தொல்காப்பியர் தொடக்கம் தமிழர் சமயம்பற்றி . . . .

த.சிவபாலு MA

மிழர் உலகில் தோன்றிய மக்களில் நாகரீக வளர்ச்சியில் முன் நிற்பவர்கள். திராவிட நாகரீகமாம் சிந்து வெளி நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் தமிழர்கள். திராவிட மொழிகளுள் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ் எனக் கொள்ளப் படுகின்றது. தமிழர் பின்பற்றிய சமயம் சைவம். சிந்து வெளி நாகரீகத்தின் தொட்டில் எனப்படும் இந்து கங்கைச் சாரலில் மொகஞ்சதாரோ, ஹராப்பா ஆகிய இடங்களில் 1920ம் ஆண்டு தொடங்கப்பட்ட அகழ்வாய்வின் பயனாக திராவிட நாகரீகத்தின் உண்மையும், உயர்வும் உலகுக்கு வியப்பை தரத்தக்க பல செய்திகளையும், தகவல்களையும் தந்துள்ளது. இன்றும் காஸ்மீரப் பகுதியில் சைவசயத்தவர்கள் வாழ்ந்து வருவதோடு அதனை காஸ்மீரியச் சைவம் என்றே அழைக்கின்றனர். சைவம் தோன்றியது எப்போ என்பது கேள்;விக்குறியாக இருப்பினும் ஆரிய இனத்தினர் நாடோடிகளாக. மந்தை மேய்ப்பவர்களாக கைபர் கணவாய் ஊடாக இந்திய உபகண்டத்தில் நுளையும் முன்னர் சைவசமயம் வேரூன்றியுள்ளது என்பது மொகஞ்சதாரோ மற்றும் ஹராப்பா அகழ்வு ஆய்வுகள் மட்டுமன்றி தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் எடுத்துக்காட்டடுகின்றன.

சைவசமயமே சற்சமயம். சைவசமயமே அனாதியானது என்றெல்லாம் ஆய்வுகள் வலியுறுத்துகின்றன. சைவத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான் என்றும். சிவ வணக்கம் உலகின் பல பாகங்களிலும் பரவி இருந்தது என்றும் ஆராய்ச்சிகள் நிறுவுகின்றன. சேயோன். மாயோன் என பழந்தமிழ் இலக்கண நூலாம் தொல்காப்பியம் இறைவன் பற்றிக்குறிப்பிடுகின்றது.

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே......
(தொல்..பொருள். அகத.திணை 5)

மாயோன் சேயோன் என்பதற்கு திருமால் எனவும். முருகன் எனவும் பொருள் கொள்கின்றார்கள் உரையாசிரியர்கள். தமிழர் இயற்கையை வழிபட்டவர்கள். நடுகல் வைத்து வணங்கியவர்கள் என்னும் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. இவை இயற்கையின் வழி வந்த தெய்வங்களாகவும் கொள்வாரும் உளர். நடுகல்லை வைத்த வணங்கிய மக்களே சிவலிங்க வழிபாடாகக் கொண்டிருத்தல் வேண்டும் என வாதிடடுவோரரும் அதற்கான காரண காரிங்களை எடடுத்ததுகு;காட்டடுமும் மமமுயுற்சிகளிலுமு; ஈடடுபபடுவதனைக் காணமுடகின்றது,

தொல்காப்பியம் 1610 நூற்பாக்களைக் கொண்ட தமிழர் வாழ்வியல் கூறும் ஒரு அற்புதநூல். இதில் 6000 சொற்கள் வரை உள்ளன என ஆய்வியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதில் கடவுள் என்னும் சொல் மூன்று இடங்களில் வந்துள்ளது, இது இரண்டு இடங்களில் அரசன் என்ற பொருளையும், ஒரிடத்தில் இறைவன் என்ற பொருளையும் குறித்து நிற்பதாக ஆய்வாளர்கள் கூறுவர். தெய்வம் என்னும் சொல் ஒன்பது இடங்களில் தேவர்களைக் குறிக்கின்றது. அணங்கு. அமரர். இமையோர். கூற்றம். தேவர். வானோர். வேந்தன் என்னும் சொற்களில் வந்தள்ளமையை டாக்டர் குஇமோகனராசு அவர்கள் குறிப்பிடுகின்றார். (தொல்காப்பியமும் திருக்ககுறளும் – ஒர் ஒப்பாய்வு)

