பரிபாடலில் முருகன் வரலாறு

முனைவர் பூ.மு.அன்புசிவா


'பரிபாடல் என்பது மிகவும் முக்கியமான அதேவேளையில் ஓர் அசாதாரணமான தொகுதியாகவும் காணப்படுகிறது. முதலாவது, இது ஒரு இசைப்பாடல்; இலக்கிய வகை அல்ல. இது முற்றிலும் நிகழ்த்துகை, ஆற்றுகை சார்ந்த ஒரு வடிவம். அதிலே யார் பாட்டு இயற்றினார்கள்? யார் இசையமைத்தார்கள்? என்கின்ற தரவுகள் தரப்பட்டுள்ளன. இசைத்தமிழ் நூல் ஒன்று இங்கு இலக்கியமாகக் கொள்ளப்படுகிறது.' எட்டுத்தொகை இலக்கியங்களுள் 'ஓங்கு பரிபாடல்' என அடைமொழியால் சிறப்பிக்கப்படும் இலக்கியமாகப் பரிபாடல் விளங்குகிறது, பரிபாடல் என்னும் ஒருவகைப் பாவால் இயன்ற நூலாதலால் இது பரிபாடல் எனப்பெயர் பெற்றது. பரிபாடல் பாடிய புலவர்கள் பதின்மூவர். அவற்றிற்கு இசை வகுத்தோர் பதின்மர் ஆவர். 'பரிபாடல் மதுரை மாநகரையும் மதுரை நகருக்கு வளமும் வனப்பும் காப்பும் தந்த வையை ஆற்றையும் மதுரையைச் சார்ந்த திருப்பரங்குன்றத்துச் செவ்வேளாகிய திருமுருகனையும் மதுரையை அடுத்துள்ள திருமாலிருங்குன்றத்து நெடுவேளாகிய மாயோனையும் கொற்றவைத் தெய்வத்தையும் பாடுவதாக அமைந்துள்ளது. பிறதொகை நூற்களைப் போலன்றித் தமிழ்நாட்டின் பகுதிகளையெல்லாம் கொண்டு எழுந்த செய்யுளாக இல்லாமல் மதுரை நகரையும் மதுரையையொட்டி ஓடுகின்ற வையை ஆற்றையும், திருப்பரங்குன்றத்தையும், திருமாலிருங்குன்றத்தையும் பாடுபொருளாகக் கொண்டு பரிபாடல் எழுந்துள்ளது என்பதால் இந்நூலினை மதுரையைப் பற்றி எழுந்த நூல் எனக் கூறுவர். செவ்வேளைப் பற்றிய எட்டுப்பாடல்கள் 612 அடிகளைக் கொண்டவையாக அமைந்துள்ளன.

கந்தவேளின் பெயர்கள்

முருகன் என்னும் பெயர் பரிபாடல் உள்ளிட்ட எல்லாச் சங்க இலக்கியங்களிலும் பயின்றுவந்துள்ளது. (முருகு:269, அகம்.158, பரி., 5;50, புறம்.,53, ஐங்குறு., 249) 'விழைவு' எனப் பொருள்படும். 'வேள்' (8:61), என்னும் சொல் அடைமொழி சேர்ந்து நெடுவேள்(3:37) வெல்வேள்(18:36), செவ்வேள்(5:13) எனப் பரிபாடலில் காணப்படுகிறது. கந்தவேளைக் குறிக்கும் செவ்வேள் எனும் பெயர் பரிபாடலில் மட்டும் தான்இடம்பெற்றுள்ளது. அதனால்தான் முருகனைப் பற்றிய பாடல்களைச் 'செவ்வேள்' எனும் தலைப்பில் பரிபாடலில் அமைத்தனர் எனலாம்.

