இசை நாடக மேதை நாடக கவிமணி எம்.வி.கிருஷ்ணாழ்வார்

த.சிவபாலு MA

இசை நாடக மேதை நாடக கவிமணி எம்.வி.கிருஷ்ணாழ்வார் (1885-1972)


நாடகக் கவிமணி எம்.வி. கிருஷ;ணாள்வார் கரவெட்டி மத்தியில் பிறந்து வளர்ந்தவர். நாட்டுக்கூத்தில் வல்லவராக அவர் வளர்ந்த வரலாறு ஈழத்து நாட்டக்கூத்து வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். பாடலுடன், ஆடலும் சேர்ந்து வர பொருளுக்கேற்ப பாடி ஆடுவது கூத்தின் பாங்கு. மிக நளினமாக தான் பூண்டுகொண்ட வேடத்திற்கேற்பவே மாறிவிடுகின்ற உன்னத நடிப்பாற்றல் கொண்டவர் அண்ணாவியால் என பிற்காலத்தில் எல்லோராலும் அழைக்கப்பட்டவரும் அறியப்பட்டவருமான நாடக கவிமணி அவர்கள். பாடல்களை இயற்றுவதிலும்,அதனை இசையமைத்துப் பாடுவதிலும் வல்லவராக விளங்கினார். பண்டிதர்களும் ஏற்றிப்போற்றும் நிலைக்கு கவிதயாப்பதில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கியவர். கரவெட்டியில் இடம்பெறும் அரசியல் பிரமுகர்களின் கூட்டங்களில் வாழ்த்துக் கவி இயற்றிப் பாடுவதிலும், அந்தியேட்டிச் சபிண்டீகரணத்தில் தான்எழுதிய கல்வெட்டில் உள்ள பாடல்களை மனமுருகப் பாடுவதிலும் சமத்தராக காணப்பட்டவர். சமத்துவத்தை வலியுறுத்தி சமதர்ம சமுதாயம் அமையவேண்டும் என விளைந்தவர். ஏழை எழியவர்களின் நண்பனாக, பட்டி தொட்டியெங்கும் சென்று கலைப்பணி ஆற்றியவர். அவரால் எழுதப்படும் இறந்தவரைப் பற்றிய நினைவலைகள் பிள்ளைகள் புலம்புவதாகவோ அன்றி மனைவி அல்லது கணவன் புலம்புவதாக அமையும்போது அவை உண்மையிலேயே நிகழ்ந்தவற்றைப் பின்னிப்பிணைந்தவையாக யதார்த்தமாக அமைந் திருப்பதற்கு அவர் இருந்த சூழலில் உள்ளவர்கள் அனைவரையும் அவர் நன்கு அறிந்திருந்தார். அவர்களில் வாழ்வில் ஒரு பங்காளராக, பார்வையாளராக அவர் மிக நெருக்கமாகப் பழகிவந்தமை அவரின் சமூகக்கண்ணோட்டத்தை எடுத்துக்காட்டுவன.

அவர் வாழ்ந்த காலம் இந்தியாவிலிருந்து தாராளமாக நாடகக் கலைஞர்கள் இறக்குமதி செய்யப்பட்டகாலம் மாதக்கணக்கில் தங்கியிருந்த கொட்டகைபோட்டு கூத்துக்களை மேற்கொண்ட காலம் மிகவும் பயிற்றப்பட்ட கலைஞர்களுக்கு மத்தியில் எம்.வி.கிருஷ்ணாளர்வார் தன்சிக்கையாகவே கூத்துக்களில் வேடமேற்றி நடித்து அனைவரையும் அவரது நடிப்பத்திறத்தாலே கவர்ந்திழுத்தவர்.

'இந்தியாவில் கல்லடி பட்டு, சொல்லடி பட்டு இருப்பவர்களைப் பெரும்பணச் செலவில் இலங்கைக்கு அழைத்து வந்து அவர்களைப் புகழ்ந்து சிந்தாமணி, அந்தமணி இந்தமணி என்று பெயரிட்டு விளக்குமாறுக்குக் குஞ்சம் கட்டுவது போல நாம் அலைவதை விட நம் நாட்டிலுள்ள கிருஷ்ணாள்வார் போன்ற பெரும் நடிகர்களின் நடிப்பைக் கண்டு நன்றாக மகிழலாம்' என கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள் 1926 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதியிருந்தமை தமிழகத்துக் கலைஞர்களைவிட தரம்வாய்ந்த கலைஞர்கள் ஈழத்தில் இருந்துள்ளார்கள் என்பது புலப்படுகின்றது.