மலைப்பிரதேசத்திற்குரிய தெய்வம் குறிஞ்சிக் குமரன் எனவும் திருமால் எனவும் கொள்ளப்படுகின்றது. ஆனால தமிழர்கள் போருக்கான வெற்றித் தெய்வமாக கொற்றவையைக் வழிபட்டமைக்கான ஆதாரங்களையும் சங்க இலக்கியங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதிலிருந்து தமிழர்கள் கடவுட் கொள்ளையுடையவர்கள், இறைவழிபாட்டை நோற்றனர் எனக்கொள்ளமுடிகின்றது.

காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்
(தொல். பொருள். பம் 81)

இவ்வடிகளில் கடவுள் என்னும் சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளமையை எடுத்துக்காட்டுகின்றது. கடவுள் என்பதுற்கு எல்லாவற்றையும கடந்தவன் என்ற பொருளை உணர்த்துகின்றது. எல்லாவற்றிற்கும் மேலானவன் இறைவன் என்பதனை பண்டைய தமிழர் கொண்டிருந்தமைக்கு இது தகைசார்ந்த சான்றாக அமைகின்றது.

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்ந்ததொடு கண்ணி வருமே
(பொருள். புறத்திணை 85)

அதாவது தமிழர் இறையியில் வழி சமயம் சார்ந்து நின்றனர் எனக்கொள்ளலாம். இதற்கு திருக்குறளையும் சான்றாகக் கொள்ளலாம். திருக்குறளில் பல்வேறு இடங்களிலுரும் இறைவன் பற்றிய சொல்லாடல் இடம்பெறுவது கண்கூடு. .

முதலில் அகத்திணை இயலுள், நிலமும் பொழுதும் முதற்பொருளாகும் என விளக்கிய தொல்காப்பியர், அவற்றுள் நிலங்களை விளக்கும் போது அவற்றிற்குரிய தெய்வங்களை முன்னர் சுட்டியிருப்பது கருதத்தக்கது.
'மாயோன் மேய காடுறை உலகமும்
........................................................... '
என'னும் அடிகள் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வங்ள் பற்றிக் குறிப்பிடுவுதன்த வழி தெய்வ வழிபாடு இடம்பெற்றிருந்தத என்னும் செய்தியை நாம் தொல்காப்பிய வழி பெறுகின்றோம்.
அவ்வந் நிலங்களின் இயல்பிற்கேற்ப முழு முதலுக்கு பெயரிட்டு வழங்கினர். அகத்திணை இயலுள், கருப்பெருள் இவை எனக் கூறவந்த தொல்காப்பியர் முதலில் தெய்வத்தைக் கருப்பொருளாகக் கூறுகின்றார்.

'தெய்வம், உணாவே, மாமரம், பள், பறை
.........................................................மொழிப'


முதற்பொருள், கருப்பொருள்இ உரிப்பொருள் என்ற இந்த மூன்றனுள் கருப்பொருள்தான் முதன்மையானது. 'தெய்வம்' முதலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடவுட் பண்புகள்

மாயோனைக் குறிப்பிடும் போது அத்தெய்வம் நிலைத்த பெரும் சிறப்பினை உடையதென்றும், தாவா விழுப்புகழை உடையது என்றும் தொல்காப்பியம் குறிப்பிடப்பட்டுள்ளது.

