நேசிக்கவும் யோசிக்கவும் வைக்கும் கவிஞர் பிருந்தா சாரதி

பேராசிரியர் இரா.மோகன்

 

விதைகள் எழுதி வெளியிடாவிட்டாலும் என் பேச்சும் மூச்சும் கவிதை’ (‘சொல்லாத வார்த்தைகள்…’, ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக்கூடம், ப.16) என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ள பிருந்தா சாரதியின் இயற்பெயர் நா.சுப்பிரமணியன் (1965). அவர் கல்லூரியில் படித்தது இயற்பியல் என்றாலும், அவருக்கு மிகவும் பிடித்தது, அவரைச் சிக்கெனப் பற்றிக் கொண்டது கவிதையியல். தமிழ் கூறு நல்லுலகில் கபிலரும் பரணரும் போல, திரை உலகில் லிங்குசாமியும் பிருந்தா சாரதியும். ‘நினைவில் மறையாத எழுத்தாளர்கள் எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, தேனுகா ஆகியோரின் அன்புக்கு’ எனத் தமது ‘ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக்கூடம்’ தொகுப்பில் பிருந்தா சாரதி எழுதியுள்ள காணிக்கைக் குறிப்பு, அவரது படைப்பாளுமையைக் கோடிட்டுக் காட்டுவதாகும். கம்பன் கழகம் தமிழ்நாடு அளவில் நடத்திய அனைத்துக் கல்லூரிக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு, ‘கல்கி’ பொன் விழாக் கவிதைப் போட்டியில் பரிசு, ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது (2016) என்றாற் போல் பிருந்தா சாரதி தம் எழுத்துத் திறத்திற்காகப் பெற்றுள்ள பரிசுகளும் விருதுகளும் பலவாகும். கவிப்பேரரசு வைரமுத்துவால் அடையாளம் காணப்பெற்ற இவர், திரைப்படத் துறையிலும் தடம் பதித்தவர்; பல்வேறு வெற்றிப் படங்களுக்கு உதவி மற்றும் இணைஇயக்குநராகவும், இயக்குநராகவும், உரையாடல் ஆசிரியராகவும் பணியாற்றி இருப்பவர். இனி, அவரது படைப்புலகின் நோக்கும் போக்கும் குறித்துச் சுருங்கக் காணலாம்.

I. முதல் கவிதைத் தொகுப்பு

பிருந்தா சாரதியின் முதல் கவிதைத் தொகுப்பான ‘நடைவண்டி’ 1992-ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. ‘என் உறக்கத்திற்காக அம்மா பாடிய தாலாட்டு-களுக்கும், என் விழிப்பிற்காக அப்பா விடுகிற ‘பாட்டு’களுக்கும்’ இத் தொகுப்பு காணிக்கையாக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

படிப்பவர் நெஞ்ச வயலில் நம்பிக்கை விதையை ஆழமாக ஊன்றும் விதத்தில் பிருந்தா சாரதி படைத்துள்ள குறுங்கவிதை ஒன்று:

“அலாவுதீனின் அற்புத விளக்கே / அணைந்து போனாலும்
திருப்பிக் கொளுத்த / ஒரு தீப்பெட்டி
அதன் பெயர்- / நம்பிக்கை.”     
                 (ப.13)

ஒரு கவிஞர் என்ற முறையில் பிருந்தா சாரதி இன்றைய இளைய பாரதத்திற்கு உணர்த்த விரும்பும் செய்தி ஒன்று உண்டு: ‘வாழ்வில் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ இருக்கிறது’ (ப.9). கற்றுக் கொள்ளும் மனம் இருந்தால் கடிகார முட்களிடம் இருந்தும் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம்; ‘நாமோ மணி பார்க்கும் போது மட்டுமே கடிகாரத்தைக் கவனிக்கிறோம்’ (ப.10). சதுரங்க விளையாட்டில் இருந்தும் கற்றுக் கொள்ளலாம். ‘உனக்கு இருக்கும் / ஒரே சுதந்திரம் / உன் எதிரியுடன் / கை குலுக்குவது மாத்திரமே’ (ப.4) என நடைமுறை உண்மையை உணர்த்தி முடிவடைகிறது சதுரங்கம் பற்றிய பிருந்தா சாரதியின் கவிதை.