அண்ணாவியார் நடித்த முதல் நாடகம் 'சுபத்திரை' என்பதாகும். அவரது நடிப்புக்குக் கட்டியம் கூறியது இந்த நாடகந்தான். மிக முக்கியமான பாத்திரத்தில் ஏற்று நடித்தார். இதனால் அந்த நாடகத்தின் பெயரான சுபத்திரை என்பது அவரது பெயருக்கு அடைமொழியானது. ‘சுபத்திரைஆழ்வார்’ என அவருக்கு ஒரு நிரந்திரமான பெயரைப் பெற்றுத் தந்தது. கரவெட்டியில் அவரை அண்ணாவியார் அல்லது சுபத்திரையாள்வார் என்றுதான் குறிப்பிடுவார்கள் என்பதனை நான் கேட்டுள்ளேன். ஆழ்வாரைப் பற்றி நடிகமணி வைரமுத்து மிகவும் உயர்ந்த மதிப்பை வைத்திருந்தார் என்பது அவரது கூற்றுவாயிலாகவே அறியலாம். நான் இளமையாய் இருப்பதற்கு காணரம் ஆழ்வார் அவர்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார் என்றால் அது ஆழ்வார் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட மருந்துதான் என்றாராம். அது என்ன என்று கேட்டதற்கு, 'ஆழ்வார் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பார், சிரித்துக்கொண்டே கதை சொல்லுவார். சிரிக்கச் சிரிக்கக் கதைசொல்லுவார்' என்று ஆழ்வாரைப் பற்றிக்குறிப்பிட்டுள்ளார். நடிகமணி வைரமுத்த இளமைப்பருவத்தில் முதன் முதல் நடித்ததைப் பார்த்து நீ ஒரு பெரிய நடிகனாய் வருவாய் என வாழ்த்தினாராம் ஆழ்வார். அதன்படி சிவாசிகணேசனாலேயே பாராட்டப்பட்ட பெருங்கலைஞனாக திகழ்ந்தார் நடிகமணி வைரமுத்து. அப்படிப் பட்ட பெரும் கலைஞன் ஆழ்வாரின்மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டமைக்கு அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என்றால் தவறாகாது. ஆழ்வார் உயிர் நீத்தமை கேட்டு ஓடோடி வந்து கண்ணீர் சொரிந்தார் நடிகமணி என்றால் அவர்மீது கொண்டிருந்த மதிப்பும் பற்றும் வெளிப்படையல்லவா?

இந்தியாவில் இருந்து நடாகக் கம்பனிகளை வரவைத்து நடத்திவந்தவர்கள் அந்த நடிகர்கள்தான் சிறந்தவர்கள் எனப் போற்றிப் புகழ்ந்தமையால் அவர்கள் அகங்காரம் தலைக்கேறியவர்களாக தம்மை மிஞ்ச நடிகர்கள் இங்கு இல்லை என்ற நிலையில் இசை நாடகங்களில் தங்களின் வித்தகத்தை காட்டி பெருமை பேசிக்கொண்டார்கள். அவரின் வித்துவச் செருக்கை, கொட்டத்தை அடக்கியவர் எம்.வி. கிருஷ்ணாள்வார் என்றால் தவறாகாது. பாடல்களை அயத்தம் இல்லாமலே சந்தர்ப்பத்திற் கேற்றவாறு சக்களத்திச் சண்டைக்கான பாடல்களை எதிர்பாரதா விதமாக பாடி தனக்குச் சக்களத்தியாக வந்தவரை ஒரே மடக்கில் திணறவைத்து அவர்களைக் கிலி கொள்ளவைத்தவர். இந்தியாவிலிருந்து வந்த நடிக்கும் நடிகர்ளுக்கு எம்.வி. கிருஷ்ணாள்வாருடன் நடிக்க பயம் கொள்ளும் நிலையைத் தோற்றுவித்திருந்தார் என்றால் அவரின் நடிப்பாற்றலோடு பாடல்களை இசைக்கும் திறனும் மிக்கவராகக் காணப்பட்டார் என்பதுதான் இரகசியம். டாக்டர் சம்புநாதன் அவர்கள் அண்ணாவியாரைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 'தென்னிந்தியாவில் சங்கரதாஸ் சுவாமிகளால் பயிற்சியளிக்கபட்பட்டு இலங்கையின் பல பாகங்களிலும் எண்ணற்ற நாடகங்களை நடித்துப் பகழ் பெற்ற மீனலோசினி பால சற்குண சபாவினரின் நாடகம் மேடையேற்றப்பட்ட காலத்தல் நம்மூரிலும் 'சுபத்திரை ஆழ்வர்' எனப் புகழ் பெற்'ற ஒரு நாடக்க கவிமணியும் மிளிர்வதென்றால் அவரின நடிப்பும் நயமிக்க வசனமும் தேனொழுக்குப் போன்ற சாரீரமும் நிசப்பெண்ணைப் போன்ற உடலமைப்பும இன்னோரன்ன பண்புகளுமே காரணமாகும்' என அண்ணாவியாரின் நினைவு மலரிலே குறிப்பிட்டமை கருத்திற் கொள்ளற்பாலது. நூடகக் கம்பனிகளிலோ அன்றி ஊரவர்களால் மேற்கொள்ளப்படும் இசை நாடகங்களிலோ அன்றி கூத்துகளிலோ பெண்பாத்திரங்களில் ஆண்களே நடிக்கும் நிலைமைதான் இருந்தது. பெண்கள் மேடைகளில் ஏறாத காலமது. எம்.வி.கிருஷ;ணாள்வார் பெண்வேடம் ஏற்று நடித்தால் உண்மையான பெண் என்றே நினைந்து மனதைப் பறிகொடுத்த ஆண்கள் அநேகம்.