'மாயோன் மேய மன்பெரும் சிறப்பின்
தாவா விழுப்புரம் பூவை நிலையும்'
(தொல்.பொரு. புற.5)

கடவுள், தெய்வம் என்னும் சொற்களில் மட்டும் இறைமையை தொல்காப்பியர் கூறியதோடு நில்லாமல், தொல்காப்பியம் முழுமையும் இறையியல் நிறையியலாக நிறைந்திருப்பதைக் காணலாம். (எ.கா) எழுத்ததிகாரத்தில், 'தமிழில் உயிர், மெய், உயிர் மெய் என அமைந்த அற்புதச் செய்தி எண்ணுவதற்கு இனிமை பயப்பதாகும்.

இந்திய சமயத்துறை பண்பாட்டுத்துறையோடு இணைந்ததாகவே வளரந்து வந்தள்ளது. தொல்காப்பியர் பண்பாட்டுத்துறைகளில் கருப்பொருட்கள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார். அவற்றுள் இறைவழிபாடு முக்கியம் பெறுகின்றது.

'தெய்வம் உணாவே மாமரம் பள் பறை
செய்தி யாழின பகுதியொடு தொகை,
அவ்வகை பிறவும் கருவென மொழிப'
(தொல் அகம் 20)

தெய்வம் என்பதனை முதலாக வைக்கின்றார் தொல்காப்பியர் என்பதனை நொக்கம்போது இறைநெறியினை அவரும் முதன்மைப் படுத்தியுள செய்தியை நாம் பெறுகின்றோம். முதல். கரு. உரி என்பனவற்றுளு; கருவே முக்கியமானது என்பதனைத் தொல்காப்பியம் உணர்த்துகின்றது,

வழிபடு தெய்வம் நின் புறங்காப்ப
பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே
கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ.
(தொல்.பொ. 105)

திருக்குறளை எடுத்துக்கொண்டால் இறைவணக்கம் என்ற அதிகாரமே இதற்கு கோடிட்டுக்காட்டுவதனைக் காணலாம்.

அகரமுதல எழத் தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு –
(குறள் 1)

ஆதி பகவனை இறைவனாகக்க காட்டுவதோடு, பிறவிப் பயனை நீங்குதற்கு இறைவனை வழிபடலே முறையானத விடுதலை தரத்தக்கது என்றும் கூறிப்போந்தார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார
் - (குறள் 10)

என்னும் குறள் இறைவன் உள்ளான் அவனை வழிபட்டால் எம்மிடர்நீங்கும் பிறபபெடுத்ததன் பயனைப் பெறலாம் என்கின்றார் எனின் தமிழர்களிடம் சமயம் இருந்ததிலலை என்று வாதிடுவது பொருத்தமா? என்ற கேள்வி எம்முன்னே தோன்றுகின்றது. இதனை விட அந்தணன் என்றும் இறைவனை அழைக்கும் வழக்காறும் வள்ளுவர் காலத்தில் பயின்று வந்துள்ளமையை நாம் காணலாம்.

அறவாழி அந்தணன் தாழ்சேர்தார்க்க கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது
(குறள் - 8)

அந்தணன் என்பது சிவனை என்றே கொள்கின்றனர் தமிழாய்ந்த அறிஞர்கள். எனவே தமிழரின் சமயம் சைவம் எனக்கொள்ளக்கிடக்கின்றது.

சிவ வணக்கம் ஒரு காலத்தில் இந்தியா முழவதும் நிலவிய தோடன்றி, சீனா, ஜப்பான, இந்துக்கடல் தீவுகள்இ பசுபிக் கடல் தீவுகள், ஆபிரிக்கா, பாபிலோன் (ஈராக், ஈரான், ஆப்கானிஸ்த்தான்), கிறீஸ் ஆகிய நாடுகளிலும் நிலவியது என்பது ஆய்வாளர்களின் முடிவாகும். எகிப்தில் பிரமிட்டுக்களின் சுவர்களளிலும், கீறீசில் விசா என்னுமிடத்திலும், அயர்லாந்தில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் கண்டெடுக்கப்பட்ட புதைபொருட்களிலும் சிவலிங்கங்கள் காணப்படடதாகக் கூறப்பட்டுள்ளது.