எதிர்காலத்தின் நம்பிக்கை – இலட்சியங்களின் கருப்பை – வாழ்வின் சாரம் கனவு. இத்தகைய கனவு ஒருவரிடம் இருந்தால் போதும், அடைய விரும்பும் இலக்கினை அம்பாகத் தொட்டு விடலாம். இன்னும் ஒரு படி மேலே சென்று,

“கனவற்ற வாழ்க்கை வாழ / கடவுளாலேயே முடியாது
அவரே / கல்கி அவதாரத்தில்
கவனித்துக் கொள்ளலாம் / என்ற கனவோடு தான்
நம் அக்கிரமங்களைச் சகித்துக் கொண்டிருக்கிறார்”   
   (பக்.12-13)

என்கிறார் பிருந்தா சாரதி.

மெல்லிய நகைச்சுவையோடு எள்ளுவது என்பது பிருந்தா சாரதிக்குக் கை வந்த கலையாக உள்ளது. இதற்குக் கட்டியம் கூறும் இரு சான்றுகள் வருமாறு:

“நல்ல விலை கிடைத்தால்
நீதி தேவதை விற்றுவிடுவாள்
தன் கைத் தராசை”     
                                             (ப.52)

“தலைநகரை மாற்றிவிடலாம்
தஞ்சாவூருக்கு
தேசமெங்கும் தலையாட்டி பொம்மைகள்”      
    (ப.55)

II. காதலின் செவ்வி தலைப்பட்டுள்ள கவிதைகள்

பிருந்தா சாரதி புனைந்துள்ள 100 காதல் கவிதைகளின் தொகுப்பு ‘பறவையின் நிழல்’ (2015). ‘காதலால் கசியும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும்’ இத் தொகுப்பு காணிக்கையாக்கப் பெற்றுள்ளது. கவிஞர் அறிவுமதி, இயக்குநர் ராஜு முருகன், கவிஞர் ஜெயபாஸ்கரன் ஆகியோரது அணிந்துரைகள் நூலுக்கு வண்ணமும் வனப்பும் சேர்ப்பனவாக அமைந்துள்ளன. ‘நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆரளவின்றே’ (குறுந்தொகை, 3) என்ற படி, காதலின் பெருமை, உயர்வு, ஆழம் என்னும் முப்பரிமாணங்களையும் இத் தொகுப்பில் பிருந்தா சாரதி அழகிய சொல்லோவியங்கள் ஆக்கியுள்ளார்.

“மண்ணில் விழுந்த விதை / மரமாவது போல
என் கண்ணில் விழுந்த நீ / காதலாகி விட்டாய்”
(பறவையின் நிழல், ப.31)

என்னும் கவிதை உவமை அழகோடு காதலின் பிறப்பைப் பதிவு செய்துள்ளது.

மண்ணில் நடை பயின்றாலும் விண்ணில் பறப்பது தானே காதலுக்கு வாடிக்கை? ‘காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம், காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே’ என்று தானே பாட்டுக்கொரு புலவர் பாரதியாரும் பாடி இருக்கிறார்?

“நீ வரும்வரை தான்
அது பேருந்து
பிறகு விமானம்”      
            (ப.36)

என்னும் பிருந்தா சாரதியின் கவிதை வழிவழியாகப் பாடப் பெற்று வரும் காதல் புனைவின் தொடர்ச்சியே ஆகும்.

உண்மைக் காதலில் மெய்யுறு புணர்ச்சியை விட உள்ளப் புணர்ச்சிக்கே ஆற்றல் மிகுதி. சங்கப் புலவரும் ‘அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ (குறுந்தொகை, 40) என்றே சிறப்பித்துப் பாடுவார்.

“வீட்டை ஒட்டடை அடித்து
சுவர்களுக்கு வண்ணம் பூசியது போல்
ஆகிவிடுகிறது மனம்

உன்னைச் சந்தித்துத் / திரும்பும் போதெல்லாம்”
(ப.53)

என மொழிகிறான் பிருந்தா சாரதி படைக்கும் காதலன் ஒருவன்.

சங்க இலக்கியம் கூறும் ‘தெய்வப் புணர்ச்சி’ பிருந்தா சாரதியின் கைவண்ணத்தில் ஐந்தே சொற்களில் பின்வரும் அழகிய புதுக்கோலம் கொண்டுள்ளது:

“கடவுள் எனக்கு எழுதிய
கடிதம் நீ.”   
              (ப.71)

காதல் ஒரு விந்தையான உலகம். ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்பது போல் அதில் காதலியின் கடைக்கண் பார்வை, புன்முறுவல், தீண்டல், தழுவல், ஒரு சொட்டுக் கண்ணீர் ஆகியவை சிறப்பு மிக்கவை.

