பாரதியாரின் முத்திரைப் பாடல்

பேராசிரியர் இரா.மோகன்


'நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,
இமைப்பொழுதும் சோராது இருத்தல்'


என்பது கவியரசர் பாரதியார் 'விநாயகர் நான்மணி மாலை'யில் வெளியிடும் வாக்குமூலம். எட்டயபுரம் மன்னர் வெங்கடேசு ரெட்டப்ப பூபதிக்கு எழுதிய ஓலைத் தூக்கில் அவர்,

'புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
       தமிழ் மொழியைப் புகழில் ஏற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும்
       வசை என்னால் கழிந்ததன்றே'


எனத் தன்னம்பிக்கை ததும்பி நிற்கும் குரலில் அறுதியிட்டு உரைப்பார். மேலும், அவர் தம் வசன கவிதை ஒன்றில்,

'நமது பாட்டு மின்னலுடைத் தாகுக
நமது வாக்கு மின்போல அடித்திடுக'

எனத் தமது பாடலுக்கும் வாக்கிற்கும் உவமையாக மின்னலை எடுத்தாளுவார். பிறிதோர் இடத்தில் 'தீயே நிகர்த்து ஒளி வீசுந் தமிழ்க் கவி' என்று தம் கவிதையைத் தீயுடன் ஒப்பிட்டுக் கூறுவார் அவர். இங்ஙனம் மின்னலைப் போல் அடித்திடும் - தீயைப் போல் ஒளி வீசும் - வகையில் பாரதியார் படைத்துள்ள பாடல்கள் பலவாகும். அவற்றுள் சீரிய கவிதைக் கூறுகளாலும் ஆளுமைப் பண்புகளாலும் சிறந்து விளங்குவது 'நல்லதோர் வீணை செய்தே' எனத் தொடங்கும் கவிஞரின் தோத்திரப் பாடல் ஆகும். 'கேட்பன' என்னும் தலைப்பில் அமைந்த அம் முத்திரைப் பாடலின் அமைப்பினையும் அழகினையும் இங்கே காணலாம்.

'நல்லதோர் வீணை செய்தே...'

'ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்று திருஞானசம்பந்தர் பாடியது போல், பாரதியாரும் தம் பாடலை 'நல்லது' என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கி இருப்பது ஒரு சிறப்புளூ நயம். இன்னொன்று: இலக்கண விதிப்படி உரைநடையில் எழுதினால் 'நல்லதொரு வீணை' என்று எழுதுதல் வேண்டும்ளூ ஆனால், பாரதியாரோ கவிதை மொழியில் இலக்கண மரபினை மீறி 'நல்லதோர் வீணை' என்று எழுதுகின்றார். பேச்சுத் தமிழுக்கு – மக்கள் தமிழுக்கு – தலைவணக்கம் செய்வதுதான் பாரதியாரின் தனிப்பாணி, இதனையே 'நல்லதோர் வீணை' பாடலிலும் நயமுறப் பின்பற்றியுள்ளார் அவர்.

'நல்லதோர் வீணை' – அழகிய உருவகம்ளூ ஆழமான குறியீடுளூ அறிவு, உள்ளம், உடல், உயிர் என்னும் நான்கும் நலமுற அமைந்த – பாங்குடன் பொருந்திய – உயர்மனிதனைச் சுட்டுவது.

யாராவது நல்லதோர் வீணை செய்து, அதை நலமுற மீட்டி மகிழாமல் - மற்றவரை மகிழச் செய்யாமல் - நலங்கெடப் புழுதியில் எறிவது உண்டோ? என வினவுகின்றார் பாரதியார்.

'சொல்லடி சிவசக்தி!'


உயிர் நண்பனை 'அடா' என்று விளித்து மகிழ்வது போல், 'சொல்லடி சிவசக்தி' என்று சிவசக்தியை உரிமையோடும் உள்ளார்ந்த அன்போடும் விளித்து மகிழ்கின்றார் - மனம் மிக நெகிழ்கின்றார் - பாரதியார். இப்படி 'அடி' என்று விளித்துப் பேசுவதில் பாரதியாருக்கு விருப்பம் மிகுதி. 'சொல்லடி சிவசக்தி' என இரண்டு முறை இப்பாடலில் சக்தியை விளித்துப் பேசியுள்ளார் அவர்.

'சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!'


எப்போதும் அறிவுக்கு முதன்மை தருபவர் பாரதியார். சுடர் மிகு அறிவுடன் சிவசக்தி தம்மைப் படைத்து விட்டதில் பாரதியாருக்கு மிகுந்த பெருமைளூ பெருமிதம். ஆனால் இன்றைய சூழலில் உலகியலில் வெற்றி பெற வேண்டுமானால், வெறும் அறிவு மட்டும் போதாதே? வல்லமையும் வேண்டுமே?

'வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!'


ஒரு மனிதன் நல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாதுளூ அவனுக்கு வல்லவனாகவும் வாழத் தெரிய வேண்டும். பாரதியார் சிவசக்தியிடம் 'வல்லமை தாராயோ?' என்றே கேட்கிறார். அவர் கேட்பது, தனிப்பட்ட முறையில் தாம் மட்டும் நன்றாக வாழ்வதற்காக அன்றுளூ 'இந்த மாநிலம் முழுவதும் பயனுற வாழ்வதற்கே' தமக்கு வல்லமை தருமாறு சிவசக்தியிடம் வேண்டுகின்றார் அவர்.

'பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாலித்திட வேண்டும்' என்ற உயர் எண்ணமே – விழைவே – பாரதியாரின் வாழ்வு, வாக்கு இரண்டையும் எப்போதும் இயக்கும் - இணைக்கும் - அடிநாதமாக, உயிர்ப் பண்பாக என்றென்றும் விளங்கியது.

'நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?'


மண்ணில் நல்ல வண்ணம் வாழ்பவனே – வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனே – மனிதன்ளூ மற்றவன் எல்லாம் 'மினிதன்' என்றே அழைக்கத் தகுந்தவன் ஆவான். இத்தகைய 'மினிதர்களுக்கு' இடையே சுடர்மிகு அறிவு கொண்ட மனிதனாகப் பராசக்தி தம்மைப் படைத்து விட்டதில் பாரதியாருக்கு அளவிலா மகிழ்ச்சிளூ மன நிறைவு. ஆனாலும், கூடவே ஒரு சிறு ஐயம். எனவே, 'என்ன நினைத்திருக்கிறாய் உன் மனத்தில்? சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்ட என்னை, நிலச்சுமை என வாழ்ந்திடப் புரிகுவையோ?' என்று கேட்கிறார் பாரதியார்.

'உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல்'

உடலைப் பொறுத்த வரையில் பாரதியார் இப்பாடலின் முன்வைத்துள்ள கருத்து புதுவது. உடல் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? எப்போதும் உள்ளம் வேண்டிய படி செல்லும் - இயங்கும் - நிலையில் உடல் இருக்க வேண்டும். இதற்குப் பாரதியார் கையாளும் உவமை அருமையானது. 'விசையுறு பந்தினைப் போல்' உடல், உள்ளம் வேண்டியபடி கேட்க வேண்டுமாம்ளூ உள்ளம் விரும்பியபடி நடக்க வேண்டுமாம்.

'நசையறு மனம்'

'மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்' என அறத்திற்கு வரைவிலக்கணம் வகுப்பார் வான்புகழ் வள்ளுவர். தொடர்ந்து அடுத்த குறட்பாவில், 'அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கு' என மனத்துக்கண் படிந்து கிடக்கும் மாசுகள் எவை என அடையாளம் காட்டுவார் அவர். இம்மன மாசுகள் நான்கனுள் அவாவினை – ஆசையினை – மட்டும் தனியே பிரித்து எடுத்து 'நசையறு மனம்' வேண்டும் என்று சிவசக்தியிடம் கேட்கின்றார் பாரதியார்.

'நித்தம் நவம் எனச் சுடர் தரும் உயிர்'


'நவம்', 'சுடர்' என்னும் இரு சொற்களின் மீதும் பாரதியாருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அவர் சிவசக்தியிடம் கேட்பது 'நித்தம் - நவமென – சுடர் தரும்' உயிரை.

