தைப்பொங்கல்

த.சிவபாலு MA
 

மிழர் திருநாளாம் தைப்பொங்கல் தமிழ் நாட்காட்டியின் தை முதலாம் நாள் கொண்டாடப்படுகின்றது. தைப்பொங்கல் உழவுத்தொழிலுக்கு வந்தனை செய்யும்முகமாக் கொண்டாடப்படுகின்றது. ஆதியில் இயற்கைளை வணங்கிவந்த தமிழன் நிலையாகப் பயிரடத்தொடங்கியதும் தனது உளவுத் தொழிலுக்கு அடிப்படையாக அமைவது, மழை,வெய்யில் எனப் பருவந்தவறாது கிடைக்பதற்கு காரணமானவன் கதிரவன். எனவே கதிரவனை வணங்க முற்பட்டதன் விளைவாக தைமாம் இவ்விழாக் கொண்டாடப்படுகின்றது. சூரியன் தனுராசியில் இருந்து மகரராசிக்குபப் பிரவேசிக்கும் காலத்தைக் கணிப்பிட்ட அதன் அடிப்படையில் தைமாதம் முதலாம்நாள் இவ்விழா எடுக்கப்படுகின்றது. இதனை உழவர் விழா எனவும் அழைப்பர். தமிழ் நாட்காட்டியின் தை முதலாம் நாள் இவ்விழாக் கொண்டாடப்படுகின்றது. அதாவது ஆங்;கில நாட்காட்டியில் ஜனவரி 13 அல்லது 14ம் திகதியில் இவ்விழா இடம்பெறுகின்றது. உழவுத் தொழிலுக்கு உறுதுணையானது சூரியன். உலகின் இயக்கத்;திற்கு மையமாக உள்ளது சூரியன். பருவ காலங்கள் சூரியனை மையமாகக் கொண்டு பூமி சுற்றிவரும் தன்மையைப் பொறுத்து இடம்பெறுகின்றன. நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி ஒரு நீள்வட்டப் பாதை ஒழுக்கில் வலம் வருவதனால் பருவகாலங்கள் ஏற்படுகின்றன. பருவ காலங்களின் அடிப்படையிலேயே விவசாயம் இடம்பெறுகின்றது. விவசாயிகளுக்கு மழையையும் வெய்யிலையும் தருவதற்கு காரணியாக அமைவது சூரியனே. சூரியனை வழிபடும் முறை தமிழர்களிடையே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. பொங்கலோடு பால், பழம் என்பனவற்றையும் சேர்த்துப் படைத்து உறவினர்கள், நண்பர்கள் சூழ கூடிக் குலாவி உண்டு மகிழும் ஒரு இன்பகரமான விழாவா தைப் பொங்கல்; கொண்டாடப்படுகின்றது.

மேலை நாடுகளில் அறுவடை விழா அல்லது நன்றி நவிலல் விழாப் போன்று. தமிழர்களும் இவ்விழாவைக் கொண்டாடுகின்றார்கள். புது நெல்லெடுத்து அதனை உமி நீக்கி அரிசியாக்கி, நன்கு வறுத்தெடுத்த பாசிப்பயறம் கலந்து பால்விட்டு சர்க்கரை, தேன், நெய் முதலானவற்றையும் கலந்து மிகுந்த சுவையோடு பொங்கிச் சூரியனுக்கு படைத்து வழிபடுவர். பொங்கல் தினத்தன்று புத்தாடை உடுத்து ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் முறையும் உண்டு. சிற்றுண்டி, பலகாரங்களும் தயாரிக்கப்பட்டு விருந்தினருக்கும், உறவினருக்கும் வழங்கி மகிழ்வார்கள். வெடிகொழுத்தி கொண்டாடி மகிழும் ஒரு விடுமுறை தினமாகவும் இது தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு பெருவிழாவாகும்.

பொங்கல் தினத்தில் முற்றத்தைத் கூட்டித் துப்பரவாக்கி சாணத்தால் மெழுகி, கோலம் போட்டு, மலர் மாலை, மாவிலைத் தோரணம் கட்டி வீட்டு முன்றலை அழகு படுத்துவது வழக்கம். ஏழைகள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் போன்றவர்களுக்கு பொங்கல், வடை, முறுக்கு, அரியதரம், பயிற்றம் பணியாரம், முக்கனிகள் என்பனவற்றை வழங்கி அவர்களையும் பசிபோக்கி உளம் மகிழவைக்கும் பண்பு விவசாயிகளிடம் இன்றும் பின்பற்றப் பட்டுவருகின்றது.