வையை வரவும் வளமும்

'வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி
விளிவு இன்று, கிளையொடு மேல் மலை முற்றி,
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்;
ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,
அகரு வழை, ஞெமை, ஆரம், இனைய,
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளி கடல் முன்னியது போலும், தீம் நீர்
வளி வரல் வையை வரவ
ு' (பரி. 12: 1-8)

என்று வையையில் கடல்போல் நீர் பெருகி வந்த காட்சி சொல்லப்படுகிறது. மண்ணிலுள்ள நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழையாகப் பொழிகிறது. மின்னலும் இருளுமாக மாறிமாறித் தோன்றி சைய மலையில் பெய்த மழை வையை ஆற்றில் காற்றினால் உதிர்ந்த மலர்களைப் பரப்பியும்; நாகம், அகில், சுரபுன்னை, ஞெமை, சந்தனம் ஆகிய மரங்கள் வருந்துமாறும் தகரம், ஞாழல், தேவதாரம் ஆகிய மரங்களைச் சாய்த்து அடித்துக்கொண்டு வந்தது. இவ்வாறு வருகின்ற வையையானது பெரிய கடல் பொங்கி வருவதைப்போல இருந்தது என புலவர் வையையின் வரவைக் குறிக்கின்றார்.

கந்தவேளைக் குறிக்கும் பழைய சொல்லான 'சேயோன்' என்பதனைத் தொல்காப்பியத்தில் காணலாம். இச்சொல் விகுதியயின்றி, 'சேய்' எனப் பரிபாடலில்(6:69, 5:54) வந்துள்ளது. நச்சினார்க்கினியர், 'செய்யவன்' என்பதே 'சேயோன்' என நீண்டிருக்கவேண்டும் எனக் கருதுவர். (முருகு. 61, நச்சர்.,உரை), 'சேஎய்' என்பது, 'காஅய் கடவுட்சேய்'(5:13) என, 'மகன்' என்ற பொருளிலும் 'சேஎய்குன்றம்' (6:69) என, 'செம்மை' என்ற பொருளிலும் வந்து வழங்குகின்றது.

'வேள்' என்னும் சொல், 'மன்மதன்', 'முருகன்' இருவருக்கும் பொருவாக இருந்ததால் முறையே 'கருவேள்'(மன்மதன்), 'செவ்வேள்'(முருகன்) என்றும் அடைமொழி கொடுத்துக் குறிப்பிட்டனர். இளமையாய் இருத்தலின், 'குமரன்' என்றும்(9:82) திருமாலுக்கு மருமகனாய் இருத்தலின், 'மாஅல்மருகன்' (19:57) முருகனுக்குப் பல பெயர்கள் உண்டு. 'வெறிகொண்டான்' (9:44) என்றும் முருகன் அழைக்கப்பெற்றார்.

கந்தவேள் பிறப்பு

செவ்வேளைப் பற்றி பாடிய புலவர்களுள் கடுவனிளவெயினனாரே கந்தவேளின் பிறப்பை விரிவாகக் கூறியுள்ளார். திரிபுரத்தை அழலால் எரித்தபின்பு சிவபெருமான் உமையோடு சேர்ந்திருந்தான்.இந்திரன் சிவபெருமானிடத்து ஒரு வரம் பெற்று இச்சேர்க்கையால் தோன்றிய கருவை அழிப்பாயாக என வேண்டினான். சிவபெருமான் இந்திரனுக்குக் கொடுத்த வரத்தின்படி அக்கருவினைச் சிதைத்தான். சிதைக்கப்பட்டகரு அமரர் சேனைக்குத் தலைவனாகும் என ஞானத்தால் உணர்ந்த தெய்வ முனிவர்கள் எழுவரும் இந்திரனுக்கு ஊறு வாராதென உறுதி கூறி அவனிடமிருந்து அச்சிதைந்த கருவை ஏற்றுச் சென்றனர். அதனை அம்மாதவர் வேள்வியின்கண் இட்டனர். பின்னர் அதனை அந்ததி நீங்கலாக கார்த்திகை மகளிர் அறுவர்க்கும் வழங்கினர். இவ்வறுவரும் அதனை உண்டு சூழுற்றுப் பின் இமயமலையிலுள்ள சரவணப் பொய்கையில் தாமரைப் பூவாகிய பாயலில் குழந்தையை ஈன்றனர். ஈன்ற அப்பொழுதே இந்திரன் இகல்கொண்டு முனிவர்களுக்குத் தான் கொடுத்த வரத்தை மீறி வச்சிரப்படையால் அவற்றை வெட்னொன்.