இவரது நடிப்பாற்றலைக் கண்ணுற்ற நாடக நடிகை மேதையான செந்திவேல் தேசிகர், கிருஷ;ணாழ்;வாரின் திறனைக் கண்டு அவரோடு இணைந்து இலங்கையின் பல பாகங்களிலும் நாடகங்களை ஏற்றினர். ஆன் பயனாக கிருஷ;ணாழ்வாரை தமிழகத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் அவரது திறனைக் காட்டவேண்டும் என விரும்பினார். அவரை அழைத்துச் சென்று பல சபா மேடைகளில் நடிக்கவைத்தார். பல தடவைகள் இந்தியாவிற்குச் சென்று வந்தமையால் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக்கொண்டார். அத்தோடு இந்தியாவில் அக்காலத்தில் நிகழ்ந்த விடுதலைப்போராட்ட அலையினால் கவரப்பட்டு விடுதலை வேட்கை கொண்டவராகவும் காணப்பட்டார்.

1931ல் பருத்தித்துறை காட்டிலிக் கல்லூரியில் அவர் ஏற்றிய நாடகத்தில் அவர் எகலப்பொல குமாரகாமி என்னும் பாத்திரத்தில் நடித்ததைப் பார்த்த ஆங்கிலேயர் ஒருவரால் பாராட்டப்பட்டதோடு பத்திரிகையிலும் அதனைப் பற்றி எழுத்தியுள்ளார். 1932ல் மீண்டும் இலங்கைக்கு வந்த செந்தில்வேல் தேசிகர் கிருஷ்ணாள்வார் அவர்களுடன் இணைந்து பல நாடகங்களைப் போட்டார். இவரது நாடகங்களில் பெண்வேடம் ஏற்பதில் கிருஷ்ணாழ்வார் முக்கிய பங்குகொண்டார். இவரது புகழ் தமிழர் வாழும் உலகெங்கும் பரவியது. மலேசியாவில் வாழ்ந்த தமிழர்கள் இவரை அங்கு அழைத்து நாடகங்களை ஏற்ற வைத்ததோடு மட்டுமன்றி அவருக்கு 'இலங்கைத் திலகம்' என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவம் செய்தமையும் சிறப்புடையது. இந்தியாவில் அவர் நடித்தகாலத்தில் என்.எஸ், கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர் போன்றோர் கோலோச்சிய காலம் அவர்களோடு இணைந்து நடித்தாரா என்பதற்கான ஆதாரங்கள் அல்லது பதிவுகள் ஏதும்கிடைக்கவில்லை.

தேவரயாளி பாடசாலை விழாவில் அண்ணாவியாரால் பழக்கிய நாடகம் எல்லோரதும் பாராட்டைப்பெற்றது எனப்பேசப்பட்டது எனினும் இன்று அதனைப்பற்றி கதைப்பதற்கான சான்றாதாரங்கள் ஏதும் இல்லாமை அண்ணாவியாரைப் பற்றிய தேடலை மந்தமாக்கிய உள்ளது. ஆரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கோலோச்சிய நாடகக் கவிமணி எம்.வி. கிருஷ்ணாழ்வாரைப் பற்றிய முழுமையான ஆய்வினை மேற்கொள்ளமுடியாமைக்கு பதிவுகள் இன்மையே காரணமாகும்.

தனது தாய்மாமனின் மகளான இலக்குமியைத் திருமணம் செய்து சீதேவி எனும் சற்புத்திரியைப் பெற்றெடுத்தார். அவரைத் தனது சகோதரியின் மகனைத் திருமணம் செய்யவைத்து அவர்பால் யோகேஸ்வரன், புவனேஸ்வரன், யோகம்மா ஆகிய மூவரைப் பேரராகக் கண்டு மகிழ்ந்தார். பேரப்பிள்ளைகள் மீது மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார். அவ்விதமே உறவினரின் பிள்ளைகளையும் நன்கு மதித்து அன்புபாராட்டி வந்தார். பேரன் பொறியியலாளர் யோகேஸ்வரன் அவுஸ்திரேலியாவிலும், புவனேஸ்வரன் நெதர்லாந்திலும், யோகம்மா கனடாவிலும் வாழ்ந்துவருகின்றனர்.

கவிமணி கிருஷ்ணாழ்வார் பற்றி அவரது நடிப்பாற்றலையும், கவிபுனைந்து பாடும் ஆற்றலையும் தனது இளமைக் காலத்திருந்தே அருகிருந்து கேட்டவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா அவர்கள். அவர் அண்ணாவியாரைப்பற்றிக் குறிப்பிடும்போது 'இயல்பான நடிப்பாற்றலும், இனிமையான சாரீரமும், அழகான சாரீரமும் கொண்ட அண்ணாவியாரிடம் அற்பதமான கவித்துவ ஆற்றலும் நிரம்பியிருந்தது' என்ற குறிப்பிட்டுள்ள அவர் மேலும் 'கவிஞர் கிருஷ்ணாழ்வார் சரமகவிகள், வாழ்த்துப்பாக்கள், வரவேற்புப்பாக்கள், இறைவன் துதிகள் முதலான பலவற்றைப் பாடியுள்ளார். பலவகையான பாக்களை இவர் பாடிய போதிலும் இவரது சரமகவிகள் தனித்துவமும் சிறப்பும் மிக்கவையாகக் காணப்படுகின்றன. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றிலே நின்று நிலைக்கக்கூடியவையாக இவரது சரமகவிகள் அமைந்துள்ளன” எனக் கூறுகின்றார்.

பேராசிரியர் சிவலிங்கரா அவர்கள் கிருஷ;ணாள்வாரின் சரமகவிகளில் எடுத்துக்காட்டாக பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் தந்ததை பண்டிதர் த.பொ. கார்த்திகேசு அவர்களின் கல்வெட்டில் இவர் பாடிய பாடலை எடுத்துக்காட்டியுள்ளார். அது கரவெட்டியின் இயல்பு நிலையை எடுது;துக்காட்டுகின்றது.

