கனன்று எழுந்த உள்ளத் துயரினைக் காட்டும் பேரெயின் முறுவலாரின் கையறுநிலைப் பாடல்

பேராசிரியர் இரா.மோகன்


ம்பி நெடுஞ்செழியன் சங்க காலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னர்களுள் ஒருவன். அவனைப் பற்றிய விரிவான குறிப்புக்கள் எவையும் கிடைக்கவில்லை. எனினும் பேரெயின் முறுவலார் என்ற சங்கச் சான்றோர் பாடிய கையறுநிலைப் பாடலால் அவன் நிறைவாழ்வு வாழ்ந்தவன் என்றும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, நுகரத்தக்க எல்லா இன்பங்களையும் முறைப்படி நுகர்ந்து, செய்யத்தக்க அனைத்து நற்செயல்-களையும் குறைவில்லாமல் செய்து முடித்தவன் என்றும் அறிய முடிகின்றது. அவன் இறந்த பிறகு ஒரு சிலர் அவன் உடம்பை மண்ணில் புதைக்க வேண்டும் என்றனர்; வேறு சிலர் ஈமத் தீயால் சுடவேண்டும் என்றனர். இந்த நெருக்கடியான சூழலில் அங்கே இருந்த புலவர் பேரெயின் முறுவலார் அப்போது நம்பி நெடுஞ்செழியன் வாழ்ந்த முழுவாழ்வையும் நினைந்து பார்த்து, அவனுடைய சிறப்பான வாழ்வின் முடிவில் எல்லாம் நிறைவேறிய பிறகு இந்நிலை எய்தியதே என்று மனம் வருந்தினார்; தம் பெருந்துயரத்திற்கும் பேரவலத்திற்கும் இடையே ஒருவாறு ஆறுதல் அடைந்தவர் போல், “நடப்பவை எல்லாம் செவ்வனே நடந்து முடிந்தன: இனி என்ன செய்தாலும் என்ன? இத் தலைவனுடைய தலையை இனி, புதைப்பதாயினும் புதைக்க; சுடுவதாயினும் சுடுக. எந்த முடிவேனும் நேர்க. வாழ்க்கை சிறப்பாக முடிந்த பின்னே இனி எது செய்யினும் என்ன?” என்றார்.

“வளையல்கள் அணிந்த ஒரு மங்கையின் தோளைத் தழுவினான்; காவல் உடைய சோலையில் மலர்ந்த நறுமணம் மிகுந்த மலர்களைச் சூடினான்; குளிர்ந்த சந்தனம் பூசினான்; தன்னைப் பகைத்தவரைக் குடியோடு அழித்தான்; நண்பர்களைப் பெருமை பாராட்டி உயர்த்தினான்; வலிமை மிக்கவர் என்பதால் எவரிடமும் அவன் பணிந்து பேசவில்லை; மெலியவர் என்று எவரிடமும் தற்பெருமை பேசவில்லை; பிறரிடம் ஒன்றை அவன் இரந்ததும் இல்லை; தன்னிடம் இல்லை என இரந்தவர்க்கு மறுத்ததும் இல்லை. வேந்தர்களின் அவைக் களத்தில் உயர்ந்த புகழோடு விளங்கினான்; போர்க் களத்தில் தன்னை எதிர்த்து வரும் படையை முன்னே நின்று தடுத்தான்; புறமுதுகு காட்டி ஓடும் படையைத் தொடர்ந்து பின் செல்லாமல் நின்றான்; விரைந்து ஓடும் குதிரையைச் செலுத்தினான்; நெடிய தெருக்களில் தேர் நடத்தினான்; உயர்ந்த யானையின் மேல் இருந்து சென்றான்; இனிய கள்ளினைக் குடம் குடமாக வழங்கினான்; பாணர்கள் மகிழுமாறு அவர்கள் பசியைத் தீர்த்தான்; பசப்புச் சொற்களை ஒருபோதும் அவன் சொல்லி அறியான். இவ்வாறு, செய்யத்தக்க எல்லாவற்றையும் செவ்வனே செய்து முடித்தான். ஆகையால் இப்புகழாளன் தலையை மண்ணில் இட்டுப் புதைப்பினும் புதையுங்கள் அல்லது, நெருப்பினால் சுட்டு எரிப்பினும் எரியுங்கள். ஆன படி ஆகட்டும்!” என்னும் புலவரது ஆழ்ந்த இரங்கலைத் தன்னகத்தே கொண்ட புறநானூற்றுப் பாடல் வருமாறு;