“என் துயரங்களுக்காக / நீ சிந்திய ஒரு சொட்டுக் கண்ணீரில்
என் போன ஜென்மத்து / மனச் சுமைகளும்
கரைந்து போயின.
விடைபெற்ற போது நீ தந்த / அணைப்பின் வெப்பத்தில்
இன்னும் சில
ஜென்மங்களைக் கடப்பதற்கான
எரிபொருள் கிடைத்தது.”         
      (ப.85)

‘ஏழேழு ஜென்ப பந்தம்’ என்று காதலைச் சுட்டுவது இதனால்தான் போலும்! ‘கல – கரை – காணாமல் போ!’ எனக் காதலுக்கு நல்லதொரு வாய்பாட்டினை வகுப்பார் கவிப்பேரரசு வைரமுத்து. மனச் சுமைகளை அழித்து, மனத்திற்கு உந்துசக்தியைத் தரும் ‘எரிபொருளாக’க் காதலைக் காண்கிறார் பிருந்தா சாரதி.

‘அன்பே! நீ இங்கு நலம், நான் அங்கு நலமா?’ என்பதன் மாற்று வடிவமாகப் பிருந்தா சாரதி படைத்திருக்கும் குறுங்கவிதை இது:

“பொறுக்க முடியவில்லை உன்னை
அனுப்பி வையடி என்னை.”  
        (ப.98)

“ காலையும் பகலும் கையறு மாலையும்
  ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப்
  பொழுதுஇடை தெரியின் பொய்யே காமம்”       (32)

என்னும் அள்ளூர் நன்முல்லையாரின் குறுந்தொகைப் பாடலின் கருத்தினை வழிமொழிவது போல்,

“குழந்தைகள் உலகிலும் / காதலர்கள் உலகிலும் இல்லை
இறந்த காலம் / நிகழ்காலம் / எதிர்காலம் என
மூன்று காலம்”  
                               (ப.128)

என்னும் கவிதையைப் பிருந்தா சாரதி படைத்திருப்பது நோக்கத்தக்கது.

முத்தாய்ப்பாக,

“வானில் பறந்தாலும் / பறவையின் நிழல் மண்ணில் தான்.
நிழலைப் பின்தொடர்கிறேன் நான்
எக் கணத்திலும் பறவை / என் தோளில் வந்து அமரும்

என்ற நம்பிக்கையோடு”      
          (ப.130)

என்ற பிருந்தா சாரதியின் காதல் கவிதையை நுணுகி ஆராய்வார்க்குக் காதலின் மென்மையும் மேன்மையும், உண்மையும் உறுதிப்பாடும் நன்கு விளங்கும்.

கவிஞர் ஜெயபாஸ்கரன் இந் நூலுக்கு எழுதிய அணிந்துரையில் குறிப்பிடுவது போல், “ஆண் பெண் காதலின் அக உறவு சார்ந்த நினைவுகளின் உன்னதங்களாக இந்நூலின் அனைத்துக் கவிதைகளும் விளங்குகின்றன” (‘நெஞ்சில் பதியும் நிழல்’, பறவையின் நிழல்) எனலாம்.
 

III. பன்முகப் பரிமாணங்களைக் காட்டும் கவிதைத் தொகுதி

பிருந்தா சாரதியின் மூன்றாவது கவிதைத் தொகுதி ‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்’ (2016). முதல் தொகுதி வெளிவந்து 24 ஆண்டுக் கால இடைவெளிக்குப் பிறகு முகம்காட்டி இருக்கும் இந் நூல், பிருந்தா சாரதியின் கவிதை உலகின் பன்முகப் பரிமாணங்களைப் பாங்குற வெளிப்படுத்தும் வகையில் விளங்குவது குறிப்பிடத்தக்கது. ‘வானவில் விற்பவ’னில் தொடங்கி ‘சாதனை’யில் முடிவடையும் இத் தொகுப்பில் 73 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

“உயிரைக் கொடுத்தாவது
உன் பிரார்த்தனையை / நிறைவேற்றுவேன்
நந்தி காதில் சொல்லும் / ரகசியத்தை
என் காதில் சொல்” 
             (ப.37)

எனப் பிருந்தா சாரதி பாடும் ‘தல புராணம்’ தனித்துவம் வாய்ந்தது.