பார்ப்பனர்கள் வேதவொலி பரவுமோர்பால்
       பகர்புராணக் கதைகள் படிப்பதோர்பால்
ஏர்ப்பகடு துரக்குமொலி யெடுவதோர் பால்
        இளஞ்சிறுவர் நிரைமேய்க்கு மிகையதோர்பால்
கார்க்குழலார் காளையர்கள் காதலோர்பால்
        கணக்காயர் கலைபயிற்றுங் கழக மோர்பால்
போர்க்கரிய கண்ணைவளம் பொலிவதோர்பால்
        பிறங்கிடுபொன் கரவையெனும் பெரியநாடே'


வதிரியைப் பிறப்பிடமாக் கொண்ட பெரியார் சூரனைப் பற்றி பாடிய சரமகவிகளில் ஒன்று பின்வருமாறு அமைந்துள்ளது அதன் சந்தச்சிறப்பு அவரது கவித்துவத்தின் அழகு இளையோடிக் கிடக்கின்றது. சூரன் வாழ்ந்தகாலத்தில் யாழ் மாவட்டம் சாதிவெறியில் உச்ச நிலையைக் கொண்டிருந்தது. அவற்றைத் தன்னடக்கத்தோடு செயற்படுத்தித் தம்மைச் சார்ந்தவர்களுக்கு விடியலைத்தேடிக் கொடுக்க சூரன் எதிர்கொண்ட சவால்களை எல்லாம் நன்கு அறிந்தவர் அண்ணாவியார். சூரன்மீது மிகுந்த மதிப்புக்கொண்டிருந்தார் என்பதற்கு அவரது ஆழ்மனப் புதையலாக அமைந்தது இந்தப் பாடல்.

மிடிநெருக்க வைதீகம் மிகநெருக்க
      மிஸனரிமார் கழகங்கள் மேல்நெருக்க
முடிநெருக்கக் குடிப்பிறந்த முதியோர்தங்கள்
      முற்றுறாப் பணியென்னும் முறைநெருக்கப்
படிநெருக்க இடையறா முயற்சியாலே
     பணிமுடித்த நெருந்தகையார் சூரனார்க்குக்
கொடிசிறக்கப் புகழ்பாடிக் கூடியாடிக்
     குவலயத்தே விழாவெடுத்துக் குலவுவோமே!


அவரது பாடற்சிறப்பினை பல்வேறு தனிப்பாடல்களாலும் அறியக்கிடக்கின்றது. நவரத்தினசிங்கம் பாக்குநீரணையைக் கடந்ததை வாழ்த்தி அவர் பாடிய வாழ்த்துப்பாவிலும் இந்தச் சந்ததைக் காணலாம். 'வங்கமலி பொங்குகடல் சங்கொலி முழங்;கிடும்' என்னும் பாடல் கம்பனை ஒத்த கவிவளத்தை அவர் கொண்டிருந்தார் என்பதனை உணர்த்துகின்றது. பள்ளிக் கல்;விமைய தனது 9வது வயதில் நிறுத்திவிட்டு நாடகப் பயித்தியமாக அலைந்த கிருஷ;ணாழ்வார் கற்றுக்கொண்டவை அதிகம். கவிதை யாக்கும் பாங்கில் மட்டுமன்றி தனது குரல் வளத்தாலும் இசைவளத்தாலும் இசைப்பதிலும் தன்னிகரற்றவராக விளங்கினார். அவர் கலையுலகிற்கு ஆற்றிய பணி அளப்பரியது. அவற்றை தேடிப்பெற்று ஒன்றுதிரட்டி பதிவாக்கவேண்டும். அவரது நிiனைவாக நூற்றாண்டு விழா கொழும்பில் பேராசிரியர் சிவத்தம்பியின் பேராதரவோடு 1998ல் எடுக்கப்பட்டது. சிவத்தம்பியவர்கள் அண்ணாவியாரின் வீட்டிற்கு மிக அண்மையில் பிறந்து வளர்ந்தவர். அவரைப்பற்றி நன்கு அறிந்தவர். அவர் ஊரக்கு வந்தால் அண்ணாவியாரைக் கண்டு குசலம் விசாரிக்காமல் விடுவதில்லை. கல்விமான்களாலேயே நேசிக்கப்பட்டவர். அண்ணாவியாரின் அயலவர் மன்னவன் கந்தப்பு. பண்டிதர். ஆண்ணாவியாரிடம் கவிதை நயம்பற்றிக் கலந்துரையாடுவதற்காக அவரிடம் அடிக்கடி வருவார். காலத்தைக் கடந்தும் எம்.வி.கிருஷ;ணாழ்வார் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

