வைரமுத்து அவர்களுக்கு சுகி சிவம் கேள்விகள்

சொல்வேந்தர் சுகி.சிவம்
 

அத்துமீறல் - ஓர் அலசல்

1. ரந்த வாசிப்பும் சிறந்த மொழித்திறனும் சொந்தச் சிந்தனைகளும் உடைய மதிப்புறு மனிதர் கவிஞர் வைரமுத்து என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் ஆண்டாள் குறித்த கட்டுரையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்ததால் அவரிடம் சில கேள்விகள் எழுப்பவேண்டி உள்ளது.

2. இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வுச் செய்தியைப் பதிவிடும்போது – அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் எழுதாமல் நழுவியது ஏன்? இது தவறு, அல்லது சரி என்று காரண காரியங்களுடன் எழுதவேண்டியது நேர்மையான இலக்கியவாதியின் கடமை அல்லவா? அந்த நேர்மை உங்களிடம் இல்லாமல் போனது ஏன்?

3. பலரது பலகால நம்பிக்கைகளுக்குப் பகையாக (முரணாக அல்ல) ஒரு செய்தியை எழுதும்போது தக்க ஆதாரங்களையும் நிரூபணங்களையும் தந்திருக்க வேண்டும். மேம்போக்கான மேற்கோள் எவ்வாறு ஆதாரமாக நிரூபணமாக ஆகமுடியும்? ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் அவ்வாறு வாழ்ந்து காலம் கழித்தாள் என்பதற்கு என்ன சான்றுகளைச் சேகரித்தீர்கள்?

4. பக்தி இலக்கியம் பற்றி ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் எழுதிக்கொண்டிருக்கும் நீங்கள், பகுத்தறிவு நண்பர்கள் கண்டனங்களுக்குள்ளிருந்து தப்ப அவர்களைத் திருப்திப்படுத்த இப்படியொரு சாமர்த்தியத்தைக் கையாண்டீர்களா?

5. சமண – பௌத்த சமயங்களின் கடு நெறிகளுக்கு மாறான துய்ப்பின்; கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மதநெறிகளின் குறியீடு – ஆண்டாள் என்கிறீர்கள். இது பிழை. சமண – பௌத்த மதங்களால் வாழ்க்கை இறுக்கமானதும் பக்தி இயக்கங்கள் அதனைத் தளர்த்த முயன்றதும் வரலாற்று உண்மை. அறிவேன். ஆனால் துய்ப்புநெறி சமயத்தின் செய்தி அன்று. நுட்பமான வேறுபாடு தெரியவேண்டும். உலகியல் துய்ப்பினும் பரம்பொருள் துய்;ப்பே மேலானது என்கிற அணுகுமுறையே ஆண்டாளின் செய்தி. 'இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம் மற்றைநம் காமங்கள் மாற்று' என்கிறாள் ஆண்டாள். மற்றை நம் காமங்கள் மாற்று என்பது உலகியல் துய்ப்புக்கு எதிரான நிலைப்பாடு அல்லவா.

6. உண்மையில் ஆண்டாளின் தமிழ் ' கடவுளைக் காதலிக்கும் அச்சமற்ற அழகியல் உணர்வின் உச்சபட்ச வெளிப்பாடு. ஆன்மாவின் அனுபவத்தைச் சரீரத்தின் தாகமாகவும் சொல்ல முயன்ற முயற்சி. கடினமானதாகக் கண்டறியப்பட்ட கடவுள் தத்துவத்தை, கலவி, காமம், காதல் என்கிற அகநிலையில் பேசமுடியும் என்று நிரூபித்த கவிதாயினியின் சாதனை அது. முக்தி என்று ஆன்ம விடுதலை பேசிய ஒரு சமயத்தின் முழுச் சுதந்திரம் வெளிப்படுத்திய தமிழ். கோதைத்தமிழ். ஆண்டாள்தமிழ் பதின்மூன்று நூற்றாண்டுகளைக் கடந்தும் உயிர் வாழ்கிறது. ஆனால் அடுத்த நூற்றாண்டுவரை உங்கள் கவிதைகள் தாக்குப் பிடித்தால் அதுவே பெரிய விஷயம் என்பது புரிய வேண்டாமா?

