வேற்றுமையில் ஒற்றுமை

கவிஞர் மா.உலகநாதன்., எம்.ஏ


து என்ன வரலாற்றுக் கட்டுரையா ? அல்லது இலக்கியக் கட்டுரையா ? என்று திகைகக்கிறிர்களா ? வேற்றுமையில் ஒற்றுமை என்பது மொழியால், இனத்தால்,நாட்டினால், சமயத்தால் வேறுபடாமல் உலகெங்கும் கிழக்கிலிருந்து மேற்காகவும், வடக்கிலிருந்து தெற்காகவும் பயணிக்க, வழிபட, உறவுகளை மேம்படுத்த, பண்டமாற்று செய்ய முனைவது ஆகும்.
கங்கை நதிபுரத்துக் கோதுமைப்பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொண்டது கவிவேந்தன் பாரதியின் காலத்தில்.
அதுபோல பொருநராற்றுப்படை என்ற இலக்கியத்திலும் இந்த வேற்றுமையில் ஒற்றுமையையும், திணை மயக்கத்தையும் காண்கிறேன்.

ஐவகை நிலங்களையும் அதுதரும் வளங்களையும்,பழம்பாடல் ஓன்று இப்படி எடுத்துக்காட்டுகிறது.

"'எழில் பரப்பும் குறிஞ்சியெல்லாம் தேன் பரப்பும்
கார் பரப்பும் முல்லையெல்லாம் மலர் பரப்பும்
ஏர் பரப்பும் மருதமெல்லாம் வளம் பரப்பும்
கவின் பரப்பும ஆழியெல்லாம் ஒளி பரப்பும்
மணல் பரப்பும் வனமெல்லாம் வளி பரப்பும்"


குறிஞ்சி நிலத்துக் குறவர் தேனையும்,கிழங்கையும் நெய்த நிலத்திலே விற்று,அங்குள்ள மீனின் நெய்யும், மதுவும் வாங்குதலும்,

மருதநிலத்து உழவர் கரும்பையும் அவலையும் குறிஞ்சிநிலத்தில் விற்று, அங்குள்ள மான் தசையும் கொள்ளுதலும்,

நெய்த நிலத்துப் பரதவர் குறிஞ்சிப் பண்பாடுதலும், குறிஞ்சிநிலத்துக் குறவர் நெய்தற் பூச்சூடுதலும்,

முல்லை நிலத்து ஆயர மருதப் பண்ணும்,மருதநிலத்தராகிய அகவர் முல்லைப் பண்ணும் பாடுதலும்,

முல்லையிலுள்ள கோழி மருதத்தில் நெற்கதிரையும், மருதத்திலுள்ள மனைக்கோழி குறிஞ்சி சார்ந்த முல்லையிலுள்ள தினையைக் கவர்ந்துண்ணலும்,

குறிஞ்சியிலுள்ள மந்தி நெய்தலின் கழியில் மூழ்குதலும்,நெய்தலின் கழியிலுள்ள நாரை குறிஞ்சியிடத்து மலையின் சென்று தங்குதலும் இயற்கை நெறி பிறழாமல் கூறப்பட்டுள்ளது.

"தேனெய்யொடு கிழங்கு மாறியோர்
மீனெய்யொடு நறவு மறுகவும்
தீங்கரும்பொடு அவல் வகுத்தோர்
மான்குறையொடு மது மறுகவும்
குறிஞ.;சி பரதவர் பாட,நெய்தல்
நறும்பூங் கண்ணி.குறவர் சூடக்
கானவர் மருதம் பாட.அகவர்
நீல்நிற முல்லைப் பல்திணை நுவலக்
கானக்கோழி கதிர் குத்த,
மனைக்கோழி தினைக் கவர,
வரை மந்தி கழிமூழ்கக்,
கழிநாரை வரையிறுப்பத்
தண் வைப்பின் நானாடு குழீஇ"


                                  பொரு – 214 – 226

சங்ககாலத் தமிழர்கள் விட்டுக்கொடுத்தும் தொட்டுத்தழுவியும், உண்டும், உறவு மகிழ்ந்தும் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் வளர்த்த வளர்ப்புப் பிராணிகளும் திணை மயக்கத்தால் வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ்ந்திருந்த வகையைச் சொல்கிறது பொருநராற்றுப்படை.

worldnath_131149@yahoo.co.in