இதுவரை எம்.வி.கிருஷ;ணாள்வாரின் நாடகம், கூத்து, மற்றும் கவிதைகள், பாடல் பற்றிச் சுருக்கமாகக் கவனித்தோம். அவரது பன்முக ஆளுமைகளில் தேங்கிக்கிடந்தது அவரது கவிகட்டும் ஆற்றல். சரமக கவிகளை இறந்தவர் களுக்கான அந்தியேட்டிக் கிரியையின்போது நூலாக்கிப் பாடுவது யாழ்ப்பாணத்து மரபு. இந்த மரபில் கரவையில் நீண்டகால அனுபவமும் ஆற்றலும் கைவரப்பெற்றவராக அனைவராலும் அணுகப்பட்டு புலம்பல்கள், நினைவுமீட்டல்கள் ஆக அவரால் பாடப்பட்ட கவிதைகள் வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ளன. ஆவர் அவற்றைப் பாடும்போது அதன் உட்பொரளை அனைவரும் விளங்கும் வண்ணம் உணர்வு பூர்வமாகப் பாடுவது வழக்கம். அவரது புலமையை நன்கு அறிந்த கற்றறிந்தவர்கள் அவரைப் பாராட்டி உரையாற்றியும் எழுதியும் பாராட்டியும் உள்ளனர். கலாநிதி சிவலிங்கராஜா அவரது ஊரவர். இளமைக் காலந்தொட்டே கிருஷ;ணாழ்வாரை நன்கு தெரிந்தவர் மட்டுமன்றி அவரது பரம ரசிகராகவும் இருந்துள்ளார். அவர் கிருஷ;ணாழ்வாரின் கவிச் சிறப்பைப்பற்றிக் குறிப்பிடும்போது 'நிதி நிர்ணய வெண்பாக்களைத் தொடர்ந்து இம்பெறும் 'மரபுகிளர்த்தல்' என்னும் பகுதியைப் பெரும்பாலும் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தத்திலேயே பாடுவார். சிறுபான்மையாக அறுசீர், எண்சீர் விருத்தங்களிலே பாடுவதுமுண்டு. பெயர்ப் பட்டியலாக அமையும் இப்பகுதியிலே கவித்துவ ஆற்றலுக்கு அதிக வாய்ப்பு ஏற்படுவதில்லை. ஒரு மரபு வட்டத்தினுற்ளே 'வாய்பாபட்டு' ரீதியாக அமைவது திவிர்க்க முடியாதது. எனினும் ஆங்காங்கே கவித்துவம் வாய்ந்து சொற்களையும் சொற்றொடர்களையும் இப்பகுதியிலே கூடப் புகுத்திவிடுவார்' என்பதுற்கு உதாரணமாக பின்வரும் பாடலை எடுத்க்காட்டுகின்றார்:

‘’பாவாணர் கவிதனக் கெட்டாத கவினுடைய
       பார்திபன் கந்தைய வேள்
பாருலக வாழ்வுமா சாலமென் றுன்னியே
       பற்றுமுற்றுந் துறந்தே
பாதிமதி சோதிநதி யாதிவதி நீதிபதி
        பதாம்புயம் பற்றினரோ!'

மனைவி, பிள்ளைகள், கணவன், மகள், மகன், தாய், தந்தை எனப் புலம்பல் அல்லது பிரலாபம் என்னும் நிலையில் அவர் யாத்த பாடல்கள் உயிர்த்துடிப்படையன. முனைவி புலம்புவதாக அவர் 1950 களில் எழுதிய ஒரு பாடலை உதாரணமாகக் காட்டுகின்றார். ஆதனைப்பார்ப்போம்:

ஒருநாளு முன்னை மறவேன்பிரிந்து ஒருநாளியேனும் மகலேன்
திருவாய் மெழிந்த மொழியன்றிவேறு திருவாசகத்தை மதியேன்
மருவாருமுனது திருnமியன்றிமறுமாதல்மேனி தழுவேன்
குருவாணையென்ற துரையே யின்றென்ன குறைகண்டுமாண்ட தவமே'


திருமணத்தின் போதும் இணைந்து வாழ்ந்தபோதும் கணவன் மனைவியரிடையே இடம்பெறும் புரிந்துணர்;வின் அடிப்படையில் எழும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துவிடுகின்ற வாழ்வின் ஓடம் தொடரும் என நம்பியிருக்க ஒருவர் இடையில் மரணித்துவிட்டால் ஏற்படும் மனவேதனை, துயரம் அடக்கமுடியாதது. அதனைத் தத்ரூபமாக எடுத்துக்காட்டும் பாங்கு எம்.வி.கிருஷ்ணாழ்வாரின் சிறப்புடைமை திறமையும் எனலாம்,

வெளிநாட்டில் உள்ள ஒரு மகன் தாயின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத அவல நிலையை எடுத்து மிக நயமாகக் எடுத்துக் காட்டுகின்றது பின்வரும் விருத்தம்:

'அந்தியத்தில் அருகிருந்து பணிசெய்யாமல்
       அணைத் தெடுத்து மடிதாங்கிப் பாலூட்டாமல்
சிந்துகனி வாய்மொழியைக் கேட்டிடாமல்
       திருமுகத்தைக் கண்ணாரப் பார்த்திடாமல்
தந்தியெனும் துட்டயெமன் சாற்றி வந்த
       சாவோலை கண்டுமனம் தத்தளித்தோம்
வந்தடையும்மார்க்கமின்றி வாடிநொந்தோம்
       வையயத்தி லென்செய்வோம் வருந்தினோமே'


வாலைக் குமரப் பருவத்தில் மகள் இருக்க அவளது திருமணத்திற்கு முன்பே இறந்துவிட்ட தந்தையை நினைத்து மகள் துயர மடைவதனை இயல்பாக எடுத்தக்காட்டும் பாங்கு சிறப்பு உடையதாகவே அமைகின்றது:

வாசமுறும் நீர்மூழ்கி வாகாய லங்கரித்து
பாசமுறுந் தோழியர்கள் பாங்காய்ப் புடைசூழ
நேசமறும் தாலியுடன் நிற்பதை நீகாணாமல்
பூசலுறும் பாடையிலே போனதென்ன பப்பாவே!
சோதி பெற நன்றாகச் சோடித்த காரேறி
வீதிவரும் பவனிமேதினியிற் காணாமல்
காதிற் பறைகேட்கக் கட்டியபூம் பாடையிலே
நீதியின்றிப் போய்மறைந்தாய் நெறியோ வென்பப்பாவே!