7.
அர்ச்சாவதாரத்தோடு எலும்பும் சதையுமுடைய பெண் எவ்வாறு கலக்க முடியும் என்று அறிவு கேள்வி எழுப்புமானால் இறைபணியிலும் கோயில் பணியிலும் காலம் கழித்துக் கரைந்து கலந்த திலகவதியார் போல ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் வாழ்ந்திருக்கக் கூடும் என்று எழுதியிருந்தால் சமய உலகம் இவ்வளவு கொதிப்படைந்திருக்காது.

8. உங்கள் வார்த்தைத் தேர்வில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம் வெளிப்படுவதாகவே பக்தர்கள் வருந்துகிறார்கள். குருதி இறைச்சி என்ற சொற்களில் எந்தப் பிழையுமில்லை. என்றாலும் 'ஊனினை உருக்கி' என்ற மணிவாசகரையும் 'தசையினைத்தீ கடினும்' என்ற பாரதியையும் நீங்கள் ஒருமுறை கூர்ந்து கவனிப்பது அவசியம். சமய உலகிற்கு என்று மரபு இருக்கிறது. நீங்கள் ஒரு நாத்திகராக அறியப்பட்டவர். அப்படியிருக்கக் காயப்படுத்தும் வார்த்தைகளில் கவனம் காட்டத் தவறியது ஏன்?

9. வைணவக் குடும்பங்களில் ஒவ்வொரு பெற்றோரும் தம் மகளை ஆண்டாளாகப் பாவித்து ஆண்டாள்கொண்டை போட்டு மாப்பிள்ளையை ரங்கமன்னராக்கி மணமுடித்துக் கொடுப்பதே வழக்கம். பெற்ற தகப்பன் பெரியாழ்வாராவது அந்த ஒருகணம் ...ஒரேகணம்.... அந்த அழகான கனவை அசிங்கமான பதிவால் கலைத்து என்ன நன்மை பெறுகிறீர்கள்?

10. சாதிக்கட்டுமானம் காரணமாக ஆண்டாளைச் சமூகம் நிராகரிப்புச் செய்திருக்கலாம் என்பது அபத்தமான கற்பனை. வீட்டிற்குள் வரவேற்காத சமூகம் கோயிலுக்குள் குடியேற்றிக் கொண்டாடி இருக்குமா என்ன? கடவுளையே மணப்பேன் என்கிற ஆண்டாள் பெரிதினும் பெரிதுகேள் என்கிற பாரதியின் முன்னோடி. சமூக நிராகரிப்பு என்ற வார்த்தைகளால் அவளது உச்சபச்ச உயரத்தைக் கொச்சைப்படுத்த வேண்டுமா என்ன? நிவேதனம் கூட நூறு அண்டா, வெண்ணெய் நூறு அண்டா சர்க்கரை பொங்கல் என்று பெரிதினும் பெரிது குறித்துப் பேசிய பெண்பிள்ளை, உள்ளூர் மாப்பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு வைகுந்தவாசிக்கு வாழ்க்கைப்பட நினைத்ததே அவளது தனிச்சிறப்பு.

கட்டுரை முழுவதும் ஆண்டாளை வெளிப்படுத்தும் அக்கறையை விட உங்கள் பரந்த புலமையை வெளிப்படுத்தும் வேகமே வெளிப்படுகிறது. நாத்திகராக இருப்பது உங்கள் சௌகர்யம். ஆனால் அதற்காக ஆண்டாளிடமிருந்து கடவுளைக் கழித்தபிறகு என்று கட்டுரையை முடித்திருக்க வேண்டாமே. இறைநிலையை ஆண்டாளிடமிருந்து கழிக்கமுடியாது. கழித்தபின் ஆண்டாள் அங்கே இருக்கமுடியாது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வாங்கிவந்து பால்கோவாவை எறிந்துவிட்டு பிளாஸ்டிக் பையைச் சேகரிக்கும் முயற்சியைப் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லாமல் பாராட்டவா முடியும்
? நாத்திகர்களைத் திருப்திசெய்ய ஆத்திகர்களை வலிக்கச் செய்வது விவேகமா கவிஞரே?

11. அத்துமீறலில் இத்தனை அத்துமீறலா?
  

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்