அவை ஆறு துண்டமாகச் சிதைந்தன. ஆறு துண்டமும் ஆறு குழந்தைகளாகிப் பின் ஒன்றாயின. குழந்தைப் பருவத்திலேயே முருகனிடம் இந்திரம் தோல்வியுற்றதால், முருகனுடைய இவ்வாற்லைக் கண்ட அக்னிதேவன் (அனலன்) தன்மெய்யிற் பரித்துக் கோழியை முருகனுக்குப் பரிசாகக் கொடுத்தான். இந்திரன் மயிலை அளித்தான். எமன் வெள்ளாடு நல்கினான் (5:12, 14:25-26).

முருகனைக் கார்த்திகை மகளிர் உமையம்மை இருவருக்கும் மகனெனப் பரிபாடல் கூறுகிறது (8:127,128) விட்டான் மனைவியான அருந்ததி, சிவன், முருகன் என்னும் கடவுளரைவிடப் பெருமை வாய்ந்தவள் என்பதை நிறுவவே முருகன் பிறப்புப் பற்றிக் கதைகட்டிவிடப்பட்டுள்ளது என மறைமலையடிகளால் கருதுவர்(மறைமலையடிகளார், தமிழர் மதம், ப.,207).

முருகனின் திருவிளையாடல்

முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் பல பரிபாடலில் காணக்கிடக்கின்றன. பல பரிபாடல்கள் முருகன் சூரபதுமனை மாய்த்ததைக் குறிப்பிட்டுள்ளன. புராணக் கதைகளை விரித்துரைக்கும் கடுவனிளவெயினனார் சூரபதுமன் அழிவினையும் விரிவாகப் பாடியுள்ளார். முருகன் தன் 'பிணிமுகம்'என்னும் யானை மீதமர்ந்து சூரன்தங்கி வாழும் கடலுக்குச் சென்றார்; அவன்மா மரமாகுவும் மலையாகவும் மாற்ருருக் கொண்டு மறைந்தனன். கந்தவேள் தன்னுடைய வேலை எரிந்து மாவினை அழித்தார். மலையினையும் அழித்தார்; சூரனின் சுற்றத்தாரையும் அழித்தார் (பரி. 5:12-14, 5:7, 9:70, 14:18, 18:4, 19:10-103, 21:8-9).

பரிபாடலில் மொத்தமாக ஒன்பது வையைப்பாடல்கள் உள்ளன. அவற்றில் ஏழு பாடல்கள் முழுமையாகவும் ஒருபாடல் சிதைவடைந்த நிலையிலும் மற்றையது திரட்டுக்களில் இருந்து பெற்றுக்கொண்ட தனிப்பாடல்களுமாகும். இவற்றில் அகத்திணைச் செய்திகளே பெரிதும் பயின்றுள்ளன. இவை எல்லாவற்றையும் அகப்பாடல்களாகக் கருதியே துறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாண்டியனின் ஆட்சிச்சிறப்பு, கொடைச்சிறப்பு, மதுரையின் சிறப்புக்கள் கூறப்படும் பகுதிகளில் புறத்திணைக்குரிய பண்புகள் உள்ளன. வையையின் வரவும் வளமும், நீராடுவோர் இயல்புகள், நீர்ப்பண்பாடுகள், அகப்பொருள் - புறப்பொருள் தழுவிய செய்திகள், வையையை வாழ்த்துதல் ஆகியன வையைப் பாடல்களின் பொதுவான அமைப்பாக அமைந்துள்ளன. அப்பாடல்களை இயற்றிய புலவர், இசை வகுத்தவர், பண் ஆகிய குறிப்புக்களை நோக்குவோம். கிரௌஞ்கசிரி என்ற வடமொழிப் பெயர் பரிபாடலில் இடம்பெறவில்லை. கிரௌஞ்சம் என்பது அன்றிற்பறவையினைக் குறிக்குமாதலால் அம்மலையை பறவையின் பெயர்பெற்ற மலை, 'புள்ளொடு பெயாய பொருப்பு'(பரி. 21:9, 5:9) எனத் தமிழுணர்வுடன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கந்தவேள் விண்ணக மடந்தை தேவசேனையை மணந்தது போலவே, மண்ணக மடந்தை வள்ளியையும் மணந்தமையால் விண்ணுலகும் மண்ணுலகும் முருகனால்இன்புற்றன (பரி-19:171,14:21-22).