சிந்து சமவெளியில் சிவலிங்கம் காணப்பட்டுள்ளது. அதுபோலவே யோக வடிவிலான பல உயிர்களால் சூழப்பட்ட ஆண் தெய்வச் சிலையும் காணப்பட்டது. இவ்விதமே உலகமெல்லாம் பரவி இருந்த சைவசமயம் தமிழர்க்கே உரியதென்பதாகும். சைவத்தில் இருக்கும் ஆரியக் கலப்பால் சைவம் வடக்கிருந்து வந்தது என்பாரும் உள்ளனர். ஆனால், சைவம் தமிழருடையது. பழந்தமிழர் கொள்கையே சைவசமயம் என மறைமலை அடிகள்இ திரு.வி.கலியாணசுந்தர முதலியார் போன்றோர் கூறியுள்ளனர்.

சைவசமயத்தின் அடிப்படைக்கோட்பாடுகளைச் சைவ சித்தாந்தம் என வழங்கப்படும். சைவத்தையும் சைவ சித்தாந்தத்தையும் பற்றி ஆய்ந்த பல மேனாட்டு அறிஞர்கள் கூறியுள்ள முடிவுகள் சைவத்தின் மேன்மையையும் தொன்மையையும் வன்மையையும் தன்மையையும் காட்டுவதாகும்.

'தென்னிந்தியாவிற்குரிய சைவ சித்ததாந்தம் தமிழர் அறிவுத்திறனால் விளைந்ததாகும். ஆது தமிழரின் தத்துவமேயாகும்' என்றார் ஜான். எச். பியட்.

'சைவ வழிபாடு இந்தியா முழவதும் பரவியுள்ள தொன்மை வாய்ந்த தொன்றாகும' என்றார் திரு.பாய். இதனை சங்க இலக்கியப்ப பாடல்கள் மூலம் அறிய முடிகின்றது

பால்புரை பிறைநுதல் தொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே. . .
(புறம் 91) என்னும் செய்யுள் வரிகளிலும்

நன்றாய்ந்த நீணிமிர்சடை
முது முதல்வன்
(புறம் 166)

என்னும் செய்யுள் வரிகளிலும் காணமுடிகின்றது. 'சமய உலகில் இந்தியாவிலுள்ள மிகத் தொன்மையான சமய நெறிகளின் வாரிசாகச் சைவ சித்தாந்த முறை அமைந்துள்ளது. அது தமிழரின் சமய மாகும். வேறு அனைத்தும் தமிழர்கட்டு அயன்மை உடையதாகும். பேரும்பான்மையான மக்களால் பின்பற்றப் படுவதாலும், அதன் சில கூறுகளின் பழைமையினாலும், அது பிற எல்லாச் சமயங்கட்கும் மேலானதாகும்'' என்பார் திரு. டபிள்யூ. கௌடி.

'இந்தியச் சமயங்களில் சைவ சமயம் ஒன்றே கடவுள் தத்துவத்தைத் தெளிவாகவும்' திட்ட வட்டமாகவும் கூறுகின்றது. எனவே, இது மிகச் சிறந்த சமயமாகக் கருதப்படுகிறதது' என்கிறார் என். மாக்னிக்கால். மேற்கண்டவை மட்டுமல்ல, மேலும் பலர் கூறியுள்ளனர். இன்னமும் ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒன்னார்த் தெய்வர் முன்னின்று விலங்;கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்த வழுpந்ததெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே'
– புறநானூறு 335

என்னும் பாடல் சிவலிங்க வழிபாடு தமிழர்களிடம் இருந்துள்ளது என்பதனைக் காட்டுகின்றது. சிவலிங்க வழிபாடு நடுகல் வழிபாட்டின் வாயிலாகத் தோன்றியிருக்கலாம் எனக் கொள்வாரும் உளர். பண்டைத் தமிழர்களிடையே இந்தக் கல்லாக வழிபடப்பட்ட தெய்வங்களிடம் ஏதோ சக்திகள் இருப்பதாகக் கருதியதன் விளைவாகவும் சிவலிங்க வழிபாடு தோன்றியிருத்தல் கூடும் எனவுக் கொள்ளப்படுகின்றது.