“வெட்டப்பட்ட ஆட்டுத்தலை / வெறித்துப் பார்க்கிறது
தோலுரித்துத்  / தொங்கவிடப்பட்டிருக்கும்
தன் உடலை” 
                      (ப.86)

- ‘அந்நியமாதல்’ என்னும் தலைப்பில் அமைந்த இக் கவிதை, இயக்குநர் மற்றும் கவிஞர் லிங்குசாமியின் உள்ளத்தைப் பெரிதும் ஈர்த்த ஒன்று.

“கட்டிலில் கிடக்கிறேன் / வினைப் பயனைச் சுமந்த படி
வினையெச்சமாய் / பழைய நினைவுகள்”  
          (ப.165)

இலக்கணம் கொண்டு இலக்கியம் படைக்கும் பிருந்தா சாரதியின் முயற்சி போற்றத்தக்கது (மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்வியில் பயின்று தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவராக்கும் பிருந்தா சாரதி!)

கொசு மட்டையும் சொல்லாதோ கவி?

‘வல்லவனுக்குச் சிறு புல்லும் ஆயுதம்’; வித்தகக் கவிஞனுக்கு மின்சாரக் கொசு மட்டையும் கவிதைப் பொருள். பிருந்தா சாரதியின் பார்வையில் ‘மின்சாரக் கொசுமட்டை’ தன்னை வாங்கிய ஒருவரை வேட்டைக்காரனாக மாற்றும் வல்லமை படைத்தது. அது,

“உள்ளுக்குள் புதைந்து கிடைக்கும்
ஆதி மனிதனின் / அடங்காத வேட்டை வெறிக்குத்
தீனி போடும் / நவீன ஆயுதம்”  
    (ப.27)

‘எளிய மனிதர்கள் கையிலும் / தண்டிக்கும் அதிகாரம் இருப்பதாய் / எண்ண வைக்கிறது அது.’ மேலும், இறகுப் பந்து ஆடுவது போல் விளையாட்டாகக் கொத்துக் கொத்தாய்க் கொலைகள் நடந்து முடிந்த பிறகும் – இவ்வளவு கொலைகளைச் செய்த பிறகும் – எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இன்றி மனிதன் எப்படி உறுத்தல் எதுவும் இன்றி வாழ முடியும் என்பதையும் தெளிவுபடுத்தி நிற்கின்றது அது. கவிஞரே கூறுவது போல் ‘இம் மட்டையை வடிவமைத்தவன் ஒரு மனோதத்துவ நிபுணன்’ ஆகத் தான் இருக்க வேண்டும். நம் இரத்தத்தைக் குடிக்கும் எத்தனையோ பேரின் ஒட்டுமொத்த வடிவமாகவும் ஒரே குறியீடாகவும் கொசுக்களைக் காணும் கவிஞர், ‘சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பித்துப் பிழைக்கும் மோசடிப் பேர்வழிகளுக்குச் சற்றும் சளைத்தவையல்ல இந்தக் கொசுக்கள்’ எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இன்றைய சமூகத்தில் நிலவிவரும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் அநீதிகளையும் மின்சாரக் கொசு மட்டையின் வடிவத்தோடும் செயற்பாட்டோடும் ஒப்பிட்டுக் காட்டியவாறே பிருந்தா சாரதி இக் கவிதையை நகர்த்திச் சென்றிருக்கும் பாங்கு பாராட்டத்தக்கது.