தலை, கைகள்

ஆறு தலைகளையும் இளங்கதிர் மண்டிலம் போன்ற முகத்தினையும் உடையவர்கந்தவேள்( பரி., 5:10) கந்தவேள் தன் பன்னிருகைகளிலும் பன்னிருபடைகளைக் கொண்டுள்ளார் (பரி.-5:63-68) அவர்தம் முந்நான்கு தோளும் முழவினை ஒக்கும் (பரி., 5:11) முருகனது பேரறிவையும், பேராற்றலையும் புலப்படுத்தவே அறுதலைகளையும், பன்னிருகை களையும் உடையவராகஅவரை உருவகஞ்செய்துள்ளனர் என்பர். (மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் தொகுதி, 2,ப.,487).

மார்பும் அடியும்

மலைபோன்ற ஆற்றலும் அகலமும் கொண்டது செவ்வேளின் மார்பு. அதன்கண் வாளால் வெட்டப்பட்ட வெற்றித் தழும்புகள்நிறைய உள்ளன(பரி., 9:27-28). சந்தனம் முதலிய நறுமணப் புகைகமழ மலர்மாலையும் முத்துமாலையும் கந்தவேள் மார்பினை அணிசெய்கின்றன (பரி.,9:28-29) தன் திருவடியில்தோலாலாகிய செருப்பினைக் கந்தவேள் அணிந்துள்ளான்(பரி., 21:3-7) மிதியடியைப் புனைந்துரைத்தல் நல்லச்சுதனார் பாடல்ஒன்றிலேதான் காணப்படுகின்றது.

ஆடையும் மாலையும்

முருகனது ஆடை செந்நிறமானது. பசும் பூணினையும், முத்தாரத்தினையும் அவர் அணிந்துள்ளார். கடப்பந்தாரும் முத்துமாலையும் அவர்தம் மார்பினுக்கு அழகு செய்கின்றன (பரி:19:97). கந்தவேளுக்கு உரியது கடம்பு ஆதலின், பெரும்பாலான புலவர்கள் அவரைக் கடப்பந்தார் சூடியவராகவே பாடியுள்ளனர்(பரி., 5:81, 21:10-11).

படைகள், கொடி, ஊர்தி

செவ்வேளைப் பற்றிப் பாடிய புலவர்கள் அனைவரும் முருகனது படைகள், கொடிடூ ஊர்தி பற்றிய சிறப்புகளை அழகுற எடுத்தியம்புகின்றனர்.

கந்தவேளைப் பாடிய புலவரெல்லாம் அவர்தம் வேற்படையினையும், சூரபதுமனை அழித்ததையும் தவறாது குறிப்பிட்டுள்ளனர். வேல் பரிபாடலில், 'சுடர்ப் படை (14-18) ஏந்திலை(17-2), எ·கு(9-79) எனப் பலபெயரால் வழங்கப்பெறுகிறது. பலதேவர்கள் வழங்கிய பதினோரு படைகளும் முருகனிடம் இருந்தன (பரி., 5:63-68) சேவலும் மயிலும் எழுதிய கொடிகளே முருகனுக்குரியன(பரி.,17-48) யானையையும்,மயிலையும் ஊர்தியாக உடையவர் செவ்வேள்(பரி., 19:28, 8-67) கடுவனிளவெயினனாரும், நல்லழிசியாரும் பாடிய பாடல்களால் முருகனுடைய யானை ஊர்தியின் பெயர், 'பிணிமுகம்' என்பதனை அறியலாம்.

