சிலந்தி தன் கூடு இழந்தவாறு

கலாநிதி பால.சிவகடாட்சம்


ற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தை ஆண்டுவந்த மன்னர்களும் பெரும் குடிமக்களும் தமது பிறந்த நாளைப் பெருவிழாவாகக் கொண்டாடி வந்துள்ளார்கள். எனினும் இவர்களது பிறந்த நாள் இன்று நாம் வழக்கமாகக் கொண்டாடும் பிறந்த மாதத்தையும் தியதியையும் (தியதி என்பதே சரியான தமிழ்: தியதி காலப்போக்கில் திகதியாக மாறிற்று) அடிப்படையாகக் கொண்டதல்ல. நம் முன்னோர்கள் தமது பிறந்த நட்சத்திரத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

இந்தியாவின் பண்டைய காலக்கணிதர் சந்திரன் பூமியைச் சுற்றிவரும் விண்வெளிப்பாதையை இருபத்தேழு நட்சத்திர மண்டலங்களாகப் பிரித்து அடையாளப்படுத்தியிருந்தனர். அச்சுவினி தொடக்கம் இரேவதி வரையிலான இந்த இருபத்தேழு நட்சத்திரக் கூட்டங்களையும் நாள்மீன்கள் என்று பழந்தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.

சூரியன் உதிக்கும் வேளையில் எந்த நட்சத்திர மண்டலத்தின் அருகில்  சந்திரன் காணப்படும் என்பதைக் கணித்து அந்த நட்சத்திரமண்டலமே அந்த நாளுக்குரிய நட்சத்திரமாக அதாவது நாள்மீனாக அடையாளப்படுத்தப் படுகின்றது. பௌர்ணமி நாளன்று முழுநிலவுக்கு அருகில் காணப்படும் நட்சத்திரம் அந்த மாதத்துக்குரிய நட்சத்திரமாகக் கொள்ளப்பட்டு அந்த நட்சத்திரத்தின் பெயராலேயே அந்த மாதமும் அழைக்கப்பெற்றது. உதாரணமாகக் கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளன்று கார்த்திகை நட்சத்திரம் (Pleiades) முழுநிலவுக்கு அருகில் காணப்படும்.   

ஒரு கார்த்திகை நாள்: பிறைநிலவுக்கு அருகில் கார்த்திகை நட்சத்திரம்         

        

கார்த்திகை  மாதத்துக்  கார்த்திகை நாள்:   முழுநிலவுக்கு அருகில் கார்த்திகை நட்சத்திரம்                    

                                       

இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டுவித்த ராஜராஜசோழனின் பிறந்தநாள் ஐப்பசிமாதம் சதயநாளிலும் ராஜராஜனின் மகன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மார்கழிமாதம் திருவாதிரை நாளிலும் கொண்டாடப்பட்ட செய்தியினைச் சோழர்காலக் கல்வெட்டுக்கள் அறியத்தருகின்றன.

தமது நாட்டு மன்னரின் பிறந்த நாள் எப்போது வரும் என்று அந்நாட்டு மக்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அன்று பலருக்கும் பலவிதமான நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு. சிறையில் அடைபட்டுக்கிடக்கும் கைதிகள் விடுதலை பெறுவார்கள். பாவலர்கள் பரிசு பெறுவார்கள். பொதுமக்களுக்குப் பலவிதமான உதவிகள் அறிவிக்கப்படும். கோயில்களுக்குக் காணிக்கைகள் வழங்கப்படும். அனைத்து ஊர்களிலும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படும். புதிதாகப் போர் அறிவிக்கப்படமாட்டாது. இந்த நாளை நாட்டுமக்கள் ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடி மகிழ்ந்ததில் வியப்பேதுமில்லை.

பாண்டிய மன்னன் ஒருவனின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடும்படி நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார் இற்றைக்கு ஆயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர்.

இன்று உத்தராட நட்சத்திர நாள். தேரோடும் பாண்டிய மன்னனின் பிறந்த நாள். வீரம் செறிந்த எங்கள் மன்னனுக்கு இன்று எவர்மீதும் விரோதம் கிடையாது.  சிறைக்கதவுகளைத் திறந்து விடுங்கள். யானைகளையும் தேர்களையும் இசைக்கு ஏற்ப நடனமாடும் குதிரைகளையும் ஊர்வலத்தில் விடுங்கள்.” என்று போர்வீரர்களையும் பொதுமக்களையும் அழைக்கின்றார் இந்தப் புலவர்.

கண்ணார் கதவம் திறமின் களிறொடு தேர்
பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் நண்ணார் தம்
தேர் வேந்தன் தென்னன் திரு உத்தராட நாள்
போர் வேந்தன் பூசல் இலன்
                                         - முத்தொள்ளாயிரம் 93

 

இருபத்தேழு நட்சத்திரங்களுள் சிவபெருமானின் நட்சத்திரமான ஆதிரைக்கும் பெருமாளின் நட்சத்திரமான ஓணத்துக்கும் மட்டுமே 'திரு' என்னும் கௌரவ அடையாளம் கொடுக்கப்பெற்றுத் திருவாதிரை என்றும் திருவோணம் என்றும் அழைக்கப்படுவது வழக்கம்.  இங்கே புலவர் தமது அரசனின் பிறந்த நட்சத்திரமான உத்தராடத்துக்கும் அந்தக் கௌரவத்தை அளிக்க விரும்பித் திருஉத்தராடம் என்று குறிப்பிடுவதைக் கவனிக்கலாம்.

சோழ நாட்டில் மன்னன் கிள்ளிவளவன் பிறந்த நாளான இரேவதி நட்சத்திரநாள் அந்நாட்டு மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றது. தங்கள் ஒவ்வொருவரினதும் சொந்த விழாவாக எண்ணி ஊர்ப்பொதுமக்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளார்கள். வழக்கம்போல் பலரும் பல்வேறு நன்மைகள் பெறுகின்றார்கள். ஆனால் ஒரு புலவரோ இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஓர் அற்ப ஜீவனுக்கு நேர்ந்த இழப்பையெண்ணிக் கவலைப்படுகின்றாராம்.

அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை
இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ
சிலந்தி தன் கூடு இழந்தவாறு.
                                      - முத்தொள்ளாயிரம் 46

ஒளிரும் இலைபோன்ற வேலை ஏந்திய எங்கள் மன்னன் கிள்ளி பிறந்த இரேவதி நாளான இன்று அந்தணப் பெருமக்கள் பசுவும் பொன்னும் தானமாகப் பெற்றார்கள். பாவலர்கள் மந்தார மலையை ஒத்த பெரும் யானைகளைப் பரிசாகப் பெற்றார்கள். ஆனால் இந்தச் சிலந்தி மட்டும் ஏன் தன் சொந்த வீட்டையே இழக்க நேரிட்டது?” என்று பாடுகின்றார் புலவர்.

ஆம். மன்னனின் பிறந்தநாளைக் கொண்டாடுமுகமாகப் பொதுமக்கள் தங்கள் வீடுகளைத் துப்புரவு செய்து அலங்கரிப்பதைச் சொல்லாமல் சொல்லிவைக்கின்றார் புலவர். வீட்டைத் துப்புரவு செய்பவர்கள் வீட்டுக் கூரையில் காணப்படும் சிலந்தி வலையை விட்டுவைப்பார்களா?.

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்