ஆனால் சிவலிங்க வழிபாட்டுமுறை மனிதனின் அகத்தேயே உள்ளதாகவும் கொள்ளப்படுகன்றது. உள்ளம் பெருங்கோயிலாகக் கொள்ளும் தத்துவமே சிவதத்தும் எனக் கண்டனர் சித்தர்கள்.

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே
(திருமந்திரம் 1726).

சைவத்தினது லிங்க வழிபாடு பற்றி ஒருமித்த கருத்தில்லை. எனினும் சிந்துவெளியில் கிடைத்த சிவலிங்கம் பற்றிய ஆய்வின்படி அது திராவிடர்களுக்கு உரியது என்கிறார்கள் அறிஞர் ஈரசா, டாக்டர் சிலேட்டர் ஆகியோர்.

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே
(திருமந்திரம் 5.

என்னும் திரமந்திரம் சிவனையே முழுமுதற்கடவுகாகக் கொள்கின்றது. சிவனோடு ஒப்பாரும, மிக்கரும் இலர் என்பதே திருமூலரின் வாதமாகும். திருமூலரின் பின்வந்த சமய குரவர்களும், சந்தான குரவர்களும் சைவம், வைணவம இரண்டையும் பின்வபற்றி வருதனைக்காணலாம்.

மெய்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தைவித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப்பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலியிட்டுச்
செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையு மாறே.
–திருநாவுக்கரசர் பா.2

சரியை முதலிய உண்மை வழிகளாகிய உழுதலைச் செய்து, விருப்பம் என்னும் விதையை விதைத்து, பொய்ம்மை ஆகிய களைகளை நீக்கிப் பொறுமை என்னும் நீரைப் பாய்ச்சிச் சிவரூபத்தால் ஆன்மதரிசனமும் சிவ தரிசனத்தால் ஆன்மசித்தியும் பெற்ற, திருநீறு சிவவேடங்கள் முதலிய தகுதிகளாகிய வேலியை அமைத்துச் சிவத் தியானமாகிய செந்நெறியில் நிற்பார்களானால், சிவகதி என்ற பயிர் விளையும். என்னும் கருத்தினை மிகத் தெளிவாகத்தந்து இறைவனை அடையும் வழியினைச் சமண சமயத்தைநீங்கி மெய்மைச் சமயமாம் சைவத்தை நாடிய திருஙாவுக்கரசர் தரும் தெளிவாகும்.

இந்த உலகம் உயிரும் சடமும் ஆகக் காட்சியளிக்கிறது. இக்காட்சியின் தோற்றமே படைப்பு ஆகும். ஆனல், உயிர்கள் படைக்கப் படவுமில்லை, அவை அழிக்கப்படவுமில்லை, தோற்றங்களின் வளர்ச்சியும் பரிணாமமானது. அதனை, 'புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாக' என்று மாணிக்கவாசக சுவாமிகளே சிவ புராணத்தில் பாடியுள்ளார். உயிரற்ற பொருளாகிய இவ்வுலகம் காலத்தின் இறுதியில் நுண் பொருளாய்ப்பின் ஆற்றலாய் மாறி ஒடுங்கிவிடும் என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை. இதனையே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய சைவத்தின் தத்துவம் கொண்டுள்ளது என்பது அதன் உண்மைத்துவத்தைக் காட்டி நிற்கின்றது.

இறைவன் தனித்து நிற்கிறான். உயிர்களிடத்தில் அவன் கலந்தும், சடப்பொருள்கள் இடத்தில் விரவியும், உள்ளான். இம் மூன்றையும் இறைவன் ஒன்றாயும், வேறாயும், உடனாயும் உள்ள நிலைகளாகவே சைவம் கொள்கின்றது. சைவ சித்தாந்ந்தம் இதனைப் பசு, பதி, பாசம் என்பதனால் அதன் உண்மையையும் இயல்புகளையும் பல்வேறு தடை வினைகளால் விளக்குவது வியப்பிறந்த செயலாகுமென அறிஞர்கள் கூறுவர்.