வெறியாட்டு


வெறியாட்டத்தைப் பரிபாடல் விரவாகக் கூறவில்லை. கந்தவேளைப் பாடிப் பரவும் வேலனைப் பற்றிக் கூறும்போது சொல்லளவில், 'வெறியாட்டம்' பற்றிய குறிப்பு காணப்படுகிறது (பரி., 5:13-15, 9:44).

பரிபாடலும் முருகாற்றுப்படையும்

பரிபாடலின் முதற்பாடலே திருமாலைப் பற்றியதாதலின் அதற்கெனத் தனிக்கடவுள் வாழ்த்தில்லை. அதுபோன்றே பத்துப்பாட்டின் முதற்பாட்டு முருகனைப் பற்றியதாதலின் அதற்கும் தனியாகக் கடவுள் வாழ்த்தில்லை.

பரிபாடல் பாண்டிய நாட்டை மட்டும் சிறப்பித்துக் கூறுகிறது. ஆனால் முருகாற்றுப்படை தமிழகத்திலுள்ள முருகனுடைய ஆறுபடைவீகளையும் பாடிப் புகழ்ந்துள்ளது. முருகாற்றுப்படை பழமுதிர்ச்சோலையை முருகனுக்குரியது என்று விளம்பும். பரிபாடலோ அதனைத் திருமாலுக்குரியதாகக் கூறும். முருகனது பிறப்பு அவனது சிறப்புகள் முதலியவற்றை இருநூல்களும் கருத்தொப்புமையுடன் எடுத்தியம்புகின்றன. வெறியாட்டு பற்றிய செய்திகளை முருகாற்றுப்படையில் (முருகு.,218-244) விரிவாகக் காணலாம். முருகாற்றுப்படையை விட பரிபாடலே கந்தவேளினது பிறப்பை விரிவாகக் கூறியுள்ளது. முருகனின் ஊர்திகளுள் ஆடும் ஒன்றென முருகாற்றுப்படை கூறுகிறது (முருகு-210).

திருமால், சிவன், அயன் முதலிய கடவுளர்கள் பரங்குன்றத்திற்கு முருகனை வணங்கச்சென்றனர் என்று பரிபாடல் கூறும். முருகனால் சிறைப்படுத்தப்பட்ட நான்முகனைச் சிறைவீடு செய்யவே சிவன் மால், இந்திரன் முதலிய தேவர்கள் சென்றனர் என்று முருகாற்றுப்படை கூறுகிறது. முருகாற்றுப்படை மட்டுமே முருகனின் ஆறு தலைகளும், பன்னிருகைகளும் புரியும் பணிகளை விரிவாகக் கூறுகிறது. பரிபாடலுக்குப் பண் வகுக்கப்பட்டுள்ளது. முருகாற்றுப்படைக்குப் பண் வகுக்கப்படவில்லை.

பரிபாடலும் கந்தபுராணமும்

பரிபாடலும் கந்தபுராணமும் முருகனைச் சிவபெருமானின் மகன் எனக் கூறினும் முருகன் பிறந்த கதையைக் கூறுவதில் கந்தபுராணம் பரிபாடலிலிருந்து வேறுபடுகிறது. பிரமனும் தேவர்களும் கைலாயம் சென்று சிவனைக் கண்டு தம்மைச் சூரபதுமனின் கொடுமைகளினின்றும் விடுவிக்க வேண்டுமென வேண்டினர். ஐம்முகமுடைய சிவபெருமான், மேலும் ஒருமுகத்தைப் படைத்துக்கொண்டு தம் ஆறுமுகங்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகளை உண்டாக்கினார். பின்னர் தீக்கடவுளையும், வாயுதேவனையும் நோக்கி இப்பொறிகளைக் கங்கயிற் கொண்டு சேர்க்குமாற கூறினார். அவர்கள் சேர்க்கவே கங்கை அவற்றைச் சரவணப் பொய்கையில் சேர்த்தது. அங்கு அவ்வாறு தீப்பொறியும் ஆறுகுழந்தைகளாக மாறின.