பேரப்பிள்ளைகள் பிரலாபம் மிகவும் கவிநயம் ததும்பும் பாக்களால் அவர் தந்து கேட்போரை மனமுருக வைக்கும் பாங்கு அலாதியானது:

முற்றத்து மண்சோறாய் மூன்றூமற் காயடுப்பாய்
பற்றியபா வட்டையிலை பாற்கறியாய் - பெற்றவித்துச்
சாப்பிடவா அப்பா சமைத்ததாறு தென்று
கூப்பிடுவ தாரையினிக் கூறு!

ஆழக் குழிகிணறாய் அங்கே தடிநாலிற்
சூழத் துலாநிறுத்தித் தொல்சிரட்டை – வாளியாய்
கோலிக் குளிக்கவப்பா வாவென்று மண்ணீரை
ஆருக்கு வார்ப்போ மினி!

என உதாரணம் காட்டும் பேராசிரியர் சிவலிங்கராஜா 'யாழ்பபாணத்துக் குடும்ப உறவுச் சூழலை படம் பிடித்துக் காட்டுவது போல அமையும் இவருடைய புலம்பல் கவிதைகளிலே சமூக விழுமியங்களும் பொருந்தி இருப்பதைக் கவனிக்கலாம்.' எனக்குறிப்பிடுவது அக்காலத்து குடும்பப் பிணைப்பு பெற்றோர் பிள்ளைகள் உறவு, அதில் தாக்கம் கொண்டுள்ள உளவியல் அழுத்தம் என்பனவற்றைப் படம்பிடித்துக் காட்டுவனவாக உள்ளன.

இறைவணக்கம். நாட்டுவளம், ஊர்ச்சிறப்பு, இறந்தவர் வரலாறு என்பனபோக பிரலாபம் அல்லது புலம்பல் இடம்பெற்று அந்தத்துயரத்தை அனுபவித்து கண்ணீர் பெருக்கி நிற்கும் நிலையை நிவர்த்தி செய்யும் பாங்கில் அமையும் தேற்றம் மிகவம் சிறப்புப் பெறுவதனைக் காணலாம்:

அவரது தேற்றங்களில் ஒன்று:

பட்டமரம் தளிர்விடுத்துப் பூப்பதுண்டோ
       பகலவனார் திசைமாளி யுதிப்பதுண்டோ
விட்டவுடல் தன்னிலுயிர் வருவதுண்டோ
       விழுந்த மலர் பூங்கொடியிற் சேர்வதுண்டோ
மட்டவிழும் மலர்க்கூந்தல் வேசிமாரக்கு
        மகிழ்ந்தளித்த பொன்மீண்டும் பெறுவதுண்டோ
அட்டதிசைபுகழ் திருக்கந்தையா வுக்காய்
        அழுவதென்னோ துயர்விடுத்திங் காறுவீரே!


என்பது எவ்வளவு கருத்தாழம் கொண்டதோடு சமூக நிலையையும் இயற்கையையும் எடுத்தாண்டு உதாரணத்தோடு இறப்பு என்பது இயற்கையின் நிறதி என ஆற்றித் தேற்றும்பாங்கு சிறப்புடைத்து.

'ஈழத்து இசை நாடக மேதை' என்னும் அவரது நினைவிதழில் அவுஸ்திரேலியாவிலிருந்து திருமதி சிவகாமி செந்தையா ஆசிரியை அவர்கள் 'கரவை கண்ட கவிமணி' எம்.வீ, கிருஷ;ணாழ்வார் நினைவலைகள் என்னும் தலைப்பிலான கவிதைகளில் முதலாவது கவிதை பின்வருமாறு அமைகின்றது.

பொன் கொழிக்கும் இலங்கை வள நாட்டினிலே,
      புகழ்மணக்கும் பாழ்நகரின்வரவையிலே
சன்னெறி தினம் வளரும் நாடகத்திலே,
      நல் லுருப்படிக ளாக்கக்கூயவர் கவிமணியே
தென்னிந்தியக் கலைஞருடன் சேர்ந்துறவாடி.
      திறன்மிக்க நாடகத்தின் உச்சியிலேறி,
பன்னுதிரு வேடம்பல் தாங்கிநின்றவ்
      வெற்றியின்மேல் நாடகத்தில் வெற்றிகண்டவர்.