இறைவனின் இயல்புகளாகச் சைவ சித்தாந்திகள் கூறுவது சிந்தனைக்கு உரியதாகும். இறைவனே மேலான பொருள். குணமும் குறியும் அவனுக்கு இல்லை. அவன் ஒருவனே ஆவான். இப்படிப் பல. சித்தாந்திகளின் சிந்தனைகள் வியப்பூட்டுவன வாகும். அறிவியல் அறிவோடு இணைந்து செல்கின்றன.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க் கோபுர வாசல்
தெள்;ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே
(திருமந்.பா.1823)

சைவ சித்தாந்தம் என்பது தமிழ் நாட்டில் மட்டுமே பெருவழக்காக உள்ளது. காஷ்மீரச் சைவமும், மைசூர் வீரசைவமும் பலவகையில் அதி;லிருந்து வேறுபடுகின்றன. சைவ சித்தாந்தக் கொள்கைகளைக் கூறும் மூத்த நூல்கள் யாவும் வடமொழியிலேயே உள்ளன எனச் சிலர் சொல்வர். ஆனால், மறைமலை அடிகள். கா. சுப்பிரமணியபிள்ளை அகியோர். 'ஆதியில் வேதங்களும் ஆகமங்களும் தமிழிலும் இருந்தன, இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என இன்று வழங்கும் இதே பெயர்களோடு நான்கு வேதங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றாகிய சாமவேதம் இராவணனால் பாடப்பட்டது. காலப் போக்கில் தமிழ் வேதாகமங்கள் அழிந்துவிட்டன, வடமொழி வேதாகமங்கள் நிலைத்து விட்டன. அவைகளைத் தமிழரும் தமது பிரமாண நூல்களாகத் தலைப்படடு விட்டனர், வேறு சிலர் தமிழில் மட்டுமே முன்பிருந்த வேத உபநிடதங்களை வடமொழியாளர் தம் மொழியில் பெயர்த்து எழுதிக்கொண்டனர' என்பர்.

சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சங்க இலக்கியங்களிலும் இடையிடையே காணப் படுகின்றன. நான்காம் நூற்றாண்டுக்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தவையாகிய திருமுறைகளும் சைவத்தின் பழமையையும் சிறப்பையும் விளக்குகின்றன.

எனவே தமிழர் சமயம் என்பது சைவம். தமிழரின் பழமை வாய்ந்த கொள்கை கோட்பாடுகளே சைவம், சிவபெருமானே சைவத்தின் முழுமுதற் கடவுள் என்பதனை வரலாற்றால் தெளிந்து, சைவர்களாக, சிவபக்தர்களாகத் தமிழர்கள் விளங்கிட வேண்டும்.

ஆரியக் கடவுளர்களை நாம் வழிபடத்தொடங்க முன்னர் எம் மக்கள் மத்தியிலே நடுகல் வழிபாடு முறை நிலைத்திருந்துள்ளது. வெற்றி பெற்ற நினைவுகளை நடுகல் அறிவுறுத்தி நிற்கின்றது. 'யாதும் ஊரெ யாவரும் கேளிர், நன்றும் தீதும் பிறர்தர வாரா' என்பது கணியன் பூங்குன்றனாரின் தமிழியல் பண்பாட்டை உலகுக்குப் பறைசாற்றி நிற்கின்றது. தமிழரின் பாரம்பரிய பழக்க வழக்கம். மரபு சார்ந்த ஒன்றாக அதனைக் கொள்ளலாம். துமிழர் சமயம் என்பது தமிழரின் பண்பாட்டோடு ஒட்டிப் பிறந்து வளர்ந்து வந்துள்ளது. குன்று தோறும் இருந்திடும் குமரனை வழிபடும் முறை நிலவி வந்துள்ளது. ஐயன், வன்னியிற் தெய்வம் என இன்றும் போற்றப்படும் சிவன் மிகப் புனிதமானவனாகப் போற்றப்பட்டு வந்துள்ளான். துமிழரின் துன்பத்தைக் களைந்து இன்பமான வாழ்;வினைப் பெறுவதற்க அருள்பாலிப்பவனாகப் போற்றப்பட்டு வந்துள்ளான். துமிழர் மத்தியிலே நிலவி வரும் 'ஐயன்' வழிபாடு, இன்று எம்மவர் பின்பற்றும் கேரள மாலத்து 'ஐயப்பன்' வழிபாட்டை ஒத்ததல்ல. ஐயனார் கோயில் என்பது சிவவழிபாட்டைக் குறித்து நிற்கின்றது. சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் முறையைக் கொண்டது சைவம்.

