர்களின் பாடல்களை இசையூட்டி மக்கள் மத்தியில் உலாவரச் செய்தார்.

அந்த வகையில்,'தூங்காதே தம்பி தூங்காதே...''சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா...''திருடாதே பாப்பா திருடாதே....'' போன்ற பாடல்கள் மிகவும் விரும்பிப் பாடப்பட்ட பாடல்களாக விளங்கின. அமரர் அவர்கள் நாட்டுப்பற்றையும் மக்கள் மனங்களில் இடம்பெறச் செய்வதில் முழுமூச்சோடு பாடுபட்டார். இந்த வகையில்,'ஒருதாய் மக்கள் நாமெல்லாம்''ஒன்றே எங்கள் குலமென்போம்....''நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி!....' போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கன.

நடிகர்களை வெறும் கூத்தாடிகள் என்று எள்ளிநகையாடியோர் மத்தியில் அக்கருத்தைத் தவறானது என்று நிலைநாட்டிய பலநடிகர்களுள் முன்னணியில் நிற்பவர் எம்.ஜி.ஆர் அவர்கள் என்றால் யாரும் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வர். ஒரு நடிகனால் நாட்டை ஆளவும் முடியும் என்று வாழ்ந்து காட்டியவரே எம்.ஜி.ஆர். அவர்கள். இன்று நடிப்புத் துறையைச் சேர்ந்த பலருக்கும் தம்மால் நாட்டை வழிநடத்தவும் முடியும் என்று கூறி அரசியலிற் பிரவேசிக்கும் துணிவைக் கொடுத்தவரும் இவரே.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த எம்.ஜி.ஆர் அவர்கள் அண்டை நாடான ஈழத்திற் தமிழர் பட்ட துன்பங்கண்டும் துடித்தார். தான் முதலமைச்சராக இருந்த காலத்திலும், முன்னும் பின்னும்ஈழத்தில் நடைபெற்ற தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்குத் தன்னாலான எல்லா உதவிகளையும் வழங்கினார்.ஈழத் தமிழ்மக்களின் போராட்ட நியாயத்தை உள்வாங்கி அதை நடத்திச் சென்ற தலைமைக்குத் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கினார். பதவி என்பது குறுகிய நோக்கங்களைக் கொண்டதாக இல்லாமல் அடுத்தவரையும் அரவணைக்கவும், ஆதரிக்கவும் பயன்படவேண்டும் என்று நம்பி அமரர் செயற்பட்டதை இன்றும் ஈழத்தமிழர் நெஞ்சுருகி நினைக்கின்றனர்.இதற்காகவேனும்ஈழத்தமிழர் அவருக்குக் கடமைப்பட்டவராக இருக்கவேண்டும் என்பது பலரது கருத்தாகும். ஈழவிடுதலைப் போராட்டம் உச்சம் பெற்றிருந்த காலத்தில், உதவுமென்று நம்பிய தமிழ்த் தலைமைகள் பாராமுகமாக இருந்தபோது 'இன்று எம்.ஜி.ஆர் இருந்திருந்தால்...' என்று எண்ணி எண்ணி ஏங்கியோர் பலரும் நம்மத்தியில் இருக்கத்தான் செய்தனர்.

எம்.ஜி.ஆர் அவர்கள் ஆற்றிய அரசியல், சமூக, கலைப் பணிகளின் காரணமாக இந்தியாவின் உயர்விருதான 'பாரதரத்னா' விருதையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் பல பல்கலைக் கழகங்களால் 'டாக்டர்'பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இத்தகைய ஒருவரைப் பொன்மனச் செம்மல் என்று உயர்த்திப் போற்றுவதிற் தப்பில்லையென்றே கூறலாம்.



சபா. அருள்சுப்பிரமணியம்.M.A.


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்