எம்.வி.கிருஷ;ணாழ்வாரின் கவிதைகள், நாடகங்களை எல்லாம் கண்டு களித்தவர் சிவகாமி என்பது அவரது கவிதையின் ஊற்றுக்கு அவரது பட்டறிவே காரணம் எனலாம். சிவபாமி அவர்கள் ஆசிரியையாக கடமையாற்றியவர் என்பதும் இன்று அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


யதார்த்தன் எனப் பெயரிய கவிஞர் கரவையைச் சேர்ந்தவர். அவர் எம்.வி. கிருஷ்ணாழ்வாரை இளமைக்காலமுதல் நன்கு அறிந்திருந்தவர். பழகியவர், உறவாடியவர் அவரது பெருமை கண்டு பெருமிதம் பூண்டவர். கம்பராழ்வாராக எம்.வி. கிருஷ்ணாழ்வார் வேடம்போட்டமை பற்றி அவர் குறிப்பிடும்போது கம்பரின் வேடம் மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது. பாகவதரைப்போன்று தலையை வளர்த்திருந்த கிருஷ;ணாழ்வாரின் முகவமைப்பும் அதற்குப் பொருத்தமானதாக அமைந்திருத்தமையால் தத்ரூபமாக கம்பராகவே பாத்திரத்தில் தோன்றி இப்படித்தான் கம்பர் இருந்திருக்கின்றார் என்பதனை மக்கள் மனதில் பதியவைத்தவர் என்பதனை யதார்த்தன் பின்வரும் பாடலால் படம்பிடித்துக்காட்டுகின்றார்.

கம்பனுக்குச் சிலையெடுக்கக் கண்கண்ட கருவின்றி
       கண்ட கண்ட கற்பனையில் கம்பனுருக் காணாமல்
அம்பிகா வதியில்வரு கம்பனாய் நீநடிக்கும்
        அரிய செய்தியினைக் கேட்டு அனைவருமே அங்குற்று
நம்மாழிவார் காட்டு மந்தக் கம்பனே கம்பனென்று
        நயமுடனே சிலைவக்க நாட்டமுற்றார் என்றவொரு
தம்பிமுதற் றாதைவரை கற்பனை செய்கதை தன்னை
        இன்றுவரை கேட்டிருந்து இறுமாப் படைந்திருந்தோம்.


எனக் கம்பனை ஆழ்வாரில் கண்டதாக உருவகிக்கின்றார் யதார்த்தன். யதார்த்தன் ஆழ்வாரின் நாடகங்களைக் கண்டும், அவர் பாடிய பாடல்களை நேரடியாகக் கேட்டும் பட்டுத்தெளிந்தவர். அவரது வாய்மொழி சிறப்பிடம்பெறக்காரமாயிற்று. இவ்விதமே அவர் கிருஷ்ணர் வேடம்போட்டமையால் அவரை கிருஷ்ணாழ்வார் என அழைக்கத்தொடங்கினர் என்பதனையும் அவர் எடுத்துக்கூறியுள்ளார். நெல்லண்டையில் பல அண்ணாவிமார் இணைந்து 'பவளக்கொடி' நாடகத்தை மேடையேற்றினர். ஆதில் ஆழ்வாருக்கு கிருஷ்ணர் வேடம் போடப்பட்டது. தத்ரூபமாக கிருஷ்ணராகவே காட்சிளித்த ஆழ்வாரைக் மேடையில் பார்த்தவர்கள் தம்மை மறந்து எழுந்து நின்று கோவிந்தா, கிருஷ்ணா, கண்ணா என குரலெழுப்பி வணங்கினார்களாம். ஆன்றுமுதல் ஆழ்வாரை ஒட்டிக்கொண்டது கிருஷ்ணர் என்னும் நாமம் அதனால் கிருஷ்ணாழ்வார் என அழைக்கப்பட்டார். அதனை யதார்த்தன் எனப்படும் சிதப்பரப்பிள்ளை ஆசிரியர் பின்வருமாறு கவிதையில் யாத்துள்ளார்.

வில்லெடுத்த விசயனுக்கு வதுவை செயு மதவனாய்
     விண்ணவரும் வியப்படைய வியன்வேட மதுதாங்கி
நெல்லண்டைப் பதியினிலே நீகாட்சி தருவேளை
     நெக்குருகி மக்கள் குழாம் நெடுமாலைக் கண்டார்போல்
வல்லவனே உனைவணங்கி வேண்டிடுவார் வரங்களெனில்
     வேறென்ன வேண்டுவதோ விளம்பிடவுன் கலைத்திறனை
பல்லவரும் புகழ்ந்துன்னைக் கிருஷ்ணாழ்வார் என்றழைத்துப்
     பாராட்ட நாமெல்லாம் பார்த்துக் களித்தோமே.


என அவரின் புகழைப்பாடிப் பெருமை கொள்கின்றார் யதார்த்தன் என்றால் எம்.வி. கிருஷ;ணாழ்வாரின் நடிப்பு எத்துணை சிறப்புற்றிருந்தது என்பது வெளிப்படை.

நகைச்சுவையாகப் பாடுவதிலும் வல்லவர் எம்.வி. கிருஷ்ணாழ்வார். பாடசாலை மாணவர்களுக்காகத் தயாரித்த நாடகங்களில் ஒன்று 'குடியே குடி கேடு' என்பதாகும். அதில்சீவல் தொழிலாளியாக வரும் ஒரு வேடத்தில் நடடித்தவருக்கான பாடலை பின்வருமாறு எழுதிப் பாடவைத்திருந்தார்.