உழவுத்தொழிலுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்கு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் (பட்டிப்பொல்கல்) இடம்பெறுகின்றது. மாடுகளைக் குளிப்பாட்டி, மலர் மாலை அணிவித்து அலங்கரித்து அழகுபடுத்துவர். மாட்டுப் பட்டியில் பொங்கி அவற்றிற்கு உணவளித்து மகிழும் ஒரு விழாவாகவும், மாட்டுச் சவாரி, காளைகளை அடக்குதல் போன்ற விளையாட்டுக்களை மேற்கொள்ளும் நாளாகவும் இது தமிழர்களிடையே இடம்பெறுகின்றது.

தைப்பொங்கல் எப்போது தொடங்கியது என்பதற்கான புராணக்கதைகள் மழையின் கடவுளான இந்திரனோடும், ஆயர்பாடித் தலைவனான விஷ;ணுவோடும் தொடர்புபடுத்திக் கூறுகின்றன. ஆனால் தமிழ் இலக்கியத்தில் தைத்திங்கள் பற்றி பல்வேறு இடங்;களிலும் குறிப்பிடுப்பட்டுள்ளமையைக் காணமுடிகின்றது. பொதுவாக சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் பற்றிய பாடல்களைக் காணமுடிகின்றது.

வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தையூண் இருக்கையில் தோன்றும் நாடன்'
நற்றிணை 22) என்னும் செய்யுள் தைமாதத்தில் மழை பெய்வதனால் மழையில் நனைந்த குரங்குகள் உணவுண்ணாது இருந்து நோற்பதை ஒத்ததாக பெண்கள் நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி ஈர உடையோடு வரும் காட்சியை எடுத்துக்காட்டுவதன் மூலம் தைப் பொங்கலுக்கான ஏற்பாடுகள் அங்கு இடம்பெற்றிருத்தல் வேண்டும் என உணர முடிகின்றது. அவ்விதமே ஐங்குநுறூறு என்னும் சங்க இலக்கியத்திலும்

நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப்
பலர்படிந் துண்ணும் நின்பரத்தை மார்ப
ே (புறநானூற்றிலும், ஐங்குறுநூற்றிலும் (ஐங்குநுறூறு 84)

தைத்திருநாளுக்கு மகளில் கூட்டமாக நீராடிவருவதாகக் குறிப்பிடுவதனைக் காணமுடிகின்றது.
'தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ' என்று கலித்தொகைப் பாடலாலும் தைமாதம் சிறப்பாகக் குறிப்பிடப்படுவதனை காணதலாம்.

ஈழத்த்தில் இயற்றப்பட்ட 'சரசோதிமாலை' என்னும் நூல் தம்பதெனியாவில் 1310ம் ஆண்டு சிங்கள மன்னனின் பணிப்பின்பேரில் போசராச பண்டிதர் என்பவரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது, இந்தநூலில் தைப்பூசத் திருநாள்; பற்றிய பாடல் அமைந்துள்ளது, தமிழரும் சிங்களவரும் தைப்பூசத் திருநாளைக் கொண்டாடியுள்ளனர் என்பதனை அறியமுடிகின்றது. உழவுத்தொழில் சிறப்படைய தைப்பூசத் திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

திரு உலாவு தைத்திங்கள் பூசநாள்
மருவு பூரணையின் மகிழ்ந்து யாவரும்
பொரு விலாத புதியது அருந்திடிற்
பெருகு தானியம் பாவும் பெறுவரே


                                                             (சரசோதிமாலை ஏர்மங்கலப் படலம் 24)

தமிழர்கள் அனைவரும் பாரபட்சமில்லாமல் கொண்டாடும் ஒரே தமிழ்ப் பண்டிகை 'பொங்கல் பண்டிகை'. பொங்கல் என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். குறிப்பாக கிராமங்களில் இது மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த பொங்கல் திருநாள் தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது.பொங்கலுக்கு முன்பே ஒவ்வொருவரும் பொங்கல் வாழ்த்து அட்டை வரைந்தும், கடைகளில் வாங்கியும் ஒருவருக்கொருவர் வாழ்த்து செய்தியை பரிமாறிக்கொள்வர்.

சமய குரவரான திருஞான சம்பந்தர் பூம்பாவை என்னும் நங்கையை உயிர்ப்பித்தெழ வைத்த திருப்பதிகமாக அமைந்துள்ள திருமுறையில் தைப்பொங்கல் திருநாளைக் காணாமல் போவாயோ பூம்பாவாய் எனப் பாடுவதன்மூலம் தைப்பொங்கல் சம்பந்தர் வாழ்ந்த 7ம் நூற்றாண்டிலும் கொண்டாடப்பட்டுள்ளமை வெளிப்படை.