முத்திரைக் கவிதை

‘கடவுளைச் சந்திக்கச் சென்றிருந்த போது’ பிருந்தா சாரதியின் கவிதைத் திறத்தினைப் பறைசாற்றும் முத்திரைக் கவிதை. கடவுளைச் சந்திக்கச் சென்றிருந்த போது கவிஞரைப் போலவே பலர் அங்கு வந்து நெடுநேரம் காத்திருந்தார்களாம். பலர் பொறுமை இழந்து கடிகாரத்தை மீண்டும் மீண்டும் பார்த்தபடி இருந்தார்களாம். அடுத்தடுத்துப் பலர் வந்தபடி இருந்ததால் நெரிசல் ஆகிக் கொண்டிருந்ததாம். புழுக்கம் வேறு வதைத்ததாம். வந்தவர்கள் ஒவ்வொருவரும் வி.ஐ.பி. என்று தங்களைத் தாங்களே கூறிக் கொண்டு முன் வரிசைக்கு முன்னேறும் முனைப்பில் இருந்தனராம். வரிசையில் நிற்கச் சொல்லி அங்கே அதிகாரம் செய்து கொண்டிருந்தவர் கடவுளை விடவும் அதிகாரம் படைத்தவராய் இருந்தாராம். கூடி இருந்தவர்கள் கடவுளுக்குப் பணிவதை விடவும் அதிகப் பணிவை அவரிடம் காட்டிக் கொண்டிருந்தார்களாம். ஆண்கள், பெண்கள் என இருவேறு வரிசை திடீரெனப் பிரிக்கப்பட்டதால் கணவன் மனைவி, தாய் தந்தை, சகோதர சகோதரிகள், மகன் மகள் எல்லோரும் பிரிக்கப்பட வேண்டிய அவசியம் உண்டானதாம். ‘இது தேவையா?’ என்று கவிஞருக்குள் ஒரு குரல் எழுந்தாலும், அங்கு அதைக் கேட்பதற்குத் தான் யாரும் இல்லையாம். வரிசை இரண்டாகப் பிரிந்ததாம். ஆண்கள் மட்டும் நிற்கும் வரிசை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாய் இல்லாததோடு, பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்று அது கன்னத்தில் அறைந்து சொன்னதாம். சிறிது நேரம் கழிந்ததும் உரசாமல் நிற்கும்படி ஒருவர் இன்னொருவரிடம் கூற, அங்கே இலேசான வன்மம் பிறந்ததாம். பெண்கள் வரிசையில் இருந்து அப்போது பெரும் கூச்சல் ஒன்று திடீரென்று எழுந்ததாம். அங்கே ஒருத்திக்குச் சாமி வந்துவிட்டதாம். கடவுளைப் பார்க்க வந்தவர்கள் அவள் காலில் விழுந்து கொண்டிருந்தார்களாம். இங்கே ஒருவர் அவள் தன் மனைவிதான் என்றும், கடவுளைப் பார்க்க வந்ததே அவளுக்காகத்தான் என்றும், அவர் இவள் மீது வருவதால் அவளுடன் வாழ முடியாமல் போகிறது என்றும் அலுப்புடன் பொருமினாராம். டீ, பிஸ்கெட் வரவழைத்து, கடவுளைக் காண வந்ததைக் கண்காட்சியைப் போல் ஆக்கிக் கொண்டிருந்தார்களாம். இங்ஙனம் வளர்ந்து செல்லும் கவிதை கடைசியில் இப்படி முடிகிறது:

“நெடுநேரக் காத்திருப்புக்குப் பிறகு
கடவுளை நாளைதான் பார்க்க முடியும்
என அறிவிப்பு வந்தது
சலசலப்புடன் கலையத் தொடங்கினோம்
கூட்டத்தில் சிறுவன் ஒருவன் / கேட்டான்
நாளை என்றால் / நம்முடைய நாளையா
கடவுளின் நாளையா என்று”  
       (பக்.82-84)

கவிதையின் முடிவில் சிறுவன் வெடிப்புறக் கேட்கும் கேள்வி தெறிப்பானது: ‘நாளை என்றால் – நம்முடைய நாளையா? கடவுளின் நாளையா?’ ‘நாளை’ என்ற சொல்லை இக் கவிதையில் பிருந்தா சாரதி கையாண்டிருக்கும் விதம் நனி நன்று. புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்ற சிறுகதையையும், கண்ணதாசனின் ‘கடவுள் ஒருநாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்’ என்ற திரைஇசைப் பாடலையும் நினைவு படுத்தும் அற்புதமான கவிதை இது:

வாமனக் கவிதைகள் நல்கிடும் விசுவரூப தரிசனம்

‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்’ தொகுப்பின் இடையிடையே இடம் பெற்றிருக்கும் குறுங்கவிதைகள் வடிவால் சிறியனவாக இருந்தாலும், வீச்சால் ஒரு கணத்தில் விசுவரூப தரிசனத்தை நல்கிடும் வல்லமை படைத்தனவாக விளங்குகின்றன. பதச்சோறு ஒன்று:

“அற்புதங்கள் நிகழ்வது / கணங்களில்
காத்திருக்க வேண்டும் / யுகங்களில்”  
                  (ப.59)

வாழ்விலும் வரலாற்றிலும் அற்புதங்கள் நிகழ்வது கணங்களில் என்றாலும், அவை நிகழ்வதற்குக் காத்திருக்க வேண்டுவது யுகக் கணக்கில் என்பதே உண்மையிலும் உண்மை!

‘வேடிக்கை மனிதனாக வீழ்ந்து விடாமல், சாதனை மனிதனாக வாழ்வில் உயர்ந்து காட்டு’ என்பதைச் சொல்லாமல் சொல்லும் குறுங்கவிதை இது:

“என்ன சாதித்தாய் நீ? / எனும் கேள்வியின் முன்
மௌனம் சாதிக்கிறேன் / நான்” 
               (ப.185)

இங்கே மௌனம் சம்மத்திற்கான அறிகுறி அன்று; சாதிக்கத் தூண்டுவதற்கான சிறுபொறி!