திருமால் உள்ளிட்ட தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க கார்த்திகை மகளிர் அறுவரும் அக்குழந்தைகளை வளர்த்தனர், உமையம்மை சரவணப் பொய்கை சென்று ஆறு குழந்தைகளையும் ஒருசேரத்தழுவியவுடன் அவை ஆறுதலையும் பன்னிருகைகளுமுடைய ஒரு குழந்தையாயின. இதுவே முருகன் பிறப்புப் பற்றிய கந்தபுராணக்கதையாகும்.

தொகுப்புரை:

  • சங்க இலக்கியங்களில் தனித்துவமாக விளங்கும் பரிபாடலின் வையைப்பாடல்களின் ஊடாக தனியே 'புனலாடல்' மட்டுமல்லாமல் அக்கால சமுதாயத்தின் வாழ்க்கைக் கோலங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக பரிபாடல் என்ற இலக்கியமும் அதன் தோற்றத்துக்கான பிரதான காரணியும் தமிழ்நாட்டின் தொன்மையான வாழ்க்கையினையும் வரலாற்றையும் பதிவுசெய்யப்படுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. நான்முகனைச் சிறைப்படுத்திய குறிப்பு பரிபாடலில் இல்லை. ஆனால் பிரணவப் பொருளை நான்முகன் அறியாததால் முருகன் அவரைச் சிறை வைத்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.
     

  • சூரபதுமனைக் கொன்ற வரலாறு பரிபாடலில் காணப்படுவது போன்று கந்தபுராணத்தில் காணப்படவில்லை. முருகனது வேல் சூரனது மார்பை இருகூறாக்கியதெனவும், ஒரு கூறு மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் மாறின என்றும் அவற்றை முருகன் ஊர்தியாகவும், கொடியாகவும் கொண்டான் எனவும் கந்தகபுராணம் கூறுகிறது. இச்செய்தி பரிபாடலுள் வேறாகக் காணப்படுகிறது. கந்தவேளின் ஊர்தியாக ஆடு நாரதர் செய்த வேள்ளியினின்றும் வந்தது எனக் கந்தபுராணம் கூறுகிறது.யமன் ஆட்டினை முருகப்பெருமானுக்குப் பரிசளித்தததாகப் பரிபாடல் கூறுகிறது. கந்தபுராணம் மிகப்பெரிய நூலாகும். அது வீரவாகுவின் வரலாறு, சூரபதுமனினன் தம்பி தராசுரன் பற்றிய கதை சூரனினன் பிறப்பு அவன் வேள்ளிவியில்மறைந்தது பின்னர் உடனே தோன்றியது, சுவர்க்கம், சத்தியவுலகம், வைகுந்தம் என்னும் உலகங்களுக்குச் சென்றது முருகனுக்கும், சூரனுக்கும் நிகழ்ந்த பெரும் போர் முருகன், வள்ளி, தேவசேனையாரை மணந்தது முதலியவற்றைக் கற்பனையுடன் விரித்துரைக்கும்.
     

  • சங்கஇலக்கியங்களில் மற்ற நூல்களைக் காட்டிலும் பரிபாடலிலேயே கந்தவேளைப் பற்றிய செய்திகள் மிகுதியாகக் காண்ப்படுகின்றன. பரிபாடலில் கந்தவேளைப் பற்றிய செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. பரிபாடலில் கந்தவேள் அனைவருக்கும் அருளும் தெய்வமாகவும், சூரனையழித்த தேவசேனாபதியாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. பரிபாடலில் பரங்குன்றம் மட்டும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் கூறும் முருகனது பிறப்பு வரலாறு பரிபாடலிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது.

     

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோயம்புத்தூர்- 641 035
 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்