தைப்புசம் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்புசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்'


தைப்பொங்கல் தைமாதத்தின் சிறப்புப்பொருந்திய பெருவிழாவாக்க் கொண்டாடப்பட்டுள்ளமையை சிலப்பதிகாரத்திலும் காணமுடிகின்றது. தைத்திருவிழா மார்கழி மாத இறுதிநாளன்று போகிப்பொங்கல் என்றும், தை முதலாம் நாள் தைப்பொங்கல் அல்லது பெரும் பொங்கல் என்றும் அதற்கு மறுநாளற் உழவுத்தொழிலுக்கு உழவனோடு தோழ்கொடுத்து எழைக்கும் ஆநிரைக்கு விழா எடுத்தக் கொண்டாடும் பழக்கமும், நான்காவதுநாள் உற்றார் உறவினைக் கண்டு நலன் விசாரித்து ஒன்றாகச் சேர்ந்த இருந்து கொண்டாடும் ஒன்று கூடலாகவும் மொத்தத்தில் நான்கு நாட்கள் கொண்டாட்டமாக இடம்பெறுகின்றது. ஈழத்துத் தமிழர்களைப் பொறுத்தவரை தைப்பொங்கலும், பட்டிப்பொங்கலுமே முக்கியமானவையாகக் கொண்டாடப்படுகின்றன.

போகிப்பொங்கல்

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

பொங்கலுக்கு முதல் நாளே வீட்டைக் கூட்டிப் பழையவற்றை நீக்கி துப்பரவு செய்யும் வழக்கம் நீண்டகாலமாக விவசாயிகளிடம் இருந்துவந்துள்ளது. வர்ணம் பூசி விட்டை அலங்கரிப்பதோடு வீட்டின் நாலாபுறமும் உள்ள வேலிகள் புதுப்பிக்கப்பட்டு புத்தெளில் பெறவைக்கும் நிலமையம் கிராமப்புறங்களில் காணப்படுகின்றது. சிற்சில கிராமங்களில் தங்களை விட்டுப்பிரிந்த உறவினர்களை நினைந்து ஒப்பாரி வைத்து அழும் நிலைமைகளும் இன்றும் இடம்பெறுகின்றன.

மாட்டுப்பொங்கல் அல்லது பட்டிப்பொங்கல்

தைப்பொங்கலுக்கு அடுத்தநாள் மாடுகளைக் குளிப்பாட்டி பொங்கி அவற்றிற்கு அமுதூடு;டி தங்கள் நன்றியை மாடுகளுக்கும் தெரிவிக்கும் உயரிய பண்பு தமிழர் பண்பாட்டில் நிலைத்துவிட்ட ஒன்று. மாடுகளை நீர் நிலைகளுக்கு கொண்டுசென்று நீராட்டி, மஞ்சள் சிவப்பு வர்ணங்கள் பூசி அழகுபடுத்துவதோடு மாட்டின் கொம்புகள் சோடிக்பட்டு மலர் மலை சூட்டி அழகுபடுத்துவர். மாலை வேளையில் வண்டிச்சவாரி, சல்லிக்கட்டு என்னும் காளை அடக்குதல் என்னும் விளையாட்டுக்கள் இடம்பெறுகின்றன.

காணும்பொங்கல்

வெளியிடங்களுக்குத் தொழில் நிமித்தம் அல்லது திருமண முறைகள் காரணமாகச் சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்து உறவினர்களோடு கூடி மகிழ்வது தைப்பொங்கலின் வரலாற்றுப் பெருமைமிக்க நிகழ்வாகத் தமிழ் நாட்டில் கொண்டாடுகின்றார்கள். மாட்டுப்பொங்கலுக்கு அடுத்தநாள் உறவினர்கள் அனைவரும் பொதுவிடம் ஒன்றில் கூடி உண்டு உரையாடி மகிழு; நாளாகக் காணும்பொங்கல் கொண்டாடப்படுகின்றது.

காணும்பொங்கல் பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காக வேண்டி மேற்கொள்ளும் பொங்கலாகவும் கொள்ளப்படுகின்றது. காணும்பொங்கல் தமிழகத்தில் கொண்டாடுவதுபோன்று ஈழத்தில் கொண்டாடப்படுவதில்லை.
 

த.சிவபாலு MA

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்