விளைநிலைங்கள் விலை நிலங்கள் கி வரும் கொடுமைக்கான கவிஞரின் எதிர்க்குரல் இக் கவிதை:

“காட்டை அழித்து / நாடு சமைத்ததை
நாகரிகம் என்று சொன்ன பாவம் தான்
இன்று வயல்களை அழித்து / வீடு கட்ட வைக்கிறது”  
  (ப.102)

இனி வகுப்பறையில் ‘காடு கொன்று நாடு ஆக்கி’ எனப் பாடம் நடத்தும் எந்தத் தமிழாசிரியருக்கும் பிருந்தா சாரதியின் இந் ‘நெம்புகோல் கவிதை’ நினைவுக்கு வராமல் போகாது.

“பிருந்தா சாரதியின் இந்த ‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்’ தொகுப்பின் கவிதைகள் அனைத்தும் பூடகமின்றித் தெளிந்த மொழியில் பேசுகின்றன… தெளிந்த மொழி, குளிர்ந்த சொற்கள், செறிந்த சிந்தனை, வாசகனைக் குழப்பாத துல்லியம் எல்லாம் கூடி பிருந்தா சாரதி கவிதைகளை நேசிக்க வைக்கின்றன. யார் இந்த பிருந்தா சாரதி? யோசிக்க வைக்கின்றன” (‘அற்புதங்கள் கணங்களில் காத்திருப்பு யுகங்களில்’, ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம், பக்.10; 12) என்னும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாராட்டு உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.

IV. பெருமிதத்துக்கு உரிய பரிசோதனை முயற்சி

பிருந்தா சாரதியின் ‘எண்ணும் எழுத்தும்’ (2017) தொகுப்பில் இடம்- பெற்றுள்ள கவிதைகள் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களை மையமிட்டு, அவற்றோடு பூஜ்யம் மற்றும் எண்ணிலி ஆகியனவற்றையும் சேர்த்துப் பாடுபொருள்களாக அமையப் பெற்றுள்ளன. அனுபவம், உணர்வு, சிந்தனை, தத்துவம், கற்பனை, காதல் ஆகியனவற்றின் கூட்டுக் களியாக இக் கவிதைகள் படைக்கப் பெற்றிருப்பது சிறப்பு. கவிஞர் விக்ரமாதித்யன் ஆய்வுரையில் குறிப்பிடுவது போல், ‘இது ஒரு சோதனை முயற்சி; எந்த ஒரு பரீட்சார்த்தமும் வெற்றி பெற்றால் கொண்டாட்டத்திற்கு உரியது; புதிதாகச் செய்து பார்ப்பதே பெருமைப்படுத்தத் தக்கதுதான்.’

‘எண்ணும் எழுத்தும்’ தொகுப்பு பிருந்தா சாரதியின் முன்னைய கவிதைத் தொகுப்புக்களில் இருந்து மாறுபட்டுள்ளது. இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுவது போல் ‘எண்களை ஆராயத் துவங்கி, தத்துவத்தில் சாய்மானம் கொண்டு, வாழ்க்கையை அணுகி’ நிற்பதைக் காண்கிறோம். இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க கவிதை நறுக்குகள் சில:

            1.   ஒன்று      : ஒன்றை இரண்டாகப் பிரித்ததே
                                   
இரண்டும் ஒன்றாவதற்குத் தான்…
                                    சக்தி சிவம் இரண்டும் / ஒன்றென உணர்க.  
        (ப.19)

            2.   இரண்டு  : மேடு பள்ளம் / ஒளி இருள்
                                    தூரம் பக்கம் / வெப்பம் குளிர்
                                    கேள்வி பதில் / என எல்லாம்
                                    இரண்டி ரண்டாய்…
                                                (ப.21)

            3.   மூன்று     : படைத்துக் காத்து அழிக்கும் முத்தொழில்
                                    அதன் திருவிளையாடல்.
                                         (ப.38)

            4.   நான்கு     : நம் வாழ்வை / நம் விருப்பம் போல்
                                    வாழலாம் / நாலு பேர் பற்றிய கவலையின்றி.
     (ப.40)

            5.   ஐந்து         :உயிர்கள் பிறந்தன நிலத்தில் / பூதங்கள் ஐந்தும்
                                    குடி கொண்டன / அவற்றின் உடல்களில்.  
                      (ப.45)