'தசையினைத் தீச்சுடினும் சிவசக்தியைப் பாடும் நல்லகம்'


அடுத்து, பாரதியார் சிவசக்தியிடம் வேண்டுவது 'நல்லக'த்தை. அதுவும் எப்படிப்பட்ட 'நல்லகம்' தெரியுமா? 'தசையினைத் தீச் சுடினும் - 'சிவசக்தியைப் பாடும் நல்லகம்' வேண்டுமாம். சிவசக்தியைப் பாடுவதில் இருந்து சிறிதளவும் தவறிவிடக் கூடாது எனக் கருதுகின்றார் அவர்.

'அசைவறு மதி'


நிறைவாக, பாரதியார் சிவசக்தியிடம் கேட்பது மதியைளூ 'அசைவறு மதி'யைளூ சலனம் இல்லாத – சஞ்சலத்திற்கு இடம் தராத – 'மதி'யை.

'இவை அருள்வதில் உனக்கு ஏதுந் தடையுளதோ?'


பாரதியார் தமக்குச் சூட்டிக் கொண்ட பல்வேறு புனைபெயர்களுள் ஒன்று 'சக்திதாசன்' என்பது. சக்தியிடம் ஏதேனும் கேட்கும் போது – வரம் வேண்டும் போது – அவர் 'தாச'னாகவே மாறிவிடுவார்ளூ சுந்தரர் சிவபெருமானிடம் தோழமை நெறியில் நின்று உரிமையோடு பேசுவது போல், பாரதியார் சிவசக்தியிடம் உரிமையோடு பேசுவார்ளூ உருக்கமான குரலில் உணர்ச்சி ததும்பக் கேட்பார். 'நான் உன்னிடம் சிலவற்றைக் கேட்டுள்ளேன்ளூ இவற்றை எனக்கு அருள்வதில் உனக்கு எதுவும் தடையுளதோ?' - இக் கேள்வியில் எத்தனைக் கசிவும் கனிவும் குழைவும் ததும்பி நிற்கின்றன பாருங்கள்!

'எல்லாக் குற்றமும் தீர்ந்த பாட்டு'


யாப்பிலக்கணத்தில் ஒரு பாட்டை 'எல்லாக் குற்றமும் தீர்ந்த பாட்டு' என்று கூறுவார்கள். அது போல 'நல்லதோர் வீணை செய்தே' என்ற இப்பாடல் எல்லாக் கவிதைக் கூறுகளும் கவிஞரின் ஆளுமைப் பண்புகளும் பாங்குடன் பொருந்தியுள்ள ஒரு நிறைவுப் பாடல். பாரதியாரின் முத்திரைப் பாடலான இது, ஒரு மனிதன் நிறைவாழ்வு – முழு வாழ்வு – வாழ வழிகாட்டும் திறமும் பொருந்தியதாகும்.

'எல்லாவற்றிற்கும் மேலாக, பாரதியாரின் தமிழில் ஓர் ஒளி எங்கும் பரந்து விளங்கக் காண்கிண்றோம்... தெய்விக சக்தியொன்று திடீரென்று கவிஞரது ஆத்மாவிற்குள் புகுந்து முழுதும் இடங்கொண்டு, பரவசப்படுத்தி, ஒளிப்பிழம்பு ஆக்குகிறதுளூ இந்த ஒளியிலேயே ஆனந்தக் கனவுகள் நனவுகளாக முன்னிலைப்-படுத்துகின்றன. கனவுகள் தாமாகவே ஒளி மிகுந்த சொல்லுருப் பெற்று, கற்பவரது ஆத்மாவிலும் ஒளியைப் பரப்பி உண்மை காணச் செய்கின்றன' என்னும் பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் மதிப்பீடு பாரதியாரின் இப்பாடலைப் பொறுத்த வரையில் நூற்றுக்கு நூறு உண்மைளூ வெறும் புகழ்ச்சி இல்லை.

 


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
 

 


 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்