வெற்றிக் கழிப்பைக் கொண்டாடும் முகமாக உயிர்ப்பலி கொடுக்கப்படும் முறை தமிழர்களிடையே பின்னர் மருவி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆடு போன்ற விலங்குகளை கொன்று அதன் இறைச்சியைப் படைத்து உண்டு கழிக்கும் முறை பிற்காலத்தில் வேள்வியாக மாறியுள்ளது. தீபாவளித் தினத்தில் மாமிசம் உண்டு கழித்தல் திராவிட மக்களிடம் காணப்படும் ஒரு வழக்கமாக உள்ளது. இது அவர்களின் பாரம்பரியத்தோடு எப்படி ஒட்டிக்கொண்டது என்பது கேள்விக் குறியே. சிந்துவெளி நாகரிகம் தரும் சான்றுகள் சிவலிங்க வழிபாட்டுமுறை, மாடுகளின் உபயோகம் என்பனவும் பெண் தெய்வ வழிபாட்டிற்கான சான்றுகளும் இடம்பெற்றுள்ளன எனக் கொள்ளக் கிடக்கின்றது. ஆனால் சிவலிங்க வழிபாடு நடுகல் வழிபாட்டு முறைமையை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்த்ருத்தல் கூடும். சிவ லிங்கம் மனித உருவமற்ற வழிபாட்டு முறையினைக் குறித்து நிற்;கின்றது. சிவனை அருவமும், உருவமும் ஆனாய் போற்றி என மணிவாசகர் பாடுமாற்றல் அதனை உணர்ந்து கொள்ளலாம். உருவமற்றவன் இறைவன் என்பதும் அவன் சோதி வடிவினன் என்பதும் முன்வைக்கப்படுகின்றது. ஸ்லாமியர் கடவுளை யாரும் காணமுடியாது, அவனுக்கு உருவம் கிடைக்காது என்னும் கருத்தினைக் கொண்டுள்ளனர். இறைவனைக் கண்டவரும் இல்லை விண்டவரும் இல்லை என்கின்றது சைவம். மனிதனுள் சிவத்தைக் காண்கின்றது சைவம். திருமூலர் இதனை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே .
(திருமந். பா. 77)

யான் சிவனை இச்சக்கரத்தின் வழியே கண்டு உயர்வு பெற்றேன்; அதனால், பின்பு அவனை நான் எனது உள்ளத் தாமரையிலே அடங்கக் கொண்டு மேலும் உயர்வு பெற்றேன்; ஆகவே, இனித் தன் இயல்பு கெடாத பதிஞானத்தின் வழியே சென்று அழியாத அன்புடன் திருவைந்தெழுத்தைச் செபிக்கும் பேற்றினைப் பெறுதல் திண்ணம். என்னும் கருத்தினைக் கொண்டதாகத் திருமூலர் வழி சைவத்தைத் தமிழ்ர்கள் போற்றி வருகின்றனர். தமிழர்கிள் சமயம் சைவமாகவே காணப்பட்டுள்ளது என்பது தமிழையும் சமயத்தையும் ஆய்தறிந்து சான்றோர் கருத்தாக உள்ளது.

எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி
யிட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேஅறை நாற்பத்தெட் டும்இட்டுச்
சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே.
(தருமந். 987)

செங்குத்தாக எட்டு நேர்க்கோடு வரைந்து அவற்றின் மேல் குறுக்காக எட்டுக் கோடுகளை வரையும்போது நாற்பத்தொன்பது அறைகள் உண்டாகும்; அவற்றுள் நடு அறையில் இறைவன் எழுத் தாகிய சிகாரம் அமையுமாறு மேல் (906) மேற்கூறியபடி திருவைந் தெழுத்தை ஐந்து வகையாக மாற்றி முறையே இருபத்தைந்து அறைகளில் பொறித்தபின், நடு அறையொழிந்த நாற்பத்தெட்டு அறைகளிலும் எழுத்துக்கள் இடம்பெறச்செய்ய வேண்டும்; அதாவது எஞ்சிய இருபத்து நான்கு அறைகளிலும் பிற எழுத்துக்களைப் பொறிக்க வேண்டும். அவ்வாறு செய்தவுடன் சக்கரத்தை வழிபட்டுத் திருவைந்தெழுத்தைச் செபிக்கத் தொடங்கலாம். இது 'ஆகருடணம்' என்னும் வித்தை கூறுகின்றது. உயிர்ப் பொருளாயினும். உயிரற்ற பொருளாயினும் தொலைவில் உள்ளவற்றைத் தான் இருந்த இடத்தில் இருந்தே வரவழைத்தல் 'ஆகருடணம்' என்னும் வித்தையாம். இதற்குப் பலகை வெண்ணாவல் மரப்பலகை. மந்திரம் மேற்கூறிய ஐந்தெழுத்து மாறலில் யகரம் முதலாக அமைவது யகரம் முதலாக உள்ளது முதல் ஐந்து தொடர்களையும் முறையே ஐந்து வரிசை அறைகளில் பொறித்து, ஓலையிலும் அவ்வாறே எழுதி அதன்மேல் யாதேனும் ஒரு வெண்பூச்சினைப் பூசி வியாழக்கிழமையில் மேற் சொன்ன பலகை மேல்வைத்து வழிபட்டு அன்று முதலாக மேற்கு நோக்கி அமர்ந்து அம் மந்திரங்களை விரும்பிச் செபித்தால் ஆகருடணம் என்னும் வித்தை கைவருமாம்.

பெருந்தெருக்களுக்கு வீதி வரி அறவிடப்படுவதனையம் 'ஆயம்' அமைத்து வரி அறவிடப்பட்டதனையூம் நாம் அறிவோம். அது சங்ககாலத்திலும் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதனை தொல்காப்பியத்தின் வழி அறியமுடிகின்றது. வழிபடு தெய்வத்திற்காக இறைவரி அறிவிடப்பட்டுள்ளமையைத் தொல்காப்பியம் எடுத்தியம்புகின்றது.

மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியூம்
இழைத்த ஒண்பொருள் முடியவூம் பிரிவே . . .
(தொல்.பொரு. 3)

இல்லக்கிளவன் பொருள் தேடிச் செல்லுதல் அறத்தின் பாற்படும். அதன்வழி அவன் ஆலய பூசைகள் முறையாக நடப்பதற்கு இவ்வித பொருள் தேடல் நிதியை அளிக்கின்றது என்பது அக்காலத்திலும் இருந்துள்ளது என்னும் செய்தியை தொல்காப்பியம் உணர்த்துகின்றது. பிற மதத் தாக்கத்தை தடுக்கும் முறையும் அக்கலாத்தில் இருந்துள்ளமை இதிலிருந்து அறிந்துகொள்ளமுடிகின்றது. தொல்காப்பியர் காலத்தில் இறைவழிபாடு இடம்பெற்றுள்ளமை இதன்வழி புலனாகின்றது.
 


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்