            6.   ஆறு          : “ஆறாம் அறிவு ஏன்? / ஆறையும் தாண்ட”            (ப.87)

            7.   ஏழு           : “ஏழு சுரங்களின் கருப்பை / மௌனம்.”                 (ப.87)

            8.   எட்டு        : “எட்டை அறி / எட்டாதவை எட்டும்.”                    (ப.87)

            9.   ஒன்பது     : “ ஒன்பதோ எண்பதோ / சுற்றட்டும் கோள்கள்
                                      நீயும் சுற்று.”   
                                                          (ப.87)

            10.பூஜ்ஜியம்  : “ கூட்டிக் கழித்து வாழ் / பூஜ்ஜியம் என்று
                                     புரிந்து கொண்டு போ”     
                                      (ப.64)

இரத்தினச் சுருக்கமான மொழியில் மதிப்பிடுவது என்றால், ‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’ என்றனர் நம் முன்னோர்; பிருந்தா சாரதியோ ‘எண்ணும் எழுத்தும் கவி வடிக்கத் தகும்’ என மெய்ப்பித்துள்ளார், இத் தொகுப்பின் வாயிலாக.

V. உணர்வு இலக்கியம்

தமிழ் ஹைகூ நூற்றாண்டினை ஒட்டிப் பிருந்தா சாரதி வெளியிட்டுள்ள ஹைகூ தொகுப்பு ‘மீன்கள் உறங்கும் குளம்’ (2017). இதனை அவர்தம் கல்லூரிக் கால நண்பர் நா.தென்னிலவனுக்குக் காணிக்கையாக்கியுள்ளார்.

“அசுத்தம்
சோறு போடும்
துப்புரவுத் தொழிலாளி”

என்னும் தமிழ் ஹைகூவினை மேற்கோள் காட்டி, “ஹைகூ என்பது விடுகதை-யல்ல – சிலேடையும் இல்லை. ஹைகூ என்பது புனைவு இலக்கியமல்ல – அது உணர்வு இலக்கியம்” (முகத்தில் தெளித்த சாரல், ப.42) என மொழிவார் வெ.இறையன்பு. இவ் வரைவிலக்கணத்திற்குப் பொருந்தி வரும் ஹைகூ கவிதைகள் பல பிருந்தா சாரதியின் தொகுப்பில் காணப்படுவது குறிப்பிடத்-தக்கது.

‘அழுது கொண்டே இருக்கிறார் / கடவுள் ஒருவர்’ எனத் தொடங்குகிறது பிருந்தா சாரதியின் ஹைகூ ஒன்று. வியப்பும் எதிர்பார்ப்பும் மேலிடத் தொடர்ந்து படிக்கிறோம். ஹைகூவின் ஈற்றடி ‘நச்’சென உண்மையைப் போட்டு உடைக்கின்றது:

“அழுதுகொண்டே இருக்கிறார்
கடவுள் ஒருவர்
குழந்தைகள் மாறுவேடப் போட்டி”    
      (மீன்கள் உறங்கும் குளம், ப.51)

அன்றைய சங்க காலக் கவிஞர் முதற்கொண்டு இன்றைய ஹைகூ கவிஞர் வரையில் நிலவைப் பாடாத கவிஞரே இருக்க முடியாது; நிலவைப் பாடவில்லை என்றால் அவர் கவிஞராகவும் இருக்க முடியாது. நிலவைப் பற்றிய பிருந்தா சாரதியின் ஹைகூ இதோ:

“கண்ணாமூச்சி ஆடுகிறது நிலா
வளர்பிறை
தேய்பிறை”  
            (ப.81)

குமிண் சிரிப்பைத் தோற்றுவிக்கும் ஹைகூ:

“உதட்டுக்குள் சிரிக்கிறான் வேலைக்காரன்
மேலதிகாரி முன்
கைகட்டி நிற்கும் அதிகாரி”  
         (ப.57)

தனது வாழ்நாளில் எத்தனை முறை அதிகாரியின் முன் கைகட்டி, வாய் பொத்தி நின்றிருப்பான் வேலைக்காரன்? அந்த அதிகாரி அவரது மேலதிகாரியின் முன் கைகட்டி நிற்பதைக் காண நேர்ந்ததால் அடக்கமாக உதட்டுக்குள் சிரிக்கிறானாம் அந்த வேலைக்காரன்!