சோக்கான தென்னங்கள்ளு
சொக்க வைக்கும் எந்தன் கள்ளு
சோதித்துப் பார்த்துக் குடிக்க வாருங்கோ ஐயா
சூறையாட்டி விழுத்தாவிட்டால் கேளுங்கோ ஐயா - - சோக்கான

பாழ்படுவார் சீவும் கள்ளு
பாழான கலப்புக் கள்ளு
நாள்முழுதும் குடித்தாலும் வெறி
நாடிடுமோ ஐயா
நான் தருவேன் குடித்துக் காசை
தாருங்கோ ஐயா - சோக்கான

கொப்பாட்டன் பாட்டன் எங்கள்
கோந்துறுவும் மாந்துறுவும்
தப்பாமற் சீவிப் புகழைத் தாவினோம் ஐயா
இப்போதும் எங்கள் கள்ளுக்குப் பெயர்
ஏற்றம் தான் ஐயா - சோக்கான

என்பது அவர் எழுதி இசையமைத்துப் பாடி நடிக்கவைத்த பாடல் யதார்த்தமான நிலையை எடுத்துக் கையாண்டு அவர் எழுதிய பாடல்களை அனேகம். புவளக்கொடி நாடகத்திலும் அவர் அக்காலத்தில் சமுதாயத்தில் நலிந்துகாணப்பட்ட சாதி ஒடுக்குமுறையைச் சாடுபவராகவே காணப்பட்டார். பறையறைவோனாக வந்து நடித்துப் பாடிய பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது.

புலையன் புலையன் என்று பேசுறீர் - சும்மா
போடா வாடா என்று ஏசுகிறீர் - நீதிக்
கலை கற்றவர் போலப் பேசுகிறீர்
காலடி கண்டாலும் கூசுகிறீர்
வெள்ளிக் கிழமைவி ரதம்பி டிக்கிறீர்
வேண்டுமட் டும்மாட்டைக் கொன்றுபு சிக்கிறீர் - புலையன்

கள்ளுச் சாராயம் கொள்ளக்கு டிக்கிறீர்
கண்டப டிபுலால் உண்டுகொ ழுக்கிறீர்
தீயசெய் கையெல்லாம் உம்மிடத் திலே
வீணிற் கொடுமைகள் எம்மிடத்திலே – என்ன . . .

...............................................
தீட்டிருக்குது ஆண்டே வேறு எம்மிடத்திலே - புலையன்



சாமியா டும்போது யாரையா? – பறை
கொட்டிமு ழக்குவது யாரையா?
நீடிய வான்முடி கூடிய மன்னரும்
ஆடி அடங்கிடும் வேளையிலே
கூடிமு ழக்கிக்கு டும்பச மேதராய்
வாடிய ழுவீர்ம யானம்வ ரைக்கும்
செத்தபி ணம்என்று சீஎன்று தள்ளுறீர்
சீராக எம்மிட் தந்துநீ றாக்கிறீர்
தீயை மூட்டுமுன்
ஓடுகி றீர்வீடு தேடுகிறீர் - அங்குத்
தேறிப்பு சித்துக் கொண் டாடுகிறீர் - புலையன்
நாயும் நரியும்பி டுங்காமல் - பிணம்
நாற்றம்எ டுத்தும ணக்காமல்
அங்கம்நீ றாக்குவது நாங்களோ – வீணில்
அதிகாரம் செய்வது நீங்களோ. - புலையன்


இப்பாடலை உண்மையிலேயே குலத்தொழிலாக் கொண்டவன் பாடியிருந்தால் அக்காலதத்துச் சமுதாயம் சும்மா விட்டுவைத்திருக்காது. ஆனால் அண்ணாவிப் புலயன் ஆச்சே பார்த்துக் கைதட்டிச் சிரித்தவர் பலபேர். ஆட்டம் போட்டவர் பலபேர். உண்மையை உணர்ந்து உள்மனம் பொங்கியவர்கள் பலபேர். இவருக்கேன் இந்தக் கீழ்சாதியினருக்கு வக்காலத்து வாங்கும் எண்ணம் என்று அலுத்துக்கொண்டவர்கள் ஒரு சிலர். தனது நடிப்பாற்றலாலும், பாடுந்திறத்தாலும் தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராக ஆக்கிக்கொண்டவர் அவர். அவ்வித திறன்மிக்கவர் அண்ணாவியார். ஆவரை வீதியில் கண்டால்கூட மதித்து மரியாதை செலுத்தாதவர்கள் யாரும் இல்லை எனலாம். ஏன் சிலர் பயந்தும் இருந்தார்கள் காரணம் நேரடியாக ஏசியே விடுவார். தவறுகளைச் சுட்டியும் காட்டுவார். தனக்கு எது சரியெனப் படுகின்றதோ அதனை யாரும் தடுக்கமுடியாது. செய்தே தீருவார். 'துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே' என்னம் தாரக மந்திரத்தைத் தன் வாழ்நாளில் போற்றியவர். இறுதியாக வன்னிக்கு அதுவும் எனது ஊரான குமுளமுனையில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடந்த வேளை அவரை ஒரு பாராட்டுக்கவிதை வாசிப்பதற்காக அழைத்திருந்தார்கள். அவர் தான் எழுதிய பாராட்டுப்பாடலை வாசித்தார். அதனைக்கேட்ட முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்தத்தம்பு எழுந்துசென்று அவரைக் கட்டித் தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார் என்றால் அவரின் கவிதை ஞானம் எவ்விதம் அமைந்திருந்தது என்பதனைக் கூறவும் வேண்டுமோ?

 

த.சிவபாலு MA
 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்