“தொடிஉடைய தோள்மணந்தனன்;
கடிகாவில் பூச்சூடினன்;
தண்கமழும் சாந்துநீவினன்;
செற்றோரை வழிதபுத்தனன்;
நட்டோரை உயர்புகூறினன்;
வலியர்என வழிமொழியலன்;
மெலியர்என மீக்கூறலன்;
பிறரைத்தான் இரப்புஅறியலன்;
இரந்தோர்க்கு மறுப்புஅறியலன்;
வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;
வருபடை எதிர்தாங்கினன்;
பெயர்படை புறங்கண்டனன்;
கடும்பரிய மாக்கடவினன்;
நெடுந்தெருவில் தேர்வழங்கினன்;
ஓங்குஇயல களிறு ஊர்ந்தனன்;


ீஞ்செறிதசும்பு தொலைச்சினன்;
பாண்உவப்பப் பசிதீர்த்தனன்;
மயக்குடைய மொழிவிடுத்தனன்;
ஆங்குச், செய்ப எல்லாம் செய்தனன்; ஆதலின்,
இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ
படுவழிப் படுகஇப் புகழ்வெய்யோன் தலையே!”
(239)

பேரெயின் முறுவலாரின் உள்ளத்தில் நம்பி நெடுஞ்செழியன் வாழ்ந்த பெருவாழ்வின் பல பகுதிகளும் தோன்றித் தோன்றி துயர் விளைத்தன. அவர் தம் கண்ணெதிரே மண்ணில் இடுவதற்கோ தீயில் சுடுவதற்கோ இருந்த நம்பியின் உடம்பு கிடத்தப்பட்டிருந்தது. ஒரு பக்கம் அவனுடைய நிறைவாழ்வினை நெஞ்சில் நினைந்து பார்த்தும், மற்றொரு பக்கம் அவ்வளவும் செய்து முடித்த அவனது உடம்பு இப்போது கிடப்பதைக் கண்களால் கண்டும் நைந்து உருகினார் புலவர். பின்னர் அவர் தம் நினைவில் இருந்து நீங்காத அவனுடைய அரும்பெரும் பண்புகளையும் செயல்களையும் என்றென்றும் நிலைத்து நிற்பனவாக உணர்ந்து போற்றி, இன்னும் சற்று நேரத்தில் மறைந்து போக இருந்த அந்த உடம்பினைக் குறித்துக் கவலைப்படாதவர் ஆனார். பேராசிரியர் மு.வ. கூறுவது போல், “இவ்வாறு அவர் (பேரெயின் முறுவலார்) பெற்ற ஆறுதலுக்கு இடையே உள்ளத்தே இருந்த பெருந்துயர் நீறு பூத்த நெருப்புப் போன்றதாகும். கண்ணீர் அடங்கிய பிறகும் அடங்காமல் கனன்று எழுந்த உள்ளத் துயர் இது எனலாம் … மற்றவர்களின் இன்ப துன்பங்கள் குளத்தின் அலைகள் போன்றவை. புலவர்களின் இன்ப துன்பங்கள் கடலின் அலைகள் போன்றவை... மற்றவர்களின் உணர்ச்சியை விடப் புலவர்களின் உணச்சி வலியது; நுண்ணியது; ஆழம் மிக்கது” (புலவர் கண்ணீர், ப.
58).

பெருந்தலைவர் காமராசர் அடிக்கடி கூறும் ஒரு வாசகம் இது:

“இறந்த பின்னும் நீ வாழ நினைத்தால்
வாழும் போது பிறருக்கு நன்மை செய்!”


இவ் வாசகத்திற்கான ஓர் உயிருள்ள உதாரணமாக அமைந்ததே நம்பி நெடுஞ்செழியனின் நிறைவாழ்வு எனலாம்.


‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.


 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்