மரங்களுக்கு இடையிலான நேயத்தினை நயத்தக்க முறையில் வெளிப்படுத்தும் ஹைகூ:

“எதிர்ப்புற நாவல் மரத்திற்கு
பூங்கொத்தை நீட்டுகிறது
நெடுஞ்சாலைக் கொன்றை மரம்”  
           (ப.19)

இந்த ‘மர நேய’த்தில் ஆறில் ஒரு பங்கு இருந்தால் கூடப் போதும், உலகமே இன்பம் விளையும் பூந்தோட்டமாக மாறிட!

முரண் சுவை மூன்றாம் பிறையாய் முகம் காட்டி நிற்கும் ஹைகூ:

“குழந்தையாய்ச் சிரிக்கிறாள் பாட்டி
ஊன்றுகோல் ஊன்றி
நடிக்கும் பேத்தி”
                  (ப.103)

‘உலகமே நாடக மேடை; நாமெல்லாம் நடிகர்கள்’ என்னும் ஷேக்ஸ்பியரின் கூற்றைத் தனக்கே உரிய பாணியில் மெய்ப்பிக்கும் ஹைகூ:

“ஜோக்கடித்துச் சிரிக்கிறார்கள்
நரசிம்மனும் இரண்யனும்
திரைச்சீலைக்குப் பின்”    
              (ப.83)

‘இயற்கையிடம் இருந்து மனித குலம் என்று பாடம் கற்றுக்கொள்ளப் போகின்றது?’ என்னும் உணர்வினை எழுப்பிடும் உயரிய ஹைகூ:

“இரு நாட்டுக் கொடிகளையும்
ஒரே மாதிரி அசைக்கிறது
எல்லையில் வீசும் காற்று”   
          (ப.65)

எல்லையில் வீசும் காற்றிடம் இருக்கும் இந்தக் கண்ணியம் இரு நாட்டுப் படைகளுக்கு இடையே இல்லையே?

புலம் பெயர்ந்து வாழும் தமிழினத்தின் சோகத்தினை ஒரு குழந்தையின் விளையாட்டின் வாயிலாகப் புலப்படுத்தும் உருக்கமான ஹைகூ:

“மணல்வீடு கட்டி
விளையாடுகிறது
அகதியின் குழந்தை”         
              (ப.61)

தமிழுக்கு ‘அமுது’ என்று பெயர் என்பது போல் தமிழனுக்கு ‘அகதி’ என்று பெயரோ?

படிம அழகு மிளிரும் ஹைகூ:

“கூரையைப் பிய்த்துக் கொண்டு
கொட்டியது குடிசைக்குள்
வெளிச்ச நாணயங்கள்” 
     (ப.31)

‘இல்நுழை கதிரின் துன்அணுப் புரைய’ என்னும் திருவாசக உவமை இங்கே ஒப்புநோக்கத் தக்கது.

‘குக்கூ’ எனக் கூவும் குயிலின் ஓசையும் கவிஞரின் காதில் ‘ஹைக்கூ’வாய்க் கேட்கிறதாம்:

“குக்கூ எனக் கூவுகிறது குயில்
ஹைக்கூவாய் கேட்கிறது
காதில்”      
                           (ப.29)

கவிஞர் பழநிபாரதியின் சொற்களில் குறிப்பிடுவது என்றால், “தமிழில் நூற்றாண்டுத் தடம் பதித்திருக்கும் ஹைக்கூ பயணத்தில் பிருந்தா சாரதியின் இந்தத் தொகுதி கவனத்துக்கு உரியதாகக் குறிக்கப்பட வேண்டும். பிருந்தாவின் பயணத்தில் மிக அழகான வாழ்வின் தரிசனங்கள் வாய்த்திருக்கின்றன” (‘பாஷோவும் பிருந்தா சாரதியும் தட்டான்பூச்சிகளும்’, மீன்கள் உறங்கும் குளம், பக்.122-123).

1992-ஆம் ஆண்டில் ‘நடைவண்டி’யில் தொடங்கிய பிருந்தா சாரதியின் எழுத்துப் பயணம், 2017-இல் ‘மீன்கள் உறங்கும் குள’த்தில் வெள்ளி விழாக் கண்டுள்ளது. அவரது சொற்களிலேயே குறிப்பிடுவது என்றால்,

“சுழி முடிவில்லை
விழி அழிவில்லை”  
            (எண்ணும் எழுத்தும், ப.87)

கவிஞரே, உங்கள் கவிதை உலகிற்கும் இக் கூற்று பொருந்தி வருவதே!